புத்தகப் பண்பாட்டில்  தலித்துகள்: அயோத்திதாசர்  நூல் தொகுதிகள்  / ஸ்டாலின் ராஜாங்கம்

[ A+ ] /[ A- ]

 download (7)

தமிழில் புத்தக பண்பாடு என்கிற தலைப்பு அறிவு பரவலாக்கத்தில் அச்சு ஊடகம் வழியே உருவான பிரதி சார்ந்த மாற்றங்களை அறுதியிடுகிறது. பிரதி ஒன்றை வெளியிடுதல் – வாசித்தல் – அதனூடாக விவாதங்களை உருவாக்குதல் – கருத்துகளை நிலைபெற வைத்தல் என்று சமூக ரீதியான நடவடிக்கைகள் நவீன காலத்திற்கு பின் அச்சுப் பண்பாடு சார்ந்ததாக மாறிவிட்டது. இம்மாற்றங்கள் தமிழில் அறிமுகமான காலக்கட்டத்தில் தலித்துகளின் நிலையும், தலையீடும் எவையாக இருந்தன என்றறிவது முக்கியம். கல்வியற்ற சமூகமாக கருதப்படும் இவர்களின் பிரதிசார்ந்த தலையீடு தொடக்கத்திலேயே உருவாகிவிட்டது என்று சொன்னால் இங்கு பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

தமிழில் இதழ்கள் வெளிவரத் துவங்கிய காலத்திலேயே தலித்துகளும் இதழ்கள் நடத்த முன்வந்ததாக செய்திகள் அடிபடுகின்றன. இதன்படி 1869ஆம் ஆண்டு வெளியான சூர்யோதயம் என்ற இதழ் பற்றிய முதல் தகவல் கிடைக்கிறது. தொடர்ந்து சுகிர்தவசனி, பஞ்சமன், திராவிட பாண்டியன், மகாவிகட தூதன், பூலோகவியாசன் போன்ற இதழ்கள் வெளிவந்தன. 1893இல் இரட்டை மலை சீனிவாசன் பறையன் என்ற ஏட்டை தொடங்கி 1900 வரை தொடர்ந்து நடத்தினார். பிரீட்டீஷ் அரசு ஐ.சி.எஸ். தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென்று முடிவு செய்த போது இந்தியர்களை தேர்வில் பங்கு கொள்வதிலிருந்து அது தடுத்துவிடும் என்று கூறி காங்கிரஸ் எதிர்த்தது. அப்போது இந்தியர்கள் என்று காங்கிரஸ் கூறுவது உயர்சாதி பிராமணர்களைத்தான் என்று கூறி அவர்கள் பங்குபெற இயலாதவாறு தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டுமென்று சென்னை பறையர் மகா சபை சார்பாக இரட்டைமலை சீனிவாசன் 3412 பேர் கையொப்பம் பெற்று நீண்ட விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். இதுவொரு எழுத்தாவண இடையீடு என்றே பார்க்க முடியும். இவ்விதழ்களில் தலித்துகள் மரபுரீதியாக பெற்றிருந்த புலமை வெளிப்பட்டதோடு நவீன அரசமைப்பின்கீழ் பல்வேறு உரிமைகளை கோரும் செய்திகளும் வெளியாயின. அதற்கேற்ப இவ்விதழ்களில் பல்வேறு அறிவாளிகளும் பங்கேற்றனர். மாறி வந்த புதிய சமூக அமைப்பின் தேவைக்கேற்ப புதிய கோரிக்கைகளையும் கருத்துகளையும் கட்டமைக்க வேண்டிய தேவை இக்கால முன்னோடிகளுக்கு இருந்தன. அந்நோக்கிலான பதிவுகளும் விவாதங்களும் இவ்விதழ்களில் நடந்தன. இவ்வாறுதான் ஐரோப்பிய கண்ணோட்டத்தின் பிரதியிய பண்பாட்டுக்கு ஒப்ப செயல்பாடுகளை கைக்கொள்ளும் ஓர்மையை தலித் சமூகம் பெற்றிருந்தது. ஒரு சமூகம் அச்சு வழியான புத்தக பண்பாட்டை எதிர்கொண்ட செயல்முறைகளாகவே இவற்றை பார்க்க வேண்டும்.

*

பறையன் இதழுக்குப் பின் அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழையும் (1907 – 1914) பிரதியிய பண்பாடு என்ற பொருண்மையின்கீழ் வைத்து பேச முடியும். அரசியல் விவாதங்களைமேற்கொண்டிருந்த அயோத்திதாசர்  பண்பாட்டுத் தளத்திலும் அழுத்தமான பதிவுகளை செய்து வந்தார். பெயர், மதம், வாழ்முறை போன்ற பண்பாட்டு அடையாளங்களை வலிமையாக மேலெடுத்தார். தான் தொடங்கிய பௌத்த சங்கக் கிளைகளை தமிழன் இதழ் என்கிற பிரதிவழியே தான் அவர் ஒருங்கிணைத்தார். சங்கங்களில் பின்பற்ற வேண்டிய சமய நடைமுறைகள் இதழ் மூலமாகவே தெரிவிக்கப்பட்டன. அயோத்திதாசர் மட்டுமல்லாது அய்யாக்கண்ணு புலவர், ராமச்சந்திர புலவர், எம்.ஒய்.முருகேசர், பெரியசாமிப் புலவர், ஜி.அப்பாதுரை போன்ற புலமை சான்ற குழுவினர் தமிழன் இதழ்வழியாகவே வெளிப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் பழம் தமிழ் ஏடுகளை படியெடுத்தும் புராணப் பிரதிகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியும் பிரதிவழியாகவே விவாதித்து வந்தனர்.

அயோத்திதாசர் காலத்திலேயே தமிழன் இதழ் சார்பாக சிறிதும் பெரிதுமான நூல்கள் வெளியிடப்பட்டன. தங்கள் விளக்கங்களை தொடர்ந்து நூல்களாக வெளியிடுவது அவர்களின் பௌத்த சங்கப் பணியின் பிரதான அங்கமாக இருந்தது. நூல்கள் தவிர பிரசுரங்கள், அறிவிப்பு நோட்டீஸ்கள் போன்றவற்றையும் பரவலாக வெளியிட்டு வந்தனர். உதாரணமாக சென்னை புதுப்பேட்டை பௌத்தரான ஆதிகேசவன் என்பவர் 25.09.1912இல் தமிழன் இதழிலும் தனியாகவும் ஒரு பிரசுரம் வெளியிட்டார். பஞ்சமர்கள் இந்துக்கள் அல்ல என்பது பிரசுரத்தின் வாதம். இதை ‘புராதன சாஸ்திரத்தைக் கொண்டும், நீதிநூல் அனுபவங் கொண்டும் தக்க ஆதாரத்துடன் எயமதபிப்ராயத்தைத் தாக்கி நிருப வாயிலாக பத்திரிகைகளில் வெளியாக்கி வெற்றி பெறுவார்களாயின் அவர்களுக்கு யெம்மாலியன்ற ரூபாய் பதினைந்து (15) இனாமளித்து பஞ்சமரின் படாடம்பக்கருத்தை மேற்கொள்ள பாத்திரனாவேன்” என்று அப்பிரசுரத்தில் அறிவித்தார். 1500 பிரதிகள் அச்சிடப்பட்டதென்று பிரசுரத்திலேயே குறிப்பிட்டிருப்பதன் மூலம் இப்பிரசுரத்தின் பரவலாக்கத்தை அறியலாம். இதே அறிவிப்பு தமிழன் இதழிலும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து 1912 அக்டோபர் தொடங்கி 1913 மே மாதம் வரை தலைப்பை வெட்டியும் ஒட்டியும் எழுதப்பட்ட விவாதக் கருத்துகள் வெளியாயின. இதே போன்று பல்வேறு அழைப்பிதழ்களும் பிரசுரங்களும் இவர்களால் வெவ்வேறு சூழல்களை ஒட்டி வெளியிடப்பட்டன.

அயோத்திதாசர் மரணத்திற்குப் பிறகு ஸ்ரீசித்தார்த்தா புத்தக சாலை (சி.பு.சா) என்ற வெளியீட்டகத்தை தொடங்கிய அவர்தம் அறிவு குழுவினர் அயோத்திதாசர் இதழில் எழுதி விட்டுச் சென்ற எழுத்துகளையும் பிற பௌத்த கருத்தாளர்களின் எழுத்துகளையும் நூல்களாக வெளியிட்டனர். 1950 வரையிலும் இயங்கிய சிபுசா சார்பில் 50 நூல்கள் வரை வெளியாகியிருக்கக் கூடும் என்று யூகிக்க முடிகிறது. தலித் மேம்பாட்டில் ஈடுபட்ட பிற்காலத்தவர்களும் அச்சுப் பிரதிகளை கையாள்வதில் கவனம் கொண்டிருந்தனர். இதுகாறும் விவரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் தமிழில் புத்தக பண்பாடு என்ற தலைப்பில் பேசும் போது தலித் வகுப்பினரிடையே அச்சு பண்பாட்டின் தாக்கமும் புத்தக பண்பாட்டில் தலித் வகுப்பினரின் இடையீடும் கவனத்தில் கொணர்ந்து பொருத்த வேண்டும். இந்நிலையில் 19ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் தமிழ் அச்சு பண்பாட்டில் இடையீடு நடத்திய ஆளுமையான அயோத்திதாசரின் எழுத்துகள் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டதை ஒட்டி நடந்த தாக்கங்களை மதிப்பிடலாம்.

