பள்ளியறை ( சிறுகதை ) அறிமுகப்படைப்பாளி / ( பிரவின் குமார்.S

[ A+ ] /[ A- ]

images (2)

அந்த அறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களுக்கு மேல் தாண்டிவிட்டது. படபடப்பும் பயமும் என்னை நச்சரித்துக்கொண்டிருந்தன. என் மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் கை கடிகாரத்தின் வினாடி முட்களை பார்க்கும் ஒவ்வொரு சமயமும் இங்கிருந்து நகர்ந்து விடலாமா…? என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றி தோன்றி மறைந்தது. குடித்தனம் செய்வதற்கான எந்த ஒரு உபகாரணங்களும் இல்லாமல் காட்சியளித்தது அந்த அறை. பாதியாக திறந்து விடப்பட்டிருந்த சாரளத்தின் வழியாக உள்ளே நுழைந்த சூரிய கதிர்கள் மட்டுமே அந்த அறையை முகாமிட்டுகொண்டிருந்தது. படிய வாரிய என் தலைமுடியை சரி செய்வதாய் நினைத்து திரும்ப திரும்ப வாரிக்கொண்டிருந்த சம்பவங்கள் என் எதிரில் மாட்டப்படிருந்த கண்ணாடியை பார்த்ததும் ஞாபகத்திற்கு வந்தன. இப்போதைய சூழலில் வீட்டின் நினைவுகள் எதுவும் தோன்றாமல் இருப்பதே நல்லது. அவள் வருவதற்கு முன்பு கண்ணாடி முன் நின்று உன்னை நீயே புதுபித்துக்கொள் என்று மனது உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. என் முகத்தில் வழிந்துகொண்டிருக்கும் வேர்வையையும் பதற்றத்தையும் கண்ணாடி முன் நின்று பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன…?

நொடிப்பொழுதில் சூரிய வெளிச்சம் அந்த அறையை தாக்கியது. அவளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேனா…? இல்லை எனக்காக அவள் காத்துக்கொண்டிருந்தாளா…? என்பதை அந்த அறை எனக்கு கற்று தரும் என்று நினைத்துக்கொண்டேன். விரித்த தலைமுடியுடன் அமைதியாக உள்ளே வந்தவள் சிறிதும் யோசிக்காமல் சுவர் ஓரமாக வைக்கப்படிருந்த பாயை விரித்து தரையில் கிடத்தினாள். பல தலைகளை தாங்கிய தலையணைகள் இரண்டை சுவற்றின் அலமாரியில் இருந்து எடுத்து கீழே போட்டாள். அவள் முகம் பார்க்க முடியாதவனாய் அவள் உள்ளே வரும் பொழுது எந்த நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேனோ அதே நிலையில் தான் இன்னமும் அமர்ந்திருந்தேன். அவள் தயாராகிக்கொண்டிருந்தாள். கூந்தலை பின்னந்தலையில் சுற்றி அதோடு சேர்த்து ஹேர் பேண்ட் ஒன்றை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவளின் செய்முறை ஆப்ரேஷன் தியேட்டருக்கு செல்ல ஆயுத்தமாகும் டாக்டர் போலவும், பாவடையை தூக்கிக்கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுவதற்கு தயாராகும் பெண்களின் செய்முறை போலவும் இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டு அதற்கு தோதுவாக பச்சைநிற பேண்டையும் அணிந்திருந்தாள். துப்பட்டாவை யாருக்கு தானமாக கொடுத்தாளோ…! வளையல், தோடு, சங்கிலி, மூக்குத்தி ஏன் நெற்றிபொட்டை கூட அவள் அணிந்திருக்கவில்லை ஆபரணங்கள் அற்ற ஒரு பெண்ணை முதல் தடவையாக என் வாழ்க்கையில் பார்க்க நேர்ந்தது. எந்த ஒரு அம்சமும் தேவையில்லை அவள் கண்விழி கவர்ச்சியே என்னை ஆக்கிரமித்துகொண்டிருந்தன.

“அங்கேயே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி…? இங்க வா”

அதிகாரத்தின் உச்சஸ்தாயில் அவளின் குரல் என்னை நிமிர்ந்து பார்க்க செய்தது. மெதுவாக நடந்துசென்று அவள் எதிரில் நின்றேன். இரு கால்களையும் மடிக்கி அவள் அமர்ந்திருந்த நிலை தரையோடு தரையாக வழுக்கி செல்லும் டால்பீனை போல் இருந்தது. அந்த நிலையிலேயே நான் எதிர்பாராத வண்ணம் என் கையை பிடித்து அமர வைத்தாள்.

“ஆரம்பிக்கலாமா…?”

முழுமையாக அவள் கண்களை வெறித்து பார்த்தேன். என் உடல் உஷ்ணத்தை தனித்துவிடும் அருவியின் குளிர்ச்சியை என் மேல் தெளித்தது போல் இருந்தது அவளின் பார்வை. ஆரம்பிக்கலாமா…? என்று அவள் எதை சொன்னாள்…! அவளிடம் பேச எத்தனித்த பொழுது என்னிடம் பேசுவதற்கு யாரோ என் கைபேசிற்க்கு அழைத்தனர்.

வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் தாமாகவே கைபேசியை அணைத்துவிட்டு செல்லும் பழக்கத்தை இன்று ஏனோ இவ்வறையில் செல்வதற்கு முன் கடைபிடிக்க மறந்துவிட்டேன். என் கைபேசியை எடுத்து பார்த்தேன். பின்னால் இருந்து என் கழுத்தை நெருக்கிக்கொண்டு எடுத்த புகைப்படத்துடன் கைபேசி திரையில் பிரதிபலித்துக்கொண்டே அழைத்திருந்தான் என் தம்பி. நான் எங்கு இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டு தான் என்னை அழைக்கிறானோ…! என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள போதிய நேரம் என்னிடம் இல்லை.

“ஹலோ”

“டேய் அண்ணா ஒரு சின்ன டவுட் C++ புரோகிராம்ல அல்கோரித்தம் எப்படி எழுதுறது…?”

