தாதூண் பறவைகள் / சி. வைதீஸ்வரன்,

[ A+ ] /[ A- ]

images (17)

 

 

 

 

 

 

 

 

 

 

சில வாரங்களுக்கு முன் நான் காலையில் பணிக்குச் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தேன். சாலை ஓர மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கையை நீட்டி என்னை அழைத்தாள். ‘என்னம்மா வேண்டும்’ என்று கேட்டு விட்டு நின்றேன். மூதாட்டி தன் கையிலிருந்த வாட்டர் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் உலர்ந்து போன வாயினால் ‘தண்ணியை பிரிச்சு குடிக்க கொடு’ என்று கூறினாள். ‘கடிச்சி பாக்கெட்ட பிரிக்கவா?’ என்றதும், சரி எனத் தலையாட்டினாள். அவளுக்கு தண்ணீர் பாக்கெட்டைப் பிரித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். தண்ணீர் கையிலிருந்தும் நகமோ பல்லோ இல்லாமல் குடிக்க முடியாத நிலையில் மூதாட்டியின் நிலையை பிறகு எண்ணி வருந்தினேன்.

தண்ணீரை நாம் இந்த அளவுக்கு அடைத்துவைத்து விற்பனைப் பொருளாக்கி இருக்கிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும், நகரங்களில் பொதுவான குடிநீர் அல்லது சுத்தமான நீர் எங்குமே இல்லை. அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்சி மேல்நிலைத் தொட்டிகளிலும், லாரியின் தொட்டிகளிலும், மற்ற வாட்டர் கேன்களிலும் அடைத்து வைத்து ஆளுமை செலுத்துகிறோம். காசுள்ள மனிதர்கள் குடி நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பறவைகளும் விலங்குகளும் சிறு உயிரினங்களும் தண்ணீருக்கு எங்கு செல்லும்?

சரி. நீர் எங்குமே இல்லையா என்று கேட்கலாம். வெளியே நாம் பார்க்கும் நீர் அனைத்துமே நாம் வீடுகளில், அலுவகங்களில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தி கழிவாக வெளியிடப்பட்ட நீர் அல்லது இக்கழிவுகளால் மாசுபட்ட நீர்தான். விவசாய நிலங்களைக் கடந்து செல்லும் பாசன நீரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மாசடைந்து தான் உள்ளது.

இயற்கை ஒரு இடத்தில் கட்டிப் போடப்பட்டு அங்கு மட்டும் செயல்படுவதில்லை. இதை நாம் புரிந்துகொள்ள நீர் ஒரு சிறந்த உதாரணம். மாசடைந்த நீர் எல்லாப் பகுதுகளிலும் பாய்கிறது. நிலத்தின் உள்ளே இறங்குகிறது, நிலத்தடி நீருடன் கலக்கிறது. நிலத்தடி நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல மைல்கள் தாண்டி உள்ள கிணற்றின் ஊற்றுகளிலோ, குளத்தின் அல்லது நீர்நிலைகளின் ஊற்றுகளாகவோ வந்து கலக்கிறது.

இயற்கையில், பறவைகளும் நீரைப் போலவே கட்டிப்போடப்படாத ஒன்று. பறவைகள் ஆண்டுக்கு இருமுறை இலையுதிர் காலத்திலும் இலைதுளிர் காலத்திலும் பல்லாயிரக்கணக்கில் பல பறவைகள் வடக்கும் தெற்குமாக சில மைல்கள் முதல் பல ஆயிரம் மைல்கள் வரை பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்புகின்றன. வலசை வந்த இடத்தில் குஞ்சு பொறித்து தன் தாய் தேசம் திரும்பும் போது இளம் பறவைக் குஞ்சுகளே தன் முதல் பயணத்தில் பறவைக் கூட்டத்தின் முன்னே வழி காட்டிப் பறக்கின்றன. வியப்பு தான் மிஞ்சுகிறது. பல ஆபத்துகள் அடங்கிய ‘வலசை’ என்று வழங்கப்படும் இடம்பெயர்தலின் காரணங்களும் திருப்தியான விளக்கங்களும் இன்னும் விளக்கப்படாத வியப்புக்குரிய ஒன்று.

