ஞானக்கூத்தன் கவிதைகள் பேசு பொருள்கள் ( ஞானக்கூத்தன் சிறப்பிதழ் ) / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

13892091_10207281217171538_7069169764844783860_n

ஞானக்கூத்தன் கவிதைகள் நடை இதழில் அறிமுகமானது. சி.மணி சேலத்திலிருந்து நடை சிற்றிதழைக் கொண்டு வந்தார். அந்த இதழில் அப்போது தீவிரமாக நவீன இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த மூத்தவர்கள் தங்களது படைப்புகளோடு பங்கேற்றார்கள். ஞானக்கூத்தன் என்ற பெயரை நவீன இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது நடை சிற்றிதழ்.

சி.மணி அப்போது தன்னுடைய கவிதைகளில் கேலியும் கிண்டலும் பகடியும் எள்ளலும் துள்ளலுமான நடையில் எழுதினார். அவர் எழுத்து இதழில் அறிமுகமாகி பரவலான கவனத்தைப் பெற்றிருந்தார்.

புதுக்கவிதைகள் எழுத்து இதழில் இடம்பெற்று அது பரவலான கவனத்தையும் பெற்றுவருவதை மரபான கவிஞர்களுக்கு ஏற்றுக்கொளள இயலவில்லை. ஆகையால் மரபுக் கவிதைகள் எழுத தெரியாதவர்கள் அந்த இலக்கணத்திற்குள் எழுத தெரியாதவர்களே புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்ற ரீதியில் அவர்கள் கேலி செய்தார்கள்.

அதை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி அப்போது புதுக்கவிதை எழுதிய நான்கு பிதாமகன்களில் ஒருவரான சி.மணிக்கு இருந்தது. அவர் ஒரு ஆங்கில இலக்கிய மாணவர். பிறகு ஆங்கில இலக்கியம் கற்பிக்கிற பேராசிரியராக பணியேற்றார். ஆங்கில இலக்கியம் படிக்கிறவர் எப்படி தமிழ்கவிதை எழுத இயலும்? அவருக்கு எப்படி தமிழ் இலக்கணம் தெரியும் எனத் தனியாகவும் சரி , பொதுவாகவும் புதுக்கவிதை எழுதுபவர்களுக்கும் மரபுக் கவிஞர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அப்போது அவர்களுக்கு இருந்தது. இதனால் தங்களுக்கு மரபுக் கவிதைகளும் பரிச்சயமிருக்கிறது. இலக்கணத்திலும் செழுமையிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தினாலும் சி.மணி தன் கவிதைகளை மரபு கவிதையின் வடிவத்திலும் புதுக்கவிதையின் கட்டற்ற சுதந்தரத்தையும் எடுத்துக்கொண்டார்.

இந்த காலகட்டத்தில் நவீன கவிதைகளை எழுத வந்த ஞானக்கூத்தனும் தன் முன்னோடியாக சி.மணியின் போக்கில் தன் கவிதைகளை எழுத தொடங்கினார். ஞானக்கூத்தனுக்கும் தமிழ் மரபுக் கவிதையில் நல்ல பரிச்சயமும் இலக்கணத்தில் நல்ல செழுமையான அறிவும் இருந்ததால் அவராலும் தன் கவிதைகளை மரபின் வடிவில் எழுத முடிந்தது.
இவை நடந்தது 60 களின் தொடக்கத்தில் என்ற காலப் பிரக்ஞையும் நமக்கு வேண்டும்.

அக்காலகாட்டத்தில் தமிழ்க்கவிதை எழுதுபவர்கள் அதிகமாக எழுதி வந்த ஒரே வடிவம் மரபுக் கவிதைகள் தான். அதனால் அந்த மரபான கவிஞர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அவர்களின் கூச்சலை எதிர்கொள்ள வேண்டிய தேவை சி.மணிக்கும் அவர்வழி வந்த ஞானக்கூத்தனுக்கும் இருந்தது என்பதையும் நாம் புரிந்துகொண்டால் அவருடைய

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்

என்ற கவிதை எழுத வேண்டிய தேவை எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்

பலரும் அவர் தீவிரமான திராவிட எதிர்ப்பாளர் என்பதாலேயே இப்படி எழுதினார் என இப்போது நினைக்கிறார்கள். இந்தக் கூற்றை நான் முற்றாக மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் மரபுக் கவிஞர்களின் கூச்சலைதான் அவர் தவளைகளின் கூச்சல் என்கிறார்.

