முத்தொள்ளாயிரம் ( 2 ) / வளவ.துரையன் ( கடலூர் )

[ A+ ] /[ A- ]

14212844_879713405467804_3754012655543410611_n

முத்தொள்ளாயிரம்—26.

அறிவார் யார்?

அறிவார்யார் யாமொருநாள் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமேல் நடந்து—மறிதிரை
மாடம் முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட ஒருநாள் பெற.
[செறிவு=தலைவியை அடைத்து வைக்கும் காவல்; முரிஞ்சும்=உராயும்]
இந்தப் பாட்டு ஒரு தலைவி தன் தோழிகிட்ட சொல்றது.
”தோழீ, நாம் ஒரு நாளைக்காவது மதுரைக் கோமான் பாண்டியனுக்குப் பொண்டாட்டியா இருக்கறதுக்கு வழி சொல்றவங்க யாருடி? இப்படி என்னப் பாதுகாத்து வச்சிருக்கறவங்க தலைமேல் நடந்து போய் வைகை ஆத்துத் தண்ணி அலையெல்லாம் உராய்கிற மாடமெல்லாம் இருக்கற மதுரைக்கு மன்னனாகிய பாண்டியனை ஒரு நாளைக்காவது சேர்றதுக்கு வழி சொல்வார் யாரடி?”
ஒருநாளு அவன் கூட வாழ்ந்தா கூடப் போதும்றா; இதேபோலக் குறுந்தொகையில ஒரு பாட்டு வரும்.
”ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே”

===

முத்தொள்ளாயிரம்—27

எதனைப் பெறாமல் வாடும்?

கைய[து] அவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங்[கு] ஈன்ற செழுமுத்தால்—மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியில் சந்தனமால்
என்பெறா வாடுமென் தோள்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “ தோழீ, என்கையில நான் போட்டிருக்கற வளையெல்லாம் அந்தப் பாண்டியனோட கடலிலேந்து எடுக்கப்பட்ட சங்கிலேந்து செஞ்ச வளையல்கள்தாம்; போட்டிருக்கற நகையெல்லாம் அவன் கடலோட சங்கு ஈன்ற முத்தால செஞ்சதுதான். என்ஒடம்புல நான் பூசியிருக்கற சந்தனமும் வெற்றியே கொள்ற வேலை வச்சிருக்கற பாண்டியனோட பொதிகமலையிலிருந்து வந்த்துதாம்; இதெல்லாம் போதும்னு நெனக்காம இன்னும் என் தோளெல்லாம் இன்னும் வாடுதுடி; வேற இன்னும் என்ன பெறணுமாம்?

முத்தொள்ளாயிரம்—28

வயமான் வழுதி

நாணாக்கால் பெண்மை நலன்அழியும் முன்னின்று
காணாக்கால் கைவளையும் சோருமால்—காணேன்நான்
வண்[டு]எவ்வம் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்[டு]எவ்வம் தீர்வதோர் ஆறு
[வழுதி=பாண்டியன்; எவ்வம்=துன்பம்; வயமான்=வலிமயான குதிரை]
பாண்டியன்கிட்ட காதல் வச்சிருக்கற ஒரு பொண்ணு தன் தோழிகிட்ட சொல்றா.
”வண்டெல்லாம் எப்படிப் பசியாறும் தெரியுமாடி; தேனக் குடிச்சுதான; அந்தத் தேனிருக்கற பூக்களால கட்டப்பட்ட மாலையாத்தான் அவன் போட்டிருக்காண்டி; அவன் வலிமையான ஒரு குதிரைப் படையை வச்சிருக்காண்டி; அப்படிப்பட்ட அந்தப் பாண்டியனைப் பாக்காம இருந்தாலோ என் தோளெல்லாம் மெலிஞ்சு போயிடும்டி; கைவளையெல்லாம் சோந்துபோயிக் கழண்டு போயிடும்டி; சரி; அவனைப் போய் பாக்கலாம்னா வெக்கம் வந்து தடுக்குதடி; வெக்கப்படாட்டா நானும் ஒரு பொண்ணாடி; என்ன செய்யறுதுன்னு தெரியலடி; இந்தத்துன்பம் தீர ஒரு வழியும் தெரியலயேடி”

முத்தொள்ளாயிரம்—29

கோட்டுமண் கொள்ளல்

வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல்
ஏரிய வாயினும் என்செய்யும்—கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந்[து] அணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை
[வாருயர் பெண்ணை=நீண்டுயர்ந்த பனை]
கோட்டு மண் கொளல்னா என்னா தெரியுமுங்களா? தலைவன் இருக்கான்ல; அவனோட ஒண்ணா சேந்து தலவி தழுவற பொது அவன் மார்பில இருக்கற சந்தனம் போன்றதெல்லாம் இவள் மார்பில் வந்து படியறதுதாங்க; இதைச் சீவக சிந்தாமணியிலயும் பாக்கலாமாம்.
கோட்டுமண் கொண்ட மார்பன் கோதைவாள் குளித்து மூழ்கிக்
கோட்டுமண் கொள்ளா நின்றாள் குரிசில்மண் கொள்ள நின்றாள்
அவ தன் நெஞ்சுகிட்டயே சொல்லிக்கறா; “நெஞ்சே! என்னுடைய முலையெல்லாம் உயரமான பெரிய பனையோட குரும்புபோல அழகாத்தான் இருக்கு; ஆனா இந்தப் பாண்டியன் இருக்கானே? அவனுக்குக் கூர்மையான கொம்பெல்லாம் இருக்கற யானைகளோட படை உண்டு. அப்படிப்பட்ட அவனோட மார்பில சந்தனம் பூசிய கலவை இருக்கும்; அந்தக்கலவையோட அழுந்தித் தோய்ந்து அந்தக் கலவையை உச்சியிலயும் அடியிலயும் கொள்லாத இந்த என் முலை அழகாக இருந்தாலும் பயனில்லையே!

