பாகுபலி : கடந்த காலத்தைத் தொன்மமாக்கும் முயற்சி / அ.ராமசாமி

[ A+ ] /[ A- ]

download (43)

‘வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்’ பலரும் பலவிதமான சூழல்களில் உச்சரிக்கும் சொற்றொடர். அறிவார்ந்த விவாதங்களில் உச்சரிக்கப்படும் இச்சொற்றொடர் சாதாரணமான உரையாடல்களில், “ கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கணும்” என்பதாக வெளிப்படும். தனிமனிதனொருவர் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதன் வழியாகத் தனது தவறுகளைக் கண்டறிந்து அத்தகைய தவறுகள் இனி நிகழாதவாறு சரிசெய்யும்போது வரலாறும், வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதும் நேர்மறைக்கூறு கொண்டனவாக அமையும். தனிமனிதனாக அல்லாமல், ஒரு கலைஞனாக/ படைப்பாளியாக / இயக்கமாக வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதிலும் இதே நேர்மறைக்கூறைக் காணமுடியும். ஆனால் நேர்மறைக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன என்று வாதிட்டால், வாதம் செய்பவர்கள்மேல் சந்தேகம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வரலாற்றின் ஒரு கட்டத்தில் நடந்த வெற்றியும் அதன் காரணிகளும் அப்படியே இப்போதும் பயன்படும்; வெற்றிதரும் என நம்புவதும், அதனையே சரியென முன்வைப்பதும் நேர்மறைக் கூறுகள் அல்ல; அதன் பின்னிருப்பது எதிர்மறை மனோபாவம்; நிகழ்காலத்தை மறுக்கும் போக்கும்கூட.

காட்சி மற்றும் கேட்புக்கலை, இரண்டையும் உள்ளடக்கிய நிகழ்த்துக்கலை தொடங்கி, எழுத்துக்கலை ஈறாகச் சிலவகைக் கலையியல் காலகட்டங்களைத் தாண்டியே பயணித்துள்ளன. கலையியல்வாதிகள் ஒன்றின் இடத்திலிருந்து இன்னொன்றிற்கு நகரும்போது நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்துத் தங்கள் காலத்திற்கு ஏற்ற கலையியல் போக்கு எதுவென முடிவுசெய்துவிட்டே நகர்ந்துள்ளனர்.

செவ்வியலின் போதாமையை உணர்ந்தபோதுதான் புனைவியலுக்குள் நுகர்ந்தது கலையியல். புனைவியலின் அதீதம் உணரப்பட்டபோதுதான் இயற்பண்புவாதம் பரிசீலிக்கப்பெற்றது. அதன் சாத்தியங்களும் முன்வைப்புகளும் தட்டையானவையெனத் தோன்றியது நடப்பியலின் தேவை உணரப்பட்டது. அதுவும் சிக்கலாக இருப்பதாக உணரப்பட்ட நிலையில் அதன் உட்கூறுகள் பலவிதமாகப் பல்கிப்பெருகின. அவைகளைத் துறந்தவர்களின் கண்டுபிடிப்புகளே நடப்பியல் அல்லாத கலையியல் போக்குகளான அபத்தவாதம், மனப்பதிவியல், வெளிப்பாட்டியம், குறியீட்டியம், குரூரவியம், தூரப்படுத்தி இணைத்துக்காட்டும் காவ்ய பாணியெனக் கலையியல் வகைமைகள் உருவாகின.

‘இவையெல்லாம் ஐரோப்பிய அறிவாளிகள், அவர்களது சமூகத்தின் தேவைக்காகக் கண்டுபிடித்த கோட்பாடுகள்; இந்திய சமூகத்தின் பழம்பெருமைக்குள் இவற்றின் இடம் கேள்விக்குரியது’ என வாதம் செய்கின்றோர் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான பதிலைப் பசுவய்யாவின் கவிதை வரிகளான – மனைவிக்குப் பிடித்ததோ தக்காளி ரசம் – என்பதின் மூலம் கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
கலைப்படைப்புருவாக்கத்தில் புனைவியல் வெளிப்பாடுகளைப் போற்றிய காலமுண்டு. புனைவியலின்மீது கொண்ட விருப்பத்தால் சில கலைஞர்கள் புனைவியல் ஆக்கங்களை, மிகைப்புனைவியலாக ஆக்கியதுமுண்டு. அதனால் அதன் தாக்கம் குறைந்தது.

