நீங்கள் இளையராஜாவின் ரசிகரா… இசையின் ரசிகரா..? B.R. மகாதேவன்

[ A+ ] /[ A- ]

images

தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி யாரேனும் ஏதேனும் நியாயமான சிறு விமர்சனத்தை முன் வைத்தால்கூட, பொம்மையைப் பறித்தால் அழும் குழந்தைகள்போல் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுவார்கள். பிஞ்சுக் கைகளால் சட் சட்டென்று நம்மை அடிப்பார்கள். குழந்தைகளைப் போலவே தமிழர்களின் உலக அனுபவமும் வெகு குறைவு என்பதால் எதையும் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. தமிழர்களின் இத்தகைய மனநிலை தெரிந்த பிறகும் சில உண்மைகள், சிலரால், சில நேரங்களில் சொல்லப்படுவதுண்டு. அப்படி ஓர் உண்மையைச் சொல்லும் முயற்சியே இது.

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுக்கும் லைஃப் ஆஃப் பை படத்தில் வரும் தாலாட்டுக்கோ பாம்பே ஜெயஸ்ரீயின் பிற தாலாட்டுகளுக்கோ இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள் மட்டுமே படிக்கவும். மற்றபடி, மூன்றாவது நிமிடத்தில் 17வது நொடியில் நான்காவது வரிசையில் இருக்கும் வயலின்காரர் இழுத்த இழுப்பு இருக்கிறதே… அங்கே நிற்கிறார் நம் ராஜா என்பதுபோன்ற பண்டித மிரட்டல்கள், உருட்டல்கள் என்னிடம் வேண்டாம். நான் இசையின் பெரும் ரசிகன்.

ராஜாவின் பாடல்கள் 80களில் ஆரம்பித்து தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்துத் தமிழர்களுடைய வாழ்க்கையின் பிரதான அம்சமாகவே கலந்துவிட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நட்பு, பிரிவு, பிறப்பு, இறப்பு, அன்பு, துரோகம், உற்சாகம், உரிமைக்குரல், ஆன்மிகம் என எதை எடுத்துக்கொண்டாலும் ராஜாவின் பாடல்களே பெரும்பாலான தமிழர்களுக்கு எல்லாமுமாக இருந்துவருகிறது. வெளிநாடுகளில் இந்தியாவை காந்தியின் தேசம் என்று அடையாளப்படுத்துவதுபோல் தமிழகத்தை இளையராஜாவின் தேசம் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல்லக்கூடிய அளவுக்கு ஆராதகர்களைப் பெற்றவர் இளையராஜா. சமீபகாலமாக அவருடைய இசையைப் பாராட்டி அதி பண்டிதத்தனத்துடன் தற்கொலைப்படை மனோபாவத்துடன் ஒரு ரசிகர் குழுமம் உருவாகி நிலைபெறத் தொடங்கியிருக்கிறது. அதற்குப் பின்னால் ஒருவித இனம் புரியாத பதற்றம் மிகுந்திருப்பதுபோலவே தோன்றுகிறது. நுட்பமான ரசனை உணர்வு கொண்ட ஒருவருடைய மனதில் இளையராஜாவின் பாடல்களுக்கு என்ன இடம் இருக்கக்கூடும் என்பதே இந்தக் கட்டுரையின் மையம்.

ராஜா மூன்றுவிதமான இசை மரபுகளோடு பரிச்சயம் கொண்டவர். முதலாவதாக அவர் பிறப்பால் பறையர் சாதியைச் சேர்ந்தவர். எனவே, நாட்டுப்புற/நாட்டார் இசை மரபு அவர் ரத்தத்தில் ஓடுகிறது. இரண்டாவதாக கர்நாடக செவ்வியல் மரபால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் அந்த செவ்வியல் ராகங்களை அடியொற்றி அமைந்தவையே. மூன்றாவதாக அவருக்கு மேற்கத்திய இசையுடனான பரிச்சயமும் உண்டு. இந்த மூன்று மரபின் அதி உயர்ந்த பாடல்களோடு ஒப்பிடுகையில் ராஜாவின் பாடல்கள் என்ன இடத்தைப் பிடித்திருக்கின்றன… அந்த மரபுகளின் நவீன வடிவமாகப் பரிணமித்திருக்கின்றனவா… பலவீனமான பிரதிபலிப்பாக இருக்கின்றனவா என்ற எளிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலே போதும். பல மயக்கங்கள் எளிதில் தெளிந்துவிடும்.

