சோலைமாயவன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

1

ஆள் உயரத்திற்கு எழும்பிய நீரானது
நதியில்ஓடிக்கொண்டிருக்கிறது
வேடிக்கைப் பார்க்க வந்தவன்
தண்ணீர்ப் புதையலுக்குள் பாதங்களை ஊடுருவி
தண்ணீரின் குளிர்க்கொடி படர
ஒரு மரமானேன்
நீரின் போக்கிலே என் கால்கள்
கால்விரல்களுக்கு இடையில்
ஓரிரு மீன்குஞ்சுகள்
தாயின் மார்பகத்தைச் சப்பும் குழந்தையைப் போலவே கடிக்கத் தொடங்கின
எங்கிருந்தோ வந்த நூறாயிரம் கோடி
மீன்குஞ்சுகள்
என் கால்விரல்களில் தொடங்கி
என்னைச் செதில் செதிலாக
கபளீகரம் செய்துகொடிருந்தன
உலர்ந்த நாவினை ஈரப்படுத்த
திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறேன்
என் உடம்பெங்கும்
தண்ணீரின்றி இறந்துகிடக்கும்
மீன்குஞ்சுகளின் கவிச்சை….

2

வயிற்றைப் புரட்டும் புடைநாற்றத்தைச் சுவாசித்தப்படி
அவன் நுழைந்து கொண்டிருந்தான்
கிழக்கிலிருந்நு மேற்கே நகரத் தொடங்கியிருந்தது வெயில்
அவனுக்கு முன்பாகவே பலர் கூடியிருந்தார்கள்
அவர்களுக்கெல்லாம் அவன் சாயல்
வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டான்
நவம்பர் 8இரவு 7:55வரை
அவன் கனவுகளைப் பாறைகளில்செதுக்கியிருந்தான்
விபத்தொன்றில் சிக்கிய அம்மாவை
காப்பாற்றிட அங்கும் இங்கும் புரட்டி
கையில் வைத்திருந்தான்
ஓர் ஆயிரம் ரூபாய் பணமாக
ஒற்றைச் செய்தியில் அம்மாவையும் பணத்தையும் இழந்து நிர்கதியானவன்
நான்கு முறையாக வாந்தி எடுத்திருந்தான்
வெயில் தீர்ந்த வானம் போல் அவன் வாழ்விலும் இருள் சார்ந்திருந்தது
தள்ளாடி தள்ளாடி அவன்
நெடும்புனலுள்
நீந்திக்கொண்டிருந்தான்

~~

-3

பெரும்சினத்தை
ஏழு கூறுகளாக்கி வைத்திருக்கின்றேன்
பஞ்சுமூட்டையாய் என்னுள் ஊறிக்கிடக்கிறது
ஒரே சமயத்தில்
கரைத்தல் என்பதுசாத்தியமில்லை
சினத்தைச் சுமந்த காலம் ஏதென்று அறியவில்லை
புயலொன்று சூறையாடியப்பின்
உணவுக்காக ஏந்திய கைகளில் விழுந்திருக்கலாம்
சாலைகளே வேண்டாமென அழுதுபுரண்டப்பொழுது
என் உடம்பில் ஒட்டியிருக்கலாம்
எங்கள் காற்றை
எங்கள் நீரை
எங்களுக்கே விட்டுவிடெனத்
தோட்டாக்களில் வெடித்த உதட்டின் குருதியாக்கூடம் இருக்கலாம்
கனவுகளைத் உடைந்தபின்
தூக்கில் தொங்கிய என் மகளின்
கண்களாக கூட இருக்கலாம்
என் விரலில் வருகைக்காக
நதியொன்று வருகிறது
சினத்தின் சாம்பலைக் கரைத்துக் கொள்கின்றேன்

—-

Comments are closed.