முத்தொள்ளாயிரம் ( 3 ) / வளவ.துரையன் ( கடலூர் )

[ A+ ] /[ A- ]

download (13)

முத்தொள்ளாயிரம்—51.
மடப்பிடியே!

எலாஅ மடப்பிடியே எங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன்—உலாஅங்கால்
பைஅய நடக்கவும் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ துடைத்து

[எலாஅ=தோழி; கூடல்=மதுரை; புலாஅல் ந்டுநல்வேல்=பகவர் மார்பில் பாய்ந்தமையால் புலால் நாற்றமுள்ள நீண்ட கைவேல்; தேற்றாயால்=தெளியாமல் இருக்கின்றாய்]

பாண்டியன் அவனோட பெண் யானை மேல ஊர்வலம் வரான் அப்ப அந்தப் பெண்யானையைப் பாத்து அவ சொல்ற பாட்டு இது:
இளமையான பெண்யானையே! நீ எனக்குத் தோழிதான? நான் முன்னாடி ஒன்கிட்டதான நடையையே கத்துக்கிட்டேன்; அப்பல்லாம் மெதுவாதான் நீ நடந்தாயே! இப்ப நல்லா புலால் இருக்கற நீளமான வேல வச்சிருக்கறப் பாண்டியன் ஒன் மேல ஏரி ஊர்வலம் வரச்ச மெல்ல நடக்கத் தெரியலயே! நீ பொண்ணான்னு எனக்குச் சந்தேகம் வர்ற மாதிரி செஞ்சுட்டயே: இது சரியா?”
அவனை நல்லாப் பாக்கணும்னு அவ நெனக்கறா; ஆனா யானை வேகமா நடந்து போயிடுச்சு; அதால அதுக்கு மெதுவா நடக்கத் தெரியிலயேன்னு சொல்றா.
முத்தொள்ளாயிரம்—52
மெல்ல நடவாயோ

போரகத்துப் பாயுமா பாயாது பாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ—கூர்வேல்
மதிவெங் களியானை மாறந்தன் மார்பங்
கதவங்கொண்[டு] யாமும் தொழ

[மா=குதிரை; மதிவெங்களியானை=அறிவு திரிந்த மத யானை]

பாண்டிய மன்னன் குதிரை மேல ஏறி ஊர்வலம் வரான்; அப்ப அவனைப் பாக்கணும்னு ஆசைப்பட்ட ஒருத்தி அந்தக் குதிரையைப் பாத்துச் சொல்ற பாட்டு இது

”குதிரையே! நீ சண்டை போடப் போகும்போது வேகமாப் போயி போர் செய்வே; எனக்கும் தெரியும்; ஆனா இப்ப ஒன் மேல கூரா இருக்கற வேலையும், அறிவு கலங்கிப்போயி மதம் இருக்கற யானையையும் வச்ச்சிருக்கற பாண்டியன் ஏறி வரான். நாங்க பாக்க முடியாம எங்கள ஊட்லயே அடைச்சு வச்சிருக்காங்க; நாங்க எங்க ஊட்டுக் கதவுல ஒளிஞ்சுக்கிட்டு அவனைப் பாத்து வணங்கணும்ல; அதுக்காக நீ என்னா செய்யறே? இது போர் செய்ற எடம் இல்ல; இது ஊர்த்தெரு; அதனால கொஞ்சம் மெதுவா போ; நாங்களும் அவனைப் பாத்துடுவோம்”

குதிரையோட வீரத்தையும் சொல்லி அதப் பாத்துக் கொஞ்சம் மெதுவா போன்னு சொல்றா
முத்தொள்ளாயிரம்–53
ஏடு கொடு

ஆடுகோ சூடுகோ ஐதார் கலந்துகொண்[டு]
ஏடுகோ[டு] ஆக எழுதுகோ—-ஈடு
புனவட்டப் பூந்தெரியல் பொன்தேர் வழுதி
கனவட்டம் கால்குடைந்த நீறு

[ஆடுகோ=மூழ்குவேனோ; சூடுகோ= சூடிக் கொள்வேனோ; ஐதா=அழகிதாக; ஏடு=பூவிதழ்; கோடாக எழுது கொம்பாக; நீடு=பெரிய; புனம்=பூந்தோட்டம்; தெரியல்=பூமாலை; வட்டம்=கனவட்டம் என்பது பாண்டியனுடைய குதிரையின் பெயர்; நீறு=புழுதி]

பாண்டியன் வீதியில வரான்; ஆனா இவ ஊட்லேந்து வெளிய வர்றதுக்குள்ள அவன் போயிட்டான்; ஆனா அவனோட மாலை, தேரு, குதிரை எல்லாம் அவன் நெனவுக்கு வந்துடுச்சு. அதால தன் நெஞ்சுகிட்ட சொல்றா.

”ஏ மனமே! பாண்டியன் மாரில போட்டிருக்கற மாலையில இருக்கற பூவெல்லாம் அழகான பெரிய பூந்தோட்டத்திலேந்து கொண்டு வந்ததாக்கும்; பொன்னாலான தேரு வச்சிருக்கற அவன் அவனோட கனவட்டம்ற குதிரை மேல ஏறிப் போயிட்டான்; அப்ப அவன் குதிரை காலால கெளப்பின புழுதி இதோ கெடக்கு; நான் அதிலியே உழுந்து கொளத்துல குளிக்கற மாதிரி மூழ்குவேனோ? அல்லது அந்தப் புழுதியை எடுத்து என் தலயிலே வச்சு சூடிக்குவேனோ? அல்லது வாசனைப் பொருளெல்லாம் அதோட சேத்து, பூஇதழையே கொம்பா வச்சு என் மார்லயும் தோளிலேயும் எழுதிக்குவேனோ? என்ன செய்வேன்? எப்படி எதைச் செஞ்சா அவனைப் பிரிஞ்சு இருக்கற என் நோவு தீரும்?”

