மேக்பெத் – ஷேக்ஸ்பியரின் நாடகம் – ஆங்கிலவழி தமிழாக்கம் – சத்தியப்பிரியன்.

[ A+ ] /[ A- ]

download

காட்சி-1

அடர்ந்த காடு. மழையும், மின்னலும் தோன்றி மிரட்டும் ஓர் இரவுப்பொழுது. மூன்று சூனியக்காரிகள் மேடையில் தோன்றுகின்றனர்.

சூனி-1: மீண்டும் நாம் எப்போது சந்திப்பது? மழையிlலா? மின்னலிலா? இடியிலா?

சூனி-2 : போர்முழக்கங்கள் ஓய்ந்தபின்பு. போர் தனது வெற்றி தோல்விகளை சந்தித்த பின்பு.

சூனி-3 :அது இன்று சூரியன் மேற்கில் விழும் முன் நிகழ்ந்துவிடும்.

சூனி-1 : எங்கே வைத்துக் கொள்ளலாம் ?

சூனி-2 :ஒரு திறந்த வெளியில்

சூனி-3 :அங்கு நாம் மேக்பெத்தை சந்திப்போம்.

( சூனியக்காரிகள் இப்போது ஆவியுலக நண்பர்களை அழைக்கின்றனர். ஆவிகள் பார்ப்பதற்கு நாய்கள் போலவும், பூனை போலவும் தோன்றுகின்றன.)

சூனி-1 தன்னுடைய பூனையை அழைத்து ) இதோ வருகிறேன் கிரேமால்கின்

சூனி-3 என்னுடைய தேரை அழைக்கிறது.

சூனி-3 : (தனது ஆவியிடம் ) இதோ வருகிறேன்.

மூவரும் ( பாடுகின்றனர்) நன்றே தேது; தீதே நன்று. பனிமூட்டத்தில் பறந்து சென்றும் கலப்போம் அந்த காற்றின் ஊடே .( மறைகின்றனர் )

திரை.

காட்சி—2

போர் முழக்கங்கள் மேடைக்கு வெளியில் கேட்கின்றது. ஸ்காட்லாந்து நாட்டு அரசன் டங்கன் , மன்னனின் மூத்த மகன் மால்கம், டொனால்பெயின், லெனாக்ஸ் பிரபு மற்றும் உதவியாளர்கள் அனைவரும் வாள்காயம் பட்ட தளபதி ஒருவனைப் பார்க்க வருகின்றனர்.

டங்கன் : கொடுமை. என்ன ஒரு இரத்தம் ? ஆனால் இவன் இருக்கும் நிலையில் என்ன நேர்ந்தது, போர் குறித்த தற்சமய நிலை என்ன என்பது குறித்து பேச முடியும் என்று நினைக்கிறேன்.

மால்கம் : இவன் ஒரு ராணுவ அதிகாரி. இவன் சிறந்த வீரன். என்னைக்கூட ஒருமுறை கைதிலிருந்து காப்பாற்றியவன். வீரனே ! நீ படைக்களத்திளிருந்து கிளம்பியவரையில் போர்க்களத்தில் என்ன நிகழ்ந்தது என்று மன்னரிடம் கூறுவாயாக.

இராணுவத் தலைவன் : அப்படி ஒரு உக்கிரமான போர். எவர் பக்கம் வெற்றி என்று நிர்ணயிக்க முடியாத நிலை. இரண்டு நீச்சல் வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு நீச்சல் இட்டு முடிவில் மூச்சு திணறி நின்றது போல இருபடைகளும் இருந்தன. மூர்கனுக்கு நிகரான கருணையற்ற மாக்டொனால்ட் ஐயர்லாந்திலிருந்தும், ஹெப்ரைடிலிருந்தும் வந்து குவிந்த குவிந்த காலாட்படை வீரர்களும், குதிரைப்படை வீர்களும் புடைசூழ நின்றிருந்தான். முகத்தில் அதிர்ஷ்ட ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. அதிர்ஷ்ட தேவதை அவன் ஆசைநாயகி ஆனது போல அவன் முகத்தில் ஒரு மந்தஹாசம். மாவீரன் மேக்பெதின்- ஆமாம் அவன் ஒருவனே மாவீரன் என்ற அழைக்கப்பட தகுதியானவன்- முன்பு மக்டோனால்டின் வீரமும், அதிர்ஷடமும் ஒன்றுமில்லாமல் போயின. தனது வாளை மின்னல் வேகத்தில் சுழற்றியபடி அதிர்ஷ்டத்தை எள்ளி நகையாடியபடி முன் சென்ற அவனது வாள், ஒரு எழுத்தாணி வீர பக்கங்களில் காவியம் தீட்டியபடி செல்வதுபோல அந்த அடிமையின் முன்சென்று நின்றது. அந்த அடிமைக்கு வணக்கம் சொல்லவோ, வந்தனம் சொல்லவோ கூட நேரமில்லாமல் மேக்பெத் அவனை நாபியில் தொடங்கி தாடை வரை தனது வாளால் வகுந்துவிட்டான். அவனது தலையை துண்டித்து நமது கோட்டை மதிலில் தொங்க விட்டான்.

டங்கன் : என் உறவினன் அவன் சிறந்த வீரன்.

இராணுவத் தலைவன் : சூரியன் வலிமை குன்றும்போது கலம் கவிழ்க்கும் புயலும், மிரட்டும் இடிமுழக்கமும் எழுவதை போன்று, வசந்தம் வரும்போது சௌகரியங்களுடன் சில அசௌகரியங்களும் நேர்வது போன்று மக்டொனால்ட் சில கெடுதிகளையும் புரிந்துவிட்டான். கேளுங்கள் அரசே ! நார்வே தேசத்து படைகளை நாம் மும்முரம் காட்டியபோது நார்வே மன்னன் மேலும் சில புது படைகளுடனும், வலுவான புதிய ஆயுதங்களுடனும் மேலும் ஒரு தாக்குதலை நிகழ்த்தினான்.

டங்கன் : ஒ நமது தளபதிகளான மேக்பெத்தும் பாங்கோவும் அச்சமடைந்தனரா ?

