மூன்றாம் மனுஷி கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

[ A+ ] /[ A- ]

images (71)

பறவையொன்றை வரைந்தேன்

பறந்துவிடுமென பயந்து

சிறகுகளை வரையவில்லை

எதற்கும் இருக்கட்டுமென

நீண்ட வானத்தை வரைந்து வைத்தேன்

வானத்தில் ஏதாவது இருக்க வேண்டுமென

மேகங்களை வரைந்தேன்

மேலும் அழகுற

பெரிய நிலவையும்

சிதறிய நட்சத்திரங்களையும்

கொஞ்சம் மரங்களையும் வரைந்தேன்

கால்களை வரைந்திருக்கக் கூடாதென

இப்பொழுது தோன்றுகிறது

நல்லவேளை

என்னால் கூண்டு வரையப்படவில்லை…

•••

அங்குமிங்குமாய் ஆடிக்கொண்டிருந்த அந்நிழல்

இல்லாததை இருப்பதாக உணர செய்தது

ஏதோ இனம் புரியாத

அச்சத்தின் உச்சத்தில்

உனையன்றி யாரை நினைத்துவிட முடியும்

நீ சொல்லிச் சென்ற இயல்பும் எதார்த்தமும்

இந்த இருளில் தொலைந்திருக்கக் கூடும்

வருகிறாயா

தொலைந்துவிட்டாயா

வரவேயில்லையா

வருவதற்கு ஆயத்தமாகிறாயா

என்பதிலேயே இக்காரிருள் நீண்டிருக்கிறது

சற்று ஆசுவாசமடைய

உன் தோள்களும்

அச்சத்தைக் கடக்க

உன் கரங்களும் வேண்டுமடா

என் கவலையெல்லாம் ஒன்றே ஒன்று தான்

என் இறப்பிற்குள்

இந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமடா

அது என் மரணத்திற்கு முன்னாள் ஒருமணி நேரமாக இருந்தாலும் சரி

உரிமையோடு உன் கைப்பிடித்து

ஒருமுறை ஓரேமுறையாவது

எனக்கான உலகத்தில்

வலம் வந்திட வேண்டும்

இப்படியாய்

பெருங்காதலுடன்

கொஞ்சம் பிடித்து வைத்திருக்கும் உயிருடன் தேங்கிக்கிடக்கிறது

மடைகளுக்குள் அடைக்கப்பட்ட பெருவெள்ளமென..

எனக்காக உனக்காக என்பதெல்லாம் வேண்டமடா

நமக்காகவாது வந்துவிடு

மடைகளை உடைப்பதென்பது

எனக்கொன்றும் கடினமல்ல

நீயாக வரவேண்டும்

உன்னுள் எனை நுழைத்து

கட்டுக்கடங்காது ஓடவேண்டும்

வற்றிய ஆற்றுப்படுக்கையில் மணலென

இறந்த மீன்குஞ்சுகளுடன்

உன் ஈரத்திற்காக

வறண்டு பரந்து கிடக்கிறது

என் நிலம்

வந்து நிலம் நனைத்துப் போ

வா…..

•••

Comments are closed.