ஞான. அலாய்சியஸ் தொகுத்த பிரதி:-

ஞான. அலாய்சியஸ் என்பாரின் அரிய முயற்சியால் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிநாட்டார் வழக்காற்றியல் மையம் சார்பாக 1999 செப்டம்பரில் அயோத்திதாசர் எழுத்துகள் இரண்டு தொகுதிகளாக வெளியாயின. புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் சிறுபகுதி தவிர மற்ற எழுத்துகள் யாவும் தமிழன் இதழிலிருந்தே இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அதுவும் அயோத்திதாசர் எழுத்துகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டுத் தொகுதிகளில் அடங்காத உதிரி எழுத்துகள் மூன்றாம் தொகுதியாக 2003ஆம் ஆண்டு வெளியாயின. (இதையும் தாண்டி சில உதிரியான எழுத்துகளும் மிச்சமுள்ளன என்பது வேறு விசயம்) இதே வேளையில் ஞான. அலாய்சியஸின் முதலிரண்டு தொகுப்புகள் வெளியான சமகாலத்திலேயே தலித் சாகித்ய அகாடமி சார்பாக அடுத்தடுத்து அயோத்திதாசரின் 5 தொகுப்புகள் வெளியாயின. இதில் புத்தரது ஆதிவேதம் என்ற நூல் தவிர மற்றவை அயோத்திதாசர் மரணத்திற்குப்பிறகு அவரது வழித்தோன்றல்களால் அக்கால உரைநடை மாற்றத்திற்கு ஏற்ப பதம்பிரித்து தனித்தனி தலைப்புகளில் வெளியிடப்பட்ட பிரசுரங்களின் தொகுப்புகளே இந்நூல்களாகும். இதன் காரணமாகவே ஆய்வாளர்களால் அயோத்திதாசர் எழுத்தின் மூல ஆதாரமாக ஞான. அலாய்சியஸின் தொகுப்புகளே கொள்ளப்படுகின்றன.

அதுவரை சொல்லப்பட்டிராத ஒரு பெயர், அறியப்பட்டிராத எழுத்துகள் தமிழுலகில் நுழைந்த போது பலரும் அயோத்திதாசர் பெயரையும் எழுத்துகளையும் வியப்பாகவே நோக்கினர். அதுவரை அறியப்படாதிருந்த ஒருவர் பெயரில் 1510 பக்கங்களைத் தாண்டிய எழுத்துகள் (அதுவும் நெருக்கமான வரிகளில்) இருந்தன என்பது வியப்பு தானே? எந்த அளவிற்கு தெரியாமலிருந்ததோ அந்த அளவிற்கு கவனிக்கப்பட்டதாகவும் அவர் பெயர் மாறியது.

download (10)

அம்பேத்கரிய பழைய இதழ்களிலும் அன்பு பொன்னோவியம், தி.பெ.கமலநாதன் போன்றோரின் எழுத்துகளிலும் ஆங்காங்கு தென்பட்டு வந்த அயோத்திதாசர் பெயரும் சிந்தனைகளும் 1990களில் தான் பிறரால் எடுத்தாளப்பட்டன எனலாம். 1987ஆம் ஆண்டு தினமணிச்சுடரில் பெ.சு. மணி அயோத்திதாசர் பற்றி நல்லதொரு அறிமுகக் கட்டுரை எழுதினார். பிறகு 1993இல் ஆங்கிலத்தில் அயோத்திதாசரின் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய கட்டுரையை எஸ்.வி. ராஜதுரையும் வ.கீதாவும் எழுதினர். இக்கட்டுரை வெளியான பின்னணியே ஞான. அலாய்சியஸ் அயோத்திதாசரை தேடி அடைய காரணமானது. அன்பு பொன்னோலியம் குடும்ப பராமரிப்பில் காத்துவந்த தமிழன் இதழ்களே ஞான.அலாய்சியலின் தொகுப்பிற்கு பெரும்பான்மையும் உதவின. அவரிடம் கிடைக்காத பிரதிகளை நிறைவு செய்து தந்தவர்களில் எஸ்.வி. ராஜதுரை தவிர மற்றவர்கள் டி.பி. கமலநாதன், ஐ. லோகநாதன், டி. குப்புசாமி, எஸ். பெருமாள் ஆகிய அனைவரும் பௌத்த தலித்துகளாவர். இவ்வாறு பௌத்த தலித்துகளிடையே மெல்லிய இழையாக பாதுகாக்கப்பட்ட அயோத்திதாசர் என்ற சிந்தனையாளரை ஞான அலாய்சியஸ் தமிழ் உலகம் அறிய முன் வைத்தார்.

ஆய்வின் பொருட்டு அன்பு பொன்னோவியத்தை சந்தித்து நம்பிக்கை பெற்றதன் மூலம் ஞான. அலாய்சியஸிற்க்கு தமிழன் இதழ்கள் கைமாற்றப்பட்டிருந்தாலும் அயோத்திதாசர் எழுத்துகள் தொகுக்கப்படவும் கவனிக்கப்படவும் அரசியல் ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் புதிய தலைமுறை தலித் எழுச்சி, திராவிட இயக்கங்களின் முப்பதாண்டு கால அதிகார அரசியல் அனுபவம், பல்வேறு அரசியல் அடையாளங்களின்கீழ் பெற்ற புரிதல்கள் தந்த ஏமாற்றம் போன்றவற்றின் பின்னணியில் தமிழ் திராவிட சாதிகளுக்கு எதிராக கள எதார்த்ததிலிருந்து உருவான தலித் எழுச்சிக்கு பிரதி சார்ந்த அடையாளம் (tமீஜ்tuணீறீ வீபீமீஸீtவீtஹ்) போன்று இத்தொகுப்புகள் அமைந்தன. புனைவில் அமைந்த தலித் இலக்கிய பிரதிகளைவிட புனைவல்லாத இந்த எழுத்துகளுக்கு அத்தகைய சாத்தியங்கள் அதிகமாகவே இருந்தன. தலித்துகள்பற்றி இலக்கிய பிரதிகள் மறு உற்பத்தி செய்த இழிவைவிட அயோத்திதாசர் பிரதி தந்த பெருமிதம் முக்கியமானது.

அடுத்ததாக வரலாற்றியலிலும் சமூக அறிவியலிலும் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். சாதியத்தை முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளவில்லையெனினும் அடித்தள மக்கள் நோக்கிலிருந்து வரலாற்றை எழுத முனைந்த சபால்டர்ன் ஆய்வுகள் ஒருபுறம். நவீன இந்தியாவில் தேசிய எழுச்சி அல்லாத போராட்டங்கள் கருத்தியல்கள் உருவாக்கிய சீர்திருத்த விளைவுகள் பற்றிய தேடல்கள் மறுபுறமாகவும் வெளிப்படத் தொடங்கின. இதன்படி தென்னிந்திய சமூகக் குழுக்கள் மீதான ஆய்வுலக கவனமும் கூடின. அரசியல் தளத்தில் மண்டல் பரிந்துரை உருவாக்கிய சாதி பற்றிய பேச்சுகள், பாபர் மசூதி இடிப்பை ஒட்டி வலதுசாரி வாதத்திற்கு எதிராக சமூகவியலாளர்களிடையே கவனம் பெற்ற புதிய போக்குகள், புதிய பொருளாதாரக் கொள்கையினூடான மாற்றங்கள், ஒரியண்டலிசம் பின் நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளின் தாக்கங்கள் போன்றவை இதுபோன்ற தேடல்களில் பங்கு வகித்தன. இந்த நிலையில்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பதாண்டுகள் வரை செழித்த தலித் எழுச்சியின் பிரதான அங்கமான தமிழன் என்னும் அச்சுப் பிரதியில் வெளிப்பட்ட அயோத்திதாசரின் எழுத்துகள் 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் கால் கொண்ட தலித் எழுச்சிக்கு பிரதிவழிப்பட்ட தரவாக மறு உயிர்ப்பு பெற்றது எனலாம்.