இராணுவத் தலைவன் : ஆம் அச்சம் அடைந்தனர். ஒரு பருந்து குருவியை பார்த்து பயப்படும் அளவு. ஒரு சிங்கம் முயலைப் பார்த்து அடையும் அளவிற்கு பயந்தனர். முழங்கும் பீரங்கி குண்டுகளைப் போல இருமடங்கு ஆவேசத்துடன் எதிரி மீது பாய்ந்தனர். எதிரிகளின் இரத்தத்தில் குளிக்கச் சென்றவர்கள் போல போரிட்டனர். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின் நிகழ்ந்த போரில் கோல்கோத்தா நகரின் பெயர் வழக்கொழிந்தது போல அவர்களுடன் போரிட்டனர். ஓ! என்னால் முடியவில்லை. என் காயங்கள் வேதனை அளிக்கின்றன. மயக்கம் வரும்போல உள்ளது.

டங்கன் : உன் பெயரும் உன் காயங்களைப் போல வீரம் செறிந்து விளங்கட்டும். யாரங்கே இவருக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

( உதவியாளர்கள் இராணுவத் தலைவனை மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்கின்றனர்.-

( ராஸும், ஆங்கசும் வருகின்றனர்)

மால்கம் : தானைத் தலைவர் ராஸ்.

லெனாக்ஸ் : என்ன ஒரு ஆவேச வெறி அவன் கண்களில். ஒரு விநோதக் கதையை கூற வருபவனின் ஆர்வம் அவன் கண்களில் மின்னுகிறதே.

ராஸ் : கடவுளே மன்னரை காப்பாற்றும்.

டங்கன் : தானைத் தலைவனே எங்கிருந்து வருகிறாய் ?

ராஸ் : மன்னா நான் ஃபிஃ பே சமஸ்தானத்திலிருந்து வருகிறேன். அங்குதான் நமது கொடி இறக்கப்பட்டு நார்வே தேசத்து கொடி பறக்கிறது. அங்குதான் நமது மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அங்குதான் நமது தேசத்தின் மானம் பறக்கவிடப்பட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. விசுவாசமற்ற துரோகி காடர் என்பவனின் தலைமையில் பெரும்படையுடன் ஒரு கிளர்ச்சியற்ற போர் துவங்கியது. ஒவ்வொரு அடிக்கும் பதில் அடி கொடுத்து முன்னேறிய மேக்பெத் இன்று போர் தேவதையின் மணாளன் போல காட்சியளித்தார். இறுதியாக வெற்றிதேவதை நம் கழுத்தில் வாகைமாலையைச் சூட்டினாள்.

டங்கன் : ஓ மிக்க மகிழ்ச்சி.

ராஸ்: நார்வே மன்னர் நம்மிடம் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அவன் தன் படையுடன் பின்வாங்கி ஐயர்லாந்திற்கு திரும்பிச் செல்லாவிட்டால் அவருடைய இறந்த வீரர்களை எரிப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம். மேலும் சமாதான உடன்படிக்கைகாக பணயப் பணமாக பத்தாயிரம் டாலர்கள் வேண்டுமென்று கூறிவிட்டோம்.

டங்கன் : போ போய் அந்தத் துரோகி காடரிடம் சொல் அவன் நமது நம்பிக்கையை இழந்துவிட்டான் என்று.. விரைவில் அவன் உயிரிழப்பான் என்றும் சொல். அதோடு காடரின் தானைத் தலைவன் பட்டம் இனிமேல் மேக்பெதிற்கு உரியது என்றும் சொல்.

ராஸ் : இதோ இப்போதே மன்னா.

டங்கன் : எதனை தானைத்தலைவன் காடர் இழந்தானோ அதனை மேக்பெத் அடைந்தான்.

திரை

காட்சி-3.

காட்டினில் இடிமின்னலுடன் கூடிய இரவு. மூன்று சூனியக்காரிகள் வருகின்றனர்.

சூனி-1 : எங்கே சென்றிருந்தாய் என் சகோதரி ?

சூனி-2 : பன்றிகளைக் கொல்வதற்கு.

சூனி-3 :நீ எங்கே போயிருந்தாய் அக்கா?

சூனி-1 :ஒரு கடலோடியின் மனைவி மடி நிறைய பாதாம் கொட்டைகளை வைத்துத் தின்று கொண்டிருந்தாள். நான் ரொம்ப சாதாரணமாக அவளிடம் எனக்கு இரண்டு கொட்டை தின்ன கேட்டேன். அவள் பெரிய இவளாக என்னை போ போ சூனியகிழவி என்று விரட்டி விட்டாள். போகிறேன் ஒரு வீட்டு உபயோகச் சல்லடையை படகாகக் கொண்டு, வாலில்லா எலியை வாகனமாகக் கொண்டு போகிறேன். போய் அவள் கணவன் புலி என்ற பெயரையுடைய கப்பலில் மாலுமியாக பயணம் மேற்கொண்டுள்ளான். அவனை என்ன செய்கிறேன் பார்.

சூனி-2 : நான் உனக்கு ஒரு புயலைத் தருகிறேன்.

சூனி-3 : நானும் ஒன்றை அளிக்கிறேன்.

சூனி-1 : நான் மற்ற வாயுக்களை என் பிடியில் கொண்டு வருவேன். அனைத்து துறைமுகங்களையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன். காற்று செலுத்தும் திசைகளையும், அவனுடைய திசை காட்டும் கருவியின் முள்ளையும் என் ஆணையின் கீழ் கொண்டு வருவேன். அவனை ஒரு காய்ந்த புல்லை போல கதறடிப்பேன். இரவு பகல் இரண்டிலும் அவன் உறக்கத்தை உறிஞ்சி விடுவேன். அவன் கப்பல் மேல்கூரையைப் பிடித்து தொங்கவேண்டும். எவர் கண்ணுக்கும் புலப்பாடாமல் இனி அவன் ஒன்பதற்கு ஒன்பது இரவுகள் என்னிடம் வைத்து செய்யப்பட்டு சீரழியப் போகிறான் . அவனை அழிக்கமுடியாது என்றாலும் அவன் கப்பல் என் கையில் சிக்கி படப்போகும் இன்னல்களை பாருங்கள்.

சூனி-2 : நல்லா வேணும். நல்லா வேணும்.

சூனி-1 : இதோ என்னிடம் ஒரு இறந்த மாலுமியின் விரல் உள்ளது.

( முழவொலி தூரத்தில் கேட்கிறது. )

சூனி-3: முரசொலி முரசொலி அதோ மேக்பெத் வந்துவிட்டான்.

மூவரும் : கை கோர்த்தபடி ஆடுகின்றனர். ) மூவரும் இணைவோம் கைகளுக்குள்

தரையும், கடலும் நம் ஆளுகைக்குள்

மூவரும் மூவரும் மூவருமாய்

நவமாய் சேர்வோம் நாயகியாய்.

