பேயரசாண்டால்… ( சிறுகதை ) – சத்யா

[ A+ ] /[ A- ]

யாருமற்ற அந்த சாலையில் தன்னந்தனியனாக யட்சன் மிதந்து வந்துகொண்டிருந்தான், தூரத்தில் ஒரு நாய் இவனைக்கண்டு காது ரெண்டையும் தூக்கி மிரண்டு குரைக்கத்துவங்கியது. அதன் குரலைக்கேட்டு இன்னும் சில நாய்கள் குரைத்தது இவன் காதுக்கு இனிமையாக இருந்தது. வழியில் சுற்றிலும் ஏழு புளிய மரங்கள் நின்ற சுடுகாடு குறுக்கிட்டது. அதுதான் இவனுக்கு மிகவும் பிடித்தமான சுடுகாடு, அங்கேதான் முதன்முதலில் அவன் தன்னை யட்சனாக உணர்ந்தான். ஒருநாள் இவன் சாதாரண மனிதனாக வாயில் சிகரெட் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தான்.

லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ஒரு வேப்பமரத்தின் அடியில் சிறுநீர் கழிக்கும்போதுதான் அவன் அந்த உருவத்தைப் பார்த்தான். வெள்ளை வெளேரென ஓட்டை விழுந்த கண்களுடன் மொழுமொழுவென்று மூக்கிலிருந்து தலைவரை வழுக்கிக்கொண்டு போனபடியான உருவம் திடீரென இவன் முன்பு குதித்து நின்று “ஊஊ…..” என ஊளையிட்டதில் இவன் மயங்கிப்போனான். முழித்துப்பார்த்தபோது இவனைச்சுற்றி ஏழு எருமைமாட்டு கொம்புகளை நட்டுவைத்து அதில் அண்டங்காக்கை ரத்தத்தை ஊற்றி இவனை சுற்றிச்சுற்றி இல்லாத கால்களால் குதித்து குதித்து அழுகையிலும் சிரிப்பிலும் சேராத பாஷையில் எதோ சொல்லிக்கொண்டிருப்பதைக்கேட்கும்போதே இவன் உடல் நடுங்கத்தொடங்கியது.

கடைசியில் ஏழு கொம்புகளிலுமிருந்த ரத்தத்தை இவன் வாயில் ஊற்றி குடிக்க வைத்தது. அப்போது உடலெல்லாம் சிவ்வென்று நடுங்க கண்கள் இரண்டும் வெளியே வந்து விழும் போல் தொண்டையெல்லாம் அடைத்துக்கொண்டு வந்து அப்படியே மயங்கிப்போனான். முழித்துப்பார்க்கும்போது தான் ஒரு யட்சனாயிருந்ததை உணர்ந்தான். பின்பு தன்னை இழுத்துச்சென்றது ஒரு அமாவாசை ஆகாவளி என்பதை அறிந்துகொண்டான். சாதாரண மனிதர்களை இருள் உலகிற்கு கொண்டு செல்வதுதான் ஆகாவளியின் வேலை.

அந்த நாளின் நினைப்பில் இப்போதும் ஒருமுறை “ஊஊ…” என ஊளையிட்டான். தூரத்தில் நாய்களும் இவனுடன் ஊளையிடத்துவங்கின. நாயின் ஊளையைக் கேட்டு வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டு படுத்திருந்த ரெண்டு மூன்று மனிதர்கள் பயந்து போர்வையை இழுத்து இறுக்கமாக போர்த்திக்கொண்டனர், இவனுக்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது. சுடுகாட்டின் உள்ளே ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது. அருகில் ஒருவன் ஒரு கையில் நீண்ட தடியோடும் இன்னொரு கையில் குவாட்டர் பாட்டிலோடும் அமர்ந்திருந்தான். போதையில் கண்கள் சொருகியிருக்க வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. “ஊஊ…” என்று இவன் குரல் கொடுக்க சுடுகாட்டில் தூங்கிக்கொண்டிருந்த நாய்கள் எழுந்து இவனுடன் ஊளையிட்டது.

பிணத்தின் அருகில் இருந்தவன் லேசாக கண்ணைத் திறந்து பார்க்கும்போது இவன் மெதுவாக பிணத்தை தூக்கினான். அது விடைத்து எழுவதைப் பார்த்தவன் அலறியடித்தபடி எழுந்து கையிலிருந்த கட்டையால் பிணத்தை வேகமாக அடித்தான். அவன் கண்களிலிருந்து போதை காணாமல்போய் பயம் வந்திருந்தது. யட்சன் சிரித்தபடி பறந்தான். எரிந்து விழுந்த ஒரு எலும்பை எடுத்து தன் வாயில் சொருகி கொள்ளிக்கட்டையை எடுத்து பற்றவைத்தான். சதை எரிந்து கருகும் ஓசை இதமாக இருந்தது. புகைத்து முடித்து எலும்பை தரையில் தேய்த்து சுடுகாட்டின் சுவற்றில் எழுதினான் “இருட்டாண்டி போற்றி” என்று.

“இப்படியே விளையாட்டுத்தனமா இரு” பின்னால் குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தால் கன்னங்கரேலென்று ஓட்டைப்பல்லும் ஒடுக்கல் விழுந்த கன்னமுமாய் மண்டையோட்டு மாயாண்டி நின்றது. இவனைப்பார்த்து தன் ஓட்டைப்பல் தெரிய சிரித்தது. இவனும் தோழமையுடன் “வணக்கம் கருப்பு, உங்களுக்கு தீமை உண்டாகட்டும்” என்றான். தன்னை மரியாதையாக முகமன் கூறியவனை ஆமோதித்து சிரித்தபடி “இன்னும் பேய்க்கூட்டத்துக்கு கிளம்பலியா?” என்று மண்டையோட்டு மாயாண்டி கேட்டது.
“போகணும் கருப்பு. அமாவாசை ஆகாவளி எங்க?” என்றான் யட்சன்.

