மறந்து போன நாதம் / கிருஷ்ணமூர்த்தி

[ A+ ] /[ A- ]

 

download (1)

 

 

 

 

 

 

 

 

ஆத்ம மத்ய கதா: பிராண:
ப்ராண மத்ய கதோ த்வனி:
த்வனி மத்ய கதோ நாத:
நாத மத்யே சதாசிவ:
(உடம்பின் நடுவுள் உயிர்
உயிரின் நடுவுள் ஓசை
ஓசை நடுவுள் நாதம்
நாதத்துள் சதாசிவம்)

சக நண்பர்களின் அலைபேசிகளை ஆராயும் போது அவர்களின் இசை கோப்புகளை பார்ப்பது வழக்கம். அதன் மூலம் அவர்களின் குணத்தை ஆராய முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகத்தன்மையை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். தமிழ் திரைப்பட பாடல்களை மட்டும் கண்டால் கூட மெல்லிய இசையா, குத்துப்பாடல்களா, இளையராஜா இசையில் இருக்கும் கிராமத்து பாடல்களா, வெளிநாட்டு இசையெனில் ராக், ஜாஸ் என எந்த வகையறா அல்லது எமினெம், ஏகான், இயாஸ் போன்ற கர்த்தாக்களைக் கொண்டு அவரவர்களின் ரசனையை எளிதில் தரம் பிரித்துவிடலாம். எல்லோரும் ஏதோ ஒரு வகையறாவில் ஒன்றிணைந்து லயிக்கும் போது பாரம்பரியமாக இருக்கும் சாஸ்திரிய சங்கீதம் ஏன் சிறுபான்மையினருக்கான பகுதியாக மாறியது என்பது என்னவோ புரியாத புதிராக இருக்கிறது. பெரும்பகுதி இளைஞர்களால் சங்கீதத்தை கேட்க முடியவில்லை. அவர்களுக்கு உறக்கத்தையோ அல்லது பொறுமையை சோதிக்கும் விஷயமாகவோ தான் சங்கீதம் என்னும் வகையறா மாறியிருக்கிறது. இது ஏன் என்னும் கேள்வி என்னுள் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தது. இதற்கு வார்த்தைகள் தான் பிரதானமா என்னும் உபகேள்வியும் என்னுள் எழுந்தது. வெறும் இசையை இக்காலத்தியவர்களால் கேட்க முடிவதில்லை. இருந்தும் திரைப்படங்களில் வரும் பிண்ணனி இசை அல்லது நாயகனுக்கென வரும் பிரத்யேக இசையை ரசிக்கிறார்கள். இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது எங்கோ செய்யப்பட்ட பிழையானது வம்சவம்சமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிழையை சரிசெய்ய இயலுமா என்பது என்னவோ மீண்டும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

இசையானது பக்திமார்க்கமாகவே நம் கலாச்சாரத்தினுள் நுழைந்திருக்கிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களை நோக்கினாலும் அவை செய்யுள் அல்லது பாடல்களின் வடிவத்தில் திகழ்கின்றன. மற்றுமொரு பார்வையில் பழங்குடியினங்களின் அல்லது தொன்மை வாய்ந்த நாட்டுப்புற பாடல்களாக இருந்திருக்கின்றன. இவற்றிலிருந்து பக்திக்கு இசை மாறும் போது கடவுளின் வழிப்பாட்டிற்கு பாடல் வடிவம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் என்றாலே அது கடவுளை வழிபடுதல் என்னும் நிலை தமிழகத்தில் நிலவியிருக்கிறது. அப்போது புரந்தரதாஸர் என்றொருவர் இருந்திருக்கிறார். சங்கீதத்தின் வேர்கள் தமிழகத்தில் ஊன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இந்த புரந்தரதாஸர் தான். இசை வழிப்பாட்டிற்கு மட்டுமல்ல அது தனியானதொரு அனுபவம் என்பதை உணர்ந்திருக்கிறார். சில ராகங்களை உருவாக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அவரது காலத்தில் முன்னெடுப்பாக மட்டுமே அவை அமைந்திருக்கின்றன.

அவருக்கு பின்வந்த வேங்கடமகி தாளங்களை நிர்ணயம் செய்ய முயற்சித்திருக்கிறார். 72 வகையான மேள ஓசைகளை அவர் நூலாக்கியிருக்கிறார். இவருடைய இந்த ஆவணம் தான் அவருக்கு பின்வந்தவர்களின் சங்கீத ஞானத்திற்கு முக்கிய தேவையாக அமைந்திருக்கிறது. இந்த இருவருக்கு பின் சின்ன சின்னதான அறிமுகங்களும் கண்டறிதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. இருந்தாலும் இவர்வரையில் சங்கீதம் அறிவார்த்த நிலையில் மட்டுமே நின்றிருக்கிறது. ஞானம் என்னும் மார்க்கத்திற்கும் உன்னதம் என்னும் உணர்ச்சி நிலைக்கும் செல்லவில்லை. இவர்களுக்கு பின் வந்தவர்களான சங்கீத மும்மூர்த்திகள் தான் இந்த ஞான மார்க்கத்திற்கான பிரதான வழிகாட்டிகளாக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தான் சியாமா சாஸ்திரி, தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர்.

மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஜனித்தவர்கள். ஆனாலும் சமகாலத்தவர்களே. இவர்களின் ஆய்வுகளை சரிவர பராமரிக்க இயலவில்லை. கர்ணபரம்பரை கதைகளின் மூலமாகவும் அவரவர்களின் சிஷ்யப்பிள்ளைகளின் வம்சத்தவர்களின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற கதைகள் தான் மூவரின் வரலாற்றையும் சொல்லுகின்றது. இதனை சரிவர ஆவணம் செய்திருக்கின்றனர் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா. மூவரின் வாழ்க்கை வரலாறும் தனித்தனியே கிடைக்கின்றன.

சியாமா சாஸ்திரி – வித்யா சங்கர் – தமிழாக்கம் : நெல்லை எஸ்.வேலாயுதம்
தியாகராஜர் – பி.சாம்பமூர்த்தி
முத்துஸ்வாமி தீட்சிதர் – டி.எல்.வெங்கடராம ஐயர் – தமிழாக்கம் : கே.வி.தியாகராஜன்

இந்திய இசைகள் மதம் சார்பாக பிரிவினையை கொண்டிருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையில் கண்டால் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக சங்கீதம் என இருவகைப்படுகின்றன. சூஃபிகளின் இசையும் பழங்குடியினர்களின் இசையும், நாட்டுப்புற இசையும் தனிப்பட்டவையாகும். அவை இந்த கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடுவோம். இந்த இரண்டும் இருவேறு துருவங்களாகவே இந்தியாவில் திகழ்ந்திருக்கின்றன. ஹிந்துஸ்தானி இசையின் வளர்ச்சிக்கொப்ப தென்னிந்தியாவில் கர்னாடக சங்கீதமும் வளர்ந்திருக்கிறது.

கர்னாடக சங்கீதத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது அதற்கு முன்னிருந்த கடவுள் வழிபாட்டு பாடல்களே ஆகும். இசையே இரண்டு பெரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. ஒன்று ராகம். மற்றொன்று சாஹித்தியம். கடவுளை வழிபடும் பாடல்களில் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேட்போருக்கு இறையின் அருள் கிடைக்க வேண்டுமெனில் நல்வாக்கு சொல்ல வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆக அங்கே இசை என்பது வார்த்தைகளின் துணையாக நின்று கொண்டிருந்தது. வேங்கடமகியின் காலத்திலிருந்து இந்த இரண்டு விஷயங்களின் தன்மைகள் இடம் மாறத்துவங்கின. ராகத்தின் முக்கியத்துவம் மேலேறப்பெற்று பேசப்படும் வார்த்தைகள்(சாஹித்தியம்) குன்ற ஆரம்பித்தன. இந்த நிலையில் வெளியாகும் இசையினை கேட்கும் போது நம்மால் அந்த ராகத்தையே உணர முடிகிறது. இசையினை பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் இழை என்னும் பதத்தை உபயோகப்படுத்துவதை கண்டிருப்பீர்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தம் வார்த்தைகளை பின்தொடராமல் அர்த்தத்தை அறியாமல் உணரமட்டுமே முடியும் ராகத்தை மனம் பின்தொடர்வது. இந்த நிலையை பெருவாரியாக கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அதற்கு பெருந்துணை புரிந்தவர்கள் மும்மூர்த்திகள்.

மூவர்களின் வரலாற்றை பார்க்கும் போதும் அதனூடே நிறைய மாய விஷயங்கள் இருக்கின்றன என்பதை காணமுடிகிறது. அதே போல் மூவருக்குமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. மூவரும் பிறக்கும் முன்னர் அவரவர்களின் தந்தையாரின் கனவுகளில் தெய்வத்தின் வாக்கு தோன்றியிருக்கிறது. மேலும் மூவருக்கும் இறக்க போகும் நாள் தெரிந்திருக்கிறது. இதுமட்டுமின்றி இசைக்காக வாழ்க்கையையே அர்பணிக்கும் திராணி கொண்ட மூவரின் வீட்டிலும் ஏழ்மை குடிகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் யாரிடமும் செல்வத்தை கேட்கவில்லை. அவரவர்களின் இசையின் தன்மையாலும் தெய்வத்தின் அருளாலும் வீட்டில் செல்வமும் உணவும் நிரம்பியிருக்கிறது. இதனை முதலில் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்களின் இசை ஞானத்தை உணரும் போது நிகழ்ந்திருக்கக்கூடுமோ எனவும் அல்லது அவர்களின் ஞானத்தை உணர்த்த இப்படி கூறப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது.

