சொல் ஆற்றல் / முனைவர். ஆர். சுரேஷ் / கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி

[ A+ ] /[ A- ]

images

எவ்வொறு செயலை (வினையை) செய்வதற்கும் ஆற்றலானது அவசியம். எடுத்துக்காட்டாக, நடத்தல், பார்த்தல், பேசுதல், விளையாடுதல், தூங்குதல், வரைதல், படித்தல், உள்ளிட்ட எல்லா வினைகளுக்கும் ஆற்றல் வேண்டும். இவ்வினைகளுக்கான ஆற்றலை ‘உணவு’ என்கிற வேதியாற்றலில் இருந்து நாம் பெருகிறோம். விலங்குகளும் உணவின் மூலமே, தனது ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

சரி, நமக்கும், விலங்குகளுக்கும் உணவளிக்கும் தாவரங்கள் எப்படி ஆற்றலை பெருகின்றன? சூரிய ஒளி மூலம் தான்! ஆம், சூரிய ஒளியின் முன்னிலையில் கரியமில வாயுவும் நீரும் சேர்ந்து கார்போஹைட்ரேட்டான உணவினை தாவரங்கள் தயாரிக்கின்றன. இவ்வினைக்கு பச்சையம் (தாவரத்தில் இருக்கும் பச்சை நிறமி) இன்றியமையாதது.

உயிரினங்களான தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இதேப்போன்று உயிரற்றவைகளுக்கும் ஆற்றல் தேவைப்படுமா? என்றால், ஆம், என்ற பதிலே கிடைக்கிறது. நகரும் உயிரில்ல பொருளை நகர்த்துவதற்கும், நிலபரப்பிலிருந்து மேலே உயர்துவதற்கும் ஆற்றல் அவசியம். இது மின்னாற்றல் மற்றும் வேதியாற்றல் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

ஒளியாற்றல், வேதியாற்றல், மற்றும் மின்னாற்றலை தவிர வெப்ப ஆற்றலும், ஒலியாற்றலும் நம் அன்றாட வாழ்வில் நீக்க முடியா ஆற்றல் மூலங்காளாகும்.

இங்கு குறிப்பிட வேண்டியது என்னவெனில், வினையை பொறுத்து ஆற்றலின் அளவும், மூலமும் மாறும் என்பதே. நாம், ஒரு செயலை செய்வதற்கு தேவையான அளவைவிட அதிகப்படியான ஆற்றலை கொடுத்தால் என்ன நிகழும்? இரண்டு விளைவுகளுக்கு வாய்ப்புண்டு. ஒன்று, அதிகப்படியான ஆற்றல் வீணாக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக, தொடர்ந்து சுழலும் மின்விசிறியை சொல்லலாம். அதாவது தொடர்ந்து மின்சாரத்தை கொடுத்தாலும், மின்விசிறி ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்னாற்றலை மட்டும் சுழலுவதற்கு பயன்படுத்துகிறது. அதிகப்படியான மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி வெளியேற்றுகிறது.

மற்றொரு விளைவு? மிதமிஞ்சிய ஆற்றலானது, அச்செயலை செய்யும் பொருளையே தாக்கலாம்! வரையறையை மீறி அளிக்கப்படும் மின்னழுத்தம், சிலவகை வீட்டு உபயோக மின்சாதனங்களை செயலிழக்கச் செய்வதை அனைவரும் அறிவோம். எனவே, ஆற்றலை அளவுக்கு மீறி பயன்படுத்தினால், விரும்பத்தாகாத விளைவுகள் உண்டாகும். இவ்விளைவு, மனிதர்களுக்கு பொருந்துமா? என்ற வினா எழுகிறது. இதற்கான விடையாக திருவள்ளுவரின் குறளை பதிலாக அளிக்க விரும்புகிறேன்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (குறள் 129)

இக்குறளுக்கான விளக்கம்: ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் உடம்பிலே இருப்பினும், அவன் உள்ளத்தில் ஆறிவிடும். ஆனால் ஒருவனை ஒருவன் தன் நாவினால் சுட்டால் (கடுஞ்சொல் மூலமாக) அது பாதிக்கப்பட்டவனது உள்ளத்தில் ஆறாமல் மாறா வடுவாய் இருக்கும். இக்குறளில், தீயினை சொல்லுடன் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். இதை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், ‘தீ’ என்ற வெப்ப ஆற்றலோடு, (ஒலி வடிவ) ’சொல்‘ என்ற ஒலியாற்றலுடன் ஒப்பிடப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவ்விருவகை ஆற்றலையும் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் தீமையே விளைகிறது. இதனை சற்று விரிவாக பார்ப்போம்.

