பொன் தாலி (சிறுகதை ) – சுரேஷ் பரதன்

[ A+ ] /[ A- ]

எஸ்தர் அழகாய்ச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கருகே தலையைக் குனிந்த நிலையில் வைத்தபடி, வலக்காலைச் சம்மணமிட்டும் இடக்காலைக் குதிக்காலிட்டும் அமர்ந்தபடி இரண்டாம் முறையாகக் கழுத்தில் தாலி வாங்கிக் கொண்டாள். இம்முறையும் நடேசன்தான் அவளுக்கு தாலி கட்டினான்.

ஒரு மே மாத வெயில் சுள்ளென்று சுட்டெரித்த மதிய வேளையில், ஒரு அம்பாசடர் காரின் பின்னிருக்கையில் நடேசனும் எஸ்தரும் அமர்ந்திருக்க, அவன் சுண்டுவிரல் அளவிலிருந்த ஒரு விரலி மஞ்சள்த்துண்டு கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் அணிவித்தான். அப்படித்தான் அவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்தத் தாலியை அவன் கட்டிய போது காருக்குள் அவர்களிருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. தாலியின் மூன்று முடிச்சுகளையும் நிதானமாகக் கட்டி முடித்த நடேசன் காரின் முன்பக்கக் கண்ணாடி வழியே தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரைக் காண்பித்து அவர் அவனுடைய நண்பனின் அப்பா என்றும், அவரை அவனும் அப்பாவென்றே அழைத்து வருவதாகவும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்குக் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் சொன்னபோது அவளுக்குச் சிரிப்பாக வந்தாலும் அவள் அதை சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள். பின்னர் நடேசனுடைய நண்பர்கள் அவனுக்குப் புதிதாய் முழுக்கைச் சட்டையொன்றை காரின் கண்ணாடிச் சன்னலைத் திறக்கச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

காருக்குள் அமர்ந்தவாறே அவன் அணிந்திருந்த பழைய சட்டையைக் கழற்றிவிட்டு, புதுச்சட்டையை அணிந்து கொண்டான். இவளுக்கு மாற்றுவதற்கென துணிகளெதுவும் இல்லை. அதைப்பற்றி அவனுடைய நண்பர்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் வாங்கியிருந்திருந்தாலும் அவளால், அவனைப் போல காருக்குள் மாற்றியிருக்க முடியாதுதான். மூன்று நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்த சேலையிலேயே தான் அவளுக்கு திருமணமென்ற அந்த சுப நிகழ்வு நடந்தேறியது.

எஸ்தருக்கு அவளின் மற்ற தோழிகளுக்கிருந்த மாதிரி, திருமணத்தைப் பற்றிய பெரிய பெரிய கனவுகள் எதுவும் எப்போதுமே இருந்ததில்லையெனினும், இப்படி மூன்று நாடகள் முன்னர் அணிந்த அழுக்குச் சேலையில் அது நிகழுமென்று அவள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. நடேசனை அவள் கடந்த ஒன்றரை வருடமாகத்தான் அறிவாள். அதிலும் அவன் தன் காதலை இவளிடம் சொல்லி இன்னும் முழுதாக ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை.

முந்தைய வருடத்தின் திசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் மாலையில் அவன் தன் காதலைச் அவளிடம் சொன்னபோது அவள் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தாள். அதனாலேயே அவள் அவனுக்கு சரியென்று சம்மதம் தெரிவிக்கவே இல்லை. ஆனால் மறுப்பாகவும் எதுவும் சொல்லவில்லை. அதையே அவன் அவளின் சம்மதமாக நினத்துவிட்டான். பின்னர் தினசரி திருமணத்தைப் பற்றிப் பேசிப்பேசியே இவளையும் சம்மதிக்க வைத்துவிட்டான்.