முத்தொள்ளாயிரம்—30

எல்லாம் எனக்கு

ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி இருந்தாள் எனவுரைப்பர்—வேற்கண்ணாய்
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோ இடர்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “வேலைப்போல அழகான கண்ணு இருக்கற என் தோழியே! எதிரியைக் கொல்ற யானப்படை இருக்குது பாண்டியன்கிட்ட; அவனோட குளிரான தண்ணி உள்ள வைகை ஆத்துல நான் நல்லா உள்ள மூழ்கிக் குடைந்து குளிச்சா ஒடனே, அங்க இருக்கறவங்க, “ஓகோ! இவ அந்தப் பாண்டியன்கிட்ட வச்சிருக்கற காதல் அதிகமாயிடுச்சா; அதனாலதான் இப்படிக் குளிக்கறா”ன்னு ஏசுவாங்க; குளிக்காம இருந்தாகூட ஒடனே, ”ஓகோ! இவ பாண்டியன் மேலே வச்சிருக்கற காதலு வெளிய தெரிஞ்சுடும்னு குளிக்காம இருக்கா”ன்னு சொல்வாங்க; இப்படிக் குளிச்சாலும் சரி குளிக்காம இருந்தாலும்சரி எல்லாமே எனக்குத் ஒரே தும்பமா இருக்கேடி; நான் என்னா செய்வேன்”

முத்தொள்ளாயிரம்—31

இழையாது இருக்கும்

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடென்று—கூடல்
இழைப்பான்போல் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பிற் பிழைபாக்[கு] அறிந்து
அந்தக் காலத்துல ‘கூடல் இழைத்தல்’னு ஒண்ண் இருந்ததுங்க; அதாவது பொண்ணுங்க ஏதாவது மனசில நெனச்சது நடக்கணும்னு வேண்டிக்கிட்டு, மணல்ல வட்டம் போடுவாங்க; அப்பறம் அந்த வட்டத்துல சின்ன சுழியா போட்டுக்கிட்டே வருவாங்க; கடைசில எல்லா சுழியையும் எண்ணிப் பாப்பாங்க; அது ஒத்தப் படையா வந்தா நெனச்சது நடக்காதாம்; ரெட்டப் படையா வந்தா நெனச்சது நடக்குமாம்;
ஒருத்தி இதே மாதிரி சுழி போடற மாதிரி போட்டா; ஆனா பாதியிலேயே நிறுத்திட்டா; அப்ப தோழி தன் நெஞ்சுக்குள்ளேயே சொல்லிக்கறா;
“ஏ கூடற் சுழியே! நான் மதுரையில இருக்கற கூடல் பெருமானான என் பாண்டியனைக் கூடுவேன்னு நீ நெனச்சா நல்லாப் பொருந்தி வா”ன்னு தலைவி நெனச்சுக்கிட்டான்னு நாம நெனக்கணும்னு மொதல்ல ஆரம்பிச்சா; ஆனா அது தவறிப்போயி பொருந்தாம தவறிப் போனா என்னா செய்யறதுன்னு பயம் வந்துடுச்சி; அதால சுழிக்கறது போலக் காட்டினவ இன்னும் சுழிக்காமலேயே இருக்கா”

முத்தொள்ளாயிரம்—32

தமிழ்நர் பெருமான்

என்னை உரையல்என் பேர்உரையல் ஊர்உரையல்
அன்னையும் இன்னள் என உரையல்—பின்னையும்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்[கு]என்
கண்படா வாறே உரை
[உரையல்=சொல்லாதே; தண்படா=குளிர்ந்த தன்மை பொருந்தாத]
தலைவி தன் தோழிகிட்டத் தான் பாண்டியன் மேல் காதல் வச்சிட்டதைப் போய் சொல்லச் சொல்றா; ஆனாலும் அவ பொண்ணு இல்லையா? தன்னைப் பத்தி வெளிப்படையா சொல்லக்கூடாதுன்னு நெனக்கறா; அதே நேரத்துல குறிப்பா சொன்னாலே போதும்; அவளப் பத்திப் பாண்டியன் தெரிஞ்சிப்பான்னு அவ நெனக்கறா;
”தோழீ! பாண்டியனோட யானை இருக்கே; குளிர்ந்த தன்மைக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே! அப்படிப்பட்ட யானையை வச்சிருக்கற பாண்டியன்கிட்ட போயி என்னப் பத்தி நீ சொல்லணும்; ஆனா இன்ன தெருவில இன்னாருடைய பொண்ணுன்னு எதுவும் சொல்லாத; சொல்லிட்டா என்னாடா வெக்கமில்லாம சொல்லி அனுப்பிச்சிட்டாளேன்னு என்னைப் பத்தி அவன் நெனச்சுடுவான்; அதால என் பேரச் சொல்லாதே; என் பேரைச் சொன்னா எனக்குப் புடிச்ச பொண்ணு பேரு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே! அவ சொல்லி அனுப்பி ஒரு தோழியும் வந்துட்டாளேன்னு அவன் நெனப்பான்; என் ஊரையும் சொல்லாதே; என் அம்மா இப்படிப்பட்டவன்னு சொல்லாதே; இதெல்லாம் நீ சொல்லக்கூடாது; ஆனா பொதுவா யாரோ ஒருத்தர் கிட்ட சொல்றதுபோல ஐயோ; பாவம் ஒரு பொண்ணு இன்னும் தூங்காமலே ஏங்கிக்கிட்டிருக்கான்னு அவன் காதுல உழற படற மாதிரி நீ சொன்னா போதும்”

