துண்டிக்கப்பட்ட தலையின் கதை ( முகம்மத் பர்ராடா – தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

[ A+ ] /[ A- ]

கார்த்திகைப் பாண்டியன்

முகம்மத் பர்ராடா (1938)

மொராக்கோவின் பழமைவாய்ந்த நகரமான ஃபெஸ்ஸில் பாரம்பரியமிக்க ஆனால் வறுமையில் உழன்றதொரு குடும்பத்தில் பிறந்தவர். புனைகதை எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இளமைக்காலத்தில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தேச விடுதலைக்காகப் போராடினார்.

1975-ல் அராபிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல வருடங்கள் ரபாத் நகரின் கிங் முகம்மது பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின் பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார். 1976-ல் மொரோக்கோ எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான Flaying Skins 1979-ல் வெளியான பிறகு புதினங்களையும் எழுதத் தொடங்கினார். அன்பு, கோபம் மற்றும் விசுவாசம் ஆகியவற்றை விரிவாகப் பேசிய பர்ராடாவின் The Game of Forgetfulness (1993) ஒரு அற்புதமான, சுயசரிதைத்தன்மையுடனான நாவல். The Fleeting Light (1993), Roses and Ashes (2000), Woman of Forgetfulness (2001) ஆகியவை இவருடைய மற்ற முக்கியமான ஆக்கங்கள்.

***

என் ரத்தம் நடைபாதையில் வழிந்தோடியது. வாளால் ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்தியதைப்போல, உடலை விட்டுப் பிரிக்கப்பட்டது என் தலை. பேருந்தோ பாரவண்டியோ ஏறிப்போகும்படி, தார்ச்சாலையின் மீது கைவிடப்பட்டதாக, எனது உயிரற்ற உடல் அங்கே கிடக்க நேர்ந்தது எனக்குள் வலித்தது. உடலைத் தூக்கும்படி என் கைகளுக்கு ஆணையிட முயற்சி செய்தேன், ஆனால் இனிமேலும் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் அவை இல்லை என்பதை உணர்ந்தேன். எனது தமனிகளும் சிரைகளும் தரையின் மேல் ஒரு காட்டு நீரூற்றைப் போல பீய்ச்சியடித்தன, ஏதொவொரு செந்நிற ஊற்றினை நிர்மாணிக்கும் அரசாங்கப்பணியை விரைந்து முடிக்க விரும்புவதைப்போல குருதிக்கறை தரையில் பரவியது.

கடந்து சென்றவர்கள் தங்கள் பாதையில் போனார்கள், அவர்களின் பார்வை சிதறிக்கிடந்த என் குருதியின் மீது படிந்து மீண்டது. ரத்தத்தெறிப்புகளை வெறுமனே கடந்து போன அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு முதியவர் முணுமுணுப்பதைக் கேட்டேன். “அடக் கடவுளே!” (ரத்தச்சகதிக்குள் கால் வைத்து தனது காலணிகளை அவர் அழுக்காக்கிக் கொண்டிருந்தார்).
எனக்குள் மகிழ்ச்சி வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் செல்லும்முன் என்னைக் கொன்றவனை நான் கவனிக்கவே இல்லை: துண்டிக்கப்பட்ட எனது தலையால் இன்னும் அசையவும் பேசவும் முடிந்தது. என் கண்கள் முன்னும் பின்னுமாக அலைந்தன. என்ன செய்வது? இந்த வினோதமான சங்கதியை அவசரக்குடுக்கைகள் யாரேனும் கண்ணுற்று, இறந்த உடலோடு எனது தலையையும் சேர்த்து ஏதாவதொரு மௌனமான குழிக்குள் போட்டு மூடுவதற்கு முன்னால், இந்த வெட்டுப்பட்டத் தலையை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது?

