நீர்மை குன்றும் நெடுங்கடல் ( சிறுகதை ) / சித்ரன்

[ A+ ] /[ A- ]

images (31)

விஜயன்

மின் விளக்குகள் நீரில் தீட்டிய மஞ்சள் ஒளிப்பாலங்களை சலனப்படுத்தியவாறு விடியலைத் தேடி பிரவாகமெடுத்த மௌன நதியின் படித்துறையில் அவன் அமர்ந்திருந்தான். கூடு நீங்கிய ஆன்மாக்களை வசப்படுத்த எத்தனிக்கும் பார்ப்பனர்களின் வேதமந்திரங்கள் இயந்திரங்களின் சுருதியில் அவ்விடந்தோறும் ஒலித்துக் கொண்டிருந்தன. காலங்கள் உறைந்த நெடும்பாறைக் குன்று நதியின் தொலைவில் மிதப்பதாய் அவனுக்கோர் அதீத பிரமை. நீர்ச்சுழலையும், புதைமணலையும் எச்சரிக்கும் அறிவிப்பு பலகை ஏற்கனவே புதையுண்டிருந்த அவனது வாழ்வின் மீதான எள்ளலாய் அங்கு காட்சியளித்தது. அதனடியில் நாவிதர்கள் மழித்த தலை முடிச்சுருள்கள் குவியலாய் கிடக்க அம்மாவின் வற்புறுத்தலால் நாவிதனிடம் மீசையை மட்டும் மழித்துக் கொண்டான். வாசனாதி பொருட்கள் செந்தழலில் கருகும் வாசமும் ஈரத்தின் நசநசப்பும் அவ்விடம் தோறும் நிறைந்திருக்க சுன்னக்கட்டியால் தீட்டப்பட்டிருந்த சதுரக்கட்டத்திற்குள் அமர்ந்திருந்த கிழட்டு புரோகிதனின் முன் அம்மா அவனை அமரச் சொன்னாள்.

மாதவி

தனது இரு கரங்களையும் இருவர் அழுத்திப் பற்றியிருப்பதை உணர முடிந்த அவளுக்கு தனது உடல் மீது மற்றவர் கொள்ளும் உரிமை மட்டும் புரிபடாமலே இருந்தது. ஒரு வாகனத்தில் தான் பயணிப்பதை உணர்ந்திராதவள் இன்மையிலிருந்து தனக்குள் சதா ஒலிக்கும் குரலாகவே அவ்வாகன ஓசையை அறிந்தாள். அதன் சீரான உறுமல் மீண்டும் மீண்டும் கொடுங்கனவுகளின் சுழலுக்குள் அவளை இட்டுச் சென்றது. இருளிலிருந்து பாயும் உடல்களும் நிணநீரொழுகும் மாமிசப் பிண்டமான தனது நிதம்பத்திற்குள் அவற்றின் தேடலும் அவளை பீதியுறச் செய்தன.

முன் கதை

ஆடிக்காற்று சாலையில் செல்பவர்கள் மீது புழுதி வாரியிரைத்த ஒரு நண்பகல் பொழுதில் தங்களது வாழ்வை மாயச் சிலந்தியின் வலைபின்னலுக்குள் சிக்கவைத்த நூற்பாலைகளின் நகரமான திருப்பூரை அவர்கள் சென்றடைந்தனர். விஜயன் சுசீலாவோடும் மாதவி தான் நேசித்த ஒரு பேருந்து நடத்துனனோடும்.

1

விஜயனின் மனைவி ஒரு பெண் மகவை பிரசவித்து இறந்து ஒரு வருடம் கடந்திருந்தது. மறு திருமணத்திற்காக நச்சரித்த அம்மாவின் புலம்பல் தம்பியின் திருமண நிகழ்வுகளால் சற்று அடங்கியிருந்த தருணத்தில் சுசீலாவைச் சந்தித்தான். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வெளிவந்தவள் அவளுடலின் ஒவ்வொரு அங்கங்களும் தனதிருப்பை அறிவிக்கும் துள்ளலான நடையில் அவனது ஆட்டோவில் ஏறினாள். அப்பயணம் வெள்ளாற்றுத் தாழம்புதர் காட்டினுள் அவர்கள் இரு பாம்புகளாய் பிணைந்து மோகித்தது வரைச் சென்றது எதேச்சையானதா? அல்லது மனிதர்களின் விதி பகடைக் காய்களாக உருட்டப்படுதலின் நிகழ்தகவா? எனத் தெரியவில்லை.

திருப்பூரில் இருந்த அவன் நண்பன் தாஸ் அவர்களை தென்னம்பாளையத்தில் தீப்பெட்டிகளை அடுக்கினாற் போன்ற குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றான். வீட்டு முதலாளியம்மாளிடம் அவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லையென்றும் ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் இங்கு பனியன் கம்பெனியில் வேலை பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னான். இத்தகவல்களிலெல்லாம் அக்கறை கொள்ளாதவளாய் பருத்த பெண்மணியான முதலாளியம்மாள் வீட்டுச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு தானாகவே இசைத்துக் கொள்ளும் மத்தளங்களையொத்த தனது புட்டத்தை குலுக்கியபடி நடந்து சென்றாள். தனது தேவை வாடகைப் பணம் மட்டுமே என்பதை அவளது அங்க அசைவுகள் உணர்த்தியவாறிருந்தது. இடப்புறம் சிறிய திண்ணையோடிருந்த அக்குடியிருப்புகளிலிருந்து சளியொழுகும் மூக்குடனும், பரட்டைத் தலையோடும் குழந்தைகள் புதியவர்களான அவர்களை ஆச்சரியமாய் பார்த்தவாறிருந்தன. அவர்கள் குடிபுகவிருந்த வீடு பத்துக்கு பத்தடி நீள அகலமும் திண்ணைக்கு நிகரான அதன் வலதுபுறப் பகுதி சமையலுக்கான பகுதியாக உள்ளடங்கியதாகவும் அதனுள்ளே பாத்திரங்கள் கழுவ ஒரு குழிவான பகுதியும் இருந்தது. பணம் வசூலிக்கச் சாத்தியமான அனைத்து தகவல்களையும் சுசீலாவிடம் அளித்து விட்டு முன்பணத்தோடு முதலாளியம்மா வெளியேறினாள். வீட்டுத் தேவைக்கான பொருட்களை வாங்கி வந்த பின் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனி முதலாளியிடம் கூறியிருப்பதாகவும் அடுத்த மாத முதல் தேதியிலிருந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாமென தாஸ் சொல்லிவிட்டுச் சென்றான்.

இயற்கைச் சூழலில் ஏதேனும் கண்கள் கவனித்துவிடக் கூடும் என்ற பதைபதைப்போடு அதுவரை இணை சேர்ந்திருந்தவர்கள் முதன் முறையாக ஒரு அறையில் தனித்துவிடப்பட்ட அன்றிரவோடு உலகம் அழியப்போவதாய் புணர்ந்தனர். இருவரின் மூர்க்கமும் தணிந்து உறக்கம் கவியத் துவங்கிய வேளையில் லேசாக விசும்பிய சுசீலா தனது இரு குழந்தைகளையும், கணவனையும் பற்றி அரற்ற ஆரம்பித்தாள். விஜயன் அவளது இதழ்களில் முத்தமிட மீண்டும் அவள் இச்சையுற்றவளாய் அவனோடு பிணைந்தாள். புணர்ச்சியினூடாக அவளது கணவன் கட்டியிருந்த தாலிச் சங்கிலியை அவிழ்த்து மீண்டும் அவளது கழுத்தில் மாட்டியவன் இரு உடல்கள் முயங்க சாத்தியமான எல்லா வழிமுறைகளையும் அவளோடு முயற்சித்தான்.

பனியன் கம்பெனி வேலைக்குச் சேரும் யோசனை சுசீலாவிற்கு உவப்பானதாயில்லை. மாலையில் ஒரு இட்லி கடை நடத்தலாமென்றாள். ஆட்டோவை விற்று வைத்திருந்த பணம் ஒரு இட்லிக் கடைக்குத் தேவையான பாத்திரங்கள், தள்ளுவண்டி போன்றவற்றை வாங்கியது போக அதிகப்படியாகவே இருந்தது. முதல் மூன்று மாதங்கள் நட்டப்பட்டாலும் பிரச்சினையில்லை என்றவாறு அவர்களது வீட்டின் அடுத்த தெருவில் ஒரு தெருக்கம்ப சோடிய விளக்கின் வெளிச்சத்தில் கடையை ஆரம்பித்தனர். அவனது அச்சத்திற்கு மாறாக முதல் நாளிலிருந்தே வியாபாரம் நன்றாக இருந்தது.

பனியன் கம்பெனியில் வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்புபவர்கள், பெரிய கட்டிடங்களில் தங்கி வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், சுமைவண்டி இழுப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போக கார்களில் வந்து கூட பார்சல் வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். வியாபாரத்தை முடித்து பின்னிரவு நேரங்களிலே வீடு திரும்புவர். களைப்பு கண்ணிமைகளுக்கு சுருக்கிட்டதைப் போல உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். விடியலில் விழிப்பேற்படுகையில் அவள் மீது கைகளை படரவிடுவான். அவளும் அதற்காகவே காத்திருந்தவளாய் தனது உடலை தளர்த்தித் தருவாள். ஒரு குயவனைப் போல் அவளுடலை தனக்கானதாக வார்த்துக் கொண்டிருந்தான். சில சமயம் அவன் உறங்கினாலும் மார்முடிகளுக்குள் அவளது விரல்களை நுழைத்து காம்புகளை வருடி அவன் காமத்தை விழித்தெழச் செய்வாள். இருவருக்குமிடையேயான ஈர்ப்பு சற்றும் குறையாமல் பல பெரும்பொழுதுகள் கழிந்தன.

தாஸிற்கு சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல விசா கிடைத்தது. முகவர்களிடம் கொடுப்பதற்காக அவன் கேட்ட தொகையை சுசீலா மகிழ்ச்சியோடு கொடுத்தனுப்பினாள். இடைவெளியற்று காய்த்துக் கனிந்திருக்கும் அத்திப் பழங்களை பழந்தின்னி வௌவால்கள் ஒரே இரவில் சூறையாடிச் செல்வதைப் போல வாழ்வு தலைகீழாக மாறப்போவதை அறியாமல் அந்நாட்களை விஜயன் கழித்திருந்தான். சண்முகம் மதுரை பக்கத்தைச் சேர்ந்தவன். வெளிர் தேகத்தில் அடர் கரு நிறத்தில் முறுக்கிய மீசையும் தாடியும் தோள்பட்டை வரை நீண்ட முடியும் கூத்துக் கலைஞனைப் போன்ற உடல் மொழியையும் உடையவன். தனது நண்பர்களுடன் அறையில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தான். இரவு உணவை முடித்துச் செல்லும் அச்சிறு கூட்டத்தில் தனது உற்சாகமான உரையாடும் இயல்பால் தன்னைச் சுற்றியொரு கவர்ச்சி மையத்தை உருவாக்கியிருந்தான்.

