தாழம்பூ மணம் ( சிறுகதை ) / ஆ.ஆனந்தன்

[ A+ ] /[ A- ]

வானம் கறுத்து வந்து கொண்டிருந்தது.

மழை பெய்யக் கூடிய அறிகுறிகள் தோன்றினாலும், மழைக்கான குளிர் காற்று ஒன்றும் அடிக்கவில்லை. தென் மேற்கு பருவ மழை முடிந்து வட கிழக்குப் பருவ மழை தொடங்கப் போகும் பருவம். மேற்கேயிருந்து வீசும் காற்று கிழக்காக இன்னேரம் மாறி வீசத் தொடங்கியிருக்கவேண்டும். எல்லாம் வேண்டும்தான் எதுவும் நடக்கிறபடி நடப்பதில்லை, காலம் மாறிக் கொண்டிருக்கிறது, அதுபோலவே பருவங்களும் மாறுகின்றன அல்லது தப்பி விடுகின்றன.

கைலாசம் பிள்ளை தலையில் கட்டியிருந்த குற்றாலத் துண்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டு நடையை விட்டு இறங்கி வாய்க்காலை நோக்கி நடக்கத் தொடங்கினார். வாசலில் நின்று “ஏலா நான் வாய்க்காக் கரைக்குப் போயிட்டு அப்படியே தோப்புப் பக்கம் போயிட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே பதிலை எதிர்பாராமல் நடக்கத் தொடங்கினார். தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தார், மழை வருமோ என்கிற சந்தேகம் இருந்தாலும் வராது என்கிற முடிவெடுத்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

வீட்டிலிருந்து இறங்கி தெருவைக் கடந்து சாமிப் பிள்ளை வயலைக் கடந்து வரப்பு வெளியில் நடந்தால் வாய்க்கால் வந்துவிடும். வாய்க்கால் கரையிலிருக்கும் மாமரம் பிள்ளையின் தாத்தா காலத்திலிருந்து காய்த்துக் கொண்டிருக்கிறது. பச்சரிசிக்காய் என்று சொல்வார்கள். காய் பழுக்காது ஆனால் அப்படியே காயாக சாப்பிட தோதான ஒரு வகை. கடித்து சாப்பிட்டால் கரிச் கரிச்ன்னு சத்தம் கேட்கும் புளிக்காது, சாப்பிட சாப்பிட நன்றாக இருக்கும். மாமரத்துக்கடியில் வந்து நின்றிருந்த கைலாசம் பிள்ளை நினைவுகள் பச்சரிசிக்காயை நினைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தார், ஒரு பூ கூட இன்னும் வைக்கவில்லை, போன வருஷம் சுத்தமாகக் காய்க்கவில்லை, இந்த வருஷம் எப்படியோன்னு நினைத்துக் கொண்டார். வாய்க்காலைத் தாண்டிய வயல் வெளியெங்கும் நெல் தழைத்து தலை சாயத் தொடங்கியிருந்தது. இன்னும் பத்து பதினைந்து நாட்களில் அறுப்புக்கு வந்துவிடும். தண்ணீரை வடிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் இடுப்பு மட்டம் வரை ஓடிக் கொண்டிருந்தது. வாடிப்பட்டி வயல்களுக்காக அணைக்கட்டிலிருந்து திறந்து விட்டிருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரம் விதைத்து ஒரே நேரம் அறுத்தது போய் இப்படியாகிவிட்டது. பருவம் தப்பி பருவம் தப்பித்தானே விவசாயமே நடந்து கொண்டிருக்கிறது.

கைலாசம் பிள்ளை இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வாய்க்கால் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் யாரோ குளித்துக் கொண்டிருக்கவேண்டும், அல்லது துவைத்துக் கொண்டிருக்க வேண்டும் தண்ணீரின் மேல் பரப்பில் சோப்பு நுரை வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. உதிர்ந்த இலைகள் தண்ணீரின் வேகத்தில் செல்வதைப் பார்த்தால் வாய்க்க்கால் தண்ணீர் கொஞ்சம் வேகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டார்.

பிள்ளையின் கவனத்தைக் கலைத்துக் கொண்டு வாய்க்கால் தண்ணீரில் தலையில் புல்லுக் கட்டுடன் சேலையை இடுப்புவரை உசத்திப் பிடித்துக் கொண்டு சுப்பம்மா வந்து கொண்டிருந்தாள். கைலாசம் பிள்ளை கொஞ்சம் தடுமாறி யாரும் வருகிறார்களா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார்.

