துக்ளக் நகரம் ( இந்தியில் – பாரதேந்து ஹரீஷ்சந்த்ர ) தமிழில் – நாணற்காடன்

[ A+ ] /[ A- ]

துக்ளக்

துக்ளக்

கதாபாத்திரங்கள்

மஹந்த் – குரு

நாராயந்தாஸ், கோவர்தன்தாஸ் – சிஷ்யர்கள்

மற்றும்

காய்கறிக்காரன், இனிப்புக்கடைக்காரன், ராஜா, புகாரோடு வருபவன், வியாபாரி, கொத்தனார், சுண்ணாம்புக்காரன், தண்ணீர் ஊற்றுபவன், கசாப்புக்காரன், ஆட்டுக்காரன், காவல் அதிகாரி, சிப்பாய்கள்

( இடம் – நகரத்திற்கு வெளியே )

குரு மஹந்தும், சிஸ்யர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

மஹந்த் – குழந்தாய்… இந்த நகரத்தைத் தூரத்திலிருந்து பார்த்தால் மிகவும் அழகாகத் தெரிகிறது. பார்ப்போம் வாருங்கள். ஏதேனும் பிச்சை கிடைத்தால் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யலாம்

நாராயண் தாஸ் – ஆம் குருவே… நகரம் அழகாக இருக்கிறது. பிச்சையும் கிடைத்தால் மிகுந்த ஆனந்தம்.

மஹந்த் – கோவர்தன் தாஸ் நீ மேற்குப் பக்கம் போ. நாராயண் தாஸ் நீ கிழக்குப் பக்கம் போ.

( இருவரும் போகிறார்கள் )

கடைவீதியில் கோவர்தன் தாஸ் ஒரு காய்கறி கடை முன் நின்றிருக்கிறான்

கோவர்தன் தாஸ் – ( காய்கறிக்காரனிடம் ) ஐயா, காய்கறி விலை என்ன?

காய்கறிக்காரன் – சாமி…. எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா…

கோவர்தன் தாஸ் – எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசாவா? ரொம்ப சந்தோசம். எந்தப் பொருள் எடுத்தாலும் கிலோ ஒரு பைசாவா? ( பக்கத்திலிருந்த இனிப்புக்கடைக்கு நகர்ந்து போய் )… ஐயா, இனிப்பு விலை என்ன?

இனிப்புக்கடைக்காரன் – எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா..

கோவர்தன் தாஸ் – அடடா… அடடா… எதை எடுத்தாலும் கிலோ ஒரு பைசா.. ரொம்ப சந்தோசம்.. ஏனய்யா இந்த நகரத்தோட பெயர் என்ன?

இனிப்புக்கடைக்காரன் – துக்ளக் நகரம்.

கோவர்தன் தாஸ் – ராஜாவின் பெயர் என்ன?

இனிப்புக்கடைக்காரன் – அன்பூஜ் ராஜா

கோவர்தன் தாஸ் – துக்ளக் நகரம், அன்பூஜ் ராஜா, எதையெடுத்தாலும் ஒரு பைசா..

இனிப்புக்கடைக்காரன் – சாமி, எதுவும் வாங்கலையா?

கோவர்தன் தாஸ் – ஐயா, பிச்சையெடுத்ததில் ஏழு பைசா கிடைத்திருக்கிறது. மூன்றரை பைசாவுக்கு இனிப்பு கொடுங்கள்

குரு மஹந்தும் நாராயண் தாசும் ஒரு பக்கமிருந்து வருகிறார்கள். இன்னொரு பக்கமிருந்து கோவர்தன் தாஸ் வருகிறான்

மஹந்த் – குழந்தாய்… பிச்சை கிடைத்ததா? பொட்டலம் பெரிதாக இருக்கிறதே?

கோவர்தன் தாஸ் – குருவே ஏழு பைசா பிச்சையாகக் கிடைத்தன. மூன்றரை பைசாவுக்கு மட்டும் இனிப்புகள் வாங்கி வந்திருக்கிறேன்

மஹந்த் – குழந்தாய்… இங்கு எந்தப் பொருள் எடுத்தாலும் கிலோ ஒரு பைசா என்று நாராயண் தாஸ் சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. இந்த நகரத்தின் பெயர் என்ன? ராஜா யார்?

கோவர்தன் தாஸ் – துக்ளக் நகரம், அன்பூஜ் ராஜா, எதையெடுத்தாலும் ஒரு பைசா..

