போபாவின் பிரபஞ்சங்களுக்குள் ஊடுருவும் கவிதைகள் ( செர்பியக் கவிஞர் வாஸ்கோ போபா [ Vasko Popa 1922 – 1991 –Serbian Poet] ) / இரா. மீனா

[ A+ ] /[ A- ]

download (54)

யுகோஸ்லோவியாவில் கிரெபெனக் என்ற இடத்தில் பிறந்த போபா பள்ளிக் கல்வியை முடித்தவுடன் பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் படித்து தத்துவத் துறையில் முதுகலை பட்டம்பெற்றவர்.பள்ளிப்படிப்பின் இறுதியில் மார்க்ஸ் மீது ஈடுபாடு கொண்டார்.அது அவருடைய இறுதிக்காலம் வரை நீடித்தது.

இரண்டாம் உலகப் போரின் போது கம்யூனிசத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு தலைமறைவாகச் செயல்பட்டபோது ஜெர்மானிய முகாமில் சிறை வைக்கப்பட்டவர். 1950 களில் கலை,பண்பாடு,மற்றும் சமூகம் சார்ந்த செயல் பாடுகளை முழுமையாக முன்னிறுத்திய avant-garde’ என்ற இயக்கத்தில் பங்கு கொண்டவர்.

கடந்தநூற்றாண்டின் தலைசிறந்த செர்பியக் கவிஞராக மதிப்பிடப்படும் வாஸ்கோ போபாவின் கவிதைகள் மீநடப்பியல்வாதம் தொடங்கி பாரம்பரிய நாட்டுக்கதைகள் வரை,உபகதைகள் தொடங்கி பழங்குடித் தொன்மம்வரை நம் காலத்தின் ஆழ்ந்த கற்பனைத்திறம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப் பதாகமைகின்றன.சமகாலத்துக் கவிஞர்களான Zbigniew Herbert மற்றும் Miroslav Holub ஆகியோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்.
நாட்டுபுறப்பாடல்களும்,மீ நடப்பியல்வாதமும் கலந்த கலைக் கலவையாக அவர் கவிதைகள் அமைகின்றன.

அவர் கவிதைகளின் மொழி சுருக்கமாகவும், பழமொழி சார்ந்தும்,அமைந்தது.வாழ்க்கை காதல்,விதி,இறப்பு என்று உலகளா விய கருக்களைச் சொல்லும் போது நகைச்சுவையையும்,பழமொழிகளையும் பெரியஅளவில் பயன்படுத்தியவர்.Ted Hughes அவரை ’தொலை நோக்குப் பார்வையுடைய காவியப்புலவன் ’என்று பாராட்டியுள்ளார். அவருடைய ஒவ் வொரு படைப்பும் ஒரு பிரபஞ்சம் இன்னொரு பிரபஞ்சத்திற்குள் ஊடுருவிக் கடப்பதான எண்ணத்தை உருவாக்குகிறது.இது நவீன கவிதையில் எழுச்சி யூட்டுகிற ஒரு நிலையென்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1953, ல் அவருடைய முதல் கவிதைப் புத்தகம் வந்த போது விமர்சகர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்;புறக்கணிப்பும் செய்தனர். அவர்களின் பார்வையில் யுகோஸ்லேவியக் கவிதைக்கு நவீனமயம் தேவையில்லை என்ற பரவலான கருத்திருந்தது.அதை மாற்றும் வகையில் Popa’ மற்றும் Miodrag Pavlović, ஆகிய இருவரின் தொடர்ந்த படைப்பாக்கங்களால்அங்கு நவீனச்சூழல் உருவானது. தன் கவிதை சார்ந்த சுதந்திரம் பறிக்கப்படும் போது சமரசம் செய்து கொள்ளாமல் கவிதை படைத்தவர் என்பதற்கு

புறக்கணித்த மனிதர்களே அவர் கவிதைகளை அவர் வாழும் காலத்திலேயே வரவேற்றது சான்றாகும்.போபாவின் கவிதைகளில் கவனத்தைக் கவர்கிற அம்சம் அதன் செறிவடக்கம் தான். செர்பியன் மற்றும் யுகோஸ்லோவியக் கவிதைகளுக்கு மட்டுமின்றி உலகக் கவிதைகளின் தரத்தையும் உயர்த்தி யவர்.நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான தொன்மப் பயன்பாட்டு உரு வாக்கம், ஆழ்மனவுணர்வு விசாரணை,பிரமிக்க வைக்கும் தொலைநோக்குச் சிந்தனை,மனப்படிமம்,உருவகங்கள்,கவிதைத் திறம் ஆகியவை இவர் கவிதை சார்பண்புகள்.மனிதனின் அடிப்படைச் சிக்கல்களான இறப்பு, காதல், விதி, வாழ்க்கையின் அர்த்தம் ஆகியவை கவிதைகளின் கருக்களாக அமைந்து அவர் படைப்புகளை உலகளாவியதாகவும் ,நிரந்தமானதாகவும் மாற்றின. கவிஞர்களின் கவிஞர்