போதும் நமது கொண்டாட்டம்.

( மேக்பெதும் பாங்கோவும் வருகின்றனர். )

மேக்பெத் : ( பாங்கோவைப் பார்த்து ) இப்படி ஏமாற்றமும், சந்தோஷமும் நிறைந்த ஒரு நாளை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

பாங்கோ: ஃ பாரஸ் நகரம் கண்ணுக்குத் தென்படவில்லையே இன்னும் . ( அந்த மூன்று சூனியக்காரிகளைப் பார்த்து ) யார் இவர்கள்?இப்படி வற்றி சுருங்கி போய் … கொடூரமான பார்வையுடன்.. பார்த்தால் வேற்றுகிரக வாசிகளைப் போல இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்? (சூனியக்காரிகளைப் பார்த்து ) உயிருடன் இருக்கிறீர்களா? நான் சொல்வது காதில் விழுகிறதா? விழுகிறது என்றுதான் நினைக்கிறேன் பாருங்கள் வாயில் விரலை வைத்து பார்ப்பதை. உங்களை பெண்கள் என்று நம்புவதற்கு உங்கள் தாடி தடுக்கிறது.

மேக்பெத் : சொல்லுங்கள் நீங்கள் எந்தவகை ஜீவராசிகள் என்று.

சூனி-1 : வரவேண்டும் மேக்பெத். கிளாமிஸ் தானைத் தலைவனே வருக.

சூனி-2 :வரவேண்டும் மேக்பெத். காடரின் தானைத்தலைவனே வருக.

சூனி-3 : வரவேண்டும் மேக்பெத் . வருங்கால மன்னனே வருக.

பாங்கோ : என் அன்பிற்குரிய மேக்பெத் ? அவர்கள் கூறியதை கேட்டு மகிழாமல் ஏன் அச்சத்தில் விழிக்கிறாய் ? ( சூனியக்காரிகளை நோக்கி ) சொல்லுங்கள் நீங்கள் நிஜமாகவே மானுடப் பிரவிகல்தானா? இல்லை மாயத்தோற்றங்களா ? பாருங்கள் என் தலைவனை அவனுடைய இப்போதைய பதவியையும், இனி அவன் ஏற்றுக் கொள்ளும் பதவியையும் சிறப்பாக வருமுன் உரைத்த உங்கள் வார்த்தைகள் அவன் வாயை அடைத்து விட்டன.எனக்கு எதுவும் ஆருடம் சொல்லவில்லையே . காலத்தின் விதிகளை ஊடுருவி பார்த்து உங்களால் வருவது உரைக்க முடியும் என்றால் கூறுங்கள் எந்த விதை முளைக்கும் எந்த விதை கருகும் என்று. என்னிடம் கூறுங்கள். உங்கள் வார்த்தைகள் மீது எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. வருத்தமும் இல்லை. விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை.

சூனி-1 : ஹாய்.

சூனி-2 : ஹாய்.

சூனி-3 : ஹாய்.

சூனி-1 : மேபெத்தைவிட நீ தாழ்ந்தவன் ஆனால் உயர்ந்தவன்.

சூனி-2 :அத்தனை மகிழ்ச்சி உனக்கு இருக்காது; ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பாய்.

சூனி-3 : உன் வாரிசுகள் மன்னராவர். நீ ஆக மாட்டாய். வாழ்த்துகிறோம் உங்கள் இருவரையும் நாங்கள் மூவரும்.

சூனி-1 ; மேக்பெத் பாங்கோ வாழிய நீங்கள் இருவரும்.

மேக்பெத்: நில்லுங்கள் அரைகுறை ஆருடம் கூறுபவர்களே . என் தந்தை சிநேலின் மரணத்திற்கு பின்பு அவருடைய வாரிசு என்ற அடிப்படையில் கிளைம் நகரின் குறுநில மன்னனானேன் . ஆனால் எப்படி காடர் நாரின் மன்னனாக முடியும் ? காடரின் மன்னர் இன்னும் உயிருடன் இருக்கிறார். மிகச் சிறந்த வீரமும் தீரமும், பதவியும் அதிகாரமும் மிக்கவர். இந்த வினோத குயுக்தி எப்போதிலிருந்து கைவரப் பெற்றீர்கள் ? எங்களை இந்தபுதர் மண்டிக்கிடக்கும் பாழ்இடத்தில் நிறுத்தி எதற்காக வருமுன் வாழ்த்துரை வழங்கினீர்கள் ? சொல்லுங்கள் இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.

( சூனியக்காரிகள் அங்கிருந்து மறைகின்றனர். )

பாங்கோ : பூமிக்கும் நீரில் தோன்றுவது போல குமிழிகள் உள்ளன போலும். இவர்கள் அப்படிப்பட்டவைகள். எங்கே திடீரென்று காணாமல் போனார்கள் ?

மேக்பெத் : காற்றில் பனிமூட்டம் போல கரைந்து விட்டனர். இன்னும் சிறிதுநேரம் இருந்திருக்கலாம்.

பாங்கோ : நாம் இப்போது பார்த்தது நிஜமா? இல்லை போதைச் செடியின் சாற்றினை பருகிவிட்டோமா?

மேக்பெத் : உன் பிள்ளைகள் அரசர்கள்.

பாங்கோ : ஆனால் நீங்களோ அரசர்.

மேக்பெத் : காடரின் குறுநில மன்னனும் கூட. அதுவும்தானே சொன்னார்கள்.

பாங்கோ : அதே வார்த்தைகளைத்தான் சொன்னார்கள்.

(ராஸும் ஏங்கசும் வருகின்றனர் )

ராஸ் : மன்னர் உன்னுடைய வெற்றியை கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி கொண்டுள்ளார் மேக்பெத். போர்க்களத்தில் நீ எதிரிகளை பந்தாடும் சாகசங்களை கேள்விப்படும்போது உன் வெற்றியை தன் வெற்றியாக நினைத்து அவர் வியக்கிறார்; வாயடைத்து நிற்கிறார். எதிரிகளை வீழ்த்திய அன்றே நீங்கள் நார்வே நாட்டின் படையையும் வென்றுவிட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். உங்கள் எதிரிகளின் நடுவில் கூட மரணம் உங்களை அச்சபடுத்தவில்லை என்பது அவரது ஆச்சரியத்தை அதிகபடுத்திவிட்டது. ஒரு நீண்ட கதை கூறுவது போல செய்தி சொல்பவர்கள் . வரிசையில் நின்று உங்கள் வெற்றிகளை கூறிக் கொண்டே இருந்தனர். உங்கள் போர்த்திறமையின் பாராட்டு செய்திகள் மடல்களின் குவியல் மன்னரின் காலடியில் மலை போல் கிடக்கிறது.