ராஜாவின் பாடல்களில் நாட்டுப்புற அம்சம் படு மோசமான முறையில் எடுத்தாளப்பட்டிருக்கும். அவருடைய முதல் பாடலான ’அன்னக்கிளியே உன்னைத் தேடுறேன்…’ என்பதில் ஆரம்பித்து ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்றே என்ற நாட்டுப்புறப் பாடலின் சாயலில் அமைந்த ’மாங்குயிலே பூங்குயிலே…’ என்ற ராஜாவின் அதி பாப்புலர் பாடல்வரை பல பாடல்களை எந்தவித நேர்மையும் இன்றித் தனது பாடலாகவே முன்வைத்திருப்பார். உண்மையில் அந்தப் பாடல்களின் நாட்டுப்புற வேர்கள் பற்றி பின்னாளில் அவர் ஒப்புக்கொண்டதைப் பெரிய விஷயமாகச் சொல்லவே முடியாது. அந்தப் படத்திலேயே அவை நாட்டுப்புறப்பாடல்கள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு அவர் எடுத்தாண்டிருக்க வேண்டும். இது நிச்சயம் பெரிய தவறுதான். இன்னொருவருடைய கதையைத் தன்னுடைய கதையாக வெளியிடுவது போன்ற நேர்மையற்ற செயலே இது.

அடுத்ததாக, அந்தப் பாடல்களின் நாட்டுப்புற அம்சங்களை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துப் பாடலாக்கியிருப்பார். பின்னணிக்குப் பயன்படுத்தியிருக்கும் இசைக்கருவிகள் நாட்டுப்புறப்பாடலின் கலை அழகைக் கெடுக்கும்படியாகவே இருக்கும். அதைவிடப் பெரிய தவறு அந்தப் பாடல்களுக்கு ரா-வான நாட்டுப்புறக் குரலைப் பயன்படுத்தாமல் திரைப்பட மெல்லிசைக் குரல்களைப் பயன்படுத்தியிருப்பார். இந்த மூன்றாவது தவறு எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. ராஜாவின் ஒட்டுமொத்த இசை வாழ்க்கையிலுமே நாட்டார் குரல்களை ஐந்து சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தவில்லை.

எஸ்.பி.பி., ஜானகி, சித்ரா, மலேசியா வாசுதேவன், மனோ வகையறாக்களுடைய குரல்கள் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றில் நாட்டுப்புறப் பாடகர்களின் எளிமையும் வசீகரமும் துளியும் கிடையாது. கிராமத்தானுடைய அழகு என்பது அவருடைய மேலாடை அணியாத திறந்த உடல், தலைப்பாக்கட்டு அல்லது தோளில் துண்டு, தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி, புழுதி படிந்த பாதம் இந்தத் தோற்றத்தில் மாடு மேய்த்தபடியோ, களை பறித்தபடியோ துணி துவைத்தபடியோ குல தெய்வக் கோவிலில் கும்பிட்டபடியோ இருப்பதுதான். கோட் சூட், டை ஷூ, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு முகத்துக்கு பவுடரும் லிப்ஸ்டிக்கும் பூசிக்கொண்டு எடுக்கப்படும் புகைப்படம் கிராமத்தானின் புகைப்படமாக இருக்காது. ராஜா தன்னுடைய நாட்டுப்புறப் பாடல்களுக்கு திரைப்பட மெல்லிசைக் குரல்களைப் பயன்படுத்தியதென்பது அப்படியான ஒரு ”அழகிய’ புகைப்படத்தைப் போன்றதுதான்.

