போதனை ( கவிதைகள்) / ப .மதியழகன்

[ A+ ] /[ A- ]

download

1
துயரக்கடவுளின் வாரிசு நான்
அவர் மனிதனை சிருஷ்டிக்கும் போது
அமைதியற்ற மனதைக் கொண்டிருந்தார்
பைத்தியக்காரனின் கனவாக அமைந்தது
அவரின் படைப்பு
அவர் மனிதனை கேடயமாக பயன்படுத்தி
பாவ காரியத்தைச் செய்தார்
இரக்கமற்ற மானுட இனம்
இரவை தனக்குச் சாதகமாக
பயன்படுத்திக் கொண்டது
கடவுளின் தேசத்தை
பேய்களின் வாரிசுகள் நிர்வகித்தன
கைவிடப்பட்டவர்கள் மரித்த போது
கடவுள் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்
இருளில் உழல்பவர்கள் கூக்குரலிட்டபோது
கடவுள் மஞ்சத்தில் வனிதயரோடு
வீழந்து கிடந்தார்
கடவுள் தனது உண்மையான விசுவாசிகளை
வேதனை ஆற்றில் தள்ளிவிட்டார்
தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு
மரணத்தையே பரிசாகத் தந்தார்
சாவைக்கண்டு அச்சம் கொண்ட மனிதன்
பெண் போதையில் மயங்கிக் கிடந்தான்
இறைவன் தன்னிடம் அடைக்கலம் கேட்டு
வந்தவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டான்
பாதுகாப்பின்மை மனிதனைப் பயப்படச்செய்தது
அதுவே அவன் கடவுளை சரணடைய
ஏதுவாக அமைந்தது
போராளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்
கடவுளின் கைப்பாவையாக செயல்படவே
மனிதனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது
கடவுளின் கனவுப் பேரரசு
பைத்தியக்கார விடுதியாக அமைந்தது
வாழ்க்கையில் சலிப்புற்று மானுட இனத்தை
கைவிட்டுவிட்டுப் போக அவன் முடிவெடுத்தபோதுதான்
கடவுள் கொலை செய்யப்பட்டான்.

2
வாழ்க்கை யாருக்கும் சிவப்புக்கம்பளம்
விரிப்பதில்லை
தெய்வீக வாழ்வுக்காக மாம்சத்தைத்
துறப்பதற்கு யாரும் முன்வருவதில்லை
தவறுக்காக எந்த மனிதனும்
குற்றவுணர்ச்சி கொள்வதில்லை
பிறரை ஏய்த்து பிழைப்பு நடத்த
எந்த தயக்கமும் காட்டுவதில்லை
வருதப்பட்டு பாரம் சுமந்த
ஒரேயொருவனையும் தேவாலயத்தில்
சிறை வைத்தாயிற்று
கணிப்புகள் தவறிப்போகும்போது மட்டுமே
மனிதன் கடவுளை நினைக்கிறான்
பாவமற்றவனை உண்மையின் ஒளியே
காட்டிக் கொடுத்துவிடுகிறது
வாழ்க்கையின் லகான் மனிதனின்
கையில் இல்லை
மறைந்து கிடக்கும் புதையலை மனிதனால்
ஒருபோதும் கைப்பற்ற முடியாது
எல்லைச் சுவரை உடைக்க முடியாத மனிதன்
எது விடுதலை தரும் என்பதை
அறியாதவனாய் இருக்கிறான்
உறக்கம் மனிதனுக்கு மரணத்தை
ஞாபகப்படுத்துகிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் பேச்சு
இந்தப் பூமியுடன் தொடர்புடையதாக இல்லை
கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும்
இன்னும் ஒரு மனிதனால் கூட கடவுள் இருக்கும்
சுவர்க்கத்தில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை
உண்மையை அறிந்தவர்களுக்கு கூட
கடவுள் ஆணா பெண்ணா எனத் தெரியாது
அனாதை என்றும் கருதும் போதுதான்
ஆண்டவனின் துணை தேவையாய் இருக்கிறது
உண்மையைக் கண்டு அலறும் போது
வாழ்வு மரணக்கிணற்றில் நம்மை
தள்ளிவிட்டு பேயாய்ச் சிரிக்கிறது.