சண்முகம் சுசீலாவை மதினி என்றழைப்பதும் இவன் அவளை தம்பி என்றழைப்பதுமாக இருவரின் உறவு தொடங்கியது. சண்முகத்தின் வரவு சுசீலாவிற்குள் ஒரு அதீத உற்சாகத்தை உருவாக்கியது. உணவு உண்ணும் போது சண்முகத்தின் தேவைகளை தன்முனைப்போடு அவள் நிறைவேற்றுவதைப் பார்த்து மற்றவர்களும் “மதினி எங்ககிட்டேயும் தட்டிருக்கு என்பார்கள்”. அவன் வரத் தாமதமானாலோ வராது போனாலோ விஜயனின் மீது ஏதேனும் குறை கண்டறிந்து எரிந்து விழத் தொடங்கினாள்.

images (32)

அவன் வாங்கும் காய்கறிகளின் தரம் மீது அவளுக்கு அவநம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. அவன் வாங்கி வந்த இரண்டு கிலோ வெண்டைக்காயில் ஒரே ஒரு சொத்தை வெண்டைக் காயை தேடிக் கையிலெடுத்து அரை மணிநேரம் சண்டையிட்டாள். அன்றிலிருந்து அவளே மார்க்கெட்டுக்கு செல்லத் தொடங்கினாள். ஒரு முறை சண்முகமும் சுசீலாவும் மார்க்கெட்டில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்டதும் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாது “வாங்கண்ணே ரெண்டு பேரும் ஒண்ணா வராம தனித்தனியா வரீங்களே” என்ற சண்முகத்தைப் பார்த்து “எதுக்கு அவரு சொத்த காய்கறி வாங்கவா?” எனச் சிரித்தாள்.

ஒரு நாள் வியாபாரத்தை முடித்து இரவு பதினோரு மணி வாக்கில் வீடு திரும்பினர். மறுநாள் தேவைக்காக அரிசியையும், உளுந்தையும் அவள் பாத்திரத்தில் கொட்டி ஊற வைத்தாள். கை கால் முகத்தை கழுவிய விஜயன் அசதியில் பாயை விரித்து படுத்தான். சற்று நேரத்தில் விளக்கணைத்து அவனருகில் படுத்தவள் அவனை முத்தமிட ஆரம்பித்தாள். அவளை வாரியணைத்து தன் மீது அமர வைத்தான். மேலும் தீவிரமாய் அவள் தந்த முத்தங்களில் லயித்திருக்கையில் அவனது மீசையை விரல்களால் நீவினாள். பிறகு நாவை அவனது உதடுகளுக்குள் நுழைத்து துழாவி நிமிர்ந்தவள் மீசையை நன்றாக முறுக்கி அதை ஒரு கணம் ரசித்தவளாய் மீண்டும் முத்தமிட்டாள். அவள் மீசையை முறுக்கிய விதம் அவனுள் உறுத்தலை கிளப்ப அவளது பித்தேறிய கண்களை ஆழமாக நோக்கினான். அவளது பார்வைப் புலன் தன்னை பிறிதொரு நபராய் நுகர்வதை உணர்ந்த வேளையில் அவளது கருவிழிகளின் இருண்மைகள் பிரதிபலிக்காத பிம்பம் சண்முகம் என்பதை அறிந்தான். அவனது பார்வையில் திகைப்படைந்தவள் அவன் மீதிருந்து இறங்கி அருகில் படுத்து விட்டாள். வெகு நேரம் இருவரும் உறக்கமில்லாமல் பாயில் புரண்டு கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை சலூனுக்குச் சென்றவன் மீசையையும் தாடியையும் மழித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். சுசீலா அவனைப் பார்த்து ஆச்சரியமடைந்தும் எதுவும் கேட்கவில்லை. கண்ணாடியைக் கையிலெடுத்து ஆராய்ந்தவனுக்கு மீசையற்ற தனது முகத்தில் மேலுதடு தடிப்பாகவும் மூக்கு சற்று நீளமாகவும் இருப்பதாகத் தோன்றியது. மொத்தத்தில் அவன் முகம் விகாரமாக காட்சியளித்தாலும் அவனுள் ஏதோ குரூர மகிழ்ச்சி மட்டும் தங்கியது. அன்றிரவு சாப்பிட வந்த சண்முகத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. “என்ன அண்ணே மீசையை வழிச்சுட்ட” என்றவனை நிமிர்ந்து அவனது முறுக்கிய மீசையையும் கண்களையும் அவன் பார்த்த பார்வையில் ஏதோ திகைப்படந்தவனாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அதன் பிறகு சுசீலா அவனிடம் தேவையில்லாமல் சண்டையிடுவதில்லை.

2

அவர்கள் வசித்த தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த ஒரு பெண்கள் விடுதியில் மாதவி தங்கியிருந்தாள். கணவனை விட்டு பிரிந்த பெண்கள், கடன் தொல்லையால் வாழ்வை அடகு வைத்த குடும்ப பெண்கள் என துர்விதிகளால் சூழப்பட்டவர்கள் அவ்விடுதியில் தங்கி பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தனர். பலரிடம் கடன் பெற்று கடைகளில் விற்கும் விசில்களை வாங்கி தீயிட்டுக் கொழுத்தும் விநோத பழக்கமுடையவளாய் மாதவியைப் பற்றி ஏற்கனவே அவள் அறிந்திருந்தாள். இருவருக்குமிடையே நட்பு முகிழ்த்த பின் ஒரு தருணத்தில் இதைக் குறித்து அவளிடம் கேட்டதற்கு செவிகளில் எந்நேரமும் ஒலிக்கும் விசில் சத்தத்தை வேறு எப்படி நிறுத்துவது என்று எதிர் வினா தொடுத்தாள். சில வேளைகளில் தனது கைகளில் இருக்கும் ஊசி துளைத்த வடுக்களிலிருந்து சிற்றெறும்புகள் வெளியேறுவதாக அவளிடம் காட்டுவாள். அவ்வடுக்கள் அப்பேருந்து நடத்துனனால் ஏற்படுத்தப்பட்டவை. அவளை சுயநினைவிழக்கச் செய்து எத்தனை பேர் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற கணக்கு ஒவ்வொருவரிடமும் வேறு மாதிரியாய் இருந்தது.

ஒரு முறை காய்கறி வாங்கச் சென்றவள் மாதவியை அழைத்து வந்தாள். கையில் பையோடு நின்றிருந்த மாதவியைக் கண்டு விஜயன் புரியாமல் விழித்திருக்க சுசீலா அவனை ஏக்கத்துடன் பார்த்து கெஞ்சும் குரலில் “இனிமே இவள் இங்கேயே தங்கட்டும்” என்றாள். அவன் ஆச்சரியத்தை வெளிப்படுத்த மாதவியை உள்ளே அமர வைத்துவிட்டு அவனை திண்ணைக்கு அழைத்துச் சென்றாள். விடுதி முதலாளியை மாதவி அடித்து விட்டதால் அவரது மனைவி இரவு அவளை வெளியே தள்ளி மறுபடியும் விடுதிக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டதாகச் சொன்னாள். இரவு முழுதும் மாதவி விடுதியின் வெளியே சாலையோரத்தில் அமர்ந்துவிட்டு பகலில் பையுடன் சுற்றித் திரிந்திருக்கிறாள். காய்கறி வாங்கி வரும் வழியில் அவளைக் கண்டதாகவும் பரிதாபமாக இருந்ததால் நமக்கு ஒத்தாசையாக இருக்கட்டுமென்று அழைத்து வந்துவிட்டதாகச் சொன்னாள். அரைமனதுடன் உள்ளே எட்டிப் பார்த்தான். மாதவி பையை தலைக்கு வைத்தவளாய் உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஏதோ தனது சொந்த வீட்டில் உறங்குவதைப் போல் ஆசுவாசமாக உறக்கத்திலிருந்தவளை விரட்ட மனமில்லாது அவளது குடும்பத்தைப் பற்றிக் கேட்டான். பெரம்பலூரைச் சேர்ந்தவள். ஒரு தனியார் பேருந்து நடத்துனனை விரும்பி அவனோடு வந்திருக்கிறாள். திருப்பூரில் ஒரு அறையில் போதை ஊசியேற்றி அவனும் உடன் நால்வரும் மூன்று நாட்கள் அனுபவித்திருக்கிறார்கள். பிறகு அவளது நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பிவிட்டான். பைத்தியம் போல் அழுதவாறு திருப்பூரில் சுற்றித் திரிந்தவளை விடுதி முதலாளியின் மனைவி இரக்கப்பட்டு விடுதியில் தங்க வைத்திருக்கிறாள். விடுதி வேலைகளை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவளை முதலாளி ஆசையுடன் முயற்சிக்க இவள் தனியாய் அழைத்துச் சென்று அவன் தந்த முத்தங்களை ஏற்றுக் கொண்டு பிறகு அவனது விதைப் பையிலே முழுபலத்துடன் மிதித்திருக்கிறாள்.

காந்தத்தின் எதிர் துருவங்களாய் இருந்த அவர்களது உடல்களுக்கிடையே ஒரு விலக்கு விசையாய் மாதவியின் வருகை அமைந்தது. அவர்களது சிறிய அந்த அறையில் அவன் இடது ஓரத்திலும் நடுவில் சுசீலாவும் வலது ஓரத்தில் மாதவியும் படுத்தனர். உறவற்ற நாட்கள் அவனை ஏக்கத்தின் கொதிநிலைக்கு அழைத்துச் சென்றது. நாட்கள் வாரங்களாய் கடந்தன. பிறிதொரு நாள் பகல் முழுதும் இரவிற்காக ஏங்கியிருந்தான். படுக்கைக்கு சென்ற பின் சற்று நேரமானதும் மெதுவாக தலையைத் தூக்கி மாதவி உறங்கி விட்டாளா எனப் பார்த்தான். தலைவிரி கோலமாய் நிலை குத்திய கண்களுடன் ஓட்டுக் கூரையை வெறித்தபடி அவள் அமர்ந்திருந்தாள். உறக்கம் வராமல் அமர்ந்திருக்கிறாளோ என்றெண்ணியவன் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தான். மறுபடியும் அவள் என்ன செய்கிறாள் எனப் பார்த்தான். முதலில் என்ன நிலையில் இருந்தாளோ அந்நிலையிலே சிலையானவளைப் போல் அமர்ந்திருந்தாள். அவனை நோக்கி திரும்பி படுத்திருந்த சுசீலா உறங்கியிருக்கப் போகிறாள் என அவளது கீழுதட்டை விரல்களால் இழுத்தான். லேசாக முகம் மலர்ந்து கண்களை திறந்து பார்த்தாள். அவளது சேலையை ஒதுக்கி கொங்கைகளைச் சீண்டினான். அவனது கையைத் தட்டிவிட்டவள் மாதவி உறங்கி விட்டாளா எனத் திரும்பிப் பார்த்தாள். குருதித் தாகமெடுத்த பிடாரியாய் ஓட்டிலிருந்து இறங்கி வரப் போகும் யாருக்காகவோ அவள் காத்திருந்தாள். வெகு நேரம் அவள் உறங்குவதற்காக காத்திருந்த இருவரும் உறங்கிவிட்டனர். விடியலுக்கு முன் விழிப்பேற்பட்டு மாதவியைத் திரும்பிப் பார்த்தான். அவன் அஞ்சியதைப் போல் இல்லாமல் உறங்கியிருந்தாள். சுசீலாவின் அருகே தவழ்ந்து சென்று அவளை சேர்த்தணைத்தான்.