அடுத்ததாக, நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய வடிவம் என்பது கானா பாடல்கள்தான். இளையராஜா முழுக்க முழுக்க கானா பாடல்களை ஒதுக்கிவிட்டிருக்கிறார். அந்தவகையில் தேவாவில் ஆரம்பித்து ஆலுமா டோலுமா அனிருத் வரை துள்ளல் இசையுடன் போட்டிருக்கும் பாடல்களே ராஜாவை எளிதில் புறமொதுக்கிவிடுகின்றன. பண்டித எதுகை மோனைகளைப் பகடி செய்வதில் ஆரம்பித்து, உயரிய தத்துவங்களை எளிய வார்த்தைகளில் சொல்வதில் ஆரம்பித்து, பாலியல் சார்ந்த அத்துமீறல்களை வார்த்தைகளிலும் தாளகதியிலும் கொண்டுவந்திருக்கும் கானா பாடல்களை நாட்டார்-செவ்வியல் தன்மையை எட்டிய பாடல்களாகவே சொல்லலாம். ராஜாவின் பாடல்களில் காதை எத்தனை கூர் தீட்டிக்கொண்டு கேட்டாலும் அந்தத் தடயங்களைக் காணவே முடிவதில்லை. அவர் பழங்கால நாட்டார் மரபில் வேர் ஊன்றியவராகவும் இல்லை. நவீன நாட்டார் மரபை முன்னெடுத்தவராகவும் இல்லை.

கர்நாடக செவ்வியல் இசை மரபைப் பொறுத்தவரை ராஜா அந்தக் கடலின் கரையோரமாக நின்று கால் நனைக்கும் சிறுவன் மட்டுமே. இதை அவர் தன்னடக்கத்துடன் சொல்வதுண்டு. ஆனால், உண்மையும் அதுதான். ராஜாவின் மிகப் பெரிய பலவீனங்களில் ஒன்று அவர் அந்த செவ்வியல் இசையை நோக்கியே தன் அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார். அதில் பரிதாபகரமாகத் தோற்றும்விட்டிருக்கிறார். வேர்ப்பிடிப்பும் அற்று, சிறகு முளைத்து நவீன வானில் பறக்கவும் முடியாமல் அந்தரத்தில் அலையும் இரண்டுங்கெட்டானாகவே அவருடைய இசை இருக்கிறது. சில ராகங்களில் சில பரிசோதனை முயற்சிகள் செய்ததைவைத்து மதிப்பிடும் கிம்மிக்குகளின் அடிப்படையில் பார்க்காமல் கர்நாடக செவ்வியல் மரபில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை ஒரு தடவையாவது கேட்ட ஒருவருக்கு ராஜாவின் பாடல்களின் இடத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

செவ்வியல் இசையைப் பொறுத்தவரையில் அப்படியெல்லாம் புதிதாகவோ அடிக்கடியோ சாதனைகளை யாராலும் செய்துவிடமுடியாதுதான் (தியாகராஜர் போல் இசைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தாலொழிய). இளையராஜாவுக்கும் இசைதான் தொழில் என்றாலும் செவ்வியல் நிலைக்கு உயரவேண்டுமென்றால் வேறுவிதமான மனோபாவத்துடன் இயங்கியிருக்கவேண்டும். திரைப்படத் தொழில் அதற்கு ஏற்றதல்ல. தெருவோரங்களில், ரயில் வண்டிகளில் பாடும் புறக் கண் தெரியாத கலைஞர்களின் குரலுக்கும் பாவத்துக்கும் கால் தூசி பெறாத மெல்லிசைக் குரல்களை வைத்துக் காலமெல்லாம் இயங்கிய ஒருவருக்கு செவ்வியல் என்பது கண்ணுக்கெட்டாத தொடுவானத்தைத் தாண்டிய ஒளிப்புள்ளியே.

ஜனனி ஜனனி… பாடலுக்கும் எந்தரோ மஹானுபாவுலு (டி.எம்.கிருஷ்ணா) பாடலுக்கும் நகுமோ ஓமோகனலே (மஹாராஜபுரம் சந்தானம்) பாடலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். கர்நாடக இசைப் பின்புலம் கொண்ட மோக முள் படத்தில் ராஜாவின் இசையைக் கேட்டவர்களுக்கு ஏக தந்தம் என்ற அவருடைய கர்நாடக இசைக்கோவையைக் கேட்டவர்களுக்கு அவர் எந்த அளவுக்கு பலவீனமான செவ்வியல் பாடல்களையே உருவாக்கியிருக்கிறார் என்பது புரியும்.

