”நிலமற்றவனின் குரல்” “ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டாரள்” சிறுகதைத் தொகுப்பு குறித்து பாலகுமார் விஜயராமன்

[ A+ ] /[ A- ]

download (9)

ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசித்து வரும் பழங்குடியினர், சாந்தால் இன மக்கள். கனிம வளங்களாலும், இயற்கை செல்வங்களாலும் சூழப்பட்ட தொன்மையான பண்பாடுகள் கொண்ட இந்த இனக்குழு, நகரமயமாதலின் பொருட்டும், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன் பொருட்டும் எவ்வாறு தங்கள் மூதாதயர்களின் பூமியிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள், தங்கள் பூமியின் வளங்களை அபகரித்துச் செல்லும் பெருமுதலாளிகள் சிந்திச் செல்லும் சில்லரை கரித்துண்டுகளைப் பொறுக்கி அல்லது திருடி விற்கும் உதிரிகளாக எப்படி மாறிப் போயிருக்கின்றனர் என்பதை சிறுகதைப் புனைவுகளாக உருவாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர். “ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்” அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பத்து கதைகள் உள்ள இந்த தொகுப்பில், பெரும்பான்மையான கதைகளில் கதைசொல்லியும், ஒரு பாத்திரமாக, கதை மாந்தர்களான சாந்தால் இன மக்களுடனே பயணித்து அவர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கிறார்.

2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, சாமானியன் பார்வையில் தொட்டு எழுதப்பட்ட கதை, “அசைவம் சாப்பிடுகிறார்கள்”. ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடி இனமான சாந்தால் பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பம், பணி மாறுதல் காரணமாக குஜராத்தின் வதோதராவிற்குக் குடிவருகிறார்கள். அங்கே தங்களுக்குப் பிரியமான மாமிச உணவை சாப்பிட முடியாமல் அவர்கள் தவிப்பதும், நாளடைவில் சைவ உணவிற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதன் மேன்மைகளைப் பேசுவதுமாகச் செல்லும் கதை.

ஊர் முழுக்க கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இருக்கும் முஸ்லீம் குடும்பத்தை, கலவரக்காரர்களிடமிருந்து அங்குள்ள பெண்கள் சேர்ந்து காப்பாற்றும், கொஞ்சம் நாடகத்தன்மையான பகுதியும் உண்டு. இறுதியில், மீண்டும் அவர்கள் பணிமாறுதலில் ராஞ்சிக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கு தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வே திரும்புகிறது. அதாவது மீண்டும் தங்கள் வீட்டில் அசைவம் சமைக்க ஆரம்பிக்கத் துவங்கும் போது தான் அவர்கள் தங்கள் இயற்கையான வாழ்விற்குத் திரும்புகின்றனர் என்று முடிகிறது கதை.

பார்த்துப் பார்த்து, தேவைக்கதிகமாய் உரமிட்டு பராமரித்து வளர்த்த செல்ல மரம் காய்க்காமல் போவதும், வழியில் தானாய் வளரும் கன்று தனக்குத் தேவையான சத்துகளை தேடித் தேடி எடுத்து நல்ல தரமான பழ விருட்சமாய் வளர்ந்து நிற்பவும் அதே போன்ற தன்மையுடைய மகன்களையும், அவர்களின் தாய் வழி குடும்பத்தையும் பற்றிய கதை “மகன்கள்”


சாந்தால் இனத்து சிறுமிகள் பணத்திற்காக விற்படுவதையும், சிறுவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு தண்டிக்கப்படுவதையும், சாதர் மருத்துவமனையின் இளம் மருத்துவரின் பார்வையில் சொல்லப்பட்ட கதை “ஏற்றத்தாழ்வு இல்லை”

தனது அந்தந்த நேரத்தேவைக்காக எதையும் செய்யத்துணியும், முன் யோசனை இல்லாத, ஓர் ஆதிவாசி பெண்ணைப் பற்றிய சித்திரம் “பகையாளியோடு உணவு அருந்துதல்”

தன் மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் சராசரி கணவன், முன்னாள் காதலனின் கருவை சுமந்து கொண்டு அவனுடன் சேர்வதற்காகக் காத்திருக்கும் மனைவி, உடலெங்கும் நீலம் பூத்துப் பிறந்த குழந்தையின் மரணம், அது அவர்களுக்குள் ஏற்படுத்தும் மனமாற்றம் ஆகயவற்றை சொல்லும் கதை “நீலம் பூத்து பிறந்த குழந்தை”

