பூதக்கண்ணாடி ( கவிதைகள் ) / வே.நி.சூர்யா

[ A+ ] /[ A- ]

வே.நி.சூர்யா

0
ஒரு தனித்தனியான ஆள் என்ன செய்வான்
தனியாக இருப்பான்
மேலும் தனியாக இருப்பான்
பின்பு தனித்தனியாக தன்னை உடைத்துப் போடுவான்
கடைசியிலும் தனியாக இருப்பான்
ஒரு நீர்த்துளி மெல்லச் சிரிக்கும்
இன்னொரு சிலந்திப்பூச்சியோ
அவனை சுற்றி வலைபின்னும்
மழைத்துளியின் கழுத்தில் கயிற்றை கட்டியிழுப்பதாக கனவு வரும்
அதற்குபிறகும் அவன் தனியாக இருப்பான்

0
அவனுடைய கண்ணீர் அனைத்தும் உப்பாயிற்று
அந்த உப்பை கொண்டு அவன் ஒரு மண்வெட்டி செய்தான்
அம்மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு கொடிய இரவில் தன்னைத்தானே
தோண்டத் தொடங்கினான்
அவனுக்கு பல இரவுகளுக்கு பிறகு ஒரு புதையல் கிடைத்தது:
இன்னும் நூறு மண்வெட்டி செய்யும் அளவுக்கு உப்பு

0
வெட்டவெளியில் தன்னைத்தானே எழுப்பிக் கொள்கிறது ஒரு கோவில்
காற்றில் ஒரு கோபுரம்
நீரால் ஒரு பிரகாரம்
சந்தேகமேயில்லை கோவில் கட்டப்பட்டாயிற்று
அங்கே அவனை
சிலையாக நிறுவுகிறது வாழ்க்கை
கறுப்பு மழை பொழிய
அந்தம் வந்து நடையை சாத்துகிறது
இனி
கோவில் வேகமாக பாழடையும்
அவனுடைய சிலை வெடித்து உடையும்
எதுவும் புரியாது வெளவால்களுக்கு

0
இறுதியாய் எதிலுமே இருட்டையே அவன் தேர்கிறான்
இருட்டும் மனமும் ஒன்றுதான் என்றாகின்றன அப்போது
உடனே தெரிகிறது
ஒரு முறிந்துபோன காதல்
இன்னும் தூரத்தில்
அவனுடைய பால்யம்
அதற்கும் தொலைவில்
பிறப்பதற்கு முன்பிருந்த இடம்
அங்கே சென்றாக வேண்டும் அவனுக்கு

0
அவன் தன்னை தனித்தனியாக கழட்டிபோட்டிருக்கிறான். இப்போதைக்கு அவனுக்கு இது ஓய்வு. கால்கள் இரண்டையும் கட்டி ஒரு துடைப்பத்தை செய்திருந்தான், அவன் ஒரு ஊன்றுகோல் செய்திருந்தால் கைகளில் கால்களை பிடித்துக்கொண்டு நடக்கும் மனிதனாக இருந்திருப்பான். கண்களை மிளகு டப்பாவினுள் போட்டு தொலைகாட்சி பெட்டிக்கு முன்பு மூடிவைத்திருந்தான், அநேகமாக இதற்குமுன் அவை வறட்டு இருமலில் அவதிப்பட்டிருக்கக்கூடும். குளிர்சாதனபெட்டியில் காதுகளை வைத்திருந்தான், ஏனென்றே தெரியவில்லை. சோபாவுக்கு அடியில் மூக்கை வைத்திருந்தான், ஒருவேளை ஈர மரக்கட்டையின் வாசனை பிடிக்குமோ என்னவோ. நீளமான நாக்கை சீனி டப்பாவினுள் புதைத்து வைத்திருந்தான், எறும்புகள் வந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனை எறும்புக்கொல்லியாய் சுற்றி தூவப்பட்டிருந்தது. தலையை கால்பந்திற்கு அருகே வீசியிருந்தான். வியப்பாக உள்ளது இரண்டு கைகளையும் ஒரேசமயத்தில் யார் உதவியுமின்றி எப்படி கழட்டிவைத்தானென்பது, அவையிரண்டும் சமையலறையில் காஃபி போட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையில் கழுத்தை வைத்து தூங்கிக் கொண்டிருக்கிறது அடியும் முடியுமில்லாத உடல். எவ்வளவு அழகாக ரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது தெரியுமா. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் தெரியுமா

**

Comments are closed.