கரையேறியவுடன் “என்ன சுப்பம்மா செளக்கியமா?” என்றார்.

“அதுக்கென்ன குறை, நாற்பத்திரெண்டு வயசுல நாலு பெத்துப் போட்டாச்சு, இப்ப சிவனேன்னு கிடக்கிறேன்”

“உங்களுக்கு ஐம்பது இருக்குமா?”

“ஆச்சு சுப்பு நாற்பத்தியொன்பது ஆச்சு”

“என்னய எல்லாம் நினைப்பீகளா?”

“நினைக்காம இருக்க முடியுமா சுப்பம்மா”

“கேட்க சந்தோஷமாகத்தானிருக்கு, இம்…”

”சுப்பு அந்த புல்லுக்கட்டைத்தான் இறக்கி வையேன், சித்த இருந்து பேசிட்டு போவேள்ள”

“அப்புறம் நீங்கதான் தூக்கி விடணும், யாரும் வந்திட்டா பண்ணையார் முகம் கொடுக்காம போயிருவீகளே, நான் என்ன செய்ய”

”இல்ல இல்ல போக மாட்டேன் இறக்கு”

“சரி ஒரு கை கொடுங்க”

கைலாசம் பிள்ளை கை கொடுத்து புல்லுக் கட்டை இறக்க உதவினார். சுப்பம்மா சிரித்துக் கொண்டே இந்தக் கையை அன்னைக்கே கொடுத்திருந்தா நான் நல்லா இருந்திருப்பேன்ல என்றாள். பிள்ளை தலையைத் தொங்க போட்டுக் கொண்டு நின்றார்.

முந்தானையை தனியாகவும், இடுப்புச் சேலையை தனியாகவும் இறுக்கிப் பிழிந்து மீண்டும் சுப்பம்மா போட்டுக் கொள்ள கைலாசம் பார்த்துக் கொண்டிருந்தார். சுப்பம்மா கொஞ்சம் வெட்கமாக சிரித்துக் கொண்டாள்.

வானத்திலிருந்து ஒன்றிரண்டு பெரும் தூறல்கள் விழுந்தது.

சரி மழை வர்றதுக்கு முன்னால வீடு போய் சேரணும், ஒரு கை கொடுங்கன்னு சொல்லி புல்லுக்கட்டை தலையில் வைப்பதற்கு தோதாக முந்தானையை சுற்றி தலையில் சும்மாடு வைத்துவிட்டு தயாரானாள். கைலாசம் பிள்ளை புல்லுக்கட்டை இரு கைகளிலும் தூக்கி அவள் தலையில் வைத்துவிட்டார், அது ஒன்றும் அவ்வளவு சுமையாக இல்லை என நினைத்துக் கொண்டார். இரண்டு கைகளாலும் புல்லுக் கட்டை தலையில் தாங்கிக் கொண்ட சுப்பம்மாவின் சிரிப்பில் ஒரு வெட்கம் வந்து மறைந்தது. கொஞ்சம் சிரமப்பட்டுதான் சேலை தலைப்பால் மூட வேண்டியிருந்தது, இப்பொழுது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டு நான் வர்றேன்னு சொல்லிக் கொண்டே, கொஞ்சம் தைரியம் வந்த மாதிரி இருக்கே பண்ணைக்கு என மீண்டும் சிரிப்போடு சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். கைலாசம் பிள்ளைக்கு அவள் அப்படி சிரிக்கையில் வாய்க்கால் தண்ணீரில் மார்கழி மாசம் முங்கிக் குளிப்பது போல் இருந்தது. சுப்பம்மா நடக்க நடக்க புல்லுக்கட்டிலிருந்தும் அவள் தலையிலிருந்தும் சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்ட வழியெங்கும் கம்பியில்லா புள்ளிக் கோலம் உருவாகி மண்ணோடு மறைந்தது. கைலாசம் பிள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கி எதிர் கரை நோக்கி செல்லத் தொடங்கினார்.