அவனையே மனசில நெனச்சு வச்சிருக்கறதால அவன் போன புழுதி மேல கூட அவளுக்கு அவ்வளவு மயக்கம் இருக்காம்; இதே சொற்களோட திருவாசகத்துல கூட ஒரு பாட்டு இருக்குது. பார்க்கலாம்.

”ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கென்— தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து
முத்தொள்ளாயிரம்—54.
ஆபுகுமாலை

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி—புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல்
நாடறி கௌவை தரும்

[கொம்பன்னார்=பூங்கொம்பு போன்ற இடையுள்ள மகளிர்; அணிமலை=அழகிய மலை;]

இப்பாடலில் ஆபுகுமாலைன்றது அழகான சொல்லாம்; அதாவது ‘ஆ’ என்னும் சொல் பசுமாடுகளைத்தான் குறிக்கும்; அந்த மாடெல்லாம் மேய்ச்சலுக்குப் போயிட்டுத் திரும்பற மாலைப் பொழுதுன்றதைக் குறிக்கும். அந்த நேரத்துல பக்கத்துல இருக்கற மலையில புடிச்சு எரியற நெருப்பு எல்லாருக்கும் தெரியுமே! அதனால ஊர்ல இருக்கற எல்லாரும் நல்லா கூச்சல் போடுவாங்கல்ல; அந்த நாட்ல பொண்ணுங்களோட காமம், ஆசை எல்லாம் கொடத்து உள்ள வச்சிருக்கற வெளிச்சம் போல மறைஞ்சுதான் கெடக்கும். ஆனா பூமாலை போட்டிருக்கற பாண்டியன் வீதி உலாவுக்குக் கெளம்பிட்டான்னா அந்த மலையில எரியற நெருப்பு தெரியற மாதிரி எல்லாருக்கும் தெரிஞ்சுடும்; அதால ஊராரெல்லாம் அந்தக் காலத்து வழக்கப்படி அலர் தூற்றி ஆரவாரம் செய்வாங்களாம். இந்த அலர்ன்றது ஒருவகையில பாத்தா வம்பு பேசறதுதான்.
முத்தொள்ளாயிரம்==55
யார்க்கிடுகோ பூசல் இனி

வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான்—இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையர் காவலனும் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி

[வழு=குற்றம்; இமிழ்திரை=ஒலிக்கின்ற அலை; கார்க்கட=கரியகடல்;]

பாண்டியன் உலா வந்துட்டுப் போயிட்டான்; அவனைப் பாத்த ஒரு பொண்னு தோழிகிட்ட சொல்றா;

தோழீ! இந்தப் பாண்டியன் குற்றமில்லாத என் தெருவழியே போனான்; நான் வேற ஒண்ணுமே செய்யலடி; அவனைப் பாத்துத் தொழுது கும்பிட்டேன்; அதாண்டி; அவன் என்னோட மனசு, வெட்கம், பொண்ணுன்ற நெலமை எல்லாத்தயும் எடுத்துக்கிட்டான்; என் தோளோட அழகெல்லாம் எடுத்துக்கிட்டான். ராத்திரி பூரா எனக்குத் தூக்கமே வரல; இந்தக் கருப்புக்கடல்கிட்ட சொல்லலாம்னா அது எப்ப பாத்தாலும் சத்தம் போட்டுக்கிட்டே இருக்குது; அதுவும் சேந்துக்கிட்டு என்னை வதைக்குது; இந்தக் கடலுக்கும் கொற்கை நகரத்துக்கும் அவன்தாண்டி அரசன்; இனிமே நான் யாருகிட்ட போயி என் கொறையச் சொல்லுவேன்? இங்க அரசனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட திருடனா இருக்கானே? வேலியே பயிரை மேயற கதையே இருக்கே? இப்படி இருக்குடி என் நெலமை; யாருகிட்ட சொல்வேண்டி?

“ஆர்க்கிடுகோ தோழி அவன்தார் செய்த பூசலையே” என்னும் நாச்சியார் திருமொழி இங்க நினைவுக்கு வருது.
முத்தொள்ளாயிரம்—56
சீரொழுகு செங்கோல்

மன்னுயிர்க் காவல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின்-என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு

அவ தன் தோழிகிட்ட சொல்றா, “ஏண்டி, இந்த ஒலகம் பூரா பாண்டியன்தான செங்கோல செலுத்தி காவல் காத்து ஆண்டு வரான்; அப்ப இங்க இருக்கற எல்லாரையும் ஒண்ணாதான நெனக்கணும்; ஆனா பந்தியில சாப்பிடறதுக்கு எல்லாரையும் வரிசை வரிசையா ஒக்கார வச்சிட்டு, ஒரு வரிசையில் சாப்பிடறவங்களுக்குப் பாலையும், அடுத்த வரிசையில இருக்கறவங்களுக்குத் தண்ணீரையும் கொடுக்கற மாதிரி, மத்த எல்லாருக்கும் இனிமையா நடந்துக்கறான்; ஆனா எனக்கு மட்டும் பிரிவைக் கொடுத்துத் துன்பம் கொடுக்கறானே! இது அவனுடைய தகுதிக்குச் சரியா? நாட்டை ஆளற அரசனே இத மாதிரி செஞ்சா என்னாடி செய்யறது?”