“அந்த கருப்பு போயிடுச்சே? அதுக்கு ரெண்டு ராத்திரிக்கு முன்னாலேயே கூட்டம் இருக்கு, அதுதான் பெரும்புடுங்க பேயாண்டிங்க கூட்டத்துல இருக்கே அது முடிஞ்சுதான் நீ போற நாசமாபோன நாரவாயனுங்க கூட்டம்” என்றது மண்டையோடு. பெரும்புடுங்க பேயாண்டிகள் கூட்டம்தான் ஒட்டுமொத்த பேய்களுக்கு தலைமை இயக்கம், அதன் இப்போதைய தலைவர் தீவட்டி தீஞ்சமூஞ்சி. அதன் கீழ் இயங்கும் பல நாசமாப்போன நாரவாயர்களின் கூட்டங்களில் ஒன்றுதான் இவன் இருக்கும் பகுதியில் வரும் தகரகுழாயர்களின் நாசமாப்போன நாரவாயர்கள் கூட்டம்.

“ஹ்ம்… நானும் கிளம்ப போறேன் கருப்பு” என்றபடி கிளம்பினான் யட்சன்.

“பொறுமையாக நடந்துகொள்ளவும், அங்கிருப்பவர்கள் உன்னை தூண்டிவிடுவார்கள் ஜாக்கிரதை, நாசமாப்போகவும்” என்று வாழ்த்தி அனுப்பியது மண்டையோடு.

மிகுந்த யோசனையோடு மாரிநோய் சுடுகாட்டுக்கு செல்லத்தொடங்கினான் யட்சன். தகர குழாயர்களின் தலைமை சுடுகாடு மாரிநோய் சுடுகாடுதான். அந்த காலத்தில் மாரிநோயும் கொள்ளை நோயும் வந்து செத்த பிணங்களை எரிக்கக்கூட மனமில்லாமல் மொத்தமாக போட்டுவிட்டு போன இடம் என்பதால் மாரிநோய் சுடுகாடு என்று பெயர்பெற்றது. பேய்க்கூட்ட தலைவர் காலரா வாயன் கூட பாதி எரிந்த பிணமாகவே இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறார். தலைவர் காலராவாயனை எல்லோரும் சுருக்கமாக கா.வாயன் என்று அழைப்பதுண்டு, காலப்போக்கில் அவர் காவாயன் என்று அழைக்கப்பட்டார்.

**

முதன்முதலில் மாரிக்காட்டுக்கு இவன் சென்றது நினைவு வந்தது.அப்போதைய யட்சாதிபதி காமாலைக்கண்ணனைப் பார்க்க போனான். இவனைப்போன்ற யட்சர்கள் பேய்கள் கூட்டத்தில் மிகவும் குறைவு. யட்சர்கள் ஒரே நேரத்தில் பேயாகவும் மனிதனாகவும் இருப்பவர்கள். பேய்கள் யட்சர்களை பூதம், என்று கிண்டல் செய்வதுண்டு. மனிதர்களின் பூத உடலில் வசிப்பதால் அவர்களை இழிவு படுத்த பூதம் என்பார்கள். ஆனால் யாருக்கும் காமாலைக்கண்ணனை பூதம் என்று கூப்பிட தைரியம் இல்லை.

அப்படி மீறி யாராவது கூப்பிட்டால் உடனே அது அழுதுகொண்டே போய் காவாயனிடம் சொல்லிவிடும். காவாயன் பேயாகும் அந்த தருணத்தில் பிறந்த மகனான காமாலையிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தது. அதனால் காமாலையனை வம்பிழுத்த பேயை ஒருமாதம் எந்த சுடுகாட்டிலும் ரத்தம் குடிக்க தடை விதித்துவிடும். அதற்கு பயந்தே யாரும் காமாலையனிடம் வம்பு வைத்துக்கொள்வதில்லை, அப்படி கெத்தாக இருந்த காமாலையனிடம் யட்சனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. காமாலையனுக்கும் யட்சனைப் பிடிக்கும், பாசமாக, “நாசமாய்ப் போனவனே” என்று அழைக்கும். காமாலையன்தான் தூங்கும் பிணத்தை தூக்கும் வித்தையையும், எலும்பை எரித்துப் புகைக்கும் வித்தையையும் சொல்லிக்கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் சுடுகாட்டு சுவற்றில் எழுதவும் காமாலைதான் சொல்லிக்கொடுத்தது. அப்படி முதன்முதலில் யட்சன் எழுதிய வாக்கியம், “காவாயன் காக்க”. இப்படி எழுதியதில் காவாயனிடமும் அதனுடனேயே திரியும் பிடாரியிடமும் நன்மதிப்பு பெற்றான் யட்சன். நாசமாய்ப்போன நாரவாயர்கள் கூட்டத்தில் பிடாரிக்கு பெரு மதிப்பு உண்டு. அது சொல்வதை யாராவது எதிர்த்துப் பேசினால் கூந்தலை விரித்துப்போட்டு கூச்சலிடத்தொடங்கிவிடும். அதுபோக பெரும்புடுங்க பேயாண்டிகளின் உயர்ந்த குழுவான கொள்ளிவாய் குந்தாணிகளின் கூட்டத்தில் வேறு பிடாரி இருந்தது. அதனால் தன்னை யாராவது எதிர்த்துப் பேசினால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என அஞ்சி பிடாரியை யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை. காவாயன் உட்பட.

ஒரு யட்சன் முழு பேயாக வேண்டுமென்றால் முப்பத்தாறு முள்ளம்பன்றி முடியை கழுத்தில் சொருகி, பூனை முடிகளை பொசுக்கிய புகையை உடலெல்லாம் மேயவிட்டு தன் பூதவுடலை துறந்து வரவேண்டும். அத்துடன் தன் பழைய பேரை விட்டு புதிய பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும். யட்சனும் மனப்பூர்வமாக தயாராகியிருந்தான்.

