பாரம் ( சிறுகதை ) அறிமுகப் படைப்பாளி – வினோத் ராஜ்

[ A+ ] /[ A- ]

images (38)

கிட்டத்தட்ட மணி ஒன்றை நெருங்கியிருந்தது. இன்று அப்பாவைக் கூப்பிடக் கூடாது என்ற முடிவுடன் கடைசி இரயிலிலிருந்து இறங்கிய அவன், இருப்புப்பாதைகளைக் குறுக்காகக் கடந்து ஒரு குறுக்கு சந்தின் வழியாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நேரம் தவறிவரும் ஒவ்வொரு நாளும் அவனுக்குள் எப்போதுமொரு சங்கடம் நுழைந்து அவனை இம்சித்தபடியிருக்கும். அது, பூட்டப்பட்டிருக்கும் கதவுகளுக்கு முன்பாக நின்றுக்கொண்டு ‘அப்பா… அப்பா…’ என்று குரல் கொடுத்து தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவை எழுப்பி கதவைத் திறக்கச் சொல்வது. ரொம்பவும் தாமதித்து வரும் பெரும்பாலான எல்லா நாட்களிலும், கதவுகளுக்கு முன் வந்து நிற்கும் அவன் ‘அப்பா… அப்பா…’ என்று மட்டுமே குரல் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஓரிரு சமயங்களில் மட்டுமே பெருந்தயங்களுடன் அண்ணனை அழைத்து குரல் கொடுப்பான். அவனது அக்கா தன் குழந்தைகளுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருக்கும் சமயங்களில் மட்டும் அவளது இருப்பை உறுதிச்செய்துக்கொள்ளும் அவன், மற்ற யாரையும் தொந்தரவு செய்ய மனமற்று அவளை அழைத்து கதவைத் திறக்க சொல்வான்.

பெரும்பாலும் அவன் தன் அம்மாவை அழைப்பதைத் தவிர்ப்பான். காரணம், அவன் வயதுடைய பிள்ளைகள் எல்லாம் ‘ஒன்பது முதல் ஐந்து’ என்று நேரத்துக்கு வேலைக்குப் போய் வீடு திரும்பிக்கொண்டிருக்க, ‘தூக்கத்தையும் உடலைக் கெடுத்துக்கொண்டு நாய்ப்போல அலையும் இந்தச் சினிமா பொழப்பெல்லாம் இவனுக்கு மட்டும் எதற்கு?’ எனும் குறை அவனிடத்தில் அவனுடைய அம்மாவுக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் அவனது தாமதமான வருகைகள் குறித்து அவளுக்கு எப்போதுமொரு பயமும் இருந்து வந்தது. அதனால் நடுநிசியில் வந்து நிற்கும் அவனுக்கு அவளிடமிருந்து நிறைய வசவுகள் கிடைக்கும். அதனால் அவளைத் தொந்தரவு செய்து அவளது கோபத்துக்கு மேலும் ஆளாக கூடாது என்பதிலும் அவன் எப்போதும் கவனமாக இருப்பான். அதனால் அவனது குரல் ‘அப்பா…’ என்றே எப்போதும் எழும்.

எப்போதும் அவனது அப்பா, நடுநிசியில் வந்து குரல் கொடுக்கும் அவன் குரலுக்குச் செவிச்சாய்த்து ஒரு கடமையைப் போல கதவுகளைத் திறந்துவிடுவார். உள் நுழையும் அவனிடம், முதல் வார்த்தையாக ‘சாப்ட்டிய்யாடா?’ என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்க அவருக்கு வேறெதும் கேள்விகள் இருக்காது. அவன் சாப்பிடாவிட்டாலும்கூட, ‘ம்… சாப்ட்டேன்…’ என்று சொல்லி ஒரு தலையசைப்புடன் கழிவறைக்குள் நுழைந்து கைக்கால்களைக் கழுவ துவங்குவான். ஆனாலும் அவருக்குத் தெரியும் அவன் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று. மேசையிலிருக்கும் சாப்பாட்டைத் திறந்து வைத்துவிட்டு, ‘சாப்ட்டு தூங்குடா…’ என்று சொல்லிவிட்டு அவனது அப்பா மீண்டும் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே சென்று படுத்துக்கொள்வார். அடிக்கடி தொடரும் இதுமாதிரியான நடவடிக்கைகள் குறித்து அவனது மனதில் பல்வேறு எண்ணங்கள் எழுந்தடங்கும்.