உறக்கத்திலிருந்து விழித்தவள் அவனை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டாள். பிறகு இருவரும் முத்தமிட்டவாறு காய்ந்த சருகுகளின் மீது ஓசையெழும்பாமல் நடக்க முயற்சிப்பவர்களாய் மிகப் பொறுமையாய் ஆடைகளைக் களைந்தனர். மாதவி விழிக்கக் கூடுமென்ற பதைபதைப்பு காமத்தில் மேலும் கிளர்ச்சியைக் கூட்டியது. எவ்வளவு தழுவியும் திகட்டாத உடல்கள் உச்சத்தை நோக்கி அவர்களை இழுத்துச் செல்ல சுசீலாவிற்குள் நுழைந்து நுழைந்து மீண்டான். பிரக்ஞையின் சிறு விழிப்பில் எதேச்சையாய் அவர்களிருவரும் பார்வையைத் திருப்ப கண்களை அகலத் திறந்தவாறு மாதவி அவர்களை வெறித்திருந்தாள். பிடரியில் அறைந்தாற் போன்ற அதிர்ச்சியோடு வெட்கமும் சேர சுசீலாவின் மீதிருந்து தாவி அவனது பாயில் விழுந்தான். தான் நிர்வாணமாய் இருப்பது உறைக்க கைகளால் துழாவி சுருட்டி வீசப்பட்டிருந்த கைலியை எடுத்து இடுப்பின் மீது போர்த்திக் கொண்டான்.

images (33)

விடிந்தபின் அன்றைய வேலைகளில் அவர்கள் மூழ்கியிருக்க மாதவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். காலை உணவிற்கான தயாரிப்பில் இருந்த சுசீலாவிடம் நேற்றைய இரவின் இயலாமையை அவன் முறையிட அவள் சிரிக்கத் தொடங்கினாள். மாதவி அங்கு தங்கியிருப்பதை அவன் சகித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. முதலில் அவர்களுக்குள் தன்னிச்சையாக எழும் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவள் எப்போதும் சவக்கலை கூடிய முகத்தோடு அலைந்தாள். எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாதவளாய் அவள் இயல்பு மாறியிருக்க அந்த முகத்தசைகளும் தனது இயல்பை மறந்து இறுகி எலும்போடு உறைந்திருந்தன. அவர்கள் சொல்லும் வேலைகளை எவ்வித சலனமும் இல்லாமல் செய்வாள். ஆனால் அவை அவர்களால் சமாளிக்கக் கூடிய வேலைகள் தான். நள்ளிரவில் வீடு திரும்பி அவர்கள் உறங்க அவள் உறக்கமில்லாமல் வெறுமனே உட்கார்ந்திருப்பாள். சில சமயம் படுத்தவாறு கண்களைத் திறந்திருப்பாள். சூரியன் முதல் கிரணங்களை வெளிவிடும் தருணத்தில் மெல்ல உறக்கத்திற்குள் நழுவும் அவள் மதியம் பன்னிரண்டு மணிக்கு கண்விழிப்பாள்.

மாதவி அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு விஜயனும் சுசீலாவும் உறவு கொள்ளாமல் நாட்களை கழித்தனர். அவன் குறைபட்டுக் கொண்ட அளவு சுசீலா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களுடைய வேலையின் ஒவ்வொரு பகுதிகளையும் அவள் மாதவிக்கு நேர்த்தியாக சொல்லித் தர அனைத்தையும் அவள் கவனமாக கேட்டுக் கொண்டாள். சுசீலாவின் கேள்விகளுக்கு அவள் செவியைத் தாண்டாத ஓசையளவில் பதில் தருவாள். மற்றபடி அவள் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

கடையில் விஜயனது வேலை சாப்பிடுபவர்களின் இட்லி தோசைகளை கணக்கு வைத்துக் கொள்வதும், சாப்பிட்டதற்கு காசு வாங்கி கல்லாவில் போடுவதுமாக சுருங்கியது. சுசீலா சமையலைச் செய்ய மாதவி சாப்பிடுபவர்களின் தேவைக்கேற்ப பரிமாறினாள். அவளை சிரிக்க வைக்க சண்முகம் செய்த முயற்சிகளை சற்றும் கவனத்தில் கொள்ளாது தனது வேலையில் மட்டும் அவள் குறியாயிருந்தாள். சண்முகம் அவனது வீண்சேட்டைகளால் தற்போது வெறுப்பேற்படுத்தும் கோமாளியாகத் தோன்றினான். இதை சுசீலாவிடம் குறிப்பிட்டு உற்சாகமாய் அவன் பேச அவள் காதில் வாங்காதவளாய் சென்றாள்.

சில நாட்களாக சண்முகத்தின் நடவடிக்கைகள் ஏதோ அர்த்தம் பொதிந்ததாகத் தோன்றின. அவன் அறிய முடியாத சமிக்ஞைகளை சுசீலாவிற்கு கடத்திக் கொண்டிருந்தான். காய்கறி வாங்கி திரும்பி வரும் வழியில் தொலைவில் இவளோடு பேசிவந்தவன் அடுத்த தெருவில் மறைவதை தேநீர் கடையிலிருந்து பார்த்தான். சுசீலா தினமும் காலையில் மார்க்கெட் செல்லும் முன் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் சற்று அதிக நேரத்தை செலவழித்தாள். எரிச்சல் எல்லை மீறிய ஒரு நாள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தவளை நோக்கி “நீ எதுக்கு இப்படி சிங்காரிக்கிறன்னு தெரியுது” என்றான். முகத்தில் எவ்வித மாறுதலையும் காட்டாமல் சிரித்தவாறே அவனையும் உறக்கத்திலிருந்த மாதவியையும் பார்த்தாள். மெதுவாக அவனருகில் வந்தவள் அவனைச் சுவரோடு சேர்த்துத் தள்ளி தனது புட்டத்தை அவன் தொடையிடுக்கில் பொருத்தி உரச ஆரம்பித்தாள். சிலிர்த்துக் கிளம்பிய குறியை சற்று நேரம் வெறித்தவள் பாயேதும் விரிக்காமல் அவனை படுக்க வைத்து ஒரு கையில் அவனது சட்டை பொத்தான்களை கழட்டியவாறு மறு கையால் தனது ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அவன் திகைப்புடன் மாதவியை திரும்பி பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். சற்று நேரத்தில் அவர்களைச் சுற்றி ஆடைகள் இரைந்து கிடக்க இருவரும் நிர்வாணமடைந்தனர். அவளது உதடுகளை அவனது அடிவயிற்றிலிருந்து தொடை வழியாக கீழிறக்கி மீண்டும் அடிவயிறென வட்டமாக படரவிட்டாள். கதிரறுவாளைக் கொண்டு அறுக்கப் போவதைப் போல் அவனது புடைத்த குறியை இடது கையால் பிடித்தவள் ஆட்டுக் கல்லில் குளவியைப் போல் சுழற்றினாள். பிறகு அனைத்தும் ஒழுங்காய் இருப்பதைப் போல் தலையை ஆட்டியவள் தனது யோனியின் வாயிலில் அவன் குறியை மேலும் கீழுமாக தேய்த்தாள். அவன் முனக ஆரம்பித்தான். அதையே மீண்டும் மீண்டும் செய்தவள் ஆள்காட்டி விரலை அவன் உதட்டின் மீது வைத்து முனகலை நிறுத்தினாள். பிறகு அவனது குறியின் நுனி லிங்கத்தை மட்டும் உள்ளே அனுமதித்து இடுப்பை சுழற்றி ஒரு முழுவட்டமடித்தாள். பிறகு ஒவ்வொரு அங்குலமாக பக்குவமாக உள்ளே அனுமதித்தவள் மெல்ல மெல்ல வேகமெடுத்தாள். அவனது உடலின் அனைத்து மயிர்க்கால்களும் காமத்தில் சிலிர்த்தன. அறையின் ஒவ்வொரு பொருட்களும் பார்வையிலிருந்து மறைய ஆளரவமற்ற ஒரு வெண்பனிப் பிரதேசத்தில் பிரவேசித்தவன் பின் நிகழ்ந்ததையேதும் அறியாது உடல் வலியோடு உறங்கிப் போனான்.

கண்விழிக்கையில் இடுப்பில் பெரும் சுமையேற்றியதைப் போன்ற வலியை உணர்ந்தான். சமையலறையில் ஆவி மேலெழும்பிய சோற்றுச் சட்டியை கரித்துணியால் பற்றிக் குலுக்கிக் கொண்டிருந்த மாதவி அவன் முனகல் ஒலியைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் தவிர்த்து வலது புறம் திரும்ப அவனது கைலியும் சட்டையும் தரையில் சுருண்டு கிடந்தன. தலையை தூக்கி இடுப்பிற்கு கீழே பார்த்தவனின் விந்துக் கறை படிந்த குறி ஒரு மிளகாயளவு சுருங்கிக் கிடந்தது. பதறியெழுந்து கைலியை கட்டிக் கொண்டான்.

ஒரு செம்பில் தண்ணீரை எடுத்துச் சென்று சுசீலா எங்கு சென்றிருப்பாளென யோசித்தவாறு முகத்தைக் கழுவினான். துண்டால் முகத்தை துடைக்கையில் அவனது தட்டில் சோறும் சாம்பாரும் காத்திருந்தன. மாதவி அவளது தட்டிலும் சாப்பாட்டை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். சோற்றில் கைவைக்க தீக்குள் விரலை விட்டது போன்ற சூட்டினால் திடுக்கிட்டவனை மாதவி ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தாள். மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்கச் செய்து சோறு ஆறக் காத்தருந்தான். ஆவியடங்கிய சோற்றைப் பிசைந்து ஒரு கவளத்தை வாயிலிட மாதவியின் சாம்பார் புளிக்குழம்பை விட கூடுதல் புளிப்பாய் இருந்தது. அவளிடம் சுசீலா எங்கே எனக் கேட்க சோற்றை மென்றவாறு தலையை குறுக்காக ஒரு முறை ஆட்டினாள். நிமிடங்கள் பெருஞ்சுமையாய் அவன் மீது இறங்க சுசீலா இல்லாத மாலை நேரம் குழப்பத்தின் புகைமூட்டத்திற்குள் அவனை இழுத்துச் சென்றது.

அன்று அந்த நகரத்தில் கவிந்த இரவு அவன் வாழ்வில் படிந்த இருண்மையாய் இறுதி வரை தங்கிவிட்டது. நான்காவது நாளாக வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்தான். சுசீலா அவனை நீங்கிய நாளில் அரைத்து வைக்கப்பட்டிருந்த புளித்த மாவின் வாடை அந்த அறை முழுதும் நிரம்பி மது அருந்தியவனாய் அவனை நினைவிழக்கச் செய்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் மாதவி சோற்றை ஆக்கி உண்டாள். தட்டில் அவள் வைத்த சோற்றை இரண்டு கவளங்களுக்கும் மேல் உண்ண முடியாமல் குன்மம் வந்தவனைப் போல் விஜயன் சுருண்டு கிடந்தான். மாதவியிடம் சாம்பல் நிறப்பூஞ்சை படர்ந்த அப்புளித்த மாவை குப்பைத் தொட்டியில் கொட்டச் சொன்னான்.

