தோற்றம் மறைவு (கவிதைகள் ) / ப.மதியழகன்

[ A+ ] /[ A- ]

download (26)

1

இந்த இரவு மிகவும்
துக்ககரமானது
அதிர்ஷ்டத்தின் கதவுகள்
என் வரையில் திறக்கப்படவில்லை
இலைகள் சருகுகளாகும் போது
காலடியில் மிதிபடத்தான் செய்கிறது
வேருக்கு எதிராக இலைகள் எங்கேயாவது
போராட முடியுமா
ஆயுள் முழுவதும்
உடலின் தேவைகளைத்தானே நாம்
பூர்த்தி செய்து வருகிறோம்
கடவுள் சென்ற பாதையில்
வேறு காலடிகள் காணப்படுவதில்லை
எனக்கு முன்னே உள்ள
பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன
இருளின் கோரப்பிடியில்
நிற்கதியாய் நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை எதிர்ப்பவர்கள்
என் பலவீனத்தையறிய
இடங்கொடுத்துவிட்டேன்
வாழ்க்கைப் பந்தயத்தில்
ஜெயித்தவர்கள் கொண்டாடப்படுகின்றனர்
தோற்றவர்கள் முயற்சியைக் கைவிட்டு
விதியை நொந்து கொள்கின்றனர்
கனவான்கள் ஏழைகளிடம்
கருணை காட்டினால்
இன்று நான் கையேந்த நேர்ந்திருக்காது
மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால்
மனிதர்கள் தற்கொலை
செய்து கொள்வதைத் தவிர
வேறுவழி இல்லை
ஞானியர்கள் கூட
உடலைவிட்டுச் செல்ல
தயக்கம் காட்டுகின்றனர்
உலக சட்டதிட்டங்களால்
ஆன்மாவை சிறைப்படுத்த முடியாது
என்பதால் தான் நான்
இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

2

ஆன்மாவின் பாடல்களை
யாராவது கேட்க நேர்ந்தால்
அவர்களால் அழுகையை
அடக்க முடியாது
அடியாழத்திலிருந்து கிளம்பும்
அந்த ராகம் உயிர்களின் மேல்
அன்பைப் பொழிகிறது
உதடுகளிலிருந்து வெளிப்படும்
வார்த்தைகள் உச்சரித்தவுடன்
மரித்து விடுகின்றன
சூரியன் உதித்த உடனே
ரோஜா இதழில் படிந்துள்ள
பனித்துளி விடைபெற்றுச் சென்றுவிடும்
இந்த உலகம் அமைதியை
தொலைத்து விட்டது
சத்தமற்ற சில நொடிகளைக்கூட
மனிதனால் சகித்துக் கொண்டிருக்கமுடியாது
மற்றவர்கள் வழிவிடுவார்கள்
என எதிர்பார்த்தால் நாம்
காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும்
கல்லறைத் தோட்டத்தில்
காலங்களின் சமாதி
இருந்ததே தவிர
அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின்
பெயர்கள் பொறிக்கப்படவில்லை
கடல் நடுவில் என்
எண்ணப்படகு அலையில்
சிக்கித் தவிக்கிறது
காதலில் வீழ்ந்த என்னை
மண்மகள் முத்தமிட்டுச்
சொன்னாள் காதலின் பாதை
மரணத்தில் முடிகிறதென்று
அதலபாதாளத்தில் வீழ்ந்து
கொண்டிருந்த நான்
மரக்கிளையைப் பற்றினேன்
கடவுளை நம்பி கைப்பிடியைத்
தளர்த்தினேன் என் கபாலம் சிதறியது
அவ்வோசை கடவுளுக்கும் கேட்டிருக்கும்.