கண்களை மூடி, ஒரு யோகா குருவைப்போல ஒற்றைப்புள்ளியில் எனது கவனத்தைக் குவித்தேன், நான் வாழ்ந்த அடையாளத்தின் மீதமாகக் கிடந்த அனைத்தின் மீதும். நான் முணுமுணுத்தேன்: “கடவுளே, தூரமாக.. வெகுதூரம் என்னைக் கூட்டிச் செல்லும்படியாக சிறகுகளைக் கொடு. இப்படியாக நான் பிழைத்திருப்பேன், ஒரேயொரு நாள் என்றாலும் பரவாயில்லை.”
இறுதி வார்த்தையை நான் முடிக்கும் முன்னரே, என் தலை சீராகக் காற்றில் உயர எழும்பத் தொடங்கியது.. சிறகுகளின் தேவையின்றி! வேகமாக மேலேறிச் சென்று தெற்கில் விரைந்தேன்.

மேலேயிருந்து பார்க்கையில், ரபாத் நகரம் எனக்கு ஒரு பாம்புக்குழியைப் போலத் தெரிந்தது, ஒரு குகையைப் போல, அழுக்கான நரியைப் போல, துருப்பிடித்த வாளைப் போல, கடலால் வெளித்தள்ளப்பட்ட கடற்பாம்பைப் போல, தேனீக்கள் இல்லாத தேன்கூட்டைப் போல, தேய்ந்து மொட்டையான ஒரு பாறையின் தலைப்பகுதியைப் போல…

இருமுறை நான் பெருமூச்செறிந்தேன். என் கன்னங்களைக் கொத்திய சூரியவெப்பத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து சென்றேன். பறவைகள் கூட்டத்தின் நடுவே நான் பறந்தபோது என்னிடமிருந்து அவை விலகிப் போயின, வெட்டப்பட்ட மனிதனொருவன் பறந்து வருவதைப் பார்த்ததால் அதிர்ச்சியடைந்து, தங்கள் கூடுகளை நோக்கி அலையலையாகப் பறந்து சென்றன..

திகைக்கச்செய்யும் வேகத்தில் காற்றைக் கிழித்து நான் முன்னேற, கடல் என் பார்வையிலிருந்து மறைந்தது. ரகசியங்கள் ஏதுமின்றி, சிதைவுகள் எதுவுமில்லாமல் உலகம் எனக்குக் கீழே விரிவதைக் கண்டேன். ஆனால் என் மூளையை ஒரு கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது: “துண்டிக்கப்பட்ட தலையே, அலைச்சல்களெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது நீ என்ன செய்வாய்?” என்னால் முடிந்த மட்டும் பறக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினேன், காற்றுப்புழையைப் போல என் மூக்கு உள்ளிழுத்துக் கொண்ட காற்று கழுத்தின் நரம்புகளின் வழியாக வெளியேறிப் போக, என் வேகம் இரட்டிப்பானது. பறத்தலின் மீது அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ்1 கொண்டிருந்த ஆர்வத்தின் ரகசியம் எனக்குப் புரிய ஆரம்பித்தது: வழமையான சங்கதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு உயர வேண்டுமெனில் பூமியை நாம் பிரிந்திருக்க வேண்டும். நமக்கிருக்கும் சக்திகளின் மீது பரிபூரண நம்பிக்கையோடு நாம் வாழும் சமயங்களிலெல்லாம் தினசரி வாழ்க்கை தனது கவிதைகளை மீட்டெடுக்கிறது. என்னால் பறக்கவும் பார்க்கவும் பேசவும் சாத்தியப்படும் வரை எனது உடலை இழந்ததைப் பற்றி நான் வருந்தப் போவதில்லை. நம்புங்கள், உள்ளம் தெளிவாக இருந்தது, எனது அறிவாற்றலும் இரண்டு மடங்கு துலக்கமுற்றதாக.. உணர்வுநிலைகள் மேலோங்கி பித்துநிலையின் எல்லையில் நின்றிருந்தன. நான் யோசித்தேன், இந்த சக்திகளை சோதித்துப் பார்க்க வேண்டும்.. பார்வையில் தென்படுகிற முதல் மனிதக்கூட்டத்தின் முன்னால் நான் தரையிறங்குவேன்: அது ஜமி’ அல்-ஃபனா2வின் நிலமாயிருந்தால் அங்கிருக்கக்கூடிய தர்வீஷுகள், கதை சொல்லிகள் மற்றும் ஏமாற்று வித்தைகாரர்கள் ஆகியோரிடம் நான் விவாதம் புரியலாம்.

