மாக்பெத் அங்கம்-4 மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

[ A+ ] /[ A- ]

images

காட்சி-1

இடம் : காட்டில் ஒரு குகை .

( ஒரு கொப்பரையில் திரவம் ஒன்று கொதித்துக் கொண்டிருக்கிறது. இடி, மின்னல் முழங்க மூன்று சூனியக்காரிகள் நுழைகின்றனர்.

முதல் சூனியக்காரி : அந்தப் பழுப்பு மஞ்சள் நிறப் பூனை மூன்று முறை கத்தியது.

இரண்டாம் சூனியக்காரி :மூன்று முறை . அந்த முள்ளம்பன்றி ஒருமுறை அலறியது.

மூன்றாம் சூன்யக்காரி : என் ஆவி நண்பன் ஹார்பியர் ‘இது நேரம் இது நேரம்’ என்று ஊளையிட்டது.

முதல் சூனியக்காரி : கொப்பரையைச் சுற்றி வந்து நாம் பாடுவோம்.

கொடுமையான நஞ்செடுத்து நாம் ஊற்றுவோம்.

( ஒரு பெரிய தவளையைக் கைகளில் தூக்கி )

முப்பதுநாளாய்த் தின்று கொழுத்த தவளையிது

கொப்பரை நீரை விடமாய் மாற்றும் நேரமிது.

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

இரண்டாவது சூனியக்காரி ( நீளமான ஏதோ ஒன்றை உயர்த்திப் பிடித்து ) அடுத்ததாகப் பாரு. ஓர் அருமையான பாம்பு. கொப்பரையில் பாய்ந்து நீ மேலும் விஷமாய் மாறு. உடும்பின் கண்ணெடுத்து போடு; உடன் தவளையின் நாவறுத்துப் போடு; வௌவாலின் சிறகில் கொஞ்சம்; நாயின் நாக்கில் கொஞ்சம்; மரவட்டைக் கால்களில் கொஞ்சம்; பல்லியின் கால்களில் கொஞ்சம்; ஆந்தையின் சிறகில் கொஞ்சம் ( மசாலா பொருட்களைப் போட்டபடி) நன்றாய்க் கொதிக்கும் நஞ்சினைச் சுவையாய் மாற்றுங்கள் பருகவே .

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

மூன்றாவது சூனியக்காரி : நஞ்சை மேலும் நஞ்சாக்க இன்னும் கொஞ்சம் இருக்கிறது. கொஞ்சம் டிராகனின் மேல்தோல்; ஓநாயின் பற்களில் கொஞ்சம்; சூனியக்காரியின் உலர்ந்த சதையில் கொஞ்சம்; சுறாமீனின் இரப்பையில் கொஞ்சம்; இரவில் பதியன் போடப்பட்ட கள்ளிச்செடியின் வேர்களில் கொஞ்சம்; ஒரு யூதனின் கணையம்; ஓர் ஆட்டின் கணையம்; ஒரு வான்கோழியின் மூக்கு; ஒரு தார்த்தாரியின் பற்கள்; ஊசியிலை மரத்தின் ஒடிந்த கிளைகள்; பரத்தை சாக்காடையில் வீசிய சிசுவின் விரல் ஒன்று;( மசாலா பொருட்களை கலந்தபடி) குழம்பே மேலும் இறுகு; மேலும் மயமாக மாறு. இதோ இன்னும் கொஞ்சம் புலியின் குடலைச் சேர்ப்போம்.

மூவரும் : கங்கு கங்கு கங்கு பற்றியெரியும் கங்கு.

தீங்கு போல எங்கும் பொங்கிப் பரவும் கங்கு.

இரண்டாவது சூனியக்காரி : இதனை ஒரு மனிதக்குரங்கின் இரத்தம் ஊற்றி குளிர்விப்போம். அதன் பிறகு இந்த விஷக்குழம்பு முற்றிலும் விஷமாகி விடும்.

(சூனியக்காரிகளின் தலைவி ஹெக்கேட் உள்ளே நுழைகிறாள் )

ஹெக்கேட்: மிக்க நன்று ! உங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். உங்கள் உழைப்பிற்குத் தக்க சன்மானம் வழங்கப்போகிறேன்; வாருங்கள் கொப்பரையைச் சுற்றிப் பாடுங்கள்; குட்டிப் பிசாசுகள், தேவதைகள் போலக் களிப்புடன் நடனமாடுங்கள். நீங்கள் கலந்த விஷப்பொருட்களை மேலும் விஷமாக்க மந்திர உச்சாடானம் செய்யுங்கள்.

( இசைக்கருவிகள் முழங்க அவர்கள் ‘கறுத்த ஆவிகள்’ என்ற பேய்ப்பாடலைப் பாடுகின்றனர். பிறகு ஹெக்கேட் மறைகிறாள் . )

இரண்டாவது சூனியக்காரி : என் கட்டை விரல்கள் துடிக்கின்றன. ஏதோ கொடிய செயல் நடக்கப் போகிறது. தட்டபட்டவுடன் கதவுகளே திறந்து கொள்ளுங்கள். ( கதவு தட்டப்படுகிறது. மாக்பெத் உள்ளே நுழைகிறான். )

மாக்பெத் : இரவினில் அலையும் கெட்ட எண்ணம் கொண்ட சூனியக்காரிகளே, இந்த இரவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? இது என்ன?

மூவரும் : நாங்கள் செய்யும் செயலை வெளியில் சொல்ல முடியாது.

மாக்பெத் : உங்கள் செய்கை உங்களுக்கு விளங்காமல் போகலாம் பரவாயில்லை ,என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். உங்கள் பில்லி சூனியத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். சூறாவளியை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து தேவாலயங்களின் மேல் ஏவினாலும் சரி கடலைப் பொங்கியெழச் செய்து கப்பலையும் அதன் பயணிகளையும் விழுங்கினாலும் சரி, மரங்களையும், செடிகொடிகளையும் வேருடன் பிடுங்கி எறிந்தாலும் சரி , கோட்டைகளைத் தரைமட்டமாகி அதனுள் வசிப்பவர்கள் தலையில் விழ வைத்தாலும் சரி, அரண்மனைகளையும், பிரமிடுகளையும் தரைமட்டமாக்கினாலும் சரி, இயற்கை படைப்புகள் அத்தனையும் அழித்தாலும் சரி சொல்லுங்கள் நான் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்று சொல்லுங்கள்.

முதல் சூனியக்காரி : கேள்

இரண்டாவது சூனியக்காரி : உரிமை கோரு

மூன்றாவது சூனியக்காரி :கண்டிப்பாக விடை கூறுகிறோம்.