3

கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறோம்
என்று சொல்லிக் கொள்பவர்கள்
நான்கு பேர் நம்ப வேண்டும்
என்பதற்காகவே இப்படி
நடிக்கிறார்கள்
கடவுளின் பெயரால்
வெகுஜனத்தை சுலபமாக
அடிமைப்படுத்தலாம் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
கடவுளுக்கு முன்னால்
கொசுவைவிட மனிதன்
மேலானவனா அப்படி நினைத்தால்
அவன் கடவுளே அல்ல
கண்ணுக்குப் புலப்படாத
சட்டமொன்று இம்மண்ணில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சாக்ரடீஸுக்கு விஷமும்
இயேசுவுக்கு சிலுவையும் தந்தது
அந்த விதிதான்
மரத்தில் பல கிளைகள்
இருப்பதைப் போன்றது தான்
தெய்வச் சிலைகள்
ஆதாரம் வேரில் இருக்கிறது
என்பதை அறியாதவர்களா நாம்
கொடிய சிந்தனை
செயல்படுத்தாவிட்டாலும் கூட
அதுவொரு பாப காரியமே
வாழ்க்கையின் நிழலை நாம்
கவனிக்கத் தவறிவிடுகிறோம்
பேய்கள் தன்னைக் கண்டு
அஞ்சுபவனிடத்தில் தான்
ஆட்டம் காட்டுகிறது
அழிவுசக்திகளுக்கு எதிராக
கடவுள் உனக்குத் துணை
நிற்க மாட்டார்
பிரபஞ்ச அதிபதிக்கு மனிதன்
ஒரு பொருட்டேயில்லை
அரசனா ஆண்டியா
பூமியில் அவன் வாழ்க்கை எப்படிபட்டது
என்ற கோப்புகளை இறைவன்
படித்துப் பார்ப்பதே இல்லை
பரிசோதனை எலிகள்
எப்போது வேண்டுமானாலும்
மரணத்தை எதிர்கொள்ள
தயாராய் இருக்க வேண்டும்
ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இவ்வுலகத்தில்
சமரசத்தை கொண்டுவரும்
மரணச் சட்டம் புனிதமானதாக
கொண்டாடப்பட வேண்டும்.

4

துயரநீர்ச்சுழலில் எனது வாழ்க்கைப்படகு
அகப்பட்டுக் கொண்டது
இந்த உலகில் பிரவேசித்த
ஒவ்வொருவரும் பிறரைப் பார்த்து
தாமும் மாம்சத்தை திருப்திபடுத்தவே
கற்றுக் கொள்கிறார்கள்
போகத்தில் திளைக்கும் மக்கள்
கடைத்தேற்ற வந்த உத்தமர்களின்
அழைப்புக்கு செவி கொடுப்பதில்லை
இருண்டகாலங்களில் மாபெரும்
வெளிச்சத்தை நோக்கி நாம்
முன்னேற வேண்டும் என்ற
நோக்கம் அவர்களுக்கு இருக்காது
துக்க ஆறு ஒருபோதும்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிற்கு நம்மை
அழைத்துச் செல்லாது
அன்பெனும் ஓடையில்
நீந்திப் பாருங்கள்
துக்கத்தின் புதல்வர்கள்
இரட்சிக்கப்படுவார்கள்
வாழ்க்கைப் பாதையில்
எந்த மரணக்கிணற்றில்
தடுக்கி விழுவோம் என
யாருக்கும் தெரியாது
நரகத்தில் வீழ்ந்துபடுவோம் என்று
தெரிந்தும் போகத்தின் பாதையையே
தேர்ந்தெடுக்கிறது மனிதமனம்
வாலிபத்தில் நெறிமுறைகளைப்
பின்பற்றாமல் வயோதிகத்தில்
வானத்தைப் பார்த்து கதறுவதால்
பயனொன்றுமில்லை
துயரக் கடலில் நீந்துவோருக்கு
மரணமே விடுதலையை
பரிசளிக்கும்
உடல் நோய்களின் கூடாரம்
வியாதி ஒன்றே ஞானத்தைப்
பரிசளிக்கும்
சிலந்தி வலையில் சிக்கிய
பூச்சிகள் கடவுளிடம்
பாரத்தைப் போட்டு
முயற்சியைக் கைவிடுமா
காரிருள் பாதையில்
துணிந்து நடப்பவனுக்கு
விமோசனம் மிக அருகில்
இருக்கின்றது
வாழ்நாளில் ஆணிகளைநிறைய
சேகரித்துக் கொள்
நீ விருப்பப்பட்டாலும்
சவப்பெட்டியிலிருந்து
வெளியே வரமுடியாதபடி.

Comments are closed.