தெளிநீர்க் கைமணலாய் கரைந்தொழுகும் சொற்கள்… (தேன்மொழிதாஸின் கவிதைகளை முன்வைத்து) — காளிங்கராயன்

[ A+ ] /[ A- ]

தேன்மொழிதாஸ்

தேன்மொழிதாஸ்

அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவத்தில்லை.

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை.

-ஜென் கவிதை (எம்.யுவன்)

அறிவியலின் கொடுங்கரத்தால் இயற்கையைப் புறந்தள்ளிவிட்டு அற்ப வாழ்வில் திளைக்கும் நவீன கான்கிரீட் மனிதக்கூட்டம். வளர்ச்சியின் பெயரால் அணு உலைகளும் மீப்பெரும் கட்டுமானங்களும் சாயமும் ரசாயனங்களும் மண்ணையும் நீரையும் காற்றுவெளியினையும் நஞ்சாக்கி எதிர்வரும் தலைமுறைகளுக்கு வாழத்தகுதியற்ற ஓர் புவனத்தைக் கையளித்துவிட்டுச் செல்வதோடல்லாமல் இயற்கையுடன் இயைந்து பெருவாழ்வு வாழ்கின்ற காட்டுயிர்களின் புறச் சூழலையும் சீர்குலைத்தபடி நிற்கும் இன்றைய நவீன மனித வாழ்க்கை.

இத்தகைய சூழலில் இயற்கையைப் பாடுவதென்பதே சூழலியல் செயல்பாட்டின் ஒரு முதன்மைப் பகுதியாகி விடுகிறது. இங்கே, வளர்ச்சியினிடத்தில் இயற்கையை முன்வைக்கும் தேன்மொழிதாஸின் கவிதைகள் நவீன மனித வாழ்வின் புறக்கணிக்கவியலா ஓர் அரசியல் செயல்பாடாகவும் அமைந்துவிடுகிறது.

தேன்மொழியின் கவிதைகளை வாசிக்கையில் அவை பசுமை சூழ்ந்த பிரமாண்ட மலையொன்றின் ஆழ்ந்த மௌனத்தையும் கடலலைகளின் சீற்றம் மிக்க ஆர்ப்பரிப்பையும் ஒரு தாளகதியில் நமக்குள் இசைக்கத்தொடங்குவதை உணரமுடிகிறது. இயற்கையையும் மொழியையும் மிகத்தீவிரமாக நேசிக்கும் தேன்மொழி அவற்றினாலேயே ஆசீர்வதிக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஓர் கவியாக மிளிர்கிறார்.

தேன்மொழியின் மரபானது பசிய இலைகளின் சாறுவழியும் தமிழ்த் தொல்குடிகளின் திணைமரபு. மலைபடு குறிஞ்சியும் காடுறை முல்லையுமே கவியின் வாழிடமாகக் கவிதைகள் உருப்பெறும் களனாக எப்பொழுதும் அமைந்துவிடுகிறது. தனது துயரங்களை நோக்காடுகளை மகிழ்வினை காதலை காமத்தை தனிமையின் வெம்மையை… என எல்லாவற்றிலும் இயற்கையின் பேரிருப்பினைக்காணும் கவிமனம் சங்ககாலப் பாணர்/பாடினிகளுக்கே உரித்தான தனித்த பண்பாகும். புறக்கணிக்கப்பட்ட காதலின் கடுவலியில் இரவுகளின் உலைக்கல்லில் கனன்றெரியும் நினைவுகளினூடாக தேன்மொழி பாடும் சில கவிதைகள் ’நள்ளென்றே யாமம் சொல் அவிந்து/ இனிது அடங்கினரே மாக்கள்..எனும் பதுமனாரின் நூற்றாண்டுகளுக்கு முந்தைய துயரம் மிக்க அரற்றலை நினைவுறுத்துகிறது.

தமிழில் தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவாகி வந்த புதிய அலையின் தலித் மற்றும் பெண் கவிஞர்கள் பழகிய மொழியையும் சொற்களையும் உடைத்துப் புதிதான மொழியமைப்பின் பல்வேறு கூறுகளை உருவாக்கினர். சான்றாக மதிவண்ணனின் மொழி நீதிக்கான சீற்றத்தின் மொழி, என் டி ராஜ்குமாருடையது மாந்திரீகத்தின் புதிர்மொழி, சுகிர்தராணியின் மொழி வலுமிக்கதொரு ஆதிக்க எதிர்ப்பின் மொழி…. இங்கே தேன்மொழியினுடையது இயற்கையின் தொல்மொழியாக இருக்கிறது. தெளிநீரின் அடியாழத்தில் நாம்பிய கைமணல் மேலெழும்பி வரவரக் கரைந்தோடும் விந்தையாக காலாதீதத்தின் பாசிபடிந்த தேன்மொழி எனும் இன்றைய நவீனகவியின் சொற்கள் நமது கைகளிலிருந்து நழுவி தமிழ்ப் பெருநிலத்தின் இனக்குழு வடிவம் கொள்கின்றன.

