ஜிஃப்ரி ஹாஸன் கவிதைகள் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

download (33)


எழுதுவதைத் தவிர

ஒரு கவிதையை எழுத நினைத்து

அமர்ந்து பின்

எழுத முடியாமல் தோற்று எழும்புகிறேன்

சொற்களை அடுக்கி

நான் கட்டமுனையும் கோபுரம்

அரூபமாய் சரிந்து விழுகிறது

எனக்கு வேறு வழியில்லை

மீண்டும் மீண்டும்

எழுதுவதைத் தவிர!

வாழ்வென்பது மிகப்பெரும் பொய்

எனக்குள் மாயமாய் மேலெழும்

உலகை

எனக்குள் இருக்கும் என்னை

எப்படி உங்களிடம் கொண்டுசேர்ப்பது

என்ற அங்கலாய்ப்பில்

என் கணங்கள் கரைந்துகொண்டே செல்கின்றன

நான் எதைக் காண்பிக்க விரும்பினேனோ

அதுவல்ல நான் இதுவரை காண்பித்தது

நான் எதைச் சொல்ல விரும்பி இருந்தேனோ

அதுவல்ல நான் இதுவரை சொல்லியது

நான் படைக்கப்பட்ட மண்ணிலிருந்து

புதைக்கப்படும் மண் வரையிலான

தொலைவு வரைக்கும் மனதைப் பாய விடுகிறேன்

ஆயினும் அந்த உரு

நான் அடைய முடியாதபடி அரூபமாய்

நழுவிக்கொண்டே செல்கிறது

விழித்த கணத்தில் கண்களை விட்டுச் செல்லும்

கனவுக்குப் பின்னும் முன்னுமாய்

நான் காட்டமுனைந்த நிஜமும், நினைவும்

கனவுபோல் வெறும் பொய்தான்

வாழ்வென்பது மிகப்பெரும் பொய்!

•••

Comments are closed.