பேருந்து பயணத்தில் பக்கத்திலமர்ந்து வரும் அந்நிய நபரை ஒரு இரண்டு மணி நேரம் கூடச் சகிக்க முடியாமல் போகிறதென்றால் வாழ்நாள் முழுவதும் எப்படி ஒரு முன்பின் தெரியாத பெண்ணுடன் அல்லது ஆணுடன் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பது என்பதே அவன் அடிக்கடி இவளிடம் சொன்ன ஒரு விசயமாக இருந்தது. அவன் பேசுவதும், அவனோடு பேசுவதும் எஸ்தருக்கு பிடிக்கவே செய்தது. இருப்பினும் அவர்களிருவருக்கும் இடையில், அவர்கள் பெரிதென மதிக்காத, மதமும் சாதியும் ஊடாடிக் கிடந்ததை யோசிக்கும் வேளைகளிலெல்லாம் எஸ்தர் ஓரடி தன்னைத் தனக்குள் பின்னோக்கிச் சுருக்கிக் கொண்டவளாய் இருந்தாள்.

இத்தனைக்கும் நடேசனின் குடும்பம் மிகவும் தெய்வ பக்தி நிரம்பிய ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் பக்தி நடேசனுக்கும் இருக்கவே செய்தது. எஸ்தரிடம் தன் காதலைச் சொன்ன திசம்பருக்கு அடுத்த ஜனவரியில் பழனியிலுள்ள முருகன் கோவிலுக்குப் போவதற்கென்று ஒரு நாள் காலையில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டு தனக்குத் தானே மாலை போட்டுக் கொண்டு வந்து நின்றான்.

நடேசனின் இப்படியன பல விசயங்கள் எஸ்தருக்கு இந்த ஆறு மாதங்களில் மனதில் பெரும் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. இனி பூஜையறையில் முருகப் பெருமானுடன் ஜீஸஸுக்கும் இவன் இடந்தருவானா. அதை அவன் குடும்பத்தார் ஏற்றுக் கொள்வார்களா என்றெல்லாம் அவள் யோசிக்க ஆரமபித்தாள். ஜீஸஸை விடுங்கள், அவன் குடும்பத்தினர் முதலில் தனக்கு இடம் தருவார்களா என்பதே அவளுக்கிருந்த பெரும் கேள்வி.

அதற்குள் ஜீஸஸின் இடத்திற்கு என்ன அவசரம். ஆனால் அவனோ பிடிவாதமாக அனுதினமும் எஸ்தரிடம் வா நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய வண்ணமே இருந்தான். சில சமயங்களில் நடேசன் உண்மையாகவே தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறானா அல்லது எஸ்தர் சம்மதம் சொல்லவே மாட்டாள் என்கிற தைரியத்தில்தான் இப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறானா என்றெல்லாம் சந்தேகங்கள் அவளுக்கு வந்ததுண்டு. சரியென்று சொன்னால் நம் பக்கமே வரமாட்டான் என்றும் சில சமயங்களில் தோன்றியும் இருந்தது.

ஆனால் நடேசனோ எஸ்தர் சரியென்று சொன்ன அந்த நாளில் தன் நண்பர்களின் துணையோடு அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அப்படி போன நாளிலிருந்து மூன்றாம் நாளில் சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தின் அருகிலிருந்த மரத்தினடியில் நிறுத்தப்பட்ட காருக்குள் அமர்ந்தபடி நடேசன், எஸ்தர் கழுத்தில் முதன் முறையாக தாலி கட்டினான். தாலி கட்டும்பொழுது இதெல்லாம் மற்றவர்களுக்காகத் தான் என்றும் கூறினான்.

அதற்கு என்ன அர்த்தம் என்று எஸ்தருக்கு புரிபடவேயில்லை. அதன் பின்னர் இருவரும் காரை விட்டிறங்கி, சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தினுள் சென்று, அங்கே நடேசனின் நண்பர்கள் முன்பே வாங்கி வைத்திருந்த ரோஜா மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டார்கள். பின்னர் அந்த சப்-ரிஜிஸ்தரார் அவர்களிருவரையும் குறுகுறுவென்று பார்த்த வண்ணமிருக்க, அவர்முன் வைக்கப்பட்டிருந்த ஒரு தடிமனான நோட்டுப் புத்தகத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.