முதல் சூனியக்காரி : இதனை எங்கள் வாயிலிருந்து எதிர்பார்க்கிறாயா/? அல்லது எங்களுக்கெல்லாம் தலைவி ஒருத்தி இருக்கிறாள் அவள் விடை கூறட்டுமா ?

மாக்பெத் : கூப்பிடுங்கள் அவளை.

முதல் சூனியக்காரி : தன் குட்டிகள் ஒன்பதைத் தின்ற பன்றியின் குருதியை ஊற்றுங்கள். தூக்குமரத்தில் தொங்கிய பிணத்தின் வேர்வையை வழித்து நெருப்பில் ஊற்றுங்கள்.

மூவரும் : திறமையுள்ளவையோ, சற்றுக் குறைந்தவையோ எதுவாக இருப்பினும் ஆவிகளே உங்கள் பரிவாரங்களுடன் வந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று காட்டுங்கள்.

( இடி முழங்க முதல் மாயத் தோற்றம் தோன்றுகிறது )

மாக்பெத்: விளங்கிக் கொள்ள முடியாத தோற்றமே சொல்…

முதல் சூனியக்காரி : இது உன் எண்ணத்தைப் படிக்கும் வல்லமை கொண்டது. நீ பேசாதே அது சொல்லும்.

முதல் மாயத்தோற்றம் : மாக்பெத்.மாக்பெத்.மாக்பெத்’. மாக்டப் மீது கவனம். ஃபைஃபை மன்னனிடம் சற்று எச்சரிக்கையுடன் இரு. போதும். நான் செல்கிறேன் ( முதல் மாயத்தோற்றம் மறைகிறது .)

மாக்பெத் : நீ யாராக இருப்பினும் நன்றி. நீ சொன்னதுதான் எனக்குள்ளும் ஓடுகிறது. ஆனால் மேலும் ஒரே ஒரு வார்த்தை.

முதல் சூனியக்காரி : உன் ஆணைக்கு அது கட்டுப்படாது. இதோ அடுத்த ஒன்று. முதலாவதாக வந்த அருவத்தை விட இது சக்தி வாய்ந்தது.

( இரண்டாவது மாயத்தோற்றம் ஒரு இரத்தம்வடியும் குழந்தையின் தோற்றத்துடன் தோன்றுகிறது. இடி முழக்கம். )

இரண்டாவது மாயத்தோற்றம் : மாக்பெத்,மாக்பெத், மாக்பெத்.

மாக்பெத் : எனக்கு மூன்று காதுகள் இருந்தால் முழுவதும் கேட்பேன்.

இரண்டாவது மாயத்தோற்றம் : இரத்தவெறியுடன் இரு; துணிவுடன் இரு; உறுதியுடன் இரு. உன் எதிரியின் பலத்தை எள்ளிநகையாடு. மாக்பெத்தை அழிப்பதற்கு இன்னொரு மனிதப்பிறவி இன்னும் பிறக்கவில்லை.( இரண்டாவது மாயத்தோற்றம் மறைகிறது. )

மாக்பெத் :பிழைத்து போ மாக்டப் . உன்னிடம் எனக்கு இனி ஏது அச்சம்? இருப்பினும் இரட்டிப்பு முன்னெச்சரிக்கை வேண்டும். என் விதிக்கு உத்திரவாதம் தேவை. எனவே நீ மடிவது உறுதி. உன் மரணம் என் மனதின் அச்சங்களை அழித்து எனக்கு அமைதியான உறக்கத்தை அளிக்கும்.

( மூன்றாவது இடி முழக்கம். இந்தமுறை மாயத்தோற்றம் மகுடம் தாங்கி, கைகளில் மரக்கிளை பிடித்தபடி வரும் ஒரு சிறுவனின் உருவில் தோன்றுகிறது.)

இது என்ன ஓர் அரச வாரிசு எழுவதைப் போன்ற தோற்றம் ? இதன் சின்னஞ்சிறு தலையில் மகுடம் தாங்கித் தோன்றுகிறதே இதன் பொருள் என்ன?

மூவரும்: பேசாதே கேள்.

மூன்றாவது மாயத்தோற்றம் : சிங்கத்தைப் போலத் துணிவுடன் உலாவு . அகந்தை கொள்.. உன்னை வெறுப்பவர்களையும், கடுஞ்சினம் கொள்பவர்களையும், உனக்கு எதிராகச் சதிசெய்பவர்களையும் நீ கவலைப்படத் தேவையில்லை. அடர்ந்த பிர்னாம் காடுகளும், உயர்ந்த டன்சினேன் மலையும் உன்னை நோக்கி நகர்ந்து வரும்வரையில், மாக்பெத் நீ அச்சப்படத் தேவையில்லை.( மூன்றாவது மாயத் தோற்றம் மறைகிறது. )

மாக்பெத் : நிச்சயமாக அது நிகழப்போவதில்லை. காட்டுமரங்களின் வேர்களுக்கு நகர்ந்து செல்லும் ஆற்றலை அளிக்கவல்லவர்கள் யார் இருக்கிறார்கள்? ஒ இனிய சகுனங்களே ! நல்லது. கொடும் சாவே பிர்னாம்காடு வேருடன் நகர்ந்து என்னை நோக்கி வரும்வரையில் நீ என்னை நெருங்க முடியாது. இருப்பினும் ஒரே ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள என் நெஞ்சம் அடித்துக் கொள்கிறது. என் அச்சத்தை அறியும் ஆற்றல் உள்ள கெட்ட ஆவிகளே சொல்லுங்கள் பாங்கோவின் புதல்வர்கள் அரசாள முடியுமா?

மூவரும் : இனி எதுவும் அறிய முயற்சிக்காதே .

மாக்பெத் : இதை அறிந்துகொண்டால் என் மனம் சமாதானமடையும். இதை மறுத்தால் நீங்கள் சபிக்கப்படுவீர்கள். ஏன் இந்தக் கொப்பரை மூழ்குகின்றது? இது என்ன சப்தம் ?

( இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் ஷெனாய் இசை கேட்கிறது.)

முதல் சூனியக்காரி : காட்டு.

இரண்டாவது சூனியக்காரி : காட்டு.

மூன்றாவது சூனியக்காரி : காட்டு.

மூவரும் : கண்களைக் காணச் செய்; நெஞ்சத்தைப் புழுங்கச் செய். நிழல் போல் தோன்றி நிழல் போல் மறையுங்கள்.

