மாயா ( சிறுகதை ) ரமா சுரேஷ்

[ A+ ] /[ A- ]

images (77)

வாழ்வதற்கான எல்லா ஆதாரங்களையும் அவள் தன் தேகத்தில்தான் மறைத்து வைத்திருக்கிறாளென மற்றவர்களைப் போல் சூரியனும் நம்பினான். திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியே மாயாவின் அறையினுள் விழுந்த சூரியன், தன் மூர்க்கமான காதலை தூங்கிக் கொண்டிருந்தவளை ரசித்தபடி அறையெங்கும் படரவிட்டது. விரல் நகம் தீண்ட அஞ்சி நின்று பின் நேரம் செல்ல செல்ல தாபம் தலைக்கேற அவளின் ஆடையைத் தாண்டி ஊர்ந்து செல்ல துவங்கியது.

மாயா கண்கள் களையாமல், விழிகளை உருட்டி சூரியன் படர்வதற்கு ஏதுவாய் புரண்டு படுத்துக்கொண்டாள். சன்னல் கம்பிகளில் மூக்கை தேய்த்தபடி அவளின் உத்தரவிற்காக காத்திருந்த மைனா, பவ்யமாக உள்ளே நுழைந்து இரவு அவள் சாப்பிட்டபின் மிச்சம் வைத்திருந்த கோழித் துண்டுகளை லபக்கென விழுங்கியது. இரையக் கண்டுகொண்ட பரவசம் அதன் ஆவேசமான தலையசைப்பில்.

தனது சின்னஞ் சிறிய கால்களால் தத்தி தத்தி நடந்து சென்று சாய்ந்து கிடந்த மது குவளைக்குள் தலையை நுழைத்தது. மிச்சமிருந்த பிராந்தியை சொட்டு சொட்டாக உறிஞ்சி குடித்தபின் தலையை சிலுப்பிக்கொண்டது. அவளைப் போலவே மைனாவிற்கும் இது வழமையானதொன்றாகிப் போனதால் அதன் செயல்களை மாயா பொருட்படுத்துவதில்லை. ஆடைகள் களைந்து கிடந்த அவளின் மீது மையல் கொண்டு சத்தம் கேட்காமல் பறந்து போய் அவளின் அருகில் அமர்ந்து கொண்டது. வாளிப்பான அவளின் தொடைகளில் மூக்கை உரசிக் கொண்ட அதன் உடலெங்கும் புதுவிதமான சூடு பரவ சிறகுகளை வேகமாக அசைத்து தனது பரவசத்தை வெளிப்படுத்தியது. திடீரென அதிகமான ஒரு டிகிரி வெப்பத்தில் சூரியன் முன்னை விடவும் இந்த அறைக்குள் தீவிரமாய் ஆக்கிரமிக்க நினைப்பதைப் புரிந்து கொண்டு அதனை முறைத்தது.

மாயா ஜன்னலை திறந்து வைத்திருப்பது இந்த இரகசியக் காதலர்களுக்காக மட்டுமே. இவர்களை மீறி ஏதோ ஒரு இரைச்சல் தொந்தரவு செய்யவே தள்ளாட்டத்துடன் எழுந்து ஜன்னல் அருகே வந்து நின்றாள். சாலையில் இரைச்சலை உமிழ்ந்துவிட்டு போகும் வாகனங்களைப் பார்த்து எரிச்சலோடு பதினோறாவது மாடியில் இருந்து காரித் துப்பினாள். அவள் துப்பிய எச்சில காற்றில் எங்கோ கரைந்து சென்றது. கண்கள் கூச சூரியனைப் பார்த்து சிரித்தாள். எரிச்சலுடன்,
”இம்ச எப்ப பாரு என் உடம்ப ஆக்ரமிக்கிறதே வேலையாப் போச்சு.” தன் ஆடைகளை களைந்து எறிந்துவிட்டு, நிர்வாணமாய் கைவிரித்து, கால் அகற்றி நின்றவளை அந்த அறை கூச்சத்தோடு எதிர்கொண்டது.

