மௌனச்சுழி எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கான இரங்கல் கட்டுரை / பாலகுமார் விஜயராமன்

[ A+ ] /[ A- ]

”என்னவெல்லாமோ ஆக ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை.”

எஸ். அர்ஷியா (2017)

ஒரு மனிதன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த உலகத்தை விட்டு விடைபெற்றுக் கொள்ளும் போது, அவன் சூழ்ந்திருந்த உலகம் திடீரென ஒரு நொடி அதிர்ந்து பின் மீண்டும் தன் அச்சில் சுழல் எத்தனிக்கிறது. அவனே ஒரு எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில், அவன் சூழ்ந்திருந்த உலகம் போக, அவன் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருந்த இன்னொரு உலகம் அப்படியே உறைந்து போகிறது.

அவன் மனதுக்குள் சூல் கொண்டிருந்த கருக்கள் மூச்சுவிடும் முன்பே அழிந்து போகின்றன. அவன் பாதி எழுதி வைத்திருந்த படைப்புகளுக்குள் இருக்கும் கதைமாந்தர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்தபடி அவற்றிற்குள்ளேயே மடிந்து விடுகிறார்கள். அவன் எழுத நினைத்த விஷயங்கள் எழுத்துக்களாய் கரையேற முடியாமல் என்றென்றைக்குமாய் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன.

மரணம் பல உண்மைகளைக் கிளர்த்தி வெளிக் கொணர்ந்துவிடும் என்கிறது குரான். இழப்பின் வலியை உணர, ஒருவர் மீதான நமது பிரியத்தை வெளிப்படுத்த, அவரின் மரணம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பதும் தான் யதார்த்தமான உண்மை. பழகுவதற்கு இனியவரும், தேடிச் சென்று நட்பு பாராட்டும் பெருந்தன்மை மனதுக்குச் சொந்தக்காரரும், இளைய படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தவரும், மதுரை மண்னின் மைந்தருமான எழுத்தாளர் அர்ஷியா அவர்கள் கடந்த ஏப்ரல் 7ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான அர்ஷியா அவர்களின் மனைவி, மற்றும் ஒரே மகள் ஆகியோர் மதுரையில் வசித்து வருகிறார்கள். அர்ஷியா அவர்கள் தன் குடும்பத்தின் மீது தீராத பாசமும், பெண்கள் மீது பெரும் மரியாதையும் கொண்டிருந்தார்.

எழுத்தாளர் அர்ஷியா அவர்கள், ஏழரைப்பங்காளி வகையறா, பொய்கைக்கரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, கரும்பலகை, அதிகாரம், நவம்பர் 8 – 2016, சொட்டாங்கல் என்று ஏழு நாவல்களும், கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், சரித்திரப் பிழைகள், ஸ்டோரீஸ் என்று இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும், நிழலற்ற பெருவெளி, திப்புசுல்தான், பாலஸ்தீன், பாலைவனப் பூ, மதுரை நாயக்கர்கள் வரலாறு, பட்ஜ் பட்ஜ் படுகொலைகள் என்று ஆறு மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.

பத்திரிகையாளராகத் தன் வாழ்வைத் துவங்கியவர், ஆயிரக்கணக்கான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது படைப்பாற்றல் குறித்த அடையாளச் சிக்கலை வென்றெடுக்க, தன் காலத்திற்குப் பின்னும் தான் தன் எழுத்துகளால் நிலைத்து நிற்க வேண்டும் என்ற உந்துதலினால், பத்திரிகைத் துறையை விட்டு விட்டு, சிறு இடைவெளிக்குப் பின்பு புனைவு எழுத்தாளராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் துவங்கினார். அவரது முதல் நாவலான “ஏழரைப் பங்காளி வகையறா” மதுரையில் வாழும் உருது பேசும் முஸ்லிம்களின் வரலாற்றை செறிவாகத் தொகுத்தளித்த ஆவனம்.

ஒரு வகையில் அது அவரது முன்னோர்களின் கதையும் கூட. ஒரு “தன் வரலாற்றுப் பதிவை” எந்தவித ஆடம்பரமும், வெற்றுப் பெருமைகளும் இன்றி, மனிதர்களின் மேன்மையையும், சூழ்நிலை காரணமாக அவர்கள் செய்கின்ற சிறுமைகளையும் அச்சு அசலாக, எளிமையான மொழியில் பதிவு செய்த விதத்தில், தமிழ் இலக்கிய உலகின் சிறந்த புதினங்களில் ஒன்றாக “ஏழரைப்பங்காளி வகையறா” கருதப்படுகின்றது.