உண்மையில் சீரான உடற்செயலியல் நிகழ்வுகளுக்கு வெப்ப ஆற்றல் அவசியம். இதனை நுப்பத்தி ஏழு டிகிரி செல்சியஸ் (சராசரி அளவு) என்று கண்டறிந்துள்ளது அறிவியல் உலகம். இச்சராசரி வெப்பமானது, உடலில் புகுந்த நுண்ணுயிரிகளினால் அதிகரிக்கப்பட்டால், நமக்கு கேடு உண்டாகிறது. வெளியிலிருந்து தீயினால் (சுடப்பட்டால்) கொடுக்கப்பட்டால் (உடலிற்கு)அழிவு உண்டாகிறது. இதேப்போன்று, தொடர்பு கொள்வதற்கு சொற்கள் அவசியம். நம் நாவின் இனிய சொற்கள் பிறருக்கு மகிழ்வை உண்டு பன்னும். தீய சொற்களோ, தீயை போல் சுடும். இதிலிருந்து அறிவது என்னவெனில், உயிரற்ற பொருட்களை போன்றே, உயிரினத்திற்கும் அதிகப்படியான ஆற்றலை கொடுக்க, தீமையே விளையும். இதைதான்,

அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்றனரோ? (பழமொழி)

தற்போது, அறிவியல் நோக்கில் தீயினை சொல்லோடு (ஒலி வடிவம்) ஒப்பிட முடியுமா? என்பதை ஆராய்வோம், வாருங்கள்.

முதலில் தீயினை பற்றி காணலாம். தீ மூட்டும் பொழுது, வெப்பம் உயருகிறது. இதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. வெப்ப ஆற்றலை பயன்படுத்தி இயற்பியல் மாற்றங்களை (வினைகளை) நிகழ்த்த முடியும். உதாரணமாக, திரவ நிலை நீரினை சுமார் நூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் பொழுது வாயு நிலை நீராக மாறுகிறது. சூடுபடுத்துவதால், நீரின் நிலை (திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு) மட்டுமே மாறுகிறது. விளைபொருளில் (வினை முடிந்தபின் கிடைப்பது) மாற்றம் இல்லை. அதாவது, சூடுபடுத்துவதற்கு முன்னும், பின்னும், இருப்பது நீர் மட்டுமே. எனவே இதனை இயற்பியல் மாற்றம் என்கிறோம்.

தவிர, வேதியியல் வினைகளை நிகழ்த்தவும் வெப்ப ஆற்றல் பயன்படுகிறது. உதாரணமாக, காய்ந்த மரக்கட்டை எரியும் வினையை கருதலாம். காய்ந்த மரக்கட்டையில் கார்போஹட்ரேட் இருக்கிறது. இதனை காற்று வெளியில் எரிக்கும் பொழுது ஆக்சிஜனுடன் சேர்ந்து நீராகவும், கரியமில வாயுவாகவும் (விளைபொருட்கள்) மாறுகிறது. இத்துடன், வெப்பமும், ஒளியும் உண்டாகிறது. இவ்வினை முடிந்த பின்னர் எரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டு கருகி சாம்பலாக மிஞ்சுகிறது. எரித்தல் வினைக்கு பின் புதிய விளைபொருள் கிடைப்பதால், இதனை வேதிவினை என்கிறோம். எனவே, வெப்ப ஆற்றல் இயற்பியல் மற்றும் வேதியியல் வினைகளை நிகழ்த்த பயன்படுகிறது.