(எட்டு அரசர்களின் மாயத்தோற்றம். கடைசி அரசனின் கைகளில் ஒரு கண்ணாடி. இவர்களை பாங்கோ முன்நாடத்திச் செல்கிறான். )

மாக்பெத் : நீ பாங்கோவின் ஆவியைப் போலத் தோன்றுகிறாய். ஓடிப் போ.(முதல் அரசத் தோற்றத்திடம் ) உன் காட்சி என்கண்களை உறுத்துகிறது போ.(இரண்டாவது ஆவியைப் பார்த்து) உன் பொன்னிற முடிக்கற்றை ஒரு மகுடம் போல தோன்றுகிறது. நீ முதல் அரசனின் தோற்றம் போலவே இருக்கிறாய். அதைப்போலவே மூன்றாவது தோற்றமும். நாசமாய்ப் போகும் தோற்றங்கள். இவை எதற்காக எனக்குக் காட்டப்படுகின்றன? ஒ என் விழி விரிந்து கண்ணின்மணி வெளியில் விழுந்துவிடும் போலிருக்கிறது. இது என்ன மேலும் ஒரு மன்னனின் தோற்றம்? இன்னொன்று. இதோ ஏழாவது. இனி நான் பார்க்கமாட்டேன். இதோ எட்டாவது . கையில் ஒரு கண்ணாடி வேறு. அந்தக் கண்ணாடிக்குள் தெரிவது என்ன ? மேலும் மன்னர்கள். அனைவரும் இருமடங்கு பந்துக்களையும், மும்மடங்குச் செங்கோல்களையும் சுமந்து செல்கின்றனரே .என்ன கொடுமையான தோற்றம். இது நிஜத் தோற்றம்தான். அதோ இரத்தம் படிந்த முடியுடன் பாங்கோ என்னைப் பார்த்து அவை அத்தனையும் தன்னுடையது என்பது போலப் புன்னகைக்கிறானே. இவை நிஜமா?

( மன்னர்கள் மற்றும் பாங்கோவின் மாயத் தோற்றங்கள் மறைகின்றன)

முதல் சூனியக்காரி : ஆம் நீங்கள் கண்டது நிஜம்தான். ஆனால் மாக்பெத் ஏன் வாயடைத்துப் போய் நிற்கிறான்? வாருங்கள் சகோதரிகளே அவருக்கு உற்சாகமூட்டுவோம். நமது திறமைகளைக் காட்டுவோம். நான் காற்றில் வினோதமான இசையொலி எழுப்புகிறேன். நீங்கள் அந்த இசைக்கு ஆனந்தத் தாண்டவம் புரியுங்கள். நாம் நம் கடமையைப் புரிந்ததற்கு மன்னன் மகிழ்ச்சியடையட்டும்.

(இசை முழங்க அவர்கள் நடனமாடிப் பின் மறைகின்றனர். .

மாக்பெத் : அவர்கள் எங்கே ? மறைந்து விட்டார்களா ? இந்தப் பொல்லாத நேரம் நாட்காட்டியில் சபிக்கப்பட்ட நேரமாகக் குறித்துவைக்கப்படட்டும். (குகையின் வெளிவாசலைப் பார்த்து) நீங்கள் உள்ளே வரலாம்.

(லெனாக்ஸ் உள்ளே நுழைகிறான். )

லெனாக்ஸ்: மன்னா தங்கள் சித்தம் என்னவோ ?

மாக்பெத் : அந்தச் சூனியக்காரிகளைப் பார்த்தீர்களா?

லெனாக்ஸ் ; இல்லை மகராஜா.

மாக்பெத் : அவர்கள் உன்னைக் கடந்து சென்றனரா?

லெனாக்ஸ் : இல்லை மன்னா.

மாக்பெத் : காற்றை நச்சுபடுத்தும் விஷமிகள் அவர்கள். அவளைப்போன்ற சூனியக்காரிகளை நம்புவர்களைச் சிறையில் அடையுங்கள். குதிரையின் கனைப்பொலி கேட்கிறதே. யார் வந்திருப்பது ?

லெனாக்ஸ் : ஓரிரு அரண்மனைச் சேவகர்கள் . மாக்டப் இங்கிலாந்திற்குத் தப்பியோடியச் செய்தியுடன் வந்திருக்கின்றனர்.

மாக்பெத் : என்னது இங்கிலாந்திற்குத் தப்பி ஓடி விட்டானா?

லெனாக்ஸ் : ஆம் என் வணக்கத்துக்குரிய மன்னா.

மாக்பெத் : காலமே என்னுடைய அருஞ்செயலின் தீரத்தைச் சோதித்துப் பார்க்கிறாயா? நினைத்த உடன் நிறைவேற்றப்படாத செயல் பயனற்றது. இன்று முதல் என் இதயத்தின் துடிப்பு என் கரங்களின் துடிப்பாகும். என் செய்கை என் எண்ணத்தின் பிரதிபலிப்பு. மாக்டப்பின் கோட்டைக்கு தீ மூட்டுங்கள்.அவன் மனைவி மக்களை வாளுக்கு இரையாக்குங்கள். அவனைப் பின்பற்றுபவர்களைக் கொன்றுவிடுங்கள்.இனிமேல் முட்டாள் பேச்சுகளுக்கு இடமில்லை..எந்த நோக்கத்திற்காக இந்தச் செயல் புரியப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படும். இனி தவறான கண்ணோட்டத்திற்கு இடமில்லை. எங்கே மற்ற கனவான்கள்? அவர்களை அழைத்து வாருங்கள். (அனைவரும் மறைகின்றனர். )

திரை.

காட்சி-2.

(ஃபைஃபை நகரில் மாக்டப்பின் கோட்டை.. திருமதி மாக்டப், அவள் புதல்வன் மற்றும் ராஸ் வருகின்றனர்.).

திருமதி மாக்டப்? அப்படி என்ன செய்தார் இந்த நாட்டை விட்டு ஓடும்படியாக?

ராஸ்: அமைதி. சீமாட்டி சற்றுப் பொறுமையுடன் இருங்கள்.

திருமதி.மாக்டப் : அவருக்குதான் பொறுமையில்லை. பைத்தியக்காரத்தனமாக நாட்டைவிட்டு ஓடிவிட்டார். நமது எண்ணங்கள் துணிவுடன் இருப்பினும் நமது செய்கையில் பயம் இருந்தால் நாம் நம்பிக்கைத் துரோகிகள் என்றே அழைக்கப்படுவோம்.

ராஸ்: விவேகமா அச்சமா எது அவரைத் துரத்தியது என்பது தெரியாது சீமாட்டி.

திருமதி.மாக்டப் : விவேகம். மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு ஓடுவதற்கு ஒரு விவேகம். அவர் எங்களை நேசிக்கவில்லை. மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இயற்கை உந்துதல் அவரிடம் இல்லை. சின்னஞ்சிறு குருவி கூடத் தன் குஞ்சுகளைக் காப்பாற்றக் கழுகுடன் சண்டையிடும். அச்சம் நிறைந்தவர்; காதலற்றவர். ஓடிப்போனது பகுத்தறிவற்ற செயல் . இதில் எங்கே இருக்கிறது விவேகம் ?