“நான் M.E. படித்துகொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறானா எனபது தெரியவில்லை ஆனால் அவன் பேசிய திசையில் இருந்து வந்துகொண்டிருந்த சலசலப்பை வைத்து தன் நண்பர்களுடன் குழுவாக படித்துகொண்டிருக்கிறான் என்பதை மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது.

“C++ புரோகிராம் அல்கோரித்தம் எழுதனுமா? டேய் அது நான் எப்போவோ படிச்சது இப்போ கேட்டா எப்புடிடா ஞாபகத்துல இருக்கும்”

“ஸ்டார்டிங் வித் கோடிங் லாஜிக் ப்ளஸ், அண்ட் எண்டிங் வித் சின்டாக்ஸ்”

“எழுத முடியாத நிலையில் நின்று போன பேனாவை மையை பீய்ச்சி வெளியே சிதறிவிட்டது போல் அவளிடமிருந்து பதில் வந்தது. எதை தேடி நான் வந்தேன் என்பதை இத்தருணத்தில் என்னால் உணரமுடியவில்லை இவள் படித்த பெண்தானா என்கிற கேள்வி மட்டுமே என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்தது.

“உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நான் பர்ஸ்ட்டு இயர்ல படிச்சு இருக்கேன்”

மறுமுனையில் என் தம்பி “ஹலோ… ஹலோ…” என்று கத்திக்கொண்டிருந்தான். அவள் சொன்ன பதிலையே அவனுக்கு திருப்பி கொடுத்தேன். “தேங்க்ஸ் டா அண்ணா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். ஒவ்வொரு வேசிகளுக்கும் ஏதோ ஒரு வரலாறு அவர்களின் வாழ்க்கை பெட்டகத்திற்குள் அடைக்கப்படிருப்பதை முதல் முறையாக உணர்ந்தேன்.

“நீங்க இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்ஹா…?”

நானும் படித்த பெண் தான் என்கிற கர்வம் அவள் உதட்டை சுழிக்கும் அசாத்திய சிரிப்பில் தெரிந்தது.

“ஆமா”

என்னிடமிருந்து அடுத்து வர இருக்கும் கேள்வியை அவள் யூகித்துகொண்டிருப்பாள். அவளை ஏமாற்ற நான் விரும்பவில்லை… நான் கேட்ட நினைக்கும் கேள்வியை மட்டுமல்ல அவள் நான் அடுத்து கேட்பதாக நினைத்துகொண்டிருக்கும் கேள்வியையே கேட்டேன்.

“இன்ஜினியரிங் படிச்சு இருக்கீங்க நீங்க எப்புடி இங்க…?”

“அது உனக்கு தேவ இல்லாத விஷயம். உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம் இருக்கு அதுக்குள்ள நீ வந்த வேலைய முடிச்சுட்டு போ…”

நான் எதற்காக வந்தேன்…? அதை தான் அவள் எனக்கு நினைவுபடுத்தினாள். கடிகாரத்தை வட்டம் அடித்துகொண்டிருக்கும் வினாடி முட்களின் ஒவ்வொரு நகர்வையின் முக்கியத்துவத்தை அவள் அறிந்திருப்பாள் போலும். கழுத்தை திருப்பி கடிகாரத்தை கூர்ந்து பார்த்த தொனியிலேயே தெரிந்தது.

“என் கூட படுக்கனும்னு தானே வந்த… அப்புறம் என்ன?”

என் நெற்றியில் வடிந்த வேர்வையை துடைத்துக்கொண்டேனே தவிர அவளுக்கு எந்த ஒரு பதிலையும் நான் கொடுக்கவில்லை.

“இது தான் முதல் தடவையா…?”

தலையை தொங்கவைத்துகொண்டு “ம்” என்று தலை அசைத்தேன்.

“சரி விடு நான் சொல்லி தரேன்”

அருகே வந்து என் சட்டை பொத்தான்களை கழற்ற தொடங்கினாள். நான் சட்டென்று சுதாகரித்துக்கொண்டு எழுந்து நின்றேன். சாய்வாக இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்திருந்த நிலையிலேயே நிமிர்ந்து என்னை பார்த்து சிரித்தாள்.

“ஐயோ…! இது என்ன சின்ன கொழந்த மாதிரி காசு கொடுதுருக்கல அது வேஸ்ட் ஆனா பரவாலையா…?”

“பரவால நான் கிளம்புறேன்”

அவ்விடத்தை விட்டு நகர தொடங்கினேன் அவள் திரும்பவும் என் மணிக்கட்டை பிடித்து கீழே அமர வைத்தாள்.

“சரி போறது தான் போற ஒருமணி நேரம் கழிச்சுட்டு போ”
அவள் உடலை தீண்டாமல் வெறும் அறையுடன் எப்படி அந்த ஒருமணி நேரத்தை நான் காலம்கடத்துவது. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தேன் விழிகளில் கெஞ்சல் தாண்டவமாடிக்கொண்டிருந்தது.

“ஏன்…?”

“இன்னும் பத்து நிமிஷத்துல அந்த வார்ட் மெம்பெர் காளிதாசு கைல பாட்டலோட வந்துடுவான். அவனுக்கு அஞ்சு மணிநேரம் கொடுத்தா கூட பத்தாது. அவன் குடிக்குறதுமட்டுமில்லாம என்னையும் குடினு இம்ச பன்னுவான்”

“சரி நான் ஒருமணி நேரம் கழிச்சு போனதுக்கு அப்புறம் அவரு திரும்பி வரமாட்டாரா?”

“அப்படி இல்ல பக்கத்து ரூம்ல பிருந்தா இருக்கா அவளுக்கு இந்நேரம் டியூட்டி முடிஞ்சிருக்கும். அவ ஓரளவு சமாளிச்சுடுவா ஆனா என்னால முடியாது. அதுவும் அந்த ஆளு என்ன பார்த்தான்னு வெச்சுக்க நான் தான் படுக்க வரனும்னு ரொம்ப தொல்ல பன்னுவான்”

நான் கீழே குணிந்துகொண்டு உதடு மட்டும் அசையும்படி மெளனமாக சிரித்தேன். அதை அவனிக்கவும் அவள் தவறவில்லை.

