நெம்பர் ப்ளீஸ் … ( கட்டுரை ) / – சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

download (10)

அப்போது சென்னையில் நான் வசித்தேன். ஒரு செல்போன் வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக எனக்கு ஒரு கனவு இருந்தது. அப்போதுதான் ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய் போனை அறிவித்திருந்தது.
எல்லோரும் போனை வாங்குவதும் சரளமாக எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவதுமாக இருக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஆனாலும் நமக்கு எதற்கு போன் என்று வாங்குவதை தள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்தேன். அதற்கு காரணம் ஒரு காலகட்டம் வரையில் வருகிற போனுக்குரிய கால் கட்டணத்தையும் நாம்தான் செலுத்த வேண்டும் என ஒரு விதியிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.
செல்போன்கள் வந்த புதிதில் பெரும் பணக்கார்கள் வைத்துக்கொண்டிருக்கிற சமாச்சாரமாக இருந்தது, ஒரு நிமிடத்திற்கு ஏழு எட்டு ரூபாய் என கட்டணம் இருந்ததாக நினைவு . கூடவே அந்தப் போனுக்கான கட்டணம் அழைப்பவருக்கும் அழைப்பை ஏற்பவருக்கும் என இருவழிக ட்டணங்களாக ஒரு கால கட்டம்வரை இருந்தது.

அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதன் முதலாக டெலிபோனை எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு கைத்தறி சொசைட்டியில்தான் பார்த்தேன். கருப்பு வண்ணத்தில் பெரிய அளவில் அது இருந்தது. அந்தப் போனில் மணியடித்தால் 500 அடி தொலைவிலிருக்கும் எங்கள் கூரை வீட்டிற்கு பகலிலேயே கேட்கும். இரவில் என்றால் சொல்லவே வேண்டியதேயில்லை. அது எங்கள் வீட்டிலேயே அடிப்பதைப் போலக் கணீரெனக் கேட்கும்
அந்தப் போனை எடுத்து பேசுபவர்களின் குரல் எங்கள் வீட்டிற்கே கேட்கும். ஹலோ ஹலோ என போனை எடுத்தவுடன் சொல்வார்கள். இந்த ஹலோ என்றால் என்ன பாஷை என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் ஹலோ என்பது போனில் முதலில் பேச வேண்டிய சொல் என்பது மட்டும் அறிவேன்.

எங்கள் உறவினர்கள் எல்லோரும் அந்த சிறிய கிராமத்திலேயே வசித்து வருவதால் எனக்கோ அல்லது எங்கள் வீட்டினருக்கோ எப்போதும் போன் வர வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அப்புறம் அப்போது அதாவது எழுபதுகளின் தொடக்கத்தில் அந்த ஊரிலேயே அந்த கைத்தறி சொசைட்டியில்தான் போன் இருந்தது. அவர்களுக்குதான் அலுவலக ரீதியாக பேசவேண்டிய தேவையும் இருந்தது.

ஊரில் யாருக்கும் வெளியில் வியாபார ரீதியான தொடர்புகள்கூட அப்போது பெரிதாக இருந்திருக்கவில்லை. அல்லது அப்படி அவசரமாக பேசி சாதிக்க வேண்டியதாக எந்தக் காரியங்களும் யாருக்கும் இருந்திருக்கவில்லை என இப்போது நினைக்கிறேன். எல்லாரும் விவசாயம் அல்லது கைத்தறி தொழில்களைதான் செய்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு போன் ஒரு தேவையான விஷயமாக இருந்திருக்கவில்லை என்பதோடு அதை எப்படி பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரியாது.

எழுபதுகளின் முன் பகுதியில் என நினைக்கிறேன். என் பெரியப்பாவின் மகன் – எனக்கு அண்ணன் – ஒருவர் வெளியூர் போய்விட்டு வந்திருந்தார். அவர் யாருக்கோ அந்த சொசைட்டியின் போன் எண்ணைக் கொடுத்து வந்ததாக சொன்னார்.அந்தப் போன் எண் 22 என்பதாகும். அப்போது சேலம் மாவட்டம் ஒன்றாக இருந்தது. நாமக்கல் மாவட்டம் பின்னால்தான் தனியாக பிரிந்தது. இப்போது எங்கள் ஊர் நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்திருக்கிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அப்போது சேலம் மாவட்டம் என்பது மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது என்பதை சொல்வதற்குதான்.

இங்கே மணியடித்தால் நாம் அழைப்பவருக்கு எப்படி போய் சேருகிறது என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. அது ஒரு மாயஜால கதைகளில் வருகிற மந்திர சமாச்சாரம் என்றுதான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். காரணம் அப்போது நான் அம்புலி மாமா கதைகளைதானே வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த போன் சமாச்சாரமும் அப்படிதான் போலும் என நான் கற்பனை செய்திருந்தேன்,.
பின்னால் நான் எங்கள் கிராமத்துப் பள்ளியில் 5 ஆம் வகுப்பை முடித்து ஆறாம் வகுப்பிற்குப் போய் சேர்ந்தபோதுதான் இன்னொரு விஷயம் தெரிந்தது.