ஏங்கஸ் : மன்னர் எங்களை உங்களிடம் அனுப்பி தமது ராஜநன்றியை தெரிவிக்கச் சொன்னார். நாங்கள் வந்திருப்பது உம்மை அழைத்து செல்ல மட்டுமே; வெகுமதி அரசரிடம் காத்திருக்கிறது.

ராஸ் : ஒரு பெரிய கௌரவத்தின் முன்னோட்டமாக அவர் தங்களை காடரின் மன்னன் என்று அழைக்க சொன்னார். காடரின் தானைத் தலைவரே வருக வருக. இந்தப் பட்டம் உமக்குரியது.

பாங்கோ : சாத்தான் கூறியது நிஜமாகுமா?

மேக்பெத். காடரின் மன்னர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஓர் உடையை இருவர் அணிய இயலாது. என் உடை எனக்கு. மாற்றுடை எனக்கெதற்கு?

ஏங்கஸ் : அவர் உயிருடன் இருக்கிறார். நீதியின் கடுமையான தீர்ப்பில் அவர் உயிர் போகப்போகிறது. அவர் நார்வே படைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கைகோர்த்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாய்மண்ணிற்கு துரோகம் இழைத்த குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டதால் இந்த மரணதண்டனை அவருக்கு அளிக்கப்படுகிறது.

மேக்பெத் : ( தனியாக )கிளைம்ஸ் காடர் இரண்டின் பதவியும் எனக்கு. நாளை இதைவிட பெரிய பதவி ( ராஸ் ஏங்கஸ் இருவரையும் நோக்கி ) தங்கள் சிரமத்திற்கு நன்றி. ( பாங்வோவிடம் தனியாக ) இப்போது நம்புகிறாயா பாங்கோ உன் பிள்ளைகள் அரசாளுவார்கள் என்று ? இவர்கள் எனக்கு காடரின் மன்னன் என்ற பதவியை அளிக்கும்போது உன் பிள்ளைகளுக்கு இதை விடச் சிறந்த பதவி கிடைக்கும் என்பதை நம்புகிறாய் அல்லவா?( ராஸ் ஏங்கஸ் இருவரை நோக்கி ) கனவான்களே ஒரு நிமிடம்.

( ராஸ் ஏங்கஸ் மற்றும் பாங்கோ சற்று தள்ளி நிற்கின்றனர். )

மேக்பெத் ( தனிமையில் ) ஒரு அரச காவியத்தின் முன்னுரையாக இரண்டு உண்மைகள் கூறப்பட்டுள்ளன.( ராஸ் மற்றும் ஏங்கசைப் பார்த்து ) நன்றி கனவான்களே. ( தனிமையில் ) அந்த அமானுஷ்ய தீர்ப்பு எனக்கு தீமையும் விளைவிக்காது; நன்மையும் விளைவிக்காது. தீமைஎன்றால் பிறகு எனக்கு எதற்கு காடரின் குறுநில மன்னர் பதவி ? ஹா ! நான் காடரின் மன்னன். நன்மை என்றால் என் மனதில் இயற்கைக்கு விரோதமாக எழுந்துள்ள கெட்ட எண்ணம் ஏன் என் மயிர்க்கால்களை சிலிர்ப்பிக்க வேண்டும் ? ஏன் என் இதயம் அதன் கூட்டில் வேகமாக அடித்துக்கொள்ள வேண்டும் ? நிகழ்கால அச்சங்களே போதும்; என் தீய எண்ணங்களின் கற்பனையினால் ஏற்படும் அச்சம் வேண்டாம். கொலை செய்யவேண்டும் எனத் தோன்றும் என்னுடைய பைத்தியக்கார கற்பனை என் மனிதத்தின் அடித்தளத்தை ஆட்டுவிக்கிறது. என் அடிப்படை செயல்களை என் கற்பனை திணற வைத்துவிடும் போலிருக்கிறது.

பாங்கோ : பாருங்கள் மேக்பெத் திணறுவதை.

மேக்பெத் : அதிர்ஷ்ட தேவதை எனக்கு வெற்றிமாலை சூடும்போது நான் செயலாற்ற என்ன இருக்கிறது ?

பான்க்வோ :புதிய பதவிகள் அவனை தேடி வருகின்றன. விந்தையான ஆடைகள் நமது முயற்சியின்றி நமக்கு பொருந்தாது.

மேக்பெத் : எது வந்தாலும் வரட்டும். நடப்பது நடந்துதானே தீரும் ?

பாங்கோ : சொல்லு மேக்பெத் நீ தயாரானதும் செல்வோம்.

மேக்பெத் : மன்னியுங்கள். என்னவோ என் சோம்பேறி மூளை மறந்த செயல்களை நினைவூட்டிக் கொண்டிருந்தது. என் ஒவ்வொருநாளும் நீங்கள் எனக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களை பற்றியே எண்ணிக்கழிகிறது. வாருங்கள் மன்னரை பார்க்க செல்லலாம். ( பாங்கோவிடம் )இன்று நிகழ்ந்தவைகளை அசைபோடு பாங்கோ. மேலும் நேரம் கிடைக்குமானால் மேற்கொண்டு நடக்கவேண்டியவைகளை மனம் விட்டு பேசுவோம்.

பாங்கோ : கண்டிப்பாக.

மேக்பெத் : அதுவரையில் இது போதும். ( மற்ற இருவரை பார்த்து ) வாருங்கள் நண்பர்களே கிளம்பலாம்.

திரை

காட்சி-4.

அரண்மனையில் அரசகூடம். அரசன் டங்கன், மால்கம் லெனாக்ஸ், டொனால்பெயின் மற்றும் ஊழியர்கள்.

டங்கன் : காடர் தானைத்தலைவனின் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதா? தூக்கிலிடும் காவலர்கள் திரும்பி விட்டனரா?