இந்த நாவலைப் போலவே, ரியல் எஸ்டேட் வணிகத்தின் பின்புலத்தைப் பற்றி விரிவாகப் பேசிய “பொய்கைக்கரைப்பட்டி”, ஒரு இடைநிலை அரசு ஆசிரியையின் பணி வாழ்க்கையை தத்ரூபமாய் உடன் இருந்து பார்த்தது போல் விளக்கிய “கரும்பலகை”, காக்கிச்சட்டைகளின் படிநிலை மையங்களைச் சொன்ன “அதிகாரம்”, மதுரை கோரிப்பாளையத்தின் வரலாற்றின் ஊடாக உள்ளூர் அரசியல்வாதிகளின் அன்றாட அரசியலை ஆராய்ந்த “சொட்டாங்கல்” ஆகிய படைப்புகளும் மிக முக்கியமானவை.

மனதில் பெருந்தனக்கார்ர்களாக வாழ்பவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகையும் சிறு சலனத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதற்கு அர்ஷியா அவர்கள் சிறந்த உதாரணம். புலனாய்வுத்துறை பத்திரிகையாளராக இருந்த போது, கோடிகளால் ஆன பேரங்களை எல்லாம் கண் முன் பார்த்து, அதற்கு மயங்காமல் எந்த சமரசமுமின்றி பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர்.

அதன் பின் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் மனதுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அந்தப் பணியையும் துறந்து விட்டு, இயற்கையோடு இயைந்த தோட்டக்கலை சார் தொழிலை மேற்கொண்டு வந்தார். தன் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் துளியளவு கூட வித்தியாசமின்றி வாழ்ந்தவர் எழுத்தாளர் அர்ஷியா அவர்கள்.

2016 ஆம் ஆண்டு, தேனி முற்போக்குக் கலை இலக்கிய மேடை சார்பாக, எழுத்தாளர் அர்ஷியா அவர்களின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்காக மதுரையில் இருந்து தேனிக்குச் செல்லும் போது தான் அர்ஷியா சார் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. அதற்கு முன் வாசகனாக அவரை அறிந்திருந்தேனே ஒழிய நேரடியான அறிமுகம் இல்லை. அன்று தேனிக்கு அவரோடு ஒரே வாகனத்தில் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் மூன்று மணி நேரத்திலும், அவரது படைப்புகள் குறித்து, தொடர் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே வந்தேன்.

அதற்கு மிக விரிவாகவும், தனக்கு மனதில் சரி என்று தோன்றியதை மிகத் தெளிவாகவும் அர்ஷியா சார் கூறிக்கொண்டே வந்தார்.

உண்மையில் ஓர் எழுத்தாளரின் நேர்காணலாய் மனதில் நினைத்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகள் அவை. நிகழ்வு முடிந்து திரும்பி வரும் போது, எழுத்தாளர் வாசகன் என்ற நிலையைத் தாண்டி உற்ற நண்பர்களாக ஆகி இருந்தோம். “நம்ம சாரை நாமே என்ன பேட்டி எடுத்து எழுத?” என்ற அனுக்கத்தில் அந்த உரையாடல் எழுத்தாக்கப்படாமலே போய் விட்டது. அன்றைய தேனி விழாவில், அவரது “மரணத்தில் மிதக்கும் சொற்கள்” சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினேன். அதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, வாரத்திற்கு ஒரு முறையேனும் கட்டாயம் சந்தித்து, குறைந்தது இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருப்போம்.

மனிதர்களை அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்கின்ற, புறம் கூறாத இலக்கியவாதியாக வாழ்ந்தவர் அர்ஷியா அவர்கள். இன்று எழுதுகின்ற பலருடைய படைப்புகள் அவரது மேற்பார்வையில் செப்பனிடப்பட்டவையே. தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை துளி சோர்வின்றி, குறித்த நேரத்தில் செழுமைப்படுத்துவதோடு, தொடர்புக் கண்ணிகள் அறுந்திருக்கும் இடங்கள், தொய்வாய் நகரும் பகுதிகள், வெட்ட வேண்டிய மற்றும் மெருகேற்ற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை மிக நேர்மையாக முகத்துக்கு நேராக அதே சமயம் படைப்பாளியின் மனம் கோணாமல் அவரை உற்சாகமூட்டும் வகையில் தெளிவுபடுத்தும் மிகச்சிறந்த எடிட்டராகவும் அவர் செயலாற்றி இருக்கிறார்.