ராஸ் : என் நேசத்திற்குரிய சகோதரி. சற்று கண்ணியம் காக்க மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கணவர் தீரர்; விவேகி; நீதி தவறாதவர். காலத்தின் தேவையை உணர்ந்தவர். இனிமேல் என்னால் வாய்விட்டு எதையும் பேசமுடியாது. நம்மைப் பற்றிப் பிறருக்குத் தெரியாதபோது மற்றவர் முன்னால் நாம் துரோகிகளாகச் சித்திரிக்கப்படுவது காலத்தின் கோலமன்றி வேறு என்ன? இது போன்ற நேரங்களில் வதந்திகளுக்கு அஞ்சும் நமக்கு அச்சத்தின் காரணம் கூடத் தெரியாமல் போய்விடுகிறது. கடல் அலைகளில் அலைந்து அலைந்து கரைசேராமல் போவதைப் போல்தான் இதுவும். நான் உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறேன். காத்திருங்கள் வெகுநேரம் ஆக்காமல் உடனே வந்துவிடுகிறேன். துன்ப நிலை மாறும். மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். என் இனிய ஒன்றுவிட்ட சகோதரி. என் ஆசீர்வாதம் என்றும் உனக்கு உண்டு.

திருமதி.மாக்டப் : தந்தையிருந்தும் என் மகன் அனாதை.

ராஸ்: நான் கிளம்புகிறேன் அம்மா. இங்கிருந்தால் கழிவிரக்கத்தில் நான் கண்ணீர் சிந்த நேரிடும். (ராஸ் செல்கிறார்.).

திருமதி மாக்டப் : சீரா ! உன் தந்தை இறந்துவிட்டார். நீ இப்போது என்ன செய்வாய் மகனே? எப்படி இந்த உலகில் வாழ்வாய்?

மகன் : பறவைகளைப் போல வாழ்வேன் அம்மா.

திருமதி. மாக்டப் : புழுக்களையும், பூச்சிகளையும் இரையாகக் கொண்டா?

மகன் : பறவைகள் கிடைத்தவற்றை உண்டு வாழ்வதுபோல நானும் கிடைத்தவற்றை உண்டு வாழ்வேன்.

திருமதி.மாக்டப் : நீ ஒரு வறிய பறவை. வேடர்கள் விரிக்கும் வலையைப் பற்றி அறியாத பறவை.

மகன்: நான் எதற்கு அச்சப்படவேண்டும் அம்மா? பலவீனமான பறவைகளுக்கு வேடர்கள் வலைவிரிக்க மாட்டார்கள். நீங்கள் நினைப்பது போல தந்தை இறந்திருக்க மாட்டார். உயிருடன்தான் இருப்பார்.

திருமதி.மாக்டப்: இல்லை உன் தந்தை இறந்துவிட்டார். இனி நீ தந்தைக்கு எங்கு செல்வாய் மகனே ?

மகன் : அதே கேள்வியை நீ கேட்டுப் பார் தாயே. உன் கணவருக்கு நீ எங்கு போவாய்?

திருமதி. மாக்டப் : சந்தையில் எனக்கு இருபது கணவன்மார்கள் கிடைப்பார்கள்.

மகன் :அப்படி என்றால் சந்தையில் கணவர்களைப் பெறுவது மீண்டும் விற்பதற்கா அம்மா?

திருமதி.மாக்டப் : சிறுபிள்ளைத்தனமான பேச்சில் கூட உன்னுடைய புத்திசாலித்தனம் தெரிகிறது.

மகன் :என் தந்தை ஒரு தேசத் துரோகியா அம்மா?

திருமதி.மாக்டப்: ஆமாம் துரோகிதான்.

மகன் : துரோகி என்றால் என்ன அர்த்தம் அம்மா?

திருமதி.மாக்டப் : ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாகும்போது அவர் துரோகி என்றழைக்கப்படுகிறார்.

மகன் ; பொய்யான வாக்களிக்கும் அனைவரும் துரோகிகள்தானா?

திருமதி.மாக்டப் : வாக்குத் தவறுபவர்கள் அனைவரும் துரோகிகள்தாம். அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும்.

மகன் : இதுபோலச் சத்தியம் செய்பவர்களும் அந்தச் சத்தியத்தை மீறுபவர்கள் அனைவரும் தூக்கில் இடப்பட வேண்டியவர்களா?

திருமதி.மாக்டப்: ஒவ்வொருவரும்.

மகன் : யார் அவர்களைத் தூக்கில் இடுவார்கள்?

திருமதி.மாக்டப் : ஏன் ? நேர்மையானவர்கள்.

மகன் : அப்படி என்றால் துரோகிகள் முட்டாள்கள். வாக்குத் தவறுபவர்கள் அதிகம் உள்ள இந்த பூமியில் நேர்மையானவர்களை அடித்துத் துரத்த இயலாத துரோகிகள் முட்டாள்களில்லாமல் வேறு என்னவாம் ?

திருமதி. மாக்டப் : (சிரித்து ) கடவுளே இந்த முட்டாள் கழுதையை நீதான் காப்பாற்றவேண்டும் ( மீண்டும் சோகத்தில் ஆழ்ந்து ) தந்தையில்லாமல் என்ன செய்வாய் ?

மகன் : என் தந்தையின் மறைவிற்கு நீ அழவேண்டும். நீ அழவில்லை. எனவே எனக்கு இன்னொரு தந்தை கிடைப்பார்.

திருமதி. மாக்டப்: திருட்டுப்பயலே பேச்சைப் பாரு பேச்சை.

( தூதுவன் ஒருவன் வருகிறான். )

தூதுவன் : வணக்கம் அம்மணி. உங்களுக்கு நான் யாரென்று தெரியாது. உங்கள் நிலையும் அந்தஸ்தும், செல்வாக்கும் நானறிவேன். உங்களுக்குப் பேராபத்து நெருங்குகிறது என்று எண்ணுகிறேன். இந்த எளியவனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தால் துன்பம் நேரும் முன் இந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள்.உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள். உங்களை இந்த அளவிற்கு அச்சப்படுத்த கூடாதுதான். ஆனால் உங்களுக்கு வரும் இடரைப் பார்த்து எதுவும் செய்யமுடியாமல் வருத்தப்படுவதற்கு இது மேல். ஆபத்து நெருங்குகிறது. வானகம் உங்களை ரட்சிக்கட்டும். (தூதுவன் மறைகிறான் )

திருமதி மாக்டப் :எங்கே ஓடுவது ? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே ? என்ன உலகம் இது ? துரோகம் செய்தால் வாழ்த்துகிறார்கள். நல்லது செய்தால் துரத்துகிறார்கள். பிறகு நான் பெண்களைப்போல நான் குற்றமற்றவள் என்று கெஞ்ச வேண்டும் ?( கொலைகாரகள் நுழைகின்றனர்) யார் இவர்கள்?

