பைத்தியக்காரர்களுக்கு மட்டும் ( அறிமுகக் கவிஞர் ) / கே.முனாஸ் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

download (3)

ஆத்ம வாகனம்
அல்லது
பைத்தியக்காரர்களுக்கு மட்டும்

நேற்று மொழி ஆசிரியர்
பாடம் எடுத்தார்
‘போக்குவரத்துச் சாதனம்’ அவரின் தலைப்பு
பிள்ளைகள்
உங்களுக்குத் தெரிந்த போக்குவரத்துச் சாதனங்களைக்
கூறுங்கள் என்றார்
அவர்களும் தமக்குத் தெரிந்தவற்றை
ஒவ்வொன்றாகச்சொன்னார்கள்.
சைக்கிள்,
கார்,
பஸ், என்றனர்
மேலதிகமாக அவர்
விமானம்,
ஹெலி கொப்டர் என்பவற்றைச்சேர்த்தார்.
அவர்
கப்பலையும் இன்னும் சிலவற்றையும்
விட்டுவிட்டார் என்பது எனக்குப்
பிரச்சினை அல்ல
நாம் பயணிக்கும்
‘ஆத்ம வாகனம்’ பற்றி அவருக்குச்
சொல்லணும் போல மனம் துடித்தது
அடக்கிக் கொண்டேன்
தப்பித் தவறிச் வாய்திறந்தால்
கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு
பைத்தியக்காரன் என்று
மனதுக்குள் நினைத்துக் கொள்வார்.
நாம் இங்கு சிறு பிள்ளைகளாகவே
அவரின் வகுப்பில் இருந்தோம்.
ஐந்து ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில்
நீயே ஒரே ஒரு ராணி.

சிறு காட்டு ராணி

பின் அங்கிருந்து
சிறு காட்டுக்குப் போனோம்
வந்திருந்த நாம் எல்லோரும்
கைகொட்டிப் பாடினோம்
சிறுகாடு சிறு காடு
நீயே அதன் ராணி
நீயே அதன் ராணி
மலை அருவி ஓடை செழிப்புறும்பூக்கள்
நீ சூடிக்கொள்ள அவை காத்திருக்கும்
தேன்வண்டுகள் மொய்க்கும்
நான் தடுத்தால்
நீ கோவமுறுவாய்
அப்படி எத்தனிக்கவில்லை என்றால்
நான் அவதியுறுவேன்
சிறுகாடு சிறு காடு
நீயே அதன் ராணி
மானும் மரையும்
உன்னைச் சுற்றி நிற்கும்
உன் கண் கேட்டு ஏங்கித் திரியும்
மிடுக்கில் இந்த ரகசியங்களை
என்னிடம் குசுகுசுப்பாய்
நாம் சிரித்து மகிழ்வோம்.
சிறு காடு சிறு காடு
நீயே அதன் ராணி
பச்சை எங்கும் பூசிய மணல்வெளி
மெல்லிய இதமாக நம் பாதம் பட்டு ஆடும்
வண்ணத்துப்பூச்சிகளின்தாளம்
கலர் கலராய்
நீ அவற்றில் எடுத்த நிறத்தை வைத்து
வரைவாய் சித்திரத்தை
நான் பார்த்து ரசிப்பேன்
வேறு யாரும் அப்படிச் செய்தால்
என்னிலை என்னவென்று சொல்வேன் உன்னிடம்
அது உனக்குப் பிடித்திருக்கும்
உன் பார்வையால் என்னை ஆறுதல் படுத்துவாய்
அது எனக்குப் பிடிக்கும்
சிறு காடு சிறு காடு
நீயே அதன் ராணி
பின் அங்கிருந்து
தொடங்கிய இடத்திற்கே திரும்பினோம்

பூனைக்கு ஓதிப்பார்த்தல்

ஒவ்வொரு நடுச்சாமமும்
பூனையும் எலியும் விளையாட்டு
வாழ்வின் ஆலாபனையையும் ராகத்தையும்
பறிக்கிறது.
நீ பூனை
நான் எலி
பின், பாத்திரம் மாறி நீ எலியும்
நான் பூனையும்
திடீரென உனது பூனையை என்னிடம்
வீசிவிட்டு
எனது எலியைக் கேட்டு அடம்பிடிக்கிறாய்
என்ன பிடித்திருக்கிறது உனக்கு
வா, ஓதிப்பார்ப்போம்…!
ஒரே ஒரு நிபந்தனை
போகும் வழியில் பட்ட மரமோ,
அந்தி செம்மஞ்சளோ,
மாதுளை கிளையோ,
குளமோ இருக்கக் கூடாது குறுக்கறுத்தால்
நீ உருவம் மாறி விடுவாய்
வா, நாம்
சூபியைக் கொண்டு வந்து
ஓதிப் பார்ப்போம்.

கழுகுகள் கூடும் பெருவெளி

அடிக்கடி முன்னர் நாம் சந்திக்கும் இடம்
கழுகுகள் கூடும் பெருவெளி
இனி அங்கு நாம் சந்திக்கத் தேவையில்லை
அது சஞ்சலங்கள்,
ஆசைகள் நிறைவேறா ஆத்மாக்களுக்குரியது.
நிம்மதியாக பரவசத்தோடு
கூடிக் கனிவோம் நாம்எம் வெளியில்
கழுகுகள் கூடும் இடத்தில்
எதைப் பார்த்தாலும் ஏதோ செய்தி சொல்லி
சஞ்சலத்தை அதிகரிக்கிறது
ஒரு நாய்
ஒரு நரி
கரடி
ஆந்தை
இப்படி எல்லாமே
ஏதோவொன்றின் குறியீடாகித்துரத்துகின்றது.
இன்னும் நிறைவேறா வேலைகள்
காத்துக்கிடக்கின்றன எமக்காக
வா, இனி அங்கு போவோம்
இனி நம்மை நாம்
கழுகுகள் கூடும் பெருவெளியில்
தேடத்தேவையில்லை

அவர்களைப் பாட விடுங்கள்

ஏன் தடுக்கின்றீர்கள்
அந்தப்பாடல் நூற்றாண்டு காலச் சங்கீதம்
குழைத்துச் செய்த பாடல்

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை
சேர்ந்து தாளமிடுங்கள்
ஆடுங்கள்
பாடுங்கள்

நாம் ஆரம்பித்து வைக்கிறோம்

நீங்கள் தொடருங்கள்
வாருங்கள் சேர்ந்து தாளமிடுங்கள்

சங்கீதம் ஒரு சுகம்
பாடல் ஒரு ஆறுதல்
சித்திரம் ஒரு செய்தி
ஓவியம் ஆன்ம வெளிப்பாடு

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
தள்ளி நில்லுங்கள்
ஏன்,எங்களைத் தடுக்கிறீர்கள்
நாங்கள் பாடுவோம்
நாங்கள் கீறுவோம்
நாங்கள் வரைவோம்

இங்கு ஆண்பெண் வேறுபாடு கிடையாது

இது கலை
இது வாழ்க்கை
எப்படி பெண்ணைப் பிரித்து
தடுத்து வாழ நினைக்கிறீர்கள்
அவள் தான் அச்சாணி

நீ பாடடி!
எனக்கு ஆக்கும் கலையைக் கற்றுத்தா
நான் சமைத்துப் போடுகிறேன்
அதில் ஒன்றும் தவறில்லை
இது தான் வாழ்வு

எங்களைப் பாடவிடுங்கள்
அவர்கள் தான் அந்த நாம்

••••

Comments are closed.