பத்து நாட்கள் கழிந்த பின் அவனது உணவுக்குழாய் சற்று கூடுதலான உணவை அனுமதித்தது. இரண்டு வாரங்கள் கடந்ததும் கொஞ்சம் உடலும் மனமும் தேறி ஏதோ ஒரு வேகம் எழ மாதவியிடம் மீண்டும் கடையை ஆரம்பிப்போம் என்றான். மாதவியின் சமையல் திறன் மீது தீவிர ஐயம் தன்னுள் இருந்தாலும் வேறு வழியும் தெரியவில்லை. உணவு உட்கொண்ட பின் முகத்தில் வெறுப்புடன் சுசீலாவை விசாரித்தவர்களுக்கு உடல் நலமில்லாமல் ஊருக்குச் சென்றிருக்கிறாள் என்ற பதில் கிடைத்தது. அதைக் கேட்டவர்களின் முகபாவம் ஒருவித கேலித் தனத்தைக் காட்டிச் சென்றதாக அவனுக்குத் தோன்றியது. மாதவி ஏன் சாம்பாரில் அவ்வளவு புளியைச் சேர்த்தாள் என அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. டெக்ஸ்டைல் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்யும் அவனது ஊர்க்கார கிழவர் ஒருவர் “தம்பி இந்த சாம்பார இப்படியே சாப்பிட்டுக்கிட்டு இருந்தேனா என் வாயும் புளிச்சு சூத்தும் புளிச்சுப் போயிரும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒரு மாதம் மீண்டும் கடையை நடத்தியிருப்பர். ஊருக்குப் புதிதாய் வந்த யாரோ இருவர் மட்டும் வெறுப்போடு உணவருந்திச் சென்ற அன்றிரவோடு கடை மூடப்பட்டது. சுசீலா அவர்களது சேமிப்பிலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுத்துச் சென்றிருக்கவில்லை. எந்த வேலைக்கும் செல்லாமல் ஒரு மாதம் திருப்பூரில் சுற்றித் திரிந்தான். பிறகு இரண்டு மாதங்கள் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் பனியனை மடித்து வைக்கும் வேலை. சுறுசுறுப்பற்ற அவனது வேலையால் எரிச்சலடைந்த கண்காணிப்பாளர் அவனை விட ஒரு கிழவி அதிக எண்ணிக்கையில் பனியனை மடித்து வைப்பாள் என்று திட்டிய அன்றோடு அந்த வேலையும் நிறைவுற்றது.

மாதவியும் அவனும் தனியாய் ஐந்து மாதங்கள் அவ்வீட்டில் வசித்திருப்பர். ஒரு பெண்ணோடு தனித்திருக்கும் போது எழ வேண்டிய எந்த இச்சையும் அவனுக்குள் ஏற்படவில்லை. சோற்றைத் தட்டில் கொட்டி அவன் முன் நீட்டுவதற்கும் மேலாக அவனுடன் உறவிற்கான எந்த முனைப்பும் அவளிடம் இல்லை. சில நாட்களாகவே ஊருக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் அவனுள் தீவிரமாக எழத் தொடங்கியது. மாதவியை என்ன செய்வதென்ற குழப்பம் எழ அவளையும் அழைத்துச் செல்லலாமென முடிவெடுத்தான்.

3

தனது தம்பி மகன் பாபுவின் மூன்றாவது பிறந்த நாளன்று மாதவியோடு புதுக்கோட்டை அருகில் உள்ள தன் சொந்த ஊரான வம்பனுக்குத் திரும்பினான். வாசலில் அவர்களைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அம்மா ஏதும் பேசாமல் அவ்விடத்திலிருந்து அகன்றாள். என்ன செய்வதெனப் புரியாமல் வீட்டுத் திண்ணையில் அவன் அமர மாதவியும் அவனருகில் அமர்ந்தாள். வீட்டிலிருந்து வெளிவந்த அவன் தம்பி “வாங்கண்ணே” என்று அழைக்க தம்பி மனைவி இருவரையும் அழைத்தவாறு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். உள்ளே அவன் மகளும் தம்பி மகனும் விளையாடும் ஓசைகள் கேட்டன. அரை மணி நேரம் கழிந்த பின் வீடு திரும்பிய அம்மா அவனது அப்பாவும் மனைவியும் புகைப்படங்களாய் மாட்டப்பட்டிருந்த சாமியறைக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசிவிட்டாள். தம்பியின் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு வந்த விருந்தாளியாய் இருக்குமென மகள் அவர்களை வேடிக்கை பார்த்திருக்க விஜயனின் அம்மா அவளிடம் அவனை அப்பா என்று அறிமுகம் செய்து வைத்தாள். அவள் மருட்சியான விழிகளால் அவனையும் சித்தப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வீடும் சொந்த ஊரின் முகங்களும் முதலில் அவனுக்கு ஆசுவாசத்தையே அளித்தன. முதல் நாளில் உணர்ந்த சங்கடமான அந்நியத் தன்மை மெல்ல மெல்ல மறைய தோட்ட வேலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான். பாபுவிடம் அவனை பெரியப்பா என்று அழைக்குமாறு தம்பி சொல்லித்தர அவனுடைய மகளும் அவனை பெரியப்பா என்றே அழைத்தாள். எப்போதும் உறைந்திருக்கும் மாதவியின் முகத்தசைகள் குழந்தைகளுடன் இருக்கையில் தளர்வுறத் தொடங்கியது. அவளது கழுத்தில் தாலி இல்லாததைப் பற்றி அம்மா அவனிடம் வினவ சொல்வதற்கு பதிலற்றவனாய் விழித்தான். அன்று முகூர்த்த நாளாயிருந்ததால் ஒரு மஞ்சள் கயிறை அவன் கையில் தந்து மாதவியின் கழுத்தில் கட்டச் சொன்னாள். கோவில் பூசாரியிடம் திருநீறு பூசிக்கொள்ள நெற்றியைக் காட்டுவது போல் மாதவி அவனிடம் தலையை நீட்டினாள். வீட்டில் புது மணப்பெண்ணுக்கான மரியாதையோடு அவள் நடத்தப்பட்டாள். வீட்டு வேலைகளை அம்மாவும் தம்பி மனைவியும் பார்த்துக் கொள்ள அவள் குழந்தைகளுடனே பொழுதைக் கழித்தாள். சில தருணங்களில் புன்னகைக்கான தடயங்கள் முகத்தில் தெரிய முன்னிரவில் உறங்கி விடியலில் கண் விழிக்கும் சராசரி வாழ்க்கைக்குள் அவள் நுழைந்தாள்.

வாழ்வு சிக்கலற்றுச் செல்வதாய் தான் தோன்றியது தம்பி மனைவி அவன் மீது காரணமற்ற வெறுப்பை உமிழும் வரை. மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்த தாஸின் மூலம் ஏற்கனவே வீட்டில் முழுவிவரமும் அறிந்திருந்தனர். ஒரு பெண்ணுடன் ஊர் நீங்கி வேறொரு பெண்ணுடன் வீடு திரும்பியதைப் பற்றி தம்பியிடம் அவன் மனைவி ஏளனமாய் பேசியது எதேச்சையாக அவன் காதில் விழுந்தது. அவள் மூலம் தான் ஊர் முழுதும் அச்செய்தி பரவியிருந்தது. தேநீர்க் கடையில் தேநீர் அருந்தும் போது நாற்பது வயதாகியும் திருமணமாகாத வழுக்கைத் தலையனான மாரிமுத்தை மற்றவர்கள் ஏளனம் செய்ய “அதுக்கெல்லாம் மாப்ள மாதிரி திறமை வேணும்யா ஒன்னு போனோன லபக்குன்னு இன்னொன்னோட ஊரு வந்து சேந்தாப்பலேலே” என்று பதிலளித்தான். சில நாட்களுக்குள் ஊரார் நாவுகளுக்கு சுவாரசியமான கேலிப் பொருளாய் அவன் மாறிப் போனான்.

ஆமை தன் ஓட்டிற்குள் தலையை இழுத்துக் கொள்வதைப் போல் அவன் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்க அவனுக்குத் தோதாய் பருவ மழையும் பெய்யத் தொடங்கியது. சண்முகத்தின் நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க இடைவெளியில்லாமல் பெய்த மழையினூடே சுசீலாவோடு அவன் முயங்கும் பிம்பங்கள் அவனை அலைக்கழிக்கத் தொடங்கின. தனது ஆண்மை அவனிடம் தோற்றுவிட்டதாய் எழுந்த எண்ணங்களுக்குள் உழன்றவனிடம் வெறுப்பு ஒரு புதர்ச் செடியாய் மண்டியது. மூன்று நாட்களுக்குப் பிறகு மழை நின்ற வானில் சூரியன் இதமான ஒளியை பரப்பிய அக்காலையில் வீட்டின் கொல்லைப் புறம் அமர்ந்திருந்தான். வேலியில் காட்டாமணக்குச் செடிகள் அரக்கு நிறக் கொழுந்திலைகளை துளிர்த்திருக்க தரை முழுதும் குப்பை மேனியும் கீழாநெல்லியும் பச்சைப் போர்வையாய் படர்ந்திருந்தன. கிணற்றுக்குள்ளிருந்து இரண்டு சிட்டுக் குருவிகள் ஆகாயத்தை நோக்கிச் சிறகடித்தன. அவன் மகள் பாபுவிடம் ரயில் பூச்சியென கருப்பு அட்டைகளை காட்டிக் கொண்டிருந்தாள். ஆயிரத்திற்கும் மேலான உடல்கள் அம்மணமாய் பிணையும் ஒரு நரகமாய் கருப்பு அட்டைகள் அவ்விடந்தோறும் புணர்ந்து திரிந்தன. ஒன்றின் மீதேறி சவாரி செய்வதைப் போன்ற அதன் புணர்ச்சி சுசீலாவையும் சண்முகத்தையும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியது.

அன்றிரவு கதவின்றி திரைச்சீலை மட்டும் மறைப்பாயிருந்த அவர்களது அறையில் மாதவி உறங்கியதும் திரைச் சீலைக்குப் பின் நிழல்களாய் தெரியும் ஆட்களின் நடமாட்டம் ஓய காத்திருந்தான். விளக்கணைக்கப்பட்டதும் இரையை நெருங்கும் இரவாடியின் லாவகத்தோடு மாதவியின் அருகில் சென்றவனை ஏளனம் செய்யும் புன்னகை சண்முகத்திடம். மெதுவாக மாதவியின் அருகே சம்மணமிட்டவன் அவளது புடவையை உருவ அவள் திடுக்கிட்டு விழித்தாள். அக்கண்களையோ முகபாவத்தையோ கவனிக்க விரும்பாதவனாய் அவளது மேற்சட்டையின் கொக்கியை அவிழ்த்தான். விட்டத்தை நோக்கி படுத்திருந்த அவளது முலைகள் பக்கவாட்டில் சரிந்து கிடந்தன. பிறகு பாவாடை நாடாவை தளர்த்தி அதை இடுப்பின் மேலாக சுருட்டினான். சண்முகத்தின் ஆலிங்கனத்தில் கிறங்கிய சுசீலாவின் முனகல் அவன் செவிகளுக்குள் ஒலித்தது. மாதவியின் உடலை தனக்குத் தோதாய் வளைக்க அவள் மரக்கட்டையைப் போல் கிடந்தாள். கலவியின் உச்சத்தில் சுசீலாவின் முனகல் அலறலாய் உருமாற இன்னும் உச்சத்தை எட்டாத சண்முகத்தின் இயக்கம் அவளுள். விஜயனது உடலின் ஒவ்வொரு சிறுநாளங்களிலும் வெறுப்பில் தோய்ந்த காமம். தன்னுள் பீறிட்டெழும் விரசத்தின் இறுதித் துளியையும் இறக்கி விடும் வெறி கொண்டவனாய் அவன் மாதவிக்குள் . அவளது உணர்நிலைகள் தனது நினைவுச் சேகரத்தின் மின்னதிர்வுகளை நரம்புகளுக்கு கடத்த கைகால்கள் அசைவுறா மயக்க நிலையை மீண்டும் மாதவி அடைந்தாள். ஆனால் தாளவியலாத வலியை இம்முறை உணர்ந்தாலும் தனது இச்சைக்கு கட்டுப்படாத உடலுறுப்புகள் தன்னிலிருந்து முளைத்த தாவரங்களாயிருக்கக் கூடுமோவென்ற அச்சம் அவளுக்குள். கீறல் விழுந்த மரப்பட்டைகளிலிருந்து வழியும் பிசினைப் போல் அவளது நிதம்பத்திலிருந்து நிணநீரையொத்த திரவம் வழியத் துவங்கியது. அதிலிருந்து கிளம்பிய பூஞ்சை படர்ந்த புளித்த மாவின் வாடை அவ்வறை முழுதும் சூழ்ந்தது. அந்த துர்மணம் விஜயனை கிறுகிறுக்க வைத்தாலும் சண்முகத்தையும் சுசீலாவையும் பழிதீர்க்கப் போவதான எண்ணத்தோடு உறங்கிப் போனான்.