முதல் கொலைகாரன்: உன் கணவன் எங்கே ?

திருமதி மாக்டப் : உன் போன்ற புல்லர்களின் கண்களுக்கு அவர் தென்படமாட்டார்.

முதல் கொலைகாரன் : அவன் ஒரு தேசத் துரோகி.

மகன் : நீ பொய் சொல்லாதே வீணனே!

முதல் கொலைகாரன் : ( கத்தியால் அவனைக் குத்துகிறான் ) பொடிப்பயலே ! நம்பிக்கைத்துரோகியின் கொழுந்துதானே நீ?

மகன் : அம்மா அவன் என்னைக் கொன்றுவிட்டான். ஓடு நீ தப்பிப் பிழைத்துகொள். ஓடும்மா ஓடு.

திருமதிமாக்டப் : ஐயோ கொலை கொலை ( அலறியபடி அவள் ஓடுகிறாள். கொலைகாரகள் துரத்துகிறார்கள். மகன் இறந்து விழுகிறான். )

திரை.

காட்சி-3.

இடம் : இங்கிலாந்தின் அரச சபை

(மால்கமும் மாக்டப்பும் நுழைகின்றனர் ).

மால்கம் : ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து நமது இதயத்தில் உள்ள குமுறல்களைக் கொட்டித் தீர்ப்போம்

மாக்டப் : கோழைகளைப் போலக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை விட்டு வீரர்களைப் போலத் தாய்நாட்டைக் காக்க நமது போர்வாள்களை உயர்த்திப் பிடிப்போம். ஒவ்வொரு நாளும் புதிய விதவைகளின் கதறல்ளுடனும், புதிய அனாதைகளின் அழுகுரலுடனும்தான் விடிகிறது. புதிய துக்கத்தின் ஓலம் சொர்கத்தின் கதவை அறைகிறது. சுவர்க்கம் முழுவதும் ஸ்காட்லாந்தின் வேதனைக்காக வழியில் அலறுவது போலத் தோன்றுகிறது.

மால்கம் : எனக்குத் தவறு என்று படுபவற்றை நான் தட்டிக் கேட்காமல் இருக்கமாட்டேன். எனக்குச் சரி எனப்படுபவற்றை நான் நம்புவேன். நேரம் வரும்போது அனைத்தையும் சரியாக்குவேன். நீ கூறியது சரியாக இருக்கலாம். இந்தக் கொடுங்கோலனின் பெயரும் கூட உச்சரிக்கக் கொடூரமாக உள்ளது. ஒருகாலத்தில் இவன்தான் நேர்மையானவன். நீயும் அவன் மீது பற்று வைத்திருந்தாய். இன்னும் அவன் மூலம் உனக்குக் கெடுதி எதுவும் நேரவில்லை. எனக்கு அனுபவமில்லை. உன்னை என்னுடைய தேவைகளுக்காக அவன் கைகளில் பிடித்துக் கொடுக்க நினைத்தால் அது ஆங்காரம் கொண்ட கடவுளுக்குப் பலி கொடுக்க ஒரு சின்னஞ்சிறு ஆட்டை இழுத்துச் செல்வது போலாகும்.

மாக்டப் : நான் அந்த அளவிற்கு மோசமான நம்பிக்கைத் துரோகி இல்லை.

மால்கம் :ஆனால் மாக்பெத் ஒரு நம்பிக்கை துரோகி. சில நேரங்களில் நல்லவர்களும் நேர்மையானவர்களும் கூட நம்பிக்கை துரோகிகளாவதுண்டு.. ஆனால் நான் சத்தியமாகச் சொல்கிறேன் என் அச்சங்கள் உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாது. விடிவெள்ளி வீழ்வதால் வானம் இருட்டுவதில்லை. தீயவை எல்லாமே நல்லவையாகத் தோன்ற நினைக்கும்போது நல்லவை நல்லவையாகத்தானே தோன்றும் ?

மாக்டப் : எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

மால்கம் : உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை எனக்கும் அதுபோல் உன்மேல் நம்பிக்கை போய்விட்டது. உன் வாழ்வின் ஆதாரமான மனைவி குழந்தைகளை ஏன் அப்படி ஒரு பாதுகாப்பற்ற இடத்தில் விட்டு விட்டு வந்தாய்? நான் உன்னைச் சந்தேகிக்கிறேன் என்று தவறாக எண்ணாதே .நான் உன்னைப் பாதுகாப்பதை நீ நம்ப வேண்டும். நீ நிஜமாகவே நேர்மையுள்ளவனாக இருக்கலாம்.

மாக்டப் :இரத்தம் சிந்து. இரத்தம் சிந்து. பாவப்பட்ட தாயகமே ! இரத்தம் சிந்திக்கொண்டே இரு. கொடுங்கோலனே உன் இருப்பின் அஸ்திவாரத்தை நீயே தனியாக பலப்படுத்திக்கொள். நல்லவர்கள் உன் அருகில் நிற்க அஞ்சுகின்றனர். உன் திருட்டுப்பதவிகளை நீயே அனுபவித்துக்கொள். நல்லது தலைவா. எனக்கு விடைகொடு. மற்றவர்கள் சொல்வதுபோல் நான் உன் எதிரி இல்லை. இந்த மாநிலத்தைக் கொடுத்தாலும், கிழக்கின் செல்வாக்குள்ள சமஸ்தானங்களைக் கொடுத்தாலும் நான் உனக்கு எதிராகச் செயல்படமாட்டேன்.

மால்கம் : வருத்தப்படாதே. நான் உன்னைப் புண்படுத்தும் நோக்குடன் சொல்லவில்லை. நமது நாடு மாக்பெத் என்ற நுகத்தடியின் கீழ் நசுங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புண்ணில் குருதி வழிகிறது; கண்ணீர் பெருகுகிறது; தினம் தினம் புதிய நிணங்கள் தோன்றிய வண்ணம் உள்ளது. என்னுடன் போரிட மேலும் பல கைகள் தயாராக உள்ளன என்று எனக்குத் தெரியும். இங்கிலாந்தும் ஆயிரக்கணக்கில் வீரகளை அளித்து உதவி செய்ய முன்வந்துள்ளது. என் காலில் அவனுடைய தலை நசுங்கும் முன்பு, என்னுடைய வாள் அவன் கழுத்தில் குத்திட்டு நிற்கும் முன்பு, என்னுடைய இனிய தாயகம் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்க நேரிடுமோ தெரியவில்லை. இவனுக்குப் பிறகு எந்த அரசன் வந்தாலும் இவன் அளவிற்கு என் நாடு பாதிப்புகளைச் சந்திக்காது என்று நினைக்கிறேன்.