யட்சாதிபதியிடம் பேசி அவனுக்கு சூட்டிக்கொள்ள பேய்க்காமன் என்ற பெயரை முடிவு செய்திருந்தான். யட்சன் பேயாக மாற சனிய நீராட்டு விழா நடத்த இருள் குல முப்பாட்டன் நரகாசுரன் நினைவுநாளான கார்த்திகை மாத அமாவாசை தேர்ந்தெடுக்கப்பட்டு பல பேய்கள் கூடியிருந்தன. உயர் பதவியிலிருந்த பேய்களுக்கு ஆமையோட்டில் ஆக்காட்டி ரத்தம் பரிமாறப்பட்டது. மற்ற பேய்கள் ஆளுக்கொரு கோழியைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தன. கோழிகள் சிறகடித்து கதறி தப்பிக்க முயன்றுகொண்டிருந்தன. ஒல்லியான தேகத்துடனும் ஒடுக்கு விழுந்த கன்னத்துடனும் காட்டேரி எழுந்தது. காட்டேரிதான் தலைமை நாசாரி. பெரிய அளவிலான சடங்குகள் அனைத்தையும் காட்டேரிதான் செய்யும். தன் வாயிலிருந்து வழிந்து தாடையைத்தடவி ஒன்றாய் இணைந்திருந்த பற்களை விரித்து பேசத்தொடங்கியது.

“சுடுகாட்டில் கூடியிருக்கும் சூலப்பிடாரிகளே, சூனியப்பேய்களே, உங்கள் அனைவருக்கும் என் சாபம், இங்கே நாம் அனைவரும் இதோ இங்கே மிதக்கிறானே இந்த யட்சனின் சனிய நீராட்டுவிழாவுக்கு வந்திருக்கிறோம். இவன் நமது இருட்டாண்டியின் தீய வழியில் சேர தன் பூத உடலில், உலகில் நம்பப்படும் பொய்யான கடவுள்களான முப்பது முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படக்கூடிய பொய்யர்களும் நமது ஒரே உண்மையான கடவுளான இருட்டாண்டியின் எதிரிகளுமானவர்களைப் புறக்கணித்து இந்த சபையின் முன்பு வந்துள்ளான். அவனது சனிய நீராட்டு விழாவில் அவனோடு பேரழுக்கு ஆவிகள் அனைத்தும் துணை நிற்க உங்கள் சார்பாக நான் இருட்டாண்டியை வேண்டுகிறேன்.”
காட்டேரி சம்பிரதாய கேள்விகளை கேட்கத்தொடங்கியது.
“இருட்டாண்டியின் முன்னிலையில் பேயாக மாற சம்மதமா?” என்றது காட்டேரி.

“சம்மதம்” என்றான் யட்சன்.
“இனி உன் கேவலமான பூத உடலுக்கு திரும்ப முடியாது, புரிகிறதா?” என்றது காட்டேரி.
“புரிகிறது”

“இனி பேயாண்டிகள் கூட்டமோ கூட்ட தலைவர்களோ சொல்வதுபோல் கேவலமான பூத மனிதர்களின் உடலில் ஏறிக்கொண்டு அவர்களை சித்தரவதை செய்வாயா?”
“செய்வேன்”

“இதுதான் இருட்டாண்டியின் சனிய உத்தரவு என்பதை அறிவாயா?”
“அறிவேன்”

“இருட்டாண்டியின் முன்னிலையில் உன் பூத உடலையும் ரத்தத்தையும் அர்ப்பணிக்க சம்மதமா?”

“பரிபூரண சம்மதம்”

“இனி பூதம் என்ற இழி நிலையிலிருந்து பேய் என்ற உயர்ந்த நிலைக்கு நீ மாறக்கடவது” என்று நாசாரி சொல்லி முடித்ததும் இவனுக்குள் சந்தோசம் பொங்கியது. கொஞ்ச நேரத்தில் காணாமல் போகப்போகும் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
முப்பத்தாறு முள்ளம்பன்றி முடிகளும் இவன் முன்னால் வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து தன கையாலேயே கழுத்தில் சொருகிக்கொண்டான். பின்பு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான், அனைத்துப் பேய்களும் இவனைப் பார்த்து வாயைக் குவித்து “ஊஊ…” என்று ஊளையிட்டன. இவனும் வாயைக் குவித்து தலையை வானை நோக்கி நிமிர்த்தி ஊளையிட்டான், கழுத்திலிருந்து ரத்தம் முள்ளம்பன்றி முடிகள் மூலமாக வழிந்தது, அதை நண்டுசிண்டுப் பேய்கள் நக்கிக்குடித்தன.

அப்படியே மெதுவாக நடந்து பூனை முடிகள் பரப்பப்பட்ட மேடைக்கு வந்தான். இனி அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் பொசுங்கும் பூனை முடிகளின் புகையோடு புகையாக இவனுடைய ஆவியும் முழு பலத்தோடு வெளியேறும், பின்பு படுத்துக்கிடக்கும் இவனுடைய பழைய உடலிலிருந்து இதயத்தை எடுத்து பேய்க்காமனாகும் இவன் திங்க வேண்டும், பின்பு மற்ற அனைவரும் இவன் பழைய உடலைப் பிய்த்து தின்பார்கள். அவ்வாறாக சடங்கு முடியும். இவனும் பல சக்திகளோடு முழு பேயாக உருவெடுப்பான்.

இதையெல்லாம் யட்சன் கற்பனை செய்யும்போதே “உஷ்…” என்றது நாசாரி. தொடர்ந்து பல “உஷ்..” கள் கடைசி வரிசை வரை எழுந்து அடங்கியது. அதற்கு சடங்கு ஆரம்பித்தது என்று அர்த்தம். இருள் உலகின் எந்த ஒரு சடங்கும் மயான அமைதியில்தான் நடக்கவேண்டும். இவனது மேடை கொளுத்தப்பட்டது. பூனை முடிகள் பொசுங்கும் இனிமையான வாசனை இவன் மூக்கை நிறைத்தது. தன் மனித உடலின் சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து தீர்ந்துகொண்டிருப்பதை யட்சனால் உணர முடிந்தது தான் இனி பேய்க்காமன் என்று மனதுக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டான். அப்போது எதோ வித்தியாசமாக உணர்ந்தான், திடீரென புகையில் எதோ மாற்றம் தெரிந்தது. எதோ காட்டமான புகை சூழ்ந்தது. இவனுக்கு இருமல் வரும்போல் இருந்தது.