“என் நிலமைய நினைச்சா உனக்கு சிரிப்பா இருக்குதுல”

“ச்ச… ச்ச… அப்பிடியெல்லாம் இல்ல சும்மா தான் சிரிச்சேன் தப்பா எதுவும் நினைக்காதீங்க”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு, ஐயோ பாவம்னு…! பொய்யா நடிக்காம இருந்தியே அதுவரைக்கும் சந்தோசம்”

இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் மறுபடியும் கேட்க வேண்டும் என்று நினைத்த அந்த கேள்வியே என் மனதுக்குள் சுழன்றுகொண்டிருந்தது. இனி அந்த கேள்வியை கேட்க எனக்கு துணிவில்லை. அவ்வப்போது கை கடிகாரத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இன்ஜினிரியரிங் படிச்சுட்டு இவ ஏன் இந்த தொழில்க்கு வந்தானு யோசிச்சுட்டு இருக்க அதானே”

காரணம் தெரிந்தால் போதும் என்றிருந்தது. இதை நினைத்து வீட்டிற்கு சென்றும் குழம்ப்பிக்கொண்டிருக்க தேவையில்லை. அவளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஆம் என்று தலையாட்டினேன்.

“உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா படிக்காதவங்கள விட படிச்சவங்க தான் நிறைய பேரு இங்க வராங்க, படிச்சவங்க எல்லாம் எதுக்கு இங்க வராங்கனு நாங்க யாரும் நினைக்குறது இல்லையே. ஏன்… நீ கூட படிச்ச பையன் தானே…”

ஓராயிரம் ஊசிகள் ஒன்று சேர்ந்து என் ஆண்மையையே குத்தி பிய்த்தெடுப்பது போல் இருந்தது. படித்தவள் இத்தொழிலை செய்கிறாள் என்று இருக்கும் பொழுது அதில் ஆச்சரியம் கலந்திருக்குமென்றால் அவளை தேடி தானே படித்தவனும் வருகிறான் இதில் ஆச்சரியபடுவதற்கு என்ன இருக்கிறது என்று எப்படி புறம் தள்ள முடியும்…?

“இல்ல என் ப்ரண்ட்ஸ் தான் இந்த இடத்துக்கு அனுப்புனாங்க”

“சும்மா உன் ப்ரண்ட்ஸ் மேல பழிய போடாத. உனக்கு செக்ஸ் வேனும் அதனால இந்த இடத்துக்கு வந்திருக்க அது தான் உண்ம”

உண்மை தான்… இந்நேரத்தில் மனதிற்குள் என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. படித்த பெண் என்று தெரிந்தும் இவளிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனமில்லையே அது ஏன்..?. கலவிக்கும் கல்விக்கும் இடையில் கையசைத்துகொண்டிருக்கும் முற்றுபுள்ளியை வரையறுத்துகொடிண்டிருப்பத்தில் தான் மனிதனின் ஒழுங்கீனம் முழுமை அடைந்திருக்கிறதோ… ஆனாலும் எனக்கு விடை வேண்டும் இவள் எதற்காக இத்தொழிலுக்கு வந்தாள். வேலையின்மை திண்டாடத்ததின் பிரதிபலிப்பாக இவள் இயங்கிக்கொண்டிருக்கிறாளா…?

“உங்களுக்கு எவ்வளவோ ஜாப் ஆப்பர்டூனிடிஸ் வந்திருக்குமே அது எல்லாம் விட்டுட்டு ஏன் இந்த தொழில் செய்யுறீங்க…?”

“என்னோட சேர்த்து இந்த காம்பௌண்ட்ல எட்டு பேரு இருக்கோம், நாங்க எட்டு பேருமே இந்த தொழில் தான் செய்யுறோம். அதுக்காக எங்களுக்கெல்லாம் படிப்பறிவே இருக்காதுனு முடிவு பண்ணிட்டா அதுக்கு நாங்க பொறுப்பு ஆகா முடியுமா…? ஒவ்வொரு தாசிக்கும் ஒரு இஸ்டிரி இருக்கு எவ்ரிதிங் வில் பி ஹாபண்ட் இன் டெஸ்டினி”

அவள் சொல்வதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கால் விரித்துகொண்டிருக்கும் தாசிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளாக தானே வளர்ந்திருப்பார்கள்.

“விதி தான் உங்கள தாசியா மாத்தி இருக்குனா அப்பிடி உங்க லைப்ல என்ன தான் நடந்தது?”

“என் அப்பா வாங்குன கடன அடைக்குறதுக்காக இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம், வைத்துல புள்ளைய கொடுத்துட்டு ஓடி போனவனோட குழைந்தைய படிக்க வைக்குறதுக்காக இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம், என்ன கேள்வி கேட்க ஆளில்லாத அனாதையா இருக்குறதுனால இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம் இல்ல பணத்தாசைல இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம். இதுல எந்த காரணம் எனக்கு பொருந்தும்னு நினைக்குறியோ அத நீயே தேர்ந்தெடுதுக்கோ…”

“ஐ டோன்ட் அக்ரி திஸ்”

“ஐ டோன்ட் மைன்ட் இட், மணி வில் பி ஹோல்ட் எவ்ரிதிங். ஐ யம் நாட் ஒன்லி ய எக்ஸ்சப்ஷன்”
அவள் முகபாவனையிலும் குரலிலும் ஆதங்கத்தின் வெளிபாடுகள் மேலோங்கியிருந்தது. அவளுடன் விவாதித்து என்ன பயன் சற்று மௌனமாகவே உட்கார்ந்திருந்தேன். பின்பு அவளாகவே பேச்சை தொடர்ந்தாள்.

“ம்… எதுவும் பன்னாம ஒன் அவர் வெட்டியா உட்கார்ந்துட்டு போற முதல் கஸ்டமர் நீ தான். சரி ரேவதி அக்கா கிட்ட சொல்லி நான் வேணும்னா உன் பணத்த திருப்பி கொடுத்துடுறேன் சரியா. ஐ யம் எ ஜஸ்டிபிகல் பேர்சன்”

“இல்லைங்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”

இம்முறை அவள் சிரிப்பின் ஒலியை அந்த அறை சுவறுகள் உள்வாங்கிக்கொண்டு மீண்டும் எதிரொலித்தது. தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள். நான் கொடுத்த தொகை அந்த சிரிப்பிற்கு ஈடாகி இருக்காது என்பதை மட்டும் என் உள்மனம் உணர்த்தியது.

“நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் வாங்க… போங்கனு… ரொம்ப மரியாத கொடுக்குற. ஓ…! பர்ஸ்ட் டைம்ல…. அதான். நாலஞ்சி தடவ வந்துட்டேனு வெய்யி ஏ தேவ்டியா இப்படி திரும்பு அப்பிடி திரும்புனு நீயே என்ன வெளுத்து வாங்குவ”

“இல்லைங்க நான் அப்படி எல்லாம் பன்னமாட்டேன்”

“அப்போ அடுத்த தடவ வரதுக்கு ரெடியா இருக்கேனு சொல்லு”

அசட்டு சிரிப்பை உதறிக்கொண்டே மீண்டும் கடிகாரத்தை பார்த்தாள்.

“சரி… சரி… ஒன் அவர் முடிஞ்சுடுச்சு இப்போ நீ கிளம்பலாம்”

அந்த அறையை விட்டு சமதளத்திற்கு வந்தும் கூட ஏதேதோ திசையில் இருந்து அவளின் பேச்சுக் குரல் என்னை பின்தொடர்ந்துகொண்டே இருந்தது. தெரு முனையில் நிறுத்திவைத்திருந்த எனது காரை ஸ்டார்ட் செய்து வீட்டிற்க்கு புறப்பட்டேன். என்னை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களிலும் அவள் ஸ்தாபித்து கொண்டிருந்தாள். இமை மூடி திறப்பதற்கு முன்பே அவள் நினைவலைகள் என் மூலைக்குள் அவ்வப்போது கடந்துகொண்டிருந்தன. அடுத்த நாள் என் கல்லூரி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போதே அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் இல்லை… புரண்டுகொண்டிருக்கும் அறையை ஒப்பிட்டு பார்த்தேன். தியானம் செய்வதற்கோ… சங்கீதம் படிப்பதற்கோ… எந்த ஒரு விருந்தாளியும் அவள் அறையை குத்தகைக்கு எடுப்பதில்லை. முனகல்களினூடே கானும் இச்சைக்கு அவளை மட்டுமல்லாமல் அந்த அறையையும் சேர்த்து அல்லவா வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள். அவளை சந்திக்க வேண்டும் என்று தோன்றிய அடுத்த நொடி என் வகுப்பறைக்கு வெளியே இருந்தேன்.

மற்றவர் பார்வைக்கு தரகராக தெரியும் ரேவதி என் கண்ணிற்கு மட்டும் பாதுகவலாளியாக தெரிந்தாள். நேற்று சந்தித்த அதே பெண் தான் வேண்டும் என்று விடாப்படியாக நின்றிருந்தேன். பெரிய கஷ்டமரிடம் டியூட்டியில் இருப்பதால் திரும்பி வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றும் வேறொரு பெண்னை அனுப்புவதாக அவள் வாஞ்சையுடன் கூறினாள். நேரத்தின் கட்டுப்பாட்டில் நான் இயங்கிக்கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பதாக சொல்லிவிட்டேன். அவ்வப்போது ஒரு சில செக்ஸ் விரும்பிகள் ரேவதியை அழைத்து அவளிடம் பணத்தை திணித்து சென்றுகொண்டிருந்தனர் அவள் பம்பரமாய் சுழன்றுகொண்டே கஸ்டமர்களை கவனித்துக்கொண்டிருந்தாள்.

நீண்ட நேரத்திற்கு பிறகு நான் தேடி வந்தவளின் அறை காலியானது இப்பொழுது அந்த அறையை ஒருமணிநேரத்திற்கு நான் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்றும் ரேவதி கூறினாள். ரேவதியின் கையில் ஆயரத்து ஐநூறை திணித்துவிட்டு அந்த அறையினுள் செல்வதற்கு தாயாராக நின்றிருந்தேன். குண்டு உடம்பை பேணிகாத்தவன் தனது காலை மடக்கி வெள்ளை வேஷ்டியை இறுக முடித்துக்கொண்டே வெளியே வந்தான். அரசியல்வாதி என்னும் அறிகுறியுடன் பட்டையான மோதிரத்தை தனது விரல்களில் விளம்பரம் செய்திருந்தான். மயிரற்ற வழுக்கை தலை பிரகாசித்தது “வரேன் ரேவதி” என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றான். நான் எந்த தயக்கமுமின்றி உள்ளே சென்றேன்.

துண்டு செய்தித்தாளில் ஏதோ ஒன்றை பொட்டலம் செய்து சுவர் ஓரமாக வைத்திருந்த பாலத்தீன் கவரில் அதை திணித்துகொண்டிருந்தாள். அநேககமாக வாடிக்கையாளர்களின் வருகை கணக்கை பதிவு செய்வதற்கு அந்த பொட்டலங்கள் சாட்சி கூறலாம். அந்த அறை முழுவதும் பிராந்தி வாடம் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவள் நேற்றைவிட இன்று சோர்வாக காணப்பட்டாள் கீழே சிதறிக்கிடந்த காரா பூந்தி துகள்களை துடைப்பத்தால் தூரே துறத்திக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள் ஒரு கணம் நேற்றைய தினம் பார்த்த முகம் இதுவல்லவே என்று தோன்றியது. மண்டியிட்டே கிரிவலம் சுற்றிய சோர்வு அவள் முகத்தில் அடிக்கோடிட்டுகாட்டியது. அதற்கு காரணம் சற்று முன் வந்தவன் அவள் உடலை தன் வசமாக்கி பிராயணம் செய்து கொண்டிருந்ததாக தான் இருக்கும்.

“வா ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க… எனக்கு தெரியும் இன்னைக்கு நீ வருவேனு”

“எப்புடி தெரியும்..?”

“நேத்து தான் எதுவும் நடக்கலியே… அதான் இன்னைக்கு எப்புடி இருந்தாலும் என்ன அனுபவிச்சே ஆகனும்ங்குற முடிவோடு வருவேனு நினைச்சேன் கரக்ட்டா வந்துட்ட..”