மறுநாள் விடியலில் பாதி திறந்த கண்களுடன் அவன் விழித்திருக்க அறைக்குள் நுழைந்த அம்மா திடுக்கிட்டவளாய் வெளியேறினாள். அவன் திரும்பி மாதவியைப் பார்த்தான். ஆடை களைந்த நிலையிலே உறங்கியவளின் கூபக மயிர் அடர்ந்த தொடையிடுக்கு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்க அவளது ஆடையை சரிசெய்து விட்டான். மாதவியின் முகத்தசை மீண்டும் எலும்போடு உறைய அவளின் கண்கள் எதிரில் நிற்பவரின் தசைகளை ஊடுருவி சூன்யத்தில் நிலை கொண்டன. அவளது மாற்றத்தை முதலில் உணர்ந்த குழந்தைகள் அவளிடம் நெருங்கத் தயங்கினர். இரவு மாதவி உறங்கிய பின் அறைக்குள் சென்று படுத்தவன் அவளைத் தீண்டக்கூடாது என்ற கட்டுப்பாடோடு உறங்கினான். உறக்கம் கனவிற்குள் அழைத்துச் செல்ல விடுதியின் அரை இருளான ஒரு தாழ்வாரத்தில் நின்றான். அவன் மட்டும் தனித்து நின்ற அத்தாழ்வாரத்தின் இடப்புறத்தில் ஒரு பெருஞ்சுவரும் வலப்புறத்தில் வரிசையாய் மூன்றிலக்க எண்களைக் கொண்ட அறைகளும் இருந்தன. மூடியிருந்த ஒவ்வொரு அறையாகப் பார்த்துச் சென்றவன் ஒளி கசிந்து வந்த லேசாக கதவு திறக்கப்பட்டிருந்த ஒரு அறையின் முன் நின்றான். உள்ளிருந்து கலவியின் முனகல் அவன் காதில் விழ பூனையைப் போன்று மெதுவாய் கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்து எட்டிப் பார்த்தான். வட்ட வடிவக் கட்டிலில் இடுப்பிற்கு வாட்டமாய் ஒரு தலையணையை வைத்தவாறு சுசீலாவினுள் சண்முகம் இயங்கிக் கொண்டிருந்தான். எண்கோண வடிவிலிருந்த அவ்வறையின் சுவர் முழுதும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்ததால் பிம்பங்களின் முடிவிலா ஆழத்திற்குள் அவர்கள் புணர்ந்தவாறிருந்தனர். விழிகளை மூடி இயங்கிக் கொண்டிருந்த சண்முகத்தை சுசீலா இமைகளை திறக்கச் செய்து கதவிடுக்கின் வழி தலையை மட்டும் நுழைத்தவாறிருந்த அவனை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டினாள். இருவரின் பார்வையாலும் திகைப்புற்றவனை நோக்கி கண்ணாடிகள் நொறுங்கச் செய்யும் ஒரு அகோரச் சிரிப்பைச் சிந்தி கலவியில் வேகமெடுத்தனர். திடுக்கிட்டு அவன் விழிக்க மாதவியின் மெலிதான மூச்சொலி அறை முழுதும் நிரம்பியிருந்தது. படபடப்பு அடங்கிய மறுநிமிடமே மாதவியின் மரக்கட்டை போன்ற உடலோடு உன்மத்தம் பிடித்தவனாய் இணைசேர்ந்தான். அவளது நிதம்பத்திலிருந்து பரவிய துர்மணம் மேலும் அடர்த்தி மிகுந்ததாய் அவ்வறையைச் சூழ உச்சத்தை அடைந்த பின் ஆடைகளால் அவளது அங்கங்களை மூடியபடி மீண்டும் உறங்கிப் போனான்.

அவனது கனவுகளில் சுசீலாவும் சண்முகமும் முயங்கித் திரிய கனவுகளை வெல்லும் வழி தெரியாது வெறிப்பிடித்தவனாய் அவன் மாதவியப் புணர முதலில் அவர்கள் அறையில் பரவிய அந்த துர்மணம் வீடு முழுதும் பரவி எல்லோர் கண்களிலும் நோய்மையின் அறிகுறிகளைக் காட்டியது. மாதவி தனது எஜமானனால் வதையுறும் வளர்ப்பு மிருகமானாள். அவளது செவிகளில் மீண்டும் விசில் சத்தம் ஒலிக்கத் துவங்கியது. சிற்றெறும்புகள் ஊரும் தனது சருமத்தை நகங்களால் பிராண்டும் ஓசை எந்நேரமும் அவளிடமிருந்து ஒலிக்கத் தொடங்கியது. பகல் பொழுதுகளில் தனியாய் அமர்ந்து ஒரு நோட்டில் ஏதோ எழுதத் துவங்கினாள். அவள் கடவுளின் நாமத்தை நோட்டு முழுதும் எழுதிக் கொண்டிருப்பதாய் அம்மாவும் தம்பி மனைவியும் பேசிக் கொண்டனர். குழந்தைகளுடனான உறவையும் முறித்தவளாய் யாரும் அண்டமுடியா தன் மனதின் தனித்தீவின் இருட்குகைக்குள் தஞ்சமடைந்தாள். அவளிடம் நிகழும் மாற்றங்களை குழந்தைகள் உள்ளுணர்வாலே உணர்ந்திருந்தன. நான்கு பெரிய அளவு நோட்டைத் தீர்த்த பின் ஐந்தாவது நோட்டில் நாளும் பொழுதுமாய் எழுதியவள் அவற்றைத் தனது பெட்டியிலேயே பத்திரப்படுத்தினாள்.

நவம்பர் மாதத்தில் அந்த ஆண்டிற்கான தீபாவளி வந்தது. அவன் தம்பி அனைவருக்கும் புத்தாடைகளை எடுத்து வந்திருந்தான். நெருப்பு பூக்களாய் மலர்ந்து ஒளி வீசிய மத்தாப்புகளை குழந்தைகள் இரவு ஆசையாய் கொழுத்திக் கொண்டிருந்தனர். மாதவி பாபுவையே பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தாப்புக் கம்பிகள் காலை பொசுக்கிவிடக் கூடுமென அம்மா நீர் நிறைந்த வாளியொன்றை அருகில் வைத்தாள். குழந்தைகள் மத்தாப்பின் தீப்பொறிகள் மலர்ந்து முடிந்ததும் தண்ணீருக்குள் கம்பியை அமிழ்த்தி பிறகு அதை வீசியெறிந்தனர். தீப்பொறிகள் எவ்வளவு மகிழ்ச்சியை அளித்ததோ அதே அளவு மகிழ்ச்சி சூடான கம்பியை நீரில் அமிழ்த்தும் போதும் குழந்தைகளுக்கு உண்டாகியது. ஒரே நேரத்தில் இரு விளையாட்டுகளை விளையாடும் உற்சாகத்தோடு அதை செய்து கொண்டிருந்தனர். மத்தாப்புக் கம்பிகளை நீரில் அமிழ்த்தும் போது எழுந்த சீறும் சர்ப்பத்தின் ஒலியை மாதவி ஏதோ பேரதிசயத்தைப் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மறுநாள் அம்மா இரைந்து கிடந்த மத்தாப்புக் கம்பிகளை சேகரிக்க பாபு ஓடி வந்து “எதுக்கு அப்பாயி”? என்றான். “இதை எடைக்குப் போட்டால் காசு தருவார்கள்” என்று சொன்ன அம்மா கொல்லைப் புறத்தில் பொருட்கள் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் அவற்றை வைத்தாள். இரண்டு சிட்டுக் குருவிகள் கிணற்று மேடையில் அமர்ந்த பிறகு கிணற்றுக்குள் பறந்தன. பறவைகள் அனைத்தையும் காக்கா என்ற பொதுப் பெயரால் மட்டும் அறிந்திருந்த பாபு “கெணத்துக்குள்ள காக்கா போயிருச்சு” என்று கத்தினான். சிறிது நேரம் கழித்து படபடப்பான சிறகசைப்புகளோடு சிட்டுக் குருவிகள் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே பறந்து சென்றன. செங்கற்களால் பாவப்பட்டிருந்த கிணற்றின் உட்புறத்திலிருந்த சிறு பொந்தில் அவை வசிப்பதை விஜயன் பாபுவிடம் விளக்கினான். அதைப் பார்த்துவிட ஆசைப்பட்டவனை அவன் வேண்டாமென அழைத்து வர சிறிது நேரங்கழித்து கிணற்றை ஒட்டியிருந்த ஒரு கருங்கல்லின் மீது செங்கற்களை அடுக்கி கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க முயன்றான். அம்மா அவனைத் திட்டியவாறு தூக்கி வந்தாள். அன்றிரவு படுக்கையில் மாதவிக்காக வெகுநேரம் காத்திருந்த விஜயன் அவளைத் தேடி கொல்லைப்புறம் சென்றான். கிணற்றுக்குள் எதையோ வெறித்திருந்த மாதவியை அவனது அழைப்புகள் எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை. விரக்தியுற்று மீண்டும் படுக்கைக்கு சென்று ஆழ் உறக்கத்திலிருந்தவனை எழுப்பிய மாதவி கிணறு வேறோர் உலகத்திற்கான ரகசிய சுரங்கப் பாதை என்றாள். அது அவனது கனவில் சொல்லப்பட்டதை போன்றதொரு குழப்பத்தில் மீண்டும் விஜயன் உறங்கிப் போனான்.

மறுநாள் விடியல் வழக்கமானதொன்றாய் இல்லை. பாயில் பாபுவைக் காணாமல் அனைவரும் தேட விஜயன் கொல்லைப் புறத்திற்குச் சென்றான். சிட்டுக் குருவிகள் கிணற்று மேடையில் துள்ளியபடி வட்டமடித்தன. உள்ளே பறக்க முயல்வதும் மீண்டும் கிணற்று மேடையில் அமர்வதுமான அதன் விநோத செய்கைகளால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். நீரின் ஆழத்திற்குள் எதையோ தேடுபவனைப் போல் பாபு தலைகுப்புற மிதந்து கொண்டிருந்தான். அடித்தொண்டையிலிருந்து அலறியபடி அவன் பின்புறமாக சரிந்து விழ அம்மாவும் தம்பியும் ஓடி வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர்.