அவருடைய தொடக்க காலத்தில் சி.மணியின் எள்ளலை, பகடியை, வடிவத்தை , மரபின் செழுமையான வடிவத்தை என ஞானக்கூத்தன் வரித்துக்கொண்டிருந்தாலும் , விரைவில் தன்னுடைய கவிதை செயல்பாடுகளால் , தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்த அடையாளத்தினால் அவருடைய செயல்பாடுகள் தீவிரமானதாக மாறியது.

ஞானக்கூத்தன் தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் சுமார் 50 ஆண்டுகளாக கவிதை பற்றிதான் பேசிவந்தார். எழுதி வந்தார். அது கவிதையாக இருக்கும் அல்லது கவிதை பற்றிய கட்டுரையாக இருக்கும் அல்லது கவிதை பற்றிய பேச்சாக இருக்கும். அல்லது கவிதை பற்றிய அவர் வாசிப்பாக இருக்கும்.

இப்படிதான் முழுக்க முழுக்க கவிதைக்காகவே வாழ்ந்தார் என சொன்னால் அது நிச்சயம் மிகையான கூற்றல்ல என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்.
images (36)
பின்னாட்களில் அவர் சம்ஸ்கிருத கவிதை கோட்பாடான த்வனி கோட்பாட்டை தன்னுடைய கவிதை கோட்பாடாக சுவீகரித்துக்கொண்டு அதை நவீன தமிழ்க் கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதைப் பற்றிய விளக்கமான கட்டுரைகளை எழுதி வலு சேர்த்தார். தமிழ் நவீன இலக்கியத்திற்குத் தொடர்ச்சியாக அதைப்பற்றிய பேச்சுகளை, எழுத்துகளை உருவாக்கினார்.

அவருடைய கவிதைக்காக என்ற கட்டுரை நூலை விருட்சம் பதிப்பகம் 90களின் தொடக்க ஆண்டுகளில் வெளியிட்டது . அந்தப் புத்தகத்தில் பெரும்பாலான கட்டுரைகளில் இந்த த்வனி கோட்பாட்டை பற்றிதான் எழுதியிருந்தார்.த்வனி கோட்பாட்டின் இன்னொரு நுட்பமான விஷயமான வக்ரோத்தி என்பதையும் இங்கே அறிமுகப்படுத்தினார். ( இந்த த்வனி மற்றும் வக்ரோத்தி விஷயங்களை தெளிவாக அறிந்துகொள்ள ஞானக்கூத்தனின் கவிதைக்காக புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன் ).

அதே சமயம் நவீனகவிதை குறித்த டி.எஸ்.எலியட்டின் கோட்பாடுகளை பற்றிய அறிவோடும் புரிதலோடும் தன் நவீன கவிதைகளுக்கு அவற்றை அடிப்படையாகவும் கொண்டிருந்தார். இவற்றோடு தமிழ் மரபிலும் செழுமையான அறிவு பெற்றிருந்தார். செய்யுள் வடிவத்திற்கான இலக்கண அறிவும் பெற்றிருந்தார்.

இப்படி தமிழ்க்கவிதையின் இரண்டாயிர வருட பாரம்பர்ய கவிதைகளின் செழுமையையும் நவீனகவிதை பற்றிய டி.எஸ்.எலியட்டின் கோட்பாடுகளையும், சமஸ்கிருதத்தின் த்வனி கோட்பாட்டையும் தன் கவிதைகளுக்கும் தன் கவிதை பற்றிய கட்டுரைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டார். கூடவே உலக இலக்கியங்களின் அறிவையும் சமகால கவிஞர்களின் கவிதைகளில் பரிச்சயத்தையும் பெற்றிருந்தார்.

இவற்றிற்கு மேலும் செழுமையேற்றிக்கொள்ள இந்திய மொழிகளில் அப்போது எழுதிக்கொண்டிருந்த சமகால கவிஞர்களின் கவிதைகளையும் வாசித்து தன்னை ஒரு கவிதைக்கான மனிதராகவே மாற்றிக்கொண்டிருந்தார் ஞானக்கூத்தன்.

இன்னும் சொல்லப்போனால் பின்னாட்களில் அவர் அறிமுகம் எழுதிய இளைய கவிஞர்களின் கவிதைகளுக்கு மரபான கவிதைகளை அடையாளம் கண்டு அதை இந்த புதிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டும் அதையும் இந்தப் புதுக்கவிஞர்களின் கவிதைகளோடு எப்படிப் பொருந்திப் போகிறது என்றும் விலாவாரியாக விளக்கமாக எழுதி வந்தார்.