“அதுக்காக தான் இன்னைக்கு வந்ததிருக்கேனு நீங்க நினைக்குறீங்களா…?”

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை கதவை தாழ்ப்பாளிட்டு உரிமையுடன் என் கையை பிடித்து கீழே அமரச் செய்தாள். பிராந்தி வாடம் என்னையே சுற்றிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன் அவள் உடம்பில் இருந்து தான் வருகிறதா என்பதை என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை. இன்று அவள் கருப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் அதுவும் தொலதொலவென்று இருந்தது.

“தோ பார்… இனிமே இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம். என் பேரு முத்தரசி என்ன முத்துனு கூப்பிடு சரியா…?”

அவள் சொன்ன பெயர் என் பாட்டியின் நினைவலைகளை என் மனதிற்குள் சிறு சிறுவாக தோண்டிக்கொண்டிருந்தது.

“முத்தரசி” என் பாட்டியோட பேரு எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும் இப்போ அவங்க இல்ல இறந்துட்டாங்க..”

“ஓ…! அதுக்காக என்ன உன் பாட்டியா நினைக்குறேனு சொல்லாத எனக்கு ஒன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகல… சரி உன் பேரு என்ன…?”

“என் பேரு பாரிவேந்தன்”

என் பெயரை மட்டுமல்ல என்னையும் சேர்த்து ரசித்துக்கொண்டிருப்பது அவள் பார்வையில் தெரிந்தது.

“பாரிவேந்தன் நல்ல தமிழ் பேரு, சரி இன்னைக்கும் நீ என்ன மேட்டர் பன்ன போறது இல்ல… அப்போ எதுக்கு தான் வந்த?”

“நான் எதுக்கு வந்தேனோ அத நான் கேக்குறதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்ட”

நகம் முளைக்காத கட்டை விரலை கடிப்பது போல் பாவனைசெய்துகொண்டே யோசிக்க தொடங்கினாள்

“அடப் பாவி…! என் பேரு தெரிஞ்சுகவா என்ன பார்க்க வந்த… ஃப்ராடு பையா…”

வலித்தும் வலிக்காததுமாக தனது முஷ்டியால் நங்கென்று என் மண்டையில் கொட்டினாள். உரிமையாக அவள் பெயர் சொல்லி அழைக்கவேண்டுமென்று தோன்றியது. எனது சங்கோஜத்தை தூரே வீசி எரிய முடியாமல் தவித்துகொண்டிருந்தேன் எப்படியோ முயற்சி செய்து அவளை பெயர் சொல்லி அழைத்தேன்.

“முத்து…!”

“ம்… சொல்லு பாரி”

நான் பெயர் சொல்லி அழைத்ததை அவள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் சகஜ நிலையில் பேசுவாள் என்று நினைக்கவில்லை. அவள் எதிர்பார்த்ததும் அது தானோ…!

“சரி என்ன பத்தி என்ன நினைக்குற…?”

“என்னடா கட்டிக்கப்போற போற பொண்ணுகிட்ட கேக்குற மாதிரி கேக்குற… சரி சொல்லுறேன். நான் இந்த அறைய விட்டு வெளியே போனது இல்ல பாரி ஆனா பல மனிதர்கள நான் சந்திச்சிருக்கேன். நாலஞ்சு தடவ என் கூட படுத்தவன் கூட என் பேரு தெரிஞ்சுக்க விரும்புறது இல்ல. ம்… அது எதுக்கு அவங்களுக்கு. அதுக்காகவா என்ன தேடி வரங்க.. என்னோட பேர தெரிஞ்சுக்க தான் என்ன பார்க்க வந்தேனு சொன்ன பார்த்தியா அதுல தான் உன்னோட கேரக்டர் தெரியுது. நீ நடிக்க விரும்பாத மனுஷன்னு..”

“ஆனா ஆரம்பத்துல நானும் அதுக்காக தான் வந்தேன் முத்து.. இப்போ தோனமாட்டேங்குது”

“தெரியும் பாரி நானும் அதையே தான் சொல்லுறேன். மத்தவங்க பார்வைக்கு நீ வெகுளியா இருக்குற மாதிரி தெரியலாம் ஆனா என்ன கேட்டா நீ வெளிப்படையா இருக்கேனு தான் சொல்லுவேன். உன்கிட்ட சொல்லுறதுக்கு என்ன இந்த இடத்துக்கு வராத ஆளுங்களே இல்ல. கூலி வேல செய்யுறவனும் வந்துருக்கான், லட்ச லட்சமா சம்பாதிக்குறவனும் வந்துருக்கான். கண் டாக்டரும் வந்துருக்கான், கண்ணு தெரியாதவனும் வந்துருக்கான், பத்தாம் கிளாஸ் படிக்குற பையனும் வந்துருக்கான், காலேஜ் பிரபோசரும் வந்துருக்கான். பார்த்துட்டேன் பாரி இது தான் மனுஷங்கன்னு நான் பார்த்துட்டேன்… ஆனா என் கிட்ட முகம் கொடுத்து பேசுற மனுஷன இப்போ தான் பாக்குறேன்”

சொல்லிமுடித்துவிட்டு தன் பார்வையை வேறு எங்கேயோ திருப்பிக்கொண்டாள். விழிகளில் கண்ணீர் சுரந்து எத்தனை வருடங்கள் ஆகிறதோ. வெளி வருவதற்கு முன் சுதாகரித்துக்கொண்டு சிரித்து பேச தொடங்கினாள்.

“அது சரி எல்லாரும் ஏன்டா என்னையே தேடி வரீங்க நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் சொல்லு…”

சட்டென்று எழுந்து நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் சாயலில் சிரித்த முகத்துடன் நின்றாள். அவள் அழகை வர்ணிப்பதற்கு நான் கவிஞனாக பிறக்கவில்லையே என்று முதல் தடவையாக வருந்தினேன்.