முத்தொள்ளாயிரம்—33

இளையளாய் மூத்திலள் கொல்லோ

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ—தளைஅவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கலென் பாள்
[வாட்கணாய்=வாள்போன்ற கண்களை உடைய பெண்; தளைஅவிழ்ந்த தார்=கட்டு அவிழ்ந்த பூமாலை; தானை=படை; மாறன்=பாண்டியன்]
அவனைப் பாக்காதேன்னு சொல்லிட்ட தன்னோட அம்மாவப் பத்தி அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டி இது:
”நல்லா அழகா வளையலு போட்டிருக்கற, வாள் போல கூரா கண்ணு உள்ள என் அருமத் தோழியே! நான் சொல்றதக் கேளு; என் அம்மா அந்தப் பாண்டியனப் பாக்காதேன்னு சொல்றா; எந்தப் பாண்டியனத் தெரியுமா: அவன் தோள்ள அரும்புக் கட்டு அவிழ்ந்து போன மாலை இருக்கும்; எதிரின்னு ஒத்தன் வந்துட்டான்னா அவனைக் கொன்னுபோட்டு, அவன் நெலத்தைப் பாண்டியன் எடுத்துக்குவான்; அவன் வேலே வீரத்தோட கோபத்தோடே இருக்கும்; அப்படிப்பட்ட பாண்டியனக் கண்ணால பாக்கக்கூடாதுன்னு சொல்றாளே எங்கம்மா; இப்ப எளமையா இருக்கற என் நெலமய அவ புரிஞ்சுக்கலியே? ஏன்? ஒருவேளை அவ எளமையாவே இருந்ததில்லையாடி; இப்ப இருக்கற கெழவியாத்தான் என்னிக்குமே இருந்தாளா?

முத்தொள்ளாயிரம்—34

அம்மனைக் காவலுளேன்

கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்—தொடிஉலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவேனோ யானுமோர்
அம்மனைக் காவல் உளேன்
[கொய்தண்தார்=பூக்கள் கொய்து உடனேயே கட்டப்பட்ட மாலை; தொடி உலக்கை=பூண் கட்டப்பட்ட உலக்கை; ஓச்சல்=உலக்கியைக் குத்துவதற்காக உயரே தூக்குதல்; அம்மனை=ஒப்பற்ற தாய்]
இந்தப் பாட்டுல அந்தக் காலத்துல ஒலக்கையால எப்படிக் குத்துவாங்கன்னு சொல்லப்படுது. ஒலக்கை குத்தற பொண்ணுங்க பாட்டுப்பாடிக்கிட்டே குத்துவாங்களாம்; அதே போல ஒரு ஊட்ல இருக்கற பொண்ணுங்க அவங்க மனசில யாரை நெனச்சுக்கிட்டு இருக்காங்களோ அவனோட பேரு, தெறம எல்லாத்தையும் சொல்லிப் பாட்டுப் பாடி ஒலக்கை குத்தறாங்க; அதைக் கேட்டுட்டு அவ தன் மனசுக்கு சொல்றா.
” மனமே! என் அம்மா என்னை இப்படி ஊட்லயே அடைச்சுப் போட்டுட்டா; நானும் அடங்கிக் கெடக்கறேன்; அதோ அவங்கள்ளாம் பாட்டுப் பாடிக்கிட்டு ஒலக்கை குத்தறாங்க; நானும் அப்ப பூத்த பூக்களால கட்டின மாலையை போட்டிருக்கற பாண்டியனோட கொடி, தேரு, தலையில அணிந்திருக்கற முடி, மார்பில போட்டிருக்கறா முத்தாரம், இதைப் பத்தியெல்லாம் பாடி பூண் போட்டிருக்கற ஒலக்கையை எப்ப குத்துவேனோ?”