அப்போது நடேசனின் நண்பனொருவன் தன் கேமராவில் இவர்கள் இருவரையும், மாலை மாற்றும் பொழுது ஒருதரமும், கையெழுத்திடும் பொழுது ஒரு தரமும் என புகைப்படங்கள் பிடித்துக் கொண்டான். அன்றிரவு நடேசனின் நண்பரான இராமலிங்கம், அவர்களிருவரையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார்.

இராமலிங்கமும், அவர் மனவியைக் காதலித்துத்தான் திருமணம் செய்திருந்தாரென்று அவர் வீட்டிற்குப் போனபோது எஸ்தருக்குத் தெரிய வந்தது. அவர் வீட்டிற்குச் சென்ற இருவரும் மூன்று நாட்களுக்குப் பின்னர் குளித்தனர். அவர் நடேசனுக்கு ஒரு கைலியும் ஒரு டீ சர்ட்டும் கொடுத்தார். இராமலிங்கத்தின் மனைவி எஸ்தருக்கு ஒரு நைட்டியைத் தந்தார். எஸ்தரும் நடேசனும் அவற்றை வாங்கிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்து, இனியெல்லாம் இப்படி இரவல் பொருட்களைக் கொண்டுதான் வாழ்க்கையை வாழ வேண்டியிருக்குமோ என்று கண்களாலேயேக் கேட்டுக் கொண்டனர்.

வாழ்நாளில் அந்நாள்வரை அடுத்தவர் ஆடைகளை உடுத்தியேயிராத எஸ்தருக்கு முனுக்கென்று கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதுவரை இருந்திராத பயமொன்று நடேசனின் கண்களில் உருள்வதையும் எஸ்தர் முதன் முதலாய் பார்த்தாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இராமலிங்கம் “அட எல்லாம் சரியாப் போகுங்க” என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னார்.

ஆனால் எல்லாம் அத்தனை சுளுவாக சரியாகப் போகிற மாதிரி தெரியவில்லை. திருமணமான இரண்டாம் நாள் இராமலிங்கம் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். இராமலிங்கம் அவர் வீட்டிலிருந்து கிளம்பும் போது வெள்ளியிலான காமாட்சி விளக்கொன்றை எஸ்தரின் கையில் கொடுத்தார். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று யோசித்தாள் எஸ்தர்.

நடேசனோ வாங்கிக்கொள் என்பது மாதிரி பார்த்தான். அவளும் வாங்கிக் கொண்டாள். இராமலிங்கத்தின் மனைவி எஸ்தரைப் பார்த்துப் மெல்லிசாய் புன்னகைத்தாள். அந்த புன்னகை, அவள் நேற்றிரவு எஸ்தரையும் நடேசனையும் அவர்களது படுக்கையறைக்கு அனுப்புவதற்கு முன்னர் எஸ்தரைத் தனியாக அழைத்துச் சொன்ன ஒரு விசயத்தை மீண்டும் நினைவுபடுத்துவதைப் போல இருந்தது.

இந்தக் கல்யாணமெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாமல் உன் வீட்டிற்கே போய்விடு. இதற்கு முன்னால் அவனுடன் கூடியிருக்கிறாயா.. இல்லையா.. அப்படியென்றால் சரிதான். அந்த சுகத்தினை ஒருமுறை அனுபவித்து விட்டாயானால் அப்புறம் சட்டென்று விட்டுவிட முடியாது. என்னைப் பார். என் கல்யாணத்தில் நான் அடைந்த சந்தோசங்களை விட துக்கங்களே அதிகம். என் வீட்டிலிருந்தால் நான் இவ்வளவு கஷ்டங்கள் பட்டிருக்க மாட்டேன். இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