சூரியனின் சூடு இப்பொழுது வியர்வையாக வழியத்துவங்கியது. அவள் உடம்பில் ஏற்பட்ட எந்த பருவ மாற்றங்களையும் அவள் ரசித்ததும் இல்லை, கண்டதும் இல்லை. ஆனால், சூரியன் ஒவ்வொரு பருவ மாற்றத்தில் எப்படி இருப்பான் என்பதை உணர்ந்து ரசிப்பாள். தொடக்கப்பள்ளி, நாட்களில் நண்பன் ஒருவன் ஆறுதலாய் அவள் தோள் மீது கை போட்டப்படி, ‘அழுதால் கண்ணீரே வரவில்லை என்று கவலைப்படாதே!’ ‘ஏதாவது ஓர் இடத்தை உற்று பார்த்தால் கண்ணில் இருந்து தானாகவே நீர் கொட்டும்’ என்றான்.

அவனைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, உண்மையா என்பதுபோல் விழிகள் சுருக்கி சிரித்தாள். அவனும் தலையை ஆட்டியப்படி ‘நான் எங்க அம்மாவை இப்படிதான் ஏமாற்றுவேன்’ என்று சொல்லிவிட்டு உணவு இடைவேளையில், கேண்டினில் ஆளுக்கொரு ஃபிஸ் பால் சூப் வாங்கி வந்தான். இருவரும் விளையாட்டிற்கு ஆளுக்கொரு திசையில் அமைதியாக வெறித்துப் பார்க்க, அவன் கண்களில் மட்டும் தண்ணீர் கொட்டியது. தன் இடுப்பில் கை வைத்து நண்பனை பொய்யாக முறைத்த மாயா சத்தமாக சிரிக்க அவளைச் சுற்றி சிரிப்பலைகள் பரவத்துவங்கியது.

அவளைச் சுற்றியிருந்த எல்லோரும் ஒரு காட்சிப் பொருளாகவே பார்க்கத்துவங்கி விட்டனர். ”அவ அம்மா பல பெண்களோட கண்ணீரையும், சாபத்தையும் வாங்கிட்டு வர்றா, அந்த பாவ மூட்டைகள எல்லாம் இந்த பொண்ணு தலையில் கடவுள் கட்டிட்டான்” என்று கடவுளை திட்டுவது போல் மறைவாக இவள் அம்மாவைத் திட்டுவார்கள்.

மாயாவின் பாட்டி செய்வதறியாது தன் கண்ணீரையெல்லாம் மடியில் ஏந்திக்கொண்டு எப்படியாவது மாயாவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது பார்த்து விட வேண்டினாள். பத்துமலை முருகன் கோவிலில் தங்கத்தில் ஆன கண்ணீர் ததும்பும் தகடு கண்களை காணிக்கையாக உண்டியலில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தாள். ஆனால், எந்த சாமியும் மாயாவின் கண்ணை கலங்கடிக்கவில்லை. பாட்டி சில நேரங்களில் பெய்யாகவும், பலநேரங்களில் கோபத்துடனும் மாயாவை திட்டி பார்த்தாள், மிரட்டி பார்த்தாள், ஏன் சூடு கூட வைத்தாள்! துடித்து அலறிய மாயாவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. சிரிப்பதைப் போல் அழுவது அத்தனை எளிதான காரியமில்லை. மாயா கண்ணீர் விடாததற்கான காரணம் அவளின் அம்மாதான் என்று பாட்டியும் நம்பினாள்.
மாயாவிற்கு அம்மா மீது ஒரு வித மயக்கம் இருக்கும்.

