மாக்பெத் அங்கம்-5 ( இறுதிப் பகுதி ) / மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

[ A+ ] /[ A- ]

download

காட்சி-4.

பிர்னாம் காடுகளின் அருகில் ஒரு பாசறை.

(மால்கம், மூத்த சிவார்ட், அவர் மைந்தன் மாக்டப், மென்டீத், கெய்த்னெஸ், ஆங்கஸ், லெனாக்ஸ், ராஸ் மற்றும் போர்வீரகள் போர்முரசு முழங்கப் போர்க்கொடியுடன் அணிவகுத்துச் செல்கின்றனர் )

மால்கம் : உற்றோர்களே! நேரம் நெருங்கிவிட்டது நமது மாளிகைகளின் படுக்கையறைகளில் அமைதி திரும்ப நேரம் நெருங்கிவிட்டது.

மென்டீத் : அதில் என்ன சந்தேகம் ?

சிவார்ட் : இந்தக் காட்டிற்குப் பெயர் என்ன?

மென்டீத் : பிர்னாம் காடு என்று பெயர்.

மால்கம் : நமது வீரகளிடம் சொல்லி இந்த மரங்களின் கிளைகளை உடைத்து ஒவ்வொருவரும் தங்களை இந்தக் கிளைகளால் மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அப்போதுதான் மாக்பெத்தின் ஒற்றர்களுக்கு வீரர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் போகும். தவறான தகவலே மாக்பெத்தைச் சென்றடையும்.

வீர்கள் : அப்படியே செய்கிறோம்.

சிவார்ட் : கட்டுக்கடங்காத் தன்னம்பிக்கையுடன் மாக்பெத் தன்சினேன் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதைத் தவிர நமக்கு வேறு தகவல்கள் இல்லை. நமது முற்றுகையை அவனால் தடுக்க முடியாது.

மால்கம் : நாம் முற்றுகையிட வேண்டும் என்பதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான். அவனுடைய வீரர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவனைவிட்டு நீங்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதயமற்றவர்கள் மட்டுமே அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

மாக்டப் : எல்லாம் சரி. ஆனால் நமது இலக்கை அடையும் முன்பு நாம் தீர்மானிக்க எதுவுமில்லை.

சிவார்ட் : நேரம் நெருங்குகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நமக்குச் சொந்தமானது எது பகைமை எது என்பது தெரிந்துவிடும். சும்மா உட்கார்ந்து இன்பக்கனா கண்டு கொண்டிருந்தால் நம்பிக்கை பிறக்கும்; நிஜம்தான். வெற்றிக்குக் கனவு கான்பதுமட்டும் போதாதே. வெற்றிக் கனியைப் பறிக்க வன்முறையே சிறந்த வழி. எனவே நாம் நம் படையுடன் முன்னேறுவோம் .

( வீரர்கள் கைகளில் மரக்கிளைகளுடன் முன்னால் செல்கின்றனர்.)

திரை.

காட்சி-5

(தன்சினேன் கோட்டை. மாக்பெத், சேட்டன் மற்றும் வீர்கள். இங்கும் போர் முரசும், கொடிகளின் அணிவகுப்பும்.)

மாக்பெத் : நமது போர்க்கொடிகளைக கோட்டை மதிலின் வெளியில் தோரணங்களாகக் கட்டித் தொங்க விடுங்கள். அவை நாம் வருவதை அறிவிக்கட்டும். முட்டி நுழையும் முற்றுகையை நமது இரும்புக்கோட்டை எள்ளி நகையாடட்டும். முற்றுகையின்போது அவர்கள் பசியாலும்,பிணியாலும் மடியட்டும். நமது கயவர்கள் அவர்களுடன் கைகோர்த்திராவிட்டால் இந்நேரம் அவர்களைக் கதற கதறத் துரத்தியிருப்பேன்.( பெண்களின் அழுகையொலி கேட்கிறது) என்ன சப்தம் அங்கே ?