சதுக்கத்தில் நின்றிருந்த மனிதர்களின் தலைக்கு மேல் நான் சுற்றி வந்தேன், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ரீங்கரிப்பு சத்ததோடு. முகங்கள் ஆச்சரியத்தில் மேல்நோக்கித் திரும்பின. விரல்களும் குரல்களும் உயர்ந்தன: “ஒரு மனிதனின் தலை அங்கு பறந்து கொண்டிருக்கிறது” என யாரோ அலறினார்கள்.
பலவிதமான மனிதர்களைக் கொண்டிருந்ததொரு கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. நேரத்தை நானும் வீணடிக்கவில்லை – அவர்களோடு உரையாடுகிற எனது விருப்பம் கட்டுக்கடங்காததாக மாறியிருந்தது.

“இழிந்த மனிதர்களே,” என்றேன். “உண்மைகளை மறந்து மூடநம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டு இங்கே இன்னும் எதிர்பார்ப்போடு நீங்கள் காத்திருக்கிறீர்கள். உண்மை உங்கள் கண்களைக் கூசச்செய்யும், எனவேதான் ’அந்தர்3, ஸெய்த்4 மற்றும் வக் வக்5 என்னும் நிலம் போன்ற கட்டுக்கதைகளில் உங்களை நீங்களே மயக்கத்தில் அமிழ்த்திக் கொள்கிறீர்கள். கனவு காண்கிறீர்கள். அழகான ஹௌரிக்களைப் பற்றிய கனவுகளை, அபரிமிதமான அவர்களின் மார்புகள் உங்களுக்குள் கொழுந்து விட்டெரியும் இச்சையைத் தூண்டுகின்றன, உங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள் – ஆனால் நிதர்சனத்தில் பசி, தோல்வி மற்றும் அடக்குமுறை என யாவற்றையும் உங்களின் காமம் மூடி மறைக்கிறது.”
“என் பாவப்பட்ட மக்களே, துருப்பிடித்த கதவுகளைத் தட்டித்திறக்கவும் கிஞ்சித்தும் கருணையற்ற இதயங்களை அசைத்துப் பார்க்கவும் நான் வந்திருக்கிறேன், அப்படியாவது உங்களின் மௌனத்தை உடைத்தெறிவீர்கள் என நம்புகிறேன், உண்மையை உரக்கச் சொல்லுங்கள், நிதர்சனத்தையும் உங்களுடைய இயலாமைகளையும் எதிர்கொள்ளுங்கள், பிறகு அது வளர்ந்திடும், விருத்தியடையும், இறுதியில் எழுந்து நிற்கும், ஆயிரம் கைகளைக் கொண்ட ஒரு அரக்கனாக..”

இடிமுழக்கத்தின் வேகத்தோடும் அதீத பதற்றத்தோடும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பின. எனக்குள் சேமித்திருந்த அனைத்தையும் சொல்ல விரும்பினேன், இதற்கு முன்னால் வெளிப்படையாக நான் பேச அனுமதிக்கப்பட்டிராத அனைத்தையும். மக்கள் வாயடைத்துப் போனவர்களாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு நான் சொன்னது புரியவில்லை, விகாரமாய்த் தென்பட்ட ஒரு பைத்தியக்காரனின் தலை தங்களுக்கு அறிவுரை சொல்வது பற்றி சிலர் முணுமுணுத்தார்கள். அவர்களுடைய நாடகங்களை நான் விஞ்சிவிட்டேன் என்பதைப்போல தர்வீஷுகள் என்னை நோக்கி வந்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள், “மேற்பகுதி கழன்று விழுந்து விட்ட பறக்கும் தட்டாக இருக்கக்கூடும்.”

