திரும்புதல் ( சிறுகதை ) – ரமேஷ் கண்ணன்

[ A+ ] /[ A- ]


ரமேஷ் கண்ணன்

கணேஷும் நானும் அந்த வீட்டின் முன் நிற்கையில் பிற்பகலாகி விட்டிருந்தது.காலை 9 மணிக்கு பேசுவதற்காக பாய் வீட்டிற்கு நாங்கள் வந்து சேர்ந்ததிலிருந்து இப்போது வரை பேசிக்கொண்டே இருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.ராணி அத்தையும் கோபால் மாமாவும் சண்டை போட்டபடியே இருந்தனர்.உண்மையில் சொல்லப் போனால் கோபால் மாமா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.கோபால் மாமா ரசனையான மனுஷன். அரசு உத்தியோகம்.பேண்ட் சர்ட் மட்டுமே உடுத்துவார்.கையில் எப்போதும் ஒரு லெதர் பேக் இருக்கும்.அதைப் பிடிப்பதிலும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருந்தது.எங்கள் சொந்த பந்தத்தில் சினிமா,பாட்டு எனப் பேசிக்கொள்ளும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். ஏதாவது விசேஷ வீடுகளில் பார்த்தவுடன் நலம் விசாரிப்பார்.

அவருக்கும் ராணி அத்தைக்கும் தான் சண்டை. அத்தையும் உத்தியோகஸ்தி நல்ல ஜோடி பொருத்தம் தான்.வீட்டுக்காரரின் பெயரை சத்தமாகவே சொல்லும் அத்தை. சமயத்தில் அது இங்கிட்டு தான் போயிருக்கும் என்று கூடச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அப்பா அது என் காதில் விழுந்து விடக்கூடாதென வேறு பேச்சைத் தொடுவார்.எனக்கு அது நன்கு புரிந்து கொண்டதால் நானும் கீழேயோ மேலேயோ பார்த்து சமாளிப்பேன்.

இப்போது எல்லாம் கைமீறி போய் விட்டது. ஆசையாய் வளர்த்த பெண் பிள்ளை யாரையோ விரும்பி உடன்சென்று விட்டாள்.இத்தனைக்கும் பக்கத்திலேயே அக்கா அக்கா என்று குடும்பமாய் பழகிய குடும்பம் தான்.சரிதானே என நினைத்துக் கொண்டேன்.

உறவுக்காரர்கள் கூடி என்ன செய்யலாம் எனப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.நான் கணேஷ் ,குமார் ,ராஜா ,வாசன் எல்லாரும் இளவயதுப்பையன்கள்.நெருக்கடியான சூழல்.அவமானம் பொறுக்கமாட்டாமல் வீட்டைப்பூட்டி விட்டு எங்களது குடும்ப நண்பர் அப்துல் பாய் வீட்டில் இருந்தாள் அத்தை.மாமி காலையிலிருந்து வருபவர்களுக்கும் போகிறவர்களுக்குமாய் டீ போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தப்பை வைத்த வீடு அது.எப்போதுமொரு குளிர்ச்சி நிறைந்திருக்கும்.ரோட்டை ஒட்டியபடி இருந்ததால் வேடிக்கை பாக்க நல்ல வசதி.வராந்தாவில் தான் அமர்ந்திருந்தோம்.பக்கச்சுவர் உயரம் அதிகம்.அதனால் நாங்கள் அமர்ந்திருப்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.சைக்கிள்கள் அதிகம் நிற்பதில் அக்கம் பக்கம் கவனத்திற்குச் சென்று விஷயத்தையும் பேசத்தொடங்கி விட்டார்கள்.பிள்ளையைப் பேசி சமாதானம் செய்து கூப்பிடுவது என முடிவானது.

நாங்கள் இன்று வருவதற்கு முன்பே நேற்று ஒரு முயற்சி நடந்து தோற்றுவிட்டிருந்தார்கள் என்பது எனக்கும் குமாருக்கும் அரை மணி கழித்தே இருந்தது.ஆகப் பிள்ளை கிளம்பி இன்றோடு மூணாவது நாளாகி விட்டது.

குமாருக்கும் எனக்கும் விஷயம் தாமதமாய் தெரிந்ததில் ஒன்றும் வருத்தமில்லை.

அத்தையும் மாமாவும் அரசு உத்தியோகம் என்பதால் நல்ல வருமானம். கோபால் மாமாவுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அவர்கள் வீடு பெரியதாகக்கட்டி மாடி போர்ஷனை வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.பெண்ணுக்கு நூறு பவுன் நகையும் பாத்து பாத்து வாங்கி வைத்திருந்தாள் அத்தை.