மஹந்த் – குழந்தாய்…. இந்த மாதிரி நகரத்தில் இருப்பது நல்லதில்லை. இந்த நகரத்தில் இனி நான் ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்.

கோவர்தன் தாஸ் – குருவே… இந்த நகரத்தை விட்டு நான் இனி நகர்வதாயில்லை. வேற இடங்களில் எவ்வளவு தான் சுற்றிப் பிச்சையெடுத்தாலும் வயிறு நிரம்புவதேயில்லை. நான் இங்கேயே தான் இருப்பேன்.

மஹந்த் – என் பேச்சைக் கேள். இல்லையென்றால் பின்னால் வருந்துவாய். இப்போது நான் போகிறேன். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அப்போது என்னை நினை. வருவேன். ( சொல்லிவிட்டு குரு மஹந்த் போகிறார் )

ராஜா, மந்திரிகள் மற்றும் வேலைக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்பக்கம் ”காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்” என்ற சத்தம் கேட்கிறது

ராஜா – யாரங்கே கத்திக்கொண்டிருப்பது? கூப்பிடுங்கள்

(இரண்டு காவலாளிகள் ஒருவனை அழைத்துவருகிறார்கள)

புகாரோடு வந்தவன் – காப்பாற்றுங்கள் ராஜா…. என்னைக் காப்பாற்றுங்கள்

ராஜா – சொல்… என்ன ஆயிற்று?

வந்தவன் – ஒரு வியாபாரியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. எனது ஆடுகள் அதற்கடியில் சிக்கி இறந்துவிட்டன. எனக்கு நியாயம் வேண்டும் ராஜா..

ராஜா – ஓ…. அந்த வியாபாரியைப் பிடித்து வாருங்கள்

( காவலாளிகள் ஓடிப்போய் அந்த வியாபாரியைப் பிடித்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் வியாபாரியே… இவனது ஆடுகள் உனது வீட்டுச் சுவர் விழுந்து செத்துவிட்டன. அதற்குக் காரணம் நீ தான். குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாயா?

வியாபாரி – ஐயோ…. அதில் என் குற்றம் ஏதுமில்லை ராஜா.. இடிந்துவிழுமளவிற்கு சுவரைக் கட்டியது கொத்தனார் தான். என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – சரி இவனை விட்டுவிடுங்கள். அந்தக் கொத்தனாரைப் பிடித்து வாருங்கள்.

( வியாபாரி விடுவிக்கப்படுகிறான். காவலாளிகள் கொத்தனாரைப் பிடித்து இழுத்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் வியாபாரி.. இவனது ஆடுகள் எப்படி செத்தன?

கொத்தனார் – மகாராஜா… சுண்ணாம்பு கலப்பவன் தான் சுவர் இடிந்துவிழும்படி குறைந்த அளவில் சுண்ணாம்பு கலக்கிவிட்டான். ஆடுகள் செத்ததற்கு அந்த சுண்ணாம்புக்காரன் தான் காரணம். என்னை விட்டு விடுங்கள்.

ராஜா – நல்லது. இவனை விட்டுவிட்டு அந்தச் சுண்ணாம்புக்காரனை இழுத்து வாருங்கள்.

( கொத்தனார் விடுவிக்கப்படுகிறான். காவலாளிகள் சுண்ணாம்புக்காரனைப் பிடித்து இழுத்து வருகிறார்கள்)

ராஜா – ஏய் சுண்ணாம்புக்காரனே… இவனது ஆடுகளை ஏன் கொன்றாய்?

சுண்ணாம்புக்காரன் – மகாராஜா….. இதில் என்னுடைய குற்றம் ஒன்றுமில்லை. நீர் இறைத்து ஊற்றுபவன் அதிகமாக நீரை ஊற்றிவிட்டான். அதனால் தான் சுண்ணாம்பு பசையில்லாமல் போய்விட்டது. அவன் தான் குற்றவாளி. என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – ஓ… இவனை விட்டுவிட்டு அந்தத் தண்ணீர் இறைப்பவனைப் பிடித்து வாருங்கள்.

( தண்ணீர் இறைப்பவன் இழுத்து வரப்படுகிறான் )

ராஜா – ஏய்… சுவர் இடிந்து விழுந்து ஆடுகள் செத்துப்போகுகளவிற்கு சுண்ணாம்பில் அதிகமாக தண்ணீரை ஏன் ஊற்றினாய்?