மாக்டப்: எதைப்பற்றி கூறுகிறீர்கள்?

மால்கம் : நான் என்னைப் பற்றிதான் கூறுகிறேன். என்னிடம் பலகெட்ட குணங்கள் உள்ளன. அவற்றை மக்கள் காண நேரிடும்போது அந்தக் கரியன் மாக்பெத் என்னைவிடத் தூய்மையானவனாகத் தெரிவான்.. பாவப்பட்ட ஸ்காட்லாந்து மக்கள் என் தீய குணங்களைப் பார்த்துவிட்டு மாக்பெத்தை ஓர் அப்பாவி ஆடு என்றுதான் கூறுவார்கள்.

மாக்டப்: நரகத்தில் கூட இவன் போன்ற கொடியவனைப் பார்ப்பது அரிது.

மால்கம் : கொலைகாரன்; ஒழுக்கங்கெட்டவன்; பேராசைக்காரன்;பொய்யன்; கபடதாரி; கொடுங்கோலன்; கெட்டபுத்திக்காரன்; எல்லாப் பாவங்களின் பெயர்களை உடையவன். ஆனால் இவற்றையெல்லாம் விட என்னுடைய காமவெறிக்கு முடிவே இல்லாமல் உள்ளது. நான் ஒரு காமதூரன்.. உங்கள் மனைவியர், பெண்கள்,கிழவிகள், அடிமைப்பெண்கள் மொத்தமாக வந்தாலும் என் காமப்பசி அடங்காது. போகட்டும் என்னை விட மாக்பெத்தே இந்த நாட்டை ஆளட்டும்.

மாக்டப் : முடிவற்ற பேராசையும், காமமும் ஒருவித கொடுங்கோன்மைதான். பெண்ணாசை பல மன்னர்களை வீழ்த்தியிருக்கிறது. இதற்காக உங்கள் மகுடம் பறிபோய்விடும் என்று கவலைப்பட வேண்டாம். சில அந்தரங்க வழிகளில் உங்கள் ஆசைகள் தணிக்கப்பட்டு அரங்கத்தில் நீங்கள் தூயவராகத் தோன்ற வழிகள் உள்ளன. விரும்பிவரும் பெண்கள் ஏராளம் இங்குண்டு. உங்கள் ஆசை தணிந்தாலும் தணியுமே அன்றி, தணிக்க வரும் பெண்களின் எண்ணிக்கை தணியாது.

மால்கம் : தணியாத காமவெறியுடன் அளவில்லாத பொன்னாசை, மண்ணாசை உடையவன் நான். நான் அரசரானால் உயர்ந்தவர்களின் நிலங்களைப் பறித்துக் கொள்வேன்; நல்லவர்களின் நகைகளைக் கொள்ளையடிப்பேன். வீடுகளை ஆக்கிரமிப்பேன். என் பசி அடங்காமல் நீளும். என்னுடைய ஒழுக்கமுள்ள குடிமக்கள் நடுவில் தேவையற்ற பொய்க்கலகங்களைக் கிளப்பிவிட வேண்டும். அவர்கள் சொத்திற்காக அவர்களை அழிக்கவேண்டும்.

மாக்டப் : நீங்கள் குறிப்பிடும் இந்தப் பேராசை முதலில் சொன்ன காமவெறியைவிட மோசமானது. இதன் வேர் ஆழமானது. பேராசை பல மன்னர்களின் மகுடத்திற்குக் குறிவைப்பது. இருப்பினும் நீங்கள் அஞ்சவேண்டாம். ஸ்காத்லாந்தில் போதுமான அளவிற்குச் செல்வவளம் உள்ளது. உங்களது நல்ல பக்கங்களைப் பார்க்கும்போது இந்தப் பக்கங்கள் சகித்துக் கொள்ளக்கூடியவையே .

மால்கம் : ஆனால் என்னிடம் நல்ல பக்கங்கள் இல்லை. ஒரு மன்னனுக்குத் தேவையான நற்குணங்களான நீதி, சத்தியம், பொறுமை, உறுதி,தயாளகுணம், விடாமுயற்சி, கருணை, எளிமை, ஈடுபாடு, பொறுமை, துணிவு , மனோதைரியம் போன்ற எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நானோ தீயகுணங்கள் நிரம்பி வழிபவனாக இருக்கிறேன். வேண்டாம். நான் மன்னனானால் அமைதி என்ற சொல்லை இங்கிருந்து பிடுங்கி நரகத்தில் போட்டுவிடுவேன்.

மாக்டப் : என் இனிய ஸ்காட்லாந்தே ! என் இனிய ஸ்காட்லாந்தே.

மால்கம் ; நான் கூறியதைப் போல ஒருவன் ஆளத்தகுந்தவன் என்றால் சொல் நான் ஆள்கிறேன்.

மாக்டப் : ஆளத் தகுந்தவனா நீங்கள்? வாழ்த்தகுந்தவரே இல்லை. பின் எங்கிருந்து ஆள்வது ? ஒ பாவப்பட்ட தாயகமே ! கொடுங்கோலர்களாலும், பேராசைக்காரர்களாலும் அல்லலுறும் நீ எப்போது ஒரு நல்ல தலைவனைச் சந்திக்கப் போகிறாய்? யாருக்கு ஆளத் தகுதி இருக்கிறதோ அவரே தன் வாயால் தனது தீய குணங்களைப்\ பட்டியலிடுகிறார். உனது தந்தை டங்கன் எவ்வளவு உன்னதமான மன்னர். உன் தாய் தனது பாதங்களில் நின்றதைவிட இறைவன் முன் தொழுதபடி மண்டியிட்டு நின்ற நேரம்தான் அதிகம். அப்படி ஒரு தெய்வ பக்தியுடன் வாழ்ந்தவள். மிக்க வந்தனம் ஐயா. நீங்கள் பட்டியலிட்ட தீய குணங்கள் என்னை இந்த நாட்டை விட்டுத் துரத்துகின்றன. என் இதயமே உன் நம்பிக்கைகள் பொடிப்பொடி ஆகிவிட்டன.