“நீர் ஒழுகப் பால் ஒழுகாவாறு” என்பது பழமொழி
முத்தொள்ளாயிரம்—57
வானேற்ற வையகம்

தானே தனிக்குடைக் காவலனார் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால்— யானோ
எளியேனோர் பெண்பாலே நீர்ந்தண்டார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்

தலைவி தோழிகிட்ட சொல்றா, “ ஏண்டி, நானோ ரொம்பச் சாதாரணமானவ; அத்தோட நான் ஒரு பொண்ணா வேற இருக்கேன்; என் மனச, அழகை, வெட்கத்தை எல்லாம் திருடிக்கிட்ட அவனோ வெண்கொற்றக்குடை வச்சுக்கிட்டு எல்லா அரசருக்கெல்லாம் அரசனா இருக்கான். அவன் சாதாரண ஒரு சின்ன ராஜாவா இருந்தா நான் அவனுக்கு மேல இருக்கற ராஜாகிட்ட சொல்லி என் குறையைத் தீர்க்கலாம்; வேற நாட்டு அரசருகிட்ட சொல்லலாம்னா மானத்துக்குக் கீழே இருக்கற எல்லா நாட்டையும் இவன்தானே ஆளறான்; குளிர்ச்சியான மாலையைப் போட்டிருக்க்கற அவன் தானே வந்து மனம் இரங்கினால்தான் வழி உண்டு; அவன்கிட்ட போயி “இத மாதிரி ஒன்னை நெனச்சுக்கிட்டு இருக்கறவ மேல அன்பு இல்லாம இருக்கறது சரியில்லன்னு சொல்றதுக்கு யாரு இருக்காங்க? ஒருத்தரும் இல்லியே நான் என்ன செய்வேன்?”
முத்தொள்ளாயிரம்—58
தியேன்

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றான் நல்லளே பொன்னோடைக்[கு]]
யானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை
எருத்தந் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார்நன் றென்றேன் நான்
[பொன்னோடை=பொன்னாற் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம்; தியேன்= தீயேன்]

மதுரையில் பாண்டியன் யானை மேல ஏறி ஊர்வலம் வரான்; எல்லாரும் பாக்கறாங்க; ஒரே நெருக்கம்; ஒரே கூட்டம்; பலபேர் பலபடிக்குப் பேசறாங்க; எல்லாத்தையும் பாத்துட்டு ஒருத்தி தன் மனசுகிட்ட சொல்றா;

”ஏ மனசே! மதுரையில தெருவில நெறய மாடமெல்லாம் இருக்குது; அந்தப் பெரிய தெருவில நான் நின்னுக்கிட்டு இருந்தேன். என்னோட இன்னும் ரெண்டு பேர் இருந்தாங்க; அப்பப் பாண்டியன் நல்லா அலங்காரம் செய்யப்பட்ட யானை மேல வந்தான். என்கூட இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தி “அந்த யானையோட பொன்னால செஞ்ச நெத்திப்பட்டம் ரொம்ப நல்லாயிருக்கு: ன்னு சொன்னா; அவளும் நல்லவதான்; இன்னொருத்தி “அந்தப் பட்டத்துக்கேத்த யானயும் கூட அழகுதான்”ன்னு சொன்னா; அவளும் நல்லவதான்; நானும் அதேபோல சொல்லியிருக்கலாம்; ஆனா நான் சொல்லலியே; யானையின் பிடரி மேல ஒக்காந்திருக்கற அழகான வேல வச்சிருக்கற பாண்டியனோட மாரில இருக்கற பூமாலைதான் நல்லதுன்னு சொன்னேன்; நான்தான் தீயோன்”

பாட்டுல கடைசியில்தான் அவளோட மன்சில இருக்கற துக்கம் பொங்கி வழியுது. தன்னைத்தான் கெட்டவன்னு சொல்லிக்கறா; தீயேன்றது குறுகி தியேன்னு வந்திருக்கு
முத்தொள்ளாயிரம்—59
வஞ்சியானல்லன்

நறவேந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன்—துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா[டு] ஐந்தினையும்
குலம்காவல் கொண்டொழுகும் கோ

[நறவேந்து=தேனைத் தாங்கிய; விலங்காமை=தவறாமை; வஞ்சி=கருவூர்;

அவ அரசன் மேல காதல் கொண்டு தவிக்கறா;அவனோ ஒழுக்கமா இருக்கறவ; அதுலேந்து துளி கூடத் தவறாதவன்; அவன் பார்வையே கெடைக்கமாட்டேங்குது; அப்ப அவ தன் மனசுக்குள்ளயே சொல்லிக்கறா

“ஏ மனசே! தேன் இருக்கற பூமாலையெல்லாம் இவ போட்டிருக்கா; இந்த அரசன் இவளோட அழகை எல்லாம் எடுத்துக்கிட்டான்; மறுபடியும் அதை எல்லாம் இவளுக்குக் குடுக்காத கொடுமையைச் செஞ்சுட்டான்; அதால அவன் வஞ்சியான் இல்ல; அதாவது மத்தவங்கள வஞ்சிக்காதவன் இல்ல; அதாவது வஞ்சின்ற ஊரை வச்சிருக்கர சோழன் இல்ல; ஆனா அவன் பாண்டியன்; அதுவும் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒழுக்கத்திலேந்து தவறாம அஞ்சு தமிழ்நாட்டயும் காத்து நடக்கற பாண்டியன்; அதால அவன் பார்வை இவளுக்கு எங்க கெடக்கப் போறது?

இந்தப் பாட்டுல அஞ்சு தமிழ்நாடுன்றதுதான் என்னான்னு தெரியல.
முத்தொள்ளாயிரம்—60
உழுத உழுத்தஞ் செய்

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவியரிந் தற்றால்—வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு

இந்தப் பாட்டு ஒருத்தி அவ மனசுகிட்ட சொல்றதுதான்; இதில அவ ஒரு கதை சொல்றா; அதாவது ஒரு ஊர்ல வயல்ல நெறய உழுத்தங்காயெல்லாம் காய்த்துக் கெடந்துச்சாம். அதெல்லாத்தையும் புடுங்கிட்டதால அங்க நல்லா பச்சையா புல்லு வெளைஞ்சிருந்தது. அந்தப் புல்லு எல்லாத்தையும் அந்த ஊர்ல இருக்கற பசுங்கன்றெல்லாம் வந்து மேஞ்சுட்டுப் போயிடுத்து. அந்த வயலுக்குச் சொந்தக்காரன் வந்து பாக்கும்போது அங்க ஒரு கழுதை மேஞ்சுகிட்டு இருந்த்து. அவன் இந்தக் கழுதைதான் அந்தப் புல்லு எல்லாத்தையும் மேஞ்சுட்டுதுன்னு நெனச்சான்; அதால ஒடனே அந்தக் கழுதையைப் புடிச்சு அதோட காதை அறுத்துட்டான். அதேபோலதான் இங்க நடந்திடுச்சு.