மால்கம் : மாண்புமிகு மன்னா! அவர்கள் இன்னும் திரும்பவில்லை. ஆனால் ஒரு பணியாளனிடம் கேட்டதற்கு அவன் காடரின் தானைத்தலைவனின் தூக்கி உறுதிபடுத்தினான். இறப்பதற்கு முன்னர் அவன் நமக்கிழைத்த துரோகத்தை ஒப்புக்கொண்டுவிட்டானாம். தங்களின் மேலான மன்னிப்பை கோரினனானம். கதறி அழுதானாம். அவன் இறந்த செயலைவிட அவன் வாழ்வில் எதுவும் சிறப்பாக செய்யவில்லையாம்.அவன் இறந்தது தான் பொக்கிஷமாக கருதவேண்டிய ஒன்றை குப்பையாக தூக்கி எறிந்ததைப் போல இறந்ததாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.,

டங்கன் : மனதில் இருப்பதை முகத்தில் அறிய கலை எதவும் இல்லை. அவன் ஒரு கனவான் என்று நம்பி என் மொத்த நம்பிக்கையையும் அவன் மேல் வைத்திருந்தேன்.

( மேக்பெத், பாங்கோ ராஸ், மற்றும் ஏங்கஸ் வருகின்றனர். )

டங்கன் .( மேக்பெத்தை நோக்கி ) என் உயிரினும் மேலானவனே ! என் நன்றிகெட்டதனத்தின் பாவம் என்னைக் கொல்கிறது மேக்பெத். உன்னுடைய புயல் வேகச் செயலுக்கான வெகுமதி மட்டும் மந்தமாகவே இருக்கிறது. நான் கொடுக்கும் சன்மானம் கண்டிப்பாக உன் செயலுக்கான ஊதியம் இல்லை. உன்னுடைய செயல் பாராட்டுக்கு தகுதியானது இல்லை எனில் என்னுடைய நன்றியும் , வெகுமதியும் பெரிதாக போயிருக்கும். ஆனால் இப்போது உன் செயல் என்னுடைய வெகுமதியை விட மிகப்பெரியது என்று மட்டுமே இப்போது என்னால் சொல்ல முடிகிறது.

மேக்பெத் : உங்கள் கீழ் பணிபுரிவதே எனக்கு சிறந்த வெகுமதி மன்னா. எங்கள் கடமைகளை ஏற்றுக் கொள்வது ஒன்றே உங்கள் கடமையாகும் மன்னா. பிள்ளைகள் வளர்ந்து தகப்பனுக்கு ஆற்றும் கடமையைப் போலதான் எங்கள் பணியும். உங்கள் அன்பிற்கும் சொல்லுக்குமே நாங்கள் கட்டுப்பட்டு பணியாற்றுகிறோம் மன்னா.

டங்கன் : வா அருகில். சில தலைமை பொறுப்புகளை உனக்குள் விதைக்கிறேன். அவை வளர்ந்து விருட்சமாகட்டும்.( பாங்கோவை நோக்கி ) வீரனே பாங்கோ ! நீ மேக்பெதிற்கு எந்தவிதத்திலும் சளைத்தவன் இல்லை. உன் செயலும் சற்றும் குறைத்து மதிப்பிடத் தக்கது அன்று. உன்னை என் கைகளில் அனைத்து என் இதயத்தில் வைத்துள்ளேன்.

பாங்கோ : நான் செழித்தாலும் அறுவடை உங்களுடையது மன்னா.

டங்கன் : என் மகிழ்ச்சி உச்சத்தை அடைந்து கண்ணீர்த் துளிகளாக வெடிக்கக் காத்திருக்கிறது. என் புதல்வர்களே, என் உறவினர்களே, பிரபுக்களே மற்றும் எனக்கு நெருக்கமானவர்களே இன்று என் மூத்த மகன் மால்கத்திற்கு கம்பர்லாந்தின் மன்னர் பதவியை அளிக்கிறேன். ஆனால் மால்கம் மட்டும் பட்டங்களை அனுபவிக்கபோவதில்லை. பட்டம் தகுதியானவர் அனைவர் மீதும் நட்சத்திரம் போல ஜ்வலிக்கும்.( மேக்பெதை நோக்கி ) வா உன்னுடைய இன்வென்ஸ் மாளிகைக்கு செல்வோம். உன் விருந்தோம்பலுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.

மேக்பெத் : உங்களுக்கு ஆற்றும் பணியே என்னுடைய ஓய்வு. நான் கட்டியம் கூறவேண்டும் என் மனைவிக்கு தங்கள் வருகை குறித்து. அவள் முகம் மலரப்போவதை காண வேண்டும் எனக்கு. எனவே நான் செல்ல அனுமதியளியுங்கள்.

டங்கன் : நல்லது என் உயிரினும் மேலான காடர் நிலா மன்னனே !

மேக்பெத் ( தனியாக ) கம்பர்லாந்தின் இளவரசன். என் முன்னே இருக்கும் படிக்கல்லில் ஒன்று நான் தடுக்கி விழவேண்டும். அல்லது உந்தி மேலே செல்ல வேண்டும். கிரகங்களே மறைந்து கொள்ளுங்கள். ஒருவருக்கும் என் மனதில் எரியும் நெருப்பின் ஜூவாலை தெரியவேண்டாம். கண்மூடித் திறப்பதற்குள் விழிகள் கூட பார்க்க அச்சப்படும் செயலை செய்துமுடிக்க வேண்டும். ( மறைகிறான். )

டங்கன் ( பாங்கோவிடம் பேசியபடியே இருக்கும் பாதி உரையில் ) நீ சொல்வது சரிதான் பாங்கோ . மேக்பெத் சரியா தீரன்தான். இந்தப் பாராட்டுகள் அவனுக்கு தகுதியானவைதாம். எனக்கு மிக்க மகிழ்ச்சி. என் மகுடத்தில் அவன் ஒரு மாணிக்கக்கல் அவன் அன்பு நம்மை வரவேற்க முன்னால் சென்று விட்டது. ஒப்புவமை இல்லாத சுத்த வீரன்.

( துந்துபிமுழங்க சபை கலைகிறது. அவர்கள் அகல்கின்றனர். )

திரை.

காட்சி -5.

( மாஎக்பெதின் மாளிகை.

