“தளை மீறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்…” – சம்பு.

[ A+ ] /[ A- ]

சம்பு

சம்பு

இதுகாறுமான கெட்டிதட்டிப்போன பத்தாம்பசலித்தனமான சமூக அபிப்ராயங்களின்மீது சம்மட்டி வீசும் தீர்ப்புகளை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இந்தியா போன்ற பன்முகப்பட்ட கலாச்சாரம் பண்பாட்டு அசைவுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டில் சரியுந்தவறுமான அரையுங்குறையுமான புரிதல்களுடன் வாழ்கிற மக்கள் திரள் அதிகம்.

நீண்டகாலச் சட்டப் போராட்டங்கள் வழி பெறப்பட்ட இத்தீர்ப்புகள் இன்று சமூகவெளியில் உண்டாக்கியிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும்.நமது கற்பிக்கப்பட்ட திணிக்கப்பட்ட பிரித்தறிய இயலாமல் வெகுமக்கள் பின்பற்றும் கலாச்சார மற்றும் பண்பாட்டு அரசியல் இதற்குப் பின்புலக் காரணிகளாகும்.இந்தத் தளைகளிலிருந்து ஒரு தனி நபர் சுலபமாக எந்த விதிமீறலையும் நிகழ்த்தவியலாவண்ணம் அவர் மனம் பூஞ்சைச் சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கிறது.

தனிமனித விருப்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் இந்திய சமூகம் அவ்வளவு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், பொதுச்சூழல் கலாச்சார மற்றும் மரபார்ந்த நம்பிக்கைகள் என அது விரிவான தளங்களில் பல்லாயிரம் இண்டு இணுக்குகளுடனே கூடிய கருத்துருவாக்கங்களைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து மீளவோ புதிய விடியலை கற்பிதங்கொள்ளவோ அது ஒருபோதுமே தானாக முயல்வதில்லை.கற்பிக்கப்பட்ட பிற்போக்குக் கருத்துகளின் வழிநின்றே எல்லாப் பிரச்சனைகளையும் பண்பாட்டு அசைவுகளையும் அது அணுக முயல்கிறது.

இப் பின்புலத்திதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கியத் தீர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதனை நம்பிக்கை மற்றும் மதப் பின்னணியில் வைத்து எதிர்த்துப் போராடுகிற அரசியல் சாரா தனி அமைப்புகள் மற்றும் ஆதாயத்தின் கனிகளைக் கொய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தச் சமூகத்தை இன்னுமொரு நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கிற கெடுவேலையை அவ்வளவு குதியாளமிட்டபடி செய்து வருகின்றன.தவிர அதை அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அணுகிக் கொண்டிருக்கின்றன.எவ்வித சிறு நெருடலுமின்றி சட்ட மதிப்புமின்றி மாபாதகமாக இந்தத் தீர்ப்புகளைச் சித்தரித்து அதிலிருந்து இச்சமூக மக்களை மீட்பதற்கான தூதர்களாக தம்மை முன்னிருத்தித் தெருவிலிறங்குகின்றன.

தவிர, கலவையான மனநிலையில் குழம்பிக் கிடக்கிற இம்மக்களைப் பெரிதும் நம்பி அவர்களிடம் உணர்வு ரீதியான தூண்டலை எளிதில் உண்டாக்கி அதன்மூலம் தமக்குத் தேவையான அரசியலதிகாரத்தை வென்றெடுக்கும் மலினமான யுக்தியை சில ஓட்டுக்கட்சிகள் கைக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலை இயன்றவரை குரூர யுக்தியுடன் சரியாகப்பயன்படுத்திக் கொண்டு தமது எதிர்காலத்தை அக்கட்சிகள்
திட்டமிடுகின்றன.வேறு எவ்வகையான முற்போக்கு அம்சங்கூடிய மாற்றங்களுக்கு சமூகத்தை தயார்செய்வதை விடவும் சகமனித வெறுப்பை பல்வேறு காரணிகளை முன்வைத்து விதைப்பதன் வழி பெரும்பான்மையான மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடியுமெனவும் அவைகள் நம்புகின்றன.
சில நேரங்களில் அதில் வெற்றியடையவும் செய்கின்றன.