முத்தொள்ளாயிரம்—35

வெறுங்கூடு காவல்

கோட்டெங்கு சூழ்கடல் கோமானைக் கூடஎன
வேட்டாங்குச் சென்றஎன் நெஞ்சறியாள்—கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்
[கோட்டெங்கு=தேங்காய்க் குலைகள் உடைய தென்னைகள்; குறும்பூழ்=காடை என்னும் பறவை;]
வேடர்கள் காடையைப் புடிக்கறதுக்காக தாங்களே ஒரு காடையை கூட்டில வச்சு வளத்து வருவாங்களாம். அதுக்குப் பார்வைக் காடைன்னு பேரு. வலையைக் கட்டிட்டு அதுக்குப் பக்கத்துல இந்தப் பார்வைக் காடை இருக்கற கூட்டை வச்சிடுவாங்க. இந்தக் காடை சத்தம் போடும். அதைக் கேட்டுட்டு வர்ற காடைங்க வலையில மாட்டிக்கும். ஒரு நா அந்தக் கூட்டிலிருந்த பார்வைக் காடை எப்படியோ பறந்து போச்சு. அது கூடத் தெரியாம அந்த வேடன் அந்தக் கூட்டை மட்டும் இன்னும் காத்துக்கிட்டிருக்கானாம். அதைச் சொல்லி தன் நெஞ்சுகிட்ட ஒருத்தி சொல்றா;
நெஞ்சமே! தேங்காய்க் குலையெல்லாம் நெறய இருக்கற தென்னை மரமெல்லாம் இருக்கறதுதான் பாண்டிய நாடு. அவனைப் போயி கூடணும்னு என் நெஞ்சு எப்பவோ பறந்து அவன்கிட்ட போயிடுச்சு; ஆனா அது தெரியாம வேடன் ஒருத்தன் கூட்டுக்காடை பறந்து போனது தெரிஞ்சுக்காம வெறுங்கூட்டைக் காவல் காத்தானாமே, அதேபோல என் அம்மா என் வெறும் ஒடம்பை ஊட்ல வச்சுக் கதவைச் சாத்தி காவல் காக்கிறாளே!

முத்தொள்ளாயிரம்–36

நானும் இழக்கிறேனே!

களியானைத் தென்னன் இளங்கோஎன்[று] எள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க—அணியாகங்
கைதொழ தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்
[அணியாகம்=அழகிய மார்பு; களியானை=மதக்களிப்புள்ள யானை; நறுமா=நல்ல மணமுள்ள மாமரம்; கொய்தளிர்=கொய்யும் தன்மையுள்ள மாந்தளிர்]
அவ பாண்டியன் கிட்ட காதல் கொண்டாச்சு; அவனைப் பிரிஞ்சு இருக்கறதால அவ ஒடம்பு பசலை பூத்துடுச்சு; நெறம் எல்லாம் மாறிப் போச்சு; அப்ப அவ தன் மனசுக்கிட சொல்றா;
”ஏ மனமே! பாண்டியன்கிட்ட மதம் புடிச்ச யானையெல்லாம் இருக்கற பெரிய யானைப் படை இருக்கு; அதக் கூட நெனக்காம அவனைச் சின்ன பையன்ன்னு நெனச்சுக்கிட்டு வணங்காம ரொம்பத்தான் எளக்காரமா பேசினாங்களே; அதுக்காக அவங்களோட நெலம் நாடு எல்லாம் போக வேண்டியதுதான்; ஆனா அவன் தெருவில போகச்சே அவனோட அழகான மார்பைப் பாத்து நான் வணங்கினேனே? அப்படி இருக்கச்சே ரொம்ப லேசாப் பறிக்கற மாங்கொழுந்து போல மென்மையா இருந்த என் ஒடம்பு நெறத்தை நான் இழக்கிறேனே; இது சரியா”

முத்தொள்ளாயிரம்—37

எவ்வாறோ?

கனவை நனவென்[று] எதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும்—புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்
தன்கண் அருள்பெறுமா தான்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “நகையெல்லாம் அழகா போட்டிருக்கற என் தோழியே! இதைக் கேளு. இந்தப் பாண்டியனை நேராப் பாக்கும்போது அவனைப் பாக்கறதுக்கு வெக்கம் வந்து என் கண்ணெல்லாம் பாக்கமாட்டேங்குது. ஆனா கனவில அவன் வரான் இல்ல; அப்ப அதைக் கனவுன்னு நெனக்காம அவனைப் பாக்குது; இப்படி என் கண்ணெல்லாமே எனக்கு எதிரியா மாறிட்டா நான் அவன்கிட்ட அன்பு வாங்கி அடையதுதான் எப்படிடி?”

முத்தொள்ளாயிரம்—38

கைதிறந்து காட்டேன்

தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன்—வளைகொடுபோம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்[து]
என்கண் புகுந்தான் இரா.
[மால்யானை=பெரிய மத யானை; இரா=இரவு; தளையவிழும்=அரும்புக் கட்டு அவிழ்ந்த; கோதை=மாலை; வன்கண்ணன்=அஞ்சாதவன்; வாண்மாறன்=வாள் ஆகிய ஆயுதம் உடையவன்; வளைகொடுபோம்=வளையலைத் திருடிக்கொண்டு போகிற]
அந்தக் காலத்துல பெத்த தாயின்னு ஒருத்தரும் வளக்கற தாய்னு ஒருத்தரும் இருப்பாங்க; வளக்கற தாயிக்கு செவிலித்தாய்னு பேரு; இந்தப் பாட்டு தலைவி தன் செவிலித்தாய்கிட்ட சொல்ற பாட்டாம்;
”நீங்கள்ளாம் எனக்கு பூ மாலை போட வந்திருக்கீங்க; அந்த மாலையும் இன்னும் அரும்பு கட்டு அவிழ்க்காத பூக்களால கட்டினதுதான்; அன்னிக்கு ஒரு நா வந்து என் வளகளை எல்லாம் திருடிக் கொண்டு போன யாருக்கும் பயப்படாதவன்தான் அவன்; பெரிய வாளை வச்சிருக்கறவன்; நேத்து ராத்திரி பெரிய யானையோட வந்து என் கண்ணுள்ள புகுந்துட்டான். நான் கண்ணைத் தொறந்துட்டா அவன் ஓடிடுவான்; அதால என் உயிரையே எடுத்தா கூடநான் என் கண்ணைத் திறக்க மாட்டேன்”
இதுல ஒரு நயம் இருக்கு. ஒரு நா அவ தோட்டத்துல போகச்சே அவ வளையலு அவளுக்கே தெரியாம கழண்டு விழுந்துடுச்சு; அன்னிக்கு ராத்திரி அவன் கனவுல வந்தான்; கையைப் புடிச்சான்; அதால காலையில வளையல அவன்தான் திருடிக்கினு போயிட்டான்னு நெனச்சாளாம்.

