டாக்கிங் டாம் பிம்பத்தோடு பேசிச் சலிப்பவர்கள் ( கவிதைகள் ) / நேசமித்ரன்

[ A+ ] /[ A- ]

நேசமித்ரன்

நேசமித்ரன்

டாக்கிங் டாம் பிம்பத்தோடு பேசிச் சலிப்பவர்கள்

டாக்கிங் டாம் பிம்பத்தோடு
பேசிச் சலித்து அழுகையோடு
உறங்கும் குழந்தைகள் நிரம்பிய நகரம் இது

நிழல் அடர்வு குறைந்து மெல்ல ஒளியாக மாறுவதை பால்கனி
பிரம்பு ஊஞ்சல் வெறித்து
சிப்ஸ் கொறித்தபடி தனிமை
உணர்தல் விலையென்று பெயரிடப்பெற்ற தண்டனை

மனப்பாடமாகி விட்ட வசனங்களோடு ஏசி ரிமோட்டோடு
ஜோடி சேர்ந்து குழப்பும் சலித்தெறிந்த டிவி ரிமோட்
வெல்வதில் உள்ள பரவசம்
தீர்ந்த கணிணி ஆட்டங்கள்
காற்று குறைந்த பலூனைத் தழுவி வெறுமனே நீந்துவதைப் போலாக்குகின்றன பொழுதை

சரணாலயத்தின் விலங்குகள்
அறியாமல்
கண்காணிக்கும் காமிராக்களாய்
ஏதேனும் இரண்டு கண்கள்
எப்படியோ பின் தொடர்ந்து கொண்டே அலைகின்றன

அந்த கண்கள் பார்க்காத போது
பார்க்கப் பழகி இருக்கின்றன
அந்த கரங்கள் எதேச்சை போல்
நடிக்கும்
ஆடைவிலக்கும்
தீண்டல் பழகியவை
தப்பிதங்களை அனிச்சை என்றும் நம்பும் குழந்தைமைதான்
அவர்களது பசி
நஞ்சும் யாருக்கோ எச்சில்தான்
ஆம்
கோழைகளும் நீசர்களும் எதிர்ப்பற்ற எளிய
உடல்களையே தேர்கிறார்கள்

கதறல்களில் கிளறும் மனவியாதி
தொற்றிய அவை
தற்கொலைக்கு நகர்த்தும் குரூரவழிகளைப் பழகியவையாய் இருக்கின்றன
வளர்ச்சியற்ற பசும் உடல்கள்தான் அந்த
பிரேதப் புழுக்களுக்கு இரத்தம் பாய்ச்சுகின்றன

மேகப் பொதிகளில்
வானவில் வரையும் கனவுகள்
கொண்ட மென்னுலகில்
பூதங்களைப் போல் பிரவேசிக்கிறார்கள்
பூதங்கள் சாக்லேட் தருபவையாய் இருக்கின்றன
பூதங்கள் ஒரே ஒரு முறை என்று
கெஞ்சுபவையாய் இருக்கின்றன
பூதங்கள் சிறிய தவறுகளைச் சொல்லி சொல்லி மிரட்டுபவையாய் இருக்கின்றன
அவமானங்களை பணயமாக்கி
மீண்டும் மீண்டும் வதைப்பவையாய் இருக்கின்றன
பூதங்கள் இண்டர்னல் மார்க் போடுகிற பேனாவாய் இருந்து தொலைக்கின்றன
விரல்முனையில் வெற்றுடல்
காட்சிப்படுத்தும் விஞ்ஞானம்
பிறழ்ந்த பிசாசை வெறியூட்டி
நச்சுக்குப்பியாக்குகிறது

செவிகேளா குரலற்றவர்களின்
தேசிய கீதமாய்
செய்கைகளை புரிந்து கொள்வதற்குள்
சகலமும் முடிந்து
சருகுகளாக்கப் படுகின்றன தளிர்கள்

அப்போது உடல் நடுங்க
அச்சிறுமிகள் பிரார்த்தித்தபோது
அவர்களோ செவிடாய் இருந்தார்கள்
சப்தமிடாதே என்று அடித்தபோது
யாரேனும் தேவதை காப்பாற்ற வரக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தபோது அம்மிருகங்கள் மும்முரமாய் இருந்தன
யாரிடமும் சொன்னால்
என்று விழியுருட்டப்பட்டபோது
வாய் பொத்திய
விசும்பல்களிடையே காரணமே
தெரியாமல் வதையுற்ற போது
அவள் கடைசியாய் அழைத்தது
நம்மில் யாரோ ஒருவரின் பெயரைத்தான்

கைவிட்ட நம் பொன்னுலகோ
புனிதத்திற்கும் வலிக்கும்
உள்ள தூரத்தை மரணங்களால்
அளந்து கொண்டிருக்கிறது

***

தப்புக்கதிர்கள்

தளர்குழல் உதற தலைசாய்க்கும் தருணங்களில்
விழுதிறக்கிய கரையோர மரம் ஆற்றுடன் பேசும் இரவுநேர
ரகசியங்கள் நினைவூறுகின்றன

அப்பிரியத்தின் ஆரம்
கடல்வாழிகளின் கூடு
ஆமைகள் ஆழிவழியே
பூமி சுற்றும் பாதை அதன்
அலைவுதூரம்

பேரிச்சை விதைகள் திறக்க மறுக்கும் உதடுகளாய் இறுக்கம்
பேசுகையில்
உலர்ந்தாலும் உள்ளே குழைந்திருக்கும் கள்ளிப்பழம்
அவ்வுதடுகளின் முத்தம்

பயணங்களில் தொடைசாய்ந்து
கண்ணயர்கையில்
கன்னத்துக்கு தொடைக்கும்
இடையே உள்ளங்கை ஏந்தி
தாங்கும் கூச்சமும் ப்ரியமும் இழைந்த வேர்வை
வைக்கோல் சூட்டில் கனிந்து
பழுக்கும் வாசனை உடையது

பூமியில் எப்போதும் கொஞ்சம் பகல்
எஞ்சியிருக்கும் தேசத்தில்
அதன் சுள்ளிகள் கூடாக
சேமிக்கப்பட்டிருக்கிறது

அறுவடை முடிந்த நிலத்தின் ‘தப்புக்கதிர்கள்’ சேகரிக்க வருபவர்களாய்
புணராமல் தழுவிப் பிரிந்ததில் நெரிந்து உதிர்ந்த
மயிர்களை ஆடைமாற்றுகையில்
உதிராமல் பதைத்துப் புறப்படுத்தும்
மென்வெட்கத்தை உனக்கு
சொல்ல முடிந்ததில்லை

பாலூட்டியபடி தானும் உறங்கிவிட்ட தாயின்
கலைந்த ஆடையை சரி செய்து விழித்ததும் அவள் கொள்ளும் சிறுபதைப்பை ஒத்தி வைத்து உறங்க முயலும்
தகப்பனாய்
இந்த காமத்தை துயிலாழ்த்தி ரசிக்கிறது காதல்

Comments are closed.