ஆமாம் என்னுடன் இப்போது மற்ற ஊர்களில் இருந்து என்போன்றே வந்திருந்த பல பள்ளி மாணவர்கள் ஒன்றாக படிக்கிற இடமாக ஆறாம் வகுப்பு மாறியிருந்தது. அதாவது பல ஊராட்சிப் பள்ளிகளின் மாணவர்கள் அந்த உயர்நிலைப் பள்ளிக்கு படிக்க வந்து சேர்ந்திருந்தார்கள்
அப்படி என் வகுப்பில் சேர்ந்த மாணவன் ஒருவனின் வீட்டில்தான் அந்த பெரிய ஊருக்கான தொலைபேசி அலுவலகம் இருந்தது என அவன் சொன்னான்.

அவன் அப்பாதான் அந்த அலுவலகத்தில் இருந்த ஒரே பணியாளர். பின் பகுதியில் அவர்கள் வீடும் முன்பகுதியில் தொலைபேசி அலுவலகமும் இயங்கிக்கொண்டிருந்தது.
அவன் பெயர்கூட ரவிக்குமார் என இப்போது நினைவுக்கு வருகிறது. அவனுக்குப் பல் கொஞ்சம் தூக்கிக்கொண்டிருந்ததால் என் வகுப்பில் அவனுக்கு பல்லன் எனப் பெயர் வைத்திருந்தார்கள்.அவன்தான் போன்கள் எப்படி வரும் அதை எப்படி இயக்குவார்கள்.

அவன்தான் போன்கள் எப்படி வரும் அதை எப்படி இயக்குவார்கள், போன் வந்ததும் ஒரு பின் போலிருப்பதை மாற்றி சொருகினால் போன் கனெக்ட் ஆகும் என விளக்குவான். அவன் சொல்ல சொல்ல கற்பனைகளில்தான் அந்தக் காட்சிகளை காண முடிந்தது

எங்கள் கிராமத்தின் சாலை முடியும் இடத்தில் அந்த பெரிய ஊரின் சாலை தொடங்கும் . அந்த ஊருக்குப் பெயர் மல்லசமுத்திரம் என்பதாகும். அங்கேதான் ரவிக்குமாரின் வீடும் தொலைபேசி அலுவலகமும் இருந்தது. பின்னாட்களில் அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் என் பள்ளி வகுப்புத் தோழன் இருக்கிறானா என வெளியிலிருந்து பார்ப்பேன்.

சில சமயங்களில் அவன் இருப்பான். பல சமயங்களில் அவன் கண்ணிலேயே தென்பட மாட்டான்,. அவன் இருந்த சமயங்களில்கூட உள்ளே போய் அந்த தொலைபேசி நிறுவனம் எப்படி செயல்படுகிறது எனப் பார்க்கும் தைரியம் எனக்கு வந்திருக்கவில்லை. ஆனால் அந்த ரவிக்குமார் அதை வைத்தே பல கதைகளை அவ்வப்போது சொல்லிவருவான்.

எண்பதுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊரில் ஒரு பெரிய பணக்காரரின் வீட்டில் முதன் முதலாக ஒரு டெலிபோன் இணைப்பை வாங்கினார்கள். அவர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டும் அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்து சில கதைகளை சொல்வார்கள், அந்தப் போனின் பெருமைகளை சொல்லுவார்கள்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் இன்னொருவர் அவர் வீட்டிற்கு தொலைபேசி வாங்கினார். இப்போது அந்த கிராமத்தில் மொத்தமாக மூன்று வீடுகளில் தான் தொலைபேசிகள் இருந்தன. ஆனாலும் பொதுவாக யாருக்கும் போன்களின் பயன்பாடுகளே தெரிந்திருக்கவில்லை. அதற்கான தேவைகளும் வந்திருக்கவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
இது தவிர அப்போது போன் இணைப்பை வாங்குவதற்குநிறைய பணம் டெபாசிட்டாக கொடுக்கவேண்டும்என்பதால்போன் இணைப்பை வாங்குவது மிகவும் கௌரவமான விஷயமாக இருந்தது ( அப்போது சில நூறுகள்கூட பெரிய தொகையாகதான் இருந்தன. )

அதன் தேவையை யாரும் அறியாமல் இருந்ததாலும், அப்புறம் நிறைய அப்ளிகேஷன்கள் போட்டு போன் இணைப்பிற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாலும் ( இதுவும் ஒரு காலகட்டம்வரை உண்மையாக இருந்தது ) யாரும் போனை ஒரு அத்தியாவசியமான பொருளாக நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.

நான் தொன்னூறுகளின் தொடக்க வருடங்களில் பணிநிமித்தமாக மேட்டூருக்குப் போன பிறகுதான் அலுவலக போனை பயன்படுத்த தொடங்கினேன்.

அலுவக தேவைக்காக நான் குடியிருந்த வீட்டிற்கு ஒரு போன் இணைப்பையும் அவர்களே வாங்கிக்கொடுத்திருந்தார்கள். அப்போது அதைப் பெரிய விஷயமாக கருதினேன். ஆனால் எந்த நேரமும் என்னை போனில் அழைக்கவும் அலுவலக ரீதியான பணிகளை நிறைவேற்றிக்கொள்ளவும்தான் அப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதை இப்போதுதான் உணர முடிந்தது.

தொன்னூறுகளின் பின்பகுதியில் எங்கள் கிராமத்தில் இருக்கிற வீட்டிற்கு நான் ஒரு தொலைபேசி இணைப்பை வாங்குவதற்காக முயன்றேன். அப்போதும் 3000 பணம் டெபாசிட் செய்யவேண்டும் எனவும் சில காலம் காத்திருக்க வேண்டும் எனவும் சொன்னார்கள்.