மால்கம் : மாக்டப் உன்னுடைய இந்த நேர்மையான வெளிப்பாடு உன்னை ஒரு உண்மையான தேசபக்தனாகக் காட்டிவிட்டது. உன் மீது எனக்கிருந்த சந்தேகங்கள் அகன்று விட்டன. நீ நேர்மையானவன். நம்பத்தகுந்தவன். கெட்டஎண்ணம் படைத்த மாக்பெத் தன் குயுக்தியாலும், ஏமாற்றும் வல்லமையாலும் பலமுறை என்னை நம்பவைத்துக் கழுத்தறுத்தவன். எனக்கு எவர் மீதும் நம்பிக்கை என்பதே இல்லாமல் போனது. கடவுள் சாட்சியாக நான் உன் சொல்படி நடக்கிறேன். என் பாவ மன்னிப்பை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். என்னைப் பற்றி நான் பட்டியலிட்ட அனைத்துத் தீய குணங்களையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நான் பட்டியலிட்ட குற்றங்கள் என்னுடைய குணத்தில் கிடையாது. நான் இதுவரை தூய்மையானவன். பொய் கூறியதில்லை. என்னிடம் இருப்பதில் எனக்கு கவனம் இருந்தால் போதும். அடுத்தவர் பொருள் மீது எனக்கு ஆசையில்லை. சாத்தானை வஞ்சிக்கவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. எந்த அளவிற்கு வாழ்வை நேசிகிறேனோ அந்த அளவிற்கு உண்மையை நேசிக்கிறேன். நான் பட்டியலிட்ட தீய குணங்கள் அத்தனையும் நான் கூறிய முதல் பொய்களாகும். நான் உங்களுக்காகவும், இந்த தேசத்திற்காகவும் கடமையாற்றப் பிறந்தவன். எளியவன். நீ இங்கு வரும் முன்னர் முதியவர் சிவார்ட் பத்தாயிரம் குதிரை வீரகளுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். நாம் இனைந்து மாக்பெத்துடன் போரிடுவோம். நமது லட்சியத்தின் நோக்கத்தைப் போலவே நமது வெற்றியும் விளங்கட்டும். ஏன் மெளனமாக இருக்கிறாய் ?

மாக்டப்: இரு வெவ்வேறு கதைகளை ஒரே நேரத்தில் நம்ப முடிவதில்லை.

( ஒரு மருத்துவர் நுழைகிறார். )

மால்கம் ; சரி நாம் பிறகு பேசுவோம் ( மருத்துவரை நோக்கி ) எட்வர்ட் மன்னர் வருகிறாரா?

மருத்துவர் ; ஆம் ஐயா. ஒரு நோயாளிக் கூட்டமே அவருடைய சிகிச்சைக்காகக் காத்திருக்கிறது. அவர்களது நோய்களோ நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. ஆனால் அவருடைய தெய்வீகக் கரங்கள் பட்டதும் நோய்கள் பறந்துவிடுகின்றன.

மால்கம் : நன்றி மருத்துவரே .( மருத்துவர் மறைகிறார். )

மாக்டப் : எந்த நோயைப்பற்றி மருத்துவர் பேசினார் ?

மால்கம் : அந்த நோயின்பெயர் ஊறு. மன்னர் எட்வர்டின் வருடலின் அழகை நான் இங்கிலாந்து வந்திருந்தபோது பார்த்திருக்கிறேன். இந்த அற்புத சக்தியை அவருக்கு வானகம்தான் வழங்கியிருக்கிறது. எவ்விதமான நோயாக இருப்பினும் இவர் கை பட்டால் மாயமாக மறைந்துவிடும். வீங்கி, அறுவைசிகிச்சியால் கூட குணப்படுத்தமுடியாத கோரமான நோய்கள் கூட இவர் கைபட்டதும் சரியாகிவிடும். இத்தனைக்கும் நோயாளியின் கழுத்தில் ஒரே ஒரு தங்கக்காசை வைத்துக் கண்களை மூடி பிரார்த்திப்பார். அவ்வளவுதான். அவர் இந்த அற்புத தொடுசக்தியைத் தனது அரசு வாரிசுகளுக்கு விட்டுச் செல்வார் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்த அற்புத சக்தி மட்டுமில்லை அவரிடம் தீக்க தரிசனம் போன்று இன்னும் பல ஆச்சரியமூட்டும் சக்திகளும் உள்ளன. இந்தக் குணங்களால் அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே அழைக்கப்படுகிறார்.

( ராஸ்பிரபு உள்ளே நுழைகிறார். )

மாக்டப் : பாருங்கள் யார் வருகிறார் என்று.

மால்கம் : உடையைப் பார்த்தால் என் நாட்டைச் சேர்ந்தவன் மாதிரி தெரிகிறது. ஆனால் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

மாக்டப் : எனது பெருமைக்குரிய உறவினன். அவனுக்கு என் வந்தனம்.

ராஸ் ; ஐயகோ என்னருமை ஸ்காட்லாந்து தேசமே ! அச்சத்தில் தன் பெயரை இழந்துவிடுவாயா?. ஸ்காட்லாந்து தாயின் மடியில் இனி மழலைகள் கிடையாது. மனிதப் பிணங்களே உண்டு. அவள் மடி இனி ஒரு கல்லறை பூமி. ஒருவர் முகத்திலும் புன்னைகை இல்லை.. பெருமூச்சுகளும், புலம்பல்களும், கூக்குரல்களும் காற்றைக் கிழித்தாலும் கேட்க ஆளில்லை. ஆழ்ந்த துயரம் அன்றாட உணர்ச்சியாகிப் போயிற்று. சவ ஊர்வலம் சென்றாலும் செத்தது யார் என்று கேட்க நாதியில்லை. நல்லவரின் தொப்பியில் உள்ள மலர் வாடும் முன்னர் அவர் உயிர் வாடிவிடுகிறது. நோயின்றி மனிதர் இறப்பது மிகுந்துவிட்டது.

மாக்டப் : ஒரு துன்பியல் கவிதையைப் போல உன் வர்ணனை நெஞ்சை அறுக்கிறது. ஆனால் அத்தனையும் உண்மை.

மால்கம் : இறுதியாகக் கொண்டுவந்துள்ள துன்பச் செய்தி என்ன?

ராஸ் ; புதியது என்பதன் ஆயுள் ஒருமணி நேரம் மட்டும்தான். அடுத்த ஒருமணியில் வேறொரு புதிய செய்தி.

மாக்டப்: என் மனைவி எப்படி இருக்கிறாள்?

ராஸ் ; ஏன் ? நலமுடன் இருக்கிறாள்.

மாக்டப் : என் பிள்ளைகள் ?

ராஸ் ; அவர்களும் நலமுடன் இருக்கிறார்கள்.

மாக்டப்: அவர்கள் நிம்மதியில் கொடுங்கோலன் மாக்பெத் கை வைக்கவில்லையா?

ராஸ் ; நான் பார்த்தவரை அவர்கள் பேரமைதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

மாக்டப் : வார்த்தை ஜாலம் வேண்டாம். நிஜமாக நடந்ததைக் கூறுங்கள்.