அர்ஷியா அவர்கள் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருந்தார். மதுரை தொடர்பான எந்தவொரு வரலாற்று நிகழ்வுகளையும் அவர் வரைபடம் போல மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். மதுரையின் சித்திரத்தை தனது புனைவுகளின் பின்புலமாக்குவதில் அவரது நுன்மை வியக்க வைக்கக் கூடியது. அதே போல பயணம் செல்வதிலும் சளைக்காதவர். தன் வாழ்வின் பெரும்பகுதியை பயணத்திலேயே கழிந்திருக்கிறார். எந்த ஊருக்குச் சென்றாலும், பெட்டிக்கடைக்கார்ர்கள், பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், ஆட்டோக்கார்ர்கள் என்று புதியவர்களிடம் உரையாடலைத் துவக்கி அவர்களின் தயக்கத்தைப் போக்கி சகஜமாகப் பேச வைக்கும் கலையில் தேர்ந்தவர்.

கட்டுப்பாடான சமூகத்தில் இருந்து எழுத வந்த ஒருவர், அதிலுள்ள மூடப்பழக்கவழக்கங்களையும், அபத்தங்களையும் கேள்வி கேட்கும் போது இயல்வாழ்வில் நடைமுறைச் சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாதது. அதுவும் தன் மகள் பெயரையே தன் புனைப்பெயராகக் கொண்டு எழுதும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவரிடம் கேட்டிருக்கிறேன்.

”பலதரப்பட்ட கதைக்களன்களையும் எழுத வேண்டிய சூழ்நிலை வரும் போது, உங்கள் மகள் பெயரில் எழுதுவதால் எப்பொழுதேனும் மனசங்கடங்கள் வந்திருக்கின்றனவா?” என்ற கேள்விக்கு, ”எழுத்தும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல. பொதுவெளியில் நான் என்ன பேசுகிறோமோ, அது தான் என் எழுத்தும். நேரில் சொல்லக்கூசும் எந்தவொரு விஷயத்தையும் நான் எழுதுவதில்லை, இனியும் எழுதப்போவதில்லை.

அதே போல், என் எழுத்தில் என்னென்ன கேள்விகளை முன்வைக்கிறேனோ, எனது சொந்த வாழ்க்கையிலும் அதைப் பின்பற்றுபவனாகவே இருந்து வருகிறேன். எனவே மகள் பெயரில் எழுதுவது குறித்துப் பெருமிதம் தானே ஒழிய எப்போதும் சங்கடமில்லை.” என்று கூறியிருந்தார்.
இன்று தமிழ் இலக்கிய உலகில், நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக பெரிதும் அறியப்படுகின்ற எழுத்தாளர் அர்ஷியா அவர்கள், புனைவெழுத்து இலக்கியத்துக்குள் நுழையும் முன்பு கண்ட அனுபவமும், களனறிவும் மிகப்பெரியது.

தொன்னூறுகளில், புலனாய்வுத் துறை பத்திரிக்கையாளராக தென்தமிழகத்து அரசியல் செய்திகளை அவர் களத்தில் இருந்து சேகரித்து எழுதியிருக்கிறார். அவரது புனைவுகளில் வரும் பரபரப்பு எழுத்து நடைக்கு, அவரது பத்திரிக்கை அனுபவங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஒரு படைப்பில் எங்கே துவங்கி, எப்படி முடிக்க வேண்டும்.

எந்த விஷயங்கள் எந்த கதாபாத்திரத்தின் வாயிலாக விளக்கப்பட வேண்டும் என்ற நுணுக்கங்களை மிகச்சரியாக அறிந்து வைத்திருந்தார். அத்திறமையை அவர் தனது படைப்புகளில் மட்டுமல்ல, தன்னைத் தேடி வரும் பல இளம் படைப்பாளிகளுக்கும் எந்த விதத் தயக்கமும் இன்றி கற்றுக் கொடுத்திருக்கிறார்.
எந்தவொரு எழுத்தாளுமைக்கும், கொஞ்சம் உயரம் சென்றவுடன், தான் கடந்து வந்த அனுபவங்களின் பொருட்டாவது புதியவர்கள் சற்றுப் பணிவுடனும், கொஞ்சம் தள்ளியும் நிற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுவதுண்டு.