மூச்சை அடக்கிக்கொண்டான். இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் என்று சொல்லிக்கொண்டான். கடைசி சில நிமிட நெருப்பு மிச்சமிருக்க “அஹ்ஹ… அஹ்ஹ…” என இருமினான். சுற்றிலுமிருந்த அனைத்துப் பேய்களும் அதிர்ந்துபோய் பார்த்தன. இருமல் அதிகமாகி மயானமே அதிரும் வண்ணம் இருமினான். அவ்வளவுதான், சடங்கு தடைப்பட்டது. இருமியபடி மேடையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தான். “துரோகி”, “தகுதியற்றவன்”, “வீணன்”, “பலவீனன்” என்று பல பல குரல்கள் சுற்றிலுமிருந்து ஒலித்தன. குரல்களின் சத்தம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சத்தத்தை கேட்க முடியாமல் காதுகளை அடைத்துக்கொண்டான்.
“கருப்பு பெயரிலி, நீங்கள் ஒரு பூதம்.

இதை ஒப்புக்கொள்கிறீர்களா?” முனியன் கேட்டது, சுற்றிலும் நாசமாப்போன நாரவாயன்களின் முப்பத்திரண்டு பேய்கள் இருந்தன. அவைகள்தான் வழக்குகளில் ஜூரியாக செயல்படும். மொத்த முப்பத்தி மூன்று பேர்களில் வழக்கீடு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டுபேர் பேசுவார்கள்.

“நான் ஒரு யட்சன், பாதி மனிதன், பாதி பேய்” என்ற யட்சன் தொடர்ந்து, “மேலும், நான் பெயரிலியல்ல. என் பெயர் சத்யா.” என்றான்.

“கேட்டுக்கொள்ளுங்கள் ஜூரிகளே. இதோ இங்கு நிற்கும் பூதம் நம் அமைப்புக்கு எதிராக, இதுவரை நம் அமைப்பில் யாருமே சொல்லத்தயங்கும் வண்ணம், தன்னை ஒரு மனிதன் என்று சொல்லிக்கொள்கிறது, மேலும் கீழ்த்தரமான தனது மனிதப் பெயரை இந்த சபையோரிடம் சொல்லி அப்படி அழைக்கவேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறான்” என்றது முனி.

“நீங்கள் எதற்கு என்னைப் பெயரிலி என்று சொல்ல வேண்டும்? என்னை அவமதிக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” என்று கோபப்பட்டான் யட்சன்.

“நான் உன்னை எப்படி வேண்டுமானால் அழைப்பேன், எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை” என்ற முனியைக் குறுக்கிட்டு, “கருப்புகளே இங்கே எப்படி அழைக்க வேண்டும் என்பதைத்தாண்டி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன” என்றது அமாவாசை ஆகாவளி.

“சரி” என்று ஆமோதித்தது முனி, யட்சன் பக்கம் திரும்பி “நீங்கள் கடந்த கார்த்திகை அமாவாசையன்று சனிய நீராட்டு எடுத்து பேயாக மாற முயன்றது உண்மையா?”
“ஆம், அன்று நரகாசுர நினைவுதினம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றான் யட்சன்.
“எனக்கு நீங்கள் தலைவர் நரகாசுரனைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று கத்தியது முனி.

“உங்களுக்கு நினைவூட்டவில்லை, நீங்கள் அந்த நாளின் முக்கியத்துவம் குறித்து சபையோரிடம் சொல்லாமல் தவிர்த்ததை என் சார்பாக சொல்லிக்கொண்டேன். இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன், எல்லாருக்கும் தலைவர் நரகாசுரன் நினைவுநாளில் சனிய நீராட அனுமதி கிடைக்காது, அதற்கு வீட்டோ அதிகாரம் படைத்தவர்களின் அனுமதியும் சாபமும் வேண்டும்” என்று யட்சன் காவாயனைப் பார்த்தபடி கூறவும் காவாயன் பதறி, “தேவையில்லாத சமாசாரங்களை சபையில் பேசவேண்டாம்” என்று தடுத்தது.

“தேவையும் தேவையில்லாததும் சம்பவத்தின் முக்கியத்துவம் குறித்தது” என்றான் யட்சன்.

கோபமான பிடாரி பின்னிய தன் தலைமுடியை அவிழ்த்தபடி “ஏ.. என்ன? கருப்பு காவாயனையே எதிர்த்துப் பேசுகிறாய்.” என மிரட்டவும் அனைவரும் மிரண்டனர்.

கொஞ்சமும் சளைக்காத யட்சன், “ஏ பிடாரி, வாயை மூடிக்கொண்டு இரு. தலையை விரிக்கும் வேலையை என்னிடம் வைத்துக்கொண்டால் வேப்பிலையால் அடித்து விரட்டிவிடுவேன்” என்றான். பிடாரியிடம் யாரும் அப்படிப் பேசியதில்லை, அதுபோக யட்சன் பாதி பூதம் என்பதால் அவனால் வேப்பிலை பறித்து அடிக்க முடியும் என்ற உண்மை தெரிந்து அத்தனை பேய்களும் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டன, பிடாரி உட்பட.
“பார்த்தீர்களா ஜூரிகளே. இப்படிதான் தான் பாதி பூதம் என்ற திமிரால்…” என்று ஆரம்பித்த முனியை திரும்ப குறுக்கிட்டு, “கருப்பு முனி… நீங்கள் விசாரிக்கும்போது மற்றவர்களை குறுக்கிடாமல் இருக்கச் சொல்வதுதான் இந்த விசாரணை நாசமாப்போக ஒரே வழி. தேவையில்லாத குறுக்கீடுகளால் விஷயம் தடம் மாறிப் போகிறது” என்று அமாவாசை ஆகாவளி எச்சரித்தது. அது சரிதான் என்பதுபோல மற்ற ஜூரிக்களும் கசமுசவென்று பேசிக்கொள்ள பிடாரியும், காவாயனும் அமாவாசை ஆகாவளியை முறைத்தபடி பேசாமலிருந்தனர்.