இதுவரை அம்மாவை போன்று ஒரு அழகியை அவள் பார்த்ததில்லை. அம்மா கருப்பாக இருந்தாலும் அவளது தேகம் ஐஸ்கட்டியை போல சில்லென, வழவழப்புடன் மின்னும். அம்மாவின் கண்களும், இதழ்களும் எப்போதும் ஓர் வினோத தவிப்புடன் துடித்துக்கொண்டிருக்கும். அம்மாவின் மார்பிற்குள் அடிக்கும் வாசனைக்காகவே மாயா எப்போதும் தன் முகம் புதைத்துக் கொள்வாள். மார்பிற்குள் பட்டாம்பூச்சி பாறப்பதாய் சொல்லி மேலும் இறுக்க அணைத்துக்கொள்வாள். மாயாவை, அம்மா அதிகம் கொஞ்ச மாட்டாள், முத்தமிட மாட்டாள். எப்போதாவது கைகளில் விளக்கெண்ணெய்யை தடவிக்கொண்டு மாயாவின் கண்களை வருடி சுத்தம் செய்து, மையிட்டு விடுவாள்.

மாயாவின் கண்களையே பார்த்தபடி வெகுநேரம் அவளின் முகத்தை தன் உள்ளங்கையில் ஏந்திக்கொள்வாள். மாயா பிறந்த அன்று அவள் பாதத்தில் மென்மையாக முத்தமிட்டது போல் என்றாவது ஒரு நாள் மாயாவின் கண்களி முத்தமிடுவாள். அப்போது அம்மாவின் கண்கள் கலங்கி நீர் சுரப்பதை மாயா குழப்பத்துடன் பார்ப்பாள். “நீ ஏம்மா அடிக்கடி காணாமல் போயிடுர? என்னையும் கூட்டிட்டு போயிடேன்!” மாயா கெஞ்சும் போதெல்லாம், அம்மா சிரிக்க மட்டுமே செய்வாள். ஆனால், பாட்டி தான் பேயாட்டம் ஆடுவாள்.

“ஊரு மேயப் போன சிறுக்கிக்கு இனி இந்த வீட்டிற்குள் இடம்மில்லை, நேத்து ஒருத்தி உன் மருமகளை ஹோட்டல் 81 வாசலில் பார்த்தேங்கிறா, ஏலேய்! இந்தாடான்னு” துணி காயா போட வைத்திருக்கும் தடி குச்சியை இரண்டாக உடைத்து, அப்பாவின் கைகளில் கொடுத்துவிட்டு சந்தையில் இருந்து இதற்காகவே வாங்கி வந்த வெளக்கமாத்தை கைகளில் எடுத்துக்கொள்வாள். அம்மாவின் முனங்கல் சத்தம் கூட வெளியில் வராது. அடிவிழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு சீனப் பாட்டி ஓடி வருவாள். அது வரை தமிழில் அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கும் பாட்டி மலாயில் பேச ஆரம்பித்து விடுவாள். மாயாவிற்கு பாட்டி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை என்றாலும் கண்டிப்பாக நல்ல வார்த்தைகளை பேசிருக்க மாட்டாள் என்பது, சீன பாட்டியின் முகசுளிப்பில் இருந்து புரிந்தது கொள்ள முடியும்.

அடி வாங்கி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்காததைப்போல் அம்மா குளித்து, அலங்காரத்துடன் விதவிதமாக சமைக்க துவங்கிவிடுவதை மாயா ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பா குட்டி போட்ட பூனைப்போல் மாயாவை வாயில் கவ்வாத குறையாக இழுத்துக்கொண்டு அம்மாவிடம் ஜாடை மாடையாக பேசிக் கொண்டிருக்கும் அப்பா தன்னிடம்தான் பேசுகிறார், பதிலுக்கு என்ன சொல்லுவது என்று புரியாமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்தப்படி இருப்பாள் மாயா. இறால் சம்பாளுக்கும், கீரை சொதிக்கும் பாட்டியின் நாக்கு தொங்கி கிடப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும் மாயாவிற்கு.