3
கடவுளால் படைப்புத் தொழிலை
கைவிட்டுவிட முடியவில்லை
மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள
சுதந்திரம் தனக்கே பேராபத்தாய் முடியும்
என்று அவன் அறியாமலில்லை
ஆடையால் உடலை மறைத்து
நாகரிகமாகத் தோன்றும் மனிதன்
உள்ளே இன்னும்
மிருகமாகத்தான் இருக்கிறான்
பிரபஞ்சத்தைக் கட்டியாள மனிதன்
நினைத்த போது கடவுள் பல்லைக் கடித்தான்
உண்மையின் அழைப்பை மனிதன்
காதுகொடுத்தும் கேட்பதில்லை
வாழ்க்கையில் தடுக்கி விழுபவர்களுக்கே
ஆறுதலின் குரல் கேட்கிறது
அடைக்கலம் நாடுபவர்கள் கூட தாங்கள்
ஆட்டு மந்தையைப் போல் நடத்தப்பட
விரும்பமாட்டார்கள்
துன்பமேகத்தின் துளிகள் ஒவ்வொன்றும்
உடலை துளைத்து வெளியேறுகிறது
களங்கமற்றவனைத் தேடித்தேடி
கடவுள் ஓய்ந்து போய்விட்டான்
மாபெரும் அமைதியை தேடுவோருக்கு
இறப்பின் பின்னால் அது கிடைக்க
வழிவகை செய்து வைத்திருக்கிறான்
இறைவன்
ஆறுதல் வார்த்தைகள் முடமாகிப்
போனவனைக் கூட எழ வைத்துவிடும்
உண்மையின் விளக்கத்தினை
பாவிகள் எளிதாக உணர்ந்து கொள்கிறார்கள்
சிறைக்கூடத்தில் இருக்கும் கைதிகளிடம்
சுதந்திரத்தைப் பற்றிப் பேசினால்
சிலுவையில் அறைவார்கள்
வரலாற்று நாயகர்கள் அப்போதைய
சமுதாயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள் தான்
தீர்க்கதரிசிகள் தான் கடவுளின் காலடியை
பின்தொடர்கிறார்கள்
புனிதஆத்மாக்கள் இன்னும் அடைக்கலம் தேடி
அலைவது வேதனையைத் தருகிறது
ஆறுதல் தேடிப் புலம்புபவர்கள்
அவன் குரலைக் கட்டாயம் கேட்பார்கள்.

4
மகிழ்ச்சியாகட்டும் துன்பமாகட்டும்
கண்கள் சிந்தும் கண்ணீரின்
சுவை உவர்ப்புதானே
நீங்கள் முயலாதீர்கள்
உண்மையைப் புரிய வைப்பதற்கு
கடவுளைத் தவிர யாராலும்
முடியாது
உனது செயலுக்கு மனிதனிடம்
நியாயம் கற்பிக்க முயலலாம்
கடவுளிடம் உனது நொண்டிச்
சமாதானம் எடுபடாது
செயல்களில் கவனம் செலுத்துபவர்கள்
விளைவுகளைப் பற்றிக்
கவலைப்படமாட்டார்கள்
நீ காணும் யாவும் நிரந்தரமற்றவை
தொடர்ந்து அழிவை நோக்கி
சென்று கொண்டிருப்பவை
ஆசைப்பட்டதை அடைந்த பிறகு
மனம் நிறைவு கொள்கிறதா என்ன
மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்
நோயாளியானவன் கடவுளுக்கு மிக
அருகாமையில் இருக்கிறான்
இருதயத்தில் அன்பை மலரச்செய்த
ஒருவனுக்கே சமாதான மணிமுடி
சூட்டப்படுகிறது
உணர்ச்சி நெருப்பு உடலை
சாம்பலாக்காமல் விடாது
துயரநீர்ச்சுழலிலிருந்து தப்பியவனுக்கு
காப்பாற்றியவன் கடவுளாகத் தெரிவான்
உலகை கடைத்தேற்ற இனி
யாரும் வரப்போவதில்லை
அநியாயமாக சேர்த்த சொத்தின் பாதியை
உண்டியலில் சேர்ப்பதால் பாவக்கறை
மறைந்துவிடுமா
சாத்தானுடன் கடவுள் சமரசம்
செய்து கொண்டார்
தன்னுடைய ஆளுகைக்குள் உள்ள
பூமியை சாத்தானுக்கு தாரை
வார்த்துவிட்டார் இனி
சாத்தானே கோயில் கருவறையில்
குடிகொண்டியிருப்பான்
அடியார்களின் வேத கோஷத்தை
காதில் வாங்கிக் கொண்டு
பித்தனிடம் பிச்சைப்பாத்திரம் ஒன்றே
மிச்சமிருந்தது
இனி சாத்தான் விளையாடுவான்
அது திருவிளையாடல் ஆகுமா?