வேறு வழியின்றி கேள்விகளுக்குள் திரும்பிய முனி, “அன்றைய சனிய நீராட்டை நீங்கள் தடை செய்தது உண்மையா?” என்று கேட்டது.

“அது தடைபட்டது என்று சொல்வதுதான் சரி என்று கருதுகிறேன், அதற்கு நாசாரியான காட்டேரிதான் சாட்சி” என்றான் யட்சன்.
திடீரென தன்னை சாட்சிக்கு அழைத்ததில் அதிர்ச்சியான நாசாரி ஒரு நிமிடம் தடுமாறி, “அதாவது…” என்று இழுத்துவிட்டு, “யட்சன் இருமியதால் யட்சன் தடைசெய்தான் என்றும் சொல்லலாம், அதேநேரம் இருமல், தும்மல், விக்கல் போன்றவை கட்டுப்பாடன்றி வருவதால் தடை நிகழ்ந்தது என்றும் சொல்லலாம்” என்று மய்யமாக சொல்லி வைத்தது.

“சரி தடை நிகழ்ந்தது என்றே வைத்துக்கொள்வோம், அந்த தடையால் நீங்கள் தடை செய்யப்பட்டு முருங்கைக் காடுகளுக்கு விரட்டப்பட்டது உண்மையா?” என்றது முனியன்.
கோபமாக குறுக்கிட்ட அமாவாசை ஆகாவளி, “நிறுத்துங்கள். விரட்டப்படவில்லை, பணியிடமாற்றம் செய்யப்பட்டது” என்றது.
நக்கலாக முகத்தை வைத்துக்கொண்டு, “விரட்டுதலைதான் பணியிடமாற்றம் என்று கௌரவமாக சொல்லிக்கொள்வார்கள் என்று சபைக்குத் தெரியும்” என்றது முனியன்.

“அப்படியென்றால் கொஞ்ச நாள் முன்பு ஒட்டகம் மேய்க்கும் உங்கள் மகனை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள பாலைவனத்துக்கு பணிமாற்றம் பெற்றீர்களே, அதுவும் உங்களை விரட்டியது என எடுத்துக்கொள்ளலாமா?” என மடக்கியது ஆகாவளி.

அதிர்ந்துபோய் திருதிருவென முழித்தபடி, “அது வந்து…” என்று ஆரம்பித்த முனியனை குறுக்கிட்ட காட்டேரி, “தேவையில்லாத விவாதம் வேண்டாம், முனியா, நீங்கள் பேயாளுமன்றதால் அனுமதிக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளுங்கள். சபையில் பேயாளுமன்ற நடத்தை முக்கியம்” என்று உறுதியான குரலில் சொன்னது. இவர்களின் சம்பாஷணையில் கலந்துகொள்ளாத யட்சனுக்கு நினைவுகள் முருங்கைக் காடுகளுக்கு சென்றது.
மாரிக்காட்டில் சனிய நீராட்டுவிழா தடைபட்ட பிறகு ஏழு இரவுகளுக்கு யட்சனால் எழுந்திருக்க முடியவில்லை. அவனுடைய மனித தாய், ஏதேதோ மருந்துகளை புகட்டி அவனை உறங்க வைத்திருந்தார்.

ஏழு இரவுகள் கழித்து முழித்தபோது அவன் தனித்துவிடப்பட்டிருந்தான். அவனை எந்தப் பேயும் தொடர்புகொள்ளவில்லை. இவன் பார்த்த சிலவும் தலைகீழாக கவுந்தபடி பறந்தே போயின. கட்டக்கடைசியில் பொழுது விடியும் நேரத்தில் ரகசியமாக வந்த மண்டையோட்டு மாயாண்டி “கருப்பு, உங்களைப்பற்றிய விவாதம்தான் ஏழு இரவுகளாக நடந்துகொண்டிருக்கின்றது, கவலைப்படாதே, ஆகாவளி எப்படியும் உங்களுக்கு தீய உத்தரவோடு வரும்” என்றது. சொன்னதுபோல் எட்டாம்நாள் இரவு ஆகாவளி வந்தது, யட்சனை தள்ளிவைக்கவேண்டும் என்ற கருத்தை தோற்கடித்து ஒரு வழியாக முருங்கைக்காட்டுக்குப் பணியிடமாற்றம் செய்யும் உத்தரவை பெற்று வந்திருப்பதாக சொன்னது.

காமாலைக்கண்ணனிடம் சென்று விடைபெற சென்றது. காமாலையை சுற்றி நின்ற பேய்கள் யட்சனைப் பார்த்து, “பெயரிலி, பூதம்” என்று கத்தின. அவற்றை அதட்டிவிட்டு கண்களில் சோகம் இழையோட, “நாசமாப்போறவனே” என்று பாசமாக விளித்தது காமாலை. யட்சனைக் கட்டிக்கொண்டது. சிறிதுநேரம் மௌனத்தில் கழிய, “நீ ஒன்றும் கவலைப் படாதே, இன்னும் ஒரு வருடம்தான் பின்பு நீ எப்போதும்போல சனிய நீராட்டு எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

இவன் ஒன்றும் சொல்லவில்லை. பின்பு அவன் தோளைப் பற்றி “ஆனால் ஒன்று, முருங்கைக்காட்டு வேதாளத்திடம் நீ எச்சரிக்கையாக இரு, அது ஒண்டிப்புளி ஓரிக்களிடம் தொடர்பு வைத்திருக்கிறது” என்று எச்சரித்தது. ஒண்டிப்புளி ஓரி எனப்படுவது பெரும்புடுங்க பேயாண்டிகளிடம் சேராமல் தனியாக திரிவது. பல பேய்கள் ஓரிகளின் ஆசை வார்த்தையை நம்பி அதனுடன் சென்றுவிடுவதால் பேயாண்டிகள் கூட்டம் பலவீனமடைந்துகொண்டே இருந்தது. அதனால் ஓரிகளை தடை செய்ததோடு அவற்றுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று தீவட்டி தீஞ்சமூஞ்சி சொல்லியிருந்தார்.

