தரங்கனீ ரெஸிகா பெர்ணாந்து ( சிங்கள மொழி பெண் கவிஞர் ) / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 11 – எம்.ரிஷான் ஷெரீப் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

தரங்கனீ ரெஸிகா பெர்ணாந்து

தரங்கனீ ரெஸிகா பெர்ணாந்து

பத்திக் கட்டுரைத் தொடர்

உலகிலுள்ள எவருமே தானாகத் தனித்துப் போவதற்கு விரும்புவதில்லை. தனித்து வாழ்பவர்கள் எல்லோருமே தனித்து விடப்பட்டவர்கள். குடும்பம், சூழல், நேசம் போன்ற பல காரணங்களும் அவர்களைத் தனிமையில் தள்ளி விடுகின்றன. அவர்களது ஏகாந்தத்தை வேவு பார்க்கும் பலருக்கும் அந்தத் தனிமை ஒரு கேள்வியாகவும், அவர்களது அந்தரங்கத்தை ஊடுருவத் தூண்டுவதாகவும், சில சமயம் பொறாமையாகவும் மனதைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.

பெண் என்பவள் இன்னொருவரை சார்ந்தே வாழ்வதைக் கண்டு பழக்கப்பட்ட நம் சமூகத்தில் தனித்து விடப்பட்டவள் பெண்ணொருத்தியாகும்போது அவளுக்கு ஆதரவு கொடுப்பதாகக் கை கொடுத்து, காரியம் முடிந்த பின்னர் கை கழுவி விட்டுச் செல்லக் காத்திருப்போரே அநேகம். அநாதைகளாக தனிமையில் தள்ளிவிடப்படுபவர்கள், விதவைகள், குடும்பங்களாலும் சமூகத்தாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள், தாமாகத் தனிமையைத் தேர்ந்தெடுத்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்கள் எனப் பலரும் தனிமையின் கொடும்பசிக்கு தன்னைத் தின்னக் கொடுத்து வாழ்பவர்கள் என்றே சொல்லலாம்.

தனித்த பெண்களின் மேற்படி நிலைமையானது, தெற்காசிய நாடுகளில் அனைத்து இனங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவானது. வறியவர்கள் முதற்கொண்டு செல்வத்திலும், செல்வாக்கிலும் வலியவர்கள்வரை இந்த நிலைமைதான் இன்னும் இருக்கிறது.

ஏனைய விலங்குகளைப் போல பிறந்ததுமே சொந்தக் காலில் எழுந்து நிற்க எந்தவொரு மனிதனும் முயற்சிப்பதேயில்லை. மனிதன் தனது காரியங்களைச் செய்து வாழ, இன்னொருவரைச் சார்ந்திருந்தே பழக்கப்பட்டவன். ஒரு மனிதனுக்கு, இன்னுமொரு மனிதன் சிறகுகள் போன்றவன். அவன், அம் மனிதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நடவடிக்கைகளை நிகழ்த்த கட்டம் கட்டமாக உயர்த்திக் கொண்டே வருகிறான்.

காற்றிலும், மழையிலும், குளிரிலும், உஷ்ணத்திலும், இன்னல்களிலும் அம் மனிதனை அச் சிறகுகள் ரட்சிக்கின்றன. மனித நியமங்களுக்குட்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழ்வதென அம் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. அச் சிறகுகள் சடுதியாக இல்லாது போனால் மனிதனின் குறிப்பாக ஒரு அழகிய இளம்பெண்ணின் நிலைமை என்னவாகும்?

சிங்கள மொழியில் கவிதைகள் எழுதி வரும் பெண் கவிஞர் தரங்கனீ ரெஸிகா பெர்ணாந்துவின் கீழுள்ள கவிதையைப் பாருங்கள்.

இதயமே மிக விசால ஆகாயம்

சுதந்திரமாகச் சிறகடிக்க

ஆகாயமற்ற நிலவுக்கு

சிறகுகள் எதற்கென

தனது கரங்களாலேயே

சிதைத்துக் கொண்ட சிறகுகள்

தீப்பற்றியெரியும் சிரசில்

அனலடிக்கும் எண்ணங்கள்

ஓசையெழுப்பும் தெருவொன்றில்

தனித்தே நடக்கிறேன்

மெதுமெதுவாக

நேசத்தின் சுடர்களை மறைத்து வைத்து

காதலின் வெப்பத்தையே உணர்த்தியவாறு

தேனீக்கள், வண்டுகள்,

வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள் எனப் பலதும்

சிறகுடைந்த பறவையிதென

மிகுந்த அனுதாபத்தோடு

சிறகுகளைச் சூடி விட

வரிசையில் நிற்கின்றன

கடனுக்கு வாங்கிச் சூடும் சிறகுகள்

எனக்கெதற்கு

இதயமே மிக விசால ஆகாயம்

தனிமையே தியானியின் ஆறுதல்

************

எதிர்கொள்ள நேரிடும் தனிமையை சாதகமாக்கிக் கொண்டு தன்னை அண்ட நாடும் வண்டுகளுக்கான பதிலாகவே இக் கவிதையைப் பார்க்க முடிகிறது. ஆனால் இக் கவிதை எதிரொலிக்கும் தன்னம்பிக்கை அளப்பறியது. கவிதையும், கடைசி இரு வரிகளும் தனித்து விடப்படும் எந்தவொரு அநாதரவான பெண்ணுக்கும் பெரும் ஆறுதலையும், எதையும் எதிர்த்து வாழும் துணிச்சலையும், ஏகாந்தத்தின் இனிமையையும் போதிக்க வல்லன.

•••

mrishanshareef@gmail.com

Comments are closed.