ராகவபிரியன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

பனைமட்டை

பனைமட்டை

என் பின்னே என் நிழல்

எனக்கும் நிழல் இருக்கிறது.

வெயில் திசைகளை வெறுத்தபடி

எதிரே போய்கொண்டே இருக்கிறது..

என்னால் மிதிக்க முடியா பொழுதுகளில்

என்னில் மறைந்துகொள்கிறது..

காவிரியின் கரையமர்ந்தபோது

நீரில் என் நிழல் பழிப்புக்காட்டியபடியிருந்தது..

கைகளால் நீரில் அறைய

என்முகமெங்கும் நீரின் வலிகள் திவலைகளாய்..

கால்களால் நீரை அலச

நிழல் விலகுவதாயும் சலசலப்புக்காட்டியபடியும்

நர்த்தனமிட்டபடியிருக்க…

நிழல்பிடிக்க உள்குதித்தேன்..

ஈரமான பின்னும் நிழல்

தலைதுவட்டியபடியிருக்க..

வெகுண்டெழுந்தேன்..

நனைதலும் உலர்தலும் குனிதலும் நிமிர்தலும்

வளைதலும் நீள்தலும்

நிழலுக்கில்லை..

அலையென அடுத்த அடிவைத்து நகர

என் பின்னே இப்போது என் நிழல்..


கிளிமனூர் ரவிவர்மன்

பதினான்கு வயதான

சின்னத் தூரிகையின் மீது

ஆயில்யம் திரு நாளின்

வெளிச்சக் கண்விழுந்தது…

தியோடார் ஜான்சனின்

வெள்ளைத் துரோகம்

தோய்த்து அப்பிய

தூரிகையின் மேலை நடனங்களை

மனமேடையிலிருந்து

கண்டிப்புடன் இறக்கிவிட்டான்

இந்திய ரவிவர்மன்..

அடங்கா சினத்துடன்

தன் தூரிகைகளை

இந்திய வண்ணத்தில் தோய்த்தெடுக்க..

ஆயில்யம் திருநாள்

அங்கீகாரப் பூக்கள்

தொடுத்துக்கோர்த்த மாலையை

திருவிதாங்கூர் ராணியின்

தங்கைக்கு அணிவித்தான்..

ரவிவர்ம மயில் தன் வண்ணத்

தோகைவிரித்தாடத் தொடங்கியது..

ரவிவர்ம மேகம்

வண்ணம் வண்ணமாய்

தோய்த்த மழைத்துளிகளை

வாரிவழங்கி பெய்யத்தொடங்க…

இந்தியத் தூரிகை

மகுடம் சூடியபடி

உலக ஓவிய அரங்கை

ஈரமுடன் நனைத்தபடி

ஆளத் தொடங்கின..

ஆங்கில ஏகாதிபத்தியம்

கலைஞனின் முன்னால்

கைகட்டி நின்றது..

துஷ்யந்தனும் நளனும்

சகுந்தலையும் தமயந்தியும்

மலையாளப் பெண்ணின்

முகமணிந்து

உலகம் முழுவதும்

சுற்றுலா புறப்பட்டார்கள்..

ரவிவர்மாவின் தூரிகை

ஓய்வெடுக்கும் நொடிகளில்

கண்இமைக்க மறந்த

உலக ஓவியப்பிரபலங்கள்

வியப்புடன்

பொறாமை மெளனம் கொள்ள…

அந்த இருண்ட சின்ன நொடியில்

ஒரு புதுஓவியயுகம் புறப்படும்

அதிர்வலைகளை

உலகம் உள்வாங்க முடியாமல்

திணறத்தொடங்கியது…

நிமிரமுடியாத வில்லெழுத்து

எனக்கென எழுதமுடியவில்லை..

எனது எழுத்துக்களுக்கு

மொழிகட்டுப்படுவதில்லை..

மொழியின் நாக்குகள்

என் எழுத்துக்களை

பல்லிடுக்கில் அதக்கிக்கொள்கின்றன..

எதை எழுதுவது

எதை விடுவது

எதை அணிவது

எதை நிர்வாணமாக்குவது

எனும் வானவில்

என் வானில் திடீரென

முளைக்கிறது..

வண்ணங்களைப் பிரித்தெடுக்கும்முன்

கண நேரம் நிமிர்ந்துவிட்டு

சட்டென

மறைந்து போய்விடுகிறது..

வண்ணங்களை

நான் உருவமுடியாதவனாகி

எழுதமுடியாமலாகிறேன்..

நிமிர்தல் எழுத்திலும்

வில்லிலும்

நாணில் பிணைக்கப்பட்டிருக்கலாம்…

அதனால்தான்

குனிந்தபடி

எனக்கென எழுதமுடியவில்லை…


நரிக்குரவ நிஜம்

பனைமட்டையில்

நரிக்குரவப்பெண்

சிறுநீர் கழிக்கும்

நிர்வாணச் சப்தம்

இன்னமும்

இசையாக்கப்படவில்லை..

திறந்திருக்கும்

அவளின் மார்புகளை

நீலப்படங்களின்

புகைப்படக் கருவிகள்

பொருட்படுத்துவதில்லை..

அவளின் குட்டைப்பாவாடை

படம் பதித்த

விளம்பர தட்டிகள்

பன்னாட்டு நிறுவன்ங்களால்

பயன்படுத்தப்படுவதில்லை..

அவளின் அழுக்குமேனியும்

அரை நிர்வாணமும்

அவளைக் காணும்

ஆண் விடலைக் கண்களில்

சுய இன்பத்திற்காகவாவது

பயன்படுகிறதா தெரியவில்லை..

ஒரு சிலரால்

அவள் நிஜமாகவே

துய்க்கப்படுவது மட்டும்

நிஜம்…

••••

Comments are closed.