அதாவது ”பாண்டியன் உலா வர்றச்ச நம்ம கண்ணுங்கதான் அவனைப் பாத்தது; ஆனா அதுங்களுக்கு ஒரு தண்டனையும் இல்ல. நல்லா பருத்து மூங்கில் போலிருந்த அழகான என் தோளெல்லாம் வீணா மெலிஞ்சு போய்ப் பசலையும் பூத்துடுச்சே”ன்னு அவ தன் மனசோட சொல்லிக்கறா.

பாண்டியனோட மார்புக்குதான் உழுத உழுத்தங்காய் இருக்கற வயலு உவமையாம். அவன் மாரில பல பொண்ணுங்க அதில இருக்கற முடியெல்லாம் தேயும்படி உழுதாங்களாம். ஆனா அதுல அவ கண்ணு போயி தானே மேஞ்சுது; அதுக்காக தோளுக்கு மெலிஞ்சு போற தண்டனை கெடச்சுதாம்.

முத்தொள்ளாயிரம்—61
முழக்கும் கடா யானை

சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறும்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி—முன்றில்
முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்[கு]
உழந்துபின் சென்ற என்நெஞ்சு
[செவ்வி=மன்னனைப் பார்த்து உரையாடுவதற்கு வாய்ப்பான நேரம்; நேர்மருங்கு=அழகான இடை; முன்றில்=முற்றம்; உழந்று=ஆசைப்பட்டுச் சுழன்று]

இதுவும் அவ தன் நெஞ்சுகிட்டே சொல்றதுதான்; பாண்டியன் மேல ஆசை வச்சதால அவ மனசு அவன் பின்னாலயே போயிடுச்சு; அப்ப சொல்றா.
”பாண்டியன் அரண்மனை முற்றத்திலே எப்பவும் பிளிறிகிட்டே இருக்கற மதம் புடிச்ச யானைங்க நெறய இருக்கும். அவன் போட்டிருக்கற மாலையில வண்டெல்லாம் மொச்சுக்கிட்டே இருக்குமாம். அவனைக் கூடறதுக்காக ஆசைப்பட்டு அவன் பின்னாடியே என் நெஞ்சு போயிடுச்சு; பாவம்; அது அங்க போய்ச் சேர்ந்ததோ? இல்ல; அவன் அன்பைக் கேட்டு வாங்கி வந்துகிட்டே இருக்குதோ? இல்ல அவன் பதில் கிடைக்கற வரையில தன் அழகான இடுப்பில கையை ஊனிக்கிட்டு அங்கேயே நிக்குதோ; ஒண்ணுமே புரியலியே”

அவளால வண்டெல்லாம் மொய்க்கற மாலை இருக்கற அவன் மார்பை மறக்க முடியல; அங்க யானையெல்லாம் இருக்குமே; அதுக்குப் பயந்துக்கிட்டு மனம், அங்கியே நிக்குதோன்னு நெனக்கறாளாம். இதில பாருங்க; உருவமே இல்லாத மனசுக்கு ஒரு உருவம் கொடுத்து அதுவும் அழகான பெண்ணாக்கி அதோட அழகான இடுப்புல கையை ஊனிக்கிட்டுனிருக்குதோன்னு வேதனைப்படறா; பெரும்பாலும் இடுப்பில கையை ஊனிக்கிட்டுதான பொண்ணுங்க நிப்பாங்க;

“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து”
இந்தக் குறளோட இப்பாட்டைப் பொருத்தலாமாம்.

முத்தொள்ளாயிரம்—62
திங்கள் அதற்கோர் திலதம்

மந்தரம் காம்பா மணிவிசும்[பு] ஓலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா—எங்கணும்
முற்றுநீர் வையம் முழுது நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை
[மந்தரம்=மந்தர மலை; மணி விசும்பு=நீலமணி போன்ற ஆகாயம்; திலதம்=நடு வட்டம்; நிழற்றும்=நிழலைச் செய்யும்; கொற்றம்=வெற்றி; எங்கணும்=எவ்விடத்திலும்]

இந்தப் பாட்டுல சோழ மன்னனோட குடையுடைய குளிர்ச்சி சொல்லப்படுகிறது. அரசன் எப்பவுமே தன் குடையோட நிழலால இந்த ஒலகத்தைக் காக்க வேணும்; அவன் குடை ரொம்ப ரொம்பப் பெரிசாம்; மந்தரமலைதான் அந்தக் குடைக்குக் காம்பு; குடைன்னா அதுக்கு மேல கூரை இருக்கணும்ல; அதுதான் நீல நெறமான ஆகாயமாம்; மேல இருக்கற ஓலையில இருக்கற நடுவட்டம்தான் சந்திரனாம்; அப்படிப்பட்ட அவனோட குடைதான் குளிர்ச்சியா இருந்து இந்த ஒலகத்தையே காக்குதாம்;
முத்தொள்ளாயிரம்–63.
எமக்குக் காட்டாய்
குருந்தம் ஒசித்தஞான்[று] உண்டால் அதனைக்
கரந்த வடிவெமக்குக் காட்டாய்—மரம்பெறா
போரில் குருகுஉறங்கும் பூம்புனல் நீர்நாட!
மார்பில் கிடந்த மறு
[ஒசித்த=ஒடித்து வளைத்த; குருகு=ஒரு பறவை; கரந்த=ஒளித்த; போர்=வைக்கோற்போர்]

