தமிழவனின் `நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்`(சிறுகதைகள்) / வெளி ரங்கராஜன்

[ A+ ] /[ A- ]

4_5430

தமிழவன் இலக்கிய கோட்பாட்டாளராகவும்,புனைவு எழுத்தாளராக வும்,விமர்சகராகவும் பல்வேறு இலக்கிய உரையாடல்களை முன்னெடுப்பவராக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார். நவீன இலக்கியவாதிகளிடம் மரபு மற்றும் வரலாறு குறித்த புரிதலை யும் விவாதத்தையும் வலியுறுத்தும் அவர் நம்முடைய கல்விப்புலச் சூழலில் இலக்கியம் குறித்த பார்வையும்,அணுகுமுறையும் மேம்பட வேண்டும் என்றும் மொழியின் சாத்தியங்கள் குறித்த சமகால உணர்வு உருவாக வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்புபவராக இருக்கிறார்.

அவருடைய புனைவு எழுத்துக்கள் வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு மையமற்றதாகவும்,கதையற்ற கதைகளாகவும் உள்ளன.புனைதலின் நுட்பமான செயல்பாட்டின் மூலம் சாத்தியமாகாத வாழ்க்கை அனுபவங்களை உணர்வதற்கான சாத்தியங்களை அவை கொண்டதாக இருக்கின்றன.காலம்,நினைவு இவற்றால் விடுபட்டுப்போன கண்ணிகளை இணைத்துச் செல்வதற் கான சரடுகள் கொண்டிருக்கின்றன.சில நிகழ்வுகளை குறியீடுகளாக பயன்படுத்தி வெவ்வேறு நிலைகளுக்கு அலைக்கழிக்கும் உத்திகளை இவை முன்னெடுக்கின்றன.

பாரம்பரியம் குறித்த உரையாடல் இக்கதைகளில் முக்கியமானதாக இருக்கிறது.மூன்று தலைமுறைகளின் சரித்திர ஞாபகம் நம்மோடு முற்றுப்பெற்றுவிடும் அவலம் பேசப்படுகிறது.அவசரநிலை காலகட்டம்,இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகிய வரலாற்று சம்பவங்கள் உருவாக்கிய கலவர உணர்வுகள் நினைவுகூரப்படுகின்றன.முக்கிய மாக நம்முடைய கலாச்சார நிறுவனங்களின் மந்தமான வேலை எதிர்ப்பு மனோபாவமும்,உண்மையான ஈடுபாடுகளை நசுக்கும் தன்மையும் கண்டனத்துக்கு உள்ளாகின்றன.மரபை தொலைத்தது, மொழியின் மரணம்,புராதனத்தின் மாயம்,அழகின் மரண ஈர்ப்பு ஆகியவை தொடர்ந்து உணர்வலைகளை எழுப்பியபடி உள்ளன. தத்துவத்தையும்,அழகியலையும் பொருத்திப்பார்க்கும் எண்ணற்ற சரடுகள் இக்கதைகளில் ஊடுறுவிச்சென்றபடி உள்ளன.

இவை கதைகளாகவும்,வெவ்வேறு மனநிலைகளாகவும் உள்ளன. சந்திப்பு,பிரிவு,மரணம்,புராதனம்,புதிர்த்தன்மை ஆகிய பல்வேறு சரடுகளுக்குள் இவை பயணிக்கின்றன.ஸ்தூலமாகவும்,ஸ்தூல மற்றும் ஒரு நிச்சயமற்ற தன்மை வாழ்க்கையை வழிநடத்திச் செல்வது போல் உள்ளது.சாத்தியமாகாத வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு புதிய மொழிக் கட்டமைப்பில் சாத்தியப் படுத்தும் உத்தியாக இக்கதைசொல்லல் உள்ளது.அவ்வகையில் இவை அதிகமான சாத்தியங்கள் கொண்டவையாக இருக்கின்றன.

••
நூல் மதிப்புரை
புதுஎழுத்து வெளியீடு

Comments are closed.