“அல்லது அவர்கள் அனுப்பிய பதிவு செய்த பேச்சால் நிரப்பப்பட்ட ஒரு இயந்திரத்தலையாகவும் இருக்கலாம்.”

“எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நம்மை அசிங்கப்படுத்தவும் வம்பிழுக்கவும் செய்கிற யாரையும் நம்மால் பொறுத்துக் கொள்ளவியலாது!”

மக்கள்திரளின் கவனத்தை என்னிடமிருந்து தர்வீஷுகள் தட்டிப் பறிக்கும் முன்பாக நான் கூட்டத்திடம் திரும்பினேன், “உங்களில் எத்தனை பேருக்கு வேலையில்லை? இதற்கு யார் காரணமென்று எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? உடலளவில் திடகாத்திரமாக இருந்தாலும் ஏன் மனதுக்குள் முதுமையடைந்தவர்களாக மாறிப் போனீர்கள்? பழங்கதைகளிலும் மூடநம்பிக்கைகளிலும் ஏன் உங்களைத் தொலைக்கிறீர்கள்? சூரியன் வாட்டியெடுக்கும் இந்த பாழ்நிலத்தில் ஏன் சிறிய அப்பத்துண்டுகளும் பாம்பின் மூளைகளும் பஞ்சத்தால் இறந்த பூனைகளின் அழுகிப்போன மாமிசமும் போதுமென்று வெறுமனே பிழைத்துக் கிடக்கிறீர்கள்?”

“வேலைகளுக்காக நீங்கள் போராடியதை நானறிவேன்.. ஆனால் என்ன நடந்தது? மாபெரும் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதில் உங்களைப் பணியமர்த்துவதாக அவர்கள் வாக்களித்தார்கள்.. ஆனால் அந்த அதியற்புத நெடுஞ்சாலையில் பறக்கப்போகும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் உங்களுக்கும் நடுவேயுள்ள இடைவெளியை என்ன செய்வது? நடைபிணங்களை அரவணைத்துக்கொள்ளும் ஒரு ராட்சதக் கல்லறைக்குள் நாம் இப்போது நிற்கிறோம். “நல்ல குடிமகன்கள்” என்கிற பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டேயிருப்பதில் நீங்கள் திருப்தியடைய விரும்புகிறீர்களா, பொதுவிலும் பிறகு தனிப்பட்ட முறையிலும், இதைச் சொல்லித்தான் கடவுளைக் கொண்டாடவும் அவருடைய நன்மைகளுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி சொல்லவும் செய்கிறார்கள்; யாருடைய அதிகாரத்தின் முன் நீங்கள் மண்டியிடுகிறீர்கள்? வளம்பொருந்திய இந்நிலத்தில் துயரங்களுடன் வாழ்வதில் நீங்கள் நிம்மதி கொள்கிறீர்களா?”

“…கேடுகெட்ட மனிதர்களாகிய நீங்களெல்லாம் அபு அல்-தர்தா6 பற்றி அல்-திர்மிதி7 சொன்ன வார்த்தைகளைப் போன்றவர்கள்: ‘எனது மக்களில் சிறந்தவர்கள் யார் என்று சொன்னால் அது நம் வரலாற்றின் தொடக்கத்திலும் அதன் முடிவிலும் வாழ்ந்தவர்கள் மட்டுமே; இவையிரண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர்களில் பலரும் வெற்றுத்துயர்தான்’. உங்களில் பலரும் அதுபோன்ற வெற்றுத்துயர்தான்.”

கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.
“இந்தத் துண்டிக்கப்பட்ட தலை மிகவும் அதிகமாகப் பேசுகிறது.”
“நாம் நமது துயரங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்; ஏன் அவன் நமது கவலைகளை தட்டியெழுப்பி மறந்திருக்கும் சில காயங்களை மறுபடியும் திறக்க வேண்டும்? ஆளுனரின் உளவாளிகள் எங்கே? பிரச்சினைக்குரிய இந்த மனிதனைப் பற்றி புகார் கொடுக்காமல் ஏன் அவர்கள் தாமதிக்கிறார்கள்?”