கருநெல்லிக் கண்கள், கன்மலையின் சினம், நீல் ஆம்பல் ஆழ்ந்த, கருநீல அமலைப்பூ, நெய்க்காளான்புற்று, நினைவுகள் தீம்பூ….போன்ற சொற்றொடர்கள் ஈராயிரம் ஆண்டுகள் நீளச்சென்று குறுந்தொகைப் பாடல்களின் சொற்சேர்க்கையில் பொருந்தி நின்று காலவெளி மயக்கத்தில் நம்மைத் திளைக்க வைக்கக்கூடும். கேளையாடுகளின் குளம்படி வலுவினை, மலை நாவல் பழங்களைப் போன்ற இருளை, வெள்ளரிபடரக் கொம்புகளாக்கப் பட்ட தகப்பன்களின் கால்களை, தூக்கி எறிந்தவனின் விரல் ரேகைகளை நினைவு வைத்திருக்கும் கருங்கல்லை, மழைக்காற்றில் பெருகிவரும் மருதாணிப்பூக்களின் வாசத்தை, மான்கொம்புகள் தென்படும் பாதைகளை, காட்டுப்பூக்களின் ரத்த நாளங்களில் ஊறிய முத்ததை…எனப் பெரும் கானகமொன்றின் அமைதியினுள் உறைந்திருக்கும் பலப்பல ரகசியங்களை உண்ணிப்பூக்களின் கரிய கனிகளிலிருந்து தான் உருவாக்கிய மொழியினூடாகவே நமது செவிப்புலனில் மெல்லக் கசியவிட்டு முன்றில் பறவையாக மறைந்து விடும் கவி தேன்மொழிதாஸ்.

எமலி டிக்கின்ஸனோடு தேன்மொழியின் கவிதைகளை ஒப்பிட்டிருந்தார் கவிஞர், விமர்சகர் இந்திரன். உண்மைதான். எமலியினுடையது தனிக்குயிலின் துயரொலி. தனியறையின் குறையிருளில் இருந்துகொண்டு சாளரங்களின் வழியாக இவ்வுலகைக் கண்டவர் எமலி. தேன்மொழியோ மலங்காடுகளின் முகட்டில் தனது பெருஞ்சிறகினைக் காற்றில் விசிறி மிதந்தலையும் ராஜாளி. கானகத்தின் தேவதை. இருவருமே இயற்கையின் காதலர்கள். அன்பின் யாசகர்கள். தனது மெல்லிய துயர் தோய்ந்த இறகுக் குரலால் மானுடப்பேரன்பின் மகத்துவத்தைப் பாடியவர் எமலி. இங்கே தேன்மொழியும் ஆயிரமாயிரம் துரோகங்களாலும், புறக்கணிப்புகளாலும், ஏமாற்றங்களாலும் கடும் வாதைகளுக்கு உட்பட்ட பின்னருங்கூட இறுதிவரை குழம்பிச்சாகும் அன்பினையே கைக்கொள்கிறார். அன்பிற்கென நடப்பதே இவ்வுலகின் வலிமையான போராட்டமென்கிறார். முடிவிலியான எனதன்பை நீ / புதைக்க விரும்பும் இடம் எதுவாக இருக்கட்டும் / இயற்கைபோல் தனித்தேகிடக்கும் / எனது மரணம் சமனிலி… என்கிற தேன்மொழியின் வெதுவெதுப்பான கண்ணீர்த் தடமெங்கிலும் உறைந்திருக்கிறது அடர்கானகமொன்றின் தூய்மையான பச்சையம். தான் உயிராய் நேசிக்கும் மொழி அழிக்கப்படும்பொழுதும், இனப்படுகொலைகளின் போதும் உருக்கொள்ளும் தேன்மொழியின் சீற்றம் மிக்க சொற்கள்கூட காதுகள் அலைபட கால்கள் அகன்று தும்பிக்கை உயர்த்திப் பிளிறியவாறு வனப்பகைவரை விரட்டிவரும் மதவையின் (பெண்யானை)பேருருவாகவே எனக்குள் தோற்றங்கொள்கிறது.

முற்றிலுமாகக் காடுகளைந்து பல்லாயிரம் ஆண்டுகளும் மைல்களும் கடந்து இன்று கான்க்ரீட் க்யூபுகளின் தணுமைக்குள் உறைந்துபோயிருக்கும் நாம் குறைந்தது சச்சிதானந்தனின் நினைவில் காடுள்ள ஓர் மிருகமாக மாறிவிடுவதே தொடர்ந்து மனிதனாக உயிர்ச்சூடு மிக்க இருப்பினை நமது உணர்த்தும் செயலாகும். காட்டுச்செடிகளை நரம்புகளாகப் பெற்ற தேன்மொழி காட்டின் பாடலைப் பாடும் உடலினையும் மனதைக் குடையெனத் திறக்கும் தாவரங்களையும் ஓர் ஆதிவாசியாய் நமக்குப் பெற்றுத் தருகிறார். அந்த வகையில் முதற்கனலைக் கண்டெடுத்த மூதாதையரை முத்தமிட்டு வணங்கும் தேன்மொழியிடம் எப்போதுமிருக்கும் முற்றுப்பெறாத ஓர் பெருங்காடு. அவ்வனத்தினுள் காலமெல்லாம் பேசிப்பேசித் தீராக் காதல் குறித்த, காமம், துயரம், அன்பு…எனும் மானுடப் பொதுமைகள் குறித்த தேன்மொழியின் பாடல்கள் வனப்பூக்களின் காதலை தமது கால்களில் மகரந்தமாய்ச் சுமந்து பறக்கும் தேனீக்களில் ரீங்கரித்தவாறு பசுங்காற்று வெளியெங்கும் அலைவுறும்.

••••

Comments are closed.