அவனது நண்பர்களுடன் சேர்ந்து வடபழனியிலேயே அறையெடுத்து தங்கிவிட்டால், இந்த மாதிரியான சங்கடங்களெல்லாம் அவனுக்கு இருக்காதுதான். ஆனால் அவன், குடும்பத்தைவிட்டு தனியாக அறையெடுத்து தங்குவதில் அவனது அம்மாவுக்குத் துளியும் விருப்பமே இல்லை. எந்நேரமானாலும் அவர்களுக்கு அவன் வீடுத்திரும்பிவிட வேண்டும், அவர்களின் அருகாமையிலேயே அவன் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் வீட்டிலிருக்கும்போதே பசியற்று சரியாக சாப்பிடாமல் அலைவுறும் அவனது உணவுப்பழக்கம் குறித்த பயம்வேறு அவர்களுக்கு இருந்தது.

அந்த நடுநிசி இராப்பொழுதில் சாலை யாருமற்று வெறிச்சோடிக் கிடந்தது. சோடியம் மின்விளக்குகளின் வெளிச்சத்தில், அந்தச் சாலையைப் பார்ப்பதற்கு எப்பவும் போல அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தத் தனிமையான நடை, ஒரு தாய் சோர்வுற்றிருக்கும் தன் குழந்தையைத் தேற்றுவதைப் போல அவனது மனதைத் தேற்றி ஆறுதல் படுத்தியது.

கொஞ்ச தூரத்தில், ஒரு நாய்க்குட்டியொன்று ‘வ்ம்… வ்ம்… வ்ம்…’ என்று முணகியபடி சாலையில் அலைந்து திரிவதைப் பார்த்தவன், அது தன் தாயைப் பிரிந்து தேடி அலைவதை உணர்ந்து பரிதாபப்பட்டான். வாலை ஆட்டியபடியே அந்தக் குட்டி அவனைப் பார்த்து மேலும் மேலும் முணகத் துவங்கியது. அது அவனை நோக்கி ஆவலுடன் ஓடிவந்தது. அவன் கால்களையே சுற்றி சுற்றி வந்தபடி இருந்தது. தலை நிமிர்ந்து அவனைத் தன் கண்களால் ஊடுருவியபடியே இருந்தது. ஒரு கணம், குனிந்து அதைப் பார்த்து ‘என்னாடா? என்ன வேணும்?’ என்று கேட்டு உதடுகளைக் குவித்து மெல்லிதாக விசிலடித்து அதைத் தடவிக்கொடுத்தான் அவன். அந்தக் குட்டி தனக்கு ஓர் ஆறுதல் கிடைத்துவிட்டது என்ற பாவனையிலும் சந்தோஷத்திலும் முணகியபடியே கண்களை மூடிமூடித் திறந்தது. சுற்றிலும் பார்த்தான். எங்கும் வெறுமை பரவியிருந்தது. அந்த நாய்க்குட்டியைச் சைகையால் அழைத்தபடியே முன்னோக்கி நடக்க ஆரம்பித்தான். நாய்க்குட்டி வாலையாட்டியபடி அவனைப் பின்தொடர்ந்து சென்றது. இந்தக் குட்டியைப் போல இதைத் தேடி இதன் தாய் எங்கு அலைந்துக்கொண்டிருக்கிறதோ என்று யோசித்தபோது அவனுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

தெருமுனைக்கு அருகாக வந்தபோது பூட்டப்பட்டிருந்த மளிகைக்கடைக்கு முன்பாக அமர்ந்தபடி மூன்று பேர் மதுவருந்திக் கொண்டிருந்தது அவனுக்குத் தெரிந்தது. எல்லா நாட்களிலும் யாராவது அந்தக் கடைக்கு முன்பாக தங்களது இருச்சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு மதுவருந்தியபடி உரையாடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அவன் அவர்கள் யாராக இருப்பார்களென்ற யோசனையுடன் முன்னகர்ந்துக் கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து அந்த நாய்க்குட்டியும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. மதுவருந்திக்கொண்டிருந்தவர்கள் அமர்ந்திருந்த இடம் முழுக்க இருள் நிரம்பியிருந்ததால், அவனால் அவர்களைச் சரியாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. அவன் அவர்களை நெருங்கியபோது அவர்கள் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்கள். இவனுக்குத் துணையாக வந்துக்கொண்டிருந்த நாய்க்குட்டியை அவர்களில் ஒருவர் ‘ஜூ… ஜூ…’ என்று ஒரு முறுக்கை நீட்டி அழைக்க அவருக்கு அருகாக ஓடியது. அவரது கையிலிருந்து முறுக்கைக் கவ்விக்கொண்டது அது. அவர் அதைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டுத் தடவி கொடுக்க ஆரம்பித்தார். இவனைவிட்டு அவரிடம் ஒட்டிக்கொண்ட அந்த நாய்க்குட்டியின் மீது இவனுக்கு வருத்தம் உண்டானது. அவன் அதை அழைப்பதா வேண்டாமா என்று ஒருகணம் யோசித்துவிட்டு வேண்டாமென்று நடக்கத் துவங்கினான்.