வாய்க்காலில் இருந்து ஏறி தோப்பை நோக்கி செல்லத் தெடங்கினார். தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களுமாக தோப்பு நிறைந்திருந்தது. எல்லாம் கைலாசம் பிள்ளையின் அப்பா வைத்து பாதுகாத்து கொடுத்துவிட்டுப் போன சொத்து. மாமரங்களில் கவாத்துப் பார்க்க வேண்டும், தென்னையில் களையெடுக்கவேண்டும் என நினைத்துக் கொண்டு பண்ணைக்காரனை தேடினார், எங்கேயும் காணோம். இந்த மாலை நேரத்தில் இருக்க வேண்டிய இடத்தில் அவன் இருப்பான். அப்பத்தான் ராவெல்லாம் முழிக்க முடியும் அய்யா என்பான், இது இவருக்கும் தெரியும். மரங்களில் தேங்காயும் இளநீரும் சரியாக இருக்கிறதான்னு பார்த்துக் கொண்டே, தோப்பின் கடைசி எல்லையான வடக்கு எல்லைக்கு வந்து சேர்ந்தார். அங்கேதான் பல வருஷங்களாக இருக்கிறது ஒரு தாழம்பூ புதர். தானாக முளைத்து அடர்ந்து நின்று மணம் வீசும் புதர். நல்லது, விரியன்ன்னு பல இருக்கும்ன்னு ஊரே நம்பினாலும், பெண்பிள்ளைகள் பூப்பெய்தினால், நல்ல நாள், துக்க நாள் என்று எல்லோருக்கும் தாழம்பூக்களை வாரி வழங்குகிற புதர். கைலாசம் பிள்ளையின் தோப்புக்குள் இருப்பதால், அதற்கு பிள்ளைவாள் தாழம்பூப் புதர் என்று பெயர் வைத்துவிட்டார்கள். பெயர்தான் பிள்ளைவாள் தாழம்பூ புதர் ஆனால் ஊரில் யாரும் இவரிடம் அனுமதியெல்லாம் கேட்பதில்லை, இவரும் அதைப் பற்றி எதுவும் நினைப்பதில்லை.

தாழம்பூ மணம் இழுக்க பக்கமாய் போய் நின்று கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார், அடியில் தரை தொடும் தூரத்தில் படர்ந்து கிடந்த பூவை மெதுவாக இழுத்துப் பறித்தார். தாள்களை நீக்கிவிட்டு பூவை முகர்ந்து பார்த்தார். மனம் பூ மணத்தில் மயங்க கையில் பூவுடன் வீடு நோக்கி திரும்பத் தொடங்கினார்,

வீட்டுக்குள் நுழைந்தவுடன் “ஏலா இந்தப் பூவை உள்ளே கொண்டு வை, அப்படியே கால் கழுவ தண்ணி எடுத்தான்னு” சத்தமாக கூப்பிட்டார். கையில் செம்புத் தண்ணீருடன் வந்த மீனாட்சி ”இந்தப் பூவை எதுக்கு வீட்டுக்குள்ள கொண்டுவரீக, இது வாசத்துக்கு நல்லதெல்லாம் வரும்பாங்க, அதை அப்படியே தூக்கிப் போடுங்க, போடுறது போடுறீங்க கொஞ்சம் தள்ளிப் போடுங்க”ன்னு சொல்லிக் கொண்டே செம்புத் தண்ணீரை ஒரு வெறுப்போடு சத்தம் கேட்கிற மாதிரி திண்ணையில் வைத்து விட்டு, மோவாக் கட்டையை தோள் பட்டையில் இடித்து வளிப்புக் காட்டிவிட்டு உள்ளே போனாள். போகும் போது “இருந்து இருந்து பொண்டாட்டிக்கு தாழம்பூ வாங்கிக் கொடுக்கிற புருஷன்” நீங்களாத்தானிருக்கும்ன்னு முனகிக் கொண்டே போனாள்.

கைலாசம் பிள்ளை கொஞ்ச நேரம் பூவை கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார், பூவை மூக்கருகில் வைத்து நன்றாக மூச்சை இழுத்து தாழம்பூ மணத்தை நுகர்ந்தார். மனம் இலேசாக சின்ன சிரிப்புடன் பூவை தன் பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தார். தெருவில் விழுந்த பூவை ஒரு நாய் வேகமாக வந்து மோந்து பார்த்துவிட்டு போனது, பிள்ளைவாளுக்கு மீனாட்சியின் ஞாபகம் வந்து போனது.

இன்று சனிக்கிழமை வயல், தோட்டத்திலெல்லாம் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். கைலாசம் பிள்ளை பணத்தில் வேட்டியில் சுருட்டி இறுக்கிக் கொண்டு, கையில் குடையுடன் தோப்பை நோக்கிக் கிளம்பினார், வழக்கம் போல் “ஏலா நான் போய் சம்பளம் போட்டுட்டு வந்துருதேன், கொஞ்சம் இருட்டிப் போயிரும்”ன்னு சொல்லிக் கொண்டே வழக்கம்போல் பதிலை எதிர்பாராமல் கிளம்பினார்.