அவர் வானம்பாடி கவிஞர்களின் கவிதைக் கோட்பாட்டிற்கு முற்றான எதிர்நிலையிலிருந்து தீவிரமாக இயங்கி வந்தார். அதாவது ஒரு கட்டம்வரை மரபுக் கவிஞர்களுக்காக பதில் சொல்லிவந்த நவீன கவிதை பாராம்பர்யம், இன்னொரு கால கட்டத்தில் வானம்பாடிகளின் கவிதை என்ற வடிவத்திற்கும் மனோபாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தையும் நெருக்கடியையும் சந்தித்து வந்தது. அவற்றை ஞானக்கூத்தன் தன் கவிதைகளின் போக்கினாலும் பேச்சினாலும் கட்டுரைகளாலும் மௌனத்தாலும் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தார். எந்த சூழலிலும் அவர் இதை விட்டுக்கொடுத்து இயங்கியதில்லை.

ஞானக்கூத்தனுக்கு நடை இதழ் நின்றுபோன பிறகு கசடதபற மற்றும் ழ போன்ற இதழ்களை உருவாக்கி தன் நண்பர்களோடு நவீன இலக்கிய செயல்பாடுகளால் இயங்கினார். இயக்கினார்.

ழ என்ற கவிதைக்கான ஒரு தீவிர இதழை தொடங்கினார். அதில் ஆத்மாநாம் ஆர்.ராஜகோபால் ( இவர் ஆங்கில பேராசிரியராக பிரசடன்சி கல்லூரியில் பணிபுரிந்தவர் ) ஆனந்த், தேவதச்சன் இப்படி ஒரு தீவிரமான கவிதை எழுதுகிற வட்டத்தை ழ இதழின்வழி உருவாக்கினார்.

இந்த ழ கவிதையேட்டில் அப்போது உலக இலக்கியத்தில் இருந்த கவிதைகளின் போக்குகளை அடையாளப்படுத்துகிற விதமாக சில மொழிபெயர்ப்பு கவிதைகளையும் வெளியிட்டிருந்தார்கள்.

ந.முத்துசாமியின் சிறுகதைகளும் நாடகங்களும் அப்போது எல்லா இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துகொண்டிருந்தன. ( ந.முத்துசாமி அவருடைய ஊர்க்காரர் மற்றும்அவருடைய பள்ளித்தோழர் ).நவீன ஓவியங்களையும் நவீன நாடகங்களையும் தமிழுக்கு கணிசமாக அறிமுகப்படுத்தியதிலும் ஞானக்கூத்தனுக்குப் பங்கிருக்கிறது.

எண்பதுகளின் கடைசி வருடங்களில் நண்பர் அழகியசிங்கர் விருட்சம் இதழைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்த போதும், அவர் விருட்சம் பதிப்பகமாக கொண்டு வந்தபோதும், ஞானக்கூத்தன் தன் ஆதரவை அவருக்குக் கொடுத்து வந்தார். அவருடைய மீண்டும் அவர்கள் என்ற அதுவரை தொகுப்பாக வெளிவந்த ( 1994 ) கவிதைகளையும் , அதுவரை புத்தகமாக வெளிவராத கவிதைகளையும், மொத்தமாகத் தொகுத்து அழகியசிங்கர் ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

மேலும் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரைகளை கவிதைக்காக என்ற புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில்தான் த்வனிக் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது.கூடவே அவருடைய மரபுக் கவிதையின் செழுமையான அறிவைக் காட்டுகிற செய்யுள்களை நவீன அறிவோடு பார்க்கிற கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில், நான் சென்னையில் காலச்சுவடு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவருடைய வீடு என் அலுவலகத்தின் அருகில் இருந்ததால் அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு இந்தியளவில் மற்றும் உலகளவில் இயங்கிக்கொண்டிருந்த கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பரிச்சயம் செய்து வைத்தார்.நவீன கவிதைகளின் கோட்பாடுகளையும் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்களையும் சொன்னார்.

அதே சமயத்தில் மரபுக் கவிதைகளின் செழுமையையும், அவற்றை எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார் . அவருடைய இந்தத் தொடர்பினால் ஒரு கட்டத்தில் நான் தொல்காப்பியத்தை வாங்கி வந்து ஆழ்ந்து வாசிக்க தொடங்கினேன்.

