நாட்டுப்புற இசை ஆய்வாளர் கே.ஏ.ஜியை இழந்தோம் – வெ.வெங்கடாசலம்

[ A+ ] /[ A- ]

images (10)

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புற நிகழ்க்கலைத் துறையின் தலைவராக பணியாற்றிய கே. ஏ. குணசேகரன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை ஜன-17 அன்று முகநூலில் கண்டதும் மேடையில் இன்குலாப் எழுதிய ” மனுசங்கடா… நாங்க மனுசங்கடா ” என்னும் பாடலை உரத்தக் குரலில் அரங்கமதிர பாடி நிற்கும் அவரது சுறுசுறுப்பான உருவம் ஒரு கணம் கண்களில் வந்துபோனது. நாட்டார் வழக்காற்று இசை ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற கே.ஏ.குணசேகரன் பாடகர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என்னும் பன்முக ஆளுமையாய் வலம் வந்து கேஏஜி என்று சுருக்கமாய் எல்லோராலும் அறியப்பட்டவர். நாட்டார் மரபு இசை வடிவம் என்ற அறிமுகத்துடன் தம் பாடல்களை அவராலேயே நிறுவப்பட்ட தன்னானே இசைக்குழுவுடன் இணைந்து ஏற்ற இறக்கங்களுடன் கச்சேரி மேடைகளில் அவர் பாடப்பாட கேட்போர் அப்பாடல்களின் துடிப்பில் கரைந்து உறைந்துபோவர்.

இடதுசாரி அமைப்புகளின் கலை இலக்கிய மேடைகளில் ஒடுக்கப்பட்டோரின் குரல்களாக ஒலிக்கத் துவங்கிய அவரது இந்த நாட்டுப்புற இசைப் பயணம் தொண்ணூறுகளுக்குப் பின்பு தலித் கலை இலக்கிய வெளியில் மையம் கொண்டது. அதற்குப் பிறகு அவர்தம் எழுச்சியான குரல் தலித் கலை, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் மேலதிக ஈடுபாடுடன் ஒலித்தது. தன்னானே கலைக்குழுவை ஊர் ஊராக அழைத்துச் சென்று தலித் அரசியல் மேடைகளிலும், பொது வெளிகளிலும் நாட்டுப்புற இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அவர் முழங்கிய பாடல்கள் தலித் இளைஞர்களின் அரசியல் உணர்வை உசுப்பி விட்டன என்றால் அது மிகையாகாது.

நாட்டுப்புறப் பாடல்கள், நாடகம், திரைப்படம், எழுத்து என தமது கலை பரிமாணங்கள் வாயிலாக சாதிய பாரபட்சங்களால் / அணுகுமுறைகளால் தலித்துகள் அனுபவிக்க நேர்ந்திருக்கும் வலிகளை அம்பலப்படுத்தி வந்தது மட்டுமல்லாமல் ஓர் அத்துமீறலாக நவீன சமூக வெளிக்குள் நுழைந்து நமது மரபார்ந்த செழுமைகளைப் பாழ்ப்படுத்திவரும் அர்த்தமற்ற நவநாகரிகங்களை எள்ளி நகையாடியதுடன் அவ் அநாகரிகங்களுக்கு எதிராக தம் தனித்தன்மையான கலை இலக்கிய ஆயுதங்களை உயர்த்திப் பிடித்து களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

ஒரு தலித்தின் தன் வரலாறாக அவரால் எழுதப்பட்ட “வடு” நாவல் தமிழ் இலக்கிய ஆளுமைகளால் பரவலாக பேசப்பட்ட நாவலாகும். “பலியாடுகள்”, “தொடு,” “மழி”, “மாற்றம்” உள்ளிட்டு மற்றும் பிற நாடகங்கள், நாட்டார் கலை மரபு சார்ந்த தொகுப்பு நூல்கள், தலித் அழகியலை எடுத்தியம்பும் கட்டுரைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அவற்றை தமிழ் கலை இலக்கிய வெளிக்கான தமது பங்களிப்பாக விட்டுச் சென்றுள்ள அக்கலைஞர் இன்று நம்முடன் இல்லை. சாகா வரம் பெற்ற அவரது கலை வடிவங்களும் அம்சங்களும் சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வியலை பேசும் சாட்சியங்களாக நம்முன் எப்போதும் நடமாடிக்கொண்டே இருக்கும் ; வாழ்ந்துகொண்டே இருக்கும். அக்கலை அம்சங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதில் நமக்கிருக்கும் பொறுப்பை உணர்வதுவே கேஏஜி என்னும் அம்மாபெரும் கலைஞனுக்கு நாம் செலுத்தப்போகும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

**********

Comments are closed.