முத்தொள்ளாயிரம்—39

நல்வினை ஒன்றில்லேன்

ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன்என் கைப்பற்ற—வாரா
நனவென்[று] எழுந்திருந்தேன் நல்வினைஒன்று[] இல்லேன்
கனவும் இழந்திருந்த வாறு
[ஓராற்றால்=ஒருவகையால்]
தலைவி தோழிகிட்ட சொல்றா
”தோழி! அன்னிக்கி ஒரு நா ராத்திரி ரொம்ப நேரமா தூக்கமே வரலை; கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வகையா கண்ணு ரெண்டும் மூடிச்சு; அப்ப என்னாச்சு தெரியுமா? கூர்மையான வேலை வச்சிருக்கற பாண்டியன் வந்தான்; என் கையைப் புடிச்சான்; அது கனவுன்னு எனக்குத் தெரியேலேடி; உண்மையிலேயே வந்து என் கையைப் புடிக்கறான்னு நெனச்சு நான் பட்டுன்னு எழுந்திருச்சுட்டேன்; அதால கனவும் கலைஞ்சு போச்சு; பாருடி; கனவுல கூட அவனை அணைக்கற நெலமை எனக்கு வரலியே; அதையும் எழந்திட்டேனே! நல்ல காரியம் நான் ஒண்ணுமே செய்யலியா? ஏண்டி எனக்கு இந்த மாதிரி நடக்குது?

முத்தொள்ளாயிரம்—40

திரைவரவும் உரைவரவும்

உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத்[து] ஈன்றசைந்த சங்கம்—புகுவான
திரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு
[உகுவாய்=மணல் உதிர்கின்ற கடற்கரை விளிம்பு; நகுவாய் முத்து=ஒளிவிட்டு விளங்கும் முத்து; புகுவான்=கடலினுள் புகும்பொருட்டு; திரை=அலை]
அருமையான ஓர் உவமை இந்தப் பாட்டுல சொல்றாங்க; அதாவது ஒரு தலைவி தன் மனத்தைப் பாண்டியன்கிட்ட தூது விடறா; அப்புறம் மனசோட சொல்லிக்கிறா;
”கடல்ல அலையெல்லாம் வந்து மோதும்; அங்க இருக்கற மணல் மேட்டை அரித்து மணல் குறைஞ்சு போயிடும்; விளிம்பு மட்டும் தெரியும்; அந்த மணல்மேட்டில கடல்லேந்து கரையில் வந்து மோதற அலைமேலே ஏறிக்கிட்டு சங்கு வரும்; அது மணல் மேட்டில முத்தை ஈனு வச்சுடும்; அதனால உண்டான தளர்ச்சியால கொஞ்ச தூரம் போயி நிக்கும்; அத்தோட அது மறுபடியும் கடல் உள்ள போறதுக்குப் பெரிய அலை எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கும்; அதேபோல கொற்கையை ஆளுற பாண்டியனோட அரண்மனை வாசல்ல போயி என் மனசு நிக்கும். அவன் எப்ப நம்ம கூப்பிடுவான்னு அவன் கட்டளையை எதிர்பாத்துக் காத்துக்கிட்டு இருக்கும்”

முத்தொள்ளாயிரம்—41

மாறடு போர்மன்னர்

மாறடு போர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ! குளிர்வாடாய்!—சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியில் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை
[மாறுஅடு=பகையை அழிக்கும்; மதிக்குடை=சந்திரன் போன்ற குடை; ஆரம்=சந்தனம்; வாரம்=அன்பு]
இந்தப் பாட்டுல வாடைக் காத்த தலைவி தூது விடறா; அவ சொல்றா,
“ ஓகோ! நீதான் வாடைக் காத்தா? நான் வேற யாரோன்னுதான் நெனச்சேன்; குளிரான வாடையே! நீ தெற்கதான போற? அங்க சோறு பொங்கறவங்க கூட சந்தனக் கட்டையால தீ மூட்டுவாங்களாம்: அந்த எடம் தான் பொதிய மலையாம்; அதுக்குத் தலைவனான பாண்டியன்கிட்ட வச்சிருக்கற அன்பாலதான் நான் என் வளையலைத் தோத்தேன்; அவன்கிட்ட போயி சொல்லு;
”எதிரிங்களை எல்லாம் கொன்னு போடற தெறமையான அவன் வச்சிருக்கற வெள்ளையான குடையோட தகுதிக்கும், கையில வச்சிருக்கற செங்கோலுக்கும் இத மாதிரி அவன்கிட்ட அன்பு செலுத்தற ஒரு பொண்ணை வருந்த உடறது நியாயமான்னு கேளு”