நீ மட்டும் சரியென்று ஒரு வார்த்தை சொல். இராமலிங்கத்திடம், உன்னைக் கொண்டுபோய் உன் வீட்டிலேயே விட்டுவிடச் சொல்கிறேன். நடேசன் கையில் காசு பணமெல்லாம் வைத்திருக்கிறானா.. தெரியாதா.. உன் வீட்டிலிருந்து உன்னை பணம் காசு நகை நட்டெல்லாம் எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னானா. இல்லையா. எவ்வளவு சம்பாதிக்கிறான். என்னது அதுவும் தெரியாதா.. நான் நினைச்சது சரியாகத்தான் இருக்கிறது. வேளாவேளைக்குச் சோறாவது போடுவானா.. பசியெடுக்குமேம்மா நாள் தவறாம மூணு வேளையும்.. எவ்வளவு நாள் பட்டினியாய் இருப்பே. எப்படித்தான் இவர்கள் அத்தனை பேரும் இப்படிச் சொல்லி வைத்த மாதிரி ஒன்றுபோல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

அவள் இடைவெளியின்றி நிறுத்தாமல் எஸ்தரின் மறுமொழிகளுக்கெல்லாம் காத்திருக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். எஸ்தருக்கோ அவள் மேல் வெறுப்பாகவும் அதே சமயம் பரிதாமாகவும் இருந்தது. என்ன பெண் இவள். எவ்வளவு நம்பிக்கையாய் புதிதாய் ஒரு வாழ்க்கை வாழ முடிவெடுத்த தன்னிடம் அந்த வாழ்க்கை ஆரம்பமான முதல் இரவன்றே இவளால் இப்படியெல்லாம் எப்படி பேச முடிகிறதென்று யோசித்தாள் எஸ்தர். இருப்பினும் அவள் சொன்ன சில விசயங்கள் எஸ்தரின் மனதிலும் பல கேள்விகளை எழுப்பவே செய்தது.

இதுவரை கூடவே வேலை பார்த்தாலும் நடேசனின் வருமானம் என்னவென்று எஸ்தருக்குத் தெரியாது. திடீரென்று செய்துகொண்ட திருமணத்தால் நாளையிலிருந்து இருவரும் பழைய கம்பனிக்கு, பழைய மாதிரியே வேலைக்குப் போகமுடியுமா. முடியாதா. இல்லை வேறு இடத்திற்கு வேலைக்குப் போனாலும் இதே சம்பளம் கிடைக்குமா.. நடேசனும் தொடர்ந்து வேலைக்குப் போவானா இல்லையா.. இராமலிங்கத்திற்கு தொடர்ந்தாற்போல் வருமானம் வருவதில்லையோ.

அதனால் தான் அவர் மனைவி வேலைக்குப் போகிறாளா.. அவளைச் சம்பாதிக்க அனுப்பிவிட்டு அவர் எந்த வேலைக்கும் போகாமல் இருப்பதினால் தான் இப்படி வெறுப்பாய் இருக்கிறாளா.. காசில்லாமல் போகும்போது இப்போதிருக்கும் காதலெல்லாம் கசப்பாய் போய்விடுமா. நடேசன் அப்படியெல்லாம் சம்பாதிக்காமல் இருந்து விட மாட்டான். ஏதாகிலும் செய்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. நான் இவளை மாதிரி இந்தக் கல்யாணத்தை வெறுக்க மாட்டேன்.

என்னதான் நடேசன் பேசிப் பேசி என்னைச் சம்மதிக்க வைத்து விட்டாலும் இதில் என் பங்களிப்பும் இருக்கிறது. நான் எடுத்த இந்த முடிவு தவறாகவே இருந்தாலும் அதை சரி செய்வேன். என்னுடைய இந்த முடிவால் மற்றவர்கள் யாரும் என்னைக் குறை சொல்லும்படி ஒரு நாளும் நான் விட மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தவளாய் இராமலிங்கத்தின் மனைவியிடம் அதெல்லாம் வேண்டாம்.

நான் இவருடன் தான் வாழப் போகிறேன் என்று சொல்லியிருந்தாள். ஆனாலும் அன்றிரவு எஸ்தரும் நடேசனும் தனித்து விடப்பட்ட அறையில் அவள் அவனை வெறுமென கட்டிக் கொண்டு படு என்று மட்டும் சொல்லிவிட, நடேசனும் சரியென்று சொல்லி அவளை பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டு படுத்துறங்கினான். அவன் முகத்தில் அந்த மங்கிய விளக்கொளியில் மிகப்பெரிய சந்தோசத்தையும், பெரிய கடினமான செயலொன்றை வெற்றியுடன் முடித்த ஒரு நிம்மதியையும் ஒரு சேரப் பார்த்தாள் எஸ்தர்.