மற்ற குரல்கள் நம்பிக்கையோடு குறுக்கிட்டன, “தன்னுடைய தடவாளங்களையெல்லாம் வெடித்துத் தள்ளுவதற்கான நேரத்தை அவர்கள் அவனுக்குத் தருகிறார்கள். அதன் பிறகே அவர்கள் தீர்மானிப்பார்கள், வந்திருப்பவன் தனியாக வந்திருக்கும் உளவாளியா அல்லது வேறெந்த அந்நியதேசமும் பயிற்சி தந்து இவனை அனுப்பியிருக்கிறதா என்பதை.”

மற்றொரு குரல்: “ஆனால் அவன் பயப்படவில்லை – கவனி, அவனுடைய தொண்டை வெட்டப்பட்ட பிறகும் உண்மைகளைத்தான் சொல்கிறான் – குறைந்தபட்சம் அவன் பொய் சொல்லவில்லை.”
முகங்களை ஆராய்ந்து திருப்தியாகப் புன்னகைத்தவாறே வட்டத்தின் நடுப்பகுதியை நோக்கி மெல்ல நான் நகர்ந்தேன், ஏனெனில் உணர்ச்சிகளைத் தொலைத்தவர்களாயிருந்த இந்த மனிதக்கூட்டத்தை கடைசியாக விவாதிக்கும் இடத்துக்கு நகர்த்தியிருக்கிறேன், மேலும் சில புதிய ராகங்களைக் கவனிக்கவும் வைத்திருக்கிறேன்.

திடீரென்று அந்தக் கூட்டம் சற்றே விலகி சில தீயணைப்பு வீரர்களுக்காக வழிவிட்டது. காவலர்கள் சூழ்ந்திருக்க, நீளமானதொரு இரும்புக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான வலையை அவர்கள் சுமந்து வந்தார்கள்.

மேலேயிருந்து அந்த வலை என் மீது விழுவதைப் பார்த்து சத்தமாகச் சிரித்தேன்; நான் எதிர்க்கவில்லை. என்னுடைய சிரிப்பைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றார்கள். சூழலின் விசித்திரத்தன்மை அதிகரித்துக் கொண்டே போக கொதித்துப் போயிருந்த மக்களின் குரல்கள் உயர்ந்தன, மேலும் அடுத்து என்ன செய்வதென்பதை விவாதித்ததில் அவர்களுடைய குழப்பங்களும் அதிகரித்தன.
காவலர்களின் தலைவன் அலறுவதை நான் கேட்டேன், “அவனைத் தொடாதீர்கள்! நச்சுப்பொருட்களும் வெடிமருந்துகளும் அவனது உடலில் பொருத்தப்பட்டிருக்கலாம்! கூண்டுக்குள் அவனை அடைத்த பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லலாம்!”

இரும்புக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தபோது தலையின் பாரம் குறைந்திருந்ததை உணர்ந்தேன், ஒரு பலகையின் மீது வைத்து தீயணைப்பு வீரர்கள் அந்தக் கூண்டைத் தங்களுடைய தோள்களில் தூக்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பின்னால் கூட்டம் ஊர்வலமாக நடக்கத் தொடங்கியது, ஆனால் காவலர்கள் அவர்களை விரட்டியடித்தார்கள். என்னால் முடிந்தமட்டும் பலமான குரலில் நான் கத்தினேன், “சென்று வருகிறேன்! உங்கள் உரிமைகளைக் கேளுங்கள்! கறியும், கோழிக்கறியும், பழரசமும் வேண்டும் எனக் கேளுங்கள், திருப்தியான உடலுறவும் கூட! கேளுங்கள் – உடன் உங்களுடைய சுயத்தையும் கேள்விக்கு உட்படுத்துங்கள்!”
பதிலுக்கு குரல்கள் ஆர்ப்பரித்தன, “அவனைப் பேச விடுங்கள்.. வெறுமனே பேசுவதற்காகவெல்லாம் எந்தத் தண்டனையும் தர முடியாது.. அவன் அருமையானதொரு உரையை வழங்கியிருக்கிறான்.. எப்போதிருந்து இந்த அரசாங்கம் வார்த்தைகளைக் கண்டு பயப்படத் தொடங்கியது?”