அந்தக் காலத்துல அரசனையே கடவுளா நெனச்சிட்டிருந்தாங்க; ”மன்னனைக் கண்டேன் மாலைக்கண்டேன்”னு சொல்வாங்க; திருமால் மாரில ஒரு மறு இருக்கும்; இந்தப் பாட்டுல அதைச் சொல்லி அரசனையும் கடவுளாகவே நெனச்சு ஒன் மாரில இருந்த அந்த மறுவை நீ எங்களுக்குக் காட்டுன்னு கேக்குது இப்பாட்டு.
மொதல்ல சோழனோட நாட்டைப் பத்தி சொல்லணும்; அவன் ஊர்ல வைக்கோல் போரில இருக்கற கதிர்ல நெறய நெல்லு இருக்கும்; அதைத் தின்றதுக்கு குருகுகள் எல்லாம் அங்க வரும்; வயிறு நெறய தின்னுடும்; அப்பறமும் அதுங்கள யாரும் வெரட்ட மாட்டாங்க; தூங்கறதுக்கு வாகா அந்தப் போரே பஞ்சணை போல இருப்பதால தன் மரத்துக்குப் போகாம அங்கியே தூங்கிடும்; இப்படியெல்லாம் இருக்கறதுக்குக் காவிரி வற்றாம தண்ணி வழங்கறதுதான் காரணம்; அப்படிப்பட்ட நாட்டையுடைய சோழனே! அன்னிக்குத் திருமாலா வந்து குருந்த மரத்தை ஒடிச்சு ஆயர் பொண்ணுங்களுக்காக வளைச்சபோது ஒன் மாரில மறு இருந்துச்சே! அதை ஒளிக்காம காட்டு.
முத்தொள்ளாயிரம்—64
வினைவகையால் வேறு
புனல்நாடர் கோமானும் பூந்துழாய் மாலும்
வினைவகையால் வேறுப டுவர்—புனல்நாடன்
ஏற்றெறிந்து மாற்றலர்பால் எய்தியபார் மாயவன்
ஏற்றிரந்து கொண்டமையி னால்

[ஏற்றெறிந்து=வேலை எறிந்தும் வேலை ஏற்றும்; ஏற்றிரந்து=நீரேற்று இரந்துகேட்டு]

அவ சொல்றா; ”காவேரி ஆறு பாயுற நாட்டை உடையவன் சோழன்; பகைவரெல்லாம் எறியற வேலைத் தன் மாரில ஏத்துப்பான்; அத்தோட அவனும் பகைவர் மேல எறிவான்; அப்படி அவங்களை எல்லாம் தோக்கடிச்சுதான அவங்களை நெலத்தை எல்லாம் நம்ம சோழன் எடுத்துக்கிட்டான்; ஆனா திருமாலு மாவலிகிட்டப் போயி நின்னு இரந்து கேட்டுத்தான நெலம் அடைஞ்சான்; அதால சோழன்தான் தான் செஞ்ச செயலால மேம்பட்டவன்”

போன பாட்டுல மாரில மறு இருக்கறதால் அரசனும் திருமாலும் ஒண்ணுதான்னு சொன்னா; திருமால் போலவே இருந்தாலும் இரந்து கேட்காம தான் எதிரிங்களைத் தோக்கடிச்சு நெலம் அடைஞ்சதால சோழன்தான் சிறந்தவன்னு அவ சொல்றா.
முத்தொள்ளாயிரம்—65
கூற்றிசைத்தாற் போலுமே
காவல் உழவர் களத்தகத்துப் போரேறி
நாவலோஒ வென்றழைக்கும் நாளோதை—-காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
கல்யானைக் கோக்கிள்ளி நாடு.

[நாவலோஒ= இது நெற்களம், போர்க்களம் ஆகியவற்றில் தம் பகுதியினரை அழைக்கும் குறியீட்டுச் சொல்; நாளோதை=காலைப் பொழுதில் இசைக்கும் இசை; இசைத்தால்=அழைத்தால்; போர் ஏறி=வைக்கோற் போர் ஏறி]

இந்தப் பாட்டுல சோழ நாட்டோட வளம் சொல்லப்படுது; சோழ மன்னன் பேரு கிள்ளி; அவங்கிட்ட நல்ல யானைப் படை உள்ளது. அந்த நாட்டுல நெற்களத்துல காவல் காக்குற ஒழவர் எல்லாரும் பலவிதமான வேலையைச் செஞ்சிட்டிருப்பாங்க. வைக்கப் போர் மேல ஏறி, நெல்லடிக்கறதுக்கு மத்த ஆளுங்களைக் கூப்பிடறதுக்கு, “நாவலோஒ’ன்னு குரல் எழுப்புவாங்க; காலையில கேக்குற அந்த ஓசையானது எப்படி இருக்கும் தெரியுமா? பகையா இருக்கறவங்களைக் கொல்ற யானைகளின் மேல இருந்துக்கிட்டு வீரரு எல்லாம் மத்த வீர்ரையெல்லாம் கூப்பிடற மாதிரி இருக்கும்.