குமாருக்கும் ,வாசனுக்கும் அவர்கள் வீட்டு மருமகனாகி விட வேண்டுமெனும் ஆசை மனதிற்குள் இருந்தது.

வாசன் நல்ல கலர்.ராணி அத்தையும் பெண்ணை அவனுக்குத்தான் கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தாள்.குமாருக்கும் இது தெரியும்.இப்போது குமாருக்கு இதில் சின்ன சந்தோஷமிருந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்பத்தில் இருந்தே இதுமாதிரி துளி நெனைப்பு வருவதைப் போல எங்கள் குடும்ப வாழ்க்கையில்லை.

கோபால் மாமா ஓங்கி சத்தம் போட்டார்.கண்டிப்பாக முக்கு பலசரக்கு கடை வரை கேட்டிருக்கும்.எங்களைப் பிரிச்சு விடுங்க முதல்ல பிள்ளையப் பத்தி அப்புறம் பேசுங்க என்றார்.

பாய் தான் முதலில் கோபால் மாமாவை சமாதானப்படுத்தினார்.விடுங்க மாப்ள சின்ன பிள்ளையாட்டமென. இதற்குள் அத்தை கெட்ட வார்த்தைகளைப் பேசத் தொடங்கினாள்.நிலமை கை மீறிக்கொண்டிருந்தது.பெரியவர்களை அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு நான் பேசத்துவங்கினேன்.உங்களுக்கு விடுதலை வாங்கி தர்றோம் மாமா.முதல்ல பிள்ளைய பார்க்கனுமா வேணாமா என்றேன்.அத்தை ஓவென அழத்தொடங்கினாள்.அவளை பின்கட்டுக்கு மாமி அழைத்துச் சென்று முகம்கழுவி விட்டு ஆசுவாசப்படுத்தினாள்.பாயின் பேத்திகள் குறுக்கு மறுக்காய் ஓடினார்கள்.நொக்கோ நொக்கோ எனச் செல்ல அதட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் பாய்.அவர் கண்கள் விரிந்தபடி நாக்கைத் துருத்தி பயமுறுத்தினார்.இப்படித்தானே எல்லா வீடுகளிலும் செய்கிறார்கள்.அதுவொரு அவுட்டேட்டட் வெர்ஷனாகி விட்டது.

பிள்ளைகளை கைக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்ள பல்வேறு யுக்திகளைப் பெற்றோர்கள் செய்கிறார்கள்.அந்த கொடுப்பினையும், திறமையுமில்லாதவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு யார் வீட்டிலாவது அழுது புலம்ப வேண்டியது தான்.அத்தை என்னமோ தெரியவில்லை கண்ணைத் துடைத்தபடி தன் பெண்ணை வைதபடி “கண்ணுகளா !டீ சாப்பிட்டீகளா ,காலையிலிருந்து வயசு பயக அவ செஞ்சதுக்கு இதுக வேலைய விட்டுட்டு உக்காந்திருக்குக ” என்றாள்.

எங்களுக்கு என்னவோ போலாகி விட்டது. நான் கேட்டேன்.நாங்க வேணாப் போய் பேசி கூப்பிடுறோம் அத்தைனேன்.

வாசன் சொன்னான் அவனுங்க ஒரு குரூப்ல பேசி வச்சிருக்காய்ங்கன்னான்.

எனக்கு ஒன்னும் புரியல அதான் அந்த ஏரியா சிவான்னு ஒரு பய இருக்கான் ல.அவன் தான் பாதுகாப்பாம்.அவன்ட்ட பேசனுமாம்.போலீஸிடம் போவதில்லையென ஏற்கனவே பேசியாகி விட்டது. இதை அவர்களும் தெரிந்து வைத்திருந்தனர்.

சிவா காவல் துறையில் உயர்பொறுப்பில் பணிபுரிபவரின் மகன்.கடந்த சில வருடங்களாக அந்தப்பகுதியில் நடக்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்துகளில் அவனுடைய பெயர் தான் அடிபடும்.ஒவ்வொரு பகுதியிலும் சின்ன பெட்டிக்கடைக்கு அருகே அவனுடைய கார் வந்து நிற்கையில் சிறு பதட்டம் தொற்றிக் கொள்ளும்.

நாங்கள் எனது நண்பனின் வீட்டின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் சைக்கிளில் பாரா வரும் போலீசார் எங்களை இரண்டு மூன்று முறை எச்சரித்து உள்ளே போகச் சொன்னதுண்டு.

ஆனால் சிவா வை ஒருமுறை கூட அவர்கள் நேருக்கு நேராக பார்த்ததோ எச்சரித்ததோ இல்லை.