திருமதி. மேக்பெத் உள்ள வருகிறாள் . )

திருமதி. மேக்பெத் ( கையில் ஒரு கடிதத்தை வாசிக்கிறாள் . ) “ அவர்கள் என்னுடைய வெற்றி தினத்தன்று என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை பற்றி கூறியதை கேட்டபோதுதான் அவர்களுடைய அமானுஷ்ய சக்தி எனக்கு தெரியவந்தது. என் அவா நெருப்பென பற்றி எரிய, மேலும் கேள்விகளை கேட்க முன்விழையும்போது அவர்கள் எங்கிருந்து தோன்றினார்களோ அந்தக் காற்றில் கரைந்து விட்டனர்., வாயடைத்து நான் நின்ற சமயம் மன்னரின் ஆட்கள் வந்து நான் காடரின் மன்னன் மகுடம் சூட்டபட்டதைச் சொன்னார்கள். காடரின் மன்னனே என்றுதான் என்னை அந்த சூனியக்காரிகள் அழைத்தனர். மேலும் வருங்கால மன்னனே என்றும் அழைத்தனர். உன்னிடம் இதனை பகிர்ந்து கொள்ள பிரியாப்படுகிறேன். என் இன்பத்தின் சரிபாதி நீயன்றோ ? உனக்கு கிடைக்கப்போகும் பெரிய பதவி குறித்த தகவலை அறிந்து நீ மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வேண்டும் என்பதால்தான் இதனை உனக்கு முன்பே தெரிவிக்கிறேன். இது உனக்கு மட்டும் தெரிந்த இரகசியமாக இருக்கட்டும். வருகிறேன் . “( கடிதத்தை தூக்கி பிடித்தபடி ) கிளைம்சின் மன்னரும் நீங்கள்; காடரின் மன்னரும் நீங்கள்; இவ்வளவு ஏன் இந்த நாட்டின் மன்னராகவும் ஆகவேண்டியவர் நீங்கள். ஆனால் உங்கள் இயல்புதான் எனக்கு வருத்தமளிக்கிறது. கருணையில் நிரம்பி வழியும் உங்கள் பால்மனம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பற்றுமா என்பது சந்தேகம்தான். ஒரு செயலின் வெற்றி, விருப்பம் இருப்பதால் இல்லை குயுக்தி இருப்பதாலேயே வெற்றியடைகிறது. உங்களைப் பொறுத்தவரையில் உயர் பதவியும் வேண்டும். அது புனிதமாகவும் பெறப்படவேண்டும். குறுக்குவழியில் நீங்கள் போகமாட்டீர்கள். தவறான வழியில் கிடைத்தால் மறுக்கவும் மாட்டீர்கள். பதவியும் வேண்டும்; அவற்றை அடையும் வழியினால் பாவம் உங்களுக்கு வரக்கூடாது. பழியும் நேராமல் உங்களுக்கு உங்கள் ஆவலும் பூர்த்தியாக வேண்டும். விரைவில் நம் இல்லம் வாருங்கள். உங்கள் செவிகளில் என் நம்பிக்கைகளை விதைக்கிறேன். என் போதனைகளால் மகுடத்தை அடையும் தடைகளைக் களைந்து எறிகிறேன். விதியும், பில்லிசூனியமும் உங்களை மன்னர் ஆக்குவதாக உறுதியளிக்கின்றன.

( ஒரு சேவகன் உள்ளே நுழைகிறான் . )

திருமதி. மேக்பெத் : என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் ?

சேவகன் இன்றிரவு மன்னர் இங்கு வருகிறார்.

திருமதி.மேக்பெத் : உனகென்ன பைத்தியமா இப்படி ஒரு சேதி சொல்ல? மேக்பெத் மன்னருடன்தானே இருக்கிறார்? அவர் முதலில் தகவல் சொல்லியிருப்பாரே

சேவகன் : என்னை மன்னியுங்கள் ஆனால் இதுதான் நிஜம். மேக்பெத் வருகிறார் மேடம். அவர் விரைவாக செல்லும் ஒரு தூதுவனை அனுப்பினார். அவன் வந்த வேகத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி பேசமுடியாமல் நிற்கிறான்.

திருமதி.மேக்பெத் : அவனை பார்த்துக் கொள். நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறான்.

( சேவகன் மறைகிறான். ) குரல் கம்மிய அண்டங்காக்கையை போல மன்னர் டங்கன் என் கொத்தளதிற்குள் வரும் தகவலை கூறிவிட்டு சென்றிருக்கிறான். வாருங்கள் கெட்ட ஆவிகளே ! என்னை மரண எண்ணங்களால் நிரப்புங்கள். என் பாலினத்தை மாற்றுங்கள். என் முடியிலிருந்து அடிவரை கடுமையான கொடூரத்தை நிரப்புங்கள். என் குருதியை கடினமாக்குங்கள். கழிவிரக்கத்திற்கான பாதையை மூடுங்கள். இயற்கையாக நேரிடும் மனசாட்சியின் உறுத்தல் எந்த வகையிலும் என்னை அசைத்து , என் செயலை தடுக்காமல் இருக்கட்டும். என் அமுதக்கலசங்களில் இருக்கும் தாய்ப்பாலை விஷமுள்ள அமிலமாக மாற்றுங்கள். கண்களுக்கு தெரியாமல் அமானுஷ்யமாக இருக்கும் ஆவிகளே வாருங்கள். கனத்த இரவே வா ! நரகமெனும் புகையினால் இந்த உலகை மூடு. என் குறுவாள் அது கீறப்போகும் காயத்தை பார்க்க கூடாது. வானகம் இருளைப் பிளந்து என் செயலை தடுத்து ‘ நில் ! நில் !’ என்று தடுக்கக் கூடாது.

( மேக்பெத் நுழைகிறான். ) ஆஹா கிளைம்சின் தலைவனே காடரின் தலைவனே ! அரசனான பின்பு இந்தப் பதவிகள் சிறியதாகி விடும்.உங்கள் கடிதம் என்னை என்னுடைய அப்பாவி நிலையிலிருந்து வேறுநிலைக்கு மாற்றிவிட்டது. வருங்காலம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

மேக்பெத் : என்னுடைய பிரியமான சகி ! இன்றிரவு டங்கன் இங்கே விருந்திற்கு வருகிறார்.

திருமதி. மேக்பெத் : எப்போது திரும்புவார் ?

மேக்பெத் : நாளை கிளம்ப திட்டமிட்டுள்ளார்.

திருமதி.மேக்பெத் : ஓ இப்படி ஒரு பொன்னான நாள் மீண்டும் வராது. உங்கள் முகம் ஒரு புத்தகத்தை போல வினோத விஷயங்களால் நிறைந்திருக்கிறது. காலத்தை ஏமாற்ற நீங்கள் காலமாக மாறவேண்டும். பூநாகத்தை உள்மறைத்த மலரினைப்போல் தோற்றம் அளியுங்கள். மன்னர் வருகிறார். அவரை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த இரவின் பொறுப்புகளை என்னிடம் விட்டு விடுங்கள் . ஏன் எனில் இந்த இரவு நமக்கு இனிவரும் இரவுகளையும் பகல்களையும் மாற்றியமைக்க போகிறது.

