ஜுனைத் ஹசனி கவிதைகள் ( அறிமுகக் கவிஞர் )

[ A+ ] /[ A- ]

download

மழை

வெண் மேகத்திலிருந்து

ஈரப்பதங்களிழுத்து வரும் மாலைக்காற்றின்

அசாதாரண வேகம்

மிகவும் உலுக்கி விட்டிருந்தது

தெருப்போக்கர்களை

கயிறுழுத்துக்கட்டப்பட்ட தன் மூக்குக் கண்ணாடி வழியே

இப் பிரபஞ்சத்தை ஆய்கிறார்

ஒர் முதியவர்

ஈனப்பட்ட அவர் கரப்பிடியின்வழியாய்

அவரது குடை அவரை

ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது.

வழிக்காற்று கொணர்ந்து சேர்த்த

உணர்வற்ற ஏதோ ஒரு ஜடப்பொருளாய்

நிலைகுலைந்து கொண்டிருந்தார்

அப்பாதைக்கு நடுவாய்

அவ்வயோதிகர்

தடதடத்துக்கொண்டிருக்கும்

அவரது இதய லப்டப்களினூடே

கிஞ்சிற்றும் இருப்பதற்கில்லை

அம்மழை சார்ந்த ஈரங்களும்

அதன் லயிப்புகளும்

பேனாப் பற்றிய

ஓர் கவிஞனுக்கோ

காகிதமுடைத்த ஓர் சிறுவனுக்கோ

போய் சேரட்டும் அம்மழை.

எல்லா மழைகளும்

எல்லோரையும் ஈர்த்துவிடுவதில்லை

எல்லா கவிதைகளைப் போல்.

சாளரம்

கதகதப்பூட்டும் இளவேனிற்காலத்தோர்

சாயங்காலப் பொழுதை

இன்னுமின்னும் சுவாரஷ்யமூட்டிக்கொண்டிருக்கிறது

முற்றத்துச் சாளரம்.

போவோர் திரிவோரின் சிலேடைப் பேச்சுக்களுடனே

அவ்வப்போது சில தும்பிகளையும்

மென் காற்றினூடே எறிந்து விட்டுத் திரும்புகையில்

படபடவென அசைக்கும் கதவுகள்

சமயங்களில் திகிலூட்டும் பேய்க்கதைகளை ஒத்திருக்கின்றன.

மெல்லிய ஸ்பரிசமாய் விலகிப் பிரிகின்ற

நினைவுச் சாரல்களின்

மென் வருடல்களைப் போலும்

இருட்டுலகின் கொடுங் கனவுகளைப் போலும்

திசை மாறி

சுரம் மாற்றி

தன்னசைவு மாற்றி

எக்காலத்தும்

துடித்தபடித்தான் கிடக்கின்றன

இந்தச் சாளரத்துக் கதவுகள்.

•••

Comments are closed.