download (46)
இந்தியப் புனைவியலின் சிகரங்களாகக் காளிதாசன், பாஷன், மகேந்திரவர்மப்பல்லவன் போன்ற சம்ஸ்க்ருத நாடகாசிரியர்களையும், சீவகசிந்தாமணி, கம்பனின் ராமாயணம் போன்ற காப்பியங்களையும் சொல்லலாம். காப்பியங்களுக்குப் பின் தோன்றிய உலாக்கள், பரணிகள், பிள்ளைத்தமிழ்கள்,தூதுகள் முதலியனவும் புனைவியல் வெளிப்பாடுகளே. ஓவியங்கள், சிற்பங்கள் என இடைக்காலக் கோயில்களில் புனைவியல் வெளிப்பாடுகள் உள்ளன. புனைவியல் வெளிப்பாடுகள் எப்போதும் நிகழ்காலத்தைப் பேசுவன அல்ல. கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்தும்/ முன்வைக்கும் படைப்புகளாகவே இருக்கும்.

கடந்தகாலத்தை முன்வைக்கும் படைப்புகளுக்கு ஆதாரமாக இருப்பனவற்றை நவீனத்திறனாய்வு ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதில்லை. சிலவற்றை வரலாறு என்று சொல்லும்; சிலவற்றைப் புராணமெனக்கூறும். இரண்டையும் இணைத்துத் தொன்மம் எனவும் சொல்வதுண்டு. சிலவரலாற்று நிகழ்வுகளும் சிலபுராண நிகழ்வுகளும் தொன்மங்களாகி இப்போதும் நீண்டுகொண்டிருக்கின்றன;நீளும். இத்தகைய நீட்சிக்குக் காரணமாக இருப்பவைகள் கலைகள். கலைகளைத் துணைக்கொண்ட நிகழ்வுகளே தொன்மங்களாக நீள்கின்றன.
வரலாற்றுப் பின்னணிக் கதைகளும் கிளைக்கதைகளும் மிகைப் புனைவியல் அடுக்குகளுக்குப் பொருத்தமானவை.

புராணவியல் கதைகளும் தொன்மக் கிளைக்கதைகளும் அந்த அளவுக்குப் பொருத்தமானவை அல்ல. பாகுபலி என்ற பெயரில் எடுக்கப்பட்ட இரண்டு பாகத்திரைப்படம், வரலாற்றைத் தொன்மமாக்கிப் புராணவியலுக்குள் நிலைநிறுத்தும் எத்தணிப்புகள் கொண்ட படம். இந்த முன்மொழிவை விளக்குவதற்கு முயலலாம்.
பாகுபலி 1 மிகைபுனைவியல் அடுக்குகளால் நிரப்பப்பட்டிருந்தது. அப்படம் வெளிவந்தபோது விரிவான கட்டுரையொன்றை அம்ருதா இதழில் எழுதினேன்.

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் என்ற தலைப்பிட்டு எழுதிய அக்கட்டுரையின் முன்வைப்பாக எழுதப்பெற்ற பகுதி இது:
வெகுமக்கள் ரசனை என்பதே நினைவுத் தூண்டுதலின் வழியாகவே உருவாக்கப்படுகிறது. வெகுமக்களின் மனப்பாங்கையும் ரசனையையும் கட்டமைப்பதில் முக்கியமான இடம் இருப்பின் தொடர்ச்சியை (Status go ) முன்னெடுப்பதற்கு உண்டு. வாழ்தலுக்கான அறம் அல்லது வாழ்க்கை முறை என்பதில் புதிதான கருத்துகளையோ, மாற்றங்களையோ முன்வைக்காத வாழ்க்கைமுறையைப் பெரும்பான்மைப் பொதுமனம் ஏற்றுக்கொள்ளும்; கொண்டாடும். அதேபோல ஏற்கெனவே ரசித்த- மெய்மறந்த பொருட்களைப் புதுக்கிப்புதுக்கிப் புத்தம் புதிதாக ஆக்கித் தரும் கலைஞர்களையும் ஏற்றுக்கொள்ளும்; கலைகளையும் கொண்டாடும். இவ்விரண்டையும் பாகுபலி கச்சிதமாகச் செய்திருக்கிறது.

பாகுபலி 2, முதல் பாகத்தையும் இணைத்து – காட்சி இன்பத்தைத் தவற விடாமல், நல்திற நாடகவடிவத்தை ( WELL -MADE PLAY) முழுமையாக்கியுள்ளது. அதன்மூலம் புனைவியல் தயாரிப்பை மிகைப்புனைவியல் சினிமாவாக ஆக்கியிருக்கிறது. புனைவியல் சினிமாக்கள் வசூல் வெற்றிக்கு உத்தரவாதமானவை. அதிலும் நற்றிறக் கட்டமைப்பு நாடகவடிவத்தில் உருவாக்கப்படும்போது எல்லாவகைப் பார்வையாளர்களையும் தனது பார்வையாளர்களாக இழுத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உருவாகிவிடும்.