தன் வீட்டு வாசலில் இருந்து சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்த மாயாவின் கண்களுக்குள் பலவித வண்ணங்கள் கிளர்ந்தன, அவள் கண்களில் இருந்து வடிந்த நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு ஒன்றோடு ஒன்று கலந்து அவளுக்குள் பல நூறு வண்ணங்களை ஓடவிட்டு விளையாட்டு காட்டியது. மஞ்சள் நிறமாக மாறிக்கொண்டிருந்த சூரியனை கைகளை நீட்டி எட்டிப்பிடித்தவள் அதற்கு வெவ்வேறான வண்ணங்களைத் தீட்டி அணைத்துக்கொண்டாள். நிறம் மாறிப்போன சூரியனைக் கண்டு சத்தமாக சிரித்துக்கொண்டிருந்தாள். நாட்கணக்கில் காணாமல் போகும் அம்மா திடீரென வாரக் கணக்கில் காணாமல் போய் அன்று திருப்பி வந்திருந்தாள். அம்மாவைக் கண்டதும் மாயா ஓடிசென்று அவளின் மார்பிற்குள் மூக்கை நுழைத்துக்கொண்டாள்.

அம்மா இன்னைக்கு ஏன் நிறைய பட்டாம்பூச்சி உன் நெஞ்சுக்குள்ள பறக்குது என்றவள் அம்மாவின் மார்புக்குள் தன் முகத்தை முழுமையாக புதைத்துக்கொண்டாள். பாட்டியின் காட்டு கத்தலை விட, கட்டுக்கட்டாகா கேலாங் சந்தையில் இருந்து வாங்கி வைத்திருந்த விளக்கமார்கள் மாயாவை மிரட்டியது. அப்பாவிற்கு என்று தனியாக பெரிய லோத்தாக்களையும் குவித்து வைத்திருந்தாள். அம்மாவிடம் இருந்து பயத்துடன் ஒதுங்கி நின்ற மாயா, அம்மா ஏன் இன்று இவ்வளவு கண்ணீரை சிந்துகிறாள் என்று புரியாமல் கத்த துவங்கினாள். கண்ணீர் இல்லாத மாயாவின் அழுகை எடுபடவில்லை. கடைசி லோத்தா முறிக்கையில் அப்பா நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் அதன் பிறகு எழாமல் போக, பாட்டியும் அம்மாவும் கட்டிக்கொண்டு அழுவதை பார்த்த மாயா சிரிக்க துவங்கிவிட்டாள். அதன் பிறகு அவளுக்கு அழுகையும் நின்று போனது.

சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே காட்சி பொருளாக இருந்த மாயா சோதனை எலியானாள். மாயாவை அழவைக்கிறேன், கண்ணீர் வரவழைக்கிறேன் பார் என்று அவளுக்கும் இந்த உலகத்திற்குமான உறவு மெல்ல மெல்ல துண்டிக்கப்பட்ட போது நூல் அருந்த பட்டமாக திசைகள் அற்று சூரியனை நோக்கி பறக்க துவங்கினாள். அவள் எவ்வளவு உயரமாக பறக்கிறாள் என்பது அவளின் சத்தமான சிரிப்பில் தெரிந்தது. இதற்கிடையில் பாட்டி பூனையாகவும் அம்மா யானையாகவும் உருமாறினார்கள். அம்மா வீட்டில் இல்லாத போது கூப்பாடு போடும் பாட்டி அம்மாவை பார்த்தவுடன் தும்முவதை கூட நிறுத்துவதை பார்க்கும் போது மாயாவிற்கு சிரிப்பு மட்டுமே சொந்தமாகிப்போனது. மாயா சத்தமா சிரிக்கசிரிக்க ஒரு நாள் பாட்டியின் உயிர் பயத்தில் பிரிந்தது.

யாருமற்ற அனாதையாக சுற்றுவதை விட அம்மாவின் மீது அடிக்கும் பலவித வாசனைகளுடன் சுற்றி திரிய பிரியப்பட்டாள் மாயா. சில நேரம் அம்மா மீது பிணவாடை கூட அடிக்கும். அந்த நாட்களில் மட்டும் தன் தோழிகளின் வீடுகளில் தங்கிக்கொள்ளவாள். அப்படி ஒர் நாளில் காவல்துறையிடம் இருந்து, அழைப்பு வந்தது. அவளுடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக! திறந்த வீட்டிற்குள் அம்மாவும், அவனும் நிர்வாணமாய் கிடந்தனர். அம்மாவின் கைகளில் அவன் ஆண் குறி குழைந்து வழிந்துக்கொண்டிருந்தது.