பாயில் கிடத்தப் பட்டிருந்த பாபுவின் உடலைக் காட்டியபடி தம்பி மனைவி மாதவியைக் கட்டிக் கொண்டு அழ மாதவியோ பிரமை பிடித்தவளாய் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் இறப்பால் மாதவியின் சித்தம் கலங்கி விட்டதாக துஷ்டிக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால் அவளது கண்கள் அவ்வப்போது கூர் உளியாய் விஜயனுக்குள் இறங்குவதை யாரும் கவனித்திருக்கவில்லை. பாபுவை அடக்கம் செய்து பத்து நாட்கள் கடந்துவிட்டன. முன்பைவிட அதிவேகமாக நோட்டுகளில் எழுதிக் குவித்த மாதவி தானாகப் பேசியபடி கொல்லைப் புறத்தைச் சுற்றி வந்தாள். அவளது நடவடிக்கைகளால் கலக்கமடைந்த அவன் மகள் அப்பாயியின் சேலைக்குள் பறவைக் குஞ்சாய் ஒடுங்கிக் கிடந்தாள். மாதவியுடனான வன்புணர்வை அவன் நிறுத்தியிருந்தாலும் அவளது நிதம்பத்தின் துர்மணம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களைச் சூழ்ந்தது. எங்கிருந்து இந்த துர்மணம் வருகிறதென அவன் தம்பி எதேச்சையாய் கேட்க இங்கிருந்து தான் என தனது பாவாடையை உயர்த்திக் காட்டியிருக்கிறாள். அவளது நோட்டை எதேச்சையாய் அம்மா படித்த அன்று மாதவியின் செய்கைகள் கட்டுப்படுத்த முடியாத படி போனது. அந்நோட்டு முழுவதையும் வசைச் சொற்களாய் பயன்படுத்தும் பாலுறுப்புகளால் நிறைத்திருந்தாள். அவள் இதுவரை எழுதிக் குவித்த அனைத்து நோட்டுகளிலும் அவையே இருந்தன. அதிர்ச்சியுற்ற அம்மா அவற்றை விஜயனிடம் காட்ட மாதவி அதில் எழுதியிருக்கும் அனைத்து வார்த்தைகளையும் உச்சஸ்தாதியில் அவனை நோக்கி பிரயோகித்தாள்.

4

மனப்பிறழ்வடைந்த மாதவியை இரண்டு மாதங்கள் வீட்டில் வைத்திருந்தனர். திடீரென ஆடைகளைக் களைந்தவாறு கூச்சலிடுவதும் எச்சிலை உமிழ்வதும் சரமாரியாக வசைச் சொற்களை பொழிவதுமாய் இருந்தவளை கயிற்றால் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவன் மகளும் மாதவி பேசிய வசைச் சொற்களை தனிமையில் அமர்ந்து முனுமுனுத்தது அவனை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கியது.

பௌர்ணமி நிலவு வீட்டில் வெறியாட்டம் ஆடிய மறுநாள் வாடகைக்கு ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு ஏர்வாடியை நோக்கிப் புறப்பட்டனர். மாதவி தனது விரித்த கூந்தலால் முகத்தை மூடியவாறு சாதுவாக அவர்களோடு பயணித்தாள். முதல் நாள் அவள் ஆடிய பேயாட்டத்தினால் விளைந்த உடற்சோர்வா அல்லது காலையில் அவள் அருந்திய தேநீரில் தம்பி கலந்த மாத்திரையின் விளைவா எனத் தெரியவில்லை.

தர்காவின் முன் நின்ற வண்டியிலிருந்து இறங்க வெயில் சுளீரென அவர்கள் முகத்தில் அறைந்தது. தர்காவைச் சுற்றிலும் இளம்பச்சையாய் தழைத்திருந்த வேப்ப மரங்கள் நேசப் புன்னகையுடன் அவர்களை அழைக்க அருகே கடையிலிருந்து ஒருவன் மாதவியைக் கண்டதும் வேகமாய் அருகில் வந்தான். ஒரு மனநலக் காப்பகத்தின் பெருமைகளைப் பற்றிக் கூறியவனிடம் ஒப்புதலாக தலையசைத்து தர்காவிற்குள் நுழையும் முன்பாக அம்மாவிடம் வேறொரு ஆள் ஓடி வந்து பேச்சுக் கொடுத்தான். “யோவ் அதெல்லாம் நான் பேசியாச்சு நீ கெளம்பு” என்று முதல் நபர் குரல் கொடுக்க அவர்கள் காலணிகளை கழட்டி விட்டு உள் நுழைந்தனர்.

வெயிலில் சூடேறியிருந்த மணற்பரப்பு கால்களை பொசுக்கியது. தர்காவிற்கு அருகில் ஒரு முதியவள் வாளியிலிருந்து நீரைத் தெளித்துக் கொண்டிருந்தாள். ஆங்காங்கே கூரையின் கீழ் வறியவர்கள் ஏராளமானோர் விட்டேந்தியாய் எதையோ வெறித்திருந்தனர். மனிதர்களின் துயரங்கள் அவர்கள் கண் முன்னால் அந்தரத்தில் மிதந்தவாறு அவர்களை அலைக்கழிப்பதாய் தோன்றியது. ஒரு மாந்திரீகமான முனுமுனுப்பு எங்கும் நிறைந்திருந்தது. பல நிறத் தாயத்துகளை தரையில் பரப்பியிருந்தவரிடம் சாம்பிராணி, பேரிச்சை முதலியவற்றை வாங்கிய பின் அம்மாவும் தம்பியும் மாதவியை மந்திரிப்பதற்கு அழைத்துச் சென்றனர். அவன் தர்காவிற்குள் நுழைந்தான். தொழுகையின் அடையாளங்களை நெற்றியில் சுமந்தவர்கள் குர் ஆனை ஓதியவாறிருந்தனர். பர்தா அணிந்த இளம் பெண்களும் முதியவர்களும் அரபு மொழியின் ஓசை நயத்திற்கேற்ப அசைந்தாடுவதாகத் தோன்ற சிலர் மனப்பாடமாய் ஆகாயத்தை நோக்கி ஒப்புவித்தனர். வேம்புகளிலிருந்து வீசிய காற்று அங்கே ஓதப்பட்ட குர் ஆனின் வாசங்களை வெளி உலகிற்கு சுமந்து சென்றது. வெகு நாட்கள் கொந்தளிப்பாய் இருந்த அவன் மனம் சற்று அமைதியடைந்தது.

கல்லறைகளை வேடிக்கை பார்த்தவாறு சுற்றி வந்தான். இரு கண்களும் வேறு வேறு திசைகளை நோக்கியிருந்த ஒரு சிறுவனை அவனது பாட்டி சங்கிலியால் பிணைத்தவாறு அழைத்து வந்தாள். அவன் திடீரென ஒரு கல்லறையைச் சுற்றியிருந்த சுவரில் “அண்ணா அண்ணா” என கூச்சலிட்டவாறு தலையை மோதிக் கொண்டான். கிழவி குச்சியால் அவனை விளாச சற்று நேரம் அமைதியடைந்து மீண்டும் கூச்சலிட்டான். கிழவி மீண்டும் விளாசினாள். அவனுக்கு என்னவோ போலிருந்தது. வேறு யாரும் அதை பொருட்படுத்தவில்லை. வேம்பின் நிழலில் இளைப்பாறிய ஒரு முதியவரின் அருகில் அமர்ந்தான். அவர் அவனை திரும்பிப் பார்க்காமலே “அது தான் பெரிய பாவா அடங்குன இடம்” என்றார். அவரது முகச் சுருக்கங்களையே கவனித்திருந்தவனை சற்று நேரம் வெறித்தவர் மையக் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டி “அது தான் மூலஸ்தானம்” என்றார். அவன் தலையசைக்க மற்ற கல்லறைகளைச் சுட்டிக் காட்டி “இதெல்லாம் அப்புறமா வந்தது” என்றவாறு மீண்டும் அவரது எண்ணங்களுக்குள் ஆழ்ந்து விட்டார்.

அவர்கள் தர்காவை விட்டு வெளியே வர அவர்களுக்காக காத்திருந்த மன நலக் காப்பகத் தரகன் காட்டு தர்காவிற்குச் செல்லும் வழி என்ற அறிவிப்புப் பலகைச் சுட்டிய வழியில் அழைத்துச் சென்றான். மிகவும் சோர்ந்திருந்த மாதவியை கைத்தாங்கலாக இழுத்துச் சென்றனர். அப்பகுதி மனநலக் காப்பகங்களால் நிறைந்திருந்தது. தெருவில் கேட்பாரற்று சில பைத்தியங்கள் அலைந்து திரிய அங்கு எழும்பிய மனிதர்களின் விநோதக் கூச்சல்கள் அவன் அடிவயிற்றைப் பிசைந்தது.

மாதவியை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களில் கையெழுத்திட்டதும் காப்பக உரிமையாளர் மனநோயாளிகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளையும் ஒவ்வொரு மாதமும் நோயாளியை குடும்ப நபர்கள் வந்து பார்க்க வேண்டிய அவசியத்தையும் கூறினார். நேரில் வர இயலவில்லையெனில் வங்கி வரைவோலையாவது அனுப்பி விட வேண்டுமென்றார். அவர் கூறியவற்றிற்கெல்லாம் தலையசைத்த பின் மாதவியை ஒப்படைத்து விட்டு ஊர் திரும்பினர்.

மூன்று மாதங்கள் கழிந்த பின் அவனும் அம்மாவும் பேருந்தில் மாதவியைப் பார்க்கச் சென்றனர். நான்கு நாட்களுக்கு முன் மழிக்கப்ப்பட்ட அவளது தலையிலிருந்து லேசாக மயிர் அரும்பியிருந்தது. திறந்தவாறே இருந்த அவளது வாயின் ஓரங்கள் வெடித்துக் கிடந்தன. குடிசைக்குள் ஒரு தூணில் இணைக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு தூணிலும் மூன்று நபர்களாவது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர். சங்கிலிகள் உடலில் உராய்ந்து ஏற்படுத்திய புண்களில் ஈக்கள் மொய்த்தவாறிருந்தன. இருபதுக்கும் மேலான பெண்கள் இருந்த அக்குடிசையின் அடுத்த குடிசையில் ஆண்களைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர். அம்மா வாங்கி வந்த வாழைப் பழங்களை ஒவ்வொன்றாய் அப்பைத்தியங்களுக்குத் தந்தாள். மலசலங்களின் துர்நாற்றத்தால் நிறைந்திருந்த அக்குடிசை அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தியது. அவர்களின் ஆடைகள் உண்மையில் என்ன நிறத்தில் இருந்திருக்கும் என்பதை எவ்வளவு முயற்சித்தும் அவனால் யூகிக்க முடியவில்லை. உடல் அழுக்குகள் அவர்களது சருமங்களில் பல அடுக்குகளைக் கொண்ட திட்டுகளாக படர்ந்திருந்தன. அம்மா கிளம்பாலாமென்று வெளியேற மாதவி அவனையே வெறித்துப் பார்த்தவாறு ஏதோ முனகினாள். அவளருகே மெதுவாய் தலையைக் கொண்டு போனான். “பாபுவுக்கு நீச்சல் தெரியல” என்றவள் பலங்கொண்ட மட்டும் அவன் முகத்தில் எச்சிலைக் காறி உமிழ்ந்தாள். வறண்டு போன அவளது உமிழ்நீர் சுரப்பிகள் சில துளிகளை மட்டும் அனுமதித்தன. அவ்விடத்தை விட்டு அவர்கள் வெளியேற காப்பக ஊழியன் பக்கத்துக் குடிசையில் ஒரு பைத்தியத்தைப் பிரம்பால் விளாசிக் கொண்டிருந்தான். அப்பைத்தியத்தின் குலை நடுங்கச் செய்யும் ஓலம் அநாதவராய் ஏர்வாடியின் வெயிலில் கரைந்தது.