சென்னையில் நாம் பார்க்கும் பறவைகளில் வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகளும் அடங்கும். உலகமெங்கிலும் பறவைகளுக்கு நீர் அளிக்க பல உயிர்மநேயம் உள்ளவர்கள் தன் வீட்டு முற்றங்களிலும், வீட்டின் முன்னும் பின்னும், கூரை மீதும் கிண்ணங்கள் வைத்து நீர் ஊற்றி வைக்கிறார்கள். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை காலத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் நீர் உறைந்து பறவைகளுக்கு நீர் இல்லாமல் போவதால் வெதுவெதுப்பான நீர் கிண்ணங்களில் நிரப்பி வைக்கப்படுகிறது.

பூமியின் பெரும்பகுதி நீர்தான் என்றாலும் குடிப்பதற்கு ஏற்ற நீர் மிகவும் குறைந்த அளவே உள்ளது. நகரமயமாக்கலில் பல நீர்நிலைகளை இழந்துவிட்டோம். இந்த நீர்நிலைகளை நம்பி வாழ்ந்த பல பறவைகளைப் பற்றியும், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் பறவைகளைப் பற்றியும் சிறிது கூட நாம் சிந்திக்கவில்லை. பறவைகள் மரத்தில் கூடு கட்டும் என்று பொதுவாக அறிந்திருக்கிறோம். நீர் நிலைகளுக்கருகே வாழும் மீன்கொத்தி மண்மேடுகளில் படுக்கை வாட்டமாக சுரங்கம் போல் அமைத்து முடிவில் அகன்று இருக்கும் பகுதியில் முட்டையிடும் வழக்கமுள்ளது. வலசைப் பறவைகளான பூநாரைகள் அல்லது செங்கால் நாரைகள் (flamingo) ஒரு அடி உயரத்திற்கு களிமண்ணைக் கொண்டு கூம்பாக கூடமைக்கும். சூரிய வெப்பத்தில் காய்ந்து அடுப்புபோலிருக்கும் அதன் உச்சியில் குழி போல் அமைத்து முட்டையிட்டு கால்களை மடக்கி அமர்ந்து அடைகாக்கும். இன்னும் பல பறவைகள் தண்ணீரில் மிதக்கும் கூடுகளை அமைக்கும். நாம் பல காரணங்களுக்காக நீர் நிலைகளை அழிக்கும்போதும், நீர்நிலைகளின் தன்மையைக் கெடுக்கும்போதும் இப்பறவையினங்களை அழிவுக்குத் தள்ளுகிறோம்.

நீரின்றி அமையாது உலகு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அனைத்து உயிர்களுக்கும் நீர் ஒரு அத்தியாவசியத் தேவை. பறவைகளின் உடல் வெப்ப நிலை பாலூட்டிகளின் உடல் வெப்ப நிலையை விட அதிகமிருக்கும். பாலூட்டிகளைப் போல உடலில் வியர்வைச் சுரப்பிகள் பறவைகளுக்கு இல்லை. பறவைகளுக்கு பாலூட்டிகளைவிட குறைவான நீரே தேவைப்படும். இருப்பினும் நீரே இல்லாமல் வாழ முடியாது. பறவைகளின் உடலில் நீர் இழப்பு தோலின் மேல்புறத்திலும், சுவாசிப்பதால் நுரையீரல் ஈரப்பதத்தையும் இழக்கும், உடல் கழிவு வெளியேற்றத்திலும் நீர் இழப்பு நடக்கும். வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால் பறவைகள் நீர் ஆவியாதலின் மூலமே உடல் வெப்பத்தை குறைத்துக்கொள்ளும். நீர் இழப்பு கோடை காலத்தில் இன்னும் அதிகமாகும். அளவில் பெரிய பறவைகளை விட அளவில் சிறிய பறவைகளே அதிக நீர் இழப்புக்கு ஆட்படுகின்றன (surface area to volume ratio). நீர் இழப்பால் (dehydration), பறவைகள் சோர்வடையும், மயங்கி விழும், இறக்கக்ககூட நேரலாம். நீர் இழப்பை ஈடு செய்ய பறவைகள் நீர் குடிக்கும், நீரில் குளித்து சிறகுகளை நனைத்துக்கொள்ளும்.