அவளுடனான சந்திப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. தோன்றும் நேரங்களில் எல்லாம் அவள் அறையை தஞ்சம் அடைந்தேன். என்னென்னவோ பேசினாள். ரேவதி அக்கா அங்குள்ள தாசிகளை கவனித்துகொள்வதாகவும் மாதந்தோறும் போலீஸ்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து விபச்சார விடுதியை பேணிகாப்பதாகவும் கூறினாள். அனைவருக்கும் சேர்த்து சமையல் செய்து அவளே ஒவ்வொரு அறைக்கும் எடுத்து வந்து கொடுத்து, அவரவர் பங்கை பிரித்துகொடுப்பதாகவும் கூறினாள். ரேவதி தான் இங்கு கணக்காளர், பங்குதாரர், பாதுகாவலர் எல்லாமும். ரேவதியை பற்றி அவள் சொன்ன எந்த ஒரு காரணமும் என் மனதிற்கு ஏற்புடையதாக தோன்றவில்லை ஏதோ ஒரு வகையில் அனைவரையும் பார்த்துக்கொள்கிறாளே என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

“ஏன்டா தினமும் இவ்ளோ காசு செலவு செஞ்சு என்ன வந்து பாக்குறியே… உங்க வீட்ல ஏன் இவ்ளோ காசு செலவழிக்குறனு கேட்க மாட்டாங்களா…?”

“எனக்கு பணம் ஒரு விஷயமே இல்ல முத்து. அப்பா திருச்சில இன்ஸ்பெக்டரா இருக்காரு. பேஸிகளாவே நாங்க வசிதியான ஃபேமிலி தான் அதனால பணம் ஒரு பிராப்லமா என் ஃலைப்ல இருந்ததே இல்ல. எனக்கும் என் தம்பிக்கும் அக்கௌன்ட் இருக்கு அதுல எவ்ளோ இருக்குனு இப்போ வரைக்கும் எனக்கு சரியா தெரியாது. எவ்ரி மந்த் அப்பா எங்க ரெண்டு பேரு அக்கௌன்ட்லியும் கேஷ் போட்டுடுவாரு”

“ம்… கேட்க ஆள் இல்லாததுனால தான் உன் இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு திரியுற என் ஃலைப்லியும் ஒரு இன்ஸ்பெக்டர் வந்தான் பாரி. விடியுறவரைக்கும் செஞ்சுட்டே இருந்தான்டா அவன் பர்ஸ்ல இருந்த மொத்த காசையும் என்கிட்ட கொடுத்துட்டு தான் போனான். அதோட விட்டானா செயின கழட்டி கொடுக்குறான், மோதிரத்த கழட்டி கொடுக்குறான், மனசுல பெரிய வள்ளல்னு நினைப்பு”

இரண்டு கைகளையும் வில்லாய் வளைத்து சோம்பல் முறித்தாள். அவள் உடல் வளைவுகள் கவர்ச்சியின் உச்சிற்கு சென்றது. அதை ரசிக்க வேண்டும் என்று நினைத்தும் கூட என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன். சிறிது நேரத்திற்கு பிறகு அவளாகவே பேச்சை தொடர்ந்தாள்.

“பாரி உன் ஃபேமிலி பத்தி சொல்லுறியா. எனக்கு உன் ஃபேமிலி மெம்பெர்ஸ் எல்லாரையும் பார்க்கனும் போல இருக்கு…”

அவள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரங்களில் மட்டும் எனது செல்போனை ஒரு சவப்பெட்டியாகவே நினைத்து சுவர் ஓரமாக அடக்கம் செய்துவிடுவேன். இப்பொழுது என் செல்போனிற்க்கு உயிர்த்தெழும் வாய்ப்பை அவளாகவே கொடுத்துவிட்டாள். அவ்வப்போது எனது நண்பர்களுடன் எனது குடும்பத்தாருடனும் எடுத்த புகைப்படங்களை எனது செல்போனில் ஒவ்வொன்றாக காட்டிக்கொண்டே வந்தேன். என் நண்பர்களின் சிலர் முகத்தோற்றத்தை பார்த்து அவர்களை நக்கல் அடிக்கவும் செய்தாள் சிலர் அழகை வர்ணிக்கவும் செய்தாள். நான் தனித்தனியே என் தம்பியுடன் என் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை காட்டினேன். என் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை குறைந்தது பத்து நிமிடத்திற்கு மேலாகவும் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்கு சென்று என் அம்மாவிற்கு திஷ்டி கழிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டாள். அடுத்து முறுக்கிய மீசையுடன் என் அப்பா என்னுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டினேன். அதையும் அவள் இருபது நிமிடத்திற்கு குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என் அப்பாவை வர்ணிக்க வார்த்தைகள் தேட முடியாத நிலையில் அவள் அவதிப்பட்டுகொண்டிருப்பதாக நான் நினைத்தேன்.

“நிஜமாலுமே இவரு தான் உன் அப்பாவா…?”

“அது என்ன நிஜமாலுமே…! சத்தியமா இவரு தான் என் அப்பா”

அவள் விழி ஓரத்தில் கண்ணீர் துளி தேங்கி நின்றுகொண்டிருந்தது. அதை நான் கவனிக்ககூடாது என்பதற்காகவே எழுந்து சென்று ஜன்னல் அருகே போய் நின்றுகொண்டாள்.

“என்ன ஆச்சு முத்து…!”

“ஒன்னும் இல்ல பாரி”

“சம்திங் ராங் இவ்ளோ நேரம் ஜாலியா தானே இருந்த என்ன ஆச்சு சொல்லு”

தொண்டைக்குழிக்குள் சிக்கி தவிக்கும் எச்சிலை மிழுங்குவதற்கு கூட சக்தியற்ற நிலையில் அவள் நின்றுகொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

“என் ஃலைப்லியும் ஒரு போலிஸ்காரன் வந்துருக்கான்னு சொன்னேன்ல அது வேற யாரும் இல்ல உங்க அப்பா தான்”
ஒவ்வொரு வினாடி நகர்த்தலுக்கு பின்னும் எதிர்பாராத விஷயங்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அவள் சொன்ன விஷயம் கனவில் காட்சிகுரியதிற்குட்பட்டாலும் என் மனசுழிப்பே அக்கனவில் இருந்து என்னை விடுவித்துவிடும். அப்பிடியொரு நிகழ்வை தான் அவள் உறக்க சொன்னாள். பத்து நிமிடத்திற்கு மேல் அவள் பார்த்துகொண்டிருந்த பார்வையே ஊர்ஜினமாயிற்று என் அப்பா அவள் தேகத்தை தின்று இருக்ககூடும் என்று.