ஆனால் அர்ஷியா அவர்கள் இதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். புதியவர்களைத் தேடிப் போய் நட்பு வளர்ப்பார். ஒரு முறை அவரிடம் நாம் பேசிவிட்டால், ஓர் எழுத்தாளரிடம் பேசுகிறோம் என்ற தயக்கம் மறைந்து, நாமாகவே அடுத்தமுறை நமது சந்தேகங்களையும், மனம் திறந்த உரையாடல்களையும் அவரோடு நிகழ்த்த முடியும். அப்படி, எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல், எல்லோருக்கும் பொதுவானவராக, ஆனால் உள்ளுக்குள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாகமானவராக மனதில் நிலைத்து நிற்கிறார் அர்ஷியா அவர்கள். இன்று எழுதிக் கொண்டிருக்கின்றவர்களில் குறைந்தது நூறு பேராவது, “என்னுடைய அர்ஷியா” என்று மனதில் அனுக்கமாக நினைத்துக் கொள்ளக் கூடிய அனுபவங்களைத் தந்திருக்கிறார் அவர்.

அரசியல் பத்திரிகை நிருபர், களத்தில் எப்படி செய்திகளை சேகரிக்கிறார், இன்ஃபார்பர் தரும் துப்பு என்ன, காவல்துறையிடம் எப்படி செய்தியைக் கறக்க வேண்டும், அதிலும் பி.சி, ஏட்டு, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.ஜி.பி என்று ஒவ்வொரு நிலையிலும் ஒரு நிருபர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தி, அல்லது வெளிப்படுத்தாமல் எப்படி பேச்சை வளர்க்க வேண்டும், மருத்துவக் கல்லூரி ஊழலைக் கண்டுபிடிக்க மாணவர்களோடு மாணவனாக விடுதியிலேயே தங்கி செய்தி எழுதுவது எப்படி… இன்னும் பல பல சுவாரஸ்யங்களை, ஒரு அரசியல் செய்தியின் நாம் அறியாத மறுபக்கத்தை, களத்திலிருந்து சம்பவங்களை செய்திகளாக்கும் செய்தியாளராகத் தான் ஆற்றிய பணிகளை அசை போட்ட கட்டுரைகளின் தொகுப்பு ”ஸ்டோரீஸ்” என்ற பெயரில் கடந்த ஜனவரி மாத சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது தான் வெளியாகியது.

அடுத்ததாக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் சட்டதிட்டங்களைத் தாண்டி, முன்னேறும் பெண்ணை மையப்படுத்தி, “கறுப்புக்காய் ராணி” என்னும் ஒரு நாவலை சமீபத்தில் தான் எழுதத் துவங்கியிருந்தார். சமகால அரசியல் நிகழ்வுகளை, மதுரையின் சொல்லப்படாத வரலாற்றை, வைகையின் தோற்றுவாயிருந்து அது செல்லும் வழித்தடமெங்கும் உள்ள கதைகள் புதினங்களாக்க அவர் பல கள ஆய்வுகளையும் செய்து கொண்டிருந்த்தையும் அறிவேன்.

அதற்குள், செழிப்பான ஆற்றுப்படுகையின் கரையில் இருக்கும் பெருவிருட்சத்திலிருந்து உதிரும் வண்ண மலர் ஒன்றைப்போல, நீரோட்டத்தில் சிறிய மௌனச்சுழிப்பொன்றை நிகழ்த்தி விட்டு, இயற்கைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, நீர்வழித்திசையில் எங்கோ நமக்குப் புலப்படாத வகையில், சென்று இயற்கையோடு கலந்துவிட்டார். அதைக் காலத்தின் அழைப்பாகத் தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆனாலும், மதுரை நகரின் வாழ்வியலையும், விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாடங்களையும், குறிப்பாக முஸ்லிம் சமூக பழக்கவழக்கங்களை அச்சு அசலான உயிரோட்டமுள்ள சித்திரமாகத் தீட்டிக் காட்டும் யதார்த்தம், அர்ஷியா அவர்கள் எழுதிய படைப்புகளில் நிறைந்திருக்கிறது. அயற்சியூட்டாத, இயல்பான மொழிநடையில் எளிய மக்களின் வாழ்வை இலக்கியமாக்கும் சவாலை அழகாகவும் நேர்த்தியுடனும் நிறைவேற்றியவர் எழுத்தாளர் அர்ஷியா.

அவர் நேர்ப்பேச்சில் மென்புன்னகையோடு, தனது கரங்களுக்குள் நம் கரங்களைப் பொதிந்து, தனது உள்ளங்கைகளின் வெப்பத்தை நமக்குள் கட்த்துவதைப் போலவே, அவரது படைப்புகளும் தமிழ் இலக்கிய வாசகர்களோடு என்றென்றும் உள்ளன்போடு பேசிக் கொண்டே தான் இருக்கும்.

******

Comments are closed.