அவன் நினைவிலிருந்து மாதவி மறையத் தொடங்கியிருந்தாள். தம்பியுடன் தோட்ட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். மாதங்கள் ரயில் பெட்டிகளாய் கடந்து கொண்டிருந்தன. ஒரு நாள் காலை தேநீர் கடைக்குச் சென்று வீடு திரும்பியவனின் காலைக் கட்டிக் கொண்டு அம்மா கதற பதறியவனாய் மகளைத் தேடினான். அவன் மகள் மூலையில் அச்சத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தம்பியும் தம்பி மனைவியும் அருகிலேயே கலங்கிய கண்களுடன் நின்றிருக்க எதற்கு அழுகிறாள் எனப் புரியாதவனாய் தொலைக்காட்சியைத் திரும்பிப் பார்த்தான். கரிக் கட்டையாய் உடல்கள் அலங்கோலமாய் சிதறிக் கிடக்க புகை மண்டிக் கிடந்த இடத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ‘ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் தீ; சங்கிலியால் கட்டப் பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகள் தப்பிக்க முடியாதவாறு உடல் கருகி பரிதாபமாய் உயிரிழந்தனர்’ என்ற செய்தி கீழே ஒளிபரப்பாகியது.

உயிரோடு பொசுங்கி கரியாய் அடுக்கப் பட்டிருந்த இருபத்தெட்டு உடல்களில் மாதவியுடையது எதுவெனத் தெரியாமல் அழுதாவாறே அம்மா ஊர் திரும்பினாள். ஒரு சுமை தாங்கிக் கல்லில் தன் தலைச்சுமையை இறக்கி வைத்த உணர்வே அவனுள் நிறைந்திருந்தது.

5

மாதவியின் நினைவாய் கருகிய உடல்கள் புகைப்படத்தோடு தலைப்புச் செய்தியாய் இடம்பெற்றிருந்த நாளிதழ் ஒன்றை தன் பெட்டிக்குள் பத்திரப்படுத்தினான். காகிதங்களை உண்ணும் அந்துப் பூச்சிகளுக்கு அந்நாளிதழ் இரையாகாதிருக்க சில அந்துருண்டைகளை போட்டு வைத்தான். அவனது விடுதலை உணர்வு வெகு நாட்கள் நீடித்திருக்கவில்லை.

முழுநிலவும் தன்னை இருள் போர்வைக்குள் ஒளித்துக் கொண்ட ஒரு இரவு. குளிர் ஆயிரம் ஊசிமுனைகளாய் கம்பளிக்குள் ஊடுருவி சருமத்தை துளைத்த அந்த இரவில் முதன் முதலாய் ஊழித்தீ அவனுடலை பொசுக்கத் தொடங்கியது. கம்பளியின் கதகதப்பை மீறியதொரு வெப்பம் அவனுடலில் பரவ வியர்வையில் முழுதாய் நனைந்து கண்விழித்தான். கைகளை நீட்டி தொட்டுவிடும் தூரத்தில் செம்மண் நிறத்தீ மனித உருவில் எரிந்து கொண்டிருந்தது. நெருப்பாய் எரியும் அருவம் மாதவி என்பதை உணர்ந்த வேளையில் அவன் ரத்தநாளங்களுக்குள் திகுதிகுவென தீ பரவத் தொடங்கியது. வெறுமை செந்தழலாய் மனித உருக்கொண்டு அவனை அச்சுறுத்த முடக்குவாதம் வந்தவனாய் கைகால்களை அசைக்க முடியாது தவித்தான். அனலின் கடுமை உடல் தாங்கும் அளவை மீற உயிர்சக்தியை உறுப்புகளுக்கு பாய்ச்ச கண்களை முடினான். தீயில் கருகும் மனநோயாளிகளின் மரண ஓலங்கள் துல்லியமாய் செவிகளில் ஒலிக்க இடிதாக்கிய ஆலயமணியின் கீழ் நின்றவனாய் அதிர்ந்து போனான்.

அருவமாய் கொழுந்து விட்டெரிந்த அனல் தனது நாவுகளை சுருட்டிக் கொள்வதைப் போல் அணைய சிறிதுசிறிதாக மாதவியின் உருவம் புலனாகத் தொடங்கியது. அவனுடன் வீடு தங்கியிருந்த உருவிலிருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட உருவிற்கு மாறினாள். அவளைப் பிணைத்திருந்த சங்கிலி தரையில் உராயும் ஒலி தண்டுவடத்தை சிலிர்க்கச் செய்தது. மயிர் நுண்ணியதாய் முளைத்த தலையோடிருந்தவள் ஓரங்கள் வெடித்துப் புண்ணாகிய வாணியொழுகும் வாயுடன் அவனை விழுங்கக் காத்திருந்தாள். கட்டளைக்கு அடிபணிய மறுத்த உடலிலிருந்த முழுபலத்தோடு அலற அவன் முயற்சிக்க குரல்வளையை யாரோ கைகளால் நெறிப்பது போன்ற உணர்வு எழத் தொடங்கியது. பெருங்குரலெடுக்க முயற்சிப்பதும் குரல்வளையை நெறிக்கும் அருவக் கைகளின் இறுக்கமும் ஒத்திசைவாக நிகழ வெளியாட்களை அழைக்கும் தனது முயற்சி பயனற்றது என்பதைப் புரிந்து கொண்டான். இதை அவன் மட்டுமே அனுபவித்தாக வேண்டும். தனியாகவே கடக்க வேண்டும்.

சடுதியில் மாதவின் உடலெங்கும் தீ பரவத் தொடங்கியது. அவள் அலறவில்லை. ஆனால் அவளது கண்கள் வெந்து தணிந்த எல்லா பைத்தியங்களின் ஓலங்களையும் எதிரொலித்தது. அவளுடலில் கொழுந்து விட்டெரிந்த தீ அவளைப் பிணைத்திருந்த சங்கிலியிலும் பரவியது. சங்கிலி தரையில் உராயும் ஓசையும் நெருப்பின் அனலும் கண்களை மூடினால் கேட்கும் மரண ஓலங்களும் அவனை மீளமுடியாத சித்ரவதைக்குள்ளாக்கியது. தீயடங்கி முழுதாய் கரிந்து கிடந்த மாதவியின் உடலிலிருந்து கசியத் தொடங்கிய புகையின் நெடி அவன் நாசிக்குள் நுழைந்தது. தீயணைக்கப்பட்ட அடுப்பிலிருந்து வெளியில் எடுத்த விறகுக் கட்டையாய் மாதவி கிடந்தாள். தற்போது தனது உடலை அசைக்கக் கூடும் என்ற உணர்வு எழ விரல்களை மட்டும் முதலில் முயற்சித்தான். குளத்திலிருந்து கரைக்கு வீசிய மீன்குஞ்சுகளாய் விரல்கள் துடித்தன. உடலுறுப்புகள் அவனது இச்சைக்கு அடிபணியத் துவங்கின. அந்த அறையை விட்டு எழுந்து ஓட நினைத்த தருணத்தில் பொசுங்கிய முடிகளோடு விழியை மூடியிருந்த இமைகள் திறந்து கொள்ள குருதிச் சிவப்பேறிய கண்களால் அவனை வெறித்தாள். அப்பார்வையின் உக்கிரத்தில் மூர்ச்சையானவன் விழித்தபோது கீழ்வானில் சூரியன் உச்சியை அடைந்திருந்தது.

அன்றைய பகல் முழுதும் மந்தமாய் அவன் செய்யும் வேலைகளை கவனித்த அம்மா அவனுக்குள் ஏதோ நிகழத் துவங்கியிருப்பதை அறிந்திருந்தாள். அதன் பிறகான ஒவ்வொரு இரவும் மனநோயாளிகளின் மரண ஓலங்கள் அவனை சிதைக்கத் தொடங்கின. எதையோ சதா சிந்திப்பவனாய் அவன் அலைந்து திரிய அவனது தினசரி வேலைகளையே யாரேனும் நினைவுறுத்த வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு இரவும் மீளமீள கொழுந்து விட்டெரிந்து அணைந்த பின் புகை கிளம்பும் வெந்த உடலாக மாதவி அவனது அறைக்கு வந்து போனாள். அவன் மீள முடியாத மனதின் சிடுக்குகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

அரைகிறுக்கனுக்கான மரியாதையோடு ஊர் அவனை நடத்தத் துவங்கியிருக்க ஒரு காலை வேளையில் கொல்லைப் புறத்தில் முருங்கைப் பூவிதழ்களை கொறித்துக் கொண்டிருந்த அணிற்பிள்ளைகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அம்மா கிணற்றடியில் துணிகளை அலசி தம்பி மனைவியிடம் தர அவள் துணிகளைப் பிழிந்து கொடியில் உலர வைத்தாள். முருங்கையின் அடிமரத்தை முழுதாய் ஆக்கிரமித்திருந்த கம்பளிப் புழுக்களைப் பற்றி அம்மா பேசத் தொடங்க அப்போது தான் அவற்றை கவனித்தான். தினவேற்படுத்தும் மெல்லிய சுனைகள் ஒளிர அடிமரம் முழுதும் அவை படர்ந்திருந்தன. துணிகளை உலர்த்திய பின் வீட்டிற்குள் சென்ற அம்மா கிழிந்த துணியை சவுக்கு கட்டையின் நுனியில் சுற்றினாள். தம்பி மனைவி மண்ணெண்ணையை அதன் மீது ஊற்றி நெருப்பை பற்ற வைக்க தீப்பந்தம் தயாரானது. அத்தீப்பந்தத்தை முருங்கையின் அருகில் கொண்டு சென்ற அம்மா தீயை அடிமரத்தின் மீது காட்ட அனலின் வெம்மையில் புழுக்கள் துடிதுடித்தவாறு கீழேவிழத் தொடங்கின. புழுக்கள் படபடவென்று எரியும் ஓசையும் கருகும் நெடியும் சிறிது நேரத்திலெல்லாம் பைத்தியங்களின் மரண ஓலங்களை அவன் செவிகளுக்குள் ஒலிக்கச் செய்தது. தீயிலிருந்து தப்ப முடியாத புழுக்கள் ஒன்றின் மீது ஒன்றேறி நெருப்பை உதற அம்மா வெகு சுவாரசியமாய் மரத்தைச் சுற்றி சுற்றி வந்தாள். மரண ஓலங்களால் கபாலம் சுக்கு நூறாய் வெடிக்கவிருந்த தருணத்தில் ஓடிச் சென்று தீப்பந்தத்தைப் பறித்தான். திடுக்கிட்ட அம்மா என்னவென்று புரியாது விழிக்க கிணற்றுக்குள் தீப்பந்தத்தை வீசியெறிந்தான். ஒரு தாமரை இலையாய் தலை குப்புற மிதந்திருந்த பாபுவின் முதுகில் தீப்பற்றி எரிய அவனது பேரைச் சொல்லிக் கூச்சலிட்டவாறு கிணற்றுக்குள் குதித்தான். சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த கரிய உடல்கள் நீரின் ஆழத்திற்குள் அவனது கால்களைப் பிடித்திழுத்தன. அம்மா மாரில் அடித்துக் கொண்டு கதறினாள். உள்ளீடற்ற உருளையான கிணற்றுச் சுவர்கள் எதிரொலித்த அம்மாவின் அலறல் ஓசை தண்டுவடத்திற்குள் ஆணிகளைச் சொருகி சுத்தியால் அடிப்பது போல் அவனுள் இறங்கியது. பதைபதைப்போடு எட்டிப் பார்த்த தலைகள் உருவாக்கியிருந்த வட்டத்தின் நடுவே தெரிந்த துண்டு நீலவானம் மீட்சிக்கான நம்பிக்கையாய் அவனுள் மிஞ்சியிருந்தது. ஆனால் கால்களைச் சுற்றிய சங்கிலிகள் அவனை ஆழத்திற்குள் இழுத்தன. பனிக்குடத்தில் கரணமிடும் சிசுவைப் போல வட்டமிட்டவன் உந்து விசையெது ஈர்ப்பு விசையெது எனப் புரியாது குழம்பிப் போனான். வேறோர் உலகிற்கான ரகசிய சுரங்கப் பாதை திறந்து கொண்டதை உணர்ந்தவனாய் கருந்துளையின் ஆழத்தை நோக்கி நீந்தினான். செவிப்பறைகளை கிழியச் செய்யும் உயரழுத்தத்தால் உணர்விழந்தவனை ஊர்க்காரர்கள் ஒன்று கூடி கயிற்றால் மீட்டனர். யாரோ வைத்த செய்வினை தங்கள் குடும்பத்தை ஆட்டுவிப்பதாக குளிரில் நடுங்கிய அவனது உடலை கட்டிக் கொண்டு அம்மா அழுதாள்.