இவ்வளவு குளறுபடியான ஒரு பின்புலத்தில் இம்மண்ணில்
மக்கள் தாம் விரும்பிய வாழ்வினை சுதந்திரமாக வாழவும் தம் கருத்துக்களை கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் வைத்து உரையாடவும் விவாதிக்கவுமான அரசியல் சாசன உரிமைகளையும்
நாம் பெற்றே இருப்பதையும் ஞாபகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓர் சுதந்திர வழிப்பட்ட சமூகத்திற்கான முன்மொழிதலை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

தீர்ப்பு: 1.

நமது உச்சநீதிமன்றம் IPC 377ல் உள்ள பிரிட்டிஷ் காலத்திய கடும் விதிமுறைகளின் சில ஷரத்துகளை சிறிய அளவு ரத்து செய்து ஓரினச்சேர்க்கையை குற்றவிலக்குடைய நடவடிக்கை என அங்கீகரிக்கிறது.

இதன்படி ஓரினச்சேர்க்கையாளர்கள்,பெண்களிடையே பாலுறவு கொள்பவர்கள் மற்றும் மாறிய பாலினத்தவரிடையே ஒப்புதலுடன் ஏற்படும் தன்பாலின நடவடிக்கைகளுக்கு இந்த ஷரத்தின் கடுமை பொருந்தாதெனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதைக் குற்றவிலக்குடைய ஒன்றாகக் கருதும் 125வது நாடாகத் திகழ்கிறது இந்தியா.எனினும் விலங்குகள் அல்லது சகமனித ஒப்புதலின்றி யாரோடும் மேற்கொள்ளும் பாலியல் செயல்களை IPC377 ,வழமைபோல் கட்டுப்படுத்தவே செய்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பாலியல் விழைவுகள் கட்டுப்பெட்டித்தனத்துடன் அடக்கிவைக்கப்பட்ட, சந்தர்ப்பங்களில் மோசமாக அத்துமீறுகிற என்ற எதிரெதிர் கோணங்களில்தான் அணுகப்பட்டு வந்திருக்கின்றன. மட்டுமல்லாமல் பால் மாறுபட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதில் மொத்த சமூகமே வெகுவாகப் பின் தங்கியிருக்கிறது.

நாம் வாழும் இதே மண்ணில் சில உயிரிகள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுடன் ஜீவித்துக் கிடக்கின்றன. ஏந்துவார் கரங்களை தவம்போல் எதிர்பார்த்தே கண்ணீருடன் அவர்தம் காலங்களும் கடந்துபோனதைக் கருத்திற்கொண்டு இத்தீர்ப்பு அவர்களை வெகுவாக ஆறுதல்படுத்துகிறது.

தீர்ப்பு:2

விதிக்கப்பட்ட வாழ்வைக் கொண்டாடும் நிர்ப்பந்தத்தை காலம்காலமாய் பெண்களின்மீது திணித்துவைத்திருக்கிறது நம் சமூகம். அதிலிருந்து சிறிய விடுதலையோ அல்லது சிறு விருப்பமோ ஒன்றும் சட்டக்குற்றமாக கருதவேண்டியதில்லையென அறிவிக்கிறது மற்றொரு தீர்ப்பு.(IPC497).
சநாதானத்தின் வழிவந்த ஆகப்பெரும் ஆகிருதி பொருந்திய நம் மூத்தகுடிகளை விக்கித்துப்போகச் செய்யும் வல்லமை கொண்டதுதான் இந்த அறிவிப்பு. எனினும்,நம் புரிதல்களில் தீமை நேர்ந்துவிடக்கூடாது.