பாகுபலி இரண்டின் காட்சி அடுக்குகளை மறந்து விட்டுக் கதையடுக்குகளை நினைவுபடுத்திக்கொண்டு யோசித்துப் பார்க்கலாம். அதன் ஒவ்வொரு அங்கமும் அதன் உட்பிரிவான காட்சியும் (ACT & SCENE ) நல்திற நாடகத்தின் முடிச்சுகளாகவே அமைக்கப்பட்டிருப்பதை உணரமுடியும். தொடர்ந்து சதிவலைகளைப் பின்னிக்கொண்டே இருக்கும் பிஜ்ஜல தேவாவுக்கும் (நாசர்), அதனைத் தொடர்ச்சியாகத் தகர்த்துத் தனது சத்திரிய அடையாளத்தை – “ராஜ்மாதா” பிம்பத்தைத் தக்கவைக்கும் அவரது மனைவி சிவகாமிதேவிக்கும் (ரம்யா கிருஷ்ணன்) இடையே உருவாக்கப்படும் முரண்நிலைகளின் வளர்ச்சியே பாகுபலி என்னும் நல்திற நாடக வடிவில் அமைந்த திரைக்கதை.

சொந்த மகனைப் (பல்வாதேவா) புறந்தள்ளிவிட்டு மாற்றாள் மகனுக்கு(மகேந்திரபாகுபலிக்கு)ப் பட்டமளிப்புச் செய்யும் சிவகாமி தேவியின் சத்திரிய அறம்.

சொந்த தேசத்து மக்களை அறியப்போனவன் அந்நியதேசத்து இளவரசியின் காதலைப் பெற மாறுவேடம்.
நாட்டைப் பறிகொடுத்ததற்குப் பலிவாங்க அவனது காதலியைச் சதிமூலம்- வாக்குக்கொடுத்தால் நிறைவேற்றுவாள் சிவகாமியென்னும் சத்திரியகுல அன்னை என்பதைக் காரணமிட்டு பாகுபலியோடு மோதல்.

அதிகாரமா? காதலிக்குக் கொடுத்த வாக்கா? எது முக்கியம் என்ற கேள்விக்கு அதிகாரத்தைத் துறக்கும் பாகுபலியின் தியாகம் அல்லது சத்திரிய குணம்.
தன் மடியில் வளர்த்த குழந்தையை அன்புக்குரிய பாகுபலியை முதுகில் குத்தித் தன்னை நிரூபிக்கும் அடிமை கட்டப்பாவின் சத்திரிய விசுவாசம்.
எல்லா அதிகாரத்தையும் தந்த தாயைவிடத் தாரத்திடம் மயங்கிவிடும் மகனை வெறுக்கத் தொடங்கும் அம்மாவின் உளவியல் சிக்கலோடு கூடிய முரண்அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகுபலி மக்களோடு இணைந்து மாற்று அரசனாக உருவாகும் சிக்கலின் வளர்ச்சிநிலை.

மக்களின் மதிப்பைப் பெற்ற மகேந்திர பாகுபலிக்குத் தனது அடிமை விசுவாசத்தால் மரணத்தைத் தந்த கட்டப்பாவின் மனமாற்றத்தால் அல்லது கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் செயலால் தோற்ற அறம் திரும்பவும் வெல்லும் என்ற உச்சநிலை. மக்களைக் காப்பாற்றாத பல்வாள் தேவனின் தோல்வியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களைக் காக்கும் புதிய பிரகடனத்தோடு -சாசனத்தோடு- அமரேந்திர பாகுபலியின் நல்லாட்சி ஏற்பட்டது
என முடியும் பாகுபலியின் கதைப்போக்கில் வெளிப்படுவது மகாபாரதத்தின் கதைப் போக்கு அம்சங்களே.

ஆட்சி நிர்வாகம் செய்யும் திறனும் அறத்தின் மீதான நம்பிக்கையும் தன் மகன் துரியோதனனுக்கு இல்லை; தன் தம்பி மகன் தர்மனுக்கே உண்டு என்று கருதியவன் திருதராஷ்ட்ரன். ஆனால் சகுனியின் துணையால் ஆட்சியைக் கைப்பற்றிய துரியன், பாண்டவர்களை வனவாசமும் அஞ்ஞாதவாசமும் செய்யவைத்தான்; கடைசியில் சத்திரிய தர்மத்தை நிலைநாட்டவே 18 நாள் போர் நடந்தது. பாரதக்கதையின் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், அது எழுப்பிய தன்னேரில்லா வீரம், தியாகம், காதல், காமம், தாய்மை, மக்கள் சார்பு, ஈகை, இரக்கம் போன்ற உணர்வுகளும் பாகுபலிக்குள் பொதிந்து கிடக்கின்றன.
download