இளைய ராஜாவின் மேற்கத்திய இசைப்புலமையைப் பொறுத்தவரையில் அவருடைய சிம்ஃபொனி வெளியாகாமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டாலே போதும். கலைஞானி கமல்ஹாசன் சர்வதேச ஒப்பனைக் கலைஞர்களைத் தனது படத்தில் பயன்படுத்தினால் சர்வதேசத் தரத்தை எட்டிவிடமுடியும் என்று அபாரமாக யோசித்தது போலவே ராஜாவும் சர்வதேச ஸ்டூடியோக்களில், சர்வ தேசக் கலைஞர்களை வைத்து தனது நோட்ஸ்களை வாசிக்கச் செய்தால் போதும் என்று நினைத்துவிட்டார் போலும். அவருடைய மேற்கத்திய இசை முயற்சிகள் எல்லாமே அந்த உலகில் புன்முறுவலுடன் ஓரங்கட்டவேபட்டிருக்கின்றன. தமிழ்கூரும் நல்லுலகுக்கு ராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்கள் அனைத்துமே சிம்பொனிக்கள்தான் என்பது வேறு விஷயம். திருவாசகத்துக்கு அவர் உருவாக்கியிருக்கும் ஃப்யூஷன் அவருடைய கலை உயரத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறது. இருளும் ஒளியும் நர்த்தனமாடும் அதிகாலையில் யாருமற்ற பிரமாண்ட பிரகாரத்தில் பறவைகளின் ஒலி மட்டுமே பின்னணி இசையாக ஒலிக்க ஓதுவார்கள் காலத்தால் கைமாற்றித் தரப்பட்ட கணீர் குரலில் பாடும் தேவாரத்தின் நவீன வடிவம் என்பது எந்தவகையிலும் மூலம் தரும் உணர்வுக்கு அருகில் வரவே முடியாது என்றாலும் ஃப்யூஷன்கள் தரும் மகிழ்ச்சிகூட அதில் இல்லை. இரைச்சல் இசை ஆகாது.

மேலும் ராஜாவின் இன்னொரு முக்கிய குறை என்னவென்றால், அவர் தனது பாடல்களை திரைப்படங்களில் எப்படிக் கந்தரகோலமாக்கினாலும் எதுவும் சொல்லமாட்டார். இது ஒரு கலைஞனுடைய மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. ”சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற இதமான பாடலுக்கு சாமுராய் பாணியில் காட்சி அமைத்திருப்பார் மணிரத்னம். முந்தைய இயக்குநர்கள் எல்லாம் ராஜா ராணி வேடத்தில் பாடல்கள் அமைத்திருந்ததால் மணிரத்னம் வித்தியாசமாக (?) யோசித்து ஜப்பானிய உடை அலங்காரத்துடன் காட்சிப்படுத்தியிருப்பார். அதை குரோசோவாவுக்குச் செய்த மரியாதை என்று கூச்சமில்லாமல் சொல்லவும் செய்தார். இத்தனைக்கும் அந்தப் படம் மகாபாரதத்தை நவீன மொழியில் சொன்ன படம். வைர கிரீடம், தங்கக் கவசம், பட்டுப் பீதாம்பரம் என்று காட்டியிருக்காமல் எளிய பாண்டவர் கால உடையுடன்தான் பாடலைப் படமாக்கியிருக்கவேண்டும். ராஜாவோ, காசு கொடுத்திட்டியா… கன்னுக்குட்டியை ஏர்கால்ல பூட்டினாலும் சரி… கசாப்புக் கடைக்கு ஓட்டிட்டுப் போனாலும் சரி.. எனக்கு ஒரு கவலையில்லை என்ற மனநிலையிலேயே இருந்திருக்கிறார்.