மூவரின் இசையும் தனித்துவம் வாய்ந்தவையாகவும் அவரவர்கள் அதனின் சில நுட்பங்களை எடுத்து அதில் ஐயந்திரிபுற கற்க முனைந்தவர்களாகவும் தெரிகிறது. சியாமா சாஸ்திரி தாளத்திலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். தாளம் எனில் வார்த்தைகளும் எழுத்துகளும் எத்தனை அமைப்பெற வேண்டும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும் என முடிவெடுப்பது. இதில் பல கடினமான ராகங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சில கணிதவியல் முறைமையில் அமைத்திருக்கிறார். பலருடனான போட்டிகளில் கடினமான ராகங்களில் பாடியே வென்றிருக்கிறார் சியாமா சாஸ்திரி. இந்த தாள அமைப்புகளில் அவரின் சிஷ்யர்களில் சிலரால் மட்டுமே பாட முடிந்தது எனவும் கூறப்படுகிறது.

அடுத்ததான தியாகராஜரோ ராகத்திலேயே முழுக்கவனமும் கொண்டிருந்தார். இவருக்கு துளசிதாஸரின் ராமகாதை பிடித்துப் போனது. அதனால் அதனுள் இருக்கும் இடைவெளிகளை தன் பாடல் கொண்டு நிரப்பியிருக்கிறார். பல கதைகளையும் தன் இசையினில் இட்டு நிரப்பி தன் மனதுள் முழுமையான ராமாயணத்தை மக்களிடம் சேர்ப்பிக்க முனைந்திருக்கிறார்.

அடுத்தவரான முத்துஸ்வாமி தீட்சிதரோ சற்று சுவாரஸ்யமான ஆள். அவருடைய காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் இசையை தமிழகத்தில் பரப்ப முனைந்திருக்கிறார்கள். அப்போது பிரபல சங்கீத வித்வானாக இருந்தவர் தீட்சிதர் தான். அதனால் அவரிடமே சென்று தங்களின் இசை மெட்டுகளுக்கு வேறு வார்த்தைகளை இட்டு மக்களிடம் சேர்ப்பிக்க கேட்டிருக்கின்றனர். அவரும் அதை செய்திருக்கிறார். இதன் விளைவு என்ன எனில் புதிய ராகங்களை அவர் உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த ஆய்வாளர்கள் அவரின் ராகங்கள் இந்துஸ்தானி இசையுடன் ஒன்றுகிறதே என கேள்விகளை எழுப்பியிருகின்றனர். ஆனால் அவர்களைப் போலவே இருக்கும் பிற ஆய்வாளர்கள் இந்துஸ்தானி இசையுடன் வேறுபடும் நுண்ணிய அம்சங்களை எடுத்துக்கூறி கர்னாடக சங்கீதத்தின் தனித்துவத்தையும் அதில் தீட்சிதரின் பங்கையும் விளக்கியிருக்கின்றனர். சியாமா சாஸ்திரி தேவியையும், தியாகராஜர் ராமரையும் வழிபட்டது போல தீட்சிதர் யாரையும் பின்தொடரவில்லை. மாறாக அத்வைதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். எல்லாம் பரம்பொருளே என்பதில் கவனமாக இருந்து மையத்தை நோக்கிய இசையையே அவர் வழங்கியிருக்கிறார்.

இசை கலையின் ஓர் வடிவமே. அந்த வடிவத்திற்கு பயணங்களும் அனுபவங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இம்மூவரிடமிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மூவரின் வரலாற்றையும் தொகுக்க அவரவர்களின் கீர்த்தனங்களே முக்கியமாக உதவியிருக்கின்றன. அதனூடே அவர்கள் கூறியிருக்கும் வாழ்க்கை அனுபவங்களும் மேற்கொண்ட பயணங்களும் தான் ஆவணங்களாகவும் மாறியிருக்கின்றன. தியாகராஜரின் வறுமையும் தீட்சிதரின் பயணமும் சியாமாவின் அறிதலுமே இசைக்கான வித்துகளாக அமைந்திருக்கின்றன.

