ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (9)

1
மேகங்களுக்கென்று தனிப்பாதை உண்டு
ஆனால் காற்றின் கட்டளைகளை அவை
ஒருபோதும் மீறியதே இல்லை!

2
நட்சத்திரங்களுக்கு இருள் தேவை
இல்லாவிட்டால் நாம் எப்படி இவைகளை
நட்சத்திரங்கள் என்று தெரிந்து கொள்வது?

3
அது கட்டிடங்கள் நிறைந்த ஆளரவமற்ற
நீண்ட பயணப்பாதை.
அவர்களுடன் தட்டில் விரித்து வைத்த
புத்தகமும் பயணப்படுகிறது.
காலப்புள்ளிகள் நீள நீள
புத்தகத்தின் எழுத்துக்கள்
உருவிழந்து நீராகித்
தட்டில் சேகரமாகிறது.
பயணக்களைப்பின் மிகுதியில்
நீரை அள்ளீப்பருகிக் கொண்டிருக்கின்றனர்
பயணத் தம்பதியர்.
நீரான அமிழ்தம் இதயத்தில் இறங்குகிறது
இதயம் பெருத்துப்
பெரும்போதையாகி நிகழ்கிறது!
இது வரமா சாபமா?
நிலை மாற்றிக்கொள்ள விழையும் மனது.
பின்-
சுமையான உடல்களை அவிழ்த்து
உயிர் விடுதலை பெறுகிறது.
பயணம் தொடரும் பாலை வெளியில்.

4
மரணத்தைப் பற்றி நிறைய கவிதைகள்
படித்திருக்கிறேன் எழுதியுமிருக்கிறேன்
ஆனாலும் நான் மரணித்த பின்னர் தான்
மரணத்தைக்குறித்த உண்மையான கவிதையை
எழுதமுடியுமென்று தெரிந்து கொண்டேன்!

5
கணினியின் ஒரு பக்கத்து
ஜன்னல் தொடுதிரையில் க்ளிக் செய்து
உயிரை இயக்கம் கொள்ளச்செய்துவிட்டுச் செல்கிறாய்
நான் பக்கங்களை நிரப்பித் திரிகிறேன்.
இப்போது-
ப்ரச்சினை பக்கங்களை நிரப்புவதிலல்ல
உன் உயிரை நிரப்புவதில்தான்.
காலக்கெடுவில்
ஒடிய களைப்புடன் உட்கார்ந்திருக்கிறேன்
ஓர் வேட்டை நாயென!

6
மரகதம் சித்தியிடம்
ஏவாளைக் காட்டுங்கள் என்றேன்
தன்னைக் காட்டினார்!

7
சுடலைச் சாம்பல் பூசி கழுத்தில் மணிகட்டி
இழுத்துவந்த பைரவர் துணையாக
தெருமுனைப்பிடாரிக்கு விரல் ரத்தம் காட்டி
வீதிக்குள் நுழைந்த குடுகுடுப்பையின்
குரலெடுத்த ஓசையோடு ஜக்கம்மாவின்
மூத்த கரு மூளையில் கத்தி பிளந்த
கபால மையில் சுவர்க்குறியிட்டுச்
செல்வான் – சொல்வான் குரலெடுத்து
குடுகுடு ஜக்கம்மா நல்ல காலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
இவனுக்குப் பிறக்காத நல்ல காலத்தை
பிறருக்கு!
8

ஒரு கணம்
உணர்விழந்து போக என்னை
ஒப்புக்கொடுத்தேன்

தேன்கூடு கலைக்கப்பட்டதோர் பதட்டமக்கணம்

காலம் நிறுத்திச் சென்றதோர்
அரை வட்ட வாழ்க்கை
மரண வாசல்களின் பள்ளத்தாக்கில்
வரவேற்புப் பலகை புதியதாய்

என்றுமே திரும்பலற்றதோர்
ஒளிக் கசிவணைந்த அறைக்குள்
தள்ளித் தாளிட்ட மனம்.

விகசிப்புகளினோசை
விழாத செவிகள்

உயிர்பறிக்கும் கோபத்தின்
கொடுமுனை மழுங்கிக் கூர் கெட்டது

அது நடந்து கடந்த வழியில்
தென்படாத பாதச்சுவடுகள்

முகவரியற்ற எனக்குப்
புதிய எண் – கூப்பிட்டுச் சொல்ல

நாவைக் கழுவேற்றிக்
கண்கள் பிடுங்கப்பட்டு
அங்கே கற்கள் வைக்கப்பட்டன-
விழிகள் குருதி காட்டவில்லை.

மொழிகளிலிருந்து ஓசைகளை
உருவி எடுத்துவிட்டேன்

விரியத் திறந்து வைக்கப்பட்டது கபாலம்.
போவோர் வருவோர் போட்டுச் சென்றனர்:
-குப்பைகளை
-உபயோகிக்கப்பட்ட நாப்கின்களை
-அணைக்கப்படாத சுருட்டுகளை
-எச்சில் இலைகளை
-புராணிகங்களை
-புத்தகங்களை
சிலர்
காறித் துப்பிச் சென்றனர்.

அக்கணங்களில் நினைவுகூரப் பட்டதைத்
துடைத்தழித்தேன்.
பறவைகள் அழுகிய பழங்களைத் தின்று
எச்சமிட்டுச் சென்றன

மக்கி மடிந்துவிட்ட குப்பைமேல்
காலமழை இறக்கிய தூவானம்
அழுகிய பழவிதைகள்
வேர்விட்டு விருட்சமாகுமென
கபாலத்தைக் கூர்த்தது காலம்:

தன் ரசாயன மாற்றத்தை
என்னில் எதிர்பார்த்துக்
கண்டது தோல்வி.

இருந்தேன் நான்
வெற்றி மறுத்து!

000 000 000

Comments are closed.