நடேசன் செய்யும் எல்லா காரியங்களும் எஸ்தருக்கு அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை தருவனவாய் இருந்தன. மறுநாளே சின்னதாய் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திய நடேசன் முதன் முதலாய் ஒரு விநாயகர் படத்தையும் ஒரு ஜீஸஸ் படத்தையும் வாங்கி வந்தான். இராமலிங்கம் தந்த காமாட்சி விளக்கை அந்தப் படங்களின் முன் வைத்து தினமும் அந்திப் பொழுதில் எஸ்தரை ஏற்றும் படி சொன்னான். அதனால்தான், அவளால்தான் அவன் வாழ்க்கை இனி வெளிச்சமாய் இருக்கும் என்றும் கூறினான்.

பழைய கம்பனிக்கே தான் வேலைக்குப் போகப் போவதாகவும் எஸ்தரை அந்த வேலைக்குப் போக வேண்டாமென்றும் சொன்னவன் வேண்டுமானால் அவள் விருப்பப்பட்டால் வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் என்றும் சொன்னான். மாதச் சம்பளத்தினை இனி அவன் எஸ்தரிடம் தான் கொடுப்பானென்றும் வீட்டின் வரவு செலவுகளை அவள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான். அவளுக்கு பயமாயும் இருந்தது. சந்தோசமாகவும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மலர ஆரம்பித்தாள் எஸ்தர்.

நடேசனின் உறவில் ஒருத்தர் ஒரு நாள் அவர்களைத் தேடிக்கொண்டு வந்தார். அவனும் அவரைப் பார்த்ததில் சந்தோசமடைந்தான் என்பதை அவன் முக மாறுதல்களில் எஸ்தர் புரிந்து கொண்டாள். அவரைத் தன் அண்ணன் முறை என்று அறிமுகப்படுத்தி வைத்தவன் அவரிடம் அவனுடைய அம்மா அப்பாவைப் பற்றி விசாரிக்கத் துவங்கினான். அவர்களெல்லாம் நடேசன் மீது அளவுகடந்த கோபத்தில் இருப்பதாகக் கூறியவர் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று கல்யாணம் செய்ய என்ன காரணம் என்று கேட்டார். அதையெல்லாம் இப்போது பேசி என்னவாகப் போகிறது என்று எஸ்தர் நினைக்கும் பொழுதில் அதையே நடேசனும் அவரிடம் சொன்னான். நடந்தது நடந்தாகி விட்டது. இனி மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி பேசலாமேண்ணே என்று அவரைப் பார்த்து கேட்டான் நடேசன்.

சித்தி தாண்டா ரொம்ப சங்கடப்பட்டுட்டே இருக்காங்க நடேசா. இராப்பகலா அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப்போய் இருக்கு. சித்தப்பா யார்கிட்டேயும் பேசுறதேயில்லை. வேலைக்கும் போகலை. லீவு போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தப் பொண்ண நான் விரும்புறேன், இவளைத்தான் கட்டிப்பேன்னு ஒரு வார்த்தை வீட்டிலே சொல்லியிருக்கலாம். இல்ல எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே. நான் சித்திகிட்ட சித்தப்பாகிட்ட பேசியிருப்பேனே. அவங்க கேக்கலைன்னா, ஒத்துக்கலைன்னா அப்புறமா இப்படி முடிவெடுத்துருக்கலாமே.

பொசுக்குன்னு இப்படிப் பண்ணீட்டியேப்பா. என்று பேசிக்கொண்டே போனார். வீட்டில் சொல்லியிருந்தால் எல்லாரும் சேர்ந்து எப்பாடு பட்டாவது இந்தக் கல்யாணத்தை நடத்தவிடாமல் இருப்பதிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்திருப்பார்கள் என்று அவருக்கும், நடேசனுக்கும், எஸ்தருக்கும் தெரிந்திருந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவர் நீ வாப்பா உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்ன்னு நடேசனை வெளியே அழைத்துக் கொண்டு வெளியே போனார்.