தண்ணீர் இறைப்பவன் – மகாராஜா… இந்த அடிமையின் மேல் எந்தக் குற்றமுமில்லை. கசாப்புக்காரன் பெரிய அளவில் தோல்வாளி செய்துகொடுத்துவிட்டான். அதனால் தான் தண்ணீரின் அளவு அதிகமாகிவிட்டது. கசாப்புக்காரன் தான் குற்றவாளி. என்னை விட்டுவிடுங்கள்.

ராஜா – சரி… இவனை விட்டுவிடுங்கள். கசாப்புக்காரனை இழுத்து வாருங்கள்.

( கசாப்புக்காரன் இழுத்து வரப்படுகிறான்)

ராஜா – இப்படியொரு தோல் வாளியை ஏன் தயாரித்துக் கொடுத்தாய்?

கசாப்புக்காரன் – மகாராஜா… ஆட்டுக்காரன் ஒரு பெரிய ஆட்டை ஒரு பைசாவுக்குக் கொடுத்துவிட்டான். அதனால் இவ்வளவு பெரிய தோல் கிடைத்துவிட்டது. அதனால் தான் இவ்வளவு பெரிய தோல் வாளியைச் செய்யும்படி ஆகிவிட்டது. ஆட்டுக்காரன் தான் குற்றவாளி. என்னை விட்டு விடுங்கள்.

ராஜா – சரி சரி… அந்த ஆட்டுக்காரனை இழுத்து வாருங்கள்

( அடுத்ததாக ஆட்டுக்காரன் இழுத்து வரப்பட்டான் )

ராஜா – ஏய் ஆட்டுக்காரனே… இவ்வளவு பெரிய ஆட்டை ஏன் விற்றாய் அவனுக்கு?

ஆட்டுக்காரன் – மகராஜா… அந்த சமயத்தில் சிப்பாய்கள் அணிவகுப்பு செய்து வந்தார்கள். அவங்க வந்த சத்தத்தில் ஆட்டின் அளவைப் பார்க் மறந்துவிட்டேன். என் குற்றம் இதில் எதுவுமில்லை.

ராஜா – சிப்பாய்களின் தலைவனை பிடித்து வாருங்கள்

( சிப்பாய் தலைவன் பிடித்து வரப்பட்டன் )

ராஜா – ஏய்…. அணி வகுப்பு நடத்தும்போது அவ்வளவு சத்தத்தை ஏன் போட்டீர்கள். உங்களால் தான் இந்த ஆட்டுக்காரன் பெரிய ஆட்டை விற்று இருக்கிறான். அந்த ஆடுகள் செத்ததற்கு நீ தான் காரணம்.

சிப்பாய் தலைவன் – மகாராஜா… நான் குற்றம் எதுவும் செய்யவில்லை

ராஜா – இனி பேச ஒன்றுமில்லை. இவனை இழுத்துப் போய் தூக்கில் ஏற்றுங்கள்.

( சிப்பாய் தலைவன் இழுத்துச் செல்லப்படுகிறான் )

கோவர்தன் தாஸ் ஓரிடத்தில் உட்கார்ந்து இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

கோவர்தன் தாஸ் – குரு எனக்கு இங்கே தங்கி இருக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். இது மோசமான நாடு என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நான் மிகவும் நன்றாக அல்லவா இருக்கிறேன். நன்றாக சாப்பிட- குடிக்க இங்கே அனைத்தும் கிடைக்கின்றன இல்லையா?

( நாலாப்புறமுமிருந்து நான்கு சிப்பாய்கள் வந்து கோவர்தன் தாஸைப் பிடிக்கிறார்கள் )

சிப்பாய் – வா வா… நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாக இருக்கிறாய். இன்று உனக்கு தண்டனை கிடைக்கப் போகிறது

கோவர்தன் தாஸ் – ( பயந்தபடி ) இந்த ஆபத்து ஏன் வந்தது? என்னை ஏன் பிடிக்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?