அயோத்திதாசர் தொகுப்புகள் வெளியானதும் அவை பரவலாக அறியப்பட்டன. குறிப்பாக அப்போது வந்த குமுதம் இதழின் இலக்கிய இணைப்பொன்றில் ‘தமிழிலக்கிய உலகில் இப்போதைய ட்ரண்டாக இருப்பது அயோத்திதாசரை படித்தாயிற்றா? என்று கேட்பதுதான்” என்று எழுதப்பட்டது. ‘மறைக்கப்பட்டிருந்தவர்’, ‘கண்டுபிடிக்கப்பட்டார்’ என்று சொல்லியதும் அப்படிப்பட்டவர் தலித் என்று சொல்லப்பட்டதும் ஆய்வுலக சாகசம்போன்று அமைந்தது. அப்போதைய உடனடி கவன ஈர்ப்பிற்கு இப்போக்கு உதவியது. அவரை வைத்து உடனடியாக இரு அடையாளங்கள் பற்றிய பேச்சு கட்டமைக்கப்பட்டது. பிராமண அரசியலையும், பண்பாட்டையும் எதிர்த்த ஒருவர் என்ற அடையாளம் முதலாவதாகும். இதுதான் பெரியாரின் பிராமண எதிர்ப்பு கருத்துகளைப் பேசிய முன்னோடியான பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற இடத்தை அயோத்திதாசருக்கு வழங்குவதற்கு காரணமானது. மற்றொன்று பக்தி இலக்கிய புனைவுத் தொடங்கி சைவ அடையாளத்தால் உட்செரிக்கப்பட்ட தமிழுக்கு ‘புறச்சமயமாக்கப்பட்டிருந்த’ பௌத்த உள்ளீட்டை கண்டுபிடித்து தந்தவர். ஈழ அரசியல் சைவ வெள்ளாரியமயமானது என்ற கருத்து கொண்டவர்களுக்கு இந்த வகை அடையாளப்படுத்தல் உதவியது. ஆனால் இந்நிலைபாடு வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்த வகையில் 23.12.2000ஆம் நாளில், மதுரை தலித் ஆதார மையம் நடத்திய அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கு ஒன்று குறிப்பிடத்தக்கது. இக்கருத்தரங்கில் மோகன் லார்பீர், ந. முத்துமோகன், தொ.பரமசிவன், அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி, ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மேற்கூறப்பட்ட கலவையான கருத்துகள் வெளிப்பட்டன. அதாவது அயோத்திதாசர் சிந்தனைகள் வரவேற்கப்பட்டன வியப்போடு நோக்கப்பட்டன. ஆனால் அவரை முழுமையாக புரிந்து கொள்ளும் பார்வைகள் ஏதும் விரிவாக எடுத்து வைக்கப்படவில்லை. இந்த திசையில் நல்லதொரு அடியை எடுத்து வைத்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர் டி. தருமராஜன். இதன்படியே இவர் நான் பூர்வ பௌத்தன் என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். குறைவான பக்கங்களில் அமைந்த அந்நூலே அதற்குபின்பு நூல்கள் பல வந்த பின்பும் அயோத்திதாசரைப் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருக்கிறது என்பதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கல்விப்புலம் சார்ந்த அவர் அயோத்திதாசரை புரிந்து கொள்வதற்குரிய கல்விப்புல ஆய்வு பார்வையோடு எழுதினார்;. அரசியல் தேவைக்கேற்ப சுருக்குதல் விரித்தல் என்றில்லாமல் கோட்பாட்டு தளத்தில் பொருத்தி அவர் மூலம் வெளிப்படும் புதிய சிந்தனைகளை டி. தருமராஜன் புலப்படுத்தியிருக்கிறார். அயோத்திதாசரின் பௌத்தம் தமிழ் என்னும் வட்டாரம் சார்ந்தது என்ற பொருளில் தமிழ்ப்பௌத்தம் என்ற அணுகுமுறையை கண்டறிந்து முன்வைத்தது இந்நூல்தான். இந்நூலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரையில் தமிழ் அறிவுலகம் அயோத்திதாசர் சிந்தனைகளை எதிர்கொண்ட விதங்களை விவரித்திருக்கிறார்.

எதுவொன்றும் புதிதாக அறிமுகமானதும் உருவாகும் ஆர்வமும் பரபரப்பும் இயல்பாகவே அயோத்திதாசர் தொகுப்புகள் மீதும் உருவாயின என்பதைத் தாண்டி நாளடைவில் அயோத்திதாசர் எழுத்துகள் மீது குறிப்பிடும்படியான ஆய்வுகள் வெளியாகவில்லை. உருவான தொடக்கநிலை பேச்சுகள்கூட அரசியல்ரீதியாக நம்பிக் கொண்டிருந்த கருத்துகளுக்கு அனுசரணையாக அவரை ஆக்கிக் கொள்ள விரும்பியவர்களின் முனைப்பினால் விளைந்தவை மட்டுமே. இதில் இரண்டு நடைமுறை காரணங்கள் தடைகளாக இருந்தன. ஒன்று அயோத்திதாசரின் மொழிநடை. தற்கால நடைக்கு பழகியவர்கள் 1000 பக்கங்களுக்கு அதிகமான அயோத்திதாசரின் எழுத்துகளுக்குள் தொடர்ந்து பிரவேசிக்க இயலாதவர் ஆனார்கள். இரண்டாவதாக அயோத்திதாசர் ஒன்றை புரிந்து கொண்டவிதமும் விளக்கிய விதமும் நவீன கல்விப்புல ஆய்வுச் சட்டகத்தினாலும், நவீன அரசியல் புரிதல்களாலும் வழிநடத்தப்பட்ட நம் காலத்தவர்களுக்கு புதிதாக இருந்தன. நவீன சிந்தனை போக்குடையோருக்கு சில இடங்களில் புரிந்து கொள்ள முடியாதவராகவும் சில இடங்களில் அதிர்ச்சி தரக்தக்கவராகவும் இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.

இக்குறைபாட்டை எதிர்கொள்ளும் சட்டகம் இல்லாதவர்கள் அவருடைய இரண்டுத் தொகுதிகளில் முதல் தொகுதியில் அரசியல் என்ற தலைப்பில் இடம் பெற்ற கட்டுரைகளை பெரும்பான்மையாகவும் மற்ற தலைப்புகளில் ஆங்காங்கு சில கட்டுரைகளை சிறுபான்மையாகவும் எடுத்துக் கொண்டனர். பெரியாரோடு ஒப்ப வைத்து பிராமணர் எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என்று அவர் விளக்கப்பட்டாலும் பெரியாரோடு இணைத்து அடையாளம் பெறும் நாத்திகம், மரபை முற்றிலும் எதிர்நிலையில் பார்த்தல் என்று பிற ‘முற்போக்கு’ பார்வைகளுக்கு பழக்கப்பட்டோருக்கு அவரை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில்தான் அவர் பௌத்தம் தழுவினார் என்றத் தகவலைத் தாண்டி அவரின் பௌத்தம் பற்றிய புரிதல்களும் ஆழமாக கவனிக்கப்படவில்லை. அதாவது அயோத்திதாசர் அரசியல்ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டார். அவரின் அரசியல் முகம் மட்டுமே இங்கே தேவைப்பட்டது.

அயோத்திதாசரை கையெடுத்த ரவிக்குமார்:

திராவிட இயக்கம் மற்றும் பெரியார் மீது தலித் அரசியல் நிலைபாட்டிலிருந்து ரவிக்குமார் விமர்சனங்களை முன் வைக்கத் தொடங்கியபோது தான் அயோத்திதாசர் மீதான கவனம் சூழலில் அதிலும் எதிர்மறையாக உருவானது. அதாவது ரவிக்குமார் இத்தகைய விமர்சன நிலைபாட்டின் மைய விசையாக அயோத்திதாசரை கொண்டார் என்பது தான் இந்த கவனத்திற்கு காரணமானது. 1990 தலித் எழுச்சியின் தாக்கம் பெற்றும் தமிழில் அக்காலக்கட்டத்தின்மீது தாக்கம் செலுத்தியும் எழுதிவந்த சிந்தனையாளர்களுள் ஒருவர் ரவிக்குமார். தாம் செயல்பட்டு வந்த அமார்க்ஸ் உள்ளிட்ட அறிவுநிலைக் குழுவினரோடு சுயமுரண் மற்றும் கருத்தியல் முரண் என இரண்டும் கலந்த நிலையில் விலகியிருந்த ரவிக்குமார் அப்போது உருவாகி வந்த புதிய தலைமுறை தலித் அரசியல் குழுக்களோடு தொடர்பு கொண்டிருந்தார். பிற தலைமைகளிலிருந்து விடுபட்டு தனித்து உருவாகிவந்த தலித் அரசியல் இயக்கங்களுக்கென்று தனித்துவமான கருத்தியல் மற்றும் முன்னோடி சிந்தனையாளர்களை கண்டெடுக்க வேண்டிய நிலை அப்போதிருந்தது. அதாவது தலித்துகளை திராவிட இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து தலித் அரசியல் தலைமையை நோக்கி அணி திரட்ட இந்த நோக்கு அவசியமாயிற்று. எனவே தலித்துகளை கட்டுப்படுத்தி வைக்கும் திராவிட இயக்க பிம்பங்கள் மற்றும் கருத்தியல் மீதான போதாமையை அல்லது விமர்சனத்தைக் கூறி அதற்கு மாற்றாக தலித் கருத்தியல் மற்றும் பிம்பங்களை முன்வைப்பது என்பதாக இப்போக்கு விரிந்தது. இதன்படி இத்தேவையை ரவிக்குமாரின் திராவிட இயக்கம் மற்றும் பெரியார் மீதான விமர்சனம் நிறைவு செய்ய முன்வந்தது.

பெரியாரை பேசி வந்த தன்னுடைய அறிவு ஜீவி எதிரிகளை எதிர்கொள்வதற்கு மட்டுமல்லாமல் தலித் இயக்கத்திற்கு கோட்பாட்டை கட்டமைக்கும் சிந்தனையாளராக மாறுவதற்கும் ரவிக்குமாருக்கு இப்போக்கு உதவியது. அதாவது தன் விமர்சனத்தில் பெரியார் என்ற திராவிட இயக்க பிம்பத்திற்கு மாற்றான தலித் பிம்பமாக அயோத்திதாசரை ரவிக்குமார் முன் வைத்தார். அதோடு பெரியார் பேசிய கருத்துகள் பலவும் அயோத்திதாசரால் பேசப்பட்டவையே. அவற்றை உள்வாங்கியே திராவிட இயக்கமும் பெரியாரும் செயற்பட்டனர். ஆனால் ‘தாழ்த்தப்பட்ரோன” அயோத்திதாசரை மறைத்துவிட்டனர் என்னும் பொருளில் அவரின் விமர்சனம் அமைந்தது.