மேக்பெத் : இது குறித்து நாம் மேலும் பேசவேண்டியுள்ளது.

திருமதி.மேக்பெத் : தெளிவான பார்வையுடன் இருங்கள். அச்சமே சந்தர்ப்பத்தின் எதிரி. மற்ற எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடுங்கள்.

திரை.

காட்சி-6.

( மேடை விளக்குகளால் ஒளிமயமாக்கபட்டுள்ளது. அரசர் வருவதை இசைக்கருவிகள் அறிவிக்கின்றன. மன்னர் டங்கன், மால்கம், டொனால்பெயின், பங்க்வோ, லெனாக்ஸ், மாக்டஃப், ராஸ், ஏங்கஸ் மற்றும் உதவியாளர்கள் நுழைகின்றனர். )

டங்கன் : இந்த மாளிகை மனதுக்கு உகந்ததாக உள்ளது. இதில் உள்ள நறுமணம் மனதில் நல்ல எண்ணங்களை தூண்டுவதாக உள்ளது.

பாங்கோ : கோடைபறவையான வீட்டு மைனாவின் கூடு இங்கு சொர்கத்திலிருந்து வீசும் அன்பான காற்றை அடையாளம் காட்டுகிறது. இந்த மைனாக்கள் எங்கே கூடு கட்டுகின்றனவோ அங்கு காற்று மணம் மிக்கதாக இருக்கும் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன்.

( திருமதி.மேக்பெத் வருகிறாள் )

டங்கன் : அதோ நம் மனைத்தலைவி வருகிறாள்.நமது அன்பர்கள் நமக்கு அன்பென்று தொந்தரவு கொடுத்தாலும் நாம் அதனை அன்பாகவே ஏற்றுக் கொள்கிறோம். இதன்மூலம் எங்கள் வருகையை தொந்தரவாகக் கொள்ளாமல் அன்பாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமதி.மேக்பெத் : எங்கள் செய்கையெல்லாம் உங்களுக்காகத்தான் . அவை இரட்டிப்பானாலும், மேலும் இரட்டிப்பானாலும் எங்கள் இல்லத்திற்கு நீங்கள் அளித்துள்ள கௌரவத்திற்கு அது ஈடாகாது. நீங்கள் இதுவரை அளித்த கவுரவத்திற்கும் இதோ சற்று முன் அளித்த கவுரவத்திற்கும் நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக உங்கள் அனைவரையும் எங்கள் விருந்தினராய் வரவேற்கிறோம்.

டங்கன் : எங்கே காடரின் தலைவன் ? அவன் பின்னால் குதிரையில் வேகமாகத் தொடர்ந்தோம். அவனை முந்திவிடலாம் என்றிருந்தோம். ஆனால் அவன் விரைந்து வந்துவிட்டான். அவனுடைய தார்க்குச்சியை விட கூர்மையான அன்பு எங்களை வரவேற்க முன்னமே வந்துவிட்டது போலும். மரியாதைக்குரிய அழகிய சீமாட்டி இன்றிரவு நாங்கள் உங்கள் இல்ல விருந்தினர்.

திருமதி.மேக்பெத் : உங்கள் அடிமைகளான எங்களுக்குன்று உடைமைப்பொருள் எதுவுமில்லை. இங்கிருபதெல்லாம் உங்களுடையதுதான். நாங்கள் அவற்றை பத்திரமாக வைத்திருப்பது உங்களிடம் திருப்பி கொடுக்கத்தான்.

டங்கன் : தங்கள் கையை நீட்டி என்னை பற்றி தங்கள் இல்லத்தலைவன் மேக்பெத்திடம் என்னை அழைத்து செல்லுங்கள் சீமாட்டி. நாங்கள் அவனை மிகவும் நேசிக்கிறோம். அவன் மீது எங்கள் கருணை எப்போதும் உண்டு. நீங்கள் தயாரானதும் உபசரிக்கலாம்.

( அனைவரும் மறைகின்றனர். )

காட்சி -7.

இடம்: மேக்பெத்தின் மாளிகை.

( மேக்பெத்தின் மாளிகையில் விருந்து நடக்கிறது. ஒரு பரிசாரகன் வருகிறான். இரண்டு மூன்று பணியாளர்கள் உணவு மேசையை சுத்தம் செய்கின்றனர். இறுதியாக மேக்பெத் நுழைகிறான். )

மேக்பெத் :நடப்பது நடந்தே தீரும் என்னும்போது நடப்பது விரைவாக நடப்பது நல்லது. இந்த மரணம் ஒரு வலைபோல வீசப்பட்டு பின் நிகழ்பவற்றை தடுத்து, இறுதி வெற்றியை முடிவாகத் தரும் இப்போது கொடுக்கப்படும் அடி இருப்பான இருப்பாகவும், , முடிவான முடிவாகவும் இருக்கவேண்டும் . கால வெள்ளத்தில் மூழ்கி, வரவிருக்கும் வாழ்வுடன் வெளிவரவேண்டும். இருப்பினும் இந்தக் கொலைநிகழ்வுகளுக்கு நியாயம் வழங்கப்படும்; ஒவ்வொரு இரத்த செயலும் எய்தவனைத் தாக்கும் கொடியவிஷம் போன்றது. வன்முறை என்றுமே சொல்லிக் கொடுப்பவரை தாக்கும் தன்மையுடையது. நியாயம் பொதுவானது என்பதால் பிறருக்கு வழங்கப்பட்ட நஞ்சு நம் உதட்டை நெருங்க நேரமாகாது. இதோ மன்னர் இருமடங்கு நம்பிக்கையுடன் வருகிறார். ஒன்று நான் அவரின் உறவினன்; இரண்டு நான் ஒரு குறுநில மன்னன். இரண்டுமே இந்தச் செயலுக்கு எதிரானது. இன்று அவர் என் விருந்தினர் நான் மனைத்தலைவன். அவரைக் கொலைசெய்ய வருபவனுக்கு வாள்வீச வேண்டியவன் அவருக்கே வாள்வீசக் கூடாது. மேலும் டங்கன் சாந்தகுணமுள்ளவர்; தனது அரசு கடமைகளில் அப்பழுக்கற்றவர்; அவர் துர்மரணமடைந்தால் அவருடைய நற்குணங்கள் தேவதைகளைப் போல் மேல் எழும்பும்; உலகிற்கு பறைசாற்றும். பச்சாதாபம் சிறகடித்து எங்கும் வியாபிக்கும்; மக்களின் கண்ணீர் வெள்ளம் காற்றையும் நனைக்கும். இந்தச் செய்கையை தூண்டிவிட என்னிடம் என்னுடைய பேராசையைத் தவிர வேறு உபாயம் எதுவும் இல்லை. என் பேராசை பெரிதாகி பெரிதாகி சுமப்பவனை வீழ்த்தப் போகிறது.

