மூன்று கவிதைகள் – கருணாகரன் (இலங்கை)

[ A+ ] /[ A- ]

images (67)

வழி?

வண்ணத்துப் புச்சி
தன்னுடைய கூண்டுப் பருவத்துக்குத் திரும்பிச் செல்கிறது
நாங்கள் அதை வழிமறிக்கப்போவதில்லை.

இரவு விருந்து முடிந்து திரும்பியபோது
கையசைத்து விடைபெற்றதா வரவேற்றதா
நான் வந்த வழியென்று தெரியவில்லை
எங்கே இருந்தது நான் வந்து
சென்ற வழி?

00

வண்ணமற்ற குழந்தை

எந்த வண்ணமுமற்றுக் கரைந்து கொண்டிருக்கிறது
இந்த நாள்
அப்படித்தான்
எந்த வண்ணமுமில்லாமலே திரண்டுகொண்டிருக்கிறது
இந்தக் குழந்தை

மிஞ்சிய சோற்றுக்குள்
வைக்கோலின் மணத்தை அறியவில்லையா நீ
என்று கேட்கிறான் படையதிகாரி.

கொலைகளில் இரத்தத்தின் வாசனையை உணரவில்லையா
என்று கேட்கிறது குழந்தை

முடிவற்ற வழிகளில் சென்று கொண்டிருக்கும்
பயணங்களை வழிமறிப்பதற்காக யாரோ சென்று கொண்டிருக்கிறார்கள்

துப்பாக்கிக்குண்டுகளுக்குள்ளிருக்கும் ரகசியத்தை
உயிருறிஞ்கும் அதன் வேட்கையையும்
ரத்தத்தின் ருஸியறியும் தினவையும்
அறியத் துடிக்கிறது நிறமற்ற குழந்தை.

சொல்லுங்கள்,
ஏன் இந்தளவுக்கு வெம்மையாக இருக்கிறது
இந்த மாரியும் உங்கள் இதயக்குழியும்?

திரும்பி வந்தவர் யார்?
வராமல் சென்றவர் யார்?

அறிந்து வருவதற்காகவா சென்று கொண்டிருக்கிறது இந்தப் புனை?

எல்லாவற்றுக்குமிடையில் நிலைத்துக் கொண்டிருக்கும்
கத்தி முனையில்
வாளைக் குருத்தை வளர்ப்பதற்காக
பயின்று கொண்டிருக்கும் குழந்தையை
அழைத்துச் செல்வதற்காக வந்து கொண்டிருக்கின்றனர் விவசாயிகள்
துப்பாக்கியின் நிழலில்
உலகைச் சுழற்றும் வித்தையைப்பயிற்றுவிப்பதற்காக
வந்து கொண்டிருக்கிறான் படையதிகாரி.

வண்ணமற்ற குழந்தைக்கு எந்த வழி?

00

அபாயக்குறி

அந்தக் காடுகளைக் கடந்துதான் வந்திருக்கிறான்
அரசனுக்கும் வேடனுக்குமிடையில் வேறுபாடுகள் எதையும் நான் காணவில்லை.

நலிந்து, நகர முடியாமல்
மணலில் இறுகிக் கரையும் துயரோடிருக்கும்
ஆற்றின் இடுக்கிலிருந்து விடுபடத்துடிக்கும்
கூழாங்கற்களின் மீதுறங்கும் மீன்வாசனையை
அறிந்தவர்கள் ஆற்றினோரம் களைத்திருக்கிறார்கள்

அவர்களை விலகிச் செல்கிறான் அரசன்

பேரிருள் மூடிய மரங்களின் கீழே
ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருக்கிறது நிழல்
மரமும் வளர நிழலும் வளர்ந்ததை
அறிந்தவர்கள் மரங்களைச் சூழ்ந்திருக்கிறார்கள்

அவர்களை வந்தடைகிறான் வேடன்

மிருகத்தின் வாசனையை மறைத்து வைத்திருக்கும்
மரங்களின் அடிவயிற்றில்
கனிந்திருக்கிறது மிருகத்தின் கருணை.
வேடனின் அன்பில் மலர்ந்திருக்கிறாள் வனத்தாய்.

இலையுதிரும் போதுணரும் வலியை வேடனும்
மலர்கள் உதிரும்போதுணரும் துயர்ப்பெருக்கை மிருகங்களும்
கனிகள் சொரியும் மகிழ்ச்சியைப் பறவைகளும்
உணர
வனம் ஆழ்ந்து கதகதத்தது.
தன்னுறவுகளிடத்தில் மரம் நெகிழ்ந்து பெருகிக் கனியவே
வந்தான் அரசன் அங்கே

கூட வந்த படைகளிடம் பிறந்த கலவரத்தீயில்
எரிந்தழிந்தன ஆறும் நிழலும்
ஆறும் நிழலுமற்றதோரிடத்தில்
ஏதொரு உயிருக்கும் இடமில்லையே.

வேடனும் அரசனும் ஒன்றல்ல
ஒன்றேயல்ல என்றறிந்தேன் அப்போது.

00

Comments are closed.