துளசி கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (34)

அன்றலர்ந்த மலர்

எதிர்பாரா தருணத்தில்
பழைய கதவு ஒன்று திறந்துகொண்டது
தூரத்தில் சிறுவன் ஓடியபடி
முன்னால் சென்ற அம்மாவைத் துரத்தல்
நிர்தாட்சண்யமான மறுப்பு, கண்டிப்பு
நின்று அம்மா பேசிய சொற்களில்
பரிதவிப்பு, கெஞ்சுதல், கொஞ்சல்
எதுவுமே அம்மாவை திருப்திப்படுத்தவில்லை
அப்பா அறைக்குள் போகும்வரை
நிறுத்திவிட வேண்டும் என்ற வேகம்
வாசல் தாண்டின அடுத்த நொடி தளர்ந்துபோனது.
எதிரே மனைவி புகார்பட்டியலோடு
எட்டிப் பார்த்தேன், கதவோரம் மகள் நின்றிருந்தாள்
மிரட்சியோடு. எழுந்துபோய் குழந்தையை
வாரிச் சூடிக்கொண்டேன்,
தவறுகள் செய்வதே குழந்தைக்கழகு.

(நித்துவுக்கு)

பின்னிரவில் வீடு திரும்பும் பெண்

பிரிபிரியாய் இழைந்துபோகும் காற்றில் முகம்கொடுத்து
ஹெட்போனில் காது பொருத்தி
தாழ்தளப் பேருந்தின் தூரத்து மூலையில்
இருள்குடை விரித்த சாலையைப் பார்த்துவரும் பெண்ணை
நீங்கள் அறிந்திருக்கலாம்.
குழந்தைகள் தூங்காமல் காத்திருக்கலாம்
மாலை பெய்த சிறுமழையில்
உலர் துணிகள் நனைந்துபோயிருக்கலாம்
வாங்கப்படாத ரெஜிஸ்டர் தபால்கள்
கதவோரம் கேஸ் சிலிண்டர்கள்
விடாது அழைத்திருக்கக்கூடிய நீண்டகால தோழி
பிதுங்கி வழியும் பழைய பேப்பர்
எல்லாம் அவளுக்காகக் காத்திருக்கலாம்.
பாதியில் நிற்கும் கணினி நிரல்கள்
செய்ய காத்திருக்கும் உதவிகள்
அழைப்புக்கு ஏங்கியிருக்கும் அம்மா
எடுத்துச் செல்லவேண்டிய காகிதங்கள்
எல்லாமும் ஞாபகம் வரலாம்.
காதுக்குள் முயங்கிய இசையும் உடல்சோர்வும் பிணைய
சட்டெனத் தன் இருப்பு மறந்து
கணநேரம் துயில் மறைக்க
தூரத்து நட்சத்திரங்களும் நானும்
அவள் கவலைகளை வாங்கிக்கொண்டோம்.
சரியான பேருந்து நிறுத்தத்தில் அவள் இறங்குவது
இனி எங்கள் பொறுப்பு.

••••

Comments are closed.