திராவிட இயக்க அரசியலால் தலித் மக்கள் கைவிடப்பட்டு இப்போது தலித் தலைமையால் மீண்டெழுவதைப் போல் திராவிட இயக்க கருத்தியலால் மறைக்கப்பட்ட அயோத்திதாசர் என்ற கருத்தியல் பிம்பமும் இப்போது முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற பொருள் இங்கு உருவாகிறது. அதாவது நடைமுறை அரசியலுக்கேற்ற கருத்தியல் வாசிப்பை கட்டமைக்கும் அரசியல் நிலைபாடு இது என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அயோத்திதாசர் சிந்தனைகள் என்கிற தொகுப்பு 1990களின் நடைமுறை தலித் அரசியல் செயற்பாட்டுக்கு கருத்தியல் பிரதியாக வரித்துகொள்ளப்பட்டது. இந்த வகையில் இத்தொகுப்புகள் தலித் அரசியலை திராவிட அரசியலிருந்து வேறுபடுத்துவதற்கான எழுத்து ஆதாரமாக விளங்கியது.

அயோத்திதாசரை அரசியல் தளத்தில் ரவிக்குமார் கையெடுத்த சமகாலத்திலேயே தற்செயல் ஒற்றுமையாக டி. தருமராஜனின் நான் பூர்வ பௌத்தன்  (2003) என்கிற நூல் வெளிவந்தது. அந்நூலின் கடைசி அத்தியாயம் பெரியார் அயோத்திதாசரை மறைத்தாரா? என்று விவாதித்தது. மொத்தத்தில் இவையெல்லாம் சேர்ந்துதான் அயோத்திதாசரை விவாத பொருளாக்கின.

இவ்வாறு அயோத்திதாசரை முன் வைத்து பெரியார் மீது எதிர்நிலை விமர்சனங்கள் வைக்கப்பட்டதால் அதுவரை பெரியாரின் முன்னோடியாகவும், பிராமணரல்லாத அரசியலின் குரலாகவும் கணித்து வந்த கணிப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டன. இக்கணிப்புகளை கொண்டிருந்த அறிவு ஜீவிகளுக்கு இச்சூழலை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் எழுந்தது. பிராமணரல்லாத அறிவு ஜீவிகளான இவர்கள் இச்சூழலை இரண்டு வழிகளில் எதிர் கொண்டனர். 1) அயோத்திதாசரின் சிந்தனைகளை (முதன்முறையாக) எதிர்மறை விமர்சனத்திற்கு உட்படுத்தினர். 2)பெரியார் தரப்பை உறுதி செய்தனர் என்பதே அவ்விரண்டுமாகும்.

அதாவது அயோத்திதாசர் பேசிய பௌத்தத்தின் பொருத்தப்பாடின்மை, அவர் இயக்கமாகாமல் அறிவாளியாக மட்டுமே இருந்துவிட்ட நிலை, இன்றைய தலித் சாதிகளில் பறையர் சாதியை மட்டுமே அவர் மையப்படுத்தியிருந்தமை போன்றவை அயோத்திதாசருக்கு எதிராக கண்டெடுக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவையாகும்.

அயோத்திதாசர் முழுக்க அரசியல் நிலைபாட்டினர் அல்ல. பண்பாட்டு நிலைபாட்டின் அழுத்தம் கொண்டவர். இந்நிலையில் பட்டியல் சாதியினர் (ஷிசி) என்கிற தொகுப்பு உருவாகாத அக்காலத்தில் தான் சார்ந்த பறையர் சாதி சார்ந்து மட்டுமே யோசித்திருப்பதும் மரபான புலமை கொண்ட அவர் அச்சாதியினருக்கான மரபார்ந்த உரிமைகள் குறித்து பேசியிருப்பதும் அக்காலக் கட்டத்தை வைத்து பார்க்கும்போது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும். ஆனால் அயோத்திதாசரிடம் விமர்சன பூர்வமாக நிராகரிக்க வேண்டிய பிற கீழ்நிலை சாதிகளை வெறுக்கும் அல்லது பொருட்படுத்தாத அம்சங்கள் முதன்முறையாக பெரியார் விமர்சனத்திற்கு பிறகே கண்டெடுத்துவந்து முன்வைக்கப்பட்டது. அதிலும் இந்த விமர்சனங்கள் இக்காலத்தில் அருந்ததியர் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு சூத்திரசாதி அறிவாளிகளால் கெட்டியாக பிடித்து கொள்ளப்பட்டது. அதாவது ரவிக்குமார் பறையர் சாதியை சேர்ந்தவராக இருப்பதால் அயோத்திதாசர் என்ற பறையர் சாதி அறிவாளியை பேசி வருகிறார். இதன்படி அயோத்திதாசரின் அருந்ததியர் வெறுப்பு பார்வைதான் ரவிக்குமாருக்கும் இருக்கிறது. பெரியார் மற்றும் திராவிடர் இயக்கம் தொடர்பான ரவிக்குமார் விமர்சனமும் அயோத்திதாசர் பற்றிய பேச்சும் பறையர் சாதி நலன் தொடர்பானதே ஒழிய ஒட்டுமொத்த தலித் சாதிகளின் பார்வையாக இருக்க முடியாது என்று இந்த விமர்சனம் விரிக்கப்பட்டது. இது ரவிக்குமார் ஆதரித்துவந்த பறையர் சாதியினரை திரட்டியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இவ்வாறு சிந்தனைதளத்தில் அறியப்பட்டு குறிப்பிட்ட கட்டத்தின் தலித் அரசியலில் தாக்கம் செலுத்தும் பிம்பமாக அயோத்திதாசர் மாறினார்.

அருந்ததியர் தரப்பில் அயோத்திதாசரை விமர்சித்து பெரியார் சார்பாக நிற்பது என்பதானது அவர்களுக்கான அரசியல் தேவையிலிருந்து எழுந்தது. இந்த இடத்தில் பெரியாரை பாதுகாக்க தலித் சாதிகளிலேயே ஒரு வகுப்பினர் முற்படுவது அயோத்திதாசரை முன் வைத்து எழுந்த தலித் கருத்தியல் உருவாக்க முயற்சிக்கு முட்டுக்கட்டையானது. அயோத்திதாசரிடம் வெகுசில வரிகளில் வெளிப்பட்டுள்ள அருந்ததியர் வெறுப்புக்காக அவர் ரவிக்குமார் உள்ளிட்டோரால் பேசப்படவில்லை. மாறாக திராவிட இயக்கத்தை எதிர்கொள்ளும் கருத்தியல் பிம்பம் என்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டார் என்பது உண்மை. ஆனால் திராவிட இயக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில் எடுக்கப்பட்ட அயோத்திதாசர் பற்றிய பேச்சு பிராமணரல்லாத அறிவாளிகளின் முனைப்பு, அதனை முன்னெடுத்தோரின் சுயமுரண், தலித் அரசியலின் சிக்கலான எதிர்காலம் என்கிற முட்டுச் சந்தில் நின்றது. இப்போக்கு அயோத்திதாசரை பரவலான வாசிப்பிற்கு இட்டுச் செல்வதற்கு மாறாக முடக்கியது. இதற்குப் பிறகு தலித் அல்லாத அறிவு ஜீவிகள் அயோத்திதாசர் குறித்து எடுத்த நிலைபாடுகள் முக்கியமானவை. பெரியாருக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுக்கப்பட்டதால் பதட்டமடைந்த பலர் அதுவரை அயோத்திதாசரை பிராமணரல்லாத அரசியலின் அங்கமாக கூறியதை நிறுத்திவிட்டு முதன்முறையாக எதிர்த்தனர். வேறுசிலர் அவரைப் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டனர். தங்களுடைய கருத்திற்கு உடன்பட்ட அல்லது கீழ்படிந்த பிம்பமாகவோ கருத்தியலாகவோ இருந்தால் ‘உங்களிடம் முரண்கள் இருந்தால் கூட சொல்லமாட்டோம். மாறாக உடன்படாவிட்டால் முரண்களை சொல்லுவோம்; மறுப்போம்; நிராகரிப்போம்” என்கிற தொனி மட்டுமே இப்போக்கின் மூலம் வெளிப்பட்டது. அயோத்திதாசரிடம் குறைபாடுகள் இருந்திருக்குமானால் பெரியாரோடு முரணாக வைத்து பேசாத வரை அவை ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை? அருந்ததியர் தரப்பிலிருந்து எதிர்மறை விமர்சனம் வந்த பின்னால் அயோத்திதாசரை பேசும் இடங்களிளெல்லாம் அம்மேற்கோள்களை மட்டும் காட்டி அவரின் பிற சாதகமான அம்சங்களையும் பேசாமல் முடக்கி விடும் போக்கு மேலோங்கி இருப்பது ஏன்?