“ஸாரி முத்து என் அப்பா இப்படி எல்லாம் நடந்துபாருனு சத்தியமா எனக்கு தெரியாது”

“ச்சச… நீ எதுக்குடா ஸாரி சொல்லுற. நான் தான் ஆரம்பத்திலே சொல்லிட்டேனே எல்லாருக்கும் செக்ஸ் வேனும் அதுக்கு என்ன மாதிரி ஒரு பிராஸிடியூட் வேனும். தட்ஸ் இட்”

“நீ இங்க இருக்க வேணாம் முத்து ப்ளீஸ்…! நீ வெளி உலகத்த பாரு நல்ல விஷயம் எவ்வளவோ இருக்கு உனக்கு இந்த அற வேண்டாம்”

“ஐயோ பாரி உனக்கு புரியலியா…? நான் ஒரு விலைமாது விலைக்கு போறவ உன் அப்பன் கூப்டாலும் சரி உன் பாட்டன் கூப்டாலும் சரி நான் போவேன். என் ஃலைப்ல பீலிங்க்ஸ்குற பேச்சுக்கே இடம் இல்ல”

வலியின் உச்சநிலை கண்ணீரில் வெளிப்படும் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். இவள் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா…? அவள் அழுதாள் எந்த ஒரு முக மாறுதலோ கதறலோ இல்லமால் சிலையின் கண்களில் இருந்து கசியும் அருவியை போல் அழுதாள்.

“என்ன சொன்ன பாரி, வெளி உலகத்துல எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கா…? ம்க்கும்.. பெண்களுக்காக கொடி தூக்குவேன், பெண்களுக்காக போராடுவேன்னு சொல்லுற சொல்லுற எழுத்தாளன் கூட என்ன தேடி வந்திருக்கான். விர்ஜினா வூல்ப் எழுதுன “A Room of One’s Own” புக்க கைல வெச்சுகிட்டே என் கூட படுக்க வந்தான். நான் அந்த புக்க படிச்சிருக்கமாட்டேனு நினைச்சுட்டு இருந்தானா இல்ல எனக்கு விர்ஜினா வூல்ப் யாருனே தெரியாதுனு நினைச்சுட்டு இருந்தானானு தெரியல. அந்த புக்க பத்தி நாலு விஷயம் நான் பேசுன உடனே துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடிட்டான். மனுஷங்களோட நிஜ முகத்தையே இந்த அறைக்குள்ள தான் பார்க்குறேன். வெளியுலகத்துல பார்க்குற முகம் எல்லாம் நிஜம் இல்ல அது ஒரு முகமூடி. பெமினிஸ்ட்னு சொல்லிட்டு திரியுற விபச்சாரிங்க கூட இந்த உலகத்துல இருக்காங்க…”

ஒவ்வொரு கணமும் அந்த அறை அவளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. மனிதர்களின் சுயரூபத்தை பளிச்சிடும் அறை, சமுதாயத்தின் பரிமாணத்தை அளவுகோலிட்டு காட்டும் அறை, தன் உடலை கொடுத்து மனபூதங்களை வெளிக்கொண்டுவரும் அறை இப்படியே அந்த அறையில் அவள் ஒவ்வொறு நாளும் படித்துக்கொண்டிருக்கிறாள்.

“நீ எதுக்குடா ஃபீல் பண்ணுற… நீ என்ன தேடி வந்ததுக்கும் உன் அப்பா என்ன தேடி வந்ததுக்கும் ஒரே காரணம் தான் பாரி. ஒரு வேல உங்க அப்பாக்கு அவரோட அம்மா பேரு தான் எனக்கும் இருக்குனு தெரிஞ்சிருந்தா என் கூட படுத்திருக்க மாட்டாரோ என்னமோ…”
சோகம் என்னும் வனாந்தரத்தில் தான் அவளது வாழ்கை ஊஞ்சலாடிகொண்டிருக்கிறது அவிழ்ந்து விழும் நேரத்தையோ தாங்கி பிடிக்கும் விழுதையோ நினைத்து அவள் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என்பது அவள் பேச்சின் சாயலில் இருந்து தெரிந்து கொண்டேன். அவளாகவே என் கண்ணீரை துடைத்துவிட்டாள்.

“சரி முத்து நான் கிளம்புறேன். இன்னொரு விஷயம் அடுத்த மாசம் செமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது என்னால கொஞ்ச நாளைக்கு இங்க வர முடியாது நிறைய படிக்கனும். செமஸ்டர் முடிஞ்சவுடனே உன்ன மீட் பன்ன வந்துடுவேன் சரியா..?”

“ம்… ஆல் த பெஸ்ட் பாரி நல்லா எழுதனும் எதையும் நினைச்சு குழம்பிக்காத”

கிளம்பும் நேரம் சட்டென்று மண்டைக்குள் அவ்விஷயம் விசாலமடைந்தது. நீண்ட நாட்களாகவே அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து வெட்கி வேறொரு நாள் கேட்கலாம் என்று காலம் கடதிக்கொண்டிருந்த விஷயத்தை அவளிடம் கேட்க துணிந்தேன்”

“முத்து உன்கிட்ட ஒன்னு கேட்கடுமா…?”

“ம்ம் கேளு பாரி”

“கேட்டா கோச்சிக்கமாட்டியே”

“உன்கிட்ட கோச்சிக்க என்னடா இருக்கு தைரியமா கேளு”

“உன் கூட ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா…?”

“அடப்பாவி இதுக்கா இப்படி வெட்கப்படுற உனக்கு இல்லாத உரிமையா… வா எனக்கும் உன் கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கனும்னு ஆசையா தான் இருக்கு”

தனது கூந்தலை சரி செய்து முன்பக்கமாக பரவவிட்டாள். மங்கிய சூரிய வெளிச்சம் இருவர் முகத்திலும் ஸ்பரிசித்து கொண்டிருக்க லேசாக சிரித்தவாறே எனது ஐ போனில் வித விதமான தோற்றத்தில் கிளிக் செய்தேன். தேங்கஸ் என்று சொல்லிவிட்டு நகரும் நேரத்தில் சட்டென்று என் மணிக்கட்டை பற்றினாள்.