முத்தொள்ளாயிரம்—42

நகுவாரை நாணி

புகுவார்க்[கு] இடம்கொடா போதுவார்க்[கு] ஒல்கா
நகுவாரை நாணி மறையா—இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றஎன் நெஞ்சு
புகுவார்=உள்ளே செல்பவர்; [கொடா=கொடுத்து; போதுவார்=வெளியே செல்பவர்; இகுகரை=தாண்டிச் செல்லக் கூடிய கரை; ஏ=அம்பு; ஏமான்=அம்பு எய்யப்பட்ட மான்; பிணை’பெண்மான்]
இந்தப் பாட்டுல ஒரு காட்சியையே நாம பாக்கலாம். ஒரு காடு; அங்க ஒரு ஆண் மானும் பெண்மானும் கூடிக்கிட்டு இருந்துச்சு;. அத ஒரு வேடன் பாத்தான்; ஒடனே அம்பு போட்டான்; ஆண்மான் கரையைத் தாண்டி ஓடிப் போச்சு. பெண் மான்மேலே போயி அம்பு தைச்சுடுச்சு; அம்போடயே பெண்மான் பொதர்லே மறைஞ்சு கெடந்தது. போறவங்க எல்லாரும் போகட்டும்; அப்பறம் நாம போயிடாலாம்னு நெனச்சது. அதோட போறவங்க எல்லாரும் நம்ம நெலயப் பாத்தா சிரிப்பாங்களேன்னு நெனச்சு வருந்திச்சு.
இதைச் சொல்லி தலைவி, தோழிகிட்ட சொல்றா, “ தோழி! பாண்டியன் பின்னாலயே என் மனம் போச்சுடி; அவனோட அரண்மனை வாசல்ல நின்னுக்கிட்டு உள்ளேந்து வர்றவங்களுக்கு வழி கொடுத்து, உள்ள போறவங்களுக்கும் வழிவிட்டு அவன் எப்ப தனியா இருப்பான்னு பாத்துக்கிட்டு அம்பு தைச்ச பெண்மான் போல நிக்குதுடி”
மானோட ஒடம்புல வேடனோட அம்பு தைச்சதும், அவளோட மனசில காமன் அம்பு தைச்சதும்தான் இங்க நல்ல நயம்.

முத்தொள்ளாயிரம்—43

மணவா மருண்மாலை

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாள் போல
அணியிழை அஞ்ச வருமால்–மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து
[பிணி=நோய்; அணி=அணிகலன்; மருண்மாலை=மயக்கம் தரும் மாலை]
இது தலைவி தோழிகிட்ட சொல்லற பாட்டு
“நல்லா நகையெல்லாம் போட்டிருக்கற தோழியே! பாண்டியன் யானை மேலே ஏறி வருவான். அந்த யானையோட ரெண்டு பக்கமும் ’கணீர் கணீர்’னு சத்தம் போடற மணியெல்லாம் கட்டித் தொங்க விட்டிருப்பாங்க; அவனோட கூட முடியாத இந்த மயக்கமான மாலைப் பொழுதிலே இந்த வாடைக் காத்து வந்து துன்பப்படுத்துது; பொதுவா நோயில கெடக்கறவங்களுக்குப் பொறந்த நாளு வந்தா அன்னிக்கு நோயி அதிகமா வாட்டுமாம். அதுபோல இந்தக் காத்து வந்து ரொம்ப துன்பம் தருதே நான் என்ன செய்வேண்டி?

முத்தொள்ளாயிரம்—44

புல்லப் பெறுவேனோ?

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்— கண்டக்கால்
பூணாகத் தாஎன்று புல்லப் பெறுவேனோ
நாணோ[டு] உடன்பிறந்த நான்
[மாணார்=பகைவர்; கடந்த வென்ற; மறம்=வீரம்; வெம்போர்=கொடும்போர்]
தலைவி தன் நெஞ்சுகிட்ட சொல்ற பாட்டு இது.
”ஏ! மனமே! என் பாண்டியன் தன் எதிரிங்களை எல்லாம் சண்டையில தோக்கடிச்சு வெற்றி பெற்றவன்; அவனைப் பாக்காத போது ,’நீ போட்டிருக்கற வேப்பம்பூ மாலையைத்தான்னு கேட்டு வாங்கிப் போட்டுக்குவேன்; அவன் தோள்ல சாஞ்சுக்குவேன்; அவனோட ஆடுவேன்; மயங்குவேன்; ஊடுவேன்; தேடுவேன்; என்னென்னமோ ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவேன்; ஆன நேர பாத்துட்டா வெக்கம் வந்து தடுக்குதே! அப்படிப்பட்ட வெக்கதோடயே இருக்கற நான் அவன்கிட்டப் போயி ’நீ என்னா நகை போட்டிருக்க; சொல்லு பாப்போம்’னு கேட்டுக்கிட்டுப் பக்கத்துல போயி அவனோட மார்போட தழுவிக் கிடப்பேனோ; சொல்லு பாப்போம்”