Secondary Heaven என்ற தொகுப்பு நாட்டுப்பாடல்கள்,தேவதைக் கதைகள் மற்ற புராணப் பாத்திரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் அமைந்த்தாகும். ஒரு நவீனப் படைப்பாளி பாரம்பரியக் கூறுகளை நாட்டார் பாரம்பரியத்தோடு இணைத்துச் சொல்லும் தன்மையைக் காடுவதாகும்.மறந்து போனவற்றை வாழும் தலைமுறைக்கு அடையாளம் காட்டுவதான கூறுகள் கொண்டதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது விமர்சகர்கள் கருத்தாகும்.

கவிஞர்கள் மற்றவர்களுக்காகப் பேசும் பேறுபெற்றவர்கள். –வாஸ்கோ போபா மற்றவர்களின் கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேட்கும் அபூர்வ இயல்பு டையவர் என்று ஆக்டோவியா பாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1953 ல் அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான Bark வெளிவந்தது. அதை யடுத்து Field of No Rest , Secondary Heaven, Earth Erect .Wolf’s Salt, ஆகிய கவி தைத் தொகுப்புகள் வெளிவந்தன.அவருடைய கவிதைகள் பிரெஞ்சு,ஜெர் மன்,ருமானியம்,போலந்து ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

போபா பெற்ற விருதுகளில் சில: Brankova nagrada , Zmaj’s Award ,Austrian state award , Branko Miljković poetry award, AVNOJ Award, Skender Kulenović.

சில கவிதைகள்:

பந்தயம்

ஒருகால் ஒருதோள் அல்லது எதுவாயினும்

மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் துண்டு

அதைத் தங்கள் பற்களுக்கிடையே வைத்துக் கொண்டு

தங்களால் இயன்றவரை வேகமாக ஓடி

அதை பூமியில் மறைத்து வைப்பார்கள்.

மற்றவர்கள் எல்லா இடங்களிலும் சிதறி

முகர்ந்து முகர்ந்து பார்த்து

முழு பூமியையும் தோண்டுவார்கள்.

ஒருதோள் ஒருகால் அல்லது எதுவாயினும்

அதைக் கண்டுபிடிக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்குள்ளதெனில்

உண்ண வேண்டியது அவர்கள் முறை.

இந்த விளையாட்டு துரித உயிரோட்டத்துடன் தொடர்கிறது

தோள்கள் இருக்கும் வரை

கால்கள் இருக்கும்வரை

எதுவாயினும் இருக்கும்வரை.

•••

ஒரு செருக்கான தவறு

ஒரு காலத்தில் ஒரு தவறு ஏற்பட்டது

மிக அற்பமானது மிகச் சிறியது

யாருமே கவனித்திருக்கக் கூட முடியாதது.

அது தன்னைத் தானே பார்ப்பதையும்

கேட்பதையும் பொறுக்க இயலாதது.

எல்லாவகையான பொருட்களையும் அது கண்டுபிடித்தது

உண்மையில் தான் இல்லை

என்று நிரூபிக்க

அதன் ஆதாரங்களை வைப்பதற்கு விண்வெளியையும்

அதன் நிரூபணங்களை வைப்பதற்கு காலத்தையும்

அதன் நிரூபணங்களை பார்ப்பதற்கு உலகத்தையும்

அது கண்டுபிடித்தது,

அது கண்டுபிடித்தது எல்லாம்

மிக அற்பமானதில்லை

மிகச் சிறியதுமில்லை

ஆனால் நிச்சயமாக அது தவறாகதானிருந்தது.

இல்லையெனில் தவறாக இருந்திருக்கக்கூடும்

•••

மறதியுடைய எண்

ஒரு காலத்தில் ஓர் எண் இருந்தது

தூய்மையாகவும் வட்டமாகவும் சூரியனைப் போல

ஆனால் தனியாக மிகவும் தனியாக.

