ஜிஃப்ரி ஹாஸன் கவிதைகள் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

images (36)

அபயம்

———-

விலங்கிடப்பட்ட சாத்தானின்

அபயக் குரல் ஏழு கடல் தாண்டி

வான் முட்டும் மலைகள் கடந்து

ஏழு வானமும் ஏழு பூமியும்

நடுங்கும்படி ஒலிக்கிறது

செவிப்பறைகள் கிழியும் ஓலம்

தன் நெருப்புக் கரங்களால்

விலங்கை ஒடித்து வெளியேறி வருகிறான்

எல்லாக் காற்றையும் உள்ளிழுத்து

ஓங்காளத்துடன் ஊதுகிறான்

மலைகள் பஞ்சாகத் தூர்ந்து பறக்கத் தொடங்குகின்றன

நெருப்பால் படைக்கப்பட்டவனிடமிருந்து

தப்பிச்செல்கிறேன்

வழிநெடுகிலும் நீரின்றி

அசைகிறது உடல்

ஒரு பாவ ஆத்மாவின் அலறலைப் போல்

சாத்தானின் குரல் காற்றையும் நடுங்கச் செய்கிறது

சாத்தானிடம் புனிதங்கள் எதுவுமில்லை

அவனது கண்களில் பரிவு இல்லை

அவனது சிரசில் பணிவு இல்லை

அவன் கடவுளின் அடிமை என்பதைவிடவும்

மனிதர்களின் எதிரி

ஏழு கடல்களையும் உறுஞ்சுக் குடிக்கும் விடாயுடன்

தீயின் நாக்குகள் ஒரு பெருந்தெருபோல்

பின்தொடரும் கணத்தில்

நெடுகிலும்பதட்டமடைகிறேன்

நான் இப்போது

ஒரு தேவதூதனுக்காக காத்திருக்கிறேன்

இந்த மண்ணுடல் நெருப்பில் வேகுமுன்

ஏழாவது வானத்துக்கு என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!

-ஜிஃப்ரி ஹாஸன்

எனக்குத் தருவதற்கு கடவுளிடம் என்ன இருக்கிறது

———

எல்லாம் தரப்பட்ட பின்னும்

மேலும் என் எதிர்பார்ப்புகள்

கூடிக்கொண்டே செல்கிறது

நிரந்தரமற்றவைகளால்

மட்டுமே நான் அருள்பாலிக்கப்பட்டேனா?

நான் கூட நிரந்தரமல்ல

களிமண்ணிலிருந்தோ

ஓர் இரத்தக் கட்டியிலிருந்தோ

தொடங்கிய இந்த வாழ்வும் கனவுகளும்

கலைந்துவிடும் போது அதற்கு அப்பால்

எங்கு செல்வேன்?

கடவுள் மீண்டும் ஒரு குழந்தையைப் போல்

என் கரங்களைப் பற்றி

எங்கே அழைத்துச்செல்வார்

மீண்டும் நிரந்தரமற்றவைகளால்

என்னை ஆசீர்வதிப்பதைத் தவிரவும்

அவருக்கு வேறுவழிகள் உண்டோ?

கடவுளின் நித்திய சுவனமும் நித்திய நரகமும்

நிரந்தரமற்றவைகளால் ஏமாற்றப்பட்ட

கடவுளின் அடிமைகளுக்கானது

கடவுளின் நித்திய சுவனம் முடிவற்றது

கடவுளின் நித்திய நரகம் முடிவற்றது

முடிவற்றவை எனும் மகத்தான தண்டனைகளால்

கடவுள் என்னை மீண்டும் அருள்பாலிப்பார்!

••••

Comments are closed.