எதேச்சியாய் நிகழும் ஒரு குழந்தையின் மரணம், அதுவரை அந்த ஊரின் வளர்ப்புத்தாயாய் போற்றப்பட்ட ஒரு மூதாட்டியின் கடந்த காலத்தை தோண்டிப் பார்க்க வைக்கிறது. அப்பாவியான அவளுக்கு “சூனியக்காரி” முகமூடி அணிவிக்க்கப்படுகிறது. அவளது தீயூழ் கொடுங்கனவாய்த் துரத்த, மீண்டுமொரு கண்காணாத தேசம் நோக்கிச் செல்கிறார் அவர். இது “பஸோ – ஜி” என்னு சிறுகதை

நோய்மையினால் அவதிப்படும் மகனை வீட்டில் விட்டு விட்டு, அன்றாடப் பிழைப்பிற்காய் நகரத்திற்கு வேலைக்கு வரும் கிராமத்துத் தாய், வேலையிலும் இருப்புக் கொள்ளாமல், பாதியில் திரும்பவும் முடியாமல், ஒருவழியாய் அவன் விரும்பிக் கேட்ட ஜிலேபியை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேரும் போது மகன் பிணமாய்க் கிடக்கிறான். அந்தத் தாயின் மனவோட்டத்தையும், அவளது பயத்தையும், கொடுங்கனவையும், துர்சகுனத்தையும் சொல்லும் கதை “ஆர்வம் அறிதல் மறைவு”

“அவள் ஒரு விலைமகளைத் தவிர வேறில்லை” – நகரின் புகழ்பெற்ற சிவப்பு விளக்குப் பகுதியிலுள்ள பெண்களின் மனவெளியை, அவர்களின் ஏக்கங்களை, நிதர்சனங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை படித்துக் காட்டும் கதை.

இத்தொகுப்பில் இறுதியாக உள்ள கதை “ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்”. ஆதிவாசி நடனக்குழுத் தலைவனின் குரலில் ஒலிக்கும் கதை இது. அவன், மிகப்பெரிய வி.ஐ.பி.கள் முன் தங்களது பாரம்பரிய நடன நிகழ்ச்சியை நிகழ்த்த அழைக்கப்படுகிறான். நல்ல அங்கீகாரமும், புகழும், பணமும் கிடைக்கும் தான். ஆனால், தங்கள் காலுக்கடியில் உள்ள பூமி பறி போகிற போது, தங்களைச் சூழ்ந்துள்ள வளங்கள களவாடப்படும் போது, தங்கள் வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டு, அகதிகளாய் விரட்டியடிக்கப்படும் போது, அதைச் செய்பவர்களை மகிழ்விக்க, அவர்கள் முன்னால் மானம் கெட்டு, மனதிற்கினிமையான நடன நிகழ்ச்சியை அவனால் எப்படி நடத்த முடியும்?

சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல், தங்களை ஆட்டுவித்து, தங்கள் உதிரத்தை உறிஞ்சுபவர்கள் பற்றி புகார் கொடுக்க, அதிகாரத்தின் உச்ச நிலையில் கருணை மிக்க ஒருவர் இருப்பார் என்று நடனக்குழுத் தலைவன் நினைக்கிறான். “ஆதிவாசிகள் இனி ஏன் நடனமாட மாட்டார்கள்?” என்று அவர் முன் மேடையில் பேசுகிறான். விளைவு…

”இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக, இத்தனை கட்டுப்பாடுகளை, தடைகளைத் தாண்டி, நெறிக்கப்படும் குரல்வளைகளில் இருந்து நாங்கள் எழுப்பும் ஓலம் எல்லாம், அனைத்து இடையூறுகளுக்கும் அப்பால் எங்கோ உயரத்தில் எங்கள் ஓலத்தைக் காதுகொடுத்துக் கேட்ககூடிய வல்லமை பொருந்திய ஒரு சக மானுடன் அதிகாரத்தில் அமர்ந்திருப்பான் என்ற சிறு நம்பிக்கையில் தான். எங்களை அலங்கோலப்படுத்தி, பரிகசிக்கும் இந்த புதிர் விளையாட்டின் இடைநிலைகளை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு கடந்துவிட்டால், அந்த சகமனிதனோடு சரிசமமாக அமர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களையும் பேச முடியும் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகும் தொடரும் இந்தப் போராட்டங்கள்.”