நீரில் குளிப்பது தன் சிறகுகளில் உள்ள தூசுகள், அழுக்குகள் நீக்கவும் சீராக பராமரிக்க உதவும். தன் அலகுகளால் சிறகுகளைக் கோதி விட்டுக்கொள்ளும் போது எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் திரவம் சீராக பரவச் செய்து சிறகுகளின் நீரில் நனையாத தன்மையைக் காக்கும்.

பறவைகள் இரண்டு முறைகளில் நீர் குடிக்கும். கோழிகள் தண்ணீர் குடிக்கும்போது அலகைத் தண்ணீருக்குள் மூழ்கியபின் தலையை மேலே தூக்கிக் குடிக்கும். புறா வம்சத்தைச் சேர்ந்த பறவைகள் மாடுகள், குதிரைகள் போல நீர் குடிப்பது போல அலகைத் தண்ணீருக்குள் வைத்து உறிஞ்சிக் குடிக்கும். மணற்கோழிகள் (sand grous) காலையும் மாலையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தாகம் தீர்த்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட குட்டைக்கு நாலா புறங்களிளிருதும் பறந்து வந்து நீர் பருகும். மணற்கோழிகளில் ஆண் பறவைகள் நீர் அருந்திவிட்டு தன் வயிற்றுச் சிறகுகளை நீரில் நனைத்துச் செல்லும். நீர்நிலைக்கு பறந்து வர முடியாமல் கூட்டில் இருக்கும் சிறு குஞ்சுகள் ஆண் பறவையின் வயிற்றை நக்கிக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். கூழைக்கடா (pelican) பறவைகள் தன் பெரிய அலகை திறந்து வைத்துக்கொண்டு மழை நீரைக் குடிக்கும். மிகச் சிறிய சிட்டுகள், இலைகளில் நிற்கும் பனிதுளிகளைக் குடிக்கும். பொதுவாக அனைத்து பறவைகளும் நல்ல நீரையே குடிக்கும். கடல்காகங்கள் (sea gulls) மட்டும் உவர்ப்பான கடல் நீரைக் குடிக்கும். தேன்சிட்டுக்கள் (humming bird) உணவே பூக்களில் உள்ள இனிப்பான திரவம்தான். நீர் கிண்ணங்கள் வைப்பது போல தேன் சிட்டுகளுக்கு இனிப்பு நீர் கிண்ணங்களில் வைப்பது உண்டு.

பழங்கள், பூச்சிகள் மற்றும் ஊண் உண்ணும் பறவைகளுக்கு தேவையான பெரும்பகுதி நீர் அதன் உணவிலிருந்தே கிடைக்கிறது. கொட்டைகள், தானியங்கள் உண்ணும் பறவைகளுக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. பறவைகளின் சிறுநீரகத்தின் முக்கிய வேலையே நைட்ரோஜன் கழிவுகளை பிரித்து தாது உப்புக்களை சமநிலையில் வைத்து (சிறு)நீரை சிறிய அளவில் வெளியேற்றுவதே ஆகும். சிறுநீரின் யூரிக் அமிலத்தை வெளியேற்ற பறவைகள் அதிக சக்தியை செலவிட வேண்டியுள்ளது. கோடை காலங்களில் கட்டிடங்களில் மேலுள்ள நீர்த்தொட்டிகளில் பறவைகள் விழுந்து இறந்துவிடுவதை கவனித்திருக்கலாம். அவையெல்லாம் தண்ணீருக்காக தேடி அலைந்து தொட்டியில் உள்ளே நுழைந்து இருக்கும். வெளியே வர முடியாமல் இறந்திருக்கும்.

பறவைகளுக்கு குறிப்பாக காகங்களுக்கு அன்றாடம் உணவு வைக்கும் மதப்பழக்கம் நம்நாட்டில் உண்டு. ஆனால் தண்ணீர் வைக்கும் பழக்கமில்லை. நகரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே பறவைகளுக்கு ஒரு கிண்ணத்தில் நீர் வைக்கலாம். அதை இரண்டு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்து புது நீர் ஊற்றி வைத்தால் எந்த வித நோய்க்கிருமிகள், லார்வா மற்றும் கொசு வளர்ச்சியைத் தடுக்கும். நகர வாசிகள் கோடைக் காலத்திலாவது கிண்ணங்களில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தைத் தணிக்கலாமே.

Comments are closed.