பின்தங்கிய படையணியிலிருந்து ஒரு அபயக்குரல்..! / நிஷாமன்சூர்

[ A+ ] /[ A- ]

நிஷாமன்சூர்

1.

பேருண்மையை நேருக்குநேர் கண்டபிறகே
குதிரைகளிலிருந்து கீழறங்கும்
வைராக்கியப் போர்வீரர்கள் கொண்ட
தார்மீகப் படையணி ஒருபுறம்

ஒருபோதும் தீராத விரகதாப திரவம்
கொதிநிலையில் பொங்கிவழிந்து
இச்சைகளின் துளைவழிக் கரைந்துருகும்
போகமா மனுக்கூட்டம் மறுபுறம்

வந்த வழியிலேயே வழிந்து வெளியேறுவது
அல்லது
வழிகளைக் கடந்து பிரபஞ்ச ஐக்கியம் கொள்வது

சபலங்களை தற்காலிகமாக வெல்ல
இனியும் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ள இயலாதெனக் கைவிரித்து விட்டது
மனசாட்சியின் கடுங்குரல்

இச்சைகளுக்கெதிரான போரில் முழுமையாக ஈடுபட்டு வெற்றிகொள்ள இன்னுமேன் தயக்கமென முடுக்குகிறது ஆன்மாவின் தாகித்த நாவு

விரைந்து முன்னேறும் சூஃபியின்
கடைக்கண் பார்வையை யாசித்தபடி
பீற்றற் துருத்திதனை தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறேன்

*நற்தவமும் முத்தியும் சித்தம்வைத் தருள்செய்ய
நாற்செல்லுமோ அறிகிலேன்
நற்குணங்குடிகொண்ட பாதுஷாவான குரு நாதன் முஹையத்தீனே.

2.

காதலின் உன்னதம் என்பது
தம் சுயத்தை மரணிக்கச் செய்வதுதான்.
தன் விருப்பங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு
காதலியின் விருப்பத்தோடு
முற்றிலுமாக இணங்கி விடுவதுதான் என்றார் சூஃபி

மாபெரும் கப்பல் வணிகம் செய்துகொண்டும்
உயர்தர ஆடைகள் உடுத்திக் கொண்டும்
எப்படி பற்றற்ற நிலைகுறித்து பேசமுடிகிறது என்ற ஃபகீரிடம்
அகல்விளக்கு அணையாமல் நகரைச் சுற்றிவரப் பணித்து
தன்னிலை உணர்த்தினார் சூஃபி

எல்லா சுகபோகங்களையும் விட்டுவிட்டு
எப்படி மரணிப்பீர்கள் என்று வினவிய ஃபகீரிடம்
“இப்படித்தான்” என்று
துண்டை உதறித் தரையிலிட்டுப் படுத்து
அக்கணமே மரணித்தார் சூஃபி

*ஏங்காம லங்குமிங்கும் மேகாந்த மாகவுனைக்
காண்கவந்து பாங்கருள் செய் கண்ணே ரகுமானே.

3.

முறிந்து வீழும் இதயத்துள் பொதிந்திருக்கும்
நம்பிக்கைகளைப் பார்

அறிவு எச்சரிக்கிறது
“கவனம், உன்னைப் பாதுகாத்துக் கொள்”
இதயம் ஆணையிடுகிறது
“முன்னேறிச் செல்,பின்தங்கி விடாதே”

நீ செய்யவேண்டியதெல்லாம்
இதயத்தைப் பாதுகாக்க வேண்டியதையே

அறிவின் அனுமானங்கள் வெறும் பொருட்களைச் சார்ந்தவை
இதயமோ நூறாண்டுகளுக்கும் நிலைத்துநிற்கும்
அதிர்வுகளைப் பரிந்துரைக்கிறது

இருபுறமும் கூர்மையான அறிவின் வாளல்ல,
இதயத்தின் பொக்கிஷங்களிலிருந்து ஒளிரும்
சூரியனே என் இலக்கு.

*மற்றவர்கள் எத்தகையினராகினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலையிலக்கென நம்பினேன் நம்பினேன் நம்பினேன்

•••

*குணங்குடி மஸ்தான் அப்பா பாடல் வரிகள்.

Comments are closed.