சிவாவை, சிவா என நான் சொல்லுவதே ஆச்சரியமாய் படும்.ஆனால் அதற்கொரு காரணமுண்டு.நானும் ,அவனும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.சிவா நல்ல உயரம் கை கால்களும் திடகாத்திரமாக உள்ளவன்.இதை விட யாரையும் சடாரென கைநீட்டி அடித்துவிடும் பழக்கம் அவனை எல்லோரும் வியந்து பார்க்க வைத்தது.அது புது ஸ்கூல்.பழைய ஸ்கூலில் இருந்து இளங்கோ மட்டுமே உடன்படித்தவன்.ஆனால் நான் அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை.நூற்றிநாலு மாணவர்கள் ஆறாம் வகுப்பில்.வாத்தியார் பிரம்பெடுத்து அடித்தால் யாருக்கு விழுகுமென்பதே தெரியாது.ஒவ்வொரு நாளும் பயந்தபடியே தான் பள்ளி செல்வேன்.ஐந்தாம் வகுப்பு வரை ஃபர்ஸ்ட் ரேங்க்.டீச்சர்ஸுக்கு செல்லப்பிள்ளை.அதன் பின்பு ஒருபோதும் ஆசிரியர்களுக்கு இணக்கமானவனாக இருக்க முடியவில்லை.

இளங்கோ ஆசிரியர் வராத பாடவேளையில் தனது குறியை டிரவுசரை விலக்கிக் காண்பித்தான்.என்னைப் பார்த்து பழிவாங்குவதைப் போல கொஞ்சம் மிரட்ட ஆரம்பித்தான்.நான் சிவாவை நெருங்க இதுவே போதுமானதாக இருந்தது.நாங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து சுத்துவோம்.சிவா பெரியவகுப்பு பையன்களோடு வம்பிழுப்பான்.நாங்கள் கைபாம் ஆனோம்.சிவா செட்டில் சுமாராக படிக்கக்கூடிய பையன் நான்.சிவாவுக்கு இது பிடித்துப்போனது.நான் சிவாவிடம் பாராட்டைப் பெற கணக்குகளை விரைவாக முடித்து ஆசிரியரிடம் காண்பிப்பேன்.என்னுடைய ஒவ்வொரு முயற்சி வெற்றி அடைகையில் சிவா பூரித்து பாராட்டுவான்.

நான் அவனோடு நெருக்கமாவதைத் தடுக்க சாதியைப் பற்றிய பேச்சை இழுத்து விட்டார்கள்.எனக்கு அதுவரை சாதியைப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது. இன்று வீட்டில் கேட்டு வருகிறேன் சிவா என்றேன்.அந்த சாதியாகவே இருந்து தொலைத்தால் நல்லது என்று வேண்டிக்கொண்டேன்.நான் நினைத்தது போலவே வேறு சாதி.இதை சிவாவிடம் சொல்லவில்லை.பின்பொரு நாள் பேச்சு வருகையில் நீ சத்தியமா எங்காளு இல்லை என்றான் சிவா.அவனுடைய குரலில் ஓர் விலகல் இருந்தது.நான் என்ன செய்ய முடியும்.ஒட்டுதல் குறையத் துவங்கியது.நான் நன்றாக படிக்கும் மாணவர்களோடு பேச ஆரம்பித்தேன்.அவர்களும் அவ்வளவு நெருங்கவில்லை.ஏற்கனவே ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அதற்குள்ளாகவே புழங்கியபடி இருந்தனர்.

இதற்கிடையில் ஒரு விளையாட்டு பாடவேளையில் இளங்கோவுக்கும் எனக்கும் சண்டை.நான் அவனை நான்கைந்து அடிகள் அடித்திருப்பேன்.என்னை நையப்புடைத்து பனியனையும் கிழித்து விட்டான்.அவமானமாய் போய் விட்டது. சிவா இளங்கோவை இரண்டு அடி அடித்ததாகச் சொன்னார்கள்.ஒரே ஆறுதல். சிவா தேர்வறையில் எனக்கு அடுத்து பின்னால் அமர்ந்திருப்பவன்.இது நல்ல வாய்ப்பானது.எழுதி எழுதி முடித்தவுடன் சிவா போதும் போதுமெனச் சொல்லும் வரை விடைத்தாளைக் கொடுப்பேன்.இதில் எனது மன தைரியம் அவனைக் கவர்ந்தது.சிவா என்னை மனதிற்குள் வைத்து கொண்டாடத் துவங்கி விட்டான்.

எனது சட்டை காலர்கள் மீண்டும் மிடுக்கானது.