வாகனத்துக்குள் மறையுமுன் நான் அலறினேன், “என்னை வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேளுங்கள்!”

என்னுடைய வழக்கு மிகச்சிக்கலானது என்கிற சங்கதி ஆளுனரின் அலுவலகத்தில் தெளிவானது. வல்லுநர்களும் ஆலோசகர்களும் நீதிபதிகளும் என எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள்: புத்தகங்களோ அல்லது தந்திரங்களோ அல்லது உளத்திட்பமோ எதுவும் அவர்களுடைய உதவிக்கு வரவில்லை.

வெண்ணிறப் பட்டுக் கையுறைகள் அணிந்து ஆளுனர் உள்ளே நுழைந்தார். கண்ணியமும் அரசியல் செயல்திறனும் கொண்டதொரு மனிதனின் பாத்திரத்தை வரித்துக்கொண்டு அவர் என்னிடம் கேட்டார், “புரட்சியைத் தூண்டும் செயலென்று இதைச் சொல்லலாம்தானே, துண்டிக்கப்பட்ட தலையே? மக்களைக் குழப்புவதற்காக நீ வெளியிலிருந்து வந்திருக்கிறாய்; உன்னுடைய பகற்கனவுகளையும் கம்யூனிசப் பசப்புரைகளையும் மக்களிடம் சொல்லியிருக்கிறாய்.. சட்டத்தை நீ அறிய மாட்டாயா?”

விவாதத்தை வளர்க்க விரும்பாத காரணத்தால் நான் வெறுமனே பதில் சொன்னேன், “நான் எனது உடலைத் தேடி வந்தேன், அது தெற்கில்தான் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது.”

“ஆக நீ மிகவும் தந்திரமானவன் என்று அறிகிறேன், ஜமி அல்-ஃபனாவில் உன்னுடைய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வறிக்கைகள் அப்படித்தான் சொல்கின்றன, இந்த சூழ்ச்சிவலைக்குள் எப்படி நீயாக வந்து சிக்கிக்கொண்டாய்?”

“மக்கள்திரள் எனக்குள் குதூகலத்தை உண்டாக்குகிறது: மனிதர்கள் அற்புதமான ரகசியங்களைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் நத்தைக்கூடுகளைப் போன்றவர்கள் என்றே எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறேன் – அவர்களை எப்போதும் சோம்பலின் ஆழ்துயிலில் அமிழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்பதில் ஏன் நீங்கள் இத்தனை கவனமாயிருக்கிறீர்கள்? என்னுடைய நாக்கைத் தவிர எதுவும் என்னிடம் மீதமிருக்கவில்லை, ஆகவே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘துள்ளிக் கொண்டேயிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு சதைத்துண்டினைக் கொண்டு நம்மால் பெரிதாக என்ன சாதித்து விட முடியுமென்பதைப் பார்க்கலாம்.’”

“நீ நெருப்புடன் விளையாடுகிறாய்.”

“மரணம் கூட என்னை ஊடுருவிப் போனதேயொழிய என்னை வெல்ல முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

நேர்த்தியான இளைஞனொருவன் அவசரமாக உள்ளே நுழைந்து ஆளுனரின் காதுகளில் கிசுகிசுத்தான். ஆளுனர் என் பக்கமாகத் திரும்பிக் கேட்டார், “உனக்கென்று தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவும் இருக்கிறதா?”

“மக்களிடம் பேசுவதற்காக ஒரு மன்றம்.”

“கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இப்போது உன் மீதான விசாரணையைத் தொடங்குவோம்.”