மிக அதிகமாக நையாண்டியுடன் உரையாடல்களிலும் சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகவுமிது பார்க்கப்பட்டது.
யாரும் யாரோடு வேண்டுமானாலும் போகலாம் வரலாமென்பதைச் சொல்ல உச்சநீதிமன்றம் எதற்கு?
இந்த நீதிபதிகள் நம் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டுதான் தீர்ப்புகளைச் சொல்கிறார்களா?
தீர்ப்புக் கொடுத்த நீதிபதியின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பிலிருந்தால் மனைவி வரும்போது வந்து சேரட்டும் அதுவரை சற்று தூங்கி எழுந்தால் தேவலையென அவர் நினைப்பாரா?

இந்த நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலைதூக்கி நிற்கும்போது யார் யாரிடம் ட்ரவுசரைக் கழட்டுவது அல்லது சேலையை அவிழ்ப்பது என்பதுதான் பிரதானப் பிரச்சனயா என்றெல்லாம் வெகுவாக அலசி ஆராயப்பட்டது இந்தத் தீர்ப்புதான்.

ஆனால்,
உண்மையாகவே முறைதவறிய உறவுகளை இத்தீர்ப்பு ஊக்குவிக்கவுமில்லை.தாங்கிப் பிடிக்கவில்லை. ஆனால் அப்படி மட்டுமே பார்க்கும்படி மூளை சுருங்கிய ஆணாதிக்க மனம் கருதுகிறது.

அசந்தர்ப்பமான ஆண் பெண் உறவுகளில் பெண்ணை மட்டும் குற்றவாளியாகக் கருதுகிற சமூகத்தின் குறுகிய புரிதலுக்கும் அபிப்ராயத்துக்கும் இத்தீர்ப்பு முட்டுக்கட்டை போடுகிறது.

பரஸ்பரம் ஆண்/பெண் இருவரும் நற்புரிதலுடன் வாழ்தலின் அவசியத்தையும் ஒழுக்கத்தின் தேவையையும் நிர்ப்பந்திக்கிறது.

பெண்ணை மட்டும் குற்றம் சுமத்தி நிர்ப்பந்திப்பதிலிருந்து விலக்களிப்பதன் மூலம் இந்த உறவிலிருந்து சட்டப்படி ஆண் தப்பித்து வெளியேற இருக்கின்ற வாய்ப்புகளை முற்றிலும் நிராகரிக்கிறது.

எனவே, எல்லோர் வீட்டிலிருந்தும் பெண்களெல்லாம் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அடுத்தவருடன் போய்விட்டால் என்கிற மலினப்பட்ட சிந்தனையை ஆண்மனம் கற்பிதங்கொள்ள வேண்டியதில்லை.

தீர்ப்பு:3

அணிலும், மானும், குரங்கும்,எருமையும், பசுவும், நாயும்கூட கடவுளை வழிபட பெற்றிருக்கும் உரிமையை சற்றே விரிவுபடுத்தி நமது பெண்களுக்கும் அதையளிக்க முன்வருகிறது இன்னொரு தீர்ப்பு. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபடலாம் என்ற உத்தரவுக்குப் பிறகு சகிக்கவியலாத பிற்போக்கு கருத்துகளும் மோசமான எதிர்வினைகளும் இத்தீர்ப்பின் அசல் நோக்கத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக மற்றும் அரசியல் ரீதியான இழிநடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன.

நம் முன்னோர்கள் எதற்காக சிலவழிமுறைகளைக் கடைப்பிடித்தார்களெனச் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் கீழ்த்தரமான கருத்துக்களை முன்வைத்து அடுத்தடுத்த நகர்வுளுக்குச் சென்றது.

பிஜேபி இதில் அவ்வளவு அப்பட்டமாக தீர்ப்பின் எதிர்பலனை அறுவடை செய்யக் களமிறங்கியது.
கேரள இடது முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்தமுயலும்,ஒரு சமத்துவத்திற்கான புதிய திறப்பாக இதனைப் பார்க்குமென்பது நீதிபதி தீர்ப்பு வாசித்து முடித்தவுடனே பிஜேபி கணக்குப்போட்டு விட்டது.