அப்படி காத்திருந்து எங்கள் கிராம வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பை கொடுத்தார்கள். அதற்குள் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இணைப்பை கொடுப்பதற்கு (ஒயரை இழுப்பதற்கு) இரண்டு மூன்று கம்பங்கள் போட்டுதான் உங்கள் வீட்டிற்கு ஒயரை இழுத்துவந்து கொடுக்க வேண்டும் என சொல்லி அந்த அலுவலகத்தில் பணியாற்றி சிலர் என்னிடம் தனியாக சில நூறுகளை லஞ்சமாக பெற்றதெல்லாம் தனிக்கதை.

(எனக்கு) மேட்டூரிலிருந்து வீட்டிற்கு பேசவும் ஊரில் ஒரு நல்லது கெட்டது நடந்தால் அறிந்துகொள்ளவும் எனக்கு வேறுவழியில்லாமல் இருந்ததால் இந்த ஏற்பாட்டை நானே செய்துகொள்ள வேண்டியிருந்தது.

அப்போது சனிக்கிழமை மதியத்திற்குமேல் கிளம்பி மாலைக்குள் ஊருக்கு குடும்பத்தோடு வருவோம். திங்கள் காலையில் மீண்டும் மேட்டுருக்குத் திரும்பிவிடுவோம். இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு நான் தினமும் போன் செய்வதும் ஊரில் ஏதாவது ஒருவர் இறந்துவிடடால் மட்டுமே அங்கேயிருந்து போன் எனக்கு வரும். அவர்களாக ஒரு நாளும் போன் செய்ய மாட்டடார்கள்.

காரணம் தொலைபேசி பில் நிறைய வந்துவிடுமே என்ற பயமும் அந்தத் தொகையை ஏன் வீணாக கட்ட வேண்டும் என்ற சிக்கனத்தைக் கருதியும் என் பெற்றோர்கள் போனை செய்ய மாட்டடார்கள்,. அந்தப் போனுக்கான பில்லை நான் தான் தொடர்ந்து செலுத்திவந்தாலும் இதுதான் யதார்த்தமான சூழல்.

இந்த காலகாட்டத்தில் அதாவது தொன்னூறுகளின் தொடக்கத்தின் நடுப்பகுதியிலிருந்து பின்னால் சில வருடங்கள் ஊருக்கு ஊர் தெருவிற்கு தெரு புதிதாக சில பெட்டியமைப்பில் ஒரு பூத் வரத் தொடங்கியிருந்தன.

ஆமாம் அதற்கு எஸ்டிடீ பூத்கள் எனப் பெயர்களும் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் ஊனமுற்றவர்களுக்கு பயன்படுகிற விதமாக தொலைபேசி நிறுவனங்கள் வழங்கி வந்தன. இவற்றில் போன்கள் இல்லாத நபர்கள் ஒரு போனை பேசியதும் அதற்கான தொகை ஒரு பிரிண்டர் வழியாக பில்லாக அச்சிட்டு வரும். இந்த அமைப்பில் எல்லா ஊர்களிலும் போன் பேசுகிற விஷயங்களை மக்களுக்கு பழக்கப்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எல்லா ஊர்களிலும் இந்த தொலைபேசி அமைப்பு வந்திருந்ததாலும் சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட பேசுகிற பழக்கம் மெதுமெதுவாக வரத்தொடங்கியிருந்தன. முதலில் ஒரு கட்டம்வரைக்கும் வெளிநாடுகளில் பணியாற்றுகிறவர்களை தொடர்புகொள்ள இந்த பொதுத் தொலைபேசிகள் பயன்பட்டன.

உதாரணமாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரிகிறவர்களின் குடும்பங்களில் இருப்பவர்கள் அவர்களை தொடர்புகொள்ள இந்த தொலைபேசிகள் பெருமளவில் உதவின என்பதுதான் நிதர்சனம்.
பலருக்கு இந்தத் தொலைபேசிகள்தான் தொலைபேசியில் பேசுவதை எளிமையாக்கின.

மேலும் தொலைபேசி பயன்பாட்டை அதன் உபயோகம் சம்பந்தமாக இருந்த பயத்தை அச்சத்தைப் போக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல பெருமளவில் பயன்பாட்டிற்கு வரச்செய்தது.அதாவது ஏககாலத்தில் தமிழகத்தின் எல்லாயிடங்களிலும் இன்னும் சொல்லப் போனால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இந்த பொதுத் தொலைபேசிகள் தான் மக்களின் வாழ்வில் ஒரு இயல்பான பயன்பாட்டிற்குப் பழக்கியது.

2000 ஆண்டுகளின் தொடக்க வருடங்களில் நான் சென்னைக்கு பணி நிமித்தமாக குடிபெயர்தேன். அந்த சமயங்களில் சென்னையில் பேஜர்களின் இறுதிக்காலமாக இருந்தது. பேஜர்கள் எஸ்எம் எஸ் போல அனுப்புவதும் பெறுவதுமாகதான் பயன்பாட்டில் இருந்தன. அப்போது பிபிஎல் நிறுவனம் தொலைக்காட்சிகளை விற்று மக்களின் மனதில் இடம் பெற்றிருந்தன. அவர்கள் இந்த பேஜர் கருவியை விற்பனை செய்வதில் முன்னணியில் இருந்தார்கள்.