ஆனால் எட்டாம் வகுப்பு வரை தான்.பைசல் என்பவனுக்கும், சிவாவுக்கும் பெரிய தகராறு .சைக்கிள் செயின் கத்தியோடு நடந்த சண்டையில் பைசல் பெயில் ஆனான்.சிவா அவுட் பாஸ் வாங்கி கொண்டு கொடைக்கானலில் படித்தான் என்று சொன்னார்கள்.

இப்போது அவனது வீட்டின் முன் தான் நானும் கணேஷும் நின்று கொண்டிருக்கிறோம்.லேசாகந் தூறல் போட ஆரம்பித்திருந்தது.சைக்கிளை அழுத்திக்கொண்டு ஆறு கி.மீ வந்தது போதும் போதுமென்றாகி விட்டது.

சிவா முதலில் ஏரியாவில் செய்த செய்கை மாரியப்பன் எ மாரியை.அவன் தான் சிவாவின் வண்டி பெட்டிக்கடைகளில் வந்து நின்று சென்றபின் தகராறு செய்வான்.ஒருநாள் காலை எட்டு மணியிருக்கும் மாரியை லஷ்மி ஸ்டோர் படிக்கருகில் வெட்டி போட்டிருந்தார்கள்.சிவாவைப் பற்றிய பேச்சுகள் அடங்கி ; சிவாவை பெரிய தாதாவாக்கி விட்டான் மாரி.போலீஸ் வழக்குப்பதிவு செய்து எல்லாம் ஆனது.பிறகு பத்திரிக்கைகளில் அவ்வப்போது பெயர் வெளிவர பெரிய பிரபலமானான்.

இளங்கோவும் பைசலும் கூட அவனுக்காக சில ஏரியாக்களில் வேலை செய்தார்களென நண்பர்கள் கூறினார்கள்.இவன் பக்கமும் சில உயிரிழப்புகள். அவனுக்காக உயிரையே கொடுக்க புதிது புதிதாய் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.தியேட்டர்கள் ஆட்டோ ஸ்டேண்டுகளில் பெரும் செல்வாக்கு சிவாவுக்கு.பெரிய குரூப்புகளோடு மோதுவது வாடிக்கையாகி அவன் ஏரியாக்களைத் தாண்டி நகரின் திருஉருவாய் மாறினான்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் சிவாவின் கனைப்பு சத்தம் கேட்டது.நானும் கணேஷும் வணக்கம் வைத்தோம்.கணேஷ் வேஷ்டியை இறக்கி விட்டதில் சிவாவின் பார்வையை ஈர்த்துக்கொண்டான்.நான் லேசாக சிரித்து வைத்தேன்.என்னப்பா இங்க உனக்கு என்ன வேலை இவரு யாரு என்ன விஷயம் எனக் கேட்டபடி சிகரெட்டை பற்ற வைத்தான்.நான் விஷயத்தை சொல்லத் தொடங்கினேன்.

முதலில் எடுத்த எடுப்பில் சொன்ன வார்த்தை எங்களிருவரையும் தூக்கி வாரிப்போட்டது.இந்நியாரம் எங்காளுகன்னா தொங்க விட்டிருப்போம்.சரி சரி அவனுகளுக்கு நாமதான்னு உறுதி கொடுத்துட்டோம்.நீ நம்ம பிள்ளைன்ற ஒரு வழி இருக்கு. அத வேணாச் செய்யலாமென்றான்.

பேட்டை பயக நம்ம தோஸ்து தான் அவிங்கள விட்டு நம்ம பயலுகள ரெண்டு தட்டு தட்டி பிள்ளையத் தூக்கிருவோம்.ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றான்.

சரி சிவா கேட்டுட்டு வந்துடுறேன்னு திரும்புனோம்.அன்பு விலாஸ் டீக்கடைல டீயக்குடிச்சிட்டு சைக்கிள உருட்டிக்கிட்டே பாய் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னோம்.

அதற்குள் அவர்கள் வேறொரு முடிவை எடுத்திருந்தனர்.

நேற்று நல்ல மழை .மாமா , மழை பெய்து முடிந்த சடுதியில் நீங்கி வெளியேறுபவர்களில் அதே ஸ்டைலோடு புது சினிமாப்பாடலை சீழ்க்கையடித்தபடி பேரப்பிள்ளைகளுக்கு இனிப்பு காரம் வாங்கியபடி லஷ்மி விலாஸ் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.அவர் ஒரு கையை லெதர் பேக்கின் காதுக்குள் விட்டு இறுக்கிப் பிடித்தபடி இருந்தார்.

சிவா அன்று சொன்னது என் காதைத்துளைத்தபடியே இருந்தது.அதைத் தூசாகத் தட்டியபடி எட்டு வைத்துக் கொண்டிருந்தார் வீட்டை நோக்கி கோபால் மாமா.

*********

Comments are closed.