அம்மா அவனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டதை காவல் துறை உறுதிசெய்து கொண்டது. இப்படி அவள் வாழ்வில் நடந்த துயரங்களை நினைத்து சூரியனை எப்படி உற்றுப்பார்த்தாலும் அவளுக்கு கண்ணீர் என்பதே வருவதில்லை. அதிலும் அம்மாவின் கையில் புழுவாக நெளிந்து கொடிருக்கும் அந்த குறியை நினைத்து விட்டாள் அவளால் நீண்ட நேரம் சிரிப்பை அடக்க முடியாது.

இன்று அந்த சம்பவத்தை நினைத்து நடு வீட்டினுள் உருண்டு சிரிக்க துவங்கியவள், இரவு கிழித்து தூக்கி எறிந்த காகித குப்பைகளை ஒன்றுக்கூட்டி தன் மேனி எங்கும் தூவிக்கொண்டாள். அவனிடமிருந்து வந்த கல்யாண பத்திரிகை அவள் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அதில் ஒட்டிக்கொண்டு வந்த கடிதம்தான் அவளை சிரிக்க வைத்தது.

“துயரங்கள் அற்ற மாயாவிற்கு! உன்னைப்போல் என்னால் மரணங்களை சிரிப்புடன் கடக்கமுடியாது. துயரமே இல்லாத உன்னுடன்தான் வாழ ஆசைப்பட்டேன் ஆனால் துயரத்தை உணர முடியாத உன்னுடன் எப்படி வாழ முடியும், இந்த பிரிவுகூட உனக்கு சிரிப்பை மட்டுமே தரும் என்பது தெரிந்த ஒன்று. ஆடு, மாடுகள் கூட தன் வாழ்வில் நடக்கும் துயரங்களுக்கு கண்ணீர் சிந்துகிறது! ஆனால், நீ? பிறந்ததில் இருந்து கண்ணீர் சிந்தவே இல்லை என்பதை நினைத்தால் உன்னை ஓர் மிருகமாகக் கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன் சிரிப்பை பார்த்துதான் மயங்கினேன்.

அந்த சிரிப்பிற்கு பின்னால் எவ்வளவு குரூரம் உள்ளது என்பதை பார்க்க தவறிவிட்டேன். பெண்களுக்கு சிரிப்பை விட சில இடங்களில் கண்ணீர்தான் அழகு. உன் கண்களில் கண்ணீர் இல்லாமல் போனதற்கு எந்த காரணமாக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் எந்த உணர்வுகளும் அற்ற உன் சிரிப்புடனும், சந்தோசத்துடனும் வாழ்வது கடினம். முடிந்தால் உன் மரணத்திற்காவது அழுதுவிடு அப்பொழுதுதான் உன் பிறப்பு அர்த்தமாகும். என் வாழ்வில் உன்னைமட்டும் நான் மீண்டும் சந்தித்துவிடவே கூடது!” கடிதத்தை மடித்தபோது அவள் சிரிப்பு சத்தத்தில் காகித தூள்கள் வீடு முழுவதும் பறந்தது.