வெப்ப ஆற்றலுடன் ஒப்பிடபட்ட ஒலி ஆற்றலால், இயற்பியல் மாற்றங்களையும், வேதியியல் வினைகளையும் நிகழ்த்த முடியுமா? என்ற வினாவிற்கு பதில் முடியும் என்பதே! முதலில் ஒலி ஆற்றலால் (இங்கு பேசும் சொற்களை குறிக்கவில்லை) நிகழும் இயற்பியல் மாற்றத்திற்கான எடுத்துகாட்டினை பார்போம். சில வகை காய்கறிகள், பழங்கள், மீன் உள்ளிட்ட உணவு பொருட்கள் கெடாமல் பாதுகப்பதற்கு உப்பு (சோடியம் குலோரைட்) நீர் கரைசல் பதப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வுப்பு கரைசலை உருவக்கிட ஒலி ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, உப்பு, நீரில் கரையும் என்றபொழுதும், ஒலி ஆற்றலை பயன்படுத்தும் பொழுது நேர்த்தியான உப்பு கரைசல் கிடைக்கிறது. எனவே, வெப்ப ஆற்றலை போன்றே, ஒலி ஆற்றலையும் இயற்பு மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு பயன்படுத்தலாம்.

மேலும், ஒலி ஆற்றலை பயன்படுத்தி வேதிவினைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அவைகளுக்கு ஒலிவினைகள் என்று பெயர். உதாரணமாக, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு முறையில், ஒலி ஆற்றல் (20–1000 kHz) பயன்படுகிறது. அதாவது, நீரில் இருக்கும் சாயங்களை அழிக்க ஒலி ஆற்றலை பயன்படுத்தலாம். இது எப்படி சாத்தியமாகிறது? சுருக்கமாக பார்ப்போம்.

போதுமான அதிர்வெண் (ஒரு வினாடியில் தோற்றுவிக்கப்படும் அலைகளின் எண்ணிக்கை) கொண்ட ஒலி ஆற்றலை, சாயங்கலந்த கழிவு நீரில் செலுத்தும் பொழுது, ஆற்றல் மிக்க ஹைட்ராக்ஸைடு தனித்த உறுப்புகள் (OH•) உண்டாக்கப்படுகின்றன. இத்தனித்த உறுப்புகள், சாயங்களை கரியமில வாயுவாகவும், நீராகவும் சிதைக்கிறது. இதன் மூலம் சாயப்பட்டரை கழிவு நீர் தூய்மையாக்கப்படுகிறது. இதே முறையில் கழிவு நீரில் இருக்கும் தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் குலோரின் சேர்மங்களுக்கு சிறந்த மாற்றாகவும் ஒலிவினையூக்க முறை கருதப்படுகிறது.

மேற்கண்ட செய்திகள் மூலம், வெப்ப ஆற்றலும், ஒலியாற்றலும் வினைகளுக்கு பயன்படுவது சத்தியம் என்பதை பார்த்தோம். எனவே, வள்ளுவரின் ’தீயிற்கும் சொல்லிற்குமான (ஒலி என கொள்க) ஒப்பீடு அறிவியில் பார்வையிலும் மிக பொருத்தமாக இருப்பது கண்கூடு.

ஒலியாற்றலை வினைகளுக்கு பயன்படுத்துவதை அறிந்த பொழுதும், (ஒலி வடிவ) சொற்களே வினைகளை நிகழ்த்துமா? என்ற வினாவும் எழுகிறது. இதற்கான பதிலை பார்பதற்கு முன்னதாக, திருவள்ளுவரின் மற்றொரு குறளை (குறள் 642) காண்போம்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

இக்குறளுக்கான விளக்கம் பின்வருமாறு. ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

’ஆக்கமும் கேடும்’ அதாவது நன்மையும் தீமையும் நம்முடைய சொற்களினால் வரும் என்றுரைக்கிறார் திருவள்ளுவர். நன்மை அல்லது தீமையானது ஒரு செயலினால் விளைவது. செயல் என்பது வினையே! எனவே, சொல்லின் மூலம் நிகழ்வது செயல். இச்செயலின் விளைவு நன்மை அல்லது தீமை. ஆக சொற்கள் (உயிரினத்தில்) வினையை நிகழ்த்தும் என்பது தெளிவு. மேலும், அனைவரும் அறிந்த பழமொழியை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் (பழமொழி)

’பாம்பு’ என்ற ஒலிவடிவ சொல்லே, ’நடுக்கம்’ என்ற செயலை நிகழ்த்துகிறது. மேலும், நம் அன்றாட வாழ்விலும், சொற்கள் செயலை நிகழ்த்துகின்றன. ஆம், நம்முடைய சொற்களால் பிறரை செயல்பட வைப்பதும், பிறரின் சொற்களால் நாம் செயல்படுவதும் வழக்கம் தானே? சொற்களால் நம் அன்றாட வாழ்வில் செயல்கள் நிகழும் பொழுது, இயற்பு அல்லது வேதிவினைகளை நிகழ்த்தாமல் இருக்க முடியுமா? இதுவரையிலும் சொற்களை கொண்டு வினைகளை ஆய்வகத்தில் நிகழ்த்தியிருக்கிறார்களா? இக்கேள்விக்கான விடையை பார்ப்போம்.