( திருமதி மேக்பெத் வருகிறாள். )

மேக்பெத் : வா! வா! ஏதாவது சேதி உண்டா?

திருமதி. மேக்பெத் : மன்னர் இரவு உணவை முடிக்கப் போகிறார். ஆமாம் எதற்காக உணவுக் கூடத்திலிருந்து வெளியேறினீர்கள் ?

மேக்பெத் : மன்னர் என்னைத் தேடினாரா?

திருமதி. மேக்பெத் : அவர் தேட மாட்டாரா என்ன?

மேக்பெத் : சீமாட்டி போதும் இந்தச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். அவர் என்னை வேண்டுமென்ற அளவிற்கு கௌரவப் படுத்தியிருக்கிறார். எனக்கும் என் பிரஜைகளிடம் நற்பெயர் உள்ளது. புதிதாக கிடைத்த கௌரவத்தை நினைத்து நான் திளைக்கவேண்டும். அதை என்னால் உதறிவிட முடியாது.

திருமதி. மேக்பெத் : இதற்கு முன்னாள் நன்றாகத்தானே இருந்தீர்கள்? குடித்திருக்கிறீர்களா? அல்லது உறங்கச் சென்று அச்சத்தில் எழுந்ததால் முகம் வெளுத்துக் கானப்படுகிறீர்களா? இந்தக் கணத்திலிருந்து உங்கள் காதலை நான் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்வது ? ஆசைப்படும்போது வீரனாகவும், செயலில் இறங்கும்போது கோழையாகவும் மாறலாகுமா? எந்த மகுடத்தின் மீது ஆசை பட்டீர்களோ அதனை எப்படியாவது பறிப்பீர்களா அல்லது ஒரு கோழையைப் போல ஆசைமட்டும் ப்டுவேன் ஆனால் செயலில் இறங்கமாட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்களா ? இது என்ன மதில் மேல் பூனையைப் போல ?

மேக்பெத் : சகி போதும் நிறுத்து. ஒரு மனிதனாக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன் . அதற்கும் அதிகமாக செய்யும்போது நான் மனிதத்தை இழந்து விடுவேன்.

திருமதி.மேக்பெத் : மனிதன் செய்யும் செயல் என்றால் பிறகு எதற்கு உங்களுடைய பேராசையை என் தலையில் ஏற்றினீர்கள் ? இந்தச் செயலைப் புரியப்போகிறேன் என்று சொன்னபோது நீங்கள் மனிதராக இருந்தீர்கள். எதைச் செய்யவேண்டுமோ அதற்காக நீங்கள் எடுத்து வைக்கும் மேலும் ஒரு அடியினால் நீங்கள் மனிதனை விட மேலாக மாறி விடுவீர்கள். காலமும் இடமும் இப்போது கூடி வந்திருக்கிறது. என் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது பால் உரியும் குழந்தை மீது எனக்கு அவ்வளவு ஆசை இருக்கும்? . என் முகம் பார்த்து சிரிக்கும் குழந்தையை என் முலைக்காம்பிலிருந்து அதன் உதடுகளைப் பிரித்து அதனை தரையில் மோதி மூளையை சிதறடித்தால்தான் என்னுடைய ஆசை நிறைவேறும் என்பது என்னுடைய வரமானால் நான் அப்படி செய்வதற்குக் கூட சிறிதும் தயங்கமாட்டேன்.

மேக்பெத் : இம்முயற்சியில் நாம் தோற்று விட்டால்?

திருமதி.மேக்பெத் : தோல்வியா? உங்கள் துணிச்சலை முறுக்கேற்றிக் கொண்டால் நாம் தோற்க மாட்டோம். டங்கன் இன்று முழுவதும் அலைந்து கொண்டிருந்ததால் விரைவில் உறங்கச் சென்றுவிடுவார். அவருடைய அந்தரங்கக் காவலர்கள் இருவருக்கும் அளவுக்கு அதிகமாக மது அளித்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறேன். அவர்கள் நினைவு புகைபோக்கியின் வெளியில் செல்லும் புகை போல மிதக்குமே அன்றி நிலைக்காது. குடித்துவிட்டு பன்றிகளைப் போல் தூங்கப்போகும் அவர்கள் முற்றிலும் இறந்தவர்களுக்கு சமம். பிறகு நம்மால் பாதுகாப்பற்ற டங்கனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செயலாற்ற அந்த அந்தரங்க காவலர்கள் மீது நாம் பழியைப் போடுவது அத்தனை கடினமாகவா இருக்கும்?

மேக்பெத் : உனக்கு கண்டிப்பாக ஆண்மகவுதான் பிறக்கும். உன்னுடைய இந்த அச்சமற்ற உத்வேகம் ஆண்மகவைத் தவிர வேறு எதையும் உண்டாக்காது. அவர்களைக் கொன்றுவிட்டு அவர்கள் கத்தியாலேயே மன்னனை கொன்றுவிட்டால் இந்த நாடு கொலையை அந்தரங்கக் காவலர்களே செய்ததாகத்தானே நம்பும் ?

திருமதி.மேக்பெத் : வேறு எப்படி மாற்றி எண்ண முடியும்? அவர் இறந்த தகவலைக் கேட்டதும் வருத்தத்துடன் கதறி அழவேண்டும்.

மேக்பெத் :நான் துணிந்துவிட்டேன். என் உடலின் ஒவ்வொரு தசையும் இந்த செய்கைக்காக ஆயத்தமாகிவிட்டது. போ உள்ளே சென்று நல்ல மனைத்தலவி போல் நடித்து காலத்தை ஏமாற்று. போலியான இதயத்தை மறைக்க போலியான முகம் வேண்டும்.

திரை.

முதல் அங்கம் நிறைவுற்றது.

.

Comments are closed.