த.அரவிந்தன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (25)

சாப்பாட்டுத் தட்டுகள்

1.

சாப்பிடும்போது
குழந்தைகளின் கண்கள்
அப்பாவின் தட்டிலேயே இருக்கின்றன
கண்டுபிடிக்க வேண்டிய
ஆறு வித்தியாசங்களையும் அம்மா
அப்பாவின் தட்டிலேயே வைத்துவிடுகிறாள்
வறுத்த சிறிய மீன் – பெரிய மீன்
குட்டியோண்டு கேசரி – அதிக கேசரி
துக்குணோண்டு சுண்டல் – வட்டா நிறைய சுண்டல்
ரெண்டு தோசை – ஐந்து தோசை
மோர் – கெட்டித்தயிர்
சின்ன கிளாஸில் ஜூஸ் – பெரிய கிளாஸில் ஜூஸ்
எளிதில் கண்டறியும் குழந்தைகள்
அம்மாவின் தட்டைத் தேடுவதில்லை.

2.

ஓர் அப்பன்
இனி, இந்தக் கழுதைகள் எதிரில் சாப்பாடு போடாதே என்கிறான்
கனவு காணும்
ஓர் அப்பன்
தெரு நீளத்துக்கான மேஜையில்
நண்டு, இறால், மீன், கோழி, ஆடு என அத்தனையும்
சமைக்கப்பட்டு,
ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை என அத்தனை பழங்களும்
நறுக்கப்பட்டு, ஜூஸாக்கப்பட்டு
பெரிய குளிர்ப்பெட்டிகளில்
வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்கள் நிரப்பப்பட்டு
குழந்தைகளை இஷ்டத்துக்கும்
ஒரு நாள் சாப்பிடவிடுவேன் என
சபதம் எடுக்கிறான்
போதையில் வரும்
ஓர் அப்பன்
இடப்படும் சாப்பாட்டை எடுத்து
தெரு நாயை வலிய இழுத்து ஊட்டுகிறான்.

3.

விருந்தினர்கள்
யாராவது வர வேண்டும் என்று
குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்
கறிச்சோறு, ருசி என
எல்லாமே சற்று கூடுதலாகும்தான்.

4.

பிடிக்காத சாப்பாடுகள்
தட்டுகளின்
சுவர் விளம்புகளில்
ஏறி, நின்று
குதிக்கின்றன.

5.

குழந்தைகளுக்கு என்றுதான்
அப்பன்
ஆரஞ்சு மிட்டாய், கமர்கட்
இலந்தை வடை
எல்லாம் வாங்கி வருவான்
வீடு வந்ததும்
டேய்…. டேய்
எனக்குக் கொஞ்சம் தாடா என்பான்.

6.

ஆறியிருந்தாலும்
சூடாயிருந்தாலும்
சோறு
வெள்ளையாகத்தான் இருக்கிறது
அவளுக்குக்
கடிக்கக் கொடுக்கும் எலும்பு
சண்டை நாள்களில் மட்டும்
நான்
நாயாயென கடிக்க வருகிறது.

7.
சாப்பாட்டின் கரங்கள்
எப்போதும்
தந்திரங்களால் நீள்வது
சில நேரம் நஞ்சாக
சில நேரம் அன்பாக

8.

மீன் குழம்பு என்றால்
ஒரு பிடி சாதம் கூடுதலாக
உள்ளே போகும்
சிலருக்கு
ரேஷன் அரிசிக்குப் பதில்
நல்ல வெள்ளைச் சாதமெனில்

9.

ஒண்டியாக இருப்பவள்
அணைந்த அடுப்பில்
ஏறிப் படுக்கிறாள்
பூனையாக.

10.

தொண்டைக்குக் கீழே
ருசிக்காவிட்டால் என்ன
நாக்கின் நீளம்
பால்வீதியையும் கடந்தது
அடியெடுக்க
அடியெடுக்க நீளும்.

11.

தம்பி
நான்
வெங்காயத்தையும்
பச்சை மிளகாயையும் கடித்து
கஞ்சி சோறு சாப்பிட்டவன்
தீய்ந்து போன தோசையை
எடுத்துப் போகச் சொன்னதற்காக
சில்லி பரோட்டாவில்
என்னை
மிரட்டப் பார்க்காதே

12.

ருசிக்காத சோற்றை
இவன்
தட்டோடு எறிந்து
சுவரைச்
சாப்பிடச் சொல்லி
மிரட்டுகிறான்
இவள்
எப்போதும் நல்லவள்
சாப்பிட்டு
வாய் கழுவாத குழந்தையை
நன்றாகத் துடைக்கிறாள்.

13.

சாப்பாட்டின்போது
உருட்டப்படும் கதைகள்
பாம்பும் ஏணியுமாக
பரமபதம் ஆடுகின்றன

14.

எல்லோரும்
ஆடை உடுத்தும் வரை
அரை ஆடையே அணிவேன்
என்றுகூட
சொல்ல முயலுவேன்
எல்லாருக்கும்
உணவு கிடைக்கும் வரை
என்று
ஒரு பருக்கை அளவுக்குக்கூட
வாய் திறக்க மாட்டேன்.

••••

Comments are closed.