ராஜாவுமேகூட இசைத் துணுக்குகளில் நாரசமாக ஒலிக்கும் பல கிம்மிக்குகளைச் செய்திருப்பார். ”பூவே செம்பூவே’ என்ற இனிமையான பாடலுக்கு இடையில் ஒலிக்கும் வயலின் கூச்சல்கள் இதமான முரணாக இருக்காமல் எரிச்சலூட்டும் முரணாகவே இருக்கும்.

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே.

இந்தப் பாடலை எழுதிப் பாடியது இளையராஜாவே. இந்தப் பாடலை அவர் ஒரு தனி ஆல்பமாகப் பாடியிருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அசட்டு தமிழ் சினிமா நாயகனுடைய காதலை தியாகராஜரின் பக்தியுடன் ஒப்பிட்டது மகா கேவலம். கம்பனை மிஞ்சிய கற்பனையை எழுதியதாக வைரமுத்து தனக்குத்தானே சூட்டிக்கொண்ட மகுடத்தைவிட இது கேவலமானது. இதுபோல் அவர் தனது பல பாடல்களைப் பல வகைகளில் வீணடித்திருப்பார்.
மேலும் ராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களில் மிகப் பெரிய ரசிகர்கூட பத்து அல்லது இருபது சதவிகிதப் பாடல்களை மட்டுமே உயர்வாகச் சொல்வார். எஞ்சிய பெரும்பாலான பாடல்களை அவரே இரண்டாம் தடவை கூடக் கேட்கமாட்டார்.. அப்படி ஒருவருடைய இசை வாழ்க்கையில் பெரும்பாலான பாடல்கள் ஒப்பேற்றியவையாக இருந்தால் அதையும் சேர்த்தேதான் மதிப்பிடவேண்டும். அந்தவகையில் இளையராஜா ஒரு கலைஞனாகச் செயல்பட்ட நேரங்கள் வெகு குறைவு. பத்து சிலைகள் செதுக்கிவிட்டு 100 அம்மிகளைக் கொத்திய ஒருவரை சிற்பி என்று அதுவும் தலை சிறந்த சிற்பி என்று சொல்ல முடியுமா என்ன? இத்தனைக்கும் அம்மி கொத்தியாக வேண்டிய எந்த நிர்பந்தமும் நெருக்கடியும் அவருக்கு இருந்திருக்கவே இல்லை.

தமிழ் சமூகத்துக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும்தான் மாபெரும் அரசியல் தலைவர்கள். வைரமுத்துதான் கவிப்பேரரசு. சுஜாதாதான் இலக்கியவாதி.. குமுதம் விகடன்தான் உயர்ந்த பத்திரிகைகள். அவர்களுடைய பக்தி எனது லெளகீக, சுயநல பிரார்த்தனைகளால் நிறைந்து கிடக்கிறது. அவர்களுடைய பணித்திறமை என்பது ஊழலாலும் செய் நேர்த்தியின்மையாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் டி.வி. சீரியல்களுக்கும் அதையொத்த பிற கலை வெளிப்பாடுகளுக்கும் கண்ணீர் மல்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே ராஜாவின் இசையையும் அவர்கள் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அதேநேரம் இப்படியான மலினங்களில் சிக்காத இசை மேதைகளும் ராஜாவின் பாடல்களைச் சிலாகிக்கவே செய்கிறார்கள். அதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.

1. ராஜா பிறப்பால் தலித் என்பதால் சிலரும் பிறப்பால் மட்டும் தலித் என்பதால் வேறு சிலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.

2. தமிழ் லாபியைப் பகைத்துக்கொள்ள யாருக்கும் துணிச்சல் கிடையாது.

3. அவர்களுக்கு ராஜா பாணி இசையும் பிடித்திருக்கிறது. ஆனால், அவர்களுடைய ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது நிச்சயம் இருக்காது. இன்று சூரியன் மறைவதற்குள் நீ இறந்துவிடுவாய் என்று கடவுள் வந்து சொன்னால், உயிர் போகும் முன் கேட்டுவிடவேண்டும் என்று அவர்கள் அவசர அவசரமாக எடுத்துவைக்கும் இசைத்தட்டுகளில் ராஜாவின் பாடல் கடைசியாகவே இருக்கும்.