என் கவிதை பற்றிய கட்டுரைகளை அவருடைய பாணியில் எழுதத் தொடங்கியிருந்தேன். குறுந்தொகையில் ஒரு பாட்டிற்கு நுண்மையான வாசிப்பையும் அதன் தற்போதைய புரிதல்பற்றியும் ஒரு கட்டுரையை அப்போது எழுத முடிந்தது என்றால் அது ஞானக்கூத்தனின் ஆகிருதியால் நடந்ததுதான்.

அவருக்கென ஒரு கவிதை சொல் முறையை ஏற்படுத்திக்கொண்டார். அவர் சி.மணியின் வடிவத்தை தொடக்க காலத்தில் தன் கவிதைகளில் எழுதி வந்திருந்தாலும் பின்னாட்களில் தனக்கென ஒரு வடிவத்தை எடுத்துக்கொண்டதை போலவே பிறகு ஞானக்கூத்தன் பாணியில் எழுத வந்தவர்களும் அவரின் பகடியை கேலியை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.அவருடைய கவிதைகளின் வீச்சை, மொழியை, வடிவத்தை, இப்படி கவிதையின் நுட்பமான விஷயங்களை ஸ்வீகரித்துக்கொள்ள இயலவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஞானக்கூத்தனின் அடுத்த வாரிசுகளாக நினைத்துக்கொண்டிருக்கிற யாரும் அவரை மிஞ்சிவிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அவருக்கென ஒரு தனியிடம் கவிதை உலகில் இப்போது வரை ஏற்பட்டிருக்கிறது.போலிகளால் அந்த இடத்தை ஒருநாளும் அடைய முடியாது.

ஞானக்கூத்தன் கவிதைகளை எளிமையாக வாசகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு காரணம் அவருடைய கவிதைகள் மனப்பாடமாக சொல்வதற்கும் வசதியாக இருப்பதும் ஒரு காரணம். மேலும் அக்கவிதைகள் எளிமையான வடிவத்தில் இருப்பதும் இன்னொரு காரணம். எளிமையாக இருக்கிறது என்றுதான் சொன்னேன். ஆனால் உண்மையில் அது எளிமைபோல இருக்கிற நுட்பமான கவிதைகள்.
images (42)
வாசகர்களை எளிமைபோல எளிதாக ஏமாற்றப் பார்க்கிற கவிதைகள் அவருடையவை. வாசிக்க வாசிக்க பொருள் விரிந்துகொண்டே போகிற தன்மையில் அமைந்தவை. அவருடைய எனக்கும் தமிழ்தான் மூச்சு கவிதை அப்போதைய தமிழ் அரசியலைப் பற்றிப் பேசிய கவிதை என்றாலும் அது இப்போதும் சமகாலத்திற்குப் பொருந்துகிற கவிதையாக இருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்க் கவிதையின் மாறிவருகிற போக்குகளைக் கடந்து , அவை இப்போதும் நவீன வடிவத்தில் இருக்கிற கவிதைகளாக எழுதியமைதான் அவருடைய மேதைமைக்கு சான்று.

ஞானக்கூத்தன் கவிதைகளில்இடம்பெற்றிருக்கிற பெரும்பாலான கவிதைகளில் ஒரு நிகழ்காலம் உறைந்திருக்கும் . கவிதை வாசகன் அதை எந்த நிகழ்காலத்தில் வாசிக்க தொடங்கினாலும் அப்போதைய நிகழ்காலத்தின் அர்த்தங்கள் அக்கவிதைகளில் பரவி வாசகனின் அர்த்தத்திற்கு விரிந்து அனுபவங்களாகும்.அத் தன்மைகளோடு அக்கவிதைகள் படைக்கப் பெற்றிருக்கிறது என்பதால்தான் பல தசம ஆண்டுகளைக் கடந்தும் வாசிப்பிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

ஞானக்கூத்தன் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதைகளின் வரலாற்றில் அவருக்கு ஒரு இடத்தை தேடிக்கொடுத்திருக்கின்றன. அவை காலத்தினாலும் அழியாத பெரும் புகழை அவருக்குக் கொடுத்திருக்கின்றன. தமிழ்க்கவிதை வாழும் காலம்வரையில் ஞானக்கூத்தனும் தன் கவிதைகளில் வாழ்வார்.

••

மேலும் சில நினைவுகளை வாசிக்க

ஞானக்கூத்தன் சில நினைவுகள் ( அஞ்சலி ) / சிபிச்செல்வன்
http://malaigal.com/?p=8841

Comments are closed.