ராஸ் : நான் உங்களிடம் துன்பச் செய்தியைக் கொண்டுவரும் நேரம் நல்லோர் பலர் மாக்பத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர் புரியத் தயாராக உள்ளனர் என்ற வதந்தி பரவியது. மாக்பெத்தின் படை தயார் நிலையில் வைக்கப்படுவதைக் கண்ட பின்தான் அது வதந்தி இல்லை உண்மை என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் அங்கு வந்து நின்றால் போதும் ஸ்காட்லாந்து வீரர்கள் போரிட முன்வருவார்கள். பெண்கள் கூட போர்ப்படையில் சேரத் துடிப்பார்கள்.

மால்கம் : அவர்கள் நலமுடன் இருக்கட்டும். நான் ஸ்காட்லாந்து திரும்புகிறேன். மன்னரும் மாட்சிமை மிகுந்த மன்னர் எட்வர்ட் பத்தாயிரம் வீரர்கள் கொண்ட குதிரைப்படையை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். முதியவர் சிவார்ட் போல அனுபவமும், திறமையும் உள்ள போர்த்தளபதி இந்த மொத்த கிறிஸ்து உலகிலும் கிடையாது.

ராஸ் : இந்த நல்ல செய்திக்கு பதில் நன்றியாக நான் ஒரு நல்ல செய்தி கூறுகிறேன்.என்னிடம் உள்ள நல்ல செய்தியை நான் ஆளரவமற்ற ஒரு பாலைவனத்தில் அறைகூவ வேண்டும். .

மால்கம் : என்ன செய்தி அது ? பலரைப் பாதிக்கும் செய்தியா? இல்லை ஒருவரை மட்டும் பாதிக்கக்கூடியதா?

ராஸ் : எந்த நல்ல உள்ளமும் வலி இல்லாமல் இருந்ததில்லை. நான் சொல்லப்போகும் செய்தி உங்கள் சொந்த வலி.

மாக்டப் : என்னைப்பற்றிய செய்தி என்றால் தாமதிக்காமல் உடனே சொல்.

ராஸ் : உன் செவிகளில் நான் கூறப்போகும் செய்தி விழுந்ததும் அவை என் நாவினை வெறுக்காமல் இருக்கட்டும். இனி நான் கூறப்போவது உன் வாழ்நாளில் நீங்கள் இதுவரை கேட்டிராத, கேட்கக்கூடாத செய்தி.

மாக்டப் : ஒருமாதிரி என்னால் அனுமானம் செய்ய முடிகிறது.

ராஸ் ; உங்கள் கோட்டை தகர்க்கப்பட்டது; ஈவிரக்கமின்றி உன் மனைவியும் மக்களும் கொல்லப்பட்டனர்; எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்டால் உன் உயிரையும் அது பலி வாங்கும்.

மால்கம் : வானகம் கருணை மிக்கது. ( மாக்டப்பை அனைத்து ) நண்பனே தயங்காதே. உன் சோகத்தை மூடி வைக்காதே. வார்த்தைகளால் வெளிப்படுத்து. வெளிப்படுத்தாத சோகம் இதயத்தை வெடிக்கச் செய்ய வல்லது.

மாக்டப் : என் குழந்தைகளையுமா?

ராஸ் ; மனைவி மக்கள் பணியாட்கள் என்று கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரையும்.

மாக்டப் : நான் அப்படியென்றால் மறைந்திருக்க வேண்டும். என் மனைவியையும் கொன்று விட்டானா?

ராஸ் : ஆம் கொன்றுவிட்டான் .

மால்கம் : சாதாரணமாக இரு மாக்டப். இந்த மரண வேதனையைப் பழிவாங்குதல் என்ற மருந்தின் மூலம் ஆற்றிக் கொள்வோம்.

மாக்டப் : அவனுக்குக் குழந்தைகள் இல்லை. எனது அத்தனைச் செல்வங்களையுமாக் கொன்று விட்டான் ? அத்தனைக் குழந்தைகளையும் என்றா சொன்னீர்கள்? நாசமாய்ப் போகும் வல்லூறே! அத்தனைக் குஞ்சுகளையும் தாய்க்கோழியுடன் ஒரே விழுங்காக விழுங்கி விட்டாயா?

மால்கம் : புலம்பாமல் ஒரு ஆண்மகனைப் போல் செயலாற்று.

மாக்டப் : செய்யத்தான் போகிறேன். இருந்தாலும் ஒரு மனிதனைப்போல உணர்ச்சிவசப்படுவதில் தவறில்லை. ஐயோ ! அவை என்னுடைய உயிரினும் மேலான செல்வங்கள் என்று தெரியாமல் இருந்துவிட்டேனே. வானகம் காப்பாற்ற எவரையும் அனுப்பாமல் அந்தக் கொடூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததா? எல்லாம் நீ செய்த பாவம் மாக்டப் உன் பிள்ளைகள் தலையில் விழுந்தது. நீ ஒரு துஷ்டன் மாக்டப். இந்தத் தண்டனை அவர்களுக்கு இல்லை;உனக்கு. இறைவா அவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.

மால்கம் : இந்தக் கோபம் உன் வாளைக் கூர்மையாக்கட்டும். இதயத்தைக் கூர்ப்பாக்கும் நேரம் இது. மொன்னையாக்கும் நேரமன்று.

மாக்டப் : ஒரு பெண்ணின் நாவினைப் பெற்று புலம்பித் தீர்க்கிறேன்; ஒரு பெண்ணின் விழிகளைப் பெற்று அழுது தீர்க்கிறேன். வானகமே ! எனக்கு இனி ஓய்வில்லை. என்னைக் கொடியவன் மாக்பெத் முன் கொண்டு நிறுத்துங்கள்.என் வாளால் அவனை அளக்கிறேன். அவன் தப்பிவிட்டால் அவனையும் மன்னியுங்கள்.

மால்கம் : இது ஆண்மகனுக்கு அழகு.வா நாம் இப்போது எட்வர்ட் மன்னரைச் சென்று சந்திப்போம். நமது நிறை நமது சக்தி; நமது குறை பிரியாவிடை. கிள்ளிக் களையப்படும் பக்குவத்தை மாக்பெத் அடைந்துவிட்டான். நாம் கடவுளின் தூதுவர்களைப் போலச் செயலாற்றுவோம். உன்னை எவ்வளவுக்கெவ்வளவு உற்சாகபடுத்திக் கொள்ளமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு உற்சாகபடுத்திக் கொள். விடியலைக் காணாத நீண்ட இரவு என்பதே கிடையாது.

திரை.

அங்கம் – 4 நிறைவுற்றது.

••••

Comments are closed.