அது தனக்குள்ளாகவே கணக்கிடத் தொடங்கியது

அது தானே வகுத்தும் பெருக்கியும் கொண்டது

அது தானே கழித்தும் கூட்டியும் கொண்டது

எப்போதும் தனியாகவே இருந்தது.

தனக்குள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டது

தனது சூரிய வட்டத்தையும் தூய்மையையும்

தானாகவே அடைத்துக் கொண்டது

எப்போதும் தனியாகவே இருந்தது.

அதன் கணக்கிடும் சுவடுகள்

வெளியே நெருப்புமிழ்ந்தன.

இருட்டில் அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.

எப்போது தமக்குள்ளே பெருக்குவது என்று வகுத்துக்கொள்ள

எப்போது தமக்குள்ளே கூட்டுவது என்று பிரித்துக்கொள்ள

அதுதான் இருட்டில் நடக்கிறது.

அதன் சுவடுகளை நிறுத்தவும்

அவற்றை அழிக்கவும்

அதைக் கேட்பதற்கும் யாருமிருக்கவில்லை.

•••

கண்ணாமூச்சி

ஒருவன் மற்றொருவனிடமிருந்து மறைந்து கொள்கிறான்.

தன் நாவிற்குள்ளே மறைகிறான்

மற்றவன் அவனை பூமிக்கடியில் தேடுகிறான்.

தன் நெற்றியில் மறைகிறான்

மற்றவன் அவனை வானத்தில் தேடுகிறான்

தன் மறதியிலே மறைத்துக் கொள்கிறான்

மற்றவன் புல்நிலத்தில் அவனைத் தேடுகிறான்.

பார்வை அவனுக்காகப் பார்க்கிறது.

அவன் பார்க்காத இடமேயில்லை

பார்ப்பதிலேயே அவன் தன்னைத் தொலைக்கிறான்

•••

சிறிய பெட்டி

அந்தச் சிறிய பெட்டிக்கு முதல் பல் முளைத்தது.

சிறிய நீளமும்

சிறிய அகலமும் சிறிய வெற்றிடமும்

ஆகிய எல்லாமும் அதற்குக் கிடைத்திருக்கிறது.

சிறிய பெட்டி பெரிதாகிறது

அதற்குள் இப்போது அலமாரியிருக்கிறது

அது முன்பே இருந்தது.

அது பெரிதாக பெரிதாக வளர்கிறது

அதற்குள் இப்போது அறையிருக்கிறது

வீடும்,நகரமும் நிலமும்

உலகமும் முன்பே இருந்தன.

அந்தச் சிறிய பெட்டி தன் இளம்பிராயத்தை நினைவில் வைத்திருக்கிறது

மிக அதிக ஏக்கத்தினால்

அது மீண்டும் சிறிய பெட்டியாகிறது

மிகப் பெரிய உலகம் சிறியதாக

இப்போது அந்தச் சிறிய பெட்டியில்.

எளிதாக உங்கள் பையில் போட்டுக் கொண்டுவிடலாம்

எளிதாக எடுக்கலாம் தொலைக்கலாம்

சிறிய பெட்டியை கவனமாக வைத்திருங்கள்.

•••

ஒரு கதையின் கதை

ஒரு காலத்தில் ஒரு கதை இருந்தது.

அதன் முடிவு அது

தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.

அதன் தொடக்கம் அதன் முடிவுக்குப் பின்வந்தது.

தங்கள் சாவிற்குப் பிறகு

அதன் கதாநாயகர்கள் வந்தனர்.

தங்கள் பிறப்பிற்குப்

பிறகு போய்விட்டனர்.

அதன் கதாநாயகர்கள்

பூமி பற்றியும் சொர்க்கம் பற்றியும்

பலவிதமாகச் சொன்னார்கள்.

தாங்கள் ஒரு கதையின் கதாநாயகர்கள் மட்டுமே என்று

தங்களுக்குத் தெரியாததை

அவர்கள் சொல்லவில்லை.

ஒரு கதையில் தொடக்கத்திற்கு முன்பே

ஒருவரின் முடிவு வந்துவிடும்

அதன் முடிவிற்குப் பிறகு

ஒருவரின் தொடக்கம் நிகழும்

மூலம் : வாஸ்கோ போபா [ Vasko Popa ]

ஆங்கிலம் : அன்னி பெனிங்டன் [ Anne Pennington -Vasko Popa: Collected Poems]

தமிழில் : தி.இரா.மீனா

Comments are closed.