“நான் ஏற்கனவே இறந்து போனவன்.”
அவர் உடனே புன்னகைத்தார், எனக்கான சரியான தீர்வைக் கண்டுபிடித்து விட்டவரைப் போல.

“இந்த வழக்கைப் பொறுத்தவரை, உன்னை விசாரிக்க இறந்துபோன எங்களுடைய நீதிபதிகளில் ஒருவரை அழைத்து வருவோம்.”
காத்திருந்தவாறே, கூண்டுக்குள் நான் தனியாயிருந்தேன். அவ்வப்போது மகிழ்ச்சியான கரகோஷங்களின் எதிரொலிகள் என் காதுகளை எட்டின: “துண்டிக்கப்பட்ட தலை நீடூழி வாழ்க!”
எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. கண்களைத் திறந்து பார்த்தபோது, கூண்டை நோக்கித் திருப்பி நிறுத்தியிருந்த பாவொளி விளக்குகளிலிருந்து, ஒளிக்கற்றைகள் என் மீது வெள்ளமெனப் பாய்வதைக் கண்டு திடுக்கிட்டேன்.

காலடிச்சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டன, பகட்டான ஆடைகளிலும் அலங்காரங்களிலும் மின்னிய மாபெரும் மனிதர்களின் கூட்டத்தால் அந்த அரங்கம் வேகமாக நிரம்பியது. குரூரமும் பதற்றமும் நிரம்பிய அதே சிரிப்பு ஆளுனரின் முகத்தில் மெல்லக் கவிந்து பரவியது. அனைவரையும் அமைதியாக உற்றுப்பார்ப்பதை நான் தொடர்ந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த குரல் அறிவித்தது, “மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய பில்-பாக்தாதி பாஷா, துண்டிக்கப்பட்ட தலையின் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்காக அவருடைய கல்லறையை விட்டு வெளியேறி வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.”

இத்தகைய எண்ணப்போக்கே எனக்கு கிச்சுகிச்சு மூட்டியது. மகிழ்ச்சி பொங்க சத்தமாகச் சிரித்தேன். குறைந்தபட்சம் தங்களுடைய இயலாமையைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென்பதாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மூதாதையர்களின் அறிவு நிச்சயம் இவர்களின் கேவலமான புத்தியைக் காட்டிலும் சிறந்ததாகத்தான் இருக்கும். மோசமில்லை. அரசாங்க நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.

என்னுடைய குற்றம் பற்றி அவரிடம் என்ன சொல்லப்பட்டது என்பது எனக்குத் தெரியாது, அல்லது மக்களுக்குத் துரோகம் செய்த அவருடைய ஐந்தாம்படை மகனைச் சுதந்திர தினத்தன்று கட்டி இழுத்துச் சென்றுக் கொன்றதாகவும் பட்டியலில் சேர்த்துச் சொல்வார்களோ என்றெல்லாம் நான் தேவைக்கதிகமாக சிந்திக்கவுமில்லை. என்னுடைய புலன்களும் எச்சரிக்கையுணர்வும் மிகக் கூர்மையாகி ஒரு உச்சத்தைத் தொட்டபிறகு உரையாடல் விளையாட்டுகளைத் தொடரவோ பரிகாச உணர்வைக் கைக்கொள்ளவோ என்னால் முடியவில்லை. பறத்தலுக்கான ஆர்வம் எனக்குள் மீண்டும் கிளர்ந்தது, ஆபத்தை உணர்ந்த முதல் தருணத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் போனதற்காக என்னை நானே நொந்து கொண்டேன்.