முத்தொள்ளாயிரம்—45

வல்லே புலர்க

புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா இரவே நெடிதென்பர்—நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந்[து] அகலம்
இராவளிப் பட்ட திது
[புல்லாதார்=தழுவாதார்; வல்லே=விரைவாக; புல்லினார்=தழுவியவர்; புலர்க என்பர்=விடிக என்பர்; விராமலர்=பலவகை மலர்; சாந்தகலம்=சந்தனம் பூசிய மார்பு]
அவ பாண்டியன்கிட்ட மனசைப் பறிகொடுத்திட்டா; ராத்திரியில தன் மனசுக்குள்ளியே பொலம்பறா.
ஏ மனசே! நல்லா பல நெறமான மலரெல்லாம் ஒண்ணா சேத்துக் கட்டின மாலையைப் போட்டுக்கிட்டுருக்கான் பாண்டியன்; அவனோட சந்தனம் பூசி இருக்கற மார்பை நல்லா தழுவினவங்க எல்லாம், ராத்திரியைப் பாத்து, “ஏ ராத்திரியே! இரு;இரு; சீக்கிரம் போயிடாத”ன்னு சொல்லுவாங்க; ஆனா அவன் மார்பைச் சேராதவங்க எல்லாம், “ஏ! ராத்திரியே! போ, போ, சீக்கிரம் போய் விடிஞ்சுடு”ன்னு சொல்லுவாங்க;
இரா அளிப்பட்டதுன்னு வர்றத ஒரு பொருளா “ராத்திரி அவங்களுக்குக் கொடுத்தது இதுதான்”ன்னு சொல்லலாம்; இன்னொரு பொருளா ”பாவம்தான்; அவங்கள ராத்திரி தொல்லைப்படுத்து”ன்னு இரக்கமா சொல்ல வைக்குதுன்னு எடுத்துக்கலாம்.

முத்தொள்ளாயிரம்—46

கருதியார் கண்

இப்பிஈன் றிட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது—கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந்[து] அகலங்
கருதியார் கண்ணும் படும்

[இப்பி=முத்துச் சிப்பி; எறிகதிர்=வீசுகின்ற ஒளி; நித்திலம்=முத்து; குருதி வேல்=இரத்தம் தோய்ந்த வேல்; கருதியார்=நினைத்தவர்]

பாண்டியனைப் பாத்து அவன்கிட்ட ஒருத்தி மனசைப் பறி கொடுத்திட்டா; இப்ப அவனைப் பிரிஞ்சிருக்கறா; ரொம்பவும் துக்கப்படறா; அதால கண்ணீரு வர்றது;
அப்ப அவளோட தோழி பேசறா, “மனசே! சிப்பியிலேந்துதான் முத்து உண்டாயி அந்த சிப்பி இருக்கற கொற்கையிலேந்துதான் வரும்னு சொல்லுவாங்க; இல்ல;இல்ல; அந்தக் கொற்கையை ஆட்சி செய்யற, எப்பவும் ரத்தக் கறை இருக்கற வேல வச்சிருக்கற, பாண்டியனோட குளிர்ச்சியான சந்தனம் பூசியிருக்கற மார்பை நெனச்சவங்களோட கண்களிலும் உண்டாகுமாம்.”
பாண்டியனை நெனச்சவங்கள கண்ணில எல்லாம் வர்ற கண்ணீர்த் துளிகள்தான் முத்துகள்னு சொல்லப்படுது.

வளவ.துரையன்

வளவ.துரையன்

முத்தொள்ளாயிரம்–47

யானும் தானும்

யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான்—தேனூறு
கொய்தார் வழுதி குளிர்சாந்[து] அணியகலம்
எய்தா[து] இராக்கழிந்த வாறு

தலைவன் வந்தபோது அவன்கிட்ட பொய்யாக் கோபிச்சுக்கிட்டு ஊடி இருந்ததால
அவனைச் சேராத தலைவி சொல்ற பாட்டு இது. தோழிகிட்ட சொல்றா.
”தோழி! ராத்திரி பாண்டியன் என்கிட்ட சேரத்தான் வந்தான். நான் வேணுமின்னே அவனோட ஊடிக்கிட்டு இருந்தேன். அவன் பலவிதமா சொல்லிச் சொல்லி என்னை மாத்தப் பார்த்தான். ஆனா நானோ மறுபடி மனசு மாறாம ஊடிக்கிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு மனசு மாறி அவனோட சேரப் போனேன். ஆனா இப்ப அவன் ஊட ஆரம்பிச்சுட்டான்; நான் அவன் மனசை மாத்த எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அவன் தெளியவே இல்ல; அதால ரெணு பேரும் மாறிமாறி இப்படிச் செய்ததால அன்னிக்கிப் பூத்த பூக்களால கட்டப்பட்டதும், தேன் சொட்டிக் கொண்டிருக்கறதுமான மாலையைப் போட்டுக்கிட்டிருக்கற பாண்டியனோட சந்தனம் பூசிய மார்பைத் தழுவாமலே இரவு கழிஞ்சுப்போச்சிடி”
யான், தான், உணர்த்த, உணரா ஆகிய முரணான சொல்லெல்லாம் வச்சு இந்தப் பாட்டு நல்லா எழுதப்பட்டுள்ளது.

முத்தொள்ளாயிரம்—48

வரிவளையும் புரிவளையும்

செய்யார் எனினும் தமர்செய்வர் என்னும்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்—கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு

[விளங்கிழாய்=ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்தவள்; புரிவளை=வலம்புரிச் சங்கு; வரிவளை=கைவளை]