சேட்டன் : அரண்மனை மகளிரின் அழுகையொலி மன்னா.(உள்ளே போகிறான். )

மாக்பெத் : அச்சத்தின் பிடியிலிருந்து வெளிவந்துவிட்டேன். இரவில் எழும் ஒரு கூக்குரலுக்குக் கூட நடுங்கிய என் பழைய பால்ய காலங்கள் மடிந்துவிட்டன. என் ரோமக்கால்கள் உயிர் பெற்றுக் குத்திட்டு நிற்கும் அப்போது. ஆனால் இப்போதோ என் வாழ்வே திகில் நிறைந்ததாக மாறிவிட்டது. பயங்கர நிகழ்வுகள் வழக்கமான பின்பு இனி எதற்கு அச்சப்படவேண்டும் ? ( சேட்டன் வருகிறான்) ஏன் இந்த அழுகை ஓலம் சேட்டன்?

சேட்டன் : நமது அரசியார் இறந்துவிட்டார் மன்னா.

மாக்பெத் : எப்படியும் இறக்கப்போகின்றவள். என்றாவது ஒருநாள் இந்தச் சேதியைக் கேட்கவிருந்தேன். நாளை நாளை நாளை. மரணத்தை நோக்கி மெல்லப் பரவும் வாழ்வெனும் கொடி.. சென்ற நாட்கள் பேதைகளை மரணத்திற்குக் கொண்டு சென்ற நாட்கள். போ போ நலிந்த மெழுகுவர்த்தியே. நீண்ட நிழல் போல் ஓடி மறையும் வாழ்க்கை. ஒரு நாடக நடிகனைப் போலப் பாடும் ஆடும் முடிவில் முற்றிலும் மறக்கப்பட்டுவிடும். வாழ்க்கை ஒரு முட்டாள் சொன்ன ஆங்காரமும், கூக்குரல்களும் நிறைந்த கதை.(தூதுவன் வருகிறான்) ஏதோ கூறவேண்டும் என்று வந்திருக்கிறாய். என்னவென்று கூறு.

தூதுவன் : என் கருணைமிக்கப் பிரபு. நான் பார்த்ததை எப்படிக் கூறுவேன் என்று தெரியவில்லை.

மாக்பெத் : பரவாயில்லை கூறு.

தூதுவன் : நான் மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் கண்களை என்னால் நம்பமுடியாமல் போனது. பிர்னாம் காடு இடம்பெயர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மாக்பெத் : பொய் பேசும் அடிமை.

தூதுவன் : நான் சொல்வது பொய் என்றால் எனக்குத் தண்டனை அளியுங்கள். மூன்று கல்தொலைவுகளுக்கு அப்பாலிலிருந்து அந்தக் காடு நகர்ந்து வருவதை உங்கள் கண்களால் காண முடியும். நகரும் காடு.

மாக்பெத் : நீ மட்டும் தவறான தகவலைக் கூறினால் உன்னை அருகில் இருக்கும் மரத்தில் சாகும்வரை கட்டித் தொங்கவிட்டுவிடுவேன். நீ சொன்னது உண்மையென்றால் அதையே நீ எனக்குச் செய்யலாம்.( தனக்குள் ) என் நம்பிக்கை தகரத் தொடங்கிவிட்டது. அந்தச் சூனியக்காரப் பிசாசு சொன்னதை மனம் நம்பத் தொடங்கிவிட்டது.” அடர்ந்த பிர்னாம் காடுகள் நோக்கி நகர்ந்து வரும்வரையில், மாக்பெத் நீ அச்சப்படத் தேவையில்லை” இப்போது மரங்கள் தன்சினேனை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆயுதம் ஏந்திப் போருக்குக் கிளம்புவோம். அந்தத் தூதுவன் கூறுவது நிஜமென்றால் இங்கிருந்து ஒடுவதாலோ இருப்பதாலோ ஒரு பயனும் இல்லை. நான் வாழ்ந்து சலித்துவிட்டேன். இந்தப் பூமி கலகத்தில் திணறுவதைப் பார்க்க ஆசைப்படுகிறேன். அபாய மணியை எழுப்புங்கள். ஆயுதம் தாங்கி போருக்குக் கிளம்புங்கள். தாக்குங்கள். நமது மரணம் கவசமணிந்த உடலுக்கு வரட்டும்.