யட்சன் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து மிகவும் வருத்தத்தில் இருந்தான். ஏனெனில் இடமாறுதல் என்பது கௌரவமாக கொடுக்கப்படும் ஒரு தண்டனை என்பது இவனுக்கு தெரியும். இருப்பினும் பேயாண்டிகள் கூட்டத்தின் முடிவை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஓரியுடன் திரிகிறதோ ஓரியாக திரிகிறதோ அதன் கீழ் வேலைபார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான். வரும்போது யட்சாதிபதி பாசமாய், “நாசமாய்ப்போடா” என்று அனுப்பி வைத்ததை நினைத்துக்கொண்டான்.

கடைசியாக காணப்போன பிடாரி காறித்துப்பி கழுத்தில் கட்டிவிட்ட பேயத்தினை எடுத்துப்பார்த்தான். இன்னும் ஒரு வருடத்தை இந்த வேதாளத்தின் பிடியில் சிக்காமல் ஒட்டிவிடவேண்டும் என்று முடிவு செய்தான். நடுவில் ஓரிகள் எதனையும் சந்தித்தால் காமாலையிடம் சொல்லவேண்டும் என்று முடிவுசெய்தபடி முருங்கை வேதாளத்தை சந்திக்க சென்றான். அது மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத, அல்லது கண்டுபிடிக்க விரும்பாத அடர்ந்த பிரதேசத்தில் நட்டநடுக்காட்டில் ஒரு முருங்கை மரத்தில் வசித்து வந்தது.

முருங்கை வேதாளம் ஒரு வித்தியாசமான பேயாக இருந்தது, மற்ற பேய்களைப்போல் இல்லாமல் இது எப்போதும், “தலைகீழாகத்தான் தொங்குவேன்” என்று தொங்கிக்கொண்டிருக்கும். யாரேனும் வரும்போது அவர்களின் தோளில் ஏறிக்கொண்டு கொஞ்சதூரம் போய் அங்கே உள்ள முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும். அதுபோக முதுபெரும் பேயான அது வித்தியாசமான காரியம் செய்தது, தினமும் ஏதாவது ஒரு பிணத்தின் மண்டையோட்டை பொறுக்கி வந்து, அதன் நெற்றியை மட்டும் செதுக்கி எடுத்து அதை ஓட்டைபோட்டு ஒரு நூலில் கோர்த்து புத்தகம்போல் செய்து வைத்துவிடும். பின்பு தினமும் இரவில் வேதாளத்தின் கேள்விகளை அந்த புத்தகத்தில் எழுதி எல்லோருக்கும் அனுப்பிவைக்கும். மண்டையோட்டில் செய்யப்பட்டதால் மண்டைநூல் என்று அது குறிப்பிடப்பட்டது. அதன் எழுத்துக்கள் எப்போதும் புரியாதபடியே இருக்கும்.

எல்லாவற்றுக்கும் கடைசியில் “இருட்டாண்டி பார்த்துக்கொள்வான்”, “பேய்கள் முடிவு செய்வார்கள்”, “நதி தன் போக்கில் செல்லும்”, “யாருக்கும் பயப்படாமல் பிறரை பயமுறுத்துபவனே பேய்” என்பன போன்ற தத்துவப்பூர்வமான வசனங்கள் இருக்கும். முதலில் மண்டைநூல் குறித்து கண்டுகொள்ளாத பேய்க்கூட்டத்தின் பெரும் முண்டங்களான பிடாரி, காமாலையன் போன்றோரெல்லாம் பின்னாளில் ஆளுக்கொரு மண்டைநூல் வைத்துக்கொண்டனர். போட்டிக்கு மண்டைநூல் வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பதால் எதுவும் எழுதாமல் புதியதாகவே வைத்திருந்தனர்.

இப்படி கௌரவத்துக்காக வைத்துக்கொண்ட மண்டைநூல்களை கௌரவ மண்டைநூல்கள் என்று அழைத்துக்கொண்டனர். ஆனால் வேதாளம் அவர்களெல்லாம் ஆணவத்தால் மண்டைநூல் வைத்துள்ளார்கள் என்று ஆணவ மண்டைநூல்கள், ஆணவ மண்டையர்கள் என்று சொல்லும். ஆணவமோ, கௌரவமோ, இரண்டுமே உருப்படாதது என்று யட்சன் கருதினான். மிகவும் நல்லவர்களான பிடாரியும் காமாலையனும் இப்படி உருப்படாத வேலை செய்வதை அறிந்து யட்சன் ஆச்சரியப்பட்டான்.

ஒருநாள் வேதாளம் கேட்டதற்காக சுடுகாட்டிலிருந்து சுண்டுவிரல் எலும்புகளை பொறுக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது “பெயரிலி, பூதம், கோழை” என்று குரல்கள் கேட்டன. வழக்கமாக இவனை பேய்கள் கிண்டல் செய்வதுதான் என்றாலும் அன்று அவன் போகும் பாதையில் ஒரு பூனை கூட குறுக்கிடாமல் இருந்ததால் ஒருவித அபசகுனமாகவே இருந்தது. அதற்கேற்றார்போல் சுண்டுவிரல் பொறுக்கும்போது இவனுக்கும் காளாமுகன் ஒருவனுக்கும் சண்டை வந்தது. இவைகளால் ஏற்கனவே கோபத்தில் இருந்த யட்சன் மேலும் கோபமாகி அந்த பேய்கள் ஒளிந்திருந்த புளியமரத்தைப் பிடித்து உலுக்கினான்.

அதில் அமர்திருந்த பறவைகளெல்லாம் அலறியடித்துக்கொண்டு பறக்க, பேய்களெல்லாம் தடுமாறி விழுந்து பயத்தோடு பறந்தன. ஒரேயொரு பேய் மட்டும் தடுமாறிக்கொண்டிருக்கும்போது, யட்சன் அதன்மீது தாவிக்குதித்து அதன் கழுத்தை மிதித்துக்கொண்டான்.
“எதற்கு நான் போகுமிடமெல்லாம் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் புகை வெளிப்பட கோபமாக கேட்டான் யட்சன்.