ரெண்டு பேர் சொல்லால வாதம் செய்யறதுக்குக் கூப்பிடும்போதும் ஒரு நாவல் மரத்தின் கொம்பை நட்டு வைத்து “நாவலோஒ நாவல்’ னு சொல்றதும் உண்டு. இந்தப் பாட்டுல வர்ற தனிச்சீரு சில பதிப்புல “மாமலவன்” னுஇருக்கு. அதுக்குப் பொருள் யானை ஏறதுல ரொம்ப சிறந்தவன். காஞ்சிப் புராணத்துல கூட, நாவலோ என விளிப்பத் தொழுவாரெல்லாம் நயந்து எய்தி வினையின் மூள்வார்” என்று வருது. மேலும் நெற்கலத்துல கூவறதைப் போர்க்களத்துல கூவறதுக்கு நல்ல் உவமையா சொல்லியிருக்காரு.
முத்தொள்ளாயிரம்—66
விற்பயில் வானகம்
மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால்—காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம்
[சால= மிகுதியாக; மருவிய=பொருந்திய; பொற்பார்=அழகு நிறைந்த]

இந்தப் பாட்டுல உறையூரின் வளம் சொல்லப்படுது. எதித்து வரும் எதிரிகளை எல்லாம் அவன் வெல்லக் கூடியவன்; அதான் “வெல்வளவன்”. அழகான அவனோட உறையூர் நகரத் தெருக்களிலே மொத நாள் மாலை நேரத்துல பூ விக்கறவங்க பூ தொடுக்கும்போது கிள்ளிப்போட்ட பூ கெடக்கும். அது அடுத்த நாள் காலையில பல வண்னத்துல ஆகாயத்துல இருக்கற வானவில் போல இருக்குமாம். அந்தத் தெருவே வானவில் இருக்கற அழகான ஆகாயம் போல இருக்கும்; கிள்ளிப் போட்ட பூவே இந்த அளவு இருந்ததுன்னா அப்ப தொடுத்த பூ எவ்வளவு இருக்கும்? நெனச்சுப் பாருங்க.

••
முத்தொள்ளாயிரம்—67
செவ்வி இலனே
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க—இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ
[நெருநல்=நேற்று; செவ்வி=தக்க நேரம்]

சோழ அரசன்கிட்ட நெறய அரசருங்க கப்பம் கட்ட வந்திருக்காங்க; அவங்கள்ளாம் பலவிதமான பொருள் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க; சீக்கிரம் கொடுக்கணும்; இல்லன்னா அரசனுக்குக் கோபம் வந்திடும்னு நெருக்கறாங்க. அப்ப அங்க இருக்கற காவலன் சொல்றான்

“மன்னருங்களே! நேத்திக்கு நெறய அரசருங்க பொருளெல்லாம் கொண்டு வந்து தந்து சோழனோட காலடியில விழுந்து வணங்கிட்டுப் போனாங்க; அப்படி அவங்க விழுந்த போது அவங்க போட்டிருந்த தலைக் கிரீடம் பட்டு சோழன் காலெல்லாம் புண்ணாயிடுச்சு; அதால நேத்திக்கே அப்பறம் வந்தவங்களுக்கே கப்பம் கட்ட நேரம் தரல; இன்னிக்கும் அதேபோல அவன் காலடி புண்ணாயிடுச்சு; அதாலதான் ஒங்களுக்கும் நேரம் தரமுடியல”

அவன் காலடி புண்ணானது பத்திக் கூடக் கவலைப் படலியாம்; ஆனா அவங்களுக்கு நேரம் ஒதுக்கித் தர முடியலியேன்னுதான் கவலைப் படறான்னு காட்டுது.

முத்தொள்ளாயிரம்—68
பொன்னுரை கல் போன்ற
சாலியரி சூட்டால் மடையடைக்கு நீர்நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன்-காலியன்மா
மன்னர் முடிஉதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகல் போன்ற குளம்பு

[சாலி=ஒருவகை நெல்; அரி சூட்டால்= அடித்துக் களத்தில் அடைத்த நெற்போர்; மாலும் மழைத்தடக்கை= மேகங்கள் மயங்கி மழைபெய்வது போல் கொடுக்கும் கை; கால்=காற்று; இயல்=தன்மை; மா=குதிரை]

தங்கத்தை ஒறைச்சுப் பார்க்க ஒரு கல்லு வச்சிருப்பாங்க. வள்ளுவர் கூட கருமமே கட்டளைக் கல்லு என்பாரு. பொன்னை ஒறைச்சு ஒறைச்சு அந்தக் கல்லே அதோட நெறம் மாறிப்போயி அதுவே தங்கத்தோட நெறத்துக்கு வந்திரும்; சோழனுடைய குதிரையோட கால் குளம்பெல்லாம் அந்தப் பொன்னை ஒறைச்ச கட்டளைக் கல்லு மாதிரி ஆயிடுச்சாம்; ஏன்னு தெரியுமா; அந்தக் குதிரை காத்தை விட வேகமாப் போயி எதிரிங்களோட சண்டை போடுது; அப்ப அந்த அரசருங்க தலையை ஒதைக்கறச்சே அவங்க தலையில இருக்கற கிரீடத்துல அதன் கொளம்பு படுது; அப்பரம் அவங்க மாரில இருக்கற பொன் நகையில எல்லாம் காலு கொளம்பு படுது; அதுல எல்லாம் பட்டுப் பட்டு கொளம்பே பொன் நெறத்துக்கு வந்துடுச்சாம்;
சாலின்னு இருக்கற ஒருவகை நெல்லை அறுத்து, அந்த வைக்கோலால தண்ணி வாய்க்கா மடையெல்லாம் அடைக்கற அளவு வளம் இருக்கற நாட்டை உடையவன் அந்த அரசன். அத்தோட மேகம் போல எல்லாருக்கும் கொடுக்கறவன் அவன். மொத ரெண்டு அடியிலயும் இப்படி அரசனைப் புகழுது இந்தப் பாட்டு.
முத்தொள்ளாயிரம்—69.
பனி மதியம்
மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்–விண்படர்ந்து
பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று
[மண்படு தோள் கிள்ளி= நிலவுலகத்தைத் தாங்கியிருக்கிற தோள்களை உடைய சோழன்; விண்படர்ந்து=ஆகாயத்தில் சென்று]

இந்தப் பாட்டுல சோழனோட யானையோட வீரத்தை ஒருத்தி அவ தோழிகிட்ட சொல்றா.

