-நா.வே.அருள் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (2)

குதிரைகள் குத்தகைக்கு அல்ல

குதிரைகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டாம்

சவாரிகளைச் சமாளிக்க முடியாது

உனது சொற்களை

உனது செவிகளில் விழவைப்பதற்கான

கவிதைக் கருவிகளைத்தான்

என் கைகள் முடைந்து கொண்டிருக்கின்றன

மேலும்

உனக்கொன்று சொல்ல வேண்டியிருக்கிறது

உனது உதடுகளுக்குள் பொருத்தப்பட்ட

ஒலிவாங்கியிலிருந்து வழியும் வார்த்தைகள்

என் இதயத்தில் விழுகிறபோது

ஏதோ ஓர் விலங்கின் சாண வீச்சங்களாய்த்

தரையில் சிதறிக் கிடக்கின்றன

அவற்றை ஓவிய உச்சப் பிசிறல்கள் என்றுப்

பிளிற்றிக்கொண்டிருக்கிறாய்

யானையின் கால்களால்

பட்டாம் பூச்சிகளை மிதிக்கிற கலையை

உனது சுயப் பிரதாபங்கள்

சொல்லிவிடுகின்றன.

குதிரைகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டாம்

சவாரிகளைச் சமாளிக்க முடியாது.

கொத்து குண்டுகள்

எனது பேனாவை

ஏன் எடுத்து உதறுகிறாய்

சுவரெங்கும்

குருதித் துளிகள்

மின்சாரக் கம்பியை

வெறுங்கால்களுடன்

தரையிலிருந்து

தொட்டுப் பார்க்க விழைகிறது

எனது கவிதைக் கணங்கள்

மிகப்பெரிய கோபுரமொன்று

சாக்கடையில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது

யாரால் தூக்கிவிட முடியும்?

பேரரசே

உங்கள்

மந்திரிமார்களை

அவசியம் கேட்டுத் தொலையுங்கள்

மாதம் மும்மாரி பொழிகிறதா?

மேலும்

தனிக் குடை ஒன்றைத்

தயாரித்துக்கொள்ளுங்கள்

எங்கள்

கவிதைத் தோலாலான

கறுப்புக் குடை

பேரரசே

குடியில் மூழ்கிக் கிடக்கிறது

குடியரசு

இதனால் சகலமானவர்களுக்கும் என்று

முரசறைகிறது

உங்களின் ஓர் உளறல்.

அதனாலென்ன?

மெள்ளப் புரள்பவர்களுக்கு

மேலும் ஒரு போதை

உங்களின் ஆணைக்கு

சாராயக்கடை என்று பெயர் வைக்கலாம்

அல்லது

இனிக் கவிதைகளை

பார்களில் வாசித்துவிடலாம்.

துக்கித்துப்போன

எனது சொற்களை

எந்தக் குப்பை லாரியில்

கொண்டுபோகலாம்?

புழுதியில் கிடந்துழலப்

பிரியப்படும் வீணை

பாவம் பாரதி

சக்கரவர்த்திகள்

சண்டைக்கு அழைக்கிறார்கள்

சந்தோஷம்

போருக்குப் போகிறவர்கள்

சாதாரணப் பிரஜைகள்தான்

வெகு சாதாரண

வெட்கங்கெட்டப் பிரஜைகள்.

கட்சியொன்று தொடங்கலாம்

கொடிமரங்களில் கட்டிவைக்க

ஏராளமான கோவணங்கள்

நாங்கள்

தமிழை வாசித்துத்

தமிழையே சுவாசிப்பவர்கள்தாம்

அதற்காக

அட்சயப் பாத்திரங்களைத்

தூக்கிக்கொண்டு

பிட்ஷாந்தேகி என்று

உன் பின்னால் வர முடியாது

அவனுடன் போகும்போதே

ஐயுற்றோம்

சிங்கராஜாவின் நரிநடை

இனி கூட்டம் போடு

சேராது

கூட்டம்.

***

Comments are closed.