சென்னை போன்ற நகரங்களில் மற்றும் ஒரிரு சிறு நகரங்களிலும் இந்தபேஜர்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தன. இந்த பேஜர்களை இடுப்பு பெல்ட் பகுதியில் ஒரு பௌச் போல இருக்கும் பகுதியில் மாட்டிக்கொண்டு தகவல்கள் வரும்போதும் அனுப்பும்போதும் பயன்படுத்துவார்கள்.அந்தப் பேஜர்களைப் பயன்படுத்துபவர்கள் முகங்களில் அப்போது பெருமிதங்களோடு பெருமையும் கொஞ்சம் திமிரும் இருப்பதை அப்போது நான் பார்த்திருக்கிறேன்.

விரைவிலேயே பேஜர்கள் விடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. காரணம் பேஜர்கள் ஒரு அளவிற்கு மடுடமே பயன்படுத்துகிற வகையில்தான் அவற்றின் அமைப்பு இருந்தது. அதாவது ஒரு குறுகியளவில்தான் அதன் பயன்பாட்டின் எல்லை இருந்ததும் ஒரு காரணம்.

ரிலையன்ஸ் நிறுவனம் திடிரென மார்கெட்டில் 500 ரூபாய்க்கு செல்போன் என அறிவிப்பு செய்து மார்கெட்டில் இந்தியாவெங்கும் பயன்பாட்டிற்கு விட்டது. அதுவரை செல்போன் என்பது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்துகிற சமாச்சாரமாக இருந்தது.இதனால் செல்போன் பெரும் பணக்காரர்களுக்கானதாக இருந்தது. ஆனால் இந்த 500 ரூபாய் போன் வந்ததும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவர்களுக்கும் அடுத்த படியிலிருந்தவர்களும் இந்தப் போனை போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினார்கள். இதன் பயன்பாட்டுக் கட்டணமும் எளியளவில் இருக்கும்வகையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.

இதனால் நாட்டில் பெரும்பாலானவர்களின் கைகளில் செல்போன் என்ற கருவி இடம் பெற்றிருந்தது. அப்புறம் இந்த போன் கையடக்க கருவி போல கையாளுவதற்கும் எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டருந்தது.
இதற்குமுன் இருந்த போன்கள் ஒரு செங்கல் சைசில் இருந்ததும் அதன் தலையில் ஒரு கொண்டை போன்ற வடிவமைப்பு இருந்ததும அதை வைத்திருப்பதும் ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

500 ரூபாய் என்பதால் நிறைய பேர் போன்களை வாங்கிவிட்டார்கள்.அவர்களின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு தேவையிருந்ததோ இல்லாமல் இருந்ததோ ஆனால் தினசரி பேசுகிற வழக்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வைத்துவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து வந்த போன் பில்லை பார்த்து சிலர் அதிர்ந்து போனார்கள். சிலர் வேண்டியமட்டும் பேசிவிட்டு போனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள் என்பதெல்லாம் அப்போதைய தினசரி கதைகள். குப்பைகளில் முட்புதர்களில் வீசிவிட்டுப் போனவர்களும் உண்டு. இவர்களில் சிலர் பில்லை ஒழுங்காக கட்டி தொடர்ந்து இப்போது வரையும் பயன்படுத்திவருகிறார்கள்.

இந்த 500 ரூபாய் போன் மக்களிடையே வேக வேகமாகப் பரவியதோடு அல்லாமல் அதன் பயன்பாட்டை தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்துகிற வழக்கத்தை மக்களின் மனங்களில் உருவாக்கினார்கள். உங்கள் வீட்டில் என்ன சமையல் என்பது போன்ற சாதாரண விஷயங்களில் தொடங்கி குடும்பங்களில் நடக்கிற சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பேச பழகினார்கள்.

அலுவலக விஷயங்களாக தினசரி வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களுக்காக என மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக செல்போன் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியிருந்தது.

இந்த சமயங்களில் இந்திய பொருளாதாரம் தாரளமயமாக்கத்தின் விளைவாக மக்களிடம் பணப்புழக்கமும் சரளமாகப் புழக்கத்திற்கு வந்திருந்தன. அதாவது ஒரு தினசரி கூலி வேலைக்குப் போகிறவர்கள்கூட சில நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறவர்களாக மாறியிருந்தார்கள். மேலும் இளைஞர்கள் நிறைய பேர் பொறியியல் படித்து வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியத் தொடங்யிருந்தார்கள்.

இப்போது செல்போன்கள் அதிகமாக மக்களிடம் புழக்கத்தில் வரத் தொடங்கியதும் நிறைய போன் கம்பெனிகள் தங்களது சேவைகளை வழங்க போட்டிப் போட்டுக்கொண்டு போன்களை உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் போட்டிகளை தொடங்கியிருந்தன.ஆபர்கள் என்ற பெயரில் போன்களை புதிது புதிதாக போன்களை வடிவமைத்து வெளியிட்டு வந்தார்கள்.

இதேபோல போன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பேசுகிற நிமடங்களுக்கேற்ப கட்டணங்களை குறைத்து போட்டிபோட்டுக்கொண்டு விலை குறைப்பு செய்து மக்களிடையே தங்களது நிறுவனங்களை நிலைநிறுத்த போராடி வந்தன.