சில மாதங்களுக்கு முன் மாயா எவ்வளவு எடுத்துச்சொல்லியும், பலவித வித்தைகளை அவள் முன் நிகழ்த்திக்காட்டி காதல் என்ற பெயரில் மயக்கியவன். அவள் சிரிக்கும் போது எத்தனை வித அழகுடன் இருக்கிறாள் என்பதை புகைப்படமாக எடுத்து தள்ளினான். பலவிதமான பரிசுப்பொருட்கள். அனைத்திலும், அவள் சிரிப்பை அவன் அதிகம் நேசிப்பதாக பறைசாற்றியது. பழகிய சில மாதங்களில் உடனே பதிவு திருமணம் செய்யவேண்டும், அப்போதுதான் பொங்கள் பகுதியில் அதிநவீன வசதியுடன் வரும் வீட்டில் முன் பதிவு செய்துக்கொள்ளமுடியும் என்று, எப்படி திருமணம் நடக்க வேண்டும், யாரையெல்லாம் கூப்பிடவேண்டுமென பெயர் பட்டியல் எடுத்தவனை சிரிப்புடன் “என்னுடன் ஒரு நாள் உன்னால் வாழமுடியாது! இன்னும் சிறிது காலம் காதலிச்சு பார்” என்று தடுத்தாள். உன் எண்ணத்தைப் பொய்யாக்குகிறேன் என்று அவள் வீட்டில் இரண்டு நாள் தங்கப்போவதாக சொல்லிக்கொண்டு வந்து நின்றவனை மாயா தடுக்கவில்லை.

‘ஒரு பெண்பிள்ளை இப்படியா வீட்டை வைத்திருப்பார்கள்?” என்று திட்டியப்படி கோப்பி குவளைக்குள் பூத்திருந்த பூஞ்சையை வழித் தெரியபோனவனை தடுத்து நிறுத்தியவள், “என்னோடு என்று நான் சொன்னது என் இயல்புகள், ரசனைகள் அனைத்தும் சேர்ந்ததுதான். அதனால், இந்த வீட்டில் எதையும் மாற்ற முயற்சிக்காதே” என்றவள் “உனக்கு கோப்பியா, டீயா?” என்றாள்.
வீட்டை முகச்சுளிப்புடன் பார்த்தவன் சிங்கப்பூர் குப்பை சேகரிக்கும் இடத்தை கூட இந்தளவு மோசமாக தான் பார்த்ததில்லை என நினைத்துக் கொண்டான்.

அவள் என்ன குடிப்பாள் என்று கேட்டவனிடம், என்னைப்போல் உன்னையும் மாற்றிக்கொள்ள முயற்சிக்காதே என்றவள் அவன் கையில் டீ கப்பை கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்துக்கொண்டாள்.

சோபாவில் குப்பையாக கிடந்த புத்தக குவியலில் இருந்து ஒன்றை உருவிக்கொண்டாள். சிரமப்பட்டு அவள் கன்னம் தடவிக்கொண்டிருந்தவனுக்கு ஏதுவாக கன்னம் காட்டி அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.
“இதற்கு முன் நீ யாரையாவது காதலித்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாயா?” தயக்கத்தோடு அவன் முடிப்பதற்குள் மாயா அவன் கன்னம் திருகி சிரித்தாள். ‘அதெப்பெடி பெண்களுக்கு மட்டும் கற்பும், காமமும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை மாதிரி ஒருத்தனிடம் மட்டுமே வரவேண்டும்’ அவள் கண் சிமிட்டவே அவன் வழிந்து குழைந்து அவளை தழுவிக் கொண்டான்.

‘என் வாழ்க்கையில் அப்படி ஒருவனை நான் இதுவரை கடந்தது இல்லை, உன்னையும் சேர்த்தே சொல்கிறேன்! நான்தான் பலருக்கு சோதனை எலியாக இருந்து இருக்கிறேன். ஆனால் நீதான், என்னிடம் சிக்கிய முதல் சோதனை எலி! உன்னை வைத்துதான் அதற்கெல்லாம் நான் சரிப்படுவேன என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்” என்று சிரித்தவளை இறுக்க அனைத்துக்கொண்டான்.