5

பாவ காரியங்களில் ஈடுபடும்போது
தன்னை மறக்கிறோம்
கறைபடிந்த மனம்
விலங்கு போல் பதுங்குகிறது
வாழ்க்கை அதன் அர்த்தத்தைத்
தேடும் விளிம்பு நிலைக்கு
என்னைக் கொண்டுவந்து
விட்டிருந்தது
வசீகரிக்கும் அழகுக்கு அப்பால்
வேடன்(கடவுள்) வலைவிரித்து
காத்திருக்கிறான்
விலைமகளிடம் அன்பையும்
காதலியிடம் சதையையும் தேடி
ஏமாந்து போகிறோம்
மற்றவர்கள் விடைபெற்றுக் கொள்ளும்போது
இறைவன் தனக்கு மட்டும்
விதிவிலக்கு அளிப்பான் என
நம்புகிறோம்
பரத்தை நாடும் ஆன்மா
இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது
உடலின் தேவையை பூர்த்திசெய்வதிலேயே
காலத்தை தொலைக்கிறோம்
சில மனிதர்களை விதி
வழிதவறவைத்து மரணப்புதிருக்கு
விடைகாண வைத்துவிடுகிறது
கொழுத்த மந்தை ஆடு
மேய்ப்பனின் கண்களை
உறுத்திக் கொண்டேயிருக்கும்
எதனைப் பெறுவதற்கும்
ஒருவிலை கொடுக்க வேண்டியிருக்கிறது
இந்த உலகத்தில்
வாழ்க்கைப் பந்தயத்தின் இலக்கு
மரணமாய் இருக்கிறது
வாழ்க்கையின் ரகரியங்களை அறிய
வாய்ப்பு கொடுத்த போதும்
மனிதன் பெண்பித்தனாய்
புதையலை கையில் வைத்துத்திரியும்
குருடனாய்த் தான் இருக்கிறான்.

6

வாழ்க்கை எனக்கு
முள்படுக்கையை பரிசாக அளித்திருக்கிறது
ஏமாற்றிப் பிழைக்கத் தெரியாததால்
கையில் திருவோடு ஏந்த வேண்டியிருக்கிறது
உண்மையின் வழி கடவுளைச்
சென்றடையலாம் அதற்குள் எனக்கு
கல்லறையைத் தயாரித்துவிடுவார்கள்
மரணம் பயமுறுத்துகிறது
இரவில் உறக்கம்கூட வர மறுக்கிறது
புத்தி பேதலித்து போனவர்களெல்லாம்
கடவுளைக் குறித்து
சிந்தித்து இருக்க வேண்டும்
பிதாவானவர் நியாயத் தீர்க்கும்
அதிகாரத்தை இந்தக் குமாரனுக்கு
அளிக்கவில்லை
யார் மடியில் சாய்ந்து
இளைப்பாறுவதென என் மனம்
ஏங்குகிறது
என்னைக் கேடயமாக பயன்படுத்தி
கடவுளிடமிருந்து தப்பித்துக் கொள்ளப்
பார்க்கிறார்கள்
என்னை உடல் சிறையிலிருந்து
விடுதலையளிக்க உங்களால் முடியுமா
நிம்மதியைத் தர என்னிடமிருந்து
நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்
கடவுளே என்னிடம் உன்னை
அறிமுகப்படுத்துக் கொள்
உனக்கு பைத்தியப்பட்டம்
கட்டமாட்டேன்
கடவுளே என் மூளையில்
சாத்தானின் குரலை கேட்கச்
செய்யாமலிருந்தாலே போதும்
நரக இருளில் தள்ளப்படுவதற்குமுன்
என் குற்றங்கள் மன்னிக்கப்படுமா
காலம் சென்றுகொண்டேயிருக்கிறது
எல்லாவற்றுக்கும் சாட்சியாய் வானம்
இந்த உலகத்திலிருந்து வெளியேறும்
பாதையை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதோ இரண்டு தேவதைகள் மரணத்திற்குப்
பிறகும் கடவுள் தென்படமாட்டார் என்கின்றன.

••••

7

வாழ்க்கைப் பாதைியில் அடுத்து
என்ன எதிர்ப்படும் என்று
நாம் யூகிக்க முடியாது
மரண சாசனம் எழுத
யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்
துயரச்சுமை அழுத்தும்போது
மனம் கடவுளைப் பற்றிக்
கொள்கிறது
புனிதமானவர்களின் வாயிலிருந்து
வெளிப்படும் வார்த்தைகள்
பல நூற்றாண்டுகளாக எதிரொலித்துக்
கொண்டிருக்கும்
இந்த உலகத்தில்
அறத்தை நிலைநிறுத்த
கடவுள் முயன்று கொண்டிருக்கிறார்
சத்தியம் சாவை
பரிசாகக் கொடுத்தாலும் நாம்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
வாழ்க்கையின் விளிம்பில்
நின்று கொண்டிருப்பவர்கள்
அப்போது தான்
உண்மை பேசத் தொடங்குவார்கள்
மரணத்திலிருந்து தப்பிக்கும் வழியை
மனிதன் தேடிக் கொண்டிக்கிறான்
இரட்சகனின் இருப்பு
விடியலைக் காணுவோம் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
பாவிகளை மன்னிப்பதே
கடவுளின் குணம்
நதிவெள்ளம் கடலை அடைய
பலமைல் தொலைவு
பயணம் செய்ய வேண்டிவரும்
வாழ்க்கையின் அர்த்தத்தைத்
தேடத் தொடங்குபவர்கள்
தூக்கத்தைத் தொலைக்கிறார்கள்
மரணத்தை யாசிப்பவர்களுக்கு
வாழ்க்கை முள்படுக்கையாகிறது
வாழ்நாளெல்லாம் தேடினாலும்
கடவுளின் காலடிச்சுவட்டை
பூமியில் காண முடியாது.

•••
mathi2134@gmail.com

Comments are closed.