ஆனால் இந்த அதிகாரக்கட்டமைப்பில், சாமனியர்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் சகமனிதன் என்கிற ஒருவன் இல்லவே இல்லை. இங்கே எல்லாம் அதிகாரப்படிநிலைகள் தாம். இந்த அமைப்பு தனது தடித்த பழைய புத்தகத்தின் பக்கவரிசை எண் வாரியாகத்தான் சாமான்ய மனிதர்களை அளக்கும் என்ற மிகப்பழைய உண்மை அவர்களுக்குத் தெரியவரும் நாளில், தங்கள் வயதையையும் வாழ்க்கையையும் இழந்து சக்கையாகச் சுருண்டிருப்பார்கள். இருந்தும் அந்த சக்கைகளில் இருந்தும் மீண்டும் மீண்டும் புதிய தளிர்கள் துளிர்விட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அது தான், அதிகார மையத்திற்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்தத் தொகுப்பில் இருப்பதிலேயே மிகச்சிறிய கதை “புலம் பெயரத் தகுந்த மாதம் – நவம்பர்”. இந்தக் கதைக்காக இந்தப் புத்தகம் ஜார்கண்ட் மாநில அரசால் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதை எழுதிய எழுத்தாளர், மருத்துவர் ஹண்ஸ்டா தனது அரசாங்கப்பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

மத்தியபிரதேசத்து பர்கானா மலைக்குன்றுகளில் வசிக்கும் ஆதிவாசிகளான சாந்தால் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில், தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக, தங்கள் வீடு வாசல் நிலபுலன்களைத் துறந்து, மேற்கு வங்கத்திலுள்ள பர்தாமன் மாவட்டத்திற்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக புலம் பெயர்கின்றனர். வயிற்றுப் பசி நீக்கும் தின்பண்டங்களுக்காகவும், சொற்ப பணத்திற்காகவும் சாந்தால் இனப்பெண்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்று கோடிட்டுக் காட்டியிருக்கும் சிறிய கதை. சாந்தால் இன மக்களின் நிகழ்காலத் துயரங்களை புனைவாகச் சொன்ன கதை திரிக்கப்பட்டு, அவர்களின் இனத்தூய்மையை அவதூறு செய்வதாகப் பரப்பப்பட்டு, இப்பொழுது புத்த்கத்துக்கான தடையிலும், அதை எழுதியவருக்கான பணியிடை நீக்கத்திலும் வந்து நிற்கிறது.

ஹண்ஸ்டா தனது முதல் புத்தகமான “தி மிஸ்ட்டிரியஸ் எய்ல்மெண்ட் ஆஃப் ரூபி பாஸ்கி” நாவலுக்காக சாகித்ய அகாடமி “யுவ புரஸ்கார்” விருது பெற்றவர். அதனால் பொறாமை கொண்ட சக சாந்தால் இன எழுத்தாளர்களால் துவங்கிய சதி என்றும், ஹண்ஸ்டா சாந்தால் மொழிக்குரிய பிரத்யேக எழுத்துருவான “ஒல்சிக்கி”யை ஆதரிப்பவர் என்பதால், தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் ரோமன் எழுத்துரு ஆதரவாளர்கள் சேர்ந்து கிளப்பி விட்ட பொய் பிரச்சாரத்தின் விளைவு என்றும், இத்தடை குறித்து கருத்து நிலவுகிறது. எப்படியோ நெருப்பை அணையாமல் வைத்திருக்கும் வித்தை அதிகாரவர்கத்திற்குத் தெரிந்திருக்கிறது. தன் அவலத்தை எழுதும் ஒருவனுடைய எழுத்து சமூகத்தில் என்ன மாற்றத்தை நிகழ்த்த வேண்டுமோ அப்படியில்லாமல், எழுதியவனையே திருப்பி வந்து தாக்கக் கூடிய பூமாராங்காக மாற்றக்கூடிய கலையை அதிகாரத்தில் இருப்பவர்கள் நன்கு கற்று வைத்திருக்கின்றனர்.

இந்தத் தொகுப்பு, ஐ.ஐ.எம். அஹமதாபாத்தில் “நிறுவனங்களில் அதிகாரமும், அரசியலும்” என்ற பாடப்பிரிவில் கட்டாயப்பாடமாக தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழியில் அழகாக பொழியாக்கம் செய்திருக்கும் லியோ ஜோசப் அவர்களுக்கும், பதிப்பித்த எதிர் வெளியீடு நிறுவனத்தினருக்கும் வாழ்த்துகள்.

******

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் (சிறுகதைத் தொகுப்பு)

ஹண்ச்டா சௌவேந்திர சேகர்

தமிழில்: லியோ ஜோசப்

எதிர் வெளியீடு

பக்கங்கள்: 192

விலை: ரூ. 180

******

Comments are closed.