தோழீ! இந்த சோழன் இருக்கானே; அவன் அவனோட தோள்ளதான் இந்த பூமியையே தாங்கியிருக்கான்; அவனோட மதம் புடிச்ச யானை எதிரிங்களோட வெண்கொற்றக் கொடையெல்லாம் புடுங்கி எறிஞ்சு கோபத்துல இருக்கு; அதைப் பாத்துட்டு ஆகாயத்துல இருக்கற சந்திரனும் நானும் வெள்ளயாதான இருக்கோம்; ஒருவேள நம்ம மேலயும் அது பாஞ்சுடுமோன்னு நெனச்சுப் பயந்துபோயி அங்கயே நின்னுக்கிட்டுத் தேயுது.
முத்தொள்ளாயிரம்—70
நால்வாய்ப்பொருப்பு
கானிமிர்த்தால் கண்பரிப வல்லியோ புல்லாதார்
மானனையார் மங்கலநாண் அல்லனோ—–தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற் கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு
[கால் நிமிர்த்தால்=காலை நிமிர்த்து இழுத்தால்; வல்லிக்கண்=சங்கிலிகளின் பூட்டுவாய்க் கண்கள்; பரிப=அற்றுப் போவன; புல்லாதார்=பகைவர்; மான் அனையார்=மான்போன்ற விழி கொண்ட பெண்கள்; புழைத்தடக்கை=உள்ளே துளை உள்ள பெரிய கை; நால்வாய்=தொங்கும் வாய்; பொருப்பு=மலை; மானவேல்=வீர வேல்]

கிள்ளின்ற சோழ அரசரோட யானையின் வீரத்தைச் சொல்ற பாட்டு இது; ஒருத்தன் அவன் நண்பங்கிட்ட சொல்ற மாதிரி இது இருக்குது.

”ஏண்டா நண்பா! மேகம்தான் இந்த ஒலகத்துக்கு பொய் செய்யாம நெறைய மழை குடுக்கும்; அதைபோல குடுக்கற பெரிய கையை உடையவனும் வீரமான கழல் போட்டு இருக்கற காலை வச்சுக்கிட்டு அத்தோட கயில வீரமான வேலையும் கொண்டவந்தாண்டா எங்க சோழ அரசன்; அவனோட யானைக்குப் தொளை இருக்கற பெரிய தும்பிக்கை தொங்கிக் கொண்டிருக்கும்; அது பாக்கறதுக்கு மலை போலவே இருக்கும்; அது சண்டைக்குப் போக்க் கெளப்புவாங்க; அப்ப அது காலை நிமிர்த்தி இழுக்கும் போது அதைக் கட்டி வச்சிருக்கற சங்கிலி மட்டுமா அறுந்து போகும்; எதிரிங்க மான் போல அழகான பொண்ணுங்களக் கட்டிக்கிட்டிருக்காங்க; அந்தப் பொண்ணுங்களோட கழுத்தில இருக்கற தாலிக்கயிறு கூட அறுந்து போகும்டா”
கிள்ளியின் யானை கெளம்பினால் பகைவருங்களை அழிச்ச்சிட்டுத்தான் வரும்றது தெரியுது’
முத்தொள்ளாயிரம்—71
கோத்தெடுத்த கோடு
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால்—பனிக்கடலுள்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சின வேல்கிள்ளி களிறு.
[அயில்=வேல்; உழக்கி=நிலைகுலையச் செய்து; ஆற்றல்=வலிமை; எயில்=மதில்; நாவாய்=மரக்கலம்;

இப்பாட்டுல ஒரு யானையின் வீரம்தான் சொல்லப்படுது; யானையெல்லாம் படைகளுக்கு முன்னால போயி அங்க இருந்த இரும்புக் கதவை, அதுவும் அந்த இரும்புக் கதவெல்லாம் வேல் போல இருந்துச்சாம்; ஒடிச்சுப் போட்டன. அதுக்கப்பறம் இன்னும் உள்ளே போயிப் பாத்துதுங்க; அங்க கோட்டை மதில்ல ஒரு பெரிய கதவு இருந்துச்சு; அந்தக் கதவை அப்படியே ஒரே குத்தாக் குத்தித் தன் கொம்பிலியே தூக்கி வச்சுக்கிச்சு; கதவும் கொம்பிலியே மாட்டிக்கிச்சு; அப்படியே அது படைங்க இருக்கற கூட்டத்துல போயி சேந்துக்கிச்சு. அப்ப அதைப் பாக்கறதுக்கு பாய்மரத்துல பாய் ஒண்ணுக் கட்டிய மரக்கலம் போல இருந்துச்சாம். யானைதான் மரக்கலம்; தூக்கி இருக்கற அதன் தும்பிக்கைதான் கூம்பாம்; கதவுதான் பாய்மரமாம். என்னா அழகான உவமை பாருங்க.

இதேமாதிரி கலித்தொகையிலயும் ஒரு பாட்டுல வருது; இதோ அந்தப் பாட்டு:

துணைபுணர்ந்[து] எழுதரும் தூநிற வலம்புரி
இணைதிரள் மருப்பாக எறிவளி பாகனா
அயில்திணி நெடுங்கதவு அமைத்தடைத்[து] அணிகொண்ட
எயிலடு களிறேபோல் இடுமணல் நெடுங்கோட்டைப்
பயில்திரை நடுநன்னாட் பாய்ந்தூரும் துறைவகேள்

முத்தொள்ளாயிரம்—72
புறங்கடை நின்றதே
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடிஇடறித் தேய்ந்த நகமும்—பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு
[கோடு=கொம்பு அதாவது தந்தம். கோட்டுக்கால் கட்டில் என்பார் ஆண்டாள்; பிடி=பெண்யானை; கல்லார் தோள்= மலபோன்ற தோள்கள்]