வீட்டை விட்டு வெளியே போய் என்ன பேச வேண்டியிருக்கிறது.. எதைச் பேசவேண்டுமோ அதை இங்கேயே பேசினால் ஆகாதா. எனக்குத் தெரியாமல் பேச வேண்டும் எனில் என்னைப் பற்றி வேண்டாததாகத் தானே இருக்க வேண்டும் என்று வந்தவர் மேல் ஒரு இனம்புரியாத கோபம் வந்தது. அவர்தான் கூப்பிட்டார் என்றால் நடேசனும் ஏன் போனான். இங்கேயே சொல்லச் சொல்லியிருக்கலாம் தானே. வரட்டும் கேட்போம் என்று காத்திருக்கத் துவங்கினாள் எஸ்தர்.

பத்து நிமிடத்தில் தனியாய்த் திரும்பி வந்த நடேசனோ முகத்தில் ஒன்றுமே காட்டிக் கொள்ளாதவனாய் இருந்தான். கொஞ்ச நேரம் அமதியாய் இருந்தவன் தனியாய்ப் போய்ப் பேசி வந்ததிற்கு முதலில் அவளிடம் மன்னிப்புக் கேட்டான். அதுவரை கோபமாய் இருந்த எஸ்தருக்கு மனம் லேசாய் இளகிப்போனது. எப்படி இவன் என்னுடைய எல்லா உணர்ச்சிகளையும் சொல்லாமலேயே புரிந்து கொள்கிறான் என்று சற்று ஆச்சர்யமாக கூட இருந்தது எஸ்தருக்கு. அவர் சொன்ன விசயம் இதுதான். நடேசனை அவனம்மா வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இவளில்லாமல் தனியாக. இவனோ வந்தால் எஸ்தரோடுதான் வருவேன். அவளை தனியாக விட்டு விட்டு வர மாட்டேன். அதற்காக அவளை அவன் திருமணம் செய்யவில்லை என்று தீர்மாணமாகச் சொல்லியிருக்கிறான்.

வந்த நடேசனின் அண்ணனுக்கோ ஏமாற்றமாய்ப் போய்விட்டதாம். என்றெல்லாம் சொல்லியவன் அவளை அவனருகே அமரச் சொல்லி அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். தன் மடியில் கண் மூடிப் படுத்திருந்தவனைக் கொஞ்ச நேரம் கண் கொட்டாமல் பார்த்திருந்த எஸ்தர் மெல்லக் குனிந்து அவனை முத்தமிட்டாள். அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவளுடைய இளமையெல்லாம் மொத்தமாகப் பிரவாகமெடுத்து ஆறாய் பாயத் தொடங்கியது.

நடேசனின் அண்ணன் அதிலிருந்து அடிக்கடி வந்து போகத் துவங்கினார். நடேசனுக்குத் துணிமணிகள் எடுத்து வந்து கொடுத்தார். எஸ்தருக்கும் நடேசனின் அம்மா அவளின் பழைய சேலைகளை அவரிட்ம் கொடுத்தனுப்பியிருந்தாள். எஸ்தரிடமும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசிப் பழகினார். வரும் பொழுதிலெல்லாம் எப்படியாவது நடேசனையும் எஸ்தரையும் நடேசன் வீட்டிற்கு அழைத்துப் போவது ஒன்றைப் பற்றியே பேசினார்.

அவருடைய சித்தி பற்றி சித்தப்பா பற்றி பேசினார். அவருடைய பேச்சே அவர்களிருவரையும் பற்றி எஸ்தருக்கு புரிந்து கொள்ள போதுமானதாக இருந்தது. இங்கே அவர்களைப் பற்றி பேசுபவர் அங்கே போய் இவர்களைப் பற்றியும் பேசியிருப்பார் என்று எஸ்தருக்குப் புரிந்து கொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை. அவர் ஒருநாள் வந்திருந்த வேளையில் நடேசனின் நண்பனொருவன் திருமணத்தன்று எடுத்த புகைப்படங்களோடு வீட்டிற்கு வந்தான்.