 

அயோத்திதாசரை முன்கொண்டு திராவிட இயக்க விமர்சனத்தை கையெடுத்ததில் இத்தகைய சிக்கல்கள் எழுந்த நிலையில் இந்த விமர்சனத்தை ரவிக்குமார் மேற்கொண்டு எடுத்து செல்லவில்லை. இதற்கு மாறாக தலித் வரலாறு என்கிற செயல்பாட்டுக்கு அழுத்தம் தந்தார். இதன்மூலம் திராவிட இயக்கத்திற்கு வெளியேயும் முன்பேயும் செயல்பட்ட தலித் அமைப்புகளையும் அவர்தம் புரிதல்களையும் பேசும் செயல்பாடு உருவானது. எல்லோரும் நம்புவதுபோல தலித் மக்கள் திராவிட இயக்கத்தாலோ பிறராலோ கண்விழிக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கு தாமே நடத்தி வந்த நெடிய போராட்டங்களினாலே இன்றைய உரிமைகளை பெற்றனர் என்று கூறுவதே இதன் அடிப்படை. திராவிட இயக்கம் மீதான எதிர்மறை விமர்சனத்தை தலித் வரலாறு என்கிற நேர்மறை தேடல் மூலம் சமப்படுத்தும் முயற்சியாக இதைக் கருதலாம். மீளும் வரலாறு, வரலாற்றை நேர் செய்தல் போன்ற சொல்லாடல்கள், தலித் வரலாற்று மாதம் என்கிற விழா என்றெல்லாம் இது விரிந்தது. தான் நடத்தி வந்த தலித் இதழை தலித் வரலாற்று சிறப்பிதழாகவும், தலித் வரலாற்றுக்கென போதி என்கிற காலாண்டு இதழையும் ரவிக்குமார் வெளியிட்டார். இம்முயற்சிகள் யாவும் அயோத்திதாசரில் கால் பாவி இருந்தன என்பது முக்கியமானதாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏடான தாய்மண் இதழில் பெரியார் ஒரு மறுபரிசீலனை என்கிற தொடர் பாதியில் கைவிடப்பட்ட இடத்தில் நந்தன் வரலாறு என்கிற வரலாற்று தொடரை ரவிக்குமார் எழுத ஆரம்பித்தார். இது நந்தனை மன்னனாக காட்டி அயோத்திதாசர் எழுதிய எழுத்தை வலுப்படுத்தும்வகையில் எழுதப்பட்ட வரலாற்றுத் தொடராகும். ரவிக்குமார் தன்னை புதுமைபேசும் சிந்தனையாளராக தக்க வைத்துக் கொள்வதற்கான தரவுகளை இக்காலத்தில் அயோத்திதாசரிலிருந்து எடுத்துக் கொண்டார். அயோத்திதாசர் பறையன் என்கிற பெயரை மறுப்பதால் பறையடிக்கும் தொழிலையும் மறுப்பார். இந்த வகையில் 1990களின் தலித் பண்பாடாக பேசப்பட்ட பறையடித்தலை மறுத்து ‘பறையொலியால் பரவும் இழிவு” என்கிற கட்டுரையை எழுதினார்.

திராவிட இயக்கம் மற்றும் பெரியார் மீதான விமர்சனத்தை ரவிக்குமார் ஆதரித்த கட்சிக்கும் அவருக்கும் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி என்ற புற அழுத்தத்தால் கைவிட்டார். பின்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினராகி திமுகவின் அணுக்க விசுவாசியாக மாறி தனித்துவமான வரலாற்றை பேசுவதை அரசியல் நிர்பந்தம் என்கிற அகத்தேவையினால் கைவிட்டார். ஆனால் அயோத்திதாசர் கைவிடப்படவில்லை. அவரும் கட்சியும் அயோத்திதாசரின் பெயரையும் பிம்பத்தையும் ஓர் அடையாளமாக மாற்றி தக்க வைத்துக் கொண்டனர். ஒருவரை கருத்தியல் தளத்தில் கைக் கொள்ள முடியாத போது ஓர் குறியீடாக மாற்றி தான் அதே நிலைபாட்டில் இருக்கிறேன் என்று காட்டுவது நடைமுறை அரசியலின் விதிமுறை. அதுவே இங்கும் நடந்தது. அவர் படம் இப்போது தமிழகம் முழுவதும் கட்சி சுவரொட்டிகள் மூலம் பரவலாகி வருகிறார். உள்ளீடற்றதாயினும் இவ்வாறான பிம்பம் வெகுஜன அரசியல் இயக்கமொன்றில் இடம்பெற ஞான.அலாய்சியஸின் தொகுப்பு, தலித் சாகித்ய அகாடமி தொகுப்புகள் என்ற பிரதிகளே வழிவகுத்தன.

அடுத்ததாக பெரியார் பற்றிய விமர்சனத்திற்கு பிறகு பெரியார் இயக்கத்தின் வேலைத்திட்டமே மாறின. கொளத்தூர் மணி தலைமையிலான குழுவினர் பெரியாரின் குடியரசு இதழை முதன்முறையாக தொகுத்தமைக்கும், கி. வீரமணியின் திராவிடர் கழகம் வரிசைக்கிரமமாக பெரியார் சிந்தனைகளை வெளியிட்டமைக்கும் அயோத்திதாசரின் தொகுப்பும், அவரை வைத்து பெரியாரை பின் தள்ளிய விமர்சனமும் மறைமுக காரணமாயின எனலாம். அயோத்திதாசர் முன் வைத்த தலித்தரப்பு விமர்சனங்களை தன் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் தொடர்ந்து சாடிவந்த பேராசிரியர் வீ. அரசு தத்துவவிவேசினி என்கிற தொகுப்பை கொணர்ந்ததில் அயோத்திதாசர் மீதான எதிர்மறை நோக்கு அழுத்தமான பங்கை வகித்தது. பெரியாருக்கு முன்பு தத்துவவிவேசினி இதழ் நாத்திகம் உள்ளிட்ட கருத்துகளை பேசியது என்றுக் கூறுவது அயோத்திதாசரை முன் வைத்து தலித்துகள் உரிமை கோருதலை எதிர்கொள்ளும் செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதேபோல பல்வேறு சாதியினர் நடத்திய இதழ்களின் தொகுப்பு முயற்சிகள் பிறந்தமையும் அதற்கேற்ப புதிய பிம்பங்களை கட்டமைப்பதிலும் அயோத்திதாசர் மறைமுக அழுத்த காரணியாக மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிந்த ஆய்வுக்கான மூலங்கள் இருந்தும் அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்புகளாக வெளிவந்த பின்னால் புதியதை கண்டதால் உருவாகும் பரபரப்பு என்பதைத் தாண்டி பெரிதாக நடந்துவிடவில்லை. டி. தருமராஜன் எழுதிய நான் பூர்வ பௌத்தன் (2003) என்ற குறிப்பிடத்தக்க நூலுக்குப் பிறகு ராஜ் கௌதமன், ப. மருதநாயகம், கௌதம சன்னா ஆகியோர் முறையே க. அயோத்திதாசர் ஆய்வுகள், ஒரு பூர்வ பௌத்தரின் சாட்சியம், அயோத்திதாசர் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதினர். தொல்காப்பியம் தெ.பொ.மீ ஆய்வுகள் என்று மரபிலக்கிய தளத்தில் செயல்பட்ட ஆங்கிலத்துறை பேராசிரியரான மருதநாயகம் அயோத்திதாசர் எழுத்துகளை பெருமளவு சார்ந்து நின்று எழுதியிருப்பது முக்கியமானதாகும். அயோத்திதாசரின் தொன்ம கதையாடல், திரிக்குறள் உரை, இதழியல் பணி போன்ற தலைப்புகள் அந்நூலில் இவ்வுண்மையை காட்டுகின்றன.

உண்மையில் அயோத்திதாசரின் தாக்கம் அவர் பற்றிய நூல்களில் விடவும் பிறவழிகளிலேயே அதிகம் பிரதி பலித்திருக்கிறது. அவற்றை கீழ்வருமாறு தொகுக்க முடியும்.

1. மரபு பற்றிய புரிதல்:      மரபு என்பதே தலித்துகளுக்கு எதிரானது. ஏனெனில் மரபுரீதியாக எந்த உரிமையும் இவர்களுக்கு இல்லாதிருந்தது. நவீன அரசியல் சூழல் மட்டுமே அவர்கள் மேம்பட ஓரளவு உதவியது என்பதே அரசியல் ரீதியாக இங்கு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நம்பிக்கை. இதற்கு மாறாக இன்றைக்கு ஒடுக்கப்பட்டிருக்கும் வகுப்பினருக்கு மதிக்கதக்க கடந்த காலம் இருந்தது என்பதை பல்வேறு தரவுகள் மூலம் விரிந்த அளவில் அயோத்திதாசரின் சிந்தனைகளே முன்வைத்திருக்கின்றன.

2. சாதி பற்றிய புரிதல்:   மரபு பற்றிய புரிதலின் தொடர்ச்சியாகவே அயோத்திதாசரின் சாதியமைப்பு பற்றிய பார்வையும் அமைகிறது. தலித்துகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை தொடர்ந்து கூறி வந்த அவர் சாதியமைப்பின் காலம், இழிவின் தன்மை மற்றும் இழிவு சுமத்தப்பட்ட முறைமை பற்றி முற்றிலும் மாற்றுப் பார்வையை கொண்டிருந்தார். இது சாதியமைப்பு பற்றிய ஆய்வில் புதிய திசைகளை காட்டியுள்ளது. மேலும் சாதியமைப்பு வலுப்பெற்ற விதத்தில் பறையர் என்ற சாதிக்கும் அக்குறிப்பிட்ட பெயருக்கும் இருக்கும் தொடர்பு பற்றி வெவ்வேறு தரவுகளை முன் வைக்கும் அவர் மூலம் பறையர் சாதி பற்றிய வரலாற்றில் சில வெளிச்சங்கள் கிடைத்துள்ளன. இந்தவிதமான அணுகுமுறையை வெவ்வேறு ஒடுக்கப்பட்ட சாதிகளின் வரலாற்றிற்கும் விரித்து பார்க்க முடியும் என்பதே இந்த வித அணுகுமுறையின் முக்கியமான அம்சம்.