வீட்டின் வெளிப்புறத்திலிருக்கும் இரும்புக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அப்பாவைக் கூப்பிடக் கூடாது என்று நினைத்தபடியே வந்தவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை. அவரைத்தான் கூப்பிட வேண்டியிருந்தது. காலிங் பெல் என்று அவனது வீட்டுக்கு எதுவும் இல்லாதபடியால், பூட்டப்பட்டிருக்கும் வாசற்கதவுக்கருகாக சென்று ‘அப்பா… அப்பா…’ என்று இரண்டு தடவைகள் குரல் கொடுத்தான். பதிலேதுமில்லாததால் மீண்டுமொரு முறை உரத்த குரலில் அழைத்து பார்த்தான். வெளிப்பக்கமிருந்த தாழ்ப்பாளைச் சத்தமாக தட்டினான். எதற்கும் பதில் குரல் கேட்கவே இல்லை. ஒரு வேளை அப்பா ஆழ்ந்து தூங்கியிருக்கலாம் என்ற எண்ணம் எழ அவரைத் தொந்தரவு செய்ய மனமற்றவனாக மீண்டும் அவரை அழைப்பதைத் தவிர்த்து, ஜன்னல் வழியாக ஹாலில் படுத்திருக்கும் அண்ணனைக் கூப்பிடலாமென்று ஜன்னலுக்கு அருகாக வந்து எட்டிப்பார்த்தான். அவன் நினைத்தது மாதிரியே அவனது அண்ணன் ஹாலில்தான் படுத்துக்கொண்டிருந்தான். அண்ணனின் பெயர் சொல்லி அவனைச் சத்தமாக கூப்பிட்டான். அவனது குரல், கம்பெனிக்குப் போய்வந்து அசதியுடன் படுத்திருக்கும் அவனது அண்ணனின் செவிகளை எட்டவே இல்லை.

இந்தக் கணத்தில் அம்மாவை அழைக்கலாமா என்ற யோசனை அவனுக்கு வந்தது. கூடவே சில நாட்களுக்கு முன்பு அம்மா, பேச்சோடு பேச்சாக ‘தெனமும் நீ இப்படியே வந்துட்டிருந்தா ஒரு நாள் அப்பாவும் உனக்குக் கதவைத் திறக்காம விட்டுடப்போறாரு பாரு… என்னைக் கூப்ட்டாலும் நான் வந்து தெறக்கமாட்டேன்… அப்புறம் நீ வெளியில திண்ணையிலத்தான் படுத்துக்கெடக்கனும்… ஒரு நாள் இது நடக்கப்போகுதா இல்லையான்னு பாரு…’ என்று சொல்லியதும் நினைவுக்கு வந்தது. அம்மாவின் அந்த வார்த்தைகள் அந்தக் கணத்தில் ஓர் அசிரிரீ போல காதில் கேட்கத் துவங்கியது. அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனது காதில் ஒலிக்க மனம் சஞ்சலப்பட ஆரம்பித்தது. ஏனென்றே தெரியாமல் வழக்கத்துக்கு மாறாக அவனுக்குள் கோபம் மூண்டது. அந்தக் கோபம் பாரப்பட்சமில்லாமல் எல்லாரின் மீதும் அவனுக்கு இருந்தது. ‘ஏன் கதவைப் பூட்டி வைத்தார்கள்? எத்தனை மணியானாலும் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று இவர்களுக்குத் தெரியாதா? கதவைத் திறந்து வைத்திருந்தால்தான் என்ன? எந்தத் திருடன் வந்து புகுந்துவிடப்போகிறான்? நான் அவஸ்தைப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறார்களா?’ என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது.