“உனக்கு வருத்தம் என்பதே வராதா? இந்த தனிமை, யாருமற்ற சோகம், எதுவும் உனக்கு கண்ணீரை தரவில்லையா? இப்படி இந்த வீட்டில் உன்னை பார்க்க எனக்கு பயமா இருக்கு! என்ன ஜென்மமோ போ!’ என்றவன் அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
கொடி படர போடப்பட்ட பந்தல் உயிரற்று கிடப்பது போல் இரவு முழுவதும் அவன் படர படர அவள் உயிரற்ற பிணம் போல் கிடந்தாள். அவனின் முத்தம், இறுக்கம், ஆண்மை, வேகம், காமம் அனைத்தும் அவளிடம் மன்றாடி கெஞ்சி அழைத்தது. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் சிரிக்க துவங்கி விட்டாள். அவள் பார்த்த சினிமா, படித்த புத்தகம், ஓரக்கண்ணால் ரசித்த காதல் எதுவும் அவனிடம் தோன்றாமல் போனது.
முதல் நாளே அவன் உணர்ந்து கொண்டான். அவளை சந்தோசமாக சிரிக்க வைக்கவும், துயரத்துடன் கண்ணீர் சிந்த வைக்கவும் முடியாதென.

இதைத் தெரிந்துகொண்ட போது காதல் வடிந்து காமம் மட்டுமே தலைக்கேறியது. மூர்க்கமாக அவன் செயல்பட்ட போதும் அவள் எதிர்ப்பின்றி கிடந்தாள். தன் உடல் இதற்கு முன்னர் என்னவெல்லாம் எதிர்வினையாற்றியது என்னும் எண்ணத்தில் கடந்த காலமும் நிகழ் காலமும் மாறி மாறி அவள் முன் வந்து போனது. இப்படித்தானே அன்றும். தலையில் முடிகளே இல்லாத அந்த சொட்டைத் தலையன், நாற்றம் பிடித்த உடலும் மதுவீச்சம் கவிந்த வாயுமாய் தன் மீது படர்ந்தான், அம்மாவின் காதலனை எப்படி அழைப்பது? அவள் தன் உயிரின் ஆணி வேரெல்லாம் கலங்க தலையணை அடியில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து சத்தமில்லாமல் சிரித்தாள். அன்று அம்மாவின் மீது மட்டும்மல்ல மாயாவின் மீதும் பிண வாடை வீசியது. ஐந்தாவது முறையாக குளித்துவிட்டு வந்த மாயாவை அம்மாவின் காதலன் அவளை அள்ளி அனைத்துக்கொண்டான்.

குடித்துவிட்டு நிர்வாணமாய் நின்றவனை எவ்வித பதட்டமின்றி சிறு புன்னகையுடன் கடக்க முயன்றவளை மேலும் இறுக்க அனைத்துகொண்டாள். அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாதவன் அவள் ஆடைகளை களைத்துப் கழுத்துக்குள் முகம் புதைக்கையில் அவன் குறி மாயாவின் கைகளில் இருந்தது. அன்று சிரித்தது போல் அவள் இதுவரை சிரித்ததே இல்லை. சிரிப்பு குறையாமல் அவனை இழுத்துவந்து, போதையில் சுயநினைவு அற்றுக் கிடந்த அம்மாவின் அருகில் போட்டவள், அவன் குறியை அம்மாவின் கையில் திணித்து விட்டு, புன்னகையுடன் அம்மாவின் மணிக்கட்டில் அதே கத்தரிக்கோலால் சின்னதாக ஒரு கோடும் போட்டுவிட்டாள். மறந்து போன சம்பவம் ஏனோ தெரியவில்லை இன்று நினைவுக்கு வர கையில் இருந்த கத்தரிக்கோலை தூர வீசிவிட்டு தாமரை இலையில் நீர் திவலை ஒட்டமுடியாமல் உருண்டுக் கொண்டிருப்பது போல் அவன் புணர்ந்து கொண்டிருக்கையிலேயே உறங்கிப்போனாள்.

தூங்குவதற்கு முன்பு அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயம் தெரிந்திருந்தது விடிவதற்கு முன்பே அவன் சென்றுவிடுவான். அப்படித்தான் நடக்கவும் செய்தது. இப்போதெல்லாம் மாயாவிற்கு அந்த கேள்வி தோன்றுவதே இல்லை ‘எனக்கு ஏன் கண்ணீர் வருவதில்லை!’

****

Comments are closed.