3. தமிழிலக்கிய மரபு மீதான உரிமை:      எல்லாவற்றிலும் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலக்கியத்தில் எந்த பங்களிப்பும் இருந்திருக்க முடியாது என்பதே பொதுவான புரிதல். இதனாலேயே திருவள்ளுவர் ஔவை அகத்தியர் பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று நம்பிக்கைகளுக்கு மாற்றான பாடங்களை அயோத்திதாசர் முன் வைக்கும்போது வியப்பும் தடுமாற்றமும் மேலிடுகிறது. வள்ளுவரையும் ஔவையையும் பூர்வ பௌத்தர்களாக அதாவது இன்றைய தலித்துகளாக அவர் விவரிக்கும் விதம் அபாரம். சாதியமைப்பு இயற்கையானதாகவும் பழமையானதாகவும் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு வரலாற்று ரீதியான திரிபுதான் அடிப்படை காரணம் என்பது அவரின் வாதம். அந்த வகையில் நந்தன் திருவள்ளுவர் போன்ற இலக்கியம் தொடர்புடைய பாத்திரங்களின் வரலாற்றில் நடந்த திரிபுகளை அவர் மாற்றி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4. பௌத்தம் பற்றிய புரிதல்:     அயோத்திதாசர் பௌத்த தழுவியதில் அம்பேத்கருக்கு முன்னோடி என்பது மட்டுமே நம்முடைய அறிதல். ஆனால் பௌத்தம் என்பது ஒன்றல்ல. அது வட்டாரத்திற்கு வட்டாரம், காலத்திற்கு காலம் வெவ்வேறாக புழங்கி வந்திருக்கிறது என்கிற புரிதலும் இன்றைக்கு பௌத்தமாக அறியப்படுவது நவீன காலத்தில் தரப்படுத்தப்பட்டவையாகும் என்ற புரிதலும் உருவாக அயோத்திதாசர் பெருமளவு உதவியிருக்கிறார். உள்ளூரில் புழங்கிவந்த பௌத்தமே அவருடையதாகும்.

5. அடையாள அரசியல்:       திராவிடன் தமிழன் போன்ற சொற்கள் புவி, இன, மொழி மற்றும் கருத்தியல் சார் அடையாளங்களாக நன்கு தீர்மானிக்கப்பட்டு அரசியல் மயப்பட்ட சொற்களாகவே இன்றைக்கு புழங்குகின்றன. இதே சொற்களை அயோத்திதாசர் கையாள்கிறார் எனினும் இன்றைய மொழிவழிப்பட்ட புரிதலில் அல்லாமல் தமிழுக்கும் பௌத்தத்திற்குமான உறவொன்றை  இவற்றின்மூலம் அவர் முன் வைக்கிறார். இச்சொற்கள் அவரிடம் கருத்தியல் நிலையிலும் பொருள்பட்டன.

6. ஆதிக்கம் என்பது எது?:        சாதி ஆதிக்கம் பரப்பட்ட, நிலைபெற்ற விதம் பற்றிய அயோத்திதாசரின் யோசனைகள் முக்கியமானதாகும். இழிவை கட்டமைப்பது, அதை திரும்ப திரும்ப சொல்லுவது, பல்வேறு வடிவங்களில் பரப்புவது போன்றவை சாதியை பழமையானதாகவும், உண்மையானதாகவும், மாற்ற முடியாததாகவும் நம்ப வைப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறைகள் என்று அவர் விளக்கினார். குறிப்பாக தமிழ் வழக்காறுகளும் ஏடுகளும் அச்சுக்கு மாறிய காலத்தை ஒட்டி நடந்த திரிபுகளை வள்ளுவர் பிறப்பு பற்றிய அச்சு வரலாற்றின் திரிபைக் கூறி அவர் விளக்குவது சுவாரஸ்யமானதாகும். சமூகவியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுகளுக்கு அவரின் இப்பார்வை முக்கியமான பங்களிப்பு எனலாம்.

அயோத்திதாசரின் பிரதிகளைக் கடந்து:

கால்டுவெல்லுக்கு முன்பே திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை மொழியியல் நிலையிலிருந்து கூறியவர் எல்லீஸ் என்பது தாமஸ்ட்ரவுட்மன் (திராவிடச் சான்று: எல்லிஸீம் திராவிட மொழிகளும், மே 2007 காலச்சுவடு பதிப்பகம்) மூலம் சொல்லப்பட்டுள்ளது. எல்லீஸ் குறள் மொழி பெயர்ப்பிலும், பதிப்பிலும் ஈடுபட்ட போது ஏடு தந்து உதவியவர் தம் பாட்டனார் கந்தப்பன் என்கிறார் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்குப் பின்னரே இத்தொடர்பு தெரிய வருகிறது. இத்தொடர்வை அந்நூலின் முன்னுரையில் ஆ.இரா. வேங்கடாசலபதியும், முகநூல் பதிவில் (றிளி. க்ஷிமீறீusணீனீஹ். 13 கிஜீக்ஷீ 2015) பொ. வேல்சாமியும் ஏற்று விவாதித்துள்ளனர்.

அதேபோல கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1857) நூலின் இரண்டாம் பதிப்பின் மூலப்பதிப்பு அண்மையில்தான் வெளிவந்துள்ளது (2008, கவிதாசரண் வெளியீடு). மூல நூலில் நீக்கப்பட்டிருந்த பகுதிகள் இந்த பதிப்பு மூலம் தான் அறியப்பட்டுள்ளன. அவ்வாறு நீக்கப்பட்டிருந்த பகுதிகளில் பறையர் சாதி பற்றிய பதிவு பிரதானமானதாகும். அப்பகுதி அயோத்திதாசர் பறையர் சாதி பற்றி கூறியிருக்கும் கருத்துகளுக்கு இணக்கமாக இருப்பதை அறிய முடிகிறது. எனவே இவ்விரண்டு பிரதிகளையும் ஒப்பவைத்து பேச வேண்டிய நிலை எழுந்துள்ளது. மேலும் இந்திய விடுதலைப் போராட்டத்தை அயோத்திதாசர் நோக்கும் விதம் பற்றியும் அவரின் தொகுப்புகள் சொல்லியுள்ளன. குறிப்பாக அவர் திருநெல்வேலி கலெக்டர் 1911 ஆஷ் கொலை பற்றி அநேக பதிவுகள் எழுதியிருக்கிறார். இத்தொடர்பில் ஆஷ் கொலையை முன்வைத்து அன்பு செல்வம் என்பார் ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை (2011 டிசம்பர்) என்கிற நூலை வெளியிட்டுள்ளார். அயோத்திதாசர் பார்வையிலிருந்து ஆஷ் கொலையை மட்டுமல்ல இந்திய தேசிய போராட்டத்தையும் அடித்தள நோக்கிலிருந்து இன்னும் நுட்பமாக பார்க்கும் சாத்தியம் மிச்சமிருக்கிறது.

மொத்தத்தில் தலித்துகளின் கடந்த காலத்தை பொதுபுத்தியிலிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பார்வையிலிருந்தும் அணுகும் விதத்தை அயோத்திதாசர் சிந்தனைகள் மாற்றுகின்றன. குறிப்பாக மரபுரீதியாக எழுத்தறிவோடும் நவீன காலத்தில் அச்சு பண்பாட்டோடும் தலித்துகள் கொண்டிருந்த உறவை அவர் பலமுறை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். குறிப்பாக அவரை அடியொற்றி தலித் இதழியல் மற்றும் பதிப்பு போக்குகள் பற்றிய தேடல் மேலோங்கியுள்ளது. ரவிக்குமார் எழுதிய எழுதா எழுத்து என்கிற கட்டுரை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தீண்டப்படாத நூல்கள்: ஒளிப்படாத உலகம் தலித் முன்னோடிகளின் பதிப்புப் பணிகள் (2007 சனவரி) என்கிற நூலும் அயோத்திதாசரின் எழுத்தால் மட்டுமே உரம் பெற்ற முயற்சிகளாகும்.

அயோத்திதாசரின் உள்ளூர் பௌத்த விளக்க முறையை அடியொற்றி அருகன்குப்பம் பிரம்மரிஷி, தியாகனூர் புத்தர் என்கிற உள்ளூர் புத்தர் வழிபாட்டை பற்றிக் கூறும் கட்டுரைகளை ரவிக்குமார் எழுதியுள்ளார். உள்ளூர் அளவிலான இம்மரபுக்கு வலுக்கூட்டும் பிற கட்டுரைகளையும் தொகுத்து எதார்த்த பௌத்தம் (டிசம்பர் 2012) என்னும் பெயரிலான நூலை ஸ்டாலின் ராஜாங்கம் வெளியிட்டுள்ளார். இத்தகைய பார்வைக்கு காரணமானவர் என்ற முறையில் அயோத்திதாசருக்கு அந்நூல் சமர்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மரபின்மீது உரிமை கொண்டாடும் முதல் சிந்தனையாளரான அயோத்திதாசரின் இந்நோக்கு இன்றைக்கு தலித் அறிவுத் துறை மீதும் செல்வாக்கு செலுத்துவதாக மாறியுள்ளது.