6

வருடங்கள் சர்க்கரை வியாதிக்காரனின் மூத்திரப்பையைப் போல் விரைவாய் கழிந்தன. இரவுகளில் மாதவி அவனருகில் அமர்ந்துவிட்டுச் செல்வாள். அவளது அருகாமைக்கு தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான். மறு திருமணம் குறித்து சற்றும் அக்கறை கொள்ளாதவனாய் அவனிருக்க விதியின் பகடைக் காய்கள் அவனை அடுத்த நகர்வை நோக்கிச் செலுத்தியது.

தனலெட்சுமி புதுக்கோட்டையில் அவன் மகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை. ஒரே ஊர்க்காரி. ஐந்து பெண் குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவள். முதல் நால்வருக்கும் திருமணமாகி முடிய அவளுக்கு முப்பத்தி ஆறு வயதாகியிருந்தது. மாலை பள்ளி முடிந்ததும் ஒரு தனியார் பயிற்சி வகுப்பு நிறுவனத்தில் வகுப்பெடுத்துவிட்டு அவனது ஆட்டோவில் ஊர் திரும்புவாள். அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட அவள் முதிர்கன்னியாய் இருப்பதைத் தவிர வேறெதுவும் காரணம் இருந்திருக்கவில்லை. இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயத்திற்கு நாட்கள் குறிக்கத் தயாராகினர்.

மறுநாள் நிச்சயத் தேதியை அம்மா அவனிடம் சொல்ல மாதவியின் பெயரைச் சொல்லி அழ ஆரம்பித்தான். அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் மாதவிக்குச் செய்ய வேண்டிய சடங்கை செய்து விடுவோம் என்றாள்.

சதுரக் கட்டத்திற்குள் அமர்ந்தவாறு மந்திரங்களை ஓதிய புரோகிதன் அவன் முன் ஒரு தட்டில் சோற்றுப் பிண்டங்களை அடுக்கியிருந்தான். சடங்குப் பொருட்களை அவன் ஆற்றில் கலக்கச் சொன்னதும் சில்லிட்டிருந்த நதியில் விஜயன் இறங்கினான். கடலை அடைந்த நதி மீண்டும் தனது மூலத்தை நோக்கி வேறு பாதையில் பயணித்ததைப் போல் சுழலுக்குள் சிக்கியிருந்த தனது வாழ்வில் அவன் நதியாய் மீண்டும் கடலுக்காக ஏங்கியிருந்தான்.

மாதவிக்கான கிரியை முடிந்து ஒரு வாரமாகியது. என்ன நேர்ந்தாலும் இமைகளைத் திறப்பதில்லை என்ற முடிவோடு இரவுகளைக் கடந்துவிட்டான். அன்றிரவு தனலெட்சுமியை ஆட்டோவில் அழைத்து வருகையில் காமம் ஒரு தினவாய் உள்ளிருந்து அவனை அரிக்கத் தொடங்கியது. திருவரங்குளத்தை தாண்டி வலது புறம் தைலமரக் காடுகளும் இடதுபுறம் முந்திரி தோப்புகளும் இருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இடப்புறம் இத்திமரத்தின் அருகிலிருந்த ஒரு பாதைக்குள் வண்டியை திருப்பினான். கண்ணாடியில் தனலெட்சுமியைப் பார்க்க இதற்காதத் தான் காத்திருந்தவளாய் அவளது பார்வை அவனை உசுப்பேற்றியது. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் தனலெட்சுமியின் கையைப் பற்றியவாறு முந்திரி தோப்பிற்குள் அழைத்துச் சென்றான். அவனைப் பின் தொடர்ந்தது ஒரு நிழலுருவம். இன்னும் இரண்டு நாட்களில் முழுவட்டமாய் காட்சியளிக்கக் காத்திருந்த நிலவு பிரகாசமான வெண்ணிற ஒளியை அந்நிலப்பரப்பு முழுதும் பொழிந்தது. சிறுசிறு குன்றுகளாய் முந்திரி மரங்கள் தரை முழுதும் படர்ந்திருந்தன. வலதுபுறம் கம்பிவேலியின் அருகே தனித்து நின்ற தைலமரத்தின் உச்சாணிக் கொம்பில் அந்த நிலா இருந்தது. தைலமரத்திலிருந்து இரண்டு பெரிய கிளைகளை ஒடித்தான். பட்டியக் கற்களின் இடையே அமைக்கப் பட்டிருந்த கம்பி வேலியில் ஒரு பறவையின் சிறகசைப்புக் கேட்டது. கம்பிவேலியில் கட்டப்பட்டிருந்த வலையில் ஒரு கவுதாரி அகப்பட்டிருந்தது. கொம்பிலிருந்து தைல இலைகளைப் பறித்து தரையில் பரப்பினான். தனலெட்சுமியும் எதற்கெனப் புரிந்தவளாய் அதையே செய்தாள். சிறிது நேர இடைவெளிகளில் ஒரே இடத்தில் படபடவென அடித்துக் கொண்ட கவுதாரியின் சிறகசைப்புகள் கேட்டன.

உடல்கள் தரையில் உராய்ந்து நோகாதவாறு இலைகளை மெத்தைகளாய் பரப்பிக் கொண்டனர். நிலவில் பிரகாசித்துக் கொண்டிருந்த தனலெட்சுமியின் கண்களை ஊடுருவிப் பார்த்தான். பல வருடங்களாக காத்திருந்த விரகதாபம் அவள் கண்களில் தெரிய அவனது பக்கவாட்டுப் பார்வைப் புலனில் ஒரு கரிய உருவம் நிழலாடியது. தனலெட்சுமியின் மீது தனது கைகள் படாமல் தலையை மட்டும் சாய்த்தவாறு அவளது மேலுதட்டை உதடுகளால் கவ்வி பிறகு விடுவித்தான். திறந்து கொண்ட அவளது உதடுகள் தும்பியின் சிறகுகளாய் துடித்தன. இந்த முழுஇரவும் நமக்காகத்தான் என்பதாய் அவர்கள் சமவெளியில் பாயும் நீரோடையாய் முத்தமிட்டுக் கொண்டனர். ஆடைகளைக் களைந்தவாறு தைல இலைகளாலான படுக்கையின் மீது அவள் சாய ஒரு திராட்சைக் கொடியாய் அவள் மீது படர்ந்தான். அவள் உடல் முழுதும் அவன் உதடுகளைப் பதிக்க அவளின் முனகல் கள்பானையில் நுழைந்த தேனீயின் ரீங்காரமாய் அவ்விடத்தைச் சூழ்ந்தது. பறக்க முடியாத கவுதாரி இறகுகளின் படபடப்பு ஓசையோடு தனலெட்சுமியை அவன் தழுவிக் கொண்டிருந்தான். தேனீயின் ரீங்காரம் சற்றென நிற்க ஏனென்று புரியாமல் அவள் முகத்தைப் பார்த்தான். வலது புறம் திரும்பியிருந்த அவளது முகம் அதிர்ச்சியில் சிலையாகியிருக்க விரகதாபம் வடிந்த கண்கள் அச்சத்தில் உறைந்திருந்தன. அவள் பார்வைத் திசையில் அவன் தலை திருப்ப மாதவி கரிக்கட்டையாய் உதிரக் கண்களுடன் வெறித்திருந்தாள். எல்லாம் பிரமையென மனதில் முனுமுனுத்தவாறு தனலெட்சுமியின் பார்வை தன் மீது விழுமாறு அவளது தலையைத் திருப்பினான். ஆனால் அவளது தலை அனிச்சையாய் மாதவியின் உருவத்தை நோக்கியே திரும்பியது. பறக்க இயலாத கவுதாரி மீண்டும் தன் சிறகுகளை படபடத்தது. இதை எப்படியாவது கடந்து விட வேண்டுமென அவளது வழவழப்பான தொடைகளை வருடியவாறு கூபகத் தசைகள் இளக கால்களை விரித்து யோனிக்குள் தன் ஆள்காட்டி விரலை நுழைத்தான். முழுதாய் உள்நுழைந்து மீளவும் ஆள்காட்டி விரலோடு நடுவிரலையும் சேர்த்தவாறு உள்நுழைத்தான். தனது தடித்த குறியை தற்போது அவளது யோனி உள்வாங்குமென அறிந்து கொண்டவன் மெதுவாய் அவளது நிதம்ப துவாரத்தின் வழி தனது குறியை நுழைத்தான். தீக்கங்குகளால் கனகனத்துக் கொண்டிருந்த அடுப்பிற்குள் குறியை நுழைத்தது போன்ற கொதிப்பு அவன் உயிர்நாடியில் பரவியது. உயிர் உணர சாத்தியமான அதீத வலியை உணர்ந்தவனாய் கண்களை மூட வெடித்துச் சிதறும் வின்மீன்களின் பிம்பங்கள் தோன்றின. அலறியவாறு அவளது நிதம்பத்திலிருந்து வெளியில் இழுத்த அவனது குறியானது தீயில் வெந்து முழுதாய் தோலுரிந்து இரத்தச் சிவப்பாய் இருந்தது. புகை மெல்லிய நூலாய் கசிந்த தனது குறியைப் பார்த்து அவன் கதற தனலெட்சுமியின் யோனிக்குள் கொழுந்து விட்டெரிந்த தீயின் சுவாலை சர்ப்பத்தின் நாவாய் அவனைத் தீண்ட முயற்சித்து மீண்டும் அவளது நிதம்பத்திற்குள் உள்ளடங்கியது.

***

Comments are closed.