இதனால் மக்களுக்கு நிறைய உபயோகிக்கிற வாய்ப்புகள் வருவாகிவந்தன. இதன் விளைவாக ஒவ்வொருவரும் நிறைய போன் எண்களை வாங்குவதும் அதனை பயன்படுத்துவதற்காக இரண்டு போன்களை வாங்குவதும் அல்லது இரண்டு சிம்களை உபயோகிப்பதற்குகேற்ப வடிவமைக்கபட்ட்ட புதிய போன்களை வாங்கவேண்டியதுமாக சூழல்கள் மாறிக்கொண்டிருந்தன

இப்படி மக்களிடம் குறைந்தது இரண்டு போன்கள் அல்லது இரண்டு சிம்கள் இருக்கிற காலம் வேகமாக பரவியதும் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பரவியிருந்த தொலைபேசி எஸ்டீடி பூத்கள் மெல்ல மெல்ல தங்களது தேவையை இழந்தன. ஒவ்வொன்றாக தாக்குப்பிடிக்க இயலாமல் காலியானது. ஒரு கட்டத்தில் எங்குமே இந்தப் பூத்களை பார்க்க இயலவில்லை. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் , எங்குப் பார்த்தாலும் இந்தப் பூத்கள் வந்த வேகத்தில் குறைந்த வருடங்களில் காணாமலும் போய்விட்டன.

சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயங்களில் செல்போன் உபயோகத்தையும் அதன் வேகமான பரவலாக்கத்தை கண்டுருந்தாலும் அதன் தேவையை நான் உணரவில்லை. 2003 ஆம் ஆண்டில் நானும் நண்பர் அழகியசிங்கரும் ஒரு கூட்டத்திற்காக திருப்பூருக்கு போனோம். இரண்டு நாட்கள் ஊரில் இல்லாத சமயத்தில் என் மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத தகவலை எனக்கு நண்பர் அழகியசிங்கரின் போன்வழியாக என் மனைவி பொதுத் தொலைபேசியின் வழியாக அழைத்து தகவலைத் தெரிவித்தார். மகனை மருத்துவரிடம் அழைத்துபோக சொல்லியும் ஆறுதல் சொல்லியும் நான் பேசினேன்.
திருப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பியதும் ஒரு செல்போன் வாங்க வேண்டும் அது இதுபோன்ற நெருக்கடி சமயங்களில் நமக்கு உதவும் என யோசிக்க வைத்தது. அப்போதிருந்து திட்டமிட்டு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து என் மூத்த மகன் பிறந்த நாளான்று சென்னை மவுண்ட்ரோடிலிருக்கும் ஸ்பென்சர் பிளாஸாவில் ஒரு கடையில் போனை வாங்கினேன்.

அப்போது சிம் கார்டு வாங்குவதற்கு பெரிய வசதிகள் இப்போதுபோல இயல்பானதாக இல்லாததால் என் நண்பர் மகாலிங்கம் பெங்களூரிலிருந்து ( அவர் பிஎஸ்என்எஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியிலிருந்தார் ) சென்னையிலிருந்த அவரின் நண்பர் சிவலிங்கம் என்பவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு ஒரு சிம் கார்டு வாங்க உதவினார். இந்த எண்ணை நான் வெகுநாட்கள் உபயோகத்தில் வைத்திருந்தேன் . பின்னால் நான் சேலத்திற்கு திரும்பும்வரை பல வருடங்களுக்கு இதுதான் என் எண்ணாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் போன்களில் பேசுவதைவிட எஸ்எம்எஸ்கள் அனுப்புவதும் பெறுவதும் கட்டணங்கள் குறைவு என்பதால் எப்போதும் யாராவது ஒருவர் போனில் டைப் செய்தபடியே இருப்பதைக் காண முடிந்தது. குறிப்பாக இளம்பெண்கள்தான் அதிகமாக எஸ்எம்எஸ் அதிகமாக அனுப்புவர்களாக இருந்ததைக் கவனித்தேன்.அவர்களின் கைகள் வெகு லாகவாமாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் டைப் செய்வதை கவனித்திருக்கிறேன்.

பலரும் போன்களில் குனிந்துவாறே டைப் செய்வதும் அவற்றை எஸ்எம்எஸ்களாக அனுப்புவதும் அதைப் பெறுவதும் உடனுக்குடன் பதில் எஸ்எம்எஸ்களை அனுப்புவதுமாக இருந்தார்கள். அப்போது பலரின் போன்களில் இருந்த எழுத்து பட்டன்கள் கைபட்டு கைபட்டு மறைந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும் வேகமாக டைப் செய்வதற்காக மொழியை சுருக்கி புதுவிதமான பயன்பாட்டிற்கும் இளைஞர்களும் இளைஞிகளும் கொண்டு வந்திருந்தார்கள். இதனால் மொழி அழிந்துவிடும் எனவும் இல்லை ஒரு புதுமொழி உருவாகியுள்ளது எனவும் கூச்சல்கள் கிளம்பியிருந்தன.