பௌத்தம் பற்றி மட்டுமல்லாமல் மதம் பற்றிய வரையறையும் அயோத்திதாசரிடம் வேறுபடுகிறது என்பது மேலே குறிப்பிடப்பட்டது. நவீன பொருளில் அமைந்த மதம் என்ற வரையறையிலிருந்து அவர் விலகி நின்றார். அவருக்கும் சிங்கார வேலருக்கும் பௌத்தம் மற்றும் சாதி தொடர்பாக நடந்த விவாதங்கள் இவற்றை காட்டுகின்றன. சிங்கார வேலரின் அதிகாரபூர்வ ஆய்வாளர்களாலேயே கண்டெடுக்கப்படாத அவரின் தொடக்ககால எழுத்துகள் இந்த விவாதங்கள் மூலமே அறிய வருகின்றன. (அயோத்திதாசரும் சிங்காரவேலரும், நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்: வெளிவராத விவாதங்கள் பதிப்பும் தொகுப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம், 2010 அக்டோபர்).

அயோத்திதாசரை நோக்கிய வாசிப்பில் ஜெயமோகன் ஈடுபட்டமையானது பல புதிய வாசகர்களை அயோத்திதாசர் பால் கவனம் கொள்ள வைத்தது. கடந்த நூற்றாண்டின் மூன்று மூல தமிழ் சிந்தனையாளர்களில் ஒருவராக அவர் அயோத்திதாசரை இனம் காண்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பின் பல்வேறு பகுதிகளிலும் பெற்றிருந்த கடந்த கால உரிமைகளை அவர் அயோத்திதாசர் பற்றிய மற்றுமொரு சொற்பொழிவில் விளக்குகிறார். அவரின் அண்மை புனைவான வெள்ளையானை (2013) நாவலில் அயோத்திதாசர் காத்தவராயன் என்ற சொந்த பெயரில் ஒரு பாத்திரமாகவே இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அயோத்திதாசர் ஆய்வில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கியிருக்கும் டி. தருமராஜன் எழுதிய அயோத்திதாசர் பற்றியதல்லாத பிற எழுத்துகளிலும் அயோத்திதாசர் அணுகுமுறையின் அழுத்தமான தாக்கம் வேரோடியிருப்பதை அறிய முடிகிறது. தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? என்றொரு சிறுநூல் வடிவிலான கட்டுரையை தருமராஜன் எழுதியிருக்கிறார். பள்ளர்கள் என்று தாழ்த்தப்பட்டோர் பிரிவிலிருக்கும் தென் தமிழக சாதியான தேவேந்திரர்களின் வரலாற்றை எழுதி பார்க்கும் நோக்கு கொண்ட இக்கட்டுரையில் அயோத்திதாசர் பெயர் கையாளப்படாவிடிலும் அவரின் விளக்க முறை தான் அக்கட்டுரையில் பயின்றிருக்கின்றன. அதேபோல அவர் தம் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய பண்பாட்டு விளக்க தொடருக்கு போலச் செய்தலும் திரும்ப செய்தலும் என்று பெயரிட்டிருக்கிறார். போலச் செய்தல் என்கிற இப்பார்வை அம்பேத்கரின் சொல்லாடலாலும் அயோத்திதாசரின் வரலாற்று வரைவு அணுகுமுறையாலும் ஊட்டம் பெற்றன எனலாம். இவ்வாறு தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒரு சாதி சார்ந்து அமைந்த அயோத்திதாசரின் அணுகுமுறையை பிற ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் வரலாற்று வரைவு முயற்சிக்கும் விஸ்தரித்து கொள்ள முடியும் என்பதற்கு டி. தருமராஜனின் ஆய்வுகள் உதாரணங்களாக அமைந்துள்ளன எனலாம். அதேபோல புதிய காற்று இதழில் அவர் இது பௌத்த நிலம் என்ற தொடரொன்றை எழுதினார். ஐந்து தொடர் கட்டுரைகள் வரை வெளியானது. நாட்டார் வழக்காற்றியல் பற்றிய புதிய கதையாடல் ஒன்றை இத்தொடர் மூலமாக அவர் கட்டியெழுப்பினார். இதுகாறும் நாட்டார் வழக்காற்றியல் பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் புரிதலை அத்தொடர் மூலம் பரிசீலனை செய்தார். இதன்படி தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் தந்தையாக அயோத்திதாசரை முன் வைத்தார்.

அதேபோல தமிழ் சாதியமைப்பு பற்றி வி.எஸ்.ராஜம் எழுதிய ‘சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…” என்றொரு குறுநூல் (மே 2015 மணற்கேனி பதிப்பகம்) அண்மையில் வெளிவந்துள்ளது. பொதுவாக இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியமைப்பு நிலவிவருவதாக சொல்லப்படுகிறது. இதன்படி சங்ககால பாடல்களில் காணப்படும் பாகுபாடு பற்றிய குறிப்புகளையெல்லாம் இன்றைய சாதி பற்றிய பார்வையிலிருந்து பார்த்து புரிந்துக் கொண்டு அன்றைக்கே சாதி இருந்தது என்று கூறும் போக்கு இருக்கிறது. உள்ளூர் தலித் ஆய்வாளர்கள் முதல் மேலை நாட்டு தமிழ் அறிஞரான ஜார்ஜ்.எல்.ஹார்ட் வரை ஏற்கும் இக்கருத்தை மறுத்து சங்க காலத்தில் இருந்த பாகுபாட்டு அம்சங்களை சாதிபாகுபாடாக கருதகூடாது என்று இந்நூல் மூலம் வீ.எஸ். ராஜம் வாதிடுகிறார். இந்த நூல் சாதியமைப்பு பிற்காலத்தவை என்று கருதுகிறவர்களுக்கு பயன்படும். சாதியமைப்பு சில நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என்று அயோத்திதாசரின் கூற்றுக்கு இந்நூலின் வாதங்கள் துணை செய்யும். அயோத்திதாசரின் இக்கூற்றை ஏற்று தம் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் கையாண்டுவந்த ரவிக்குமார் தான் இந்நூலை பதிப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கத்தாகும். மேலும் இந்நூலை தாம் நடத்திவரும் மணற்கேணி என்ற இதழில் தொடர் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். இந்நூலுக்கு அவர் எழுதியிருக்கும் பதிப்புரையில் அயோத்திதாசர் பெயரை குறிப்பிடவில்லையெனினும் இத்தலைப்பிலான நூலை அவர் வெளியிடுவதில் அயோத்திதாசரின் சிந்தனையின் தாக்கம் இருக்கிறது என்பது உண்மை.

மொத்தத்தில் அயோத்திதாசரின் நூல் தொகுதிகள் மூலம் அவர் பற்றிய நேரடி ஆய்வுகள் குறிப்பிடும்படியாக வெளிவராவிடினும் அவருடைய சிந்தனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்தாண்டு வேறு ஆய்வுகளும், வரலாற்று பரிசீலனைகளும் நடந்துள்ளன. அதேபோல் தமிழ் தீவிர சிந்தனையுலகை சமகாலத்தில் நேராகவும் எதிராகவும் பாதித்த சிந்தனையாளர் அவரைத்தவிர யாருமில்லை. ஆனால் சமூகம் தீண்டப்படாத சமூகத்தை ஒதுக்குவதைப்போல அறிவுலகமும் தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த இவரையும் தீண்டாமல் இருப்பதற்கான வாதங்களை கண்டுபிடித்து கொண்டுவிட்டது. அரசியல் சதிராட்டத்தால் மறைக்கப்பட்ட அவர் நூறாண்டை எட்டும் போது மறைவிலிருந்து வெளிப்பட்டார். அதே அபாயம் வெளிப்பட்ட பின்னாலும் வாசித்துவிடாத வகையில் தொடர்கிறது. இச்சூழலை உப்பக்கம் காணுவது மட்டுமே இதற்கான எதிர்வினையாக இருக்க முடியும்.

அநுபந்தம்:

1. 1999க்குப் பிறகு அயோத்திதாசர்  என்கிற பெயரும் பிம்பமும்  தமிழ் வெகுஜன பரப்பில்  செய்திருக்கும் தலையீடு  முக்கியமானது. அதுரை தமிழ்ச்  சமூகத்தில் முற்றிலும்  அறியப்படாதிருந்த ஒருவர்  பிரதிமயப்பட்ட பண்பாட்டின்  ஊடாக அறிமுகமாகி வெகுஜன  பிம்பமாகவும் மாறியிருக்கிறார்  என்பது முக்கியமான செய்தி. மெட்ராஸ் (2014) என்கிற திரைப்படத்தில்  சிலையாகவும் வீட்டினுள்  இடம் பெற்றிருக்கும் புகைப்படமாகவும்  அயோத்திதாசர் பிம்பம்  இடம் பெறுவதென்பது 15 வருடங்களுக்கு  முன்பு சாத்தியமில்லை. போதிதருமன்  என்ற பெயர், அப்பெயரை மையமாக  வைத்து வெளியான ஏழாம்  அறிவு (2013) என்ற படம் அப்படக்கதை  தன்னுடையதென்று புகார்  கூறிய கோபி என்ற தலித்  ஒருவரின் அயோத்திதாசர்  பற்றிய பரிச்சயம் என்ற  ஒன்றுக்கொன்று தொடர்புடைய  செய்திகளை பார்க்கும்போது  போதி தருமன் பெயரின்  வெகுஜன அறிமுகத்திலும்  அயோத்திதாசரின் தாக்கம்  எங்கோ மறைமுகமாக ஒட்டி  நிற்பதை பார்க்க முடிகிறது.