திடீரென்று ‘கிருபா…’ என்று அவனை அழைக்கும் ஒரு குரல், அவனுக்குப் பின்னாலிருந்து கேட்க, பதற்றமாகி அவன் திரும்பிப்பார்த்தான். பக்கத்து வீட்டு அண்ணன் நின்றுக்கொண்டிருந்தார்.

‘என்னப்பா? யாரும் கதவைத் திறக்கலயா?’

‘ஆமாண்ணா… ரொம்ப நேரம்மா கூப்டுட்டே இருக்கேன்… யாரும் எழுந்துறக்கவே இல்ல…’

‘நல்லா தூங்கிட்டு இருப்பாங்க போல…’

‘இல்லண்ணா… என்னோட கொரல கேட்டும் கேக்காத மாதிரி இருக்காங்கண்ணா… வேணும்னேதான் இப்டி பண்றாங்க…’. வெறுப்பில் அவனிடமிருந்து வார்த்தைகள் சிதறின.

‘ சரி நீ வா! எங்க வீட்ல வந்து படுத்துக்க…’

‘இல்லைண்ணா… பரவால்ல… நான் போன் பண்ணி அண்ணனை எழுப்பிக்கிறேன்… நீங்கப் போங்கண்ணா…’ என்று அவரிடம் சொன்னான். அவரும் அதற்குமேல் அவனை வற்புறுத்த இயலாமல், தனது வீட்டுக்குப் போய்விட்டார். இவன் விறுவிறுவென்று கோபத்தில் நடக்க ஆரம்பித்தான். வீட்டைவிட்டு வெளியேறினான். பேண்ட் பாக்கெட்டிலிருந்து போன்னை எடுத்து அக்காவுக்கு டயல் செய்தான். அவனது அக்கா வீடு அவனது வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. அதனால் அவளது வீட்டுக்குப் போய்விடலாமென்ற எண்ணத்தில் அவளை அழைத்தான். இடையில் அவனுக்கு சில எண்ணங்கள் எழுந்தன. இந்த நடுநிசியில் அக்காவுக்குப் போன் செய்தால் என்ன ஏதென்று அவள் பயந்துவிடமாட்டாளா? அதுமட்டுமில்லாமல், இந்த வேளையில் சென்றால் மாமா என்ன நினைப்பார்? இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியிலும் அவன் அக்காவின் அழைப்பைத் துண்டிக்கவில்லை. அவளிடம் பேசுவது மனதையாவது கொஞ்சம் சமநிலைப்படுத்தும் என்று நம்பினான். அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை. நிச்சயம் அக்கா ஆழ்ந்த உறக்கத்திலிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. இவனுக்கு மேலும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இலக்கற்று நடக்க ஆரம்பித்தான்.

தெருமுனை மளிகை கடைக்கு எதிராக கசக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக் குவளைகளும் தண்ணீர் பாக்கெட்டுகளும் மூன்று மதுப்புட்டிகளும் கிடந்தன. அங்கு மதுவருந்திக்கொண்டிருந்த நபர்கள் கிளம்பிவிட்டிருந்தார்கள். கூடவே நாய்க்குட்டியையும் காணவில்லை. அவர்களில் யாராவது ஒருவரைப் பின்தொடர்ந்துதான் அது போயிருக்க வேண்டுமென்று இவனுக்குப்பட்டது. அந்த நாய்க்குட்டியைப் போல அலைவுறும் தனது வாழ்க்கையைக் குறித்து அவன் அந்தக் கணத்தில் நொந்துக்கொண்டான்.

மீண்டும் அக்காவுக்குப் போன் செய்தான். இந்த முறை அவனது அக்கா அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ… அக்கா…”

“என்னடா கிருபா?” அவளது குரலில், அவன் நினைத்தது போலவே ஒரு பதற்றம் தொற்றியிருந்தது.

“பயப்படாத…ஒன்னுமில்ல… வீட்டுக்கு இப்போதான் வந்தேன்… வீட்ல யாருமே கதவைத் திறக்கல… செம கடுப்பா இருக்கு… வேணும்னே என்னை சாவடிக்கறாங்க… அதான் உங்க வீட்டுக்கு வரேன்… கதவைத் திறந்தே வை…” அவன் அழுதுவிடும் மாதிரியான குரலில் சொன்னான்.