இவர்களின் கடின உழைப்புகளெல்லாம் அந்த பாடல்களில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் இரண்டு இலக்கணங்கள் மோதுகின்றன. ஒன்று மொழிக்கான இலக்கணம். அந்த கீர்த்தனங்கள் யாவுமே தெலுங்கு அல்லது சமஸ்கிருத மொழிகளில் இயக்கப் பட்டிருக்கின்றன. ஆக அம்மோழிகளில் இருக்கக்கூடிய பெரியளவிலான அறிவும் கவிப்புலமையும் சாஹித்தியத்திற்கு தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் ராகத்திற்கேற்ப மொழியிலக்கணத்தில் சில தளர்ச்சிகள் செய்யப்பட்டன. இதை சில ஆய்வாளர்கள் எதிர்த்தனர். குறிப்பாக சியாமாவின் கீர்த்தனங்களில். அவர் தாளலயத்திற்கு ஏற்ப மொழிக்கான இலக்கணத்தில் நானாவித சமரசங்களை செய்திருக்கிறார். மொத்தமான வடிவில் அவர் செய்திருப்பதோ மாபெரும் மொழி விளையாட்டு!

மேலும் இந்த மூவரும் கர்னாடக சங்கீத வித்துவான்கள் என்னும் கர்வத்தை யாரிடமும் காண்பித்ததில்லை. ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் மீது இவர்களுக்கிருந்த மரியாதை வியத்தகு விஷயமாக அக்காலத்தில் அமைந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி கலைஞர்கள் தென் தமிழகத்திற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் அவர்களின் இசையை கேட்டு தங்களை சாமான்யனாக மாற்றுவது இயல்பான விஷயமாக இருந்திருக்கிறது. தமிழில் தி.ஜானகிராமன் இயற்றிய மோகமுள் நாவலிலும் சில கதாபாத்திரத்தில் இந்த தன்மையை காணலாம். இருந்தாலும் வாழ்க்கை வரலாறும் நாவலும் அதனதன் தொனியில் வாசிப்பின் போது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மூன்று நூல்களுமே செறிவான தகவல்களுடன் நல்ல மொழியுடனும் அமைந்திருக்கிறது. தியாகராஜரின் நூலில் மட்டும் பத்து பக்கங்கள் அவரின் வழிபடுதலாக அமைந்திருக்கிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் நூல் சங்கீதம் சார்ந்த பல நுண்ணியமான பொருள் விளக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இம்மூவரின் வாழ்க்கை வரலாறுகளும் சரிவர ஆவணமாக இல்லாமல் இருப்பதால் நிச்சயமாக பல தகவல்களை ஆசிரியர்களால் சொல்ல இயலவில்லை. அதை தர்க்கமாகவும் பயணமாகவும் மாற்றி இயற்றியிருப்பது வாசிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் தொய்வின்றியும் இருக்கிறது.

மூன்று நூல்களையும் வாசித்து முடிக்கும் போது காரணமற்று ஏமாற்றப்பட்டதன் உணர்வே மேலோங்கியது. அதிகாரத்திற்கும் பசிக்கும் சுற்றத்தாருக்கும் இணங்காமல் இசைக்காகவும் அதனூடே கண்டுகொண்ட உன்னதத்திற்காகவும் வாழ்ந்த மக்களை நம்மால் வரும் தலைமுறையினருக்கு எளிதில் அடையாளம் காட்ட முடியவில்லை. திருவாரூர், திருவொற்றியூர், காஞ்சீபுரம், திருத்தணி என கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள இடங்களில் இவர்கள் செய்த அற்புதங்கள் எல்லாம் காற்றுடன் கரைந்து காணாமல் போயிருக்கின்றன. சுவர்கள் முழுக்க கருத்தடை சார்ந்த விழிப்புணர்வு செய்வதற்கு பதில் அவ்வூரின் வரலாற்றுகளை ஓவியமாக வரையலாம். கருத்தடை சார்ந்த விழிப்புணர்வுகள் பெருந்தீனிக்காரனின் பொழுதுபோக்கு சித்திரங்கள். அதை குறைகூறவில்லை. இருந்தாலும் பள்ளிகளில் கூட முழுமையாக கூறப்படாத வரலாறுகளை கண்டுகொள்ளாமலே இருந்தால் வரலாறு என்பதே மீமாயப் புனைகதையாகிவிடும். மொசார்ட், பாக், பீத்தோவன் முதல் எமினெம் வரை அவரவர்களின் நாடுகளில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் இங்கே இசையையே வாழ்வாக வாழ்ந்தவர்களை மறந்து சயனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த சங்கீதத்தின் இழைகளைக் கண்டு அஞ்சுகிறீர்களோ அதுவே விஞ்ஞான ரிதியான இசை என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் மீண்டும் சாஹித்தியங்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருகிறோமோ என்பதையே இந்த பெருவாரியான மறத்தல் எனக்குள் நினைவூட்டுகிறது. சங்கீதத்தை கேட்கவில்லையெனினும் பரவாயில்லை வாங்கியோ பதிவிறக்கம் செய்தோ வைத்துக் கொள்ளுங்கள். நாளை அவையும் காணாமல் போகலாம் அதுவும் நாம் அறிவதற்குள்ளேயே!

••••

 

Comments are closed.