அப்போது செல்போனில் ஒரு கால்குலேட்டர் மற்றும் டார்ச் என தினசரி வாழ்வில் உபயோக்கிற பிற பொருட்களின் இணைப்பையும் புதிதாக வந்ததிருந்த செல்போன்களில் கொண்டுவந்தார்கள். இது மக்களின் வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்ததும் மற்ற தேவைகளான கேமிராவையும் செல்போனில் இணைத்து கொண்டு வந்தார்கள். போட்டோக்களை எடுப்பதும் அதனை உடனடியாக பார்ப்பதும் அப்போது புது அனுபவங்களாக மாறத் தொடங்கியிருந்தன.

போட்டோக்கள் எடுப்பதற்கு தனியாக கேமிராக்கள் இருப்பதும் அதை எடுப்பதற்கு தனித்திறமை வேண்டும் என்பதும் ஒரு பயமாக இருந்தது பெரும்பாலான மக்களிடம். மேலும் போட்டோக்களை எடுக்க பில்ம்கள் பயன்படுத்துவதும் படங்களை எடுத்ததும் அதனை லேப்களில் கொடுத்து பிராசசஸ் செய்து படங்களை ஆல்பங்களாக போடுவதற்கும் தனித்தனியாக தொழில்நட்பங்கள் தேவைப்பட்டதும் அதை உபயோகப்படுத்த நிறைய பணம் தேவைப்பட்டதோடு அல்லாமல் அதனை நிறைய நேரம் செலவளித்து மெனக்கெட்டு அதை படங்களாக மாற்றுவதும் பெரிய வேலைகளாக இருந்தன.
ஆனால் செல்போன்களில் கேமிராக்கள் இணைக்கப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் கேமிராக்களும் வந்திருந்ததால் அதனை எளிதாக செல்போனில் இணைத்திருந்தார்கள்.

இதனால் செல்போன்களின் புதிய வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்ட பலரும் தங்களது பழைய போன்களை விட்டு உடனே புதிய புதிய தொழில்நுட்பங்களோடுள்ள செல்போன்களை வாங்குவதும் அதைப் பயன்படுத்துவதும் தங்களது அப்டேட் விஷயங்களாக தங்களுடைய அந்தஸ்துக்குரிய விஷயங்களாக மாற்றிக்கொண்டார்கள். இதனை அந்த செல்போன் நிறுவன விளம்பரங்களும் ஒரு வகையில் மூளைச்சலவை செய்து வந்திருந்தன.
போனில் ஆடியோ கேட்கிற வசதியை உருவானதும் பலரும் அதை உபயோகிக்கி தொடங்கியிருந்தார்கள்.

ஐபாட் என்ற கருவிகளில் பாடல்களை கேட்பதற்காக உருவாக்கப்பட்ட சமயம் அது. பலருக்கும் தனியாக ஐபாட் கருவியை வாங்குகிற வசதியும் நிலைமையும் வந்திக்கவில்லை. இந்த வசதி போனில் வந்ததும் பாடல்களை போனில் தரவிறக்கம் செய்து அதை மீண்டும் மீண்டும் கேட்கிற வாய்ப்பை போன்கள் எளிதாக்கியதால் பலரும் தங்களுக்குப் பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டு மகிழ்ந்தார்கள்.
இந்த ஹெட்போன்களில் பாட்டு கேட்கிற வழக்கத்தோடு அந்த ஹெட்போன்கள் வழியாக காதில் மாட்டிக்கொண்டு பயணங்களின் சமயத்திலும் குறைந்தபட்சம் நடந்துபோகும்போதுகூட அதில் வருகிற போனை அப்படியே ஒரு பட்டனை அழுத்தி பேசலாம் என்ற தொழில்நுட்பம் வந்ததும் பலரும் அப்படி பேச பழகினார்கள்.

இந்த சமயங்களில் தெருக்களில் பலரும் தனக்கு தானாக பேசிக்கொண்டு போவதைப் போல இருந்ததைக் கண்டு இது அறியாதவர்கள் பாவம் இந்தப் பிள்ளை தனக்குத் தானே பேசிக்கொண்டு போகிறதே எனப் பச்சாதாபப் பட்டார்கள்.
அடுத்த கட்டமாக போனில் வீடியா இணைப்பும் வந்தது. இதனால் எந்த ஒரு நிகழ்வையும் உடனுக்குடன் தங்களது போனில் பதிவு செய்து கொள்வதும் அதை தேவையான இடங்களில் மறுபடியும் இயக்கிப் பார்த்துக்கொள்ளவும் வசதியாக இருக்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் இணைய வசதிகளால் தாங்கள் விரும்புகிற சினிமாக்கள் மற்றும் குறும்படங்கள் மற்றும் பட்டிமன்றஙகள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்களின் உரைகளை வீடியோக்களில் கேட்கவும் பார்க்கவும் தொடங்கியிருந்தார்கள்.

குறிப்பாக சினிமாக்களை இணையதளங்களின் வழியாக தரவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். பயணங்களின் சமயங்களில் உங்கள் பக்கத்து இருக்கையில் குறிப்பாக யாராவது ஒரு இளைஞரோ அல்லது இளைஞியோ இருந்தால் நிச்யமாக அவர்கள் போனில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிப்பதையும் அதை அவர்கள் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.
இந்த வீடியோவின் தொழில் நுட்பத்தால் நிறைய பாலியல் இணையங்களிலிருந்து பாலியல் சார்ந்த வீடியோ படங்களும் தரவிறக்கம் செய்து பார்க்கிற கலாச்சாரம் ஒன்று உருவானது.