பில்-பாக்தாதி பாஷா தனது தாடியை தடவிக் கொடுத்தார், விரல்களை அதன் வெண்ணிற மயிர்களினூடாக அலைய விட்டபடி. சுதந்திரத்துக்குப் பிறகானதொரு அரசாங்கத்துக்குத் தன்னுடைய சேவையை வழங்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பவராக அவர் தென்பட்டார். இறுதியில் தீர்க்கத்தோடு தனது தீர்ப்பை அவர் வழங்கினார்:

“ஏற்கனவே உடலை நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டீர்கள் – எனவே இந்தத் தலையையும் அதன் உடம்பிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு இதன் நாவை வெட்டி விடுங்கள்.”
குறிப்பு: துண்டிக்கப்பட்ட தலையின் கதை இங்கே முடிவுறுகிறது. தெளிவாகச் சொல்வதென்றால், அடுத்ததாக துண்டிக்கப்பட்ட நாவின் கதை வரவேண்டும்: என்றாலும், இந்த வழிமுறை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், நாம் அனைவருமே இதை அனுபவித்திருக்கிறோம் அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இந்தக் குறிப்பிட்ட தருணத்தையும் மற்ற பொதுவான சங்கதிகளையும் வித்தியாசப்படுத்தக்கூடியது என்று எதுவுமில்லை. ஆகவே, மன்னித்துக் கொள்ளுங்கள், கதை இங்கே முற்றுப்பெறுகிறது.

குறிப்புகள்:

1. அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ் – இஸ்லாமிய ஸ்பெயின் என்றழைக்கப்பட்ட அண்டலூசியாவைச் சேர்ந்த அறிஞர், கவிஞர் மற்றும் விஞ்ஞானி (கி.பி. 810 – 887). பறத்தலைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பறவைகளின் சிறகுகளாலான ஆடைகளையும் இறக்கைகளையும் உடலில் பொருத்திக்கொண்டு செங்குத்தான பாறைகளிலிருந்து குதித்துப் பறக்க முயற்சித்திருக்கிறார்.

2. ஜமி’ அல்-ஃபனா – மொராக்கோவின் மர்ரகேஷ் நகரில் இதே பெயரைக் கொண்ட சதுக்கத்தினருகே அமைந்திருக்கும் பிரதான மசூதி.

3. ’அந்தர் – ஏமேனில் வாழ்ந்த சரித்திரப் புகழ்பெற்ற கவிஞர் அந்தரா இப்ன் ஷத்தாத் பற்றிய குறிப்பு இது. அவருடைய வீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் உடன்பிறந்தாரின் பிள்ளையான ஆப்லா மீது கொண்டிருந்த அன்புக்காகவும் போற்றப்பட்டவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர், அபிசீனிய அடிமைப் பெண்ணொருத்திக்கு மகனாகப் பிறந்தார், தொடக்கத்தில் அவமானப்படுத்தப்பட்டாலும் அவருடைய வீரதீர செயல்களும் தைரியமும் அவரது இனக்குழுவான ‘ஆப்ஸின் முன்னேற்றத்துக்கு உதவின. பிற்காலத்தில், அவருடைய பெயரைக் கொண்டு மாபெரும் கதையாடல்கள் உருவாகின, உண்மையான சரித்திரத்தோடு பல்வேறு புனைவுகளும் சேர்ந்து அவரொரு மகாபுருஷராகச் சித்தரிக்கப்பட்டார்.

4. ஸெய்த் – வடக்கு ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பானு ஹிலால் என்கிற இனக்குழுவைச் சேர்ந்த அபு ஸெய்த் அல்-ஹிலாஹ் பற்றிய குறிப்பு. இங்கும், அராபிய வாய்மொழிக்கதைகளில், அவருடைய வீரதீர சாகசங்களைப் பற்றிய ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன.

5. வக் வக் – ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் குறிப்பிடப்படும் பழம்பெரும் தீவு. மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவும், மாயமந்திரங்களின் உதவியின்றி யாரும் அங்கு செல்ல முடியாதென்றும் சொல்லப்படுகிறது.

6. அபு அல் தர்தா – எட்டாம் நூற்றாண்டு ஈராக்கில் வாழ்ந்த துறவி

7. அல் திர்மிதி – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பெர்சிய அறிஞர் அபு ‘ஐசா அல்-திர்மிதி பற்றிய குறிப்பு. நபியின் வார்த்தைகளைக் குறிப்பெடுக்கும் ஹடித்தைச் சேகரித்தவர்.

Comments are closed.