வாய்க்க்காலைத் தாண்டி தோப்பு நோக்கிப் போகும் போதே அங்கே என்ன வேலையெல்லாம் நடக்குதுன்னு பார்த்துக் கொண்டே போனார். தென்னையில் களையெடுத்துவிட்டு காய்களை பறித்துப் போட்டிருந்தார்கள், திங்கக்கிழமைதான் வியாபாரி வருவான், இரண்டு மூன்று பெண்கள் கையில் களைக் கொத்துடன் தென்னை மாமரங்களுக்கு அடியில் களை எடுத்துவிட்டு பண்ணை பிடித்து வைத்திருந்தார்கள். தோட்டத்தை நெருங்கும் பொழுதுதான் கைலாசம் பிள்ளை கண்ணில் சுப்பம்மாவும் வேலை செய்வது தெரிந்தது.

தோப்புக்குள் நுழையும்பொழுதே ”நல்லா கொஞ்சம் ஆழமா பண்ணையை புடிங்கடே மழை பெஞ்சா தண்ணி நிக்கனுமில்ல”ன்னு சொல்லிக் கொண்டே போனார். சுப்பம்மா தலையை தூக்காமலேயே இலேசாக சிரித்துக் கொண்டாள்.

பண்ணைக்காரன் சொல்ல சொல்ல வாரச் சம்பளத்தை எண்ணிக் கொடுத்துக் கொண்டே.”ஏலா சுப்பம்மா அந்தப் பக்கம் போய் கொஞ்சம் தாழம்பூ இருந்தா ஒரு ஈத்து புடிங்கிட்டு வாயேன்” சொல்ல, “ஏன் யாரும் சமைஞ்சிருக்காகலான்னு; சிரித்துக் கொண்டே கேட்டாள்.

”இனிமே நீதான் சமையணும், சொன்னாப் போவியா, கேள்வி கேட்டுட்டு இருக்கா, போலா போய் நல்லதா பறிச்சிட்டு வா, பாத்துப் பறி பூச்சி பொட்டு இருக்கப் போவுது பாத்து நிதானமா பறிச்சிட்டு வா”

எல்லோருக்கும் சம்பளம் போட்டவுடன் அவரவர் கிளம்பிப் போக பண்ணைக்காரன் தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நின்னான்,”என்னடே உனக்கு கடைக்குப் போக நேரமாச்சா இந்தா கிளம்பு, திங்கக்கிழமை வரைக்கும் தேங்காயெல்லாம் பத்திரமா பாத்துக்க, அளவா குடிச்சுத் தொலை புள்ள குட்டிகளை நினைச்சுக்க, இம் இந்தா கிளம்புன்னு பணத்தை நீட்டினார்”

பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டுக் கொண்டே துண்டை மரத்தில் தொங்கவிட்டுவிட்டு தொங்கிக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக தோப்பை விட்டு வெளியேறினான்.

தாழம்பூ மணம் மூக்கைத் துளைக்க நார் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே தலையைத் திருப்பிப் பார்த்தார் கைலாசம் பிள்ளை சுப்பம்மா கையில் தாழம்பூவுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். பிள்ளைவாள் புதிதாகப் பார்ப்பது போல் சுப்பம்மாவை வைத்த கண்ணை திருப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்தாங்க”ன்னு தாழம்பூவை நீட்டினாள் சுப்பம்மா.

“என்ன சுப்பம்மா எனக்குத்தான தாழம்பூ கேட்டேன், நீயும் தலையில வைச்சிருக்க”

“ஆமா உங்களை மாதிரியே எனக்கும் தாழம்பூ பிடிக்கும்ன்னு தெரியாதா”

“இருபது வருஷம் இருக்குமா”

“இருக்கும், சொல்லும் பொழுதே வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டே சுப்பம்மா சொல்ல” கைலாசம் பிள்ளை கட்டிலிருந்து எழுந்தார்.

மனசும் உடலும் குளிர மழை பெய்யத் தொடங்கியது.

முகம் தெரியாத அந்த அந்திக் கருக்கலில் ” தாழம்பூ மணந்தது, மீண்டும் மீண்டும் மணந்தது”.

•••

ஆ,ஆனந்தன், 20 & 21, மீனாட்சி நகர், குற்றாலம் சாலை, ஆக்சிஸ் பாங்க் மாடி,

இலஞ்சி – 627805. தொடர்புக்கு : 94431 82582. மின்னஞ்சல்: anandan_50@yahoo.co.in.

Comments are closed.