“என்னை விட்டுவிடு” என்று பலவீனமாக புலம்பியது அந்த பேய்.
“மரியாதையாகச் சொல், இல்லாவிட்டால் உன்னைபிடித்து இதே புளியமரத்தில் வைத்து ஆணியால் அடித்துவிடுவேன்” என்று மிரட்டினான் யட்சன்.
பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டது அந்த பேய், “எனக்கு ஒன்றுமே தெரியாது…” சிணுங்கியது, “எல்லாம் யட்சாதிபதிதான்” என்று முனங்கியது.

“என்னது?” என்று குழப்பமும் கோபமுமாக கேட்டான் யட்சன்.
“காமாலையன்தான் இப்படி பண்ண சொன்னார்” என்றது அந்த பேய்.

அதிர்ச்சியில் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பேயை உற்றுப்பார்த்தான். ஆம். அந்தப் பேயை யட்சாதிபதியின் கூட சுற்றும் தொண்டரடிப்பொடிகளுடன் பார்த்திருக்கிறான்.
“உன்… உன் பெயர் என்ன?” என்று குழப்பத்துடன் கேட்டான்.
“உடுக்காடி…”

குழப்பத்துடன் காலை எடுக்க அது பறந்து மறைந்தது.
வேதாளத்திடம் சுண்டுவிர்ல்களை கொடுக்கும்போது மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு நடந்ததை சொன்னான். “ஹஹஹா..” என்று சிரித்தபடி “என் கேள்விகளுக்கு பதில் சொல்” என்று கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது.

“நீ சனிய நீராட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னது யார்? உனக்கு சனிய நீராட்டு தேதி முடிவு செய்தது யார்? அந்த தேதி கிடைக்க லாபி செய்தது யார்? மேடை அமைத்தது யார்? முள்ளம்பன்றி முடிகள் கொண்டுவந்தது யார்? பூனை முடிகள் போட்டது யார்? உன்னை இங்கே அனுப்பும் முடிவை சொன்னது யார்? இதற்கு பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக சிதறும்” என்றது வேதாளம்.

வேகமாய் கேட்டதில் பதில் சொல்ல திணறினான். யோசித்துப்பார்த்ததில் “காமாலையன்” என்று உதடுகள் முனுமுனுத்தன.

“ஹஹஹா…” என்று சிரித்தபடி பறந்து வேறு மரத்துக்கு சென்றுவிட்டது வேதாளம்.

வேதாளம் போனதும் யோசனையில் ஆழ்ந்த யட்சன் கண்ணில் வேதாளத்தின் மண்டை புத்தகம் தெரிந்தது. அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். வழக்கமான கேள்விகளைத்தாண்டி போன பிறகு காவாயன் பற்றி எதோ எழுதியிருந்தது தெரிந்தது. அதில் வேதாளத்துக்கும் காவாயனுக்கும் நடந்த விவாதங்களும் பின்பு நடந்த சண்டைகளும் பார்த்தான். காவாயன் தனக்கு எதிராக பேசிய அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியிருப்பதை அறிந்துகொண்டான். மற்றவர்களெல்லாம் தனித்தனியாக பிரிந்துபோய்விட வேதாளம் மட்டும் அவமானங்களைத் தாண்டிக்கொண்டு பெரும்புடுங்க பேயாண்டிகள் சங்கத்திலேயே அனைவராலும் ஒதுக்கப்பட்டு தன்னந்தனியனாக வந்திருப்பது புரிந்து பரிதாபமாக வேதாளத்தைப் பார்த்தான். அது அமைதியாக முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.

மண்டைப் புத்தகத்தில் கடைசி பக்கத்தை எடுத்துப்பார்த்தான். “வேதாளம் தன் போக்கில் மரத்தில் தொங்கும்” என்று எழுதியிருந்தது.
பின்பு ஒருநாள் வேதாளத்திடம் அது குறித்து கேட்டதற்கு “அவர்கள் பழிவாங்க முடிவெடுத்தால் அப்படித்தான் செய்வார்கள். ஒரு பேயின் வெறுமையை இட்டு நிரப்ப எத்தனையோ சூழ்ச்சிகளை செய்வார்கள் அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் முந்நூறு அமாவாசைகளாக என்னிடம் செய்துவருவதை மூன்று அமாவாசைகளாக உங்களிடம் செய்கிறார்கள் அவ்வளவுதான்” என்றது.

“ஆனால் என்னிடம் ஏன் செய்யவேண்டும்? நான் அவர்களுக்கு விருப்பமானவன்தானே?” என்று கேட்டான் யட்சன்.
“நீ அமாவாசை ஆகாவளியிடமிருந்து வந்தவன் என்ற ஒரு காரணமே போதும்” என்றது வேதாளம்.

“என்னிடம் பாசமாக நடந்துகொண்டிருந்தார்களே”
“திருதராஷ்டிர ஆலிங்கனம் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு திரும்ப தலைகீழாக தொங்கப்போனது வேதாளம். இந்த பேய் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை என்று நினைத்துக்கொண்டான் யட்சன்.
“கேள்விகளுக்கு பதில் கேள்விகளே கேட்டுக்கொண்டிருந்தால் புத்திசாலி என்று பொருளில்லை” முனியனின் குரல் யட்சனை நினைவுகளிலிருந்து இழுத்துவந்தது. இதற்கும் பதிலாக ஒரு கேள்வி தோன்றினாலும் மேலும் இந்த விவாதத்தை நீட்டிக்க இவன் விரும்பவில்லை.