நடேசன் புகைப்படங்களை முதலிலேயே பார்த்திருப்பான் போல. அவற்றைப் பார்க்க அவன் அவ்வளவு அக்கறை காட்டாமலிருந்தான். எஸ்தருக்கு முன்னால் நடேசனின் அண்ணன் வாங்கிப் பார்த்தார். பார்த்தவர் மாலைகளை கழுத்தையொட்டிப் போட்டிருக்கக் கூடாதா.. நார் மட்டும் இவ்வளவு நீளம் தொங்கிக் கொண்டிருக்கிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

பின்னரே அந்த புகைப்படங்களை எஸ்தரிடம் தந்தார். வாங்கிப் பார்த்தவளுக்கு சின்னதாய் ஒரு சிரிப்பும் கூடவே ஒரு பூரிப்பும் வந்தது. நடேசனின் அண்ணனும் நண்பனும் போன பின்னால் அந்த புகைப் படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்தவள் எப்ப பாரு நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லைன்னு சொல்றியே .. இந்த மாலை மாத்துற போட்டோவில என்னோட சிரிப்பைப் பாத்தியா.. என்னோட அந்த சந்தோசம் சொல்லலையா நான் உன்ன எவ்வளவு காதலிக்கிறேன்னு.. என்று சொன்னாள். அதை அன்றைக்கே கவனித்துவிட்டதாகச் சொன்ன நடேசன் அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

நடேசனின் அண்ணன் இவர்களைத் தேடி நடையாய் நடந்தது வீண் போகாமல் ஒரு நாள் நடேசனின் அம்மா அவர்கள் இருவரையும் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள். நடேசனின் அண்ணன் அவரே அழைத்துக் கொண்டு போவதாயும் சொன்னதும் எஸ்தருக்கு கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. நடேசனுடன் குடித்தனம் செய்த இந்த ஐம்பது நாட்களில் அவன் தன் வீட்டில் உள்ளவர்களின் குண நலன்களைப் பற்றி ஓரளவு சொல்லியும் இருந்தான். அவன் அவளிடம் சொன்ன ஒரு விசயம் எங்க வீட்டு ஆட்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவாங்க. அவங்க அப்படித்தான்.

அவங்க என்ன சொன்னாலும் உன்னை ஏசினாலும் பேசினாலும் இல்லை என்னை ஏசினாலும் பேசினாலும் நீ அதைப் பெருசா எடுத்துக்காதே. அவங்களுக்கு நம்மோட காதலைப் பத்தி ஒன்னும் தெரியாது. அவங்களுக்கு இப்போ அவங்க பையன் அவங்களை ஏமாத்திட்டாங்கிறதைத் தவிர வேற ஒன்னும் புத்திக்குள்ள இருக்காது. அதனால நாம அவங்களை அவங்களோட மன நிலையைப் புரிஞ்சு நடந்துக்கணும்.

அவங்க திட்டினாங்க இவங்க திட்டினாங்கன்னு எதையும் மனசுல வைச்சுக்காதே நான் யாருக்காகவும் உன்னை விட்டு விட்டு எங்கும் போகமாட்டேன் என்று எஸ்தரை சமாதானம் செய்தே அழைத்துப் போனான். அவன் சொல்லிய மாதிரியே எல்லாமும் நடந்தது. ஆளாளுக்கு இருவரையும் திட்டினார்கள். எல்லாரையும் விட நடேசனின் அம்மாதான் அதிகமாகத் திட்டினார்கள். அப்புறம் அழுதார்கள். தன் அம்மா அழுவதைப் பார்த்து நடேசனும் அழுதான். நடேசனின் அப்பா ஒன்றுமே சொல்லாமல் இருந்தார்.