“டேய்… இந்நேரத்துல எப்படிடா வருவ?”

“நான் நடந்தே வரேன்… நீ போன்னை வை…” என்று சொல்லி அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

சதா அலைவுறும் தனது வாழ்க்கை குறித்த அவநம்பிக்கைகள் அவனுக்குள் பெருக ஆரம்பித்தன. எதற்காக இப்படியெல்லாம் அலைந்துக்கொண்டிருக்கிறோம்? அம்மா சொல்வதைப் போல, சீரான நேரத்துக்குப் போய் வரும் மாதிரியாக ஒரு வேலையைத் தேடிக்கொண்டால்தான் என்ன? இந்தச் சினிமா பித்து தலைக்கேறியது எப்போது? இந்தப் பைத்தியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, குறைய ஒரு வழியையும் காணோமே ஏன்?. ஏதேதோ எண்ணங்கள் ஏற்பட்டன அவனுக்கு.

நடந்தே அவன் தனது அக்காவின் வீட்டை அடைந்திருந்தான். வெளியில் லைட் எரிந்துக்கொண்டிருந்தது. வாசற்கதவு திறந்திருந்தது. தனது மாமாவின் பைக் இல்லாததை அப்போதுதான் அவன் கவனித்தான். ‘நல்ல வேளை… அவர் இல்லை… அனேகமாக அவர் எதாவது வேலையாக அவரது கிராமத்துக்குப் போயிருக்க வேண்டும்… இன்று இருந்திருந்தால் அசிங்கமாக இருந்திருக்கும்…’ என்று நினைத்துக்கொண்டான். கேட்டைத் திறந்து உள் நுழைந்து மாடிப்படிகளுக்கு கீழாக இருந்த வெளிக்கழிவறையில், கால் கைகளைக் கழுவிக்கொண்டான். அவனது அரவத்தை உணர்ந்த அவனது அக்கா, வெளியில் வந்து நின்றாள். அவளது முகம் வாடிப்போய் இருந்தது. அவன் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்கு உள்ளே நுழைந்தான். அவளது அக்கவைப் பார்த்து பொய்யாகப் புன்னகைத்தான்.

அவள் கோபத்தில், ‘சிரிக்காத கிருபா… பத்திக்கினு வருது…’ என்றாள். அவன் மௌனமாகி ஷோபாவில் சாய்ந்தான். அவள் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு ஒரு தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து தரையில் வைத்தாள். சாப்பாடு, அவனுக்காகவென்று அப்போதுதான் வடித்திருக்க வேண்டும். சாப்பாட்டிலிருந்து ஆவி பறந்துக்கொண்டிருந்தது. அவன் கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான். ஒரு சொம்பில் நீரையும் ஒரு சிறு தட்டில், அவனுக்கு மிகவும் பிடித்த ஆம்லேட்டையும் கொண்டு வந்து வைத்தாள். ஒரு கிண்ணத்தில் குழம்பைக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டாள். அவனுக்குக் குழம்பை ஊற்றினாள்.

“மாமா ஊருக்குப் போயிருக்காரா?” சூடான சாப்பாட்டைப் பிசைந்தபடியே அவன் அவளிடம் கேட்டான்.

“நேற்றுதான் போனார்… நாளைக்கு வந்துடுவார்…” என்றாள் அவள்.

அவன் தலைத்தாழ்ந்தபடியே சாப்பிட ஆரம்பித்தான். திடீரென அவனது அக்கா, விசும்பியபடியே “உனெக்கெதுக்குடா இந்தப் பொழப்பு?” என்று கண்ணீருடன் அவனைப் பார்த்து கேட்டாள்.

“இப்போ எதுக்கு நீ அழற?”

“பின்ன… இந்நேரத்துல நாய் மாதிரி நடந்தே ஓடியாறயேடா… எப்படி இருக்கும்? வயிறெல்லாம் எரியுது…”

அவன் பதிலேதும் சொல்லாமல் மௌனமானான்.

சாப்பிட்டு முடித்ததும் படுக்கையறையில், அக்கா மகள்களுக்கு அருகாகப் போய் படுத்துக்கொண்டான். அவனது அக்காவும் உடன் வந்து படுத்துக்கொண்டாள். இருவருக்குமே தூக்கம் பிடிக்கவில்லை. அவன் நிறைய யோசனைகளில் உழன்றுக்கொண்டிருந்தான்.

