மணற்காடர் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை

நாம் வீடற்று வெளியில் வாழ்வதால்

தெரு நாய்கள் என்கிறீர்கள்

எம்மைப்போல் மனிதர்களை ஏன்

தெரு மனிதரென்று நீங்கள் சொல்வதில்லை?

—-

அம்மா படித்த அந்தப் பள்ளிக்கூடம்

இடிந்து துவைந்துவிட்டது

அவள் ‘ஆனா’ எழுதிப் பழகிய மண்தரை

இப்போதும் அங்கே இருக்கிறது

அந்தப் பூந்தோட்டத்தின் மத்தியில்

—-

நான் பள்ளிக்கூடம் சேர்ந்தபோது அப்பா தொலைந்துபோனார்

சைக்கிள் ஓட்டப் பழகியபோது அவர் நினைவாகவே இருந்தது

உயர் கல்வி கற்றபோதும் உத்தியோகம் பெற்றபோதும்

திருமணமானபோதும் அப்பாவின் நினைவாகவே இருந்தது.

தொலைந்தவர்கள் திரும்பி வருவதுண்டு என்பார்கள்

அப்பா மட்டுமேன் திரும்பி வராமலிருக்கிறார்

என் மகன் அவரைப்போல் இருப்பதாலா?

—-

இந்த ஆண்டு

ஆழிப்பேரலை வரலாம் என்கிறார்கள்

வரட்டும்.

அழிப்பதற்கு நிலமும்

கொல்வதற்கு உயிர்களும் இருக்கின்றன.

இதே வேலையைத்தானே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள்

இயற்கை எப்போதாவது ஒரு நாள் செய்துவிட்டுப் போகட்டும்.

—-

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறதே

யாருடைய வேலையாக இருக்கும் இது?

Comments are closed.