சிப்பாய் – நேற்று சிப்பாய் தலைவனுக்கு தூக்கு தண்டனை கிடைத்தது. தூக்குக் கயிற்றில் தொங்கவிட அவரை இழுத்துப்போன போது கயிற்றில் தொங்கவிட முடியாதபடி அவர் எலும்பும் தோலுமாக இருந்தார். நாங்கள் மகாராஜாவிடம் இது பற்றி கூறினோம். அவர் தான் யாரேனும் ஒரு குண்டு மனிதனைப் பிடித்துவந்து சிப்பாய் தலைவனுக்குப் பதில் தூக்கில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டார். ஏனெனில் ஆடுகள் செத்ததற்கு யாராச்சும் ஒருவருக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும். இல்லையென்றால் அது நியாயமாக இருக்காது.

கோவர்தன் தாஸ் – ஐயோ கடவுளே…. நான் சாகப் போகிறேனே…. இது ஒரு இருண்ட நகரமாக இருக்கிறதே…. குருவே… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்… என்னைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…

( கோவர்தன் தாஸ் கத்தக் கத்த அவனை இழுத்துப் போகிறார்கள் )

கோவர்தன் தாஸ் – ஐயோ… ஒரு குற்றமும் செய்யாத என்னைத் தூக்கில் போடப் போகிறீர்களே..

சிப்பாய் – ஏய்… கத்தாதே… ராஜாவின் உத்தரவு தப்பாக இருக்காது.

கோவர்தன் தாஸ் – ஐயோ.. குரு சொன்னதை நான் கேட்காமல் விட்டுவிட்டேனே.. குருவே…. என்னைக் காப்பாற்றுங்கள்.

( குரு மஹந்த் வருகிறார்கள் )

மஹந்த் – அடே கோவர்தன் தாஸ்… ஏன் உனக்கு இந்த நிலை

கோவர்தன் தாஸ் – ( பயந்தபடி ) குருவே… சுவர் இடிந்துவிழுந்து ஆடுகள் செத்துவிட்டன. அதற்காக எனக்குத் தூக்குத் தண்டனைத் தரப்பட்டுள்ளது. என்னைக் காப்பாற்றுங்கள் குருவே.

மஹந்த் – கவலைப் படாதே… ( சிப்பாய்களைப் பார்த்து ) இதோ பாருங்கள்…. என் சிஷ்யனுக்குக் கடைசி உபதேசம் செய்ய வேண்டியுள்ளது. கொஞ்சம் விலகியிருங்கள் ( குரு தன் சிஷ்யனின் காதில் ரகசியமாக எதையோ சொன்னார் )

கோவர்தன் தாஸ் – சரி குருவே…. அப்படியென்றால் நான் இப்போதே தூக்கில் ஏறுகிறேன்

மஹந்த் – இல்லை சிஷ்யா… எனக்கு வயதாகிவிட்டது. நான் தூக்கிலேறி செத்துப் போகிறேன்.

( இவ்வாறாக இருவரும் வாதம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ராஜா, சிப்பாய் தலைவன், கொத்தனார் எல்லாரும் அங்கே வருகிறார்கள் )

ராஜா – இங்க என்ன நடக்கிறது?

சிப்பாய் – மகாராஜா… சிஷ்யன் நான் தான் தூக்கிலேறுவேன் என்கிறான். இல்லையில்லை நான் தான் தூக்கிலேறுவேன் என்கிறார் குரு. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ராஜா – ( குருவைப் பார்த்து ) குருவே சொல்லுங்கள்… நீங்கள் ஏன் தூக்கிலேறி மரணமடைய விரும்புகிறீர்கள் ?

மஹந்த் – இந்த நல்ல நாளில் நல்ல நேரத்தில் மரணமடைபவர்கள் நேராக சொர்க்கத்திற்கே போய் விடுவார்கள் என்பதால் நான் தூக்கிலேற விரும்புகிறேன் மகாராஜா

மந்திரி – அப்படியென்றால் என்னைத் தூக்கிலிடுங்கள் மகாராஜா

கோவர்தன் தாஸ் – இல்லை இல்லை…. நான் தான். என்னைத் தூக்கிலிடுங்கள்

கொத்தனார் – நான் தொங்குகிறேன். என்னால் தான் சுவர் இடிந்துவிழுந்தது. என்னைத் தூக்கிலிடுங்கள் ராஜா

ராஜா – அமைதியாக இருங்கள் அனைவரும். ராஜா நான் இருக்கும்போது சொர்க்கம் செல்லும் உரிமை வேறு யாருக்கிருக்கிறது? நான் தான் தூக்கிலேறுவேன். ம்… சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்.

( ராஜா தூக்கிலேற்றப்படுகிறார். திரை விழுகிறது )

***

Comments are closed.