”செய்யார் எனினும் தமர்செய்வர்”னு ஒரு பழமொழி இருக்கு; அதுதான் இந்தப் பாட்டுல சொல்லப்படுதாம். அதாவது ஒரு சமயத்துல ஒதவி செய்யாதவங்க வேற காலத்துல ஒதவுவாங்கன்றதுதான் இதோடப் பொருளாகும்.
”நல்ல ஒளி உள்ள அணிகலன்கள் போட்டிருக்கற தோழியே! பாண்டியன் போனான்; அவன் என்னப் பாக்கல; ஆனா நான் அவனைப் பாத்தேன்; காதலை அவன் மேல வச்சேன்; என் தோளெல்லாம் மெலிஞ்சு போச்சு; கயில போட்டிருந்த சங்காலான வளையெல்லாம் கழல ஆரம்பிச்சன; ஆனா அப்பத்தான் பாண்டியன் கெளம்பி வர்றப் போனான்னு சொல்லற வலம்புரி சங்கு சத்தம் பெரிசா போட்டுது. அவன் வர்றப் போறான்னு கழல ஆரம்பிச்ச வளையெல்லாம் நின்னு போச்சு; சங்கால செய்யப்பட்ட வளை கழண்டு விழுந்து ஒடைஞ்சு போயிடப் போகுதேன்னு சங்கு இனத்தைச் சேந்த வலம்புரிச் சங்கு மொழங்கி ஒதவி செஞ்சுது; இதே சங்கு முன்னாடி மொழங்காமே இப்ப சத்தம் போடறதால ஒரு காலத்தில ஒதவி செய்யாதவங்க வேற காலத்துல ஒதவி செய்வாங்கன்ற பழமொழி தெரியுதடி.

முத்தொள்ளாயிரம்—49

துளை தொட்டார்

காப்படங்[கு]என் றன்னை கடிமனை இற்செறித்[து]
யாப்படங்க ஓடி அடைத்தபின்—மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவந் துளைதொட்டார்க்[கு]
என்னைகொல் கைம்மா[று] இனி

[காப்பு=காவல்; கடிமனை=காவல் உள்ள மனை; இற்செறித்து=வீட்டினுள் அடக்கி வைத்து; யாப்படங்க=கதவு விளிம்பு பொருந்த; தொட்டார்=தோண்டினவர்]

மாக்கடுங்கோன்னு பாண்டியனுக்கு ஒரு பேருண்டு. அவன் வீதி உலா வரான்; அவனைப்பாத்தா அப்பறம் மக அவனையே நெனச்சு ஒடம்பு எளைச்சுப் போயிடுவான்னு அம்மா ஓடிப்போய் கதவை அடக்கறா. ஆனா அந்தக் கதவுல ஒரு தொளை இருக்கு அது வழியா உள்ள இருக்கற மக பாண்டியனைப் பாத்துடறா; பாத்துட்டு தோழிகிட்ட சொல்றா.
“தோழி! ”உள்ளயே இரு, உள்ளயே இரு”ன்னு சொல்லிக் காவலுக்கு அடங்கி இருக்கற ஊட்டுல நான் இருக்கேன்; பாண்டியன் வரச்சே ஒடனே ஓடிப்போய் கதவோட விளிம்பெல்லாம் ஒண்ணா பொருந்தற மாதிரி அம்மா கதவை அடைச்சு வச்சிட்டா; ஆனா அந்தப் பாண்டியனோட அழகை எல்லாம் அந்தக் கதவுல இருக்கற தொளை வழியா பாத்துட்டேன்; அப்படி நான் பாக்கற மாதிரி முன்னாடியே அந்தத் தொளையைத் தோண்டி வச்ச தச்சருக்கு நாம எப்படி நன்றி காட்டுவோம்டி, ஒண்ணுமே செய்ய முடியாம இருக்கோமே”
கதவுலயே பூட்டு வச்சு அதைச் சாவிபோட்டுத் தெறக்கறதுக்கு ஒரு தொளை இருக்குமே; அந்த்த் தொளையைத் தன் மேல இரக்கம் வச்சுத் தச்சர் வச்சிருக்கார்னு அவ நெனச்சுக்கறா; அதை வச்சவருக்கு ‘என்ன கைம்மாறு இனி”ன்னு சொல்லச்சே அவளொட ஆர்வம், மயக்கம் எல்லாம் தெரியுது.

முத்தொள்ளாயிரம்—50

சாலேகஞ் சார்

துடிஅடித் தோல்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியே!யான் நின்னை இரப்பல்—கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம்
சாலேகம் சார நட

[துடி=உடுக்கை; தொல்=கேடயம்; தூங்குதல்=தூங்குதல்; நாலுதல்=தொங்குதல்;சேலேகம்=செந்தூரம்; சாலேகம்=சன்னல்]

பாண்டியன் உலா வரப் போறான்; ஆனா அவனைப் பாக்க உடாம ஒரு பொண்ணை உள்ள அடைச்சு வச்சிருக்காங்க; அப்ப அந்தப் பொண்ணு பாண்டியன் ஒக்காந்து வர்ற யானையை பாத்துச் சொல்லற பாட்டு இது.
”உடுக்கையைப் போல பாதமும், கேடயம் போல காதும், தொங்கற தும்பிக்கையையும், தொங்கற வாயும் இருக்கற யானையே! நான் ஒன்கிட்ட ஒண்ணு கெஞ்சிக் கேக்கறேன்; நல்ல வாசனை உள்ள பூமாலையைப் போட்டுக்கிட்டு செந்தூர நெறமா இருக்கற பாண்டியனோட நீ வரும்போது எங்க ஊட்டுச் சன்னல் ஓரமா நடந்து போவணும்”.
சன்னல் ஓரமா யானை போனா அப்ப உள்ள அடைச்சு வச்சிருக்கற அந்தப் பொண்ணு அது மேல இருக்கற பாண்டியனைப் பாத்த்துடுவாளாம். இவ சொன்னா யானை கேக்குமா? எப்படியாவது அவனைப் பாக்கணும்னு அவ கேக்கறா; அவ்வளவுதான்.

•••••

Comments are closed.