அடிப்படையில் திரை இசை என்பது மாற்றுக்குறைவான கலை வடிவமே. திரைப்படம் என்பது பல கலைகள் கூடி இணைந்து உருவாக்கப்படும் கலைவடிவம். அதில் ஒவ்வொரு கலையும் பல சமரசங்கள் செய்துகொண்டே செயல்பட முடியும். அதிலும் வணிக நோக்கு பிரதானமாக இருக்கும் தமிழ் திரையுலகம் போன்றவற்றில் எந்தக் கலைஞரும் தனது ஆன்மாவை அடகு வைக்காமல் செயல்படமுடியாது. அப்படிக் குறுக்கிக் கொண்டு செயல்படுவதில் சுகம் கண்ட ஒருவருடைய படைப்புகள் அந்தக் காரணத்தினாலேயே பல அழகுகளையும் மதிப்புகளையும் கலை நுணுக்கங்களையும் இழந்துவிடும். குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைத்து கூவச் சொல்லும் உலகம் அல்லவா இது. அதிலும் பின்னணி இசை என்பது முழுக்க முழுக்க காட்சிகளுக்கு ஏற்ப இசையமைக்கும் பக்கவாத்தியச் செயல்பாடு மட்டுமே. இந்தத் திரைப்படங்களைப் பார்த்து அவர் இசையமைக்கவில்லை. மனதுக்குள் இயல்பாக தானாக உருவாக்கியவற்றை இந்த இடங்களில் நிரப்பி இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான பாடல்களும் பின்னணி இசைக்கோவைகளும் அந்தக் கூற்றை நியாயப்படுத்துபவையாக இல்லை.

தூய நாட்டார், செவ்வியல், மேற்கத்திய இசையாக அல்லாமல் அவற்றின் பல்வேறு அம்சங்கள் கலந்த ஒரு புதிய நவீன காலகட்ட இசை வகைமையை ராஜா உருவாக்கியிருக்கிறார். அதை அதற்கான அளவுகோலுடன் மதிப்பிடவேண்டும் என்ற கூற்றில் நியாயம் இல்லை. அவருடைய பாடல்கள் அப்படியொன்றும் அந்த மரபுகளின் நவீன வடிவமாக வெளிப்பட்டிருக்கவில்லை. நாட்டுப்புற மண் வாசனையோடு, நாட்டுப்புற குரல்களோடு அவருடைய பாடல்கள் இல்லை. குத்தாட்டப் பாடல்களில் கானா பாடல்கள் தரும் உற்சாகத்தை ராஜாவின் பாடல்கள் தருவதில்லை.

மென்மையான பாடல்களை எடுத்துக்கொண்டால் அவை கர்நாடக செவ்வியல் இசையின் பலவீனமான பிரதிநிதிகளாகவே இருக்கின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக்கொண்டால் டைட்டானிக் போல் உயிரை உருக்கும் இசை ராஜாவிடம் கிடையாது. வேண்டுமானால் இந்த மூன்று மரபுகளின் நீர்த்துப்போன வகைமை என்றே ராஜாவின் இசையைச் சொல்ல முடியும். ஒரு இளையராஜா ரசிகர் இசையின் ரசிகராகப் பரிணாமம் பெறப் பெற ராஜாவிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார் என்பதே உண்மை. தேனைச் சுவைத்துவிட்டால் சர்க்கரைக் கரைசலை ஒதுக்கித்தானேயாகவேண்டும்!

•••••••••

ராஜாவின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை:

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…

என் இனிய பொன் நிலாவே…

என் வானிலே…

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ…

என்னுள்ளே என்னுள்ளே… பல மின்னல் வந்து தீண்டும்…

மன்றம் வந்த தென்றலுக்கு…

ஆட்டமா தேரோட்டமா…

காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லை…

சின்னத் தாயவள் பெற்ற ராசாவே…

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…

•••••••••

Comments are closed.