அதாவது எண்பதுகள் வரை அல்லது தொன்னூறுகளின் இறுதிவரை ஏன் இரண்டாயிரத்தில்கூட பாலியில் விஷயங்களை அச்சிட்ட புத்தகங்கள் குறிப்பாக தமிழில் சரோஜாதேவியின் புத்தகங்கள் தான் ரகசியமாக இளைஞர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.ஆனால் போனில் வீடியோ என்ற தொழில்நுட்பம் சரளமானவுடன் பாலியல் படங்கள் போன்களில் தாரளமாக தரவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டன.இதில் ஆண்கள் பெண்கள் என்ற போதமில்லாமல் சமத்துவம் ஒன்று உருவாகிவந்திருந்தது.
இந்த பாலியல் சமாச்சாரங்களில் எப்போதும் நடிகைகளின் பெயர்கள் தாங்கிய படங்கள் அதிகமாக பரவ தொடங்கியிருந்தன.

அவற்றை அதிகமாக தரவிறக்கம் செய்வதும் நண்பர்களோடு அதை பகிர்ந்துகொள்வதும் நடைமுறையாக இருந்தன. சினிமாக்களில் அப்போது நடித்துக்கொண்டிருக்கிற அல்லது முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிற பெரும்பாலான நடிகைகளின் இந்த வகையான பாலியல் படங்கள் அதிகமாக இணையதளங்களில் இருந்த போன்களில் தரவிறக்கம் செய்து பார்க்கப்பட்டன.
வழக்கம்போல அந்த நடிகையின் படம் அல்ல இது எனவும் இது முழுகக முழுக்க தொழில்நுட்ப ரீதியாக மார்பிங் செய்து அந்த நடிகையின் பிரபலத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன என ஒரு சாரரும் இன்னொரு சாரர் இல்லை இல்லை அந்த நடிகையே நடித்த படம்தான் எனவும் தங்களுக்குள் வாத பிரதிவாதங்களை செய்து கொண்டே உற்சாகமாக பார்த்து வந்தார்கள்.

செல்போன்களில் கால்குலேட்டர் மற்றும் டார்ச் மற்றும் கேமிரா மற்றும் ஆடியோ , வீடியோ என வந்ததும் அடுத்ததாக இணைய இணைப்புள்ள போன்கள் வரத் தொடங்கின. இவற்றை உபயோகித்து மெயில்களை அனுப்புவதும் இணையத்தில் தங்களுக்கு தேவையான தகவல்களை எடுத்துக்கொள்ளவும் மக்கள் பழகிக்கொண்டார்கள்.

இந்த சமயங்களில் இணையத்தின் வளர்ச்சி அபாரமாக வளர்ச்சியடைந்து வந்தவாறேயிருந்தது. ஜிமெயில் என ஒரு புதிய நிறுவனம் 10 ஜிபி நினைவத்தை ஒவ்வொரு இமெயில் உபயோகிப்பாளருக்கும் இலவசமாக வழங்கத் தொடங்கியிருந்தது.

அதுவரை யாஹீ நிறுவனத்திலிருந்துமெயிலை பயன்படுத்தியவர்கள் மெதுவாக இங்கே இடம் பெயர்ந்தார்கள்,அப்போதுதான் சமூக ஊடகங்களான டிவிட்டர் பயன்பாட்டிற்கு வந்திருந்தது. இதுவும் பெரிள ஆட்கள் பயன்படுத்துகிற வகையில் இருப்பதாகவும் 140 எழுத்துருக்களில் எழுத வேண்டும் எனவும் நிபந்தனைகள் இருந்ததும் அதன் உபயோகம் ஒரு குறிப்பிட்ட சதவீகிதத்தினரே பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்,
இந்த சமயத்தில்தான் பேஸ்புக் என்ற சமூக ஊடகம் பயன்பாட்டிற்கு வந்தது. 5000 பேர் வரை நண்பர்களை இணைத்துக்கொள்ளவும் விரும்பியவகையில் படங்களை இணைத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் எளிதாக இருந்தது. இந்த விஷயங்களை பயன்படுத்துகிற வகையில் செல்போன்களில் ஆண்ராய்டு என்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்திய போன்கள் மார்கெட்டில் விற்பனைக்கு வரத் தொடங்கின. இதனால் புதுப்புது போன்கள் மார்கெட்டில் வரத்தொடங்கின.

அதன் பயன்பாட்டின் எல்லைகளும் விரிந்தவாறே இருந்தன. இதற்கும் சில மாதங்களில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசன் தளத்தில் ஆர்டர்களை போட்டு பொருட்களை வாங்கும் ஆன்விற்பனை நிலையங்களைப் போலவே இந்தியாவில் ப்ளிப்கார்ட் என்ற நிறுவனம் தன் எல்லைகளை விரிப்பதற்கும் இந்த செல்போன்களின் வழியாக சாத்தியங்கள் உருவானது.இதனால் இரண்டு வகையினருக்கும் பயனானதாக மாறியது.
டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,வைபர்,லிங்டன், என சமூக ஊடகங்களின் எண்ணிக்கையும் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியிருந்தன.