இந்தக் கிள்ளி இருக்கானே; அவனோட தோளெல்லாம் மலை போல இருக்குமாம். அவன் ஒரு முறை சண்டைக்குப் போறான்; அவனோட யானைப் படை எல்லாம் போகுதுங்க; கடுமையான சண்டை நடக்குது; அதுவும் இந்த யானை போயி எதிரியோட கோட்டை மதிலைத் தன் கொம்பால முட்டுது; கொம்பெல்லாம் ஒடியுது; அப்பறம் இந்த யானை எதிரிங்களா வந்திருக்கற அந்த அரசர் மேலப் பாய்ந்து அவங்களைக் கீழே தள்ளுது. காலால அவங்களை இடறிக்கிட்டே போகுது; அதால அதன் நகமெல்லாம் தேயுது; ஒருவழியா சண்டை முடியுது. படையில இருந்தவங்கள்ளாம் நாட்டுக்கு வந்து அவங்க அவங்க ஊட்டுக்குப் போறாங்க; அரசனும் அந்தப்புரம் போயிட்டான்; அந்த யானையும் யானைக் கொட்டகை உள்ள போகணும்ல; ஆனா போகாம புறங்கடையில அதாவது வெளியிலியே நிக்குதாம்; ஏன் தெரியுமா? உள்ள அந்தக் கொட்டாயில அந்த ஆண்யானையோட பெண் யானை இருக்குதாம்; அதுக்கு முன்னால இந்த ஒடைஞ்ச கொம்போடும், தேஞ்ச நகத்தோடும் எப்படிம் போறதுன்னு வெக்கப்பட்டுக்கிட்டு அந்த ஆண் யானை வெளியிலியே நிக்குதாம். யானைக்குக் கூட அழகு போயிடுத்தேன்னு வெக்கம் பாருங்க.
முத்தொள்ளாயிரம்—73
ஒருகால் மிதியா வருமே
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்—பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநம்
கோழியர்கோக் கிள்ளி களிறு
[கோழி=உறையூர்; ஈழம்=இலங்கை; கச்சி=காஞ்சிபுரம்; உஞ்சி=உச்சயினி]

சோழனோட யானையின் வீரத்தைச் சொல்ற பாட்டு இது. ஒரு வீரன் இன்னொருத்தன் கிட்ட சொல்றான்.

”டேய், அதோ பாருடா, நம்ம உறந்தை அரசரோட யானை ஒருகாலை எடுத்து வச்சுக் காஞ்சிபுரத்தை மிதிக்குது; அடுத்த காலை எங்க வைக்குது தெரியுமா? தண்ணீர் நெறயப் பாய்கின்ற குளிர்ச்சியான உச்சயினியிலே வைக்குது; இன்னும் அதோ பாரு. தெக்கே திரும்பிட்டுது; காலைத் தூக்குது; ஆமா, இலங்கையிலதான் வைக்குது; அப்பறம் இங்கதான் வருது”
போருன்னு வந்துட்டா வடக்கெ உச்சயினி வரை போயி தெக்க இலங்கை வரை போயி செயிச்சு வர்றதுதான் சோழனோட வழக்கம் அதே போலத்தான் அவனோட யானையும் இருக்குதாம். யானையோட வேகமும் இதுல தெரிய வருது.
இந்த உச்சயினியை “உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும்”னு சிலம்புல சொல்றாரு.

முத்தொள்ளாயிரம்-74
பேய் மகளிரும் ஆடவரும்
பாற்றினம் ஆர்ப்ப பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப—ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேல் கிள்ளி களிறு

[பாற்றினம்=கழுகுக் கூட்டம்; அலங்கல்=மாலை; ஆர்ப்ப=ஆரவாரம் செய்ய; வழிப்படர=பின்தொடர்ந்து பறந்து வர; கதிப்ப=துள்ள]

சோழ அரசன் கிள்ளியோட யானையையைப் பத்திதான் இந்தப் பாட்டும்;
”அந்த அரசன் கையில் ஒரு வேலு இருக்குது; அதுவும் அழகா அத்தோட நுனி இலை வடிவா இருக்குது. அவனோட யானை கெளம்பி போருக்குப் போவுது; அந்த யானை போகும்போதே எதிரிங்க எல்லாரையும் கொலை செஞ்சுகிட்டே போவுது; அவங்களோட ஒடம்பை எல்லாம் தின்னுடலாம்னு கழுகுக் கூட்டம் பின்னாடியே பறந்துகிட்டு வருது. எதிரிங்களைத் தின்ன நரி எல்லாம் மகிழ்ச்சியாலத் துள்ளுதுங்க; பொம்பளைப் பேயெல்லாம் குடலை மாலையா போட்டுகினு பெருமையா ஆடுதுங்க; அப்படி வருதாம் அந்த யானை”
முத்தொள்ளாயிரம்—75
பெருநடஞ்செய் வெற்றி
உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடரும் கொழுங்குருதி ஈர்ப்ப—மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சீறும் களம்
[ஊன்=நிணம்; தடி=தசை; என்பு=எலும்பு; குடர்=குடல்; ஈர்த்தல்=இழுத்தல்; மிடைதல்=நெருங்குதல்; பெற்றி=தன்மை; கொற்றம்=வெற்றி; கருநடர்=கருநாடகர்]

”கருநாடக அரசன் என்னா செஞ்சான் தெரியுமா? வழக்கமா குடுக்கற கப்பத்தைக் கிள்ளிக்குத் தரல; அதால கிள்ளி அவன் மேல படையெடுத்தான்; போர் ரொம்பக் கடுமையா நடந்துச்சு; ஒடைஞ்ச தலைகளையும், மூளைகளையும், நிணம், தசைகளையும் எலும்பையும், கொடலையும், இரத்தம் ஆறா வந்து இழுத்துக்கிட்டுப் போகுது; பேயெல்லாம் வந்து கூட்டமா ஆடிச்சு அங்க”
அதைப் பாத்த ஒருத்தன் இன்னொருத்தன்கிட்ட சொல்ற பாட்டு இது.
======================

Comments are closed.