பார்ப்பனீய மயப்பட்ட சடங்குகளிலிருந்து அப்போதே விதிமீறல்களை நடத்திக்காட்டிய ஸ்ரீ நாராயண குரு,அய்யன்காளி, சட்டாம்பி சுவாமிகள் பாரம்பரியத்தின் வழிவந்த கேரளாவில் இன்றைய ஆளும் அரசு முற்போக்கான இத்தீர்ப்பை செயல்படுத்த முனையுமென்பதை வேறு எவரைக்காட்டிலும் முதலில் பிஜேபி யினர்தான் புரிந்து கொண்டார்கள்.

தவிர, 24*7 காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்யமுடியாது.நடைமுறைக்கு அவ்வளவாகச் சாத்தியமற்றது என நுணுக்கமாகப் புரிந்துகொண்டதுபோல தமது பிரச்சாரத்தை பிஜேபி அவிழ்த்து விட்டது.

“சபரிமலை இட அமைவு பெண்கள் சென்று வர அவ்வளவு உகந்ததல்ல…” என்ற ரீதியில் பொன்.ராதாகிருஷ்ணன் முனகத் தொடங்கினார்.

இந்தச் சூழலில்தான் 16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிணராயி விஜயன் “சமூக சீர்திருத்த மரபுதான் நம்முடைய மகத்தான மரபு.அதுவே நம் அடிப்படை.. எந்தக் காலகட்டங்களில் எல்லாம் சமூக மாற்றக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அப்போது அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கித்தான் இருக்கிறார்கள்.

இதுவொன்றும் புதிதல்ல…சதிக் கொடுமை,விதவை மறுமணம், சிறுமிகளைக் கிழவர்களுக்கு மணமுடித்தல்,மனிதப்பலி சடங்கு,ஈரத்துணியுடன் மட்டுமே கோவில் நுழைதல், மாதவிடாயின் போது தனித்திருத்தல்,பிரசவத் தீட்டு, சாவுத் தீட்டு,பெண்கள் மார்பு மறைக்கத் தடை,பெண்களுக்குச் சொத்து மறுப்பு,பிராமணர்களிடமிருந்து 64 அடிகள் தள்ளி பறையர் நிற்பது என அனைத்து சமூக கீழ்மைகளிலிருந்தும் நாம் ஓர் மேம்பட்ட சமூகத்தை படைக்கவில்லையா…?”
என்று நம்பிக்கையின் வார்த்தைகளை ஆழமாக விதைத்திருக்கிறார்.

சமத்துவத்தை ஏந்திப்பிடிக்கும் எண்ணம் கொண்ட முற்போக்கு சிந்தனையை முன்மொழிகிற
ஓர் சமூகத்தில் பொதுமக்கள்திரளின் மீது சதா இந்த அரசியல் வயப்பட்ட அல்லது சமூக வயப்பட்ட பிற்போக்குத்தனமான கருதுகோள்களை பழமைவாதிகள் ஏவுகின்றனர்.
புதிய வெளிச்சம் நோக்கி மக்கள் நகர்ந்துபோகும் பாதைகள் திரிந்து குழம்புகிறபடி பாசிச சக்திகள் தீர்ப்புகளை கையிலெடுக்காவண்ணம் தடுக்கவேண்டும்.

ஒரு பொதுச்சமூகத்தின் சாதாரண பிரஜை என்கிற வகையில் ஒரு தனிமனிதர் இந்தத் தீர்ப்புகள் குறித்த விரிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ளவும், இயல்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் நாம் துணை நிற்கவேண்டும். தவிர,என்றென்றைக்கும் சமத்துவ சமூகத்தை கனவுகாணவும் உருவாக்கவுமான நகர்வுகளுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாரபட்சமற்ற உரையாடல்களை மேலும் விரிவான தளங்களில் நாம் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியிருக்கிறது.

(((((((((((((())))))))))))

Comments are closed.