2. இந்தவகையில் பொதுவெளியில் அயோத்திதாசர் பெயரை முதலில் இடம் பெற வைத்தவர் தலித் எழில் மலை ஆவார். அதாவது அவர் மத்திய சுகாதரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது சென்னை தாம்பரத்தில் அமைந்த தேசிய சித்த வைத்திய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அம்மையத்திற்கு அயோத்திதாசரின் பெயரைச் சூட்டினார். அயோத்திதாசர் வாழ்ந்த காலத்தில் புகழ்பெற்ற சித்த வைத்தியராக விளங்கியிருந்ததால் கடந்தகால வரலாறு நிகழ்கால அரசியல் ஒன்றின் மூலம் மீட்டெக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இம்மையத்தை திறந்து வைத்த போது அவர் பெயரை கைவிட முயற்சி நடந்தது. ஆனால் தலித் அமைப்புகள் போராடியதின் காரணமாக மையத்தின் உள் நோயாளிகள் பிரிவிற்கு மட்டும் அவர் பெயர் சூட்டப்பட்டது. அயோத்திதாசரின் நூல்கள் தலித் எழில்மலை முயற்சி மூலமே தலித் சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. ஏறக்குறைய இப்பிரதிகள் வெளியானதும் இப்பெயர் சூட்டலும் ஒரே தருணத்தில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

3. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வ புகைப்படங்கள் வரிசையில் அயோத்திதாசர் படம் இடம் பெற்று அவர் ஒரு பிம்பமாக பரவியிருக்கிறார். அக்கட்சி கூட்டணியாக இருந்த திமுக ஆட்சியிலிருந்தபோது (2006 – 2011) தமிழன் இதழுக்கு நூற்றாண்டு விழா (2007) ஒன்று நடத்தப்பட்டது. நாமறிந்து இதழொன்றுக்கு நூற்றாண்டு நடத்தப்பட்டது அதுவாகவே இருக்கும். அதேபோல் அக்கட்சி ஆண்டுதோறும் வழங்கும் 5 விருதுகளில் அயோத்திதாசர் பெயரிலான விருதும் அடங்கும். அதேபோல தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஆர்வலர்கள் சிலர் அவர் பெயரில் ஆய்வு மையங்கள் சிலவற்றை தொடங்கி சிறு அமைப்புகளாக இயங்கி வருகின்றனர். மதுரை இறையியல் கல்லூரியின் ஆய்வியல் மையமான தலித் ஆதார மையத்திற்கு அயோத்திதாசர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

4. இந்நிலையில் புத்தர் / பௌத்தம் பற்றிய புதிய வாசிப்பு சூழலின் மீது இவரின் வருகை ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் ஆராய வேண்டியதாகும். குறிப்பாக மயிலை சீனி. வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலின் விற்பனை அளவு இன்றைக்கு என்னவாகயிருக்கிறது என்றறிவதும்கூட இத்தாக்கத்தை புரிந்துகொள்ள பயன்படலாம். பௌத்தம் பற்றிய மயிலை சீனிவேங்கடசாமியின் பல்வேறு முடிவுகள் அயோத்திதாசர் விளக்கங்களை அடியொற்றியிருப்பதை இப்பின்னணியில் புரிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. சிங்கரவேலருக்கும் அயோத்திதாசருக்குமான தொடர்பு மட்டுமல்ல பௌத்த பயணம் மூலம் கோசாம்பி சென்னையில் அயோத்திதாசரை சந்தித்ததும் வெளிவந்துள்ளது. கோசாம்பியின் நாட்குறிப்பு பகுதியை தமிழில் மொழிபெயர்ந்தது மூலம் இதை செய்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அவரே அயோத்திதாசரின் நூற்றாண்டையொட்டி அரசாங்க ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு கட்டுரை ஒன்றை ஆங்கில இந்து ஏட்டில் வெளியிட்டார். இது அயோத்திதாசரின் சித்தவைத்திய தொழிலுக்கிருந்த அக்கால பிரபல்யத்தை இனம் காட்டுகிறது.

5. பரவலாகியிருக்கும் அயோத்திதாசரின் பிம்பமும் பெயரும் கூட தலித் அடையாளம் பற்றிய மற்றுமொரு கோணத்தையே சொல்லியிருக்கின்றன எனலாம். ஏறக்குறைய அம்பேத்கரின் தோற்றத்தோடு சமப்படுத்தி பார்க்கும் இடத்தை அயோத்திதாசரின் தோற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அம்பேத்கரின் கோட்சூட் அணிந்த தோற்றம் நவீனத்தின் குறியீடு என்றால் அயோத்திதாசரின் தலைப்பாகையும் சூட்டும் அணிந்த தோற்றம் தலித்துகளின் பாரம்பரியமான புலமையை சுட்டும் குறியீடாக தெரிகிறது. அவர் பெயரிலிருக்கும் பண்டிதர் என்ற சொல் புலமைக்கான அடையாளம். அதாவது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் அவர் தேர்ந்தவர் என்ற செய்தியோடு இச்சொல்லையும் தோற்றத்தையும் இணைத்து பார்த்தால் அவர் பிம்பம் தரும் செய்திகளின் முக்கியத்துவத்தை புரீந்துக் கொள்ளலாம்.

6. அயோத்திதாசரின் முழு உருவப்படம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் மார்பளவு உருவப்படம் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டு பரவியிருக்கிறது. ஞான. அலாய்சியஸ் தொகுதிகளில் இடம்பெற்ற படம் ஓவியர் மருது வரைந்தது. அதற்குப்பிறகு அப்படங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர் வரைந்த ஒடுங்கிய முக அமைப்புக்கு மாற்றாக சிற்பி ஜெயராமன் வரைந்த ஓவியம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய அரை உருவப் படங்களும் முழு உருவப்படங்களும் கணினி உதவியோடு வரையப்பட்டு வருகிறது. இவ்வாறு அவரின் ஒரே ஒரு உருவப்படம் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டு பரவலாகியிருக்கிறது.

7. அயோத்திதாசர் சிந்தனையில் பௌத்தம் என்பது தமிழ் என்னும் வட்டாரம் சார்ந்ததாக விளக்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் புதைந்த நிலையிலிருந்து புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொந்த பெயரிலும் வேறு பெயரிலும் புத்தர் வழிபடப்படுகிறார். இதன்படி 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை பா. ஜம்புலிங்கம் என்கிற ஆய்வாளர் கண்டெடுத்துள்ளார். உள்ளூர் மரபு சார்ந்த இச்சிலைகள் பற்றிய முடிவுகளை அயோத்திதாசரின் விளக்கங்களோடு இணைக்க முடியும். அதாவது பௌத்தம் மறைந்து போகாமல் வேறு பெயரில் இங்கு உலவுவதாகவும் கிராமப்புற தெய்வங்களாக வழிப்படப்படும் தெய்வங்கள் பலவும்கூட பௌத்தம் சார்ந்தவை என்று கூறுவதும் இவ்விடத்தில் குறிக்கத்தக்கதாகும். இந்நிலையில் பா. ஜம்புலிங்கதை நேர்காணல் செய்து ளிutறீஷீஷீளீ இதழில் வெளியிட்ட எஸ். ஆனந்த் என்பார் தம் நடத்தும் நவயானா பதிப்பகம் என்கிற ஆங்கில பதிப்பகம் மூலம் (மினீணீரீவீஸீவீஸீரீ ணீ ஜீறீணீநீமீ யீஷீக்ஷீ ஙிuபீபீலீவீsனீ லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் நீuறீtuக்ஷீமீ ணீஸீபீ ஸிமீறீவீரீவீஷீus நீஷீனீனீuஸீவீtஹ் வீஸீ ஜிணீனீவீறீ,  sஜீமீணீளீவீஸீரீ sஷீutலீ மிஸீபீவீணீ – கிஸீஸீமீ ணி.னீஷீஸீவீus – ழிணீஸ்ணீஹ்ணீஸீணீ ஙிஷீஷீளீs, 2003) என்னும் ஆங்கில நூலை மறுபதிப்பாக கொணர்ந்துள்ளார். இந்நூல் தமிழ்ப் பகுதிக்கே உரியதாக நிலவிய பௌத்தத்தை விளக்குகிறது. அதாவது தமிழ்ப்பகுதி பௌத்தம் என்பது மற்றபகுதிகளிலிருந்து வேறானது என்றுக் கூறி மணிமேகலை, வீர சோழியம் என்கிற இரண்டு தமிழிலக்கிய பிரதிகளை கொண்டு அவற்றை விவரிக்குகிறார். ஏறக்குறைய அயோத்திதாசரின் நிலைபாடும் இதுவே. அயோத்திதாசர் சிந்தனைகளால் ஊட்டம் பெற்றதால் மட்டுமே இந்நூல் மறுபதிப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

(2014 ஆகஸ்ட் 23, 24 நாட்களில் காலச்சுவடு  இதழும், மதுரைஅமெரிக்கன்  கல்லூரி தமிழ்த் துறையும்  இணைந்து நடத்திய தமிழில்  புத்தக பண்பாடு என்ற  தலைப்பிலான பன்னாட்டு  கருத்தரங்கில் பேசிய பேச்சின்  விரிந்த கட்டுரை வடிவம்.)

Comments are closed.