நற்றிற நாடகவடிவத்தில் துன்பியல் வகைகள்கூடத் தோல்வையைச் சந்திக்கும். ஆனால், நாயகப்பாத்திரத்தின் வெற்றியை உறுதிசெய்யும் இன்பியல்வகைகள் பெரும்பாலும் தோற்பதில்லை. அதிலும் நிகழ்கால இந்தியச் சூழலில் அவற்றிற்கு வெற்றி நிச்சயம். நிச்சயமான வெற்றிப்படமாகத் தயாரிக்கப்பட்ட பாகுபலி, சமகால அரசியலைப் பின்னோக்கிய அரசியலுக்குள் நகர்த்தும் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது; கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் செயல்பட்ட திராவிட இயக்கங்களும், அதன் முன்னணிப்படையாகச் செயல்பட்ட அறிவாளிகளும், கலையைப் பயன்படுத்தி வெகுமக்களை அரசியல் மயமாக்கியதில் முன்னனுபவங்கள் நிரம்பியவர்கள். ஆனால் இன்று திராவிட இயக்கங்களின் பின்னணியில் வெளிவரும் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் பாகுபலிபோன்ற படங்களைக் கொண்டாடுகிறார்கள் என்பது நகைமுரண் மட்டுமல்ல; அரசியலற்ற தன்மையின் வெளிப்பாடும்கூட.

மந்திரிகுமாரி, அரசிளங்குமாரி, பாக்தாத் திருடன், மணிமகுடம், காஞ்சித்தலைவன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி மன்னன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் என வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்ட சினிமாக்களைத் திரும்பவும் தேடிப்பார்க்கலாம்; ஏற்கெனவே பார்த்தவர்கள் நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம். இவற்றிற்குத் திரைக்கதை அமைத்தவர்கள் நாயக பிம்பங்களை/ தன்னேரில்லாத் தலைவர்கள் முன்வைக்கும் வடிவங்களில்தான் செயல்பட்டார்கள். ஆனால் அத்தலைவர்கள் மக்கள் சார்பு அரசியலின் மீது நாட்டம் கொண்டவர்களாக முடிவில் வெளிப்பட்டார்கள்.

அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்களாட்சியை நோக்கி நகர்த்தும் தலைவர்களாக அவர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டன. இத்தகைய சார்புநிலையே படைப்பாளியின் அரசியல். ஆனால் பாகுபலியில் வெளிப்படும் சார்புநிலை பழைமைக் கொண்டாடும், உறுதிசெய்யவிரும்பும் சார்புநிலை.

நிகழ்கால அரசியலில் இத்தகைய அரசியலை வெளிப்படுத்தும் அரசியல் இயக்கம் எவையெனச் சொல்லவேண்டியதில்லை. மதவாத இயக்கங்களும் சாதிய இயக்கங்களும் சத்திரியத் தலைமையை உறுதிசெய்யும் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. அதன்வழி பிராமணியத்தைத் தக்கவைக்கப்பார்க்கின்றன.

அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் நவீனத்துவ அரசியல்/ நேருவிய மக்களாட்சி அரசியல், இருப்பைத் தக்கவைப்பதைக் கைவிடச் செய்து சிறிதளவு மாற்றங்களை முன்வைத்தது. அதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது அம்பேத்கர் எழுதித்தந்த அரசியலமைப்புச் சட்டம். ஆனால் நவீனத்துவ அரசியலிலிருந்து முன்நகர்ந்து செல்லவேண்டிய நிலைக்கு மாறாகப் பின்னோக்கி ஓடும் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது சமகால அரசியல் வாழ்வு. அந்த ஓட்டத்தில் பின்னங்கால்கள் பிடறியில் அடிபடுவதைக்கூட ரசிக்கிறார்கள் வெகுமக்கள் ரசனையை உருவாக்கும் ஊடகக்காரர்கள். அதனை ஏற்றுக் கொண்ட திரள்மக்களும் பண்பாட்டின் பெயரால் பாகுபலி போன்ற படங்களைக் கொண்டாடுபவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

அந்த ரசனை வெகுமக்கள் ஊடகத்தை ரசிக்கும் ரசனையாக இல்லாமல் பண்பாட்டின் பெயரால் பழைமையை ஆராதிக்கும் மனநிலையாக – தன்னேரில்லாத் தலைவனைத்தேடும் அரசியலாக மாறும் என்பது உணரப்படவில்லை. தன்னேரில்லாத் தலைவர்களின் காலம் நிலமானிய காலம் என்பதை உணரவேண்டும். உணர்த்தவேண்டிய அரசியல் இயக்கங்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன.

•••••

Comments are closed.