‘அப்பா ஏன் இன்று கதவைத் திறக்கவில்லை? நான் கூப்பிட்டது உண்மையில் அப்பாவுக்குக் கேட்கவில்லையா? இல்லை… அம்மா அன்று சொன்னது போல அவர் கேட்டும் கேட்காத மாதிரி இருந்துவிட்டாரா? அப்படி நடந்துக்கொள்ள கூடியவரா அப்பா? நிச்சயம் அப்பா, தன்னை மறந்து ஆழ்ந்து தூங்கியிருக்கவே வேண்டும். இல்லையென்றால், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்திருக்க மாட்டாரா?’

யோசனைகளுக்கு மத்தியில், திடீரென்று அவனது அலைப்பேசி ஒலித்ததைக் கவனித்தான். அவன் எதிர்ப்பார்த்த மாதிரியே அவனது அப்பாதான் அழைத்தார். அவனது அக்கா எழுந்து பார்த்தாள்.

“ஹலோ…” என்றான் அவன். எதிர்முனையிலிருந்து அவனது அப்பா, “எங்கடா இருக்க? மணி என்ன ஆகுது? ஏன் இன்னும் வரல?” என்று கேட்டார். அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. யோசித்தான். இவையெல்லாம் நிச்சயம் அப்பாவுக்குத் தெரிய வேண்டாமென்றே நினைத்தான். “இல்லைப்பா… நான் எப்பவோ அக்கா வீட்டுக்கு வந்துட்டேன்… நாந்தான் உங்களுக்குப் போன் பண்ணி சொல்ல மறந்துட்டேன்…” என்றான். அவனது அப்பா, “சரி…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அக்காவிடம் சொன்னான், “அப்பாக்கிட்ட நீ எதுவும் சொல்லிடாதே…”. அவனது அக்கா மௌனமாக இருந்தாள். இருவரும் தூங்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.

காலையில் அவன் தூங்கி எழுவதற்கு ரொம்பவே தாமதமாகிவிட்டது. அக்கா மகள்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டிருந்தனர். அவன் பல் துலக்கி குளித்து முடித்து சாப்பிட உட்கார்ந்தான். அவனது அக்கா அவனுக்குத் தோசையைக் கொண்டு வந்து வைத்தாள். தொட்டுக்கொள்ள சாம்பாரும் சட்னியும்.

அவனுக்குப் பரிமாறியபடியே அவள் அவனிடம் கேட்டாள்.

“நேத்து நீ வீட்டுக்குப் போனப்ப பக்கத்து வீட்டு அண்ணன்ட்ட என்னடா சொல்லிட்டு வந்த?”

அப்போதுதான் அவனுக்கு அந்த விஷயமே நினைவுக்கு வந்தது. அவன் மௌனமாக இருந்தான்.

“அவரு அம்மாப்பாக்கிட்ட சொல்லியிருக்கார்… நீ நைட்டு வந்துட்டு போனன்னு… அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணாரு… நேத்து அவரு வேலை அசதியில கொஞ்சம் குடிச்சிருந்தாராம்… அதான் நல்லா தூங்கிட்டாராம்… நீ கொரல் கொடுத்தது அவருக்குக் கேட்கலையாம்… நான் என்ன வேணும்னேவாம்மா கதவத் திறக்காம இருப்பேன்னு அப்பா எங்கிட்ட கேட்டாரு… அந்த அண்ணன் சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கும் மனசே சரியில்லையாம்… அழுதுட்டாங்களாம்… வேணும்னேவாடா அவங்க அப்படி பண்ணுவாங்க?” அவனது அக்கா அவனிடம் கேட்டாள்.

அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் பேசினாள்.

“அப்பா இனி உனக்குன்னு ஒரு சாவி தந்துடுவாராம்… வீடு பூட்டிருந்தா இனி நீயேதான் தெறந்து வந்துக்கனுமாம்… இனி அவரு உன்னை எதுவும்கூட கேட்டுக்க மாட்டாராம்…” அவள் சொல்லி முடித்தாள்.

அவளுக்குப் பதில் சொல்லும் விதமாக அவன் எதுவும் சொல்லவில்லை. அவனுக்குச் சாப்பிடவும் பிடிக்கவில்லை. ஏனோ மனசு முழுக்க தாங்க முடியாத ஒரு பாரம் ஏறியிருந்தது அவனுக்குள்.

*****

Comments are closed.