அமேசன் ப்ளிப்கார்ட்,ஸ்னப்டீல் என இணைய தளங்களின் வழியாக பொருட்களை விற்பனை செய்கிற தளங்களும் பெருகின. இணைய தளங்களின் வழியாக தினசரிகளை வாசிப்பதும், பருவ மாத இதழ்களை வாசிக்கிற வழக்கங்களும் செல்போன்கள் எளிதாக்கின. ஒரு தகவல் அது அறிவியல் அல்லது அரசியல் அல்லது பொருளாதார அல்லது அறிவியல் அல்லது உலகின் எல்லா விஷயங்
களையும் இணையத்தில் தேடி வாசிப்பது எளிமையாக்கியிருக்கிறது செல்போன்கள்.

இப்போது செல்பி என தற்படங்களை எடுத்துக்கொள்வதற்காக செல்போனின் முன்னால் ஒரு கேமிராவும் பின்னால் ஒரு கேமிராவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார்கள்

இந்த செல்பி மோகம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந் ஆபத்தான காட்சிகளை செல்பியாக எடுக்கிற த்ரில்லால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கின்றன.

சமீபமாக இந்தியாவில் செல்பி மரணங்கள் அதிகரித்து அதிகரித்து உலகளவில் முதலிடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது

சமீபகாலத்தில் வாட்ஸ்அப் என்ற சமூக ஊடகம் பேஸ்புக்கைவிட எளிதான பயன்பாட்டில் மக்களுக்குப் பயன்படுகிற வகையில் இருப்பதால் மக்கள் அதைப் பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

இதனால் மக்கள் பல விஷயங்களை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் போடுவதால் அது பலரையும் ஈர்த்துள்ளது. தீ போன்ற வேகத்தில் நாடெங்கும் பரவிவருகின்றது. பல அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களில் நடந்த விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக மனிதன் காணாத வளர்ச்சியை இந்த செல்போன்களின் வளர்ச்சி ஒரு தசம ஆண்டுகளில் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

செல்போன்கள் தகவல் தொடர்புகளை பெருமளவில் எளிமையான பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதன் பரிணமா வளர்ச்சியை பல மடங்கு சாத்தியமாக்கியுள்ளது. அதே சமயத்தில் தனி மனிதனின் அந்தரங்க விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாக பரப்பிக்கொண்டு வருகின்றன. இந்த அதீத பயன்பாட்டினால் போனை எந்தளவிற்கு பயன்படுத்துவது என்பது சாதரண மனிதர்களால் ஒரு கட்டுக்குள் பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் வினுப்ரியா என்ற பெண்ணின் தற்கொலைகளும் தற்படங்களால் நிகழ்கிற சாவுகளும் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி கேட்கிற பலிகள்.

விஞ்ஞானத்தின் தினசரி வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் நடந்த சமூக மாற்றத்தில் பெருமளவு எல்லா வகையிலும் வளர்ச்சிகளை கொடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் போன் என்பது ஆடம்பரமானதாக இருந்தது போய் ஒரு கட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் பயன்படுத்துவதாக மாறி இப்போது வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியாக பயன்படுத்தினார்கள். இப்போது அதுவும் மாறி ஒவ்வொருவரும் இரண்டு மூன்று போன்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அவ்வப்போதைய கட்டண அறிவுப்புகளுக்கேற்ப தங்களது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்கிற வகையில் புத்திசாலிகளை உருவாக்கியிருக்கிறது சூழல்.

சாதரண போன்களிலிருந்து இன்று போன்கள் மற்றும் அதன் இணைப்புகள் இந்தியாவில் 2 ஜி 3 ஜி என வளர்ந்து இப்போது 4 ஜி இணைப்புகள் என விஞ்ஞானம் வளர்ந்துள்ளது ( இப்போது அமெரிக்காவில் 5 ஜி இணைப்புகள் நடைமுறையில் உள்ளன )

இப்படி போன்களில் தினசரி புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்டு வருவதால் பொதுமக்களும் தங்களது வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப போன்களையும் தங்களையும் மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்
இந்தக் கட்டுரை எழுதுகிற சமயத்தில் லேட்டஸ்டாக வந்துள்ள போனை என் மகன் வாங்கியிருக்கிறான். அதில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதுவரை ஆண்டராய்டு போன்களில் செக்யூரிட்டி லாக்காக பயன்பாட்டிலிருந்ததன் அடுத்த கட்ட வளர்ச்சியாக இந்த பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளார்கள், உங்கள் கைரேகையை போனின் ஒரு இடத்தில் வைத்து ஒவ்வொருமுறையும் பயன்படுத்தினால்தான் அந்த லாக் திறந்து போனில் உள்ளே நீங்கள் நுழைய முடியும்.

இன்னும் இன்னும் எத்தனை சாத்தியங்களும் தேவைகளும் உருவாக வேண்டுமோ அதற்கேற்ப போன்களும் தன்னை விரித்துக்கொண்டே போகும் . சாத்தியங்களின் எல்லைகளும மனித தேவைகளின் எல்லைகளும் விரிந்தவாறே இருப்பதால் நாளைய போன்களைப் பற்றி இன்று கற்பனை செய்துகூட முன்கூட்டியே சொல்ல முடியாத வகையில் இருப்பதுதான் இன்றைய யதார்த்தம்.
ஒரு காலகட்டத்தில் எட்ட கனியாக இருந்த தொலைபேசிதான் இன்று உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மனித வாழ்வை நெருக்கமானதாகவும் நெருக்கடி மிகுந்ததாகவும் ஒரே சமயத்தில் மாற்றுகிறதாக அமைந்துள்ளன.

Comments are closed.