எஸ்தர் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டிருந்தாள். அன்றிரவு அங்கேயே சாப்பாடு சாப்பிடச் சொன்னார்கள். தன்னை நடேசன் அன்றிரவு அங்கேயே தங்கச் சொல்லிவிடுவானோ என்று எஸ்தருக்குப் பயமாய் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. சாப்பிட்டுமுடித்த பின் என் வீட்டிற்குப் போகிறேனென்றான். ஏன் இது உன் வீடில்லையா என்று அவன் வீட்டில் அவனை யாருமே கேட்காதது குறித்து அன்றிரவுக் கூடலுக்குப் பின் சொல்லி சின்னதாய்க் கண்ணீர் சிந்தினான் நடேசன். உன்னையாவது உன் அம்மா பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார்களே.

என் அன்னையையும் அக்காவையும் பார். நம் கல்யாண நாளன்று நாமாகப் போன் செய்து சொன்ன நேரத்திலிருந்து இன்று இப்போதுவரை எஸ்தருக்கு என்னாயிற்று ஏதாயிற்று, அவள் உயிரோடிருக்கிறாளா இல்லையா என்று பார்க்கக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லையே என்று சொல்ல வாய்வரை வந்ததை சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். அவளுக்கும் கண்ணீர் வடிந்தது. அவள் கண்ணீர் வழிந்த அவள் கன்னத்தைக் கையால் துடைத்து முத்தத்தால் நிறைத்தான்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வந்த நடேசன் அவனையும் எஸ்தரையும் அவனுடைய அம்மா அழைத்திருப்பதாக சொன்னான். எதற்கு என்று கேட்டதற்கு இதுவரை மஞ்சளில் எஸ்தர் கழுத்தில் இருந்த தாலிக்குப் பதிலாக தங்கத்தில் தாலி அணிவிக்க வேண்டுமென்றும் அதற்காக நல்ல நாள் பார்த்திருப்பதாகவும் அதற்காகவே வரச் சொன்னதாகவும் கூறினான்.

கண்டிப்பாய் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு தன் மகன் தாலி கட்டுவதை அம்மா பார்க்க விரும்புவதாகவும் கூறினான். எஸ்தரால் மறுக்க முடியவில்லை. மறுநாள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

நடேசனின் அம்மா எஸ்தரை சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கருகே அமரச் சொன்னார்கள். இரண்டு கால்களையும் சம்மணமிட்டு அமர்ந்த எஸ்தரை வலது காலை சம்மணமிட்டும் இடது காலை குதிக்காலிட்டும் அமரச் சொன்னார்கள். அப்படியே அமர்ந்தாள் எஸ்தர். தலையைக் குனிந்தவாறு அமரச் சொன்னார்கள். குனிந்தாள். வெட்கப் படச் சொன்னார்கள். அறுபது நாட்கள் குடித்தனம் செய்த பெண் எப்படி வெட்கப் படுவாள். அவளுக்கு வெட்கம் வரவேயில்லை.. இருந்தாலும் குனிந்தவாறு அமர்ந்தாள்.

நடேசன் அவனம்மா கொடுத்த புது மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த பொன்னாலான தாலியை எஸ்தர் கழுத்தில் அணிவித்தான். அவனம்மா கண்ணீர் வடித்தாள். அருகிலிருந்த நடேசனின் அண்ணன் சித்தி தாலி கட்டுற நேரத்தில நல்ல வார்த்தை சொல்லாம ஏன் அழுறீங்க என்று கேட்க, நடேசன் கல்யாணத்தை நான் எப்படியெல்லாம் நடத்தனும்ன்னு நினைச்சிருந்தேன். இப்படி ஆகிப்போச்சே என்று மேலும் அழுதாள். எஸ்தரின் கழுத்தில் ஏறிய புது பொன் தாலி ஏற்கனவே இருந்த மஞ்சள் தாலியை விட கனமாய் இருந்தது அவளது மனதைப் போலவே. நல்லவேளை யாரும் அப்போது புகைப்படம் எடுக்கவில்லை. அவளின் அந்நேரத்துச் சிரிப்பில்லாத முகத்தை யாரும் மீண்டும் பார்க்கப் போவதில்லை.

*****

Comments are closed.