பொதுவாக ஒரு வேதிவினை நிகழ வேண்டுமெனில், ஆற்றல் தேவை என்பதை அறிவோம். மேலும், கொடுக்கப்படும் ஆற்றலை அதில் ஈடுபடும் வினைபடு பொருட்கள் எடுத்துக்கொண்டு வினையை நிகழ்த்துகின்றன. உதாரணமாக மரக்கட்டையை எரிக்கும் பொழுது வினை நிகழுகிறது. அதாவது மரக்கட்டை எரிந்து சாம்பலாகிறது. இதுவே, ஒரு கூழாங்கலை எரிக்க எவ்வித வினையும் நிகழ்வதில்லை. மாறாக, கல் சூடாகலாம். இதற்கு காரணம் கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றலை கூழாங்கல் ஏற்கவில்லை. எனவே, சொற்கள் வேதிவினைகளை நிகழ்த்த வேண்டுமெனில், வேதிப்பொருட்கள் பேசுகின்ற சொற்களை ஏற்க வேண்டும். அறிந்த வரையில் எந்த வேதிபொருளும் சொற்களை கேட்பதில்லை. எனவே, ஒலியாற்றலை ஏற்று சில வினைபடு பொருட்கள் வினையை நிகழ்த்தினாலும், ஒலி வடிவில் வரும் சொற்களை வினைபடு பொருட்கள் ஏற்காதலால் வேதிவினைக்கு சத்தியமில்லை. இருப்பினும், ஏதேனும் ஒருசில மாற்றங்கள் நிகழுவதற்கு வாய்ப்புகள் உண்டா? என கேட்கலாம்.

இக்கேள்விக்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறது. ஆம் முன்னர் பார்த்தார் போல், கூழாங்கல் வெப்ப ஆற்றலை ஏற்காவிடினும், அக்கல்லின் வெப்பத்தில் சிறிது மாற்றம் நிகழுகிறது. சொற்களினால் மாற்றங்கள் நிகழும் என்பதற்கு சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளரான மஸாரு இமோடோ (Dr. Masaru Emoto), சொற்களினால் நிகழும் வினைகளை பற்றி ஆய்வுகளை செய்திருக்கிறார். ‘Messages from Water‘ என்ற தலைபின் அடிப்படையில் அவர் செய்த ஆய்வுகளை பல புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வின் சாராம்சம் என்னவெனில், சொற்கள், வாழ்த்துகள், வேண்டுதல் உள்ளிட்டவைகளை நீரின் முன் உரைக்க வேண்டும். பின்னர் அந்த நீரினை உறையவைக்க (குளிர்வித்தல்) வேண்டும். அப்பொழுது நீர் குறிப்பிட்ட வடிவத்தில் படிகமாக்கப்படுகிறது. இவரது இந்த ஆய்வின் முடிவு என்னவெனில், நாம் கூறிய சொற்களை பொருத்து படிகமாக்கப்பட்ட நீரின் வடிவும் அமைகிறது என்பது தான்! நீர் படிகமாக்கல் என்பது வேதிவினை அல்ல. இது இயற்பு மாற்றமே. இவரது ஆய்வின் அடிப்படை தத்துவம் என்பது, சொற்கள், எண்ணங்கள், ஒலி உள்ளிட்ட எல்லாமே, ’ஆற்றல்’ என்பது தான். இவரது ஆய்வு முடிவுகளின் மீது பல எதிர்மறை விவாதங்கள் இருப்பினும், அடிப்படை தத்துவமான, ’சொற்கள் ஆற்றலுடையது’ என்பதை ஏற்கத் தானே வேண்டும்.

•••

Comments are closed.