“என்ன முத்து”

“என்ன டிரஸ்சோட போட்டோ எடுத்த முதல் ஆள் நீ தான்”

நான் அவன் கரங்களை பற்றினேன் அவளது விழிகளின் மீது என் விழிகளை புதைத்தேன். நிர்வாணத்தில் காணமுடியாத கவர்ச்சி அவளது பார்வையில் மின்னியது. என்னை முழுவதும் அந்த பார்வை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். ஏதோ கேட்க நினைத்து வாய் பேச முடியாமல் தவிப்பது போல் இருந்தது அவளது பார்வை.

“நான் திரும்பி வருவேன் முத்து… எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்”

விருட்டென்று அவளது பிடியில் இருந்து நகர்ந்தேன். வர இருக்கும் நாட்கள் எனக்கு எதையோ கற்றுத்தர போவதாக நினைத்துக்கொண்டேன். எனது செமஸ்டர் பரீட்சையும் தொடங்கியது அவ்வப்போது அவளுடன் நான் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். முதல் பரீட்சையின் தொடக்கத்திலிருந்தே கடைசி பரீட்சையின் நிமிடங்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன். இன்று அப்பா டிரான்ஸ்பர் ஆகி சென்னைக்கு வருவதாக அம்மா கூறினாள். இனி அவ்வப்போது அப்பாவின் முகத்தை பார்க்க நேரும் முடிந்தவரை அப்பாவின் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன்.

கடைசி பரீட்சையின் முடிவின் நேரம் நான் வினாத்தாளில் வைக்கும் முற்றுப்புள்ளியில் நிறைவடைந்தது. முடிந்தது சாகாப்தம் என்பது போல் வினாத்தாளை மடித்து கொடுத்துவிட்டு நேராக முத்துவை பார்க்க விரைந்தேன்.

என்றும் இல்லாததுபோல் இன்று முத்து வசிக்கும் காம்பெளன்ட் வாசலில் ஏகப்பட்ட ஜனக்கூட்டம் திரண்டிருந்தது. ஒரு சில போலிஸ் ஜீப்களும், மைக்கை கையில் ஏந்திய பத்திரிக்கை நிருபர்களும் முகாமிட்டிருந்தனர். நான் தெரு முனையில் காரை நிறுத்தி உட்கார்ந்தபடியே அங்கு நடந்துகொண்டிருப்பதை கவனித்தேன். முகத்தை துப்பட்டாவால் மூடியபடி ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் எறும்புகளை போல் ஒவ்வொரு பெண்களாக போலிஸ் வேனில் ஏற்றப்பட்டனர். முகத்தை பளிச்சிடும் துவாரம் கிடைக்காதா என்று போட்டி போட்டுகொண்டு பல கேமிராக்கள் அப்பெண்களின் முகத்தை கிளிக் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தன. அதில் எத்தனை கேமிராக்கள் வெற்றிபெற்றதோ…!

முத்துவும் அந்த போலிஸ்வேனில் ஏறியிருக்கக்கூடும் கூட்ட நெரிசலாலும், தொலைவில் இருந்ததாலும் என்னால் சரியாக முத்துவின் முகத்தை அடையாளங்கொள்ள முடியவில்லை. என் அப்பா தான் தலைமையர் போலும் உறக்க கத்தியபடி அப்பெண்களை போலிஸ்வேனில் ஏறச்சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தார். என் உடலில் உள்ள ரத்த ஓட்டம் ஸ்தம்பித்து எங்கேயோ ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதாக தோன்றியது. ஸ்டியரிங்கை பிடித்தபடி அதில் தலை சாய்த்து அழுதேன். அதிலிருந்து மீள எத்தனை நேரம் அவகாசம் வேண்டுமோ எனக்கு தெரியவில்லை. முத்துவின் அறைவாழ்கை சிறை அறையில் முற்று பெறட்டும் என்று வீட்டிற்கு திரும்பினேன்.

மறுநாள் காலையில் சோபாவின் மேல் இருந்த செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்தேன். நான்காம் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களாக நேற்று நடந்த சம்பவம் ஒருப்பெற்றிருந்தது. விபச்சார விடுதி நடத்தி வந்த பெண் உள்பட 11 விபச்சாரிகள் கைது. அதற்கு கீழ் குணிந்த தலை நிமிராமல் வரிசையாக நிற்கவைத்து முகத்தை துப்பட்டாவால் போர்த்தியபடி எடுத்த புகைப்படம் இருந்தது. வலது பக்கமாக கடைசியில் நின்று கொண்டிருக்கும் பெண் தான் முத்தரசி என்பதை தெரிந்துகொண்டேன் காரணம் நான் பார்த்த இவ்வுலகில் முகமூடி அணியாத ஒரே உருவம் அது.


வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த என் அப்பா வியர்த்த முகத்துடன் உள்ளே வந்தார். நான் செய்தித்தாளை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து என்னை அனுகினார்.

“ஓ….! இந்த நியூஸ் தான் படிச்சிட்டு இருக்கியா நேத்து என்னோட தலைமைல தான்டா பாரி இந்த ரைட் நடந்தது. நாய்ங்க… பொழைக்குறதுக்கு வேற வழியா இல்ல நாட்ல… இவங்களால தான் ஒழுங்கா இருக்க ஆம்பள பசங்களும் கேட்டு போறான்க”

“அவங்கள தேடி போறது நம்மள மாதிரி ஆம்பிளைங்க தாங்குறத மறந்துடாதீங்க… பழிய அவங்க மேல போட்டா எப்புடி?”

செய்தித்தாளை மேசையின் மேல் எறிந்துவிட்டு என் அறைக்கு சென்றேன். ஏதோ ஒரு தூண்டுதல் முத்து வாழ்ந்த அந்த அறையை பார்க்கவேண்டும் என்று மனதிற்குள் முந்தித்தள்ளியது என் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானேன்.

***

Comments are closed.