சொல்லப்போனால் இவனுக்கு இந்த கூட்டத்தில் நிற்பது எரிச்சலாக இருந்தது. இது வெறும் சம்பிரதாய கூட்டம் என்பதை அறிந்தேயிருந்தான். இந்த கூட்டத்தில் பிணநாயகமோ பேயாளுமன்ற நடத்தையோ எதிர்பார்க்க முடியாது. எனவே நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாய் இருந்தான்.
அமைதியாய் இருப்பதைப் பார்த்ததும் முனியன் தொடர்ந்தது, “நீங்கள் தலைவர் காவாயனைப்பற்றி அவதூறாக உங்கள் மண்டைப் புத்தகத்தில் எப்படி எழுதலாம்?” என்றது.
“நான் என்ன சொன்னாலும் நீங்கள் ஏற்கப்போவதில்லை, ஏற்கனவே கடித்து அனுப்பிய காதுகளை நீங்கள் புறக்கணித்ததுபோலதான் இப்போதும் செய்யப்போகிறீர்கள். உங்களிடம் எப்படி பிணநாயகம் எதிர்பார்க்க முடியும்?”

“நிறுத்து…” கோபமாக கத்தியது பிடாரி. சுற்றிலுமிருந்த பேய்களுக்கு பயத்தில் சப்த ஓடுகளும் ஒடுங்கின.
“சபையோர்களே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை, இருப்பினும் கூறுகிறேன். நமது கூட்டத்தில் ஒரு பேயின்மீது குற்றம் சுமத்தப்பட்டால் முதலில் அந்தப் பேயின் காது கடிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்படும், அதற்கு விளக்கம் கொடுக்க பதிமூன்று காதுகளைக் கடித்து தோரணமாக்கித் தொங்கவிட்டு அதில் பதிலைக் கோர்த்து அனுப்ப வேண்டும். ஆனால் இதோ நிற்கிறானே யட்சன், இவன் காதுகளை சரியாக கடிக்கவேயில்லை. சில காதுகளில் ரத்தம் சொட்டிக்கொண்டேயிருந்தது. அதனால் அதை பதிலாக ஏற்க முடியாது.” என்று கத்தி முடித்து மூச்சு வாங்கியது.

“அந்த பதிலில் யட்சாதிபதியாகிய காமாலைக்கண்ணன் மனித உலகத்தில் தொழில்முறை பேயோட்டியாக இருந்துகொண்டு, நம் கூட்டத்தில் சில பேய்களை மனிதர்கள் மீது ஏவிவிட்டு, அதை வெளியேற்ற பணம் பெற்று லட்சாதிபதியாக வாழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தேனே அதை விவாதிக்கலாமே?” என்றான்.
“முடியாது. உன் பதிலில் காது சரியாக கடிக்காததால் ஏற்கப்படாது. நீ கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாய். உன் மண்டைப்புத்தகத்தைப் படித்ததால் அமுக்குவான் பேயையும், வேதாளத்தையும் சேர்த்து விலக்குகிறேன்.” என்றது பிடாரி.
அமுக்குவான் பேய் நாசமாய்ப்போன நாரவாயர்கள் கூட்டத்தில் பிரசித்திமிக்கது.

மனிதர்களை தூங்கும்போது, முழிப்பு வந்தும் வராத நேரத்தில் அமுக்கி நடுநடுங்க வைப்பதுதான் அதன் வேலை. அவ்வபோது காவாயனையும் அதன் தொண்டரடிப்பொடிகளையும் வம்பிழுத்துக்கொண்டே இருக்கும். அதுப்போக ஒருநாள் முனியன் வெட்டியானாக இருக்கும் தன் மகனைப்பற்றி பெருமை பேச, அதையும் கலாய்த்து விட்டது. அந்த கோபத்தை முனியனும், காவாயனும் பிடாரியும் சேர்த்துவைத்து இப்போது பழிவாங்கிவிட்டதாக பேய்கள் முணுமுணுத்தன. அமுக்குவானையும் வேதாளத்தையும் வெளியேற்றுவதாக சொன்னது பல பேய்களுக்கு வருத்தமாக இருந்தது. மற்றவை வெளிக்காட்டவில்லை என்றாலும் அவற்றின் வேண்டப்பட்ட விரோதியான காட்டேரியால் சும்மாயிருக்க முடியவில்லை.

“ம்க்கும்…” என்று ஒருமுறை தொண்டையை செருமிக்கொண்டே உதடுகளை ஒட்டி வழிந்து தாடையில் இணைந்திருந்த பற்களை ஒருமுறை தடவிக்கொடுத்தது.

“என்னதான் இருந்தாலும் இப்படி திடீரென வெளியேற்றுவது நல்லதல்ல. பேயாளுமன்ற நடைமுறைப்படி கொஞ்ச நாள் புளியமரத்தில் கட்டிப்போட்டுவிட்டு பிறகு முடிவெடுக்கலாம்” என்றது. அதும் சரிதான் என்று அமாவாசை ஆகாவளி உட்பட சில பேய்கள் ஆமோதித்தன.

பிடாரி எழுந்துநின்று தலைமுடியை விரித்தது. “பெயாளுமன்ற நடைமுறையா?” என்று ஒருமுறை சுற்றி வந்தது. “சரி வாக்கெடுப்பு எடுப்போம், நீக்க விரும்புபவர்கள் கையைத் தூக்குங்கள்” என்றது. சரியாக சொல்லிவைத்ததுபோல் காவாயனின் ஜால்ரா பேய்கள் தயாராக வைத்திருந்த பிணத்திலிருந்து பிடுங்கிவரப்பட்ட கைகளை உயர்த்தியது. எதிர்த்தரப்போ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்று சாதாரண கூட்டம் என்பதால் கை எடுக்காமலே வந்திருந்தன. அவை எதுவும் பேச வாயெடுப்பதற்குள், “வாக்கெடுப்பு முடிந்தது, எல்லோரும் கலையலாம்” என்றது காவாயன். அதைக்கேட்டதும் பள்ளி மணியடித்த பிள்ளைகள் போல எல்லா பேய்களும் பறந்து போயின.

அதன் பிறகு பிணநாயகம் வென்றதாக அறிவித்த காவாயன் மூன்று அமாவாசைகளுக்கு விடுப்பில் போனதாக கேள்வி.

•••

Comments are closed.