திரை.

காட்சி-6

( தன்சினேன் கோட்டைக்கு முன்பு ஓர் இடம். போர்முரசின் முழக்கம் போர்க்கொடிகளின் அணிவகுப்பு. மால்கம் , முதிய சிவார்ட் , மாக்டப் மற்றும் போர்வீரர்கள் கைகளில் மரக்கொப்புகளை ஏந்தியபடி வருகின்றனர்.)

மால்கம் : கோட்டையின் அருகில் வந்துவிட்டோம். நமது கைகளில் உள்ள மரக்கிளைகளைக் கீழே போட்டுவிட்டு நாம் யாரென்று அடையாளம் காட்டுவோம். மாமா சிவார்டும் அவர் மகனும் முதல் படைக்குத் தலைமை தாங்கட்டும். நானும் தீரன் மாக்டப்பும் இரண்டாவது அணியை நடத்திச் செல்கிறோம். இதுதான் நமது போர்த்தந்திரம்.

சிவார்ட் : நாங்கள் கிளம்புகிறோம். இன்றிரவிற்குள் அந்தக் கொடுங்கோலனின் படைகளை நாம் தூள் தூளாக்கி விட்டால் வெற்றி நிச்சயம்.

மாக்டப் : நமது போர்முரசுகள் ஒலிக்கட்டும். நமது பேரிகைகள் முழங்கட்டும். இரத்தத்துடன் மணக்கும் மரணத்தின் கட்டியத்தை அவனுக்கு ஆரவாரத்துடன் தெரிவியுங்கள்.(அகல்கின்றனர்).

திரை.

காட்சி-7

(இடம்: போர்க்களம். போர் முரசுகளும் பேரிகைகளும் முழங்குகின்றன. மாக்பெத் நுழைகிறான்.)

மாக்பெத் : அவர்கள் என்னை ஒரு முளையில் கட்டிவிட்டனர். என்னால் பறக்க முடியாது. ஒரு சர்க்கஸ் கரடியைப் போல நான் நாய்களை எதிர்த்துப் போரிடத்தான் வேண்டும். பெண்ணின் மூலம் பிறக்காத அந்த மனிதன் எங்கே ? அப்படி ஒருவனைக் கண்டுதான் நான் அஞ்சுகிறேன். வேறு ஒருவரையும் கண்டு எனக்குப் பயமில்லை.( இளைய சிவார்ட் வருகிறான்.)

இளைய சிவார்ட் : உன் பெயர் என்ன?

மாக்பெத் :அதைக் கேட்டால் நீ அச்சமடைவாய்.

இளைய சிவார்ட் : நிச்சயம் மாட்டேன். நீ நரகத்தின் கொடிய சாத்தானாக இருந்தாலும் எனக்குப் பயமில்லை.

மாக்பெத் : என் பெயர் மாக்பெத் .

இளைய சிவார்ட் : சாத்தான் கூட நான் மிகவும் வெறுக்கும் ஒரு பெயரை இப்படி உச்சரிக்க முடியாது.

மாக்பெத் : எனக்கு உச்சரிக்க அச்சமில்லை.

இளைய சிவார்ட் :பொய் பேசாதே கொடுங்கோலனே . என் வாளின் மூலம் நான் அச்சமற்றவன் என்று நிரூபிக்கிறேன் : ( வாள்சண்டையில் மாக்பெத் இளைய சிவார்டைக் கொல்கிறான். )

மாக்பெத் : நீ ஒரு பெண்மூலம் பிறந்தவன். வாள்களைக் கண்டு புன்னகைப்பவன் நான். பெண்மூலம் பிறந்த எவனுடைய ஆயதத்தைக் கண்டும் நான் எள்ளி நகையாடுவேன். ( மாக்பெத் மறைகிறான்.)

(போர் முழக்கம் கேட்கிறது. மாக்டப் உள்ளே நுழைகிறான். )

மாக்டப் :அங்கேயிருந்துதான் போர்முழக்கம் கேட்கிறது. கொடுங்கோலனே எங்கிருக்கிறாய் ? என்னைத் தவிர வேறு ஒருவன் உன்னைக் கொன்றால் என் மனைவி மக்களின் ஆவிகள் என்னைகே கேலிசெய்யும்; துரத்தியடிக்கும். கூலிக்குத் தண்டால் பிடிப்பவர்களுடன் எனக்குப் போர் புரிய விருப்பமில்லை. போர்புரிந்தால் உன்னுடன் போர்புரியவேண்டும் மாக்பெத். இல்லையென்றால் என வாளினால் பயன் ஏதும் இல்லை. நீ அங்கேதான் இருக்க வேண்டும். பேரிகைகள் முழங்குவதைப் பார்த்தால் அடுத்து உயர் பதவியில் உள்ள தளபதியின் பெயர் அறிவிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இதோ செல்கிறன். அதிர்ஷ்டமே மாக்பெத்தை சந்திக்கும் வாய்ப்பை எனக்குத் தா.( மாக்டப் மறைகிறான். மேலும் பல பேரிகைகள் முழங்குகின்றன. மால்கமும், முதிய சிவர்டும் வருகின்றனர். )

முதிய சிவார்ட் : இந்த வழியில் வாருங்கள் பிரபு. இதோ கோட்டை மெதுவாகக் கைப்பற்றப்படுகிறது. கொடுங்கோலனின் வீரர்கள் கோட்டையின் இருபுறம் இருந்தும் தாக்குகின்றனர். நமது வீர்ர்கள் கடுமையாகப் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த வெற்றி முழுமையாக உங்களுக்குச் சொந்தம். இனி செய்வதற்கு அதிகமில்லை.

மால்கம் : நம்மைத் தாக்கக் கூடாது என்று போரிடும் பகைவர்களுடன் போரிட வேண்டியிருக்கிறது.

சிவார்ட் : அதோ கோட்டை வந்துவிட்டது.

(அவர்கள் மறைகின்றனர். போர்புரியும் ஒலிகள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. )

(திரை).

காட்சி-8.

( இடம் : போர்க்களத்தில் வேறொரு பகுதி. மாக்பெத் நுழைகிறான் )

மாக்பெத் : பண்டைய ரோமானியக் கோழைகளைப் போல நான் ஏன் வாள்கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? நான் உயிருடன் இருக்கும்வரை அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் உறுதி. ( மாக்டப் நுழைகிறான்)

மாக்டப் : திரும்பிப் பாரடா நாயே திரும்பிப்பார்.

மாக்பெத் : உன் ஒருவனைத்தான் நான் தவிர்க்க எண்ணினேன். ஆனால் நீயே என்முன்னால் வந்து நிற்கிறாய். கொதிப்பேறிய ரத்தத்தால் நீ என் ஆத்மாவை உசுப்பேற்றிவிட்டாய்.

மாக்டப் : என்னிடம் வார்த்தைகள் இல்லை. வாய்மொழி தேவையில்லை உனக்கு வாள்மொழி போதும்.( இருவரும் சண்டையிடுகின்றனர் )

மாக்பெத் : என்னைக் காயப்படுத்தவேண்டும் என்று உன் நேரத்தை வீணடிக்காதே. உன் வாள்வீச்சினால் காற்றைக் காயப்படுத்த முயற்சி எடுத்தால் நல்லது.போ காயப்படுத்த வேறு முகத்தைத் தேடு. என் உற்சாக வாழ்வை முடிக்க வருபவன் ஒரு பெண்வயிற்றில் பிறந்தவனாக இருக்கமுடியாது.

மாக்டப் : உன் உற்சாகம் நாசமாகப் போகட்டும். உனக்கு வேதம் ஓதும் சாத்தான் நான் பெண்ணின் கர்ப்பத்திலிருந்து வந்தவன் இல்லை என்பதையும் சொல்லட்டும். தரிக்க முடியாத என் கர்ப்பத்தை என் தாயிடமிருந்து தனியாகப் பிரித்து எடுத்து அதன் மூலம் பிறந்தவன் நான். தெரிந்துகொள்.

மாக்பெத் : என்னிடம் இப்படிக் கூறிய உன் நாவை அறுத்தெறிவேன். ஒரு மனிதனுக்குத் தேவையான துணிச்சலை உன் வார்த்தைகள் எடுத்துவிட்டன. மீண்டும் அந்தச் சூனியக்காரிகளை நான் நம்புவதாக இல்லை. அவர்கள் வார்த்தை விளையாட்டால் என்னை ஏமாற்றி விட்டனர். வார்த்தைகள் மூலம் செவிகளை நம்ப வைப்பது. பிறகு அந்த நம்பிக்கையைக் குலைப்பது என்று சிலேடை விளையாட்டு விளையாடி விட்டனர். போதும். இனி நான் உன்னுடன் போரிடப் போவதில்லை.

மாக்டப் : அப்படியென்றால் சரணடை கோழையே. உன்னைக் கூண்டில் அடைத்து காட்சிப்பொருளாக வைக்கிறோம் . கூண்டின் மேலே “ இது ஒரு அபூர்வமான கொடுங்கோலன்“ என்று எழுதித் தொங்க விடுகிறோம்.

மாக்பெத் : நான் சரணடைய மாட்டேன். மால்கம் பாதம் தொடும் மண்ணை முத்தமிட எனக்கு விருப்பமில்லை. மக்கள் என் மீது காறி உமிழ்வது எனக்குத் தேவையில்லை. பிர்னாம்காடுகள் தன்சினேன் வந்தாலும், பெண்வயிற்றில் பிறவாத ஒருவன் என்னை எதிர்த்தாலும் பரவாயில்லை நான் இறுதி வரையில் போரிடுவேன். என் கவசத்தைக் களைகிறேன். சாவதற்கு முன் நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன். போதும் விட்டுவிடு என்ற முதல் குரல் உன்னுடையதாகத்தான் இருக்கும்.

( சண்டையிட்டபடி அவர்கள் காட்சியிலிருந்து அகல்கின்றனர். யுத்தபேரிகைகளும், போர் ஒலிகளும் மிகுந்து கேட்கின்றன. ஒரு படையின் பின்வாங்கும் முழக்கம். ஒரு படையின் வெற்றி முழக்கம் இரண்டும் கேட்கின்றன. வெற்றி முழக்கமிட்ட அணி உள்ளே நுழைகின்றது. அந்த அணியில் முதிய சீவார்ட், மால்கம், ராஸ் பிரபு, குறுநில மன்னர்கள், வீரர்கள் முதலியோர் உள்ளனர்.)

மால்கம் : நமது நண்பர்கள் அனைவரும் இந்தச் சண்டையில் உயிர் பிழைத்துள்ளனர் என்று நம்புகிறேன்.

சிவார்ட் : போர் என்றால் வீர்ர்கள் மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தபோரில் குறைந்த உயிர் இழப்புடன் நாம் வெற்றிக் கனியைப் பறித்து விட்டோம்.

மால்கம் : மாக்டப்பைக் காணவில்லை. அதேபோல முதியவரின் மகனையும் காணவில்லை.

ராஸ் : முதியவரே உங்கள் மகன் ஒரு வீரனுக்குரியப் பரிசை பெற்றுவிட்டான். ஒரு முழு மனிதனாக வாழ்ந்து மடிந்துவிட்டான். ஓர் ஆண்மகனாக இறுதி வரையில் போராடி விழுப்புண் தாங்கி வீரமரணம் அடைந்துவிட்டான்.

முதிய சிவார்ட் : இறந்து விட்டானா?

ராஸ் ; ஆமாம் அவனைப் பாசறைக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அவன் வீரத்தை உங்கள் துக்கத்தை அளக்கலாம் என்றால் அது நடவாத செயல்.

முதிய சிவார்ட் : அவனுடைய விழுப்புண் அவன் மார்பில்தானே உள்ளது?.

ராஸ் : ஆம் அவன் மார்பில்தான் உள்ளது.

முதிய சிவார்ட் : நல்லது. கடவுளுக்குக் காவல் இருக்கச் சென்றுவிட்டான். என் ரோமங்களின் அளவிற்கு எனக்குப் புதல்வர்கள் பிறந்தாலும் ஒருவருக்கும் இவனுடைய மரணம் போல ஓர் உன்னத மரணம் ஏற்பட்டிருக்காது. அவன் சாவுமணி தேவமணியாக ஒலிக்கிறது.

மால்கம் : அவனது மரணம் மேலும் போற்றப்பட வேண்டியது. அவனுக்காக நான் துக்கம் கொண்டாடுகிறேன்.

முதிய சிவார்ட் : போதும். இனி அவன் எந்த துக்கத்திற்கும் தகுதியுடையவன் இல்லை. அவர்கள் அவன் மரணம் பூரணமாக இருந்தது என்று கூறிவிட்டனர். அவன் கடவுளிடம் சேர்ந்து விட்டான். இதோ நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது.

(மாக்டப் மாக்பெத்தின் தலையுடன் உள்ளே வருகிறான். )

மாக்டப் : (மால்கமைப் பார்த்து ) வாருங்கள் அரசே . இனி உங்களை அவ்வாறுதான் அழைக்க வேண்டும். என் கையில் இருப்பது என்னவென்று பாருங்கள். சபிக்கப்பட்ட மாக்பெத்தின் தலை. காலம் விடுதலையடைந்து விட்டது.அவன் கொடுங்கோன்மை முடிவுக்கு வந்துவிட்டது. உங்களைச் சுற்றிலும் நல்முத்துக்கள் போன்ற சீமான்கள் உள்ளனர். நான் நினைப்பதைத்தான் அவர்களும் நினைக்கின்றனர். அவர்களும் என்னுடைய இந்த மகிழ்ச்சி கோஷத்தில் கலந்து கொள்ளட்டும். ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க. ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க (கோஷமிடுகிறான்.)

அனைவரும் : ஸ்காட்லாந்து மன்னர் வாழ்க.

(துந்துபி முழங்குகின்றது)

மால்கம் : தகுதியடிப்படையில் உங்கள் அன்பை அளந்து என்னுடன் சேர்த்துக் கொள்ள நான் அதிக நேரம் எடுத்துகொள்ளப் போவதில்லை. என் உற்றோர்களே என் தளபதிகளே இனி நீங்கள் ஸ்காட்லாந்தின் கோமகன்கள் என்ற பட்டத்துடன் உலா வருவீர்கள். இப்படி ஒரு பட்டம் ஸ்காட்லாந் சரித்திரத்தில் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் என்ன செய்யவேண்டும் என்பதை நம்முடைய காலத்தில் யோசித்து செயலாற்ற வேண்டும். மாக்பெத்தின் கொடுங்கோலிலிருந்து தப்பியோடிய நமது நண்பர்களை மீண்டும் நம் நாடு திரும்புமாறு அழைப்பு அனுப்பவேண்டும். இந்தக் கொடுங்கோலானின் பேச்சைக் கேட்டுக்கொண்டு,, தன் கைகளால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ராட்சசி போன்ற அவனுடைய மனைவியின் பேச்சையும் கேட்டுக்கொண்டு அநியாயம் செய்த அக்கிரமக்கார மந்திரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுவும் இது போன்ற மேலும் பல நல்ல கடவுளின் கருணைக்குப் பாத்தியப்பட்ட செயல்களையும் இடம் பொருள் ஏவல் அறிந்து செய்வோம் என்று கூறிக் கொள்கிறேன். என்னுடைய நன்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாகட்டும். ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள என்னுடைய முடிசூட்டு விழாவிற்கு வருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.

(வெற்றி முரசும், துந்துபியும் முழங்குகின்றன.)

அங்கம் ஐந்து நிறைவுற்றது.

( முற்றும் )

Comments are closed.