தமிழ்மணவாளன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (63)

சொல்ல நினைப்பதும் சொல்லி முடிப்பதும்

ஏதோவொன்றைச் சொல்ல நினத்துத்தான்

உரையாடல்கள் நிகழ்கின்றன

சொல்ல நினைப்பதற்கும் சொல்லி விடுவதற்குமான

இடைவெளி நொடிகளால் மட்டுமன்றி

யுகங்களாலும் ஆனது

இரண்டுக்குமான இடைவெளியில் தான்

சொற்கள் தேர்வாகின்றன

உடலும் கண்களும் சொற்களற்றப் பிரதேசத்தை

நிரப்பப் பிரயத்தனப் படுகின்றன

தவறான வார்த்தைகள்

உடன்பாட்டுக் கூறுகளையும்

எதிர்மறை முகமூடிகளால் அச்சமூட்டி விடுகின்றன

இலக்கில்லாத சொல்லாடல்களால்

எவ்விதப் பயனுமற்று

பொருளற்ற ஒலிகளாய்க் கரைந்து போகின்றன

மனத்தடைகள் பொருத்தமற்றப்

புறவழிச்சாலையில்

கடத்திச் சென்று விடுகின்றன உரையாடலை.

எவ்வளவு முயற்சிக்குப் பின்னும்

சொல்லவந்ததைச் சொல்ல முடியாமலே

கலைந்து போன உரையாடல் வெளி

திருவிழா முடிந்த திடலாய்

கேட்பாடற்றச் சொற்குப்பைகளோடு

வெறிச்சோடிக் கிடக்கிறது.

—-
அழைப்பு

பெருங்கூட்ட நெரிசலில்
பெற்றோரையிழந்த சிறுமியின்
விசும்பலென துக்கித்த மாலைப் பொழுதை
மதுபானக்கடையின் மங்கிய ஒளியில்
பருகிக் கொண்டிருக்கிறேன்.

எந்த அழைப்பையும்
ஏற்கவொண்ணாத
அலைபேசியின் மௌனம் அச்சமூட்டுகிறது.

சட்டைப் பாக்கட்டிலிருந்து
எடுத்துப் பார்க்கிறேன்.
வலது மேல் மூலையில்
குண்டூசிச் சிவப்பொளியதன் உயிர் காட்ட
அடுத்த அழைப்போ அல்லது
அதற்கடுத்த அழைப்போ
உன் மரணத்தை அறிவிக்கக் கூடும்.

அந்தச் செய்தியை எதிர் கொள்வது குறித்தும்
என்ன பதிலுரைப்பது என்னும்
பதற்றத்தைச் சோடாவில்
கலந்து பருகும் போது
தொண்டை வழி இறங்காமல் புரையேறுகிறது.

அய்யோ..
மரணத் தறுவாயிலும்
என்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாயா
நீ.

•••

நட்பு மனம்

அந்தப் பெருங்கடைத் தீப்பற்றியெரிந்த
அந்திபொழுது நெரிசலற்ற கடைவீதியில்
நேரெதிர் கொண்டு புன்னகைத்த என்னை
கண்டுகொள்ளாமல் கடந்து போனாய்.
கண நேரம் அதிர்ச்சியுற்றாலும்
கவனிக்காமல் தான் போயிருப்பாயென
நம்பியது என் மனம்.

இருமுறை அலைபேசியில் அழைத்தபோது
யாரோடோ பேசிக் கொண்டிருந்தாய்.
மூன்றாம் முறை
முழு அழைப்புப் பாடலின் பின்
எந்த அழைப்பையும் நீ ஏற்க இயலாதிருப்பதாய்
அறிவித்தது யாரெனத் தெரியவில்லை.
எவருடனோ
பேசி முடித்த அந்தக் கணம்
பேருந்தொன்றின் படிக்கட்டில்
அவசரமாய் ஏறிக்கொண்டிருப்பாயென
நம்பியது என் மனம்.

வாய்ப்பிருந்த பொழுதையெல்லாம்
வெறுப்புமிழும் சொற்களால் நிரப்பினாய்.
என் மீதான அக்கறையன்றி
வேறென்ன காரணமிருக்கக் கூடுமென
நம்பியது என் மனம்.

தவிர்க்கவியலாச் சந்திப்பின் சில நொடிகளில்
நீ என்பாற் கொண்ட
பேரன்பின் பிரமாண்டம் குறித்து
நகைத்